கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2021
பார்வையிட்டோர்: 2,811 
 
 

பொழுது இன்னும் நன்றாகப் புலரவில்லை. தை மாதத்துப் பனிப் படலத்தில் அத்தெருவே மிகவும் மங்க லாகக் காட்சியளித்தது. ‘தையும், மாசியும் வையகத்து உறங்கு’ என்று என்றோ ஒரு நாள் கூறிச் சென்றாள், ஔவைக்கிழவி. அதனை வேத வாக்காகக் கொண்ட திருநெல்வேலி வாசிகளில் ஒருவராவது நன்றாகவிடியுமுன், தெருவில் தலையைக் காட்ட எத்தனிக்கவில்லை. கிராமச் சங்கத்தாரின் புண்ணியத்தால் மங்கலாக மினுமினுத்துக் கொண்டிருந்தது, தெருவில் நாட்டப்பட்ட மின்சார விளக்கு. அதனடியிற் சிறகிழந்த ஈசல்கள் கூட்டங் கூட் டமாகக் கிடந்தன. அவற்றைச்சுற்றிக் காக்கைகள் ஆரவா ரித்துக்கொண்டிருந்தன. ஏழைகளைச் சுரண்டி வாழும் செல்வந்தர் கூட்டம்போலச் சிறகொடிந்த நிலையில் துடித் துக்கொண்டிருந்த ஈசல்களை, ஒவ்வொன்றாகத்தின்ன முற் பட்டன, அக் காக்கைகள்.

மூடப்பட்டிருந்த பனிப் படலத்தைக் கிழித்துக் கொண்டு தெருவின் கோடியில் முக்காடிட்ட சிறிய உருவ மொன்று நகர்ந்து கொண்டிருந்தது. அவ்வுருவத்தைப் பார்த்து ஆச்சரியப்பட மாட்டார்கள். ஏனென்றால், அது அந்தப் பூச்சாண்டிக் கிழவனைத் தவிர வேறு யாராகவும் இருக்க முடியாது.

சில்’லென்று வீசிய வாடைக்காற்றில் வெட வெடத் துக்கொண்டிருந்தது, கிழவனின் உடம்பு. கிழித்துப் போட்ட நார் போல வற்றி உலர்ந்திருந்த தன் எண்சாண் உடம்பை ஒரு சாணாகக் குறுக்கிக் கொண்டான். அவன். உள்ளே குழி விழுந்து பஞ்சடைந்து போயிருந்த ‘ பூச் சாண்டி’யின் கண்கள் சூனியத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தன. மொத்தத்திற் கலிங்கத்துப் பரணியில் வரும் பேய்களின் வர்ணனையின் பிரத்தியட்ச ரூபமாக விளங்கினான், கிழவன். அங்குமிங்கும் தலையைத் திருப்பிப் பார்த்துக்கொண்டு வந்த கிழவனின் நினைவலைகள், சற் றுப் பின்னோக்கிச் சென்றன.

‘பூச்சாண்டிக்கிழவன்’ என்ற நாமகரணத்தை அவ னுக்குச் சூட்டியது இந்தத் தெருவிலுள்ளோர் தான். கிட் டத்தட்ட இரண்டு வருடங்களாக அவன் தினமும் இத் தெருவிலே பிச்சையெடுத்துக்கொண்டிருக்கிறான். பொல் லுத்தடி, தகரக்குவளை சகிதமாகக் காலையும் மாலையும்ஒரு நாளைக்கு இரு தடவைகள் அவன் இத் தெருவோரம் பவனி வருவான். நாட்கிழமை தவறினால் தவறும். ஆனால், கிழவனின் சுற்றுலாத் தவறுவது கிடையாது. அத் தெரு விற் குடியிருக்கும் பெண்மணிகள் தம் மழலைச் செல்வங் களுக்கு அமுதூட்டும் வேளையில் தான் இவன் செல்வது வழக்கம்.

மிரட்டாமல் விரட்டாமற் சாதுப்பிள்ளை களாகச் சாதம் சாப்பிடும் குழந்தைகளை யாராவதுகண்டதுண்டா? தெருவோரத்திற் போகும் காக்கை, குருவி, மோட்டார், மனிதர்–இவற்றையெல்லாம் வேடிக்கை காட்டிச் சாதம் ஊட்ட முயல்வர் தாய்மார். இடையில் ஒரு குழந்தை சாப் பிட மாட்டேனென்று அடம்பிடிக்கும். அப்போது தெரு வோரமாகச் செல்லும் ‘பூச்சாண்டிக் கிழவனை’க் காட்டித் தாய், ”அதோ பார்! பூச்சாண்டிக் கிழவன்! உன்னைப் பிடித்துக்கொண்டு போய்விடுவான்” என்று மிரட்டுவாள். குழந்தையும் தன் அகன்ற விழிகளில் வியப்பும், மிரட்சி யும் தோன்றப் பீதியுடன் அவனைப் பார்த்துக்கொண்டே சாதத்தை உண்ணும். இப்படியாக அந்தத் தெருவிலே அவனது இயற் பெயர் வழங்கப்படாது’ ‘ பூச்சாண்டிக் கிழவன்’ என்ற பெயரே நிலைத்துவிட்டது.

