சந்தேக வலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 15, 2019
பார்வையிட்டோர்: 7,746 
 

(ஒரு துளி,ஒரு அலகு நீதி நிகழ்ந்தால் கூட அதை வெளிச்சம் போட்டு காட்டப்பட வேண்டியது அவசியம். )

அன்றைய நாள், இப்படி அகோரமாக முடியும் என யார் தான் நினைத்திருப்பார்கள் ?

உயிரை உறைய வைக்கும் பலவித ஆடவர்களின் குக்குரல்களைக் கேட்ட அயலவர்கள் வேலணையில் சற்று தள்ளி உள்ளே இருந்த முல்லை இயக்க காம்பிலிருந்த பெடியள்களிடம் பதற்றமாக சொல்லிய போது…சரிவர விளங்கவில்லை.”ஐய்யோ,போய்க் காப்பாற்றுங்கள் ,பிசாசுகள்,மண்டைதீவுக் கடற்கரையில் படுகொலை செய்கிறார்கள்,கெதியாய் போங்கள்”எனக் கூறிய போது அவசரமாக ஆயுதங்களுடன் தாகுதல்க் குழு வானில் விரைந்தது.பின்னால் சைக்கிளில்,மோட்டார் சைக்கிளிலிலும் மேலும் உதவிக்காக சில தோழர்களும் பறந்தார்கள்.

காம் பொறுப்பாளர் செல்வன் எல்லாரையும் அனுப்பி விட்டு வோக்கியில் சங்கேத முறையில் வரும் செய்திகளுக்காக காத்திருந்தான்.காம்பையும் தயார் நிலைக்குட் படுத்தி இருந்தான்.தாக்குதலுக்கு உள்ளாகலாம்,எதிர் கொள்லலாம்,பின் வாங்க வேண்டியும் நேரலாம். எதிர்வு கூற முடியாத நிலை.

கிட்ட நெருங்கிற போது சிங்களச் சொற்கள் காற்றிலே மிதந்து வந்தன.ஆட்கள் நடமாட்டம் தூரத்தே தெரிந்தன.யோசிக்க நேரமில்லை.அந்த திசையில் கொல்லைக்குப் போன சனம் ஏதும் இருக்குமா…என எல்லாம் பார்க்க முடியவில்லை.ஆட்களைப் பார்த்து வேட்டுகளை தீர்த்தார்கள்.”வந்திட்டாங்கள்”என சிங்களத்தில் கத்திக் கொண்டு இரண்டு ,மூன்று விசைப் படகளில் ஏறிப் பறந்தார்கள்.யாராவது காயப்பட்டார்களா?இல்லையா என்பது இவர்களுக்கு தெரியவில்லை.

கிட்ட நெருங்கிப் பார்த்த போது பெடியள்கள் சிலருக்கே தலை கிறுகிறுத்தன.”புளுதியில் எறிவதற்கா இந்தத் தமிழனை படைத்திருக்கிறான்”பார்த்தனுக்கு மனம் வெகுவாக புளுங்கியது.பார்த்த மாத்திரத்திலே இன்னொரு ‘குமுதினிக் கொலை’அவனுக்கு ஒரு நொடியில் புரிந்தது.ஒரு தொகை பேரினர்.யாராவது ஒரிருவர் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டிருக்கலாம்.அவன் பாசம் வைத்திருக்கிற கடைசித் தம்பி குகன் வயசிலே

நாலைந்து பேர்கள்,அவன் வயதில் பெரும்பாலானவர்,அப்பு வயசில் கூட ஒருவர்.

எல்லாருக்கும் தினவெடுத்த கடல் தோள்கள் ,எந்த வயசிலும் உடலில் உரமேறி போய்க் கொண்டிருக்கிற கடல்க் குழந்தைகள் .வெட்டு,கொத்துக்கள் ஒன்றா,இரண்டா…?சே, என்ன மாதிரி எல்லாம் கிழித்திருக்கிறார்கள்,என்ன ஜென்மங்கள் இவர்கள்??.உலகில் உள்ள எல்லா பயங்கர தொன்மங்களையும் இறக்குமதியாக்கி,அவர்களின் வழிகாட்டலில் சிங்களவன் செய்கிறானா?இல்லை,வந்தவன் செய்கிறானா?என புரியாமலே…..தமிழர்களை சர்வ‌ அசாதாரணமாகவே சாகடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவன் இந்த உடம்பைப் பெறுவதற்காக இவர்களில் நான் பிறந்திருக்கக் கூடாதா?என்று சிறு வயதில் எவ்வளவு ஏங்கி இருக்கிறான்.இவன் மனதில் என்றைக்கும் கடலுக்கு பெரும் இடம் உண்டு.

