‘யுவர் ஓனர்… ஒன் த மெட்டீடிரியல் டேட் எட் த டைம் ஒஃப் தி இன்ஸிடென்ட்… வட் ஹேட் ஹெப்பன்ட்… என ஆங்கிலத்தில் அரம்பித்த அத்தணை வாக்கியங்களினதும் தமிழாக்கத்தினை நோக்கின்
அது பின்வருமாறு அமைகின்றது சாதாரண மொழி பெயர்ப்பில்
‘சம்பவம் நடந்த காலப்பகுதியில் வழக்கில் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் பெண் பிள்ளையும் இதோ கூட்டிலே நிக்குற எனது கட்சிக்காரரான இந்த சந்தேக நபரும் கடந்த ரெண்டு வருஷமா மிகத்தீவிரமா காதலிச்சிருக்காங்க. இந்த காதல் விஷயம் ரெண்டு பேரோட பெற்றோருக்கும் தெரியும்… ரெண்டு பேரும் விரும்பித்தான் உடலியல் ரீதியாக தொடர்பு வெச்சிருக்காங்க… இப்ப என்னடான்னா ரெண்டு பேரோட குடும்பத்துக்குமிடையில பிரச்சினை வந்ததும் அந்தப் பெண் பிள்ளையோட பெற்றோர் பொலிஸூல இந்த சந்தேக நபருக்கெதிராக கம்ப்ளைன்ட் பண்ணி பினன்ர் பொலிஸூ இவரப் பிடிச்சி அடி அடின்னு அடிச்சு இப்ப சந்தேக நபரா கடந்த ஒரு மாத காலமாக விளக்க மறியல்ல இருக்கார்… இது பெரும் அநியாயம்….இது ரொம்பப் பெரிய அநியாயம் யுவர் ஒனர்….எனவே வழக்கின் சூழ்நிலைகளையும் சந்தேக நபரோட வயசு மற்றும் கல்வி நிலைமையக் கருத்திற் கொண்டு சந்தேக நபருக்கு மதிப்புக்குரிய மன்று பிணை வழங்குமாறு…மன்றாட்டமாகக் கேடடுடக் கொள்ளுகிறேன்….’ என அந்த கறுப்புக் கோர்ட் அணிந்த ஒரு இளம் சட்டத்தரணி தனது கட்சிக்காரருக்காக பிணை கோரி தனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் அழாக் குறையாக நீதவானை கெஞ்சிக்; கொண்டிருந்தார்.
பிரதான நிதவான் நீதிமன்றம் இப்படி திங்கள் தொடக்கம் வெள்ளி வரை மாலை மூன்று மணிவரை சட்டத்தரணிகளின் கெஞ்சல்களையும் மிரட்டல்களையும் கருணை விண்ணப்பங்களையும் காலா காலமாகக் கண்டு கண்டு களைப்படைந்து போயிருக்க அந்த மனு நீதிக் கட்டிடம் வெறித்துப் போயிருந்தது அல்லது அல்லது மரத்துப் போயிருந்தது. அப்படிப்பட்ட அந்த நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமையாதலால் சனத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. சனம் நிரம்பி வழிய அந்த நீதிமன்றக் கட்டடம் மனித வியர்வையால் ஏதோ ஓர் பெயர் சொல்ல முடியாத வாசத்தினை சதாவும் பிழிந்து கொண்டிருந்தது.
வழமையாக வியாழக்கிழமைகளில் பிரதான நீதவான் நீதிமன்றத்தில் கிண்ணியா பொலிஸ் நிலையத்தின் நியாயாதிக்கத்துக்குட்பட்ட அத்தனை வழக்குகளும் கூப்பிடப்படும். தவிரவும் வியாழக்கிழமைகளில் கிண்ணியா பொலிஸ் ஏராளமான புதுப்புது வழக்குகளை வேறு சகட்டு மேனிக்கு தாக்கல் செய்வார்கள்.