இப்பொழுது பூச்சாண்டிக் கிழவன் தனக்குப் பூர் வோத்திரம் என்று ஒன்று இருந்ததா, என்று நினைத்துப் பார்த்தான். ஆமாம். ஒரு காலத்தில் அவன் வாலிபத்தின் மிடுக்கோடு விளங்கிய போது, எந்த வேலையையும் அனா யாசமாகச் செய்யும் வல்லமை பெற்றிருந்தான். ஆனால் … அதை இப்போது நினைத்து என்ன பயன்? கிழவனிடத்தி லிருந்து நெடியபெருமூச்சொன்று கிளம்பியது. இப்போது அவன் யாருமற்ற அனாதை; நாடோடி.

பிச்சையெடுப்பது ஈனமான தொழில் என்று அவன் நன்றாக அறிந்திருந்தான். என்றாலும், வாயும் வயிறும் இருக்கின்றதே? அவை கேட்குமா, பட்டினியிருக்க? பகல் முழுவதும் எங்கும் அலைந்து பிச்சையெடுப்பான். இரவிற் சத்திரமோ, சாவடியோ, தெருத் திண்ணைகளோ – எது வாக இருந்தாலும் சரி, அகப்பட்ட இடத்திற்படுத்துறங்கி விடுவான். ஊரூராகப் பிச்சையெடுத்து அலைந்து திரிந்த கிழவனுக்கு அதிக ஆதரவு கிடைத்தது, அத்தெருவில் தான். எனவே இத்தெருவைத் தனது வாடிக்கையிடமா கக்கொண்டுவிட்டான்.

திடீரென்று சிந்தனை கலைந்துபோகக் கிழவனின் கண் களிலிருந்து, இரு சொட்டுக் கண்ணீர் ஒட்டி உலர்ந்த கன்னங்கள் வழியாக வழிந்தோடின. அதைத் துடைக்கக் கூடத் திராணியற்று, பூச்சாண்டிக் கிழவன்’ தெருவின் மறுகோடியிலிருந்த வீட்டினுள் நுழைய முற்பட்டான்.

அது முதலியார் செல்லத்துரையின் வீடு. நேற்றிரவு தான் அவர் மகளுக்கு மிகவும் விமரிசையாகக் கலியாணம் நடந்தது. ஊரிலுள்ள பெரிய மனிதர் உட்பட, அயலண் டையிலுள்ளோர், அனைவருக்கும் பெரிய விருந்தொன்று போட்டார், செல்லத்துரையார். தானும் அவ்விருந்தில் கலந்து வயிராற உண்ண ப் பெரிய மனிதர்களில் ஒருவராக இருக்கக்கூடாதா, என்ற எண்ணம் கிழவனுக்கு. எனினும், அவனுக்குத் தெரியும் – பெரிய மனிதர்கள் சம் பிரதாயத்துக்காகத் தான் இலையில் அமருவார்கள். சாப் பிட்டதாகப் பாவனை பண்ணிவிட்டுப் பரிமாறிய உணவை அப்படியே விட்டுச் செல்பவர்களென்று.

இந்த நினைவுகளாற் கிழவனுக்கு நாக்கில் ஜலம் ஊறி யது. ‘கேட்டு’ வாசலில் நாட்டப்பட்டிருந்த வாழை மரங் களின் இலைகள் அவனுக்கு நல்வரவு கூறுவன போல, மெல்ல வீசிய வாடைக் காற்றில் அசைந்து கொடுத்தன. வீட்டின் முற்புறத்து விளங்கிய தோரணங்கள், பெண்ணொ ருத்திக்கு வாழ்வளித்துவிட்ட பெருமையில் தலை தூக்கி நின்றன. கல்யாணமொன்று நடந்து முடிந்ததன் காரண மாக வீடு களையுடன் விளங்கியது.