இயக்கத்தில் இளவயதில் சேர்ந்ததிற்கே காரணம்,இவர்களைப் போல கடலைக் கலக்க சாத்தியங்கள் இருக்கின்றன என்பதால் தானே!வள்ளத்திலே…என அதுவும் பிள்ளையார் சுழித் தொடக்கம் தானே.இதுவரையில் ஒரு பத்துத் தடவைகள் கடலில் மிதந்திருக்கிறான்.அவன் எண்ணிக் கொண்டிருக்கிறான்.

இப்ப‌ ,அவனுக்கு ஓரளவு பாதை அறிந்து அவுட்புட் மோட்டரைப் பிடிக்கத் தெரியும்.இவர்கள் வள்ளங்கள் சத்தமில்லாமல் துடுப்புகளால் துளாவியே வந்திருக்கின்றன.இந்த சிங்களப் பேய்களின் கண்களில் படாமல் தொழில் செய்ய முனைந்திருக்கிறார்கள்.பலர் இறந்து விட்டிருந்தனர்.ஒரிருவரில் துடிப்புக்கள் இருந்தன.அந்த துடிப்புகளும் ஒவ்வொன்றாக அடங்கி வர, என்ன நடந்தது என்பதை அறிய ஒருத்தர் கூட மிஞ்ச‌ மாட்டார்களா?எனப் பயம் ஏற்பட்டது.பக்கத்தில் இருந்த சஞ்சியுடம் “நீ செல்வனுக்குச் சொல்லு”என வோக்கியைக் கொடுத்து விட்டு …நிலமையை மேலும் அளவிட்டான்.

ஒருத்தன் தான் உயிர் பிழைக்கக் கூடிய நிலையில்,ஆனால் பேசக்கூடியவனாக இல்லாமல்… இருந்தான் .அவனை அவசரமாக வானில் ஏற்றி காம்பிற்கு கொண்டுச் சென்று,உள்ளூர் வையித்தியர் ஒருவரின் கண் பார்வையில் விரைவாக யாழ் ஆஸ்பத்திரிக்கு அனுப்ப செல்வனிடம் …சொல்லச் சொல்லி, ,வருகிற போது ஒரு அவுட்புட் மோட்டர் ஒன்றையும் எடுத்தி வரச் சொல்லி கமலியை மேலும் இரு தோழர்களுடன் அனுப்பினான்.வான் பறந்தது. தூய ஒளி என்ற பெரிய வள்ளம்,மற்றும் யாகப்பர்,ஜேம்ஸ்…வள்ளங்கள்,குருநகர் என்ற சின்ன எழுத்துகளுடன் மாலை வெய்யிலில் வாசிக்கக் கூடியதாக இருந்தன.

பாவம்,குருநகர்த் தொழிக்காரர்கள் !

எல்லா உடல்களையும் வள்ளத்தில் ஏற்றச் சொன்னான்.ஒரு வள்ளத்துடன் மற்ற வள்ளங்களையும் கட்டி விட்டு வந்த அவுட்புட் மோட்டரை தலை வள்ளத்தில் பொறுத்தினான்.அவனுடன் அந்த பகுதி ஓட்டி தோழர்கள் இருவர் இருக்க, மற்றவற்றில் சுக்கான் தடியை சரிவர பிடித்து வர, ,ஓட்டிகளை கோட்டையை விட்டு சற்று விலத்திய பாதையில் ,குருநகர் பகுதியை நோக்கிச் செலுத்த வைத்தான்.இரு தோழர்கள் வானை காம்பிற்குச் செலுத்திச் சென்றார்கள்.

என்ன தான் செய்வது?,நேரே ஜெட்டிக்கே விட்டார்கள்.”மீனோடு வருவார்கள்’என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களால் தாங்க முடியவில்லை.குக்குரலும் ,ஒப்பாரியுமாய் அழுகுரல் வானத்தைப் பிளக்கும் போல இருந்தது.செய்தி அறிந்த உடனே பங்குத் தந்தையும் வந்து விட்டார்.அவர்களிடம் உறுதியியான மீன் பிடிச்சங்கமும் இருந்தது.உடல்களை பொறுப்பெடுத்துக் கொண்டார்கள். அவர்களிடம் … விபரத்தை தெரிவித்தார்கள்.ஒருத்தன் உயிரோடு போராடிக் கொண்டிருந்ததால்,அவனிடமிருந்து விபரம் அறிய முடியாத நிலையில் அவனை உடனடியாக…அனுப்பியதையும் தெரிவி க்க,ஒரு குழு அங்கே விரைந்தது.என்ன நடந்தது ?என்பதை அறிய வேண்டும்.மீன் பிடிக்க தடை விதித்திருந்த நிலையிலும் வழியின்றி தொழிலுக்குப் போனதையும் , நடந்ததையும்…அரசாங்க அதிபரோடு அந்த நேரத்திலும் பங்குத் தந்தையார் தொலைபேசியில் கதைத்தார்.