அதுதான் இன்று உடல் ஆவி இப்போதுதான் தயாரிக்கப்பட்ட ப்ரூ Nஃகாபி போல பறக்க அந்த திறந்த நீதிமன்றத்தில் இத்தனை சனக்கூட்டம். தவிரவும் அண்மைக்காலமாக அவுஸ்திரேலியா செல்லுகிறோம் என்று படகுகளில் சட்டமுரணாக செல்லவோரை தினம்தினம் பொலிஸார் நூற்றுக்கணக்கில் நீதிமன்றத்தக்கு கொண்டு வருகின்றாரகள்;. இன்றும் கொண்டு வந்திருந்தனர். அதுதான் நிற்கவே முடியாதளவு அத்தனை சனக்கூட்டம். ஓரிரண்டு மின் விசிறிகள் தவிர ஏனைய எல்லா மின் விசிறிகளும் செத்துப் போய்க்கிடந்தன. தேய்வாதீனமாக உயிர் பிழைத்து சுவாசித்துக் கொண்டிருந்த மின் விசிறிகளின் கீழ் கறுத்த கோர்ட்டுகளோடு தடிமனான புத்தகங்களை தம் முன்னால் வைத்த படி சதாவும் யோசித்த வண்ணம் சட்டத்தரணிகள்.
படுவேகத்தில் வழக்குகள் போய்க் கொண்டிருந்த அதே வேளை பகல் பன்னிரெண்டு முப்பது மணி போல கிண்ணியாப் பொலிஸாரினால் மொத்தமாக கொண்டு வரப்பட்ட ஆறு பேர்களில் ஒருவரான அனீபா முகத்தில் எந்த வித சந்தோஸத்துக்கான அறிகுறிகளுமின்றி அந்த நீதிமன்ற ஷெல்லுக்குள் பசி மயக்கத்தாலும் பயங்கரத் துயரத்தோடும் குந்திக் கொண்டிருந்தார்.
வயிற்றுப்பிழைப்புக்காகத் தெரிந்த ஒரே தொழிலான காட்டுக்குப் போய் காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டு வரும் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அரச காட்டுக்குள் அத்து மிறி நுழைந்து பச்சை மரங்களை வெட்டியதாகக் பொய்யாகவும் எதேச்சதிகாரமாகவும் குற்றம் சாட்டப்பட்டு இதோ இன்று இந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டிருக்கிறார் அந்த ஐம்பது வயது வாழ்வின் கொடூரங்களைச் சந்தித்து உடம்பு பூராவும் சூடு கண்ட அனீபா எனும் அப்பாவி.
அதே ஷெல்லில் அவரோடு சேர்த்து ரஷீது ஹாஜா.. என வேறிருவர் அதே குற்றத்துக்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மிரட்சியோடு கிடந்தார்கள். அந்த ஷெல் கூட ஏகப்பட்ட கைதிகளின் மொத்த எடையினையும் தாங்காது விழி பிதுங்கிக் கொண்டிருந்தது.
சுவாசத் திணறல் அதற்கு.
அந்தளவுக்கு கைதிகளால் நிரம்பி வழிந்து வழக்குகளில் வரம்பு மீறிக் கொண்டிருந்தது. மூன்று தசாப்த கால போரின் அதி சிறந்த உற்பத்திகளாய் இருந்த அப்பாவி மக்களின் இடப் பெயர்வில் அகதிகளாக தங்களையும் இணைத்துக் கொண்டு பூர்வீக மண்ணிலிருந்து கிண்ணியா பால்பண்ணை அரச கட்டிடத்தில் புகழிடம் தேடிய அனீபாவின் குடும்பம் யத்தம் முடிந்த கையோடு குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் கிண்ணியா பிரதேச செயலகத்தினால் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட பிறகு அன்றாடப் பிழைப்புக்காக காட்டுககுகச் சென்று விறகு வெட்டி அதனை விற்று வரும் சொறப காசில் தின்ற பாதி தின்னாத பாதியாய் வாழ்வின் பயங்கரமான பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்த காலப்பகுதியில்தான் காய்ந்த விறகுகளை வெட்டிக் கொண்டு முந்தா நாள் வருகையில்; பொலிஸாரால் பிடிக்கப்பட்டு இதோ இன்று இந்த நீதி மன்ற ஷெல்லுக்கள்…
நாட்டில் யுத்தம் நடந்து கொண்டிருந்த போது கூட அன்றாடப் பிழைப்புக்காக காட்டுத் தொழிலையும் விவசாயத்தையம் நம்பி காலா காலமாய் பிழைப்பு நடாத்தி வந்த அன்றாடக் காய்ச்சிகளுக்கு அவர்களது தொழிலைச் செய்வதற்கு தடைகள் ஏதும் பெரிதாய் இருந்ததில்லை. ஏதோ போரியல் பின்னனியிலும் வாழ்க்கை அமர்முடுகளிலாவது பாட்டுக்கு ஓடிக் கொண்டிருந்தது.
ஆனால் யுத்தம் முடிந்து நிரந்தர சமாதானம் மலர்ந்து விட்டது என சகட்டு மேனிககுப்; பிரகடனப்படுத்திய பிறகு முதல் அடி விழுந்தது அன்றாடம் தொழில் செய்பவர்களின் அடி வயிற்றில்தான். அவர்களது வயிற்றில் ஆசுவாசமாகக்; கை வைத்தது பொலிஸின் எகிறிப் போன கெடுபிடி. இப்பல்லாம் ஒரு தொழில் செய்ய முடியாது… ஒரு இடத்துக்குச் செல்ல முடியாது. அந்தளவுக்கு வீங்கி மிகப் பயங்கரமாகத் தோற்றமளிக்கும் பொலிஸின் கெடுபிடிக்குள் எத்தனை அனீபாக்கள்… எத்தனை ரஷீதுகள்… எத்தனை ஹாஜாக்கள்…
ஒன்று மட்டும் உண்மை… இப்போது நாட்டில் சர்வைவல் ஒஃபஃ த ஃபிட்டெஸ்ட் என்பார்களே… அதுதான் பலசாலி மட்டுமே வாழ்ந்து கொண்டிருக்கிறான் என்பது இப்போதெல்லாம் எத்தனை தூரம் நிதர்சனமாகி விட்டது…..நலிந்து போன பொருளாதாரத்தின் விற்பனை முகவர்களாக மாற்றப் பட்டுக் கொண்டிருக்கும் இந்த மாதிரி அப்பாவிகளை சூறையாடுவது ஒன்றும் பொலிஸாருக்கு எப்போதும் ஒரு சவாலானதொரு விஷயமாக இருந்ததில்லை என்பது இந்த நாட்டின் சரித்திரம்.
அனீபா விட்ட பெருமூச்சில் அனலிருந்தது… தனது கன்றிப் போன கன்னம் அவருக்கு இன்னும் ரொம்ப ரொம்ப வலித்தது. தொட்டுப் பார்த்துக் கொண்டார். முந்தா நாள் பொலிஸ் ஸ்டேஸனில் வைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி… அதுதான் என்னவோ சொல்லுவாங்களே… ஓ..ஐ..சீ.. மஹத்தயா என்று….. அந்த மஹத்தயா காரணமேயில்லாமல் அவர் கன்னத்தில் இரண்டு தடவை ஒட்டு மொத்தப் பலத்தினையும் வலது கையில் திரட்டிக் கொண்டு
பளார்…
இன்னமும் அவருக்கு வலித்துக் கொண்டே இருக்கிறது…கன்னத்து எலும்புகளினை மென் மேலும் இறுக்குகிறது…அவராவது பரவாயில்லை… அவரோடு பொலிஸ் ஸ்டேஷனில் ஷெல்லுக்குள் இருந்த களவுக் கேஸில் சந்தேக நபராக கைது செய்யப் பட்ட பெயர் தெரியாத ஒருத்தனுக்கு இரண்டு காக்கி யுனிபோம்கள் தமது சப்பாத்தக் கால்களாலும் கைகளாலும் அவனது உடம்பை மேய்ந்த மேய்ச்சல் இருக்கே….சொல்லுவார்களே தேர்ட் டிகிரி ட்ரீட்மெனென்று…..பிரித்து அவன் அழுது பார்த்து வி;ட்டார்கள்.
அனீபாவுக்கு வியர்த்தது.
அனீபாவுக்கு மட்டுமா… அந்த ஷெல்லில் இருந்த அத்தனை பேருக்கும் அதே உணர்வுதான். பலருக்கு சிறுநீராபிஷேகம். பெரும்பாலும் பொலிஸில் மாட்டுப் படுபவர்களது அனுபவம் பயங்கரமானதாகவும் பரிதாபகரமானதாவும் இருக்கும்…கஸ்டோடியல் டெத் என்பார்களே…கிட்டத்துல ரத்மலானையில சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவல்ல இருக்கும் போது அடிச்சே ஒருத்தனக் கொன்று பிறகு அந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் வேறு ரெண்டு கொன்ஸ்டபிள்களும் கைது செய்யப்பட்டு கொழும்பு மேல் நீதி மன்றம் அவங்கள கொலைக் குற்றத்துக்காக குற்றவாளிகளாகக் கண்டு மரண தண்டனை விதித்து…இப்ப அந்த வழக்ககுக் கூட கொழும்பு அப்பீல் கோர்ட்ல இருக்காப் போல…
அந்தளவுக்கு பொலிஸ் ஸ்டேஷன்ல நிறையக் கதைங்க வெளியே வெளிச்சத்துக்கு வந்தது கொஞ்சமுமா வெளியே தெரிய வராத வேர்கள் மாதிரி நிறையவுமா இன்னும் இருட்டிலேயே இருக்கு.
‘கவுத சப்த தாண்ட’ எனும் பிரிசன் கார்ட்டின் சப்தமும் ‘சப்த வெடி’ என சொல்லிச் சொல்லியே திறந்த நீதிமன்றத்தில் அடிக்கடி சப்தம் போட்டுக் கொண்டிருக்கும் நீதி மன்றப் பொலிஸின் கூக்குரலும் அவ்வப்போது காதுகளை அச்சப்படுத்திக் கொண்டேயிருந்தது.
ஷெல்லின் கம்பி வழியாக தனது பார்வைப் பிம்பங்களைப் பரவ விட்டுப் பார்த்த அனீபாவின் கண்களுக்குள் ஆயிரத்தெட்டுக் கவலைகளோடும் மனசு பூரா அழுத்தங்களோடும் நீதிமன்றத்தின் கொரிடோரில் நின்று கொண்டிருந்த கூட்டத்தினரிடையே இரத்தம் வற்றிய முகத்தோடும் இன்னும் அழும் தோற்றத்தோடும் அவரது மனைவி நின்று கொண்டிரந்தாள். அவள்தான் என்ன செய்வாள். கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டது போல எனும் மரபுத் தொடரின் கைப்பொருளாகிப் போன அவரது மனைவியைப் பார்க்கையில் இயலாமை மட்டுமே அவரிடம் இருப்பிடம் கோரியது.
இந்த கோர்ட் வழக்கு பொலிஸ் இந்த ஷெல் அத்தனையும் அவருக்கே புதுசாயிருக்கையில் அவரது மனைவி எம்மாத்திரம். பாமர மக்களின் கண்களுக்குள் பொலிஸ் கோர்ட் என்றால் பயங்கரம் தவிர வேறென்ன பதிவாகும். அன்றாட தினக் கூலிகளுக்குப் பொலிஸூம் நீதிமன்றமும் அச்சம் தருகின்ற கோரைப்பற்கள் காட்டி மிரட்டுகின்ற டிரகுலா அல்லது வெம்பயர் தவிர வேறெதுவாக இருக்க முடியும்.
அனீபாவின் மனைவி அவர் பொலிஸ் ஸ்டேஷனில் கைது செய்யப்பட்டு அடைக்கப்பட்ட பின் இன்று காலை வந்து பார்த்து அழுதது… இன்னும் அவருக்குள் அமிலத் தண்ணீரை இலவச விநியோகம் செய்து கொண்டிருந்தது. அதை விடக் கொடுமை… அவரிடம் அவரது வீட்டுக் காரி சொன்ன சேதி… அவர்களது இளைய மகள் ஸஹானா கொஞ்ச நாளாய் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு காய்ச்சல் விடுவதும் மீண்டும் வருவதுமாகப் படுக்கையில் தன் இருப்பினை பெரும் சிரமத்துக்கு மத்தியில் தக்க வைத்துக் கொண்டிருந்தாள். முந்தா நாள் அவர் காட்டுக்கு விறகு வெட்டச் செல்லும் போது கூட பிள்ளையை டவுனுக்கு கொண்டு போய் பெரிய டாக்குட்டரிம் காட்ட வேண்டுமென்றும் காய்ச்சல் ரொம்பவும் உரத்து விட்டதென்றும் கவலையோடு சொல்லித்தான் அனீபாவை விறகு வெட்ட அனுப்பியிருந்தாள்.
அவர் அன்றைய தினம் பொலிஸாரால் கைது செய்யப்பட சொல்லி வைத்த மாதிரி அவரது பிள்ளைக்கு காய்ச்சல் டிகிரியில் எகிற உடனடியாக கிண்ணியா தள வைத்திய சாலைக்குக் கொண்டு செல்ல நோயின் தீவிரம் காரணமாக உடனடியாக திருகோணமலை பொது வைத்திய சாலைக்கு மாற்றப் பட்டிருக்கிறாள்.
இப்போது பிள்ளை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில். எக்கியூட் நியூமோனியாவாம். இன்று காலை அவரது மனைவி அஸ்பத்திரியிலிருந்துதான் அவரைப் பார்க்கப் பொலிஸிலிருந்து வந்திருக்கிறாள். குழந்தை அனுமதிக்கப்பட்டிருக்கும் அந்த அதிதீவிர சகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த இன்னுமோர் குழந்தையின் தாயிடம் நிலைமையைச் சொல்லிஅ ந்த இரக்கமுள்ள பெண்மணி கொடுத்த நூறு ரூபாவில் பஸ் டிக்கெட்டெடுத்து மனசு நிறைய மலையளவு பாரத்தோடு பொலிஸ் ஸ்டேஷனில் அவருக்காக ஒரு பைத்தியக்காரி லெவலில் இன்று காலை வந்த இறங்கியிருந்தாள். இவை அணைத்தும் அவரது மனைவி உப்புக்கரிக்கும் கண்ணீரை உற்பத்தி செய்த வண்ணம் ஒப்புவித்த உண்மைக் கதைகள்.
இவருக்குள் இதனால் எத்தனை வதைகள்.
அர்த்தங்கள் சொல்லத் தெரியாத அவஸ்தைகள்.
இவை அனைத்தையும் தாண்டி நியூமோனியாவால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது பிள்ளையின் உயிரைக் காப்பாற்ற வெளிமருந்தகங்களில் சில மருந்துகளை உடனடியாக வாங்கித் தருமாரு டொக்டர் அவளிடம் சொன்னதை அவருக்கு அவரது மனைவி மீளுருவாக்கம் செய்த போது இந்த பூமியின் மீதான அவரது பிறப்பும் வாழ்க்கையும் இருப்பும் கருப்பாய்த் தெரிந்தன.
அஞ்சுக்கும் பத்துக்கும் என வயிறு நிரப்புவது மட்டுமே வாழ்க்கையாகி விட்ட அனீபா போன்ற அன்றாடக் காய்ச்சிகளுக்கு ஆயிரங்கள் உடனடியாகத் தேவை என்ற போது தீயிறங்கி அவரது ஆன்மாவைத்தின்றது.
‘ என்ட ரப்பே எனக்கு வழி காட்டு’
அஸ்பத்திரியில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் குழந்தையை விட்டு விட்டு இதோ என் இல்லத்தரசி நீதிமன்றத்தில் எனக்காக வாழ்வின் அத்தனை கதவுகளும் இறுக்கமாக மூடப்பட்ட நிலையில் உள்ளுக்குள் மாட்டிக் கொண்டு வெளியே வர வழியில்லாமல் வலியோடு நின்று கொண்டிரக்கிறாள்.
அவள்தான் என் செய்வாள்.
நான்தான் என் செய்வேன்
‘நின்னைச் சரணடைந்தேன் யா அல்லாஹ்… வழி காட்டு’ உள்ளுக்கள் நொறுங்கிய அனீபா சிதறிக் கொண்டிருந்தார்.
‘ உள்ளுக்க போ’
மேலதிக விசாரணை செய்ய வேண்டும் என பொலிஸார் செய்த விண்ணப்பத்தினை ஏற்று மேலும் பதினான்கு நான்கு நாட்கள் நீதவான் விளக்க மறியலில் வைத்த ஒரு கைதியை ஜெயில் காட் அனீபாவுக்குப் பக்கத்தில் தள்ளி அந்த ஷெல்லின் கதவுகளை கிறிச்சிட வைத்த கர்ண கொடூர சப்தத்தில் நினைவுகள் களைந்தார். உள்ளே வந்து நிலை தடுமாறி விழப்பார்த்த அந்தக் கைதி சப்தம் போட்ட ஜெயில் கார்ட்டை முறைத்த படி ஏதோ வாயில் முணுமுணுத்த படி அனீபாவுக்குப் பக்கத்தில் போய் நின்று கொண்டான். அவனுக்கு இந்த விளக்க மறியல் ஜெயில் கார்ட்ஸ் கை விலங்கு மேலும் பதினான்கு நாட்கள்..இத்யாதி இத்யாதி அணைத்தும் நன்றாகப் பழக்கப் பட்டிருக்க வேண்டும்.
தன்னைச் சுற்றி இத்தனை சம்பவங்கள் தற்போது சுடச் சுட நடந்து கொண்டிருந்த போதும் அனீபா தன்னைச் சுற்றி தனது சொந்த வாழ்க்கையைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் போராட்டங்களில் முழுமையாகத் தான் தோற்றுப் போய் திசை தெரியாமல் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருப்பதை யோசித்து யோசித்து கிட்டத்தட்ட பைத்தியம் பிடிக்கும் நிலையில் தனது இரண்டு கைகளாலும் தலையைப் பிடித்தவாறு அந்த ஷெல்லுக்குள் நின்று கொண்டிருந்தார்;.
ஒரு பக்கம் தான் வெட்டிய காய்ந்த விறகு. அந்த விறகுகளை ஏற்றிக் கொண்டு வந்த தனது ஒரே சொத்தான அந்தப் பழங்காலத்து லுமாலா பைசிக்களஇ பொலிஸ் ஸ்டேஷன் மூத்திர நாற்றமடிக்கும் பொலிஸ் ஸ்டேஷன் ஷெல் அங்கு பட்ட அடி பசி மயக்கம் கோர்ட் என பீதி கலந்த பிம்பங்கள் குழப்பமாய் மறு படி மறு படி விழ மறு பக்கம் உயிருக்காக வைத்திய சாலையில் போராடிக் கொண்டிருக்கும் தனது நியூமோனியாக் குழந்தை பிச்சைக் காரியின் வேஷத்தில் அழுது பிதற்றும் தன் வீட்டுக்காரி… என அவரது மூளையின் நியூரோன்களுக்குள் ஏகப்பட்ட உருவங்கள் நிழலாடிக் கொண்டிருந்தன. இதுதானென்று விபரிக்க முடியாத இரசாயன மாற்றங்கள் அவரது மூளையின் செரிபிரல்களுக்குள் இசைக் கச்சேரி செய்து கொண்டிருந்தன.
இன்று காலை கோர்ட்டுக்கு வரும் போது கோர்ட் சார்ஜன் சொன்னான்… ‘ கோர்ட்ல குற்றச்சாட்டுப் பத்திரிகை வாசித்துக் காட்டி நீங்க குத்தவாளியா சுத்தவாளியான்னு கேப்பாங்க… அதுக்கு நீங்க குத்தவாளின்னு சொல்லுங்க… சின்ன தண்டம்தான் அடிப்பாரு ஜட்ஜ் ஐயா. ஒடனே வழக்க முடிச்சிட்டு வந்துரலாம்…வக்கீல் யாரையும் புடிக்கத் தேவையில்ல. சின்ன வழக்குத்தானே…’
அவன் வழமையாக கோர்ட்டுக்கு கொண்டு வரும் அத்தணை சந்தேக நபர்களிடமும் ஓதும் பஞ்ச கச்;சத்தினை ஒப்புவித்திருந்தான்.
அனீபாவை கோர்ட்டுக்கு கொண்டு வந்த பிறகு அவரோ அல்லது அவருடைய மனைவியோ வக்கீல் யாரையும் அவரது வழக்கில் அவர் சார்பாக இதுவரை பிடிக்க வில்லை. இதற்கு பொலிஸ்காரன் மாத்திரம் காரணமில்லை… வக்கீல் வைத்துக் கொண்டால் ஆகக் குறைந்தது ஆயிரம் ரூபாயாவது பீஸ் கொடுக்க வேண்டும். கையில் ஒத்த ரூபாய் கூட இல்லாத இந்த நிலையில் எப்படி வக்கீல் பிடிப்பது… எப்படி வழக்கு பேசுவது.
விதிப்படி நடக்கட்டும்.
அல்லாஹ் விட்ட வழி.
எக்கச் சக்கமான குழப்பங்களோடு வெப்பம் நிரம்பிய தன் மூச்சுக் காற்றை வெளியிடுகின்ற கனத்தில்….பாரங்களால் நிரம்பிப் போன மனக் கனத்தில்..
‘ முஹம்மது மஸதான் அனீபா…’ என நீதிமன்றத்தில் காலை என்பது முப்பதிலிருந்து நின்று கொண்டு கால் கடுக்க கால்கள் வலிக்க அதெல்லாம் தாண்டி வாய் வலிக்க வழக்குகளைக் கூப்பிட்டுக் கொண்டும் தமிழில் சொல்லுவதை சிங்களத்திலும் சிங்களத்தில் சொல்லுவதை தமிழிலும் இயந்திரத்தனமாய் மொழி பெயர்த்து அவ்வப்போது உரை பெயர்த்துக் கொண்டிருக்கும் துலக் முதலியார் அனீபாவின் பெயரை அழைத்த போது அவரது குரலில் காலையில் தெரிந்த உற்சாகம் காணாமற் போயிருந்தது.
‘ ப்ரிஸன்… சுருக்கா கொணடுட வாங்க.’ என எரிச்சலோடு துலக் முதலியார் கத்த ஷெல்லுக்குள் அடைபட்டுக் கிடந்த அனீபாவை அந்த சிறைச்சாலை உத்தியோகத்தர் தள்ளாக் குறையாகக் கொண்டு வந்தான்.
‘என்ன பாத்திட்டு இருக்கீங்க… ம்… கூட்டுல ஏறுங்க’ என தயங்கி நின்ற அனீபாவை மூர்க்கத்தனமிகுந்த அந்தக் குரல் குற்றவாளிக் கூண்டுக்குள் தானாக ஏற வைத்தது.
‘ உங்களுக்கெதிராக ரெண்டு குற்றச்சாட்டுக்கள் இருக்கு.’ என ஆரம்பித்த முதலியார் சிங்களத்தில் சோதனா பத்திரம் எனத் தலைப்பிட்டு முழுமையாக சிங்கள மொழியிலிருந்த அந்த சிங்கள குற்றச் சாட்டுப் பத்திரத்தின் சாராம்சத்தினை தமிழில் முழுமையாக வாசித்தார்.
‘ முதலாம் குற்றச்சாட்டு அரச காட்டுக்குள் அனுமதியின்றி அத்து மீறி நுழைந்தது… இரண்டாவது குற்றச்சாட்டு அவ்வாறு அத்து மீறி நுழைந்து இருபதினாயிரம் பெறுமதியான பச்சை மரங்களை வெட்டி நட்டம் விளைவித்ததாக குற்றம் சாட்டப்படுகின்றீர்கள்…’ என வாசித்து முடித்த முதலியார்…
கூண்டில் நிராயுதபாணியாக வாழ்வின் அத்தனை நம்பிக்கையையும் தொலைத்த கணக்கில் தான் முழுசாக தொலைந்து நிலை குத்திய பார்வையோடு நின்று கொண்டிருந்த அனீபாவை நோக்கி
‘ சுத்தவாளியா குத்தவாளியா’
இபபடி எத்தனை பேரிடம் கேட்டுக் கேட்டு முதலியார் காதுகள் மூப்படைந்திருக்கும்…அவரது குரலில் சாதாரணம் மட்டுமே தெரிந்திருந்தது.
‘இருபதினாயிரம் பெறுமதியான மரங்களை வெட்டினேனா..? என்ட ரப்பே… நான் வெட்டி வந்த விறகுகளின் பெறுமதியே ஒரு அறுநூறு ரூபாதானே இருக்கம்….’
போதாததற்கு துலக் முதலியார் ஏதோ வாசித்துக் காட்டுகிறார்…அப்புறம் குத்தவாளியா சுத்தவாளியான்னு என்னைப் பார்த்துக் கேட்கிறார். என்ன செய்ய….இங்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது…என பாமரத்தனமும் அப்பாவித்தனமும் மிக்ஸாகி மலங்க மலங்க அனீபா விழிகளில் உறைந்து போயிருந்தார்.
‘ நான் தமிழ்லதான் கேட்டேன்… விளங்கலையா… அரச காட்டுக்கள்ளே பச்ச மரத்தத் தறிச்சீங்களா இல்லையா…’ குயிக்கா சொல்லுங்க… இன்னும் நிறைய வழக்கு இருக்கு. ஒங்கட வழக்க மட்டும் விசாரிக்க இல்ல இந்த கோர்ட்டு…..’ என துலக் முதலியார் அதட்ட ஓரளவு சுய நினைவுக்கு வந்த அனீபா தனக்கு முன்னால் ஏறிட்டார். அங்கு உட்கார்ந்து கொண்டிருந்த பெரும்பாலான கருப்பு கோர்ட் போட்ட சட்டத்தரணிகள் தன்னையே நோக்குவதாகவும் வழக்குகளுக்காக வந்து அங்கு போடப்பட்டுள்ள வாங்குகளில் வந்த உட்கார்ந்து கொண்டும் நின்று கொண்டுமிருந்தவர்கள் தன்னை இலக்காரமாகப்பார்ப்பதாகவும் அவருக்குப் பட்டது.
‘ச்சே விதிப்படி நடக்கட்டும்’ என நினைத்துக் கொண்டவர் ‘ குத்தவாளிங்க’ எனச் சொல்ல நீதவான் மளமளவென்று எதையோ எழுதி அதனை முதலியாரிடம் கொடுத்தார்.
முதலியார் நீதவான் எழுதியதை தற்போது வாச ஆரம்பித்தார்.
‘எதிராளிக்கு முதலாம் குற்றத்துக்காக ரூபா இரண்டாயிரமும் இரண்டாம் குற்றத்துக்காக ரூபா முப்பதினாயிரமும் தண்டப்பணமாக அறவிடுகிறேன். தண்டப்பணத்தினைக் கட்டத் தவறும் பட்சத்தில் எதிராளிக்கு ஆறுமாத கடூழிய சிறைத் தண்டணை விதிக்கிறேன்.’
– 2012-12-28