வீட்டு வாசலில் நின்று தலையை உள்ளே நுழைத்து, அங்கே வழக்கமாக நிற்கின்ற ‘டைகரோ’ ‘பேயோ’ என்ற எமகாதக நாய், நிற்கின்றதோ என்று எட்டிப் பார்த்தான். சங்கிலியில் பிணைக்கப்பட்டிருந்த நாய் இவனைக் கண்ட தும் பிடரி மயிரைச் சிலிர்த்துக்கொண்டு ஒருதரம் உறுமி யது. கிழவன் ஓரடி பின் வாங்கினான். ‘ எசமானிடத்தில் வைத்திருந்த விசுவாசத்தைக்காட்ட ஒரு தரம் உறுமி னாற் போதும், என நினைத்தோ என்னவோ மறுபடியும் தூங்க ஆரம்பித்துவிட்டது, அது.

காலை வேளையில் தனக்கடித்த அதிர்ஷ்டத்தை வியந்துகொண்டே மெதுவாக அடிமேல் அடி வைத்து உள்ளே சென்றான். வீட்டின் ஒருபக்கமாக- ஒற்றையடிப் பாதை வழியாகப் பின் கட்டுக்கு அவன் கால்கள் அவனை இழுத்துச் சென்றன. அங்கே கண்ட காட்சி கிழவனை ஸ்தம்பிக்கச் செய்து விட்டது!

அவன் வருகையை அவர்கள் ஒருவரும் விரும்ப வில்லை என்பதை, அவர்களின் முகங்களே எடுத்துக்காட் டின. ‘சனியன்கள் எங்கே போனாலும் எனக்குப் போட்டி யாக வந்து விடுகுதுகள் !’ என முனகியவாறே முன்னே றினான், கிழவன். காலை வெயிலின் கதிர்கள் முதுகிற் படிந்து உறைக்கவே, பசி அவன் வயிற்றைக் கிள்ளியது. ஒன்றை ஒன்று முந்திக்கொண்டு நின்ற ‘ சின்னஞ் சிறுசு கள்’ அவனை அதற்கு மேல் முன்னேற விடாமல் தடுத் தன,

துடுக்குப் பெண்ணொருத்தி, ”ஏ கிழவா! நீ கடோ சிலை போய் நில்லு! நாங்கள் வாங்கினாப் பிறகுதான், நீ சோறு வாங்கவேணும்!” என்று வாய்காட்டினாள். இதைக் கேட்டுக் ‘கொல்’லென்று சிரித்தன, மற்றைக் குழந்தை கள். கிழவன் மௌனமாகத் தன் விதியைச் சபித்த வண் ணம் நின்று கொண்டிருந்தான்.

எச்சில் இலைகளை ஏந்திய வண்ணம் வந்துகொண்டி ருந்தான், வீட்டு வேலைக்காரன். அவன் இலைகளை வீசுவ தற்கு முன்னாடியே ஒன்றின் மேல் ஒன்று விழுந்தடித்துக் கொண்டு முன்னேறின. “டேய்! சத்தம் போடதீங்கடா!” எனச் சபித்துக்கொண்டு, அவன் இலைகளை எறிந்தது தான் தாமதம், அத்தனை பேரும் கூச்சல் போட்டுக்கொண்டு இலைகளைப் பொறுக்கினர். கிழவனும் ஒரு இலையைப் பொறுக்க முயன்றான். பலன்? பூஜ்யம்தான்.

”சரி, இலைதான் கிடைக்கவில்லை. பசி மறைய ஒரு கவளம் சோறாவது போடமாட்டார்களா? ….. முருகா!” கிழவனின் ஓலம் சாட்சாத் அந்த முருகனுக்கே எட்டியிருந் தால்?….. கிழவன் இந்த நிலையில் இன்று இருந்திருக்க மாட்டான். வேலைக்காரன் மீண்டும் ஒருமுறை வெளியே வந்து எஞ்சிய சோற்றை விநியோகம் செய்தான். ஏகக் கூச்சலும் குழப்பமும், நடைபெற்றது அங்கே. இத்தனை தில்லு முல்லுக்கிடையில் ஒரு பிடி சோறு அவன் தகரக் குவளைக்குள் வீசியெறியப்பட்டது. பரம ஆனந்தத்துடன் நின்று கொண்டிருந்தான், கிழவன்.

”இவ்வளவுதான் சோறு! ஓடுங்கடா, வெளியே!” வேலைக்காரனின் மிரட்டலுடன், எச்சிலிலை கிடைத்த ஆனந்தத்தில் மூலைக்கு ஒருவராகச் சிதறியோடினர்.