உப அரசாங்க கால்பந்தாட்டப் போட்டிகளில் எல்லாம் அவ்விடத்தே இருக்கிற கால்பந்து விளையாட்டுக்கழக மும் மோதுகிற வைகளில் ஒன்று.இரண்டொரு தடவைகளில் இறுதிப்போட்டியில் வெற்றிவாகையும் கூட‌ சூடி இருக்கிறார்கள்.அரசாங்க அதிபர் கேடயம் வழங்கி கெளரவித்து இருக்கிறார்.

பங்கு தந்தையாருக்கும் தனிநாயகம் அடிகளார் போல தமிழ் மொழியில் காதல் இருந்தது.இவரை பல அதிகாரிகளிற்கு கூட பிடிக்கும் என்கிற போது…அதிபருக்கு பிடிக்காமல் இருக்குமா?தவிர அதிபர் கால்பந்து ரசிகர் வேற.சிறுவயதில் …விளையாடி இருக்கலாம்.அவர் உடனடியாக உள்ளூராட்சி அமைச்சிற்கு தொலை பேசியில் செய்தியைத் தெரிவித்தார்.

இருபத்திநாலு மணி நேரமும் ..தொடர்பு கொள்ளுறது வசதி இருந்திருக்கிறது போல இருக்கிறது.அச்சமயம் உள்ளுராட்சி அமைச்சு பிரேமதாசாவின் கீழ் இருந்திருக்க வேண்டும்.”என்னம் செய்யலாமா?..எனப் பார்க்கிறோம்.மர‌ண சான்றிதழ்களை எல்லாம் ஒழுங்காய் பெற்று வைத்திருக்கவும்..”என்றார்கள்.”படையினர் ,மிக மோசமாக கொன்றிருக்கிறார்கள்.பிரேதப் பரிசோதனை எல்லாம் செய்ய முடியும் எனப் படவில்லை”என்று இவர் கூற ,”யாழ் நிலமையில்,மரண விசாரணை அதிகாரியை நேரிலே சென்று பார்த்த சாட்சியம்..போதும்.அவர் பார்த்த பிறகு சவ அடக்கம் நடக்கட்டும்.பிறகு தொடர்பு கொள்கிறோம்”என பதில் வர,அதிபர்,இரவு நேரத்தில் அவரையும் எழுப்பி “ரெடியாய் இருங்கள் நானும் வாரேன்”என்று பதற்றப்பட்டார்.

பஞ்ச லிங்களில் ஒன்று,பிரேமதாசாவை “இது முதல் தடவை இல்லையே ஏற்கனவே ,குமுதினிப் படகு…,என்ன செய்வதாக உத்தேசம்?”எனக் கேட்டார். “லங்காபுவத் செய்தி தடை யில் தானே இருக்கிறது.இந்த விசயம் வெளியில் வராமல் கடுமையாக அமுக்கும்.அங்கேயும் படையினர் செய்தது என கதைக்க வேண்டாம் என அதிபரின் காதிலும் போடும்.”என,”இங்கே கேட்டால் …என்ன சொல்றது?”என இவர் தொணக்க,”என்ன லிங்கம் உமக்கு இது கூடத் தெரியாதா?,பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட ஒவ்வொரு குடும்பங்களிற்கும் 50,000 ரூபா..படி கொடுக்கப்பட்டது என எழுதும்”எனச் சிரித்தார். ஏற்கனவே அங்கிருந்து அப்படி இறந்த சிங்கள குடும்பங்களிற்கு…இங்கே அவர்கள் பணம் கொடுத்திருக்கிறார்கள். “கவனமாக எழுதினால் எங்கே கொடுக்கப்பட்டது என வெளியில் தெரியவே வராது அவ்விடத்தில் இருப்பவர் கதைத்தால் தான்..ஊடகவெளியில் பெரிதாகப் பேசப்படும்.”

விடுதலை இயக்கங்களைப் போல,அரசாங்கத்திலும் அரசியல் பிரிவு கதைத்தால்,ராணுவப் பிரிவு,

எப்பவும் காதில் போட்டுக் கொள்ளாது,இரு பிரிவுகளுமே கதைத்தால்…மூன்றாவது பிரிவாக பெரும் பிரச்சனையாய் இருக்கிற‌ தேரர்கள் பிரிவு..காதில் வாங்காது விட்டு விடும். இந்த அரசியல் அமைப்புகளிலிருந்து தேரர் பிரிவு அகற்றப்பட வேண்டும்.அன்றில், தமிழர்களிற்கு எந்த காலத்திலும் பிரச்சனைகள் தீரப் போவதில்லை. தீர்க்க முயன்ற‌ அரசியல்ப் பிரிவு அரசியல்வாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள், முயல்கிறவர்கள் கொல்லப்படுவார்கள். சிங்கள அரசியல்வாதிகளில் சிலர் மிகத் தெளிவாகவே தமிழர் பிரச்சனைகள் பேசுவதும் (அப்படி பேச உள்ளத்தில் நேர்மை,சத்தியம் . இருந்தால் தான் வரும்.),அப்படி பேசியவர்கள் மாறி பேசுகிறார்கள் என்றால்,அவர்களிற்கு உயிர் அச்சுறுத்தல் நேர்ந்து,சரணாகதி அடைந்து விட்டிருக்கிறார்கள் என்று தான் அர்த்தம்.

இப்படியான நிலமைகள் அங்கேயும் இருப்பது அவ்வளவாக நமக்கெல்லாம் தெரிவதில்லை.ஆனால் செய்தியாளர் மத்தியில்..பேசுற போது வெகு லாவகமாக சமாளித்துப் பேசித் தள்ளி விடுகிறார்கள். லிங்கத்திற்கு …கொஞ்சம் தெரியும். பிரேமதாசாவிற்கு …எதிரிகள் கட்சியிலேயே பரவலாக இருக்கிறார்கள்.சுழியானாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். குமுதினிப் படகைப் பற்றி ஒரு நிருபர் கேட்ட போது “அப்படி …ஒன்றும் நடைபெறவே இல்லையே”என பாதுகாப்பு மந்திரி லலித் அத்துலத் முதலி கையை விரித்து சிரித்திருக்கிறார். அப்பவும் அந்த பிரச்சனையை உள்ளூராட்சி அமைச்சுக்கு கொண்டு வந்திருந்தால்… சுழிச்சு கிழிச்சு பண உதவி செய்திருப்பாரோ ? சங்கம் அமைத்து சாதனை புரிந்த தமிழனுக்கு இப்ப …சங்கம் அமைத்து வாழத் தெரியவில்லை.சாதிகள் இருக்கின்றன தவிர ,எத்தனை விவசாய,மீன்பிடி,மற்றைய தொழலாளிய…சங்கங்கள் இருக்கின்றன.சில விடுதலை இயக்கங்கள் தான் தொழிற்ச் சங்கங்களை அமைக்க படாத பாடு பட்டன.பொது மக்களில் எத்தனை பேர்கள் அதில் அக்கறை செலுத்தினார்கள்?,முகநூல்க்காரர்கள் போல எழுந்தமானமாக முத்துதிர்க்கத் தானே கற்றிருக்கிறார்கள். பாதிக்கப் பெற்றக் குடும்பங்கள் சொந்த அயலிலேயே தனித்து கைவிடப்பட்டவர்களாக அல்லவா துடிக்கிறார்கள்.அவர்களிற்கு ஆறுதல் வார்த்தைகளுடன் மீள குடும்பத்தைக் கொண்டுச் செல்ல சிறிதளவு (பண) உதவி கிடைத்தால் கூட பெரிய விசயமல்லவா! அகப்பட்டவன் பாவி,அகப்படாதவன் அதிருஸ்டக்காரர் போல போய்க் கொண்டிருக்கிறோம்.வேலை வாய்ப்புகளை அரசாங்கம் குறுக்கினாலும் நாம் ஏதாவது செய்ய வேண்டாமா?விடை தெரியாத‌நிலமைகள். எவர் மனதில் ஈரம் சுரந்தாலும் பாராட்டுக்குரியவர் தான்.முதலில் மனிதர்கள்,அப்புறம் தான் அரசியல்.

லிங்கம் அந்த அரசியல்வாதியை ஆச்சரியமாய் ஏறிட்டுப் பார்த்தார். இது முதல் தடவை இல்லை .சொன்னதைத் தான் செய்வார்.செய்ததைத் தான் சொல்வார் போன்ற பிரகிரிதி .‌ “பொய் சொல்லி அல்லவா செய்யப் போகிறோம்.” லிங்கம் தொடர்ந்தும் அலுப்புக் கொடுத்தார்.”அது யார் உங்கட வள்ளுவர் சொல்லி இருக்கிறாரே ..அது என்ன?”கேட்டார்.”பொய்மையும் வாய்மை இடத்து நகும்”இவர் முடித்தார்.”பிறகென்ன…”தாசாவின் முகத்தில் மந்தகாசம்.”வள்ளுவர் ..”என இழுக்க,”வள்ளுவரும் ஒரு புத்தர் தானே,புத்தரை அவர் சிஸ்யன் என்று கூடச் சொல்லலாம்.’கொல்லாமை’யைச் சொன்ன புத்தர்,மற்றவர்கள் கொன்று வாரதைத் தின்றதுக்குக் காரணம் ,அவர்களையும் ஒதுக்கப்படாது அரவணைக்க வேண்டும் என்பதற்காக ! ஆனால் அதை உங்கட ஆட்கள் தான் ‌என்ன கிண்டல்கள் எல்லாம் செய்கிறார்கள்.”தாசாவால் தான் இப்படி பேச முடியும்.

“சரி,அவர்களிற்கும் அனுப்பி விடுகிறேன்”என லிங்கமும் ஓய்ந்தார்.

சங்க இளைஞர்கள்…. உடல்களை வீடுகளிற்கு எடுத்துச் செல்லும் நிலைமை இல்லாததால்,பங்குத் தந்தையார் கூறியபடி யாகப்பர் தேவாலயத்திற்கே கொண்டுச் சென்றார்கள். முதியவர்களும்,பெரியவர்களும் …ரத்ததில் தோய்ந்த உடுப்புக்களை களைந்து காயங்களை மறைத்து,முகத்தை தண்ணீர்த் துண்டால் துடைத்தும் வாங்குகளை ஒன்றுச்சேர்த்து வைத்து படுக்க வைத்தார்கள் இறந்த பிறகு தான் மனிதர் முகத்தில் ‘என்ன நிம்மதி’ நிலவுகின்றன. எந்த உணர்வுகளும்… களைந்து தேவனாகி விடுகிறார்க ளே.பார்க்கிறவர்களிற்கு அவர்கள் அனுபவித்த வேதனைகள் தெரிவதில்லை. தெரியப் போவதுமில்லை மோசமான இனப்பிரச்சனைகள் கூடத் தெரியப் போவதில்லை.

“நாங்கள் முல்லை இயக்கம் தேவை .என்னம் என்றால் முல்லைக் காம்பிற்கு வந்து விசாரியுங்கள்.தெரிந்ததைச் சொல்கிறோம்.வருகிறோம்”என பார்த்தன் குழு விடை பெற்றுக் கொண்டது. அவர்களிட பெடியள்களின் சைக்கிளில் ஏறி கழன்றார்கள். பார்த்தனும் ஒருத்தனும் அவுட்புட் மோட்டாரை கார் ஒன்றில் எடுத்துச் செல்ல சங்கப் பெடியள் உதவினார்கள்.

சவப்பெட்டிகள் செய்வதற்கு நிலமைகள் இருக்கவில்லை.யாழ் வைத்திய ஊழியர்கள் வெள்ளைத் துணியால் சுத்தி,…,பங்குத் தந்தை இறைவனிடம் இரஞ்சி, “உன் பிள்ளைகளை ஏற்றுக் கொள்ளும்,இவர்களின் பாவங்களை மன்னித்து விடும்”என செபம் செய்து ,மதக் கிரியைகளைச் செய்ய,குடும்பத்தவர்கள் அஞ்சலி செலுத்த,ஒவ்வொருவருமே அவர்களின் செல்வங்கள் இல்லையா,ஆறாத்துயருடன் தனி,தனிக் குழிகளில் சவ அடக்கம் செய்யப்பட்டன.பங்குத் தந்தையர் களைத்து தான் போனார். அப்ப‌,.பாபுவிற்கு பத்து வயதிருக்கலாம்.அப்பாவும் பெரியண்ணையும் இறந்த துயரில் வீட்டில் ஒழுங்காக சமையல் நடைபெறாது, இருக்க‌ தேவாலயமும்,சங்கப்பெடியள்,அவர்களின் நண்பர் உறவினர்,மற்றும் அயல் பாசையூர்…என தொழில் செய்கிறவர்கள் சாப்பாடுகள் கொண்டு வர சங்கப் பெடியள் அவற்றைப் பெற்று மரண வீட்டுக்காரர் எல்லாருக்கும் வழங்கினார்கள் அவ்விடத்திற்கு பண,உணவுப் பொருள் உதவிகள் என மேற் கொண்டும் சிறிதளவு செய்து கொண்டிருந்தார்கள்.

குருநகரில், நிலவும் துய ர் ஆறும் போலத் தெரியவில்லை, காலம் தான் அவற்றை ஆற்ற வேண்டும் போல இருக்கிறது.

ஒவ்வொருவருக்குமே கச்சேரியிருந்து மரணப்பத்திரம்கள் வழங்கப்பட்டன.வாசிகசாலை முன்றலில் அவர்களுக்கான நினைவுத்தூபி ஒன்றை நிறுவதில் எல்லாரும் முன்றனர்.

அச்சமயம் பங்குத் தந்தைக்கு அதிபரிமிருந்து தொலைபேசியில்”அரசாங்கம் குறிப்பிட்டத் தொகை வழங்க ஒதுக்கியிருக்கிறது.மரணச்சான்றிதழ்களுடன் வந்து பெற்றுக் கொள்ளவும்”என அழைப்பு வந்தது. சங்கப்பெடியளுடன் சென்று பணத்தைப் பெற்றுக் கொண்டார்கள். மனுவெல் அப்பு பாபு வீட்டிலே வந்து பணத்தைக் கொடுத்த போது,பாபு”அம்மா யார் அனுப்பினவயள்?”என விளங்காதுக் கேட்டான்.”தேவாலயம் தருகிறது ராசா”என்று பதில் சொன்னவரின் கண்களில் கண்ணீர்.

கடல் அம்மா எடுத்த பிறகும் சின்னண்ணை ஜேம்ஸ் வள்ளத்தில் தொழிலுக்குப் போய்க் கொண்டிருந்தார்.பெரியண்ணை எப்பவும் சின்னண்ணையை “டேய், தொழிலிலே காலம் கழிக்க வேண்டாம் ,நீ துரைராஜாவிடம் வீட்டுப்படம் கீறுகிற(படம் பயில் வரைஞர் படிப்பு) வகுப்பை எடுத்து வெளி வேலை ஒன்றை எடுக்கப் பார் “என்று சொல்கிறவர். இருவரும் ஒ.லெவல் வரையில் படித்தவர்.என்னவோ அவ ரின் ஆசை நிறைவேறவில்லை பாபு,ஒ.லெவலில் நின்ற போது,ஜேம்ஸ் அவனை “போடா அந்த ஆறு மாச வகுப்பை நீ எடு”என அனுப்பினார்.கடல் தொழிலைச் செய்யவும் அவன் கற்றிருந்தான்..அதனால் அவன் தோள்களும் பொலிவுடன் விளங்கின‌..உள்ளூர் கால்பந்துக் குழுவிலும் கோலியாக விளையாடுகிறான்.பெரிசுட விருப்பம் என அவனும் அந்த வகுப்பை எடுத்தான்.

பெரியண்ணையிட நண்பர் ஒருவர்,கொக்குவில் தொழினுட்பக் கல்லூரியில் படம்பயில் வரைஞர் வகுப்பை முடித்து, குவைத்தில் வேலை வாய்ப்பு வர,சென்று ஐஞ்சு வருசம் வேலை செய்து விட்டு,வந்தவருக்கு கல்யாணம் நடக்க ,திரும்ப வெளியிலே போகாது யாழிலேயே கம் கட்டிட நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தி வீடுகளைக் கட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.

சின்னண்ணை அவனை அவரிடம் கூட்டிச் செல்ல அவர் ,ஏற்கனவே கீறிக் கொண்டிருந்த நகுலனுடன் அவனையும் சேர்த்துக் கொண்டார்.யாழ்ச் சம்பளம் பெரியளவில் இருக்காது.உண்மையான சம்பளத்திலும் கால்வாசியிலும் குறைவாகவே இருக்கும்.என்ன செய்வது?உரிமைகள் இழந்து இரண்டாம் பிரஜைகளாக வாழ்கிற எமக்கு பொக்கற் பணம் கிடைத்தாலும் பெரிய விசயமல்லவா.பெடியள்கள் பல விடுதலை இயக்கங்களிற்குச் சென்றதுக்கு இந்த நிலமைகள் தாம் காரணம்.

அந்த நிறுவனத்தில் இவனை விட குறைந்த சம்பளத்தில் மேற்பார்வையிடல் வேலையைச் செய்தவன் ரூபன்.வீட்டு அளவுகளை எடுக்க அடிக்கடி ரூபனை மோட்டர் சைக்கிளில் ஏற்றிச் செல்லுவான்.வங்கிக் கொள்ளைகள்,தீடீரென நிகழும் குண்டு வெடிப்புகள், இயக்கப்பெடியள்களின் வீடுகளைக் குறிபார்த்து விழும் செல்லுகள்,பவனியாக வந்து ஒரிரு இளைஞர்களைச் சுட்டுத் தள்ளும் படையினர்,.. என நாளும் நடக்க‌ ,புதிய சந்தையில் இயங்கிய நிறுவனத்தை நல்லூரிற்கு கிட்ட இருந்த அவர் வீட்டிற்கே மாற்ற வேண்டி ஏற்பட்டது..

ரூபனும் இயக்கமொன்றில் போய்ச் சேர்ந்து விட்டிருந்தான்.நகுலனை மட்டும் வைத்து அவர் சமாளிப்பார் போல நிலமை இருந்தது. ஆனால், அவர் பாபுவை வேலையிலிருந்து நிற்கச் சொல்லவே இல்லை.

பங்குத் தந்தையார்,அதிபருடன்” கொடுத்த பணம் போதவில்லை,குடும்பத்திலே ஒருத்தரையாவது வெளியில்,அனுப்பினால் கொஞ்சமாவது மீட்சி அடைவார்கள்”என்ற கோரிக்கையை யையும் தெரிவித்தார்.பரமபிதா, மரியா அம்மாவிலே பாரத்தைப் போட்டு விட்டு சேவை புரிகிற அவரே எதிபார்க்கவில்லை. குறிப்பிட்ட ளவு பணம் மீளவும் அரசால் ஒதுக்கப்பட்டு அவர்களிற்கு கிடைத்தது.அந்தப் பண உதவியுடன் தான் கடனை,உடனை வாங்கி முயற்சிக்க ,ஏன் எதிர்மறையாய்யே நினைக்கிறீர்கள்,சிலவேளை இறந்தவர்களின் ஆவிகள் கூட‌ நல்லபடி நடக்கவும் வைத்து விடுமல்லவா!.பாபு ஐரொப்பிய நாடு ஒன்றுக்கு இடம் பெயர்ந்திருந்தான்.

அங்கே ஈழத் தமிழரின் கால்பந்துக் கழகத்தில் சேர்ந்து விளையாடிய திடலில் ரூபனைச் சந்தித்தான்.கோளத்தின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு வந்து விட்டிருக்கிறார்கள்.மறுபடியும் தொடங்கிய முனையையை என்று அடைவார்கள் என்று தான் தெரியவில்லை , அடைவார்களா? இலங்கையில் இனப்பிரச்சனை தீர்க்கப்படுமா?

இருவரையும் அந்த ஏக்கம் பிடித்துத் தான் ஆட்டுகின்றன.ஆனால் சிறிலங்காவின் அரசியல் மாறாமல் துருப்பிடித்துப் போய்க் கிடக்கிறதே,என்ன தான் செய்வது?

அதற்குப் பிறகு ரிகொட்டன் கோப்பிக் கடையில் அடிக்கடிச் சதிக்கிறார்கள்.அப்ப தான் கதைப் பிராக்கில் பாபு,இந்தக் கதையைக் கூற அவனால் நம்ப முடியாமல் இருந்தது.”டேய் பேயா,அரசு எத்தனைப் பேரைக் கொன்றிருக்கிறது.ஏதாவது நீதி விசாரணை நடத்தியிருக்கிறதா? அவர்களாவது பணம் கொடுக்கிறதாவது ?,உனக்கு தேவாலயம் காசு சேர்த்துக் கொடுத்திருக்க வேண்டும்.கத்தோலிக்க சமூகம் இந்த மாதிரி உதவிகள் செய்கிறவர்கள்.நேரடியாக செய்ய முடியாம‌ல் இருக்கிற போது தேவாலயத்துக் கூடாகச் செய்திருக்கலாம்.கல்லிலே நார் உறிக்கலாம் தவிர,இந்த அரசிலே ஈரம் சிறிதுமே கிடையாதடா”என்றான்.

“, அங்காலையும் ஈரமுள்ள அரசியல்வாதிகளும் இருக்கிறார்கள் என்பதை நான் நம்புறேனடா, கலவர மூட்டம் ஈரமுள்ள சிங்களவர்கள் இருந்தார்கள் என்பது எமக்கு ஏற்கனவே தெரிந்த செய்தி.இது புதிய செய்தியாய் இருக்கிறது.அது தான் உனக்கு நம்ப கஸ்டமாய் இருக்கிறது.” என்றவன்,

“பிறகு, நாங்க கட்டின நினவுத் தூபியை இந்த படையினர் உடைத்து தான் தள்ளி விட்டார்கள்.பிறகு இப்ப வடிவாய் கட்டி எழுப்ப அனுமதித்திருக்கிறார்களே,பொதுசன நூலகத்தை கல்வி அறிவில்லாத சிங்களவர்கள் எரித்தார்கள் என வைத்துக் கொள்ளுவோம்.மீள அரசு கட்டி கொடுத்திருக்கிறதே!கோட்டைப் பகுதியில் தமிழாராட்சி நேரத்தில் இறந்தவர்களிற்கான சின்னத்தையும் உடைத்தார்கள்.பிறகு,அரசே கட்டி விட்டிருக்கிறதே,இதெல்லாம் என்ன.,ஒரு அலகு வேலை நடந்தாலும் கூட அந்த ஞாயத்தை ,ஈரத்தைப் பாராட்டத் தான் வேண்டுமடா “ரூபனுக்கும் அவன் சொல்கிற ஞாயம் புரியத் தான் செய்தது.

“நீ நம்ப மாட்டாய் என்று தான் இவ்வளவு நாளும் சொல்லவில்லை.ஆனால் அந்த பக்கமும் எவ்வளவோ சிக்கல்கள் இருக்கலாம் தான்ரா,.நாம் அந்தப் பக்கம் பாறை என்கிறோம்.பார் நம் பக்கத்தில் இல்லாத பாறைகளா?, எத்தனை இயக்க மோதல்கள், நம் கதாநாயகர்கள் தானா இந்த கொலைகளை எல்லாம் புரிகிறார்கள்..என்றெல்லாம் திணரவில்லையா, குழம்பவில்லையா?நான் எந்த ஒன்றிலேயும் சேராததிற்கும் அது தானே காரணம்.சரி நீ சேர்ந்தாய். இங்கே எப்படி வந்தாய்?”கேட்டான்.

“எண்பத்தி மூன்றாம் ஆண்டுக் கலவரத்தோட என்ர அண்ணர் வெளியிலே போய் இருந்தார்.இந்திய ஆமி வந்த போது,இயக்கங்களோடு மோதிக் கொண்டவர்கள் இவர்களுடனும் கனகாலத்திற்கு சமாதானமாக இருக்க மாட்டார்கள் என்று பட்டது.கொழும்பிற்கு வந்து விட்டேன்.அண்ணர் என்னை எடுக்க எடுத்த‌ முயற்சியும் வெற்றியாய் அமைந்து விட இங்கே நிற்கிறேன்.அது சரி நீ சொன்னது உண்மையில் தான் நடந்ததா, என்னால் இன்னமும் நம்ப முடியவில்லை?” என்று சந்தேகம் தீராமல் ரூபன் கேட்டான்.

“அண்மையில் கூட குருநகரில் அந்த ..நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினார்களே,அப்ப ,குமுதினிப் படகைப் போல இ ங்கும் இது வரையில் நீதி கிடைக்கவில்லையே என்று தானே பேசினார்கள்.நீதி விசாரணை நடைபெறாததைத் தான் அப்படி குறிப்பிட்டார்களா?” ரூபன் கேட்டான்.

பாபு “வணக்கம் தாய் நாடு”இணையத்தளத்தில் ஐ.பி.சி திரையில்,குநகர்ப்பகுதியைப் போய்ப் பார்.ஒரு பெரியவர் வெளிப்படையாய் இந்த விசயங்களை எல்லாம் பேசுவதைப் பார்ப்பாய்.பிறகு உன் பாடு. ஊடக வெளி அகலிக்கப்பட வேண்டும் என்பதை புரிந்து கொள்வாய்” என்றான்.

பாபு ‘எம் பிரச்சனையை இன்னொரு கோணத்திலும் பார்க்க வேண்டும் !’என்று சொல்கிறான்.ஒரே குழப்பமாக ரூபனுக்கு இருந்தது.

“மனிதர்கள் எவருமே குற்றவாளிகள் இல்லை,அந்தந்த கணங்களிற்கே அடிமையாகிச் சீரழிகிறவர்கள்” …என எல்லாம் லியோ டோல்ஸ்டோய் பலதை எழுதிய “புத்துயிர்ப்பு” நாவலை திரும்பவும் ஒருக்காய் எடுத்து கஸ்டப்பட்டாவது வாசிக்க தான் வேண்டும் என்று ரூபன் நினைத்துக் கொண்டான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *