காலிங்பெல் அழுத்தப்பட்ட சப்தம் கேட்டு கதவைத் திறந்த,சபேசன்.தங்கள் அபார்ட்மெண்ட் வாட்ச்மேன் ராமகிருஷ்ணன் நிற்பதைக் கண்டு குழப்பமானான். முகத்தில் கேள்விக்குறியுடன், இன்றைக்கு என்ன.? என்பதுபோலப் பார்த்தான்.
தனது கையில் வைத்திருந்த ஒரு நூறு ரூபாய்த் தாளைக் காண்பித்த ராமகிருஷ்ணன், “சார்,காத்துலே பறந்து கீழே விழுந்தது.யாருதுன்னு தெரியல்லே.அதான் உங்களைக் கேட்டுட்டு,மேல் வீட்டுக்குபோலாம்னு வந்தேன்..”
அலுவலகத்திலிருந்து வீட்டுக்குள் நுழையும்போது,செல்போன் ஒலித்தது.அதை எடுத்துப் பேசும்போது,மேல் சட்டைப் பாக்கெட்டிலிருந்து கீழே விழுந்திருக்குமோ..?. அவன் தனது சட்டைப்பாக்கெட்டை சோதித்துக் கொண்டான். பத்துரூபாயாக சில தாள்களும்,சில்லறை நாணயங்களும் கிடந்தன.அதில் நூறு ரூபாயாக வைத்த நினைவே இல்லை.
உதட்டைப்பிதுக்கியபடியே,என்னோடது இல்லையப்பா..என்றான் சபேசன். ராமகிருஷ்ணன் படியேறி மேலே சென்றார்.
கிரவுண்ட் ப்ளோரில் முதல் வீடு என்பதால்,எந்தப்பொருள் கையில் கிடைத்தாலும்,சபேசன் வீட்டுக்காலிங் பெல்லைத்தான் எப்போதும் முதலில் அமுக்குவார் ராமகிருஷ்ணன்.
ராமகிருஷ்ணன் இங்குவந்து ஆறுமாதங்களாயிற்று.இந்த அபார்ட்மெண்ட்டில் யார் என்னவேலை சொன்னாலும் சரி,கார் கழுவிவிடுவதாக இருந்தாலும், காய்கறி வாங்கிவருவதாக இருந்தாலும்,தட்டாமல் செய்துகொடுத்து விட்டுத்தான் போவார்.பத்து வீடுகளிலும் சேர்த்து தரும் சம்பளம் போக, இந்த வேலைக்கெல்லாம் தனித்தனியே ஒவ்வொரு வீட்டிலும் பணம் கொடுத்து விடுவதால் அவருக்கும் வருமானம்.
காம்பவுண்ட் எல்லைக்குள் எந்தப் பொருள் கிடந்தாலும்,அது குழந்தை போட்டதாயிருந்தாலும்,பெரியவர்கள் தொலைத்ததாக இருந்தாலும் வீடுதேடி வந்துவிடும்.அதேபோல் குடியிருப்பவர்களிடம்,குறிப்பாக பெண்களிடம் மிகவும் மரியாதையாக நடந்து கொள்வார்.பத்துவீட்டிலும் ஒன்றும்,இரண்டுமாக உள்ள பத்துக்கும் மேற்பட்ட சிறுகுழந்தைகளும்,மாலையில் அவர் வேலைக்கென்று வந்துவிட்டால்,அவருடன் சென்று கொஞ்சநேரம் விளையாடி விட்டுத்தான் வரும்.அந்த வகையில் ராமகிருஷ்ணனை மிகவும் பாராட்டியே ஆகவேண்டும்.
இதற்கு முன்பு இருந்த ஒருவாட்ச்மேனிடம்,இந்தக்குடியிருப்புவாசிகள் பட்டபாடு பெரும்பாடு.பத்துமணிக்குமேல் வீட்டுக்கு யாராவது வந்தால்.மெயின்கேட்டை அவரின் தூக்கம் கலைந்து எழுந்துவந்து திறப்பதற்குள் வந்தவர்களுக்கு போதும்போதும் என்றாகிவிடும்.காரின் ஹாரன்கூட அவரை அசைக்கமுடியாது. அப்படியொரு கும்பகர்ணத் தூக்கம்.வாட்ச்மேன் வேலை என்பதற்கு சிறிதும் பொருத்தமில்லாத குணம்.மேலும் அவ்வப்போது சிறிதும் பெரிதுமாகப் பொருட்களும் திருடுபோனது.இதனால் சிலநாட்களிலேயே அவர் நிறுத்தப்பட்ட பின்னர்,ஒரு ஏஜென்சி மூலம் இங்கு வந்தார் ராமகிருஷ்ணன்.
எப்படியோ..ராமகிருஷ்ணன் இந்த அபார்ட்மெண்ட்டில்,சபேசனின் மனைவி காமாட்சியைத்தவிர,அனைவரிடமும் நல்ல பெயரையே எடுத்திருந்தார். காமாட்சிக்கு,ராமகிருஷ்ணனைப் பார்க்கும்போதெல்லாம்,சோடாபுட்டி கண்ணாடி வழியாக அவரது பார்வை பயமுறுத்துவது போல இருக்கிறது என்றும்,அவர் சேரிக்கு அருகாமையிலிருந்து வருவதால் ஒருவித அசூயை ஏற்படுவதாகவும், அந்தப் பகுதியில் இருப்பவர்களுக்கு திருட்டு,பெரட்டு அதிகம் என்று கேள்விப்பட்டிருப்பதாகவும் சபேசனிடம் காமாட்சி சொல்வதுண்டு.
“சே..சே..ஒரு மனுசனிடம் வெறுப்பு காட்டுவதற்கு உனக்கு வேறு காரணம் எதுவும் சிக்கவில்லையா..?” என்று சபேசன் அவ்வப்போது கடிந்து கொண்டாலும்,காமாட்சி தன்னை மாற்றிக்கொள்ளவில்லை.
மனிதர்களிடம் உள்ள நல்லவிஷயங்களை மட்டுமே நாம் எடுத்துக் கொள்ளவேண்டும்.பிடிக்கவில்லையென்றால் ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.அதைவிடுத்து குற்றம் சொல்வது தவறு என்பது சபேசனின் கொள்கை.
இதற்கு முன்,குழந்தைகளின் கம்மல் தோடு,பைக்கின் சாவி,மணிபர்ஸ் என்று பலபொருட்களை அவரவர் வீடுதேடி வந்து கொடுத்துவிட்டுப் போவதை யெல்லாம் சொன்னபின்னும்,காமாட்சிக்கு ஏனோ ராமகிருஷ்ணனைப் பிடிக்கவில்லை.அவரிடம் ஏதாவது வேலை சொல்வதாயிருந்தாலும் குரலில் வெறுப்பு தொனிக்கத்தான் சொல்வாள்.அந்த வேலைக்காகப் பணம் கொடுப்பதாயிருந்தாலும் “அவர் வந்ததும் வாங்கிக்கோ..” என்று விட்டேத்தியாக வேண்டுமென்றே சொல்வதும்,சிலநேரம் அதை மறந்துவிடுவதும் காமாட்சிக்கு வாடிக்கைதான்.ஆனால் அதற்காக,ராமகிருஷ்ணன் இதுவரை சலித்துக் கொண்டதாகவோ,சபேசனிடம் சொல்லிப் பணம் கேட்டதாவோ, காமாட்சிக்கும் நினைவில்லை.ஆனாலும்,ராமகிருஷ்ணனின் மீதான வெறுப்பு மட்டும் தணியவில்லை.
சிலநேரம், ‘இதற்காக தன்னை வேறுவழியில் பழிவாங்கிவிடுவாரோ..?’ என்று கூட காமாட்சிக்கு அபத்தமாகத் தோன்றும்.ஆனால் இன்னொருபுறம் ‘தூ..அம்பது வயசுக்கு மேல இருக்கற கிழம்.சோடாபுட்டி கண்ணாடி கீழே விழுந்தா கண்ணுதெரியாத கபோதி..அசைஞ்சு,அசைஞ்சு கப்பல் மாலுமிமாதிரி நடக்கிற இந்த ஆளா நம்மை பழிவாங்கும்..? சந்தர்ப்பம் கிடைக்கும்போது நாம் பழிவாங்கிவிடமாட்டோமா..?’ தனக்குத்தானே தைரியமாக ஆறுதலும் சொல்லிக் கொள்வாள்.
அன்றைக்கும் வழக்கம்போல ஐந்துமணிக்கு பணிக்கு வந்துவிட்ட ராமகிருஷ்ணன், அபார்ட்மெண்ட்டிற்கு முன்னுள்ள புற்கள் படர்ந்த மைதானத்தில் பந்து விளையாடும் குழந்தைகளை வேடிக்கை பார்த்தபடி அவ்வப்போது தனக்கு அருகில் வந்துவிழுந்த பந்தை எடுத்து குழந்தைகளுக்கு வீசியபடியும் தனது ஸ்டூலில் உட்கார்ந்திருந்தார்.
வெளிச்சம் குறைந்து,லேசாக இருள் கவியத் தொடங்கியது.
குழந்தைகள் அனைவரும் படிக்கவேண்டும் என்றும்,அம்மா திட்டுவார்கள் என்றும் தாங்களே விளையாட்டை முடித்துக்கொண்டு,வீடு திரும்பினர்.
மெயின் கேட்டின் லைட்டுகளைப் போட்டுவிட்டு,மாடியிலிருக்கும் ஃபோகஸ் லைட்டையும் போடுவதற்காக திரும்பி,அபார்ட்மெண்டை நோக்கிச் செல்லும் போதுதான்,மினுமினுப்பாக தரையில் ஏதோ மின்னியது.அருகில் சென்று குனிந்து எடுத்தபோதுதான் தெரிந்தது.சிறிய டாலருடன் கூடிய தங்கச்சங்கிலி.எப்படியும் ஒன்றரைப் பவுன் தேறும்.இந்தச் செயின் எந்தக்குழந்தையினுடையது.யாருடைய கழுத்திலாவது பார்த்திருக்கிறோமா..?. ராமகிருஷ்ணனுக்கு நினைவுக்கு வரவில்லை.சில விநாடிகள் முயன்றும் அவரால் அனுமானிக்க முடியவில்லை.
மேலும் சிலவிநாடிகள் கழிந்தது.யாரேனும் தன்னைக் கவனிக்கிறார்களா..தேடி வருகிறார்களா..? என்று சுற்றும்,முற்றும் பார்த்தார்.சபேசன் வீட்டுச் சன்னலில், காமாட்சியின் உருவம்,நிழலாடியது போல இருந்தது.அதற்குப்பின் சந்தடி எதுவும் இல்லை.கையிலிருந்த செயினை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு,அபார்ட்மெண்டுக்குள் சென்றார்.
சிறிது நேரம் கழித்து ஃபோகஸ் லைட் எரிந்தது.
சரியாக ஒருமணிநேரம் கழிந்திருக்கும்.திடீரென்று மூன்றாவது ப்ளோரில் குடியிருக்கும் ரமேஷ் அவனது மனைவி ஹேமா,அவர்களது குழந்தையான ஆறு வயது ப்ரியாவை ஏறக்குறைய இழுத்துக்கொண்டு,கீழே வந்தனர்.
இவர்கள் வந்த வேகம் பார்த்து பின்னாலேயே இன்னும் சிலர், என்ன,என்ன என்று கேட்டபடியே துரத்திக் கொண்டுவந்தனர்.
பந்து விளையாடிக் கொண்டு இருந்த இடத்திற்கு வந்தபின்,இங்கேதாம்ப்பா நின்னு விளையாடிட்டு இருந்தேன்.என்று ப்ரியா காட்டிக் கொண்டிருந்தாள். பின்னாலேயே வந்த குடியிருப்புவாசிகளிடம் ஹேமா விளக்கிக் கொண்டிருந்தாள். ப்ரியாவின் கழுத்திலிருந்து ஒன்றரை பவுன் செயின் தவறிக் கீழே விழுந்து விட்டதாகவும்,இங்கே கிடக்கிறதா..? என்று தேடிவந்ததாகவும் சொல்ல,அனைவரும் அவரவர் நின்றிருந்த இடத்தில் தேடிப்பார்த்தனர்.
ராமகிருஷ்ணன் நடப்பது அனைத்தையும் பார்த்துக் கொண்டு,என்ன செய்வதென்று தெரியாமல் சிலைபோல நின்றிருந்தார்.
“என்ன ராமகிருஷ்ணன்.இங்கே செயின் எதுவும் கிடக்குதான்னு கொஞ்சம் பாருங்களேன்..” செகண்ட் ப்ளோர் முரளி குரல் கொடுக்க,திடுக்கிட்ட ராமகிருஷ்ணனுக்கு, “பாவம் அவரை ஏங்க தேடச்சொல்லி கஷ்டப் படுத்தறீங்க..வெளிச்சம் இருக்கும்போது அவருடைய கண்ணில் பட்டிருந்தால் இன்னேரம் பொருள் வீடு வந்து சேர்ந்திருக்குமே..” மீண்டும் வந்த சபேசனின் குரல் மிகவும் ஆறுதலளிப்பதாய் இருந்தாலும்,ராமகிருஷ்ணனுக்கு அடிவயிற்றில் பிசைந்தது.நெஞ்சு திக்திக் கென்று அடித்துக்கொள்வது தெளிவாகக் கேட்டது.
அபார்ட்மெண்ட்வாசிகள் தம்மீது வைத்திருந்த மதிப்பை,நம்பிக்கையை நினைத்து வேறுஒரு சமயமாய் இருந்தால் பெருமைப் பட்டுக்கொள்ளலாம். ஆனால் இப்போது…அவருக்கு பயமாக இருந்தது.‘நடந்த தவறைச் சொல்லி மன்னிப்புக் கேட்டுக் கொள்ளலாமா.?.என்ன முடிவெடுப்பது.?.’ எப்படி முடிவெடுத்தாலும் அதன் பாதிப்புகளை நினைத்தால்..அதற்குமேல் அவரால் சிந்திக்கவே முடியவில்லை.
அப்போதுதான் அவருக்கு இன்னொரு அதிர்ச்சியும் தொடர்ந்தது.காமாட்சி மெதுவாக,அனைவரும் நகையைத் தேடிக்கொண்டிருக்கும் இடத்திற்கு வந்துகொண்டிருந்தாள்.சுமார் நூறுஅடி தூரத்தில் அவள் வந்து கொண்டிருந்தாலும், தன்னையே பார்த்தபடி அவள் வருவதாக ராமகிருஷ்ணனுக்கு தோன்றியது. அருகாமையில் அவள் வருவதற்குள்ளாகவே,சரி விடுங்க..இப்ப தேடுறதுக்கு போதுமான வெளிச்சம் பத்தாது.இவ இங்க தொலைச்சாளா..ஸ்கூல்லேயே தொலைச்சிட்டாளா இல்லே வீட்டுக்குள்ளே எங்கியாவது கிடக்குதோ.. தெரியலை.அங்கியும் போய் தேடிப்பாக்குறோம் என்றபடி ரமேஷ் சொல்ல,அனைவரும் நிமிர்ந்தனர்.
“சரிதான்,போய் தேடிப்பாருங்க..இங்கே எங்கியாவது பார்த்தா,எடுத்துக் குடுத்துரலாம்.அதுவுமில்லாம ராமகிருஷ்ணன் இருக்கும்போது உனக்கென்னப்பா கவலை..?,
“அப்படியும் கிடைக்கலேன்னா,முப்பத்தியஞ்சாயிரம் ரூபாயை திருப்பதி உண்டியல்ல போட்டதா நினைச்சுக்கோ..” என்று யாரோ சொல்ல,சூழ்நிலையின் இறுக்கத்தை மறந்து நிறையக்குரல்கள் சிரித்தாலும்,ஹேமாதான் பாவம், சிரிக்கிறாளா, அழுகிறாளா என்றே தெரியவில்லை. அனைவரும்,வீடுகளுக்கு செல்ல திரும்பினர்.அந்தக் கூட்டத்தில் காமாட்சி மட்டும் ராமகிருஷ்ணனை மீண்டும்,மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டே செல்வது தெரிந்தது.
அவள் ஏதாவது சபேசனிடம் சொல்லி..அதற்குப்பின் என்னவெல்லாம் நடக்கும்..? போலீஸ் நடவடிக்கை வரை போகுமா..? போலீஸ் வந்து விசாரித்தால் என்ன சொல்வது எப்படி சொல்வது..தீராத குழப்பம் ராமகிருஷ்ணனைப் பிடித்து ஆட்டியது.திடீரென்று உடலில் உள்ள சக்தியை எல்லாம்,யாரோ உருவிக்கொண்டதைப்போல உடல் தளர்ந்துபோய்,தனக்கான ஸ்டூலில் தொப்பென்று உட்காந்தார் ராமகிருஷ்ணன்.லேசாக நெஞ்சு வலிப்பதுபோல இருந்தது.
அன்று இரவு,விடிந்தபின்னும்,ராமகிருஷ்ணன் லைட்டுகளை அணைக்கவில்லை.அவர் எப்போதும் தூங்கும் இடத்தில் அசையாமல் கிடப்பதைக் கண்டு,சந்தேகமுற்ற அபார்ட்மெண்ட்வாசி ஒருவர்தான் முதலில் கத்தினார். “ராமகிருஷ்ணன் செத்துப்போயிட்டாரு.”
அதற்குப் பிறகு போலீசும்,டாக்டரும் சம்பவஇடத்திற்கே வந்து பார்த்து,அவர் ஹார்ட் அட்டாக்கில் இறந்ததை உறுதிப்படுத்திவிட்டு சென்றனர். பின்னர் அவர் வீட்டுக்கு தகவல் சொல்லப்பட்டு வந்த அவருடைய மனைவியும்,இன்னும் திருமணம் முடிக்காமல் இருந்த பெண்பிள்ளையும் கதறி அழுததைக்கண்ட அபார்ட்மெண்டவாசிகள் அனைவருக்கும் கண்கள் கலங்கியது.
“ஏங்க முடிஞ்சவரைக்கும் இவங்க குடும்பத்துக்கு ஏதாவது உதவி செய்யலாங்க..” காமாட்சியும் அழுதுகொண்டே சொன்னபோது,என்னதான் கரித்துக்கொட்டினாலும்,இவ்வளவு இரக்ககுணம் அவளுக்கு இருப்பது,சபேசனுக்கு இப்போதுதான் தெரிந்தது.
வழக்கம்போல தன்வீட்டுக் காலிங்பெல்லை முதலில் அழுத்திய ராமகிருஷ்ணன் காட்டிய நகை தன் பிள்ளையுடையதுதான் என்று கூறி ஒரு சபலத்தில் வாங்கியதும். அபார்ட்மெண்ட்வாசிகளிடம் அதைச் சொல்ல வாய்ப்பிருந்தும், சொல்லாமல் தனது கௌரவத்தைக் காப்பாற்றிய ராமகிருஷ்ணன்,தன்;னுடனே அந்த ரகசியத்தைப் புதைத்துக்கொண்டதும்,காமாட்சிக்கு மட்டும்தானே தெரியும்.!
மிக மிக அருமையான கதை
மூன்றுமுறை படித்தேன் …ரசித்தேன் …
சிந்திக்க வைக்கும் கதை
9842115160