‘பேராசை பெருந் தரித்திரம். வேறு இலைகளை வெளியே கொண்டுவந்தால்?,….. நப்பாசையில் ஓங்கியது அவன் மனம். தன் காலில் யாரோ உரஞ்சிக்கொண்டு செல்வது போன்ற உணர்ச்சியினாற் கிழவன் திரும்பிப் பார்த்தான். ஆத்திரம் பற்றிக்கொண்டு வந்தது அவ னுக்கு. முன்பு ஒரு மனிதனுக்குப் பல மனிதர்கள் போட்டி. ஆனால், இப்போது மனிதனுக்கு மிருகம் போட்டி யாக நின்றது.

ஆமாம், குட்டைச் சொறி பிடித்த நாயொன்று அவ னெ திரே நின்றது. நாயை வெறுப்புடன் பார்த்தவன் “தூ!” வென்று, காறியுமிழ்ந்தான் நாய் அவன் ஆட்சேப னையைச் சற்றும் சட்டை செய்ததாகத் தெரியவில்லை. மனி தன், மிருகம்–இருவர் கண்க ளிலும் ஆவல், ஏக்கம். வாழத்துடிக்கும் ஆசை, நிராசை–இவை பிரதிபலித்துக் கொண்டிருந்தன. மனிதனும் மிருகமும் வயிற்றைக் குளிர வைப்பதற்காக, இல்லாமை காரணமாக ஒரே நிலையில் நின்று ஒருவரையொருவர் வெறுப்பும், உதாசீன மும் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

தூக்கிச் செல்லும்போது வழுக்கி விழுந்துவிட்டது ஒரு இலை. ‘தன் வேலையைக் கவனிக்காமல் நேரம் போய்க் கொண்டிருக்கிறது’ என்ற அங்கலாய்ப்புடன் அதனை எறிய வந்தான், வேலைக்காரன். மனிதன், இலை நிலத்தில் விழுமுன்பே பொறுக்கத் தயாராக நின்றான். மிருகம் தன் காய்ந்த உடல் சிறிதளவாவது நிரம்பும், என்ற ஆவலுடன் வாலை நிமிர்த்திக்கொண்டு பாய ஆயத்தமாக நின்றது . ஏற்கனவே, சேர்த்து வைத்திருந்த சோற்றுக்கும்பலோடு சோறு சேரப்போகிறதென்று நினைத்த மனிதனின் சூனி யப் பார்வையிற் பிரகாசம் ததும்பியது.

ஒரே ஒரு கணம். மின்னல் வேகத்தில் இலை வீசியெறி யப்பட்டது. மனிதனும் மிருகமும் ஏககாலத்திற் பாய்ந் தனர். ஒருவரை யொருவர் முந்திக்கொண்டு முதலில் இலையை எடுக்க முயற்சித்தனர். உறுமிக்கொண்டே ஆக் ரோஷத்துடன் சோற்றுப் பருக்கைகளை நக்க முயன்றது நாய். அசுரவேகத்தினால் உந்தப்பட்ட கிழவன், நாய் நக் குவதற்கு முன்பாக இலையைத் தனக்காக்கிக்கொள்ள முயன்றான். கல் தடுக்கிக் கீழே விழுந்தான்; தகரக் குவ ளையிலிருந்த சோற்றுப் பருக்கைகள் சிதறி ஓடின. கீழே விழுந்து புரண்ட மனிதன், தன் ஆசைக்கு பங்கம் விளை விப்பதைக் கண்டு, நகங்களால் மிருகம் அவனைப் பிறாண் டியது. சில நிமிடங்கள் கழிந்தன. மனிதனும் மிருகமும் வெற்றி தோல்வியின்றிப் போராடிக்கொண்டிருந்தனர்.

ஆறறிவு படைத்த மனிதன், கடவுளின் படைப்பில் உன்னத சிருஷ்டியாகக் கருதப்பட்டு வந்தவன், பகுத்தறிவு படைத்தவன் – தன் வயிறு காய்ந்தபோது, மாக்களுக்குச் சமநிலையில் கொண்டு வரப்பட்டபோது, மிருகத்தோடு மிருகமாகப் போராடினான். மனிதன் தன் ஸ்திதியிலிருந்து நழுவியது போல, நன்றியுள்ள மிருகங்களின் பரம்பரையில் வந்த நாய், நன்றி மறந்த நிலையில் நன்றி கெட்ட மிருகமாக மாறிப் போராடிக்கொண்டிருந்தது

மனிதன், மிருகம் – இருவருக்குமே பிடித்திருந்த வெறியுணர்ச்சி அதன் கடைசிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது நாய் தன் கூரிய பற்களை மனிதனின் உடம்பிற் பதித்தது. மிருகத்தின் ஞாபகார்த்த ச் சின்னங்களைப் பெற்றுக்கொண்ட மனிதன், விட்டானா அந்த மிருகத்தை? வெகு சிரமத்துடன் தள்ளாடியபடியே நாயின் பிடியிலிருந்து தப்பியவன், தான் கொடுக்கும் இறு திப் பரிசாகத் தன் பலங்கொண்ட மட்டும் ஓங்கி அதன் வயிற்றில் உதைந்தான். ஒரு மனிதன் கொடுத்த உதை போதாதென்று வேலைக்காரனும் அதன் மண்டையுச்சி யில் ஓங்கி அடித்தான், நாய். ‘வாள் …. ‘ என்று கத்திக் கொண்டே ஓடியது.

“டேய், நீயும் போகாவிட்டால் உனக்கும் இதே கதி தான்!” வேலைக்காரனுடைய பயமுறுத்தலைக் கேட்ட கிழவன் போராடி முடிவில் தோல்வி கண்ட களைப்பினால் நாயின் பற்களின் விஷம் உடம்பில் ஏறிய வேதனையுடன் தள்ளாடிக் கொண்டே. அங்கிருந்து சென்றான். தகரக் குவளை கவனிப்பாரற்று நசுங்கிய உருவத்துடன் மண் புழு தியிற் கிடந்தது.

செல்லத்துரை முதலியாரின் வீட்டுக்கு முன்பாக இருந்த கடையின் விறாந்தையிற் படுத்துவிட்டான், கிழவன். என்ன காரணத்தினாலோ, அன்று அந்தக் கடை மூடப்பட்டு இருந்ததால் அவனை எழுப்பி விரட்ட யாரும் முயற்சிக்கவில்லை. அது அவனுக்கு அனுகூலமாக இருந்தது. போராடியதால் ஏற்பட்ட களைப்பும், பசிக்களையுமாகச் சேர்ந்து- கிழவனை மயங்கிக்கிடக்கச் செய்தன. மணித்தியாலங்கள் செல்லச் செல்ல விஷம் ஏறிக்கொண்டே போயிற்று. இந்தநிலையில், காலை மாலையாகிப்பொழுது இருண்டதுகூட அவனுக்குத் தெரியாது. அவனைப்பற்றி எவரும் கவலைப்பட்டதாகவும் தெரியவில்லை. உல கெங் கும் கரிய இருள் படர்ந்தது. இரவு முழுவதும் கடை விறாந்தையிலிருந்து அரற்றலும், முனகலுமாகச் சத்தம் வெளிவந்துகொண்டிருந்தது. நோய் அளவுக்கு மீறியதால் அங்கும் இங்கும் புரண்டு படுத்த கிழவன், விடியற்காலை நான்கு மணிபோல உணர்வு திரும்பப் பெற்றான், அரையுணர்வோடு இருக்கும் நிலையில் விறாந்தையின் மறுகோடியில் தன்னைக் கடித்த தெரு நாய் படுத்திருந்ததை அவன் கண்கள் கண்டன.

விடியற்காலையில் மேகங்கள் கறுத்து இருண்டு விளங் கின. இருளில் மினனல் ஒன்று ‘பளீரெ’ன வெட்டியது. அதன் ஒளியில் மனிதனும் மிருகமும், பிணமாகக் கிடந்தனர். வேறுபட்ட இரு வர்க்கத்தின் வாரிசுகளாக விளங்கிய மனிதனும், மிருகமும் போராட்டத்துக்குப் பிறகு ஒற்றுமையுடன் தமது இறுதி யாத்திரையைத் தொடங்கினர். சாவில் என்றாலும், அவர்கள் சமரசமடைந்ததைக் கண்டு வானம் கறுத்து, மழையாகிய கண்ணீரைத் தாரை யாகப் பொழிந்துகொண்டிருந்தது.

– கோகிலா சிதம்பரப்பிள்ளை – கதைப் பூங்கா – பல்கலை வெளியீடு, பேராதனை, இலங்கை – முதற்பதிப்பு ஜனவரி 1962

கோகிலா: யாழ்ப்பாணம், வேம்படி பெண் கள் கல்லூரியின் பழைய மாணவியான இவரது முழுப்பெயர், கோகிலா சிதம்பரப்பிள்ளை ; ‘ சமரசம்’ அச்சிலே றும் இவரது முதற்கதை; எழுத்தார்வம் மிக்க இவர் ‘சமரசம்’ வாயிலாக இலக்கியத்துள் காலடி வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *