சங்கரப்பதி கோட்டை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 1, 2024
பார்வையிட்டோர்: 354 
 

(1950ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

பொழுது புலர்ந்தது! 

பொன்னழகி வருவாளோ? வருவாளோ? என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். பன்மையில் சொன்னதினால் மற்றொருவர் யார் என்பதையும் சொல்லிவிடவேண்டும். என்னுடன் சங்கரப்பதிக் கோட்டையில், தலைமறைவாக முனியய்யாவும் இருந்தான். 

நான்கு தினங்களாக நானும் அவனும் சங்கரப்பதிக் கோட்டையில், தலைமறைவாக இருந்து விட்டோம்; அன்று ஐந்தாவது தினம். 

பொன்னழகி வந்தால்தான் எங்களுக்குச் சாப்பாடு கிடைக்கும். அத்துடன் ஊர்சமாசாரங்களும் தெரியும். ஆகையினால் தினம் தினம் பொழுது புலர்ந்ததும், பொன்னழகியின் வருகையை எதிர்பார்ப்பதுதான் எனக்கும், முனியய்யாவுக்கும் முக்கிய ஜோலி. 

நான்கு தினங்களாகப் போலீஸாருக்குத் தெரியாமல், தலைமறைவாக இருந்தது எங்கள் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். இனிமேல் சங்கரப்பதிக் கோட்டையில் இருந்தால், நிச்சயம் போலீஸாரிடம் அகப்பட்டுக் கொள்வோம் என்பதில் சந்தேகமேயில்லை. 

ஆகையால் பொன்னழகி வந்தவுடன் சாப்பிட்டு விட்டு அன்றையத் தினமே சங்கரப்பதிக் கோட் டையைவிட்டு வெளியே கிளம்பிச்செல்வதென்று திட்டமிட்டிருந்தோம். எனவே சூரியன் உச்சிக்கு ஏற ஏற, பொன்னழகியின் வருகையை எதிர்பார்க்கும் ஆர்வமும் ஏறிக்கொண்டே போயிற்று. 

பத்துமணி ஆனவுடன் பரபரப்பு அதிகமாயிற்று. பசி வயிற்றைக் கிள்ளியது. பசியும், பயமும் சேர்ந்து ஒரேகலக்காகக் கலக்கியது. பதினோருமணியானதும், நாங்கள் துடி துடித்துப்போனோம். போலீஸாருக்குச் சந்தேகம் தோன்றக்கூடாது என்பதற்காக, ஒரு வேளை பொன்னழகி போகவேண்டாத மெல்லாம்போய், சுற்றவேண்டாத வீதியெல்லாம் சுற்றி, வருகிறாளோ! அப்படி வந்தாலும், பதினோருமணிக்குமேல் சுணங்க நியாயமில்லையே. ஆனால் அன்றுமணி பன்னிரெண்டாகியும் கூடப் பொன்னழகி வராமல் போகவே, எங்களுக்கு ஒரே திகிலாக இருந்தது. 

“சரி, ஏதோ பொன்னழகிக்கு ஆபத்துதான்; போலீஸார் கையில் அகப்பட்டால், அவளை என்ன பாடு படுத்துவார்களோ, சண்டாளப் பாவிகள்!’ என்று இருவரும் நிலைதடுமாறிப் போனோம். ஏனெனில் அதற்கு முன் தினம் பொன்னழகி சொன்ன பல சம்பவங்கள் எங்கள் ஞாபகத்திலேயே இருந்து கொண்டிருந்தன. 

“எங்களைப்போல் தலைமறைவாக இருந்துவந்த வேறொரு தேசபக்தர் வீட்டை போலீஸார் முற்றுகையிட்டார்களாம். வீட்டிலிருந்தவர்கள் தங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றுபதில் சொன்னார்களாம். உண்மையிலேயே அவர்களுக்கு ஒன்றும் தெரியாததனாலேயே அவ்வாறு பதில் கூறினார்கள். ஆனால் உண்மையைப் பற்றி போலீஸாருக்கு என்ன கவலை? 

ஆகையால் அங்கு வீட்டிலிருந்த முக்யஸ்தர் ஒரு வரைப் போலீஸ்ஸ்டேஷனுக்குக் கூட்டிப்போய், நிர்வாணமாக்கி, காலையும் கையையும் கட்டி, வெல்லக்கட்டியை மேலெல்லாம் தடவி, வெய்யிலில் போட்டுவிட்டார்களாம். அவரை ஈக்கள் மொய்த்தனவாம். எறும்புகள் கடித்தன; பூச்சிகள் பிடுங்கியதாம்; குருவிகள் கொத்தியதாம்; கண்களில் ரத்தம் கசிய, மேலெல்லாம் புண்ணாக, அவர் அனாதையாகக் கிடந்தாராம். போலீஸாரோ “உண்மையைச் சொல், உண்மையைச் சொல்” என்று துன்புறுத்திக் கொண்டேயிருந்தார்களாம். 

மற்றொரு தேசபக்தரைப்பிடித்துக் கணுவுக்குக் கணுவு அடித்தார்களாம். ஓங்கி கன்னத்தில் அறைந்ததில் அவருடை காது செவிடாகப் போய்விட்டதாம். மேலும் அவரை தலையைமொட்டையடித்தார்களாம். கரும்புள்ளி செம்புள்ளி குத்தினார்களாம். கழுதையின் மீது ஏற்றிவைத்து ஊர்வலம் விட்டார்களாம்.! 

வீதியில் ஊர்வலம் போகும்போது போலீஸார் சாணத்தைக் கரைத்து மேற்படி தேசபக்தர் தலையில் ஊற்றி துடைப்பத்தினால் ‘காங்கிரஸில் சேராதே சேராதே’ என்று சொல்லி அடித்தார்களாம். 

வீட்டுக்கு வீடு கொண்டுபோய் கழுதையின் மீது இருக்கும் தேசபக்தரை நிறுத்தி வீட்டிலுள்ள பெண்களை வெளியில் கூப்பிட்டு சாணத்தைக் கறைத்து தேசபக்தர் தலையில்ஊற்றி துடைப்பத்தால் அடிக்கும்படிச் சொன்னார்களாம். மாட்டேன் என்று சொன்னமாதர்கள் வீட்டின் கூரையில் ஏறி போலீஸார் தீயை வைத்துவிட்டார்களாம். அதனால் பல பெண்கள் பயந்து, நடுங்கி, தேசபக்தர் தலையில் சாணத்தைக் கரைத்து ஊற்றி துடைப்பத்தினாலும் அடித்தார்களாம். 

போலீஸார் மேலும் பல வீடுகளுக்குச்சென்று பெண்களை யெல்லாம் நிர்வாணமாக்கிச் சித்திரவதை செய்து கற்பழித்தார்களாம்.” 

இந்தக் கதையெல்லாம் பொன்னழகி சொல்லிய பொழுது எங்கள் கண்களில் நீர் ஆறாகப் பெருகியது. பொன்னழகிக்கும் மேற்படி கதி ஏற்பட் டால் ‘ஐயோ அவள் எப்படித் துடிப்பாளோ’ என்று நினைத்தபொழுது பகீர் என்றது. 

“பாவம்! என்னால் தானே அவளுக்கு இவ்வளவு துன்பம். என்னுடைய தங்கையாகப் பிறந்ததற்கு இந்தச் சுகத்தைத்தான நான் அவளுக்குக் கொடுக்கவேண்டும்” என்று முனியய்யா மாலை மாலையாகக் கண்ணீர் விட்டான். என்னுடைய உள்ளமும் கலங்கியிருந்தது. 

“முனியய்யா! உன்னால்தான் உன் தங்கைக்கும் மற்றவர்களுக்கும் துன்பமேற்பட்டதா? அதற்கு நானல்லவா காரணம். நான் இந்த ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபடவில்லை யென்றால் இவ்வளவு தொல்லைகள் ஏன் ஏற்படப்போகின்றன? ஆயினும் நாம் கலங்கலாமா? நமது ராஷ்டிரபதி மெளலானா ஆஸாத் ஒரு சமயம் சொன்னது உனக்குஞாபகமில்லையா? சொல்லுகிறேன் கேள். 

அவரைக் கோர்ட்டில் கொண்டுபோய் நிறுத்தினார்கள். தண்டனை கூறவேண்டிய நீதிபதி அவரை ‘ஸ்டேட்மெண்ட்’ கொடுக்கும்படிச் சொன்னார். அதற்கு மௌலானா ஆஸாத் என்ன சொன்னார் தெரியுமா? ஒரு காலத்தில் ஒரு கொடுங்கோலன் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருந்தான். அந்தக் கொடுங்கோலனை எதிர்த்து ஒரு புரட்சி வீரன் தோன்றினான். அவன் ஊர் ஊராகச் சென்று கொடுங்கோலனுடைய கொடுமையை விஸ்தரித்துக் கூறினான். உடனே அந்தக் கொடுங்கோலன் மகாகோபமடைந்து, அந்தப் புரட்சி வீரனைப் பிடித்துக் கொண்டு வரச்செய்தான். அவ்வீரனை ஒரு முச்சந்தியில் கட்டி அவனுடைய அங்கங்களை வெட்டும்படிச் சொன்னான். ஆனால் அந்தப் புரட்சி வீரனோ தன்னுடைய நாக்கு அறுபடும் வரையில் அக்கொடுங்கோலனுடைய கொடுமையைப் பற்றிச் சொல்லிக் கொண்டேயிருந்தான். அவனுடைய நாக்கு அறுபட்ட பிறகுதான் அவன் ஓய்ந்தான். அப்பேர்ப்பட்ட வீரச்சந்ததியில் வந்தவன் நான். இந்த பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தின் நூற்றி இருபத்தாறாவது ஸெக்ஷனுக்குப் பயப்படவா போகிறேன்?” என்று வீராவேசம் பேசினாரே ஆஸாத், அதை ஞாபகத்தில் வைத்துக்கொள். இந்தத் துன்பமல்ல; இதைவிட எத்தனை கோடி துன்பம் வந்தாலும் இந்த நாட்டின் சுதந்திரத்திற்காகத் தாங்கிக் கொள்ள மகாத்மாஜி நமக்குச் சக்தியைத் தரவில்லையா?” என்று முனியய்யாவுக்குத் தைரியம் கூறினேன். 

அவனுக்குத் தைரியம் கூறினேனே ஒழிய, என்னுடைய மனதில் பெரும் போராட்டம் நடந்து கொண்டுதானிருந்தது. கடிகாரத்தின் நிமிஷ முள் ஏற ஏற, எங்கள் உள்ளத்தில் பயமும், திகிலும் ஏறிக்கொண்டே போயிற்று. பசி மயக்கம் தலையைக் கீழே சாய்த்தது. 

முனியய்யாவுக்கு, நான் பசியுடன் இருப்பதைக் கண்டு என்மீது பச்சாதாபம் உண்டாயிற்று. பஞ்சணையில் படுத்திருக்க வேண்டியவன் பாறையில் படுத்திருக்கிறேனே என்று பரிதாபப் பட்டான். 

அறுசுவை உண்டியுடன் ஆள், பேர் சூழ உபசாரத்துடன் சாப்பிட வேண்டியவன் ‘பசி பசி’ என்று துடிப்பதைக்கண்டு அவன்மனம் வெடித்துப்போயிற்று. எனக்கு பசி அதிகமாக இருந்ததால் ஒருவித மயக்கம் உண்டாயிற்று. 

அதனால் கண்களை மூடிக்கொண்டேன். நான்கு நாட்களுக்குமுன் நடைபெற்ற மாபெரும் புரட்சி ஞாபகத்திற்கு வந்து, கொஞ்சம் பசியைமறக்கும் படிச் செய்தது. 


1942 ஆகஸ்டில் மகாத்மாவைக் கைது செய்தவுடன் எங்களூரில் பொதுஜனங்களிடையே பெரும் கிளர்ச்சி ஏற்பட்டது. வியாபாரிகளெல்லாம் கடையடைப்புச் செய்து தங்களுடைய எதிர்ப்பைப் பிரிட்டிஷ் அரசாங்கத்திற்குக்காண்பித்தார்கள். சுயநல நோக்கங்கொண்ட சில முதலாளிகள் கடையைச் சாத்தாமலும் இருந்தார்கள். அவர்களில் பலரை தேசபக்தர்கள் அணுகி ஹர்த்தால்செய்யும்படிச் சொன்னார்கள், ஆனால் பிடிவாதமாக கடையை மூட மறுத்தவர் களில் ஹனுமான் ஹோட்டல் ஆத்மனாதய்யரும் ராயல் ஹோட்டல் இஸ்மத்பாக்ஷாவுமாகும். 

தேசபக்தர்கள் எவ்வளவோ சொல்லிப்பார்த் தார்கள். ஆனால் அவர்கள் காதில் ஒன்றும் ஏற வில்லை. கடைசியாக தேசபக்தர்கள் ஒரு யுக்தி செய்தார்கள். 

அதன்படி ஒருவர் தலைமையின் கீழ் ஐம்பதுபேர் ஹனுமான் ஹோட்டலுக்குச் சென்றார்கள். “பாதம் ஹல்வா கொண்டா, தோசை கொண்டா, வடை கொண்டா, லட்டு கொண்டா இன்னும் சூடாஎன்னென்ன இருக்கோ அதையெல்லாம் கொண்டு வரும்படிக் ” கேட்டார்கள். 

ஹோட்டல் காரர்கள் எல்லாவற்றையும் ஸப்ளை செய்தார்கள். தேசபக்தர்களெல்லோரும் சந்தோஷமாகச் சாப்பிட்டார்கள். கடைசியாக எல்லோரும் ஒன்றாக எழுந்து கையைக் கழுவி விட்டு “மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கோஷமிட்டார்கள். உடனே அடுத்தபடியாக “ஹோட்டல் மானேஜருக்கு ஜே!” என்று பெரும் கோஷம் போட்டார்கள். 

ஹோட்டல் சொந்தக்காரர் ஆத்மநாதய்யருக்கு ஒன்றும் புரியவில்லை. பேந்தப் பேந்த விழித்தார். தேசபக்தர்கள் ஹோட்டலை விட்டு வெளியே நடக்க ஆரம்பித்தார்கள். ஆத்மநாதய்யர் “பில்லுக்குப் பணம்” என்று கேட்டார். 

தேசபக்தர்களில் கவிதாரசனையுள்ள ஒருவர் பாட்டிலே பதில் சொன்னார், 

“எத்தில்லாது என்போல 
ஏழை மக்கட்கா யுழைக்கும் 
காந்திமகான் கணக்கில் 
பற்றெழுதிக் கொள்” 

என்று பாடிவிட்டு வேகமாக நடந்துவிட்டார். பார்த்தார் ஆத்மநாதய்யர்! சரி, இனி ஹோட்டலைத் திறந்து வைத்திருந்தால் நம்பாடு ஆபத்துதான் என்று எண்ணி ஹோட்டலை மூடிவிட்டார். 

இந்த விஷயத்தை அறிந்த ராயல் ஹோட்டல் காரர் அவசர அவசரமாகக் கடையை அடைத்து ஒரு பெரும் கரும் பலகையில், 

‘இந்த ஹோட்டல் மகாத்மா காந்தி விடுதலையடையும்வரை திறக்கப்படமாட்டவே மாட்டாது!’ என்று எழுதி மாட்டிவிட்டார். 

மேற்படி சம்பவத்தை நினைத்த பொழுது பசி மயக்கத்தில் படுத்திருந்த எனக்குக்கூட, மற்ற எல்லாத் துக்கத்தையும் மறந்து சிரிப்புவந்தது, என் சிரிப்பைப் பார்த்துவிட்டு முனிய்யா ‘என்ன சிரிக்கிறாய்’, என்று கேட்டான். 

ஒன்றுமில்லை, இடுக்கண் வருங்கால் நகுக என்று திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். அதனால் சிரித்துப் பழகுகிறேன் என்று சொன்னேன். 

அவன் அதைக் கவனிக்காமல் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தான். 

எங்களூர் புரட்சி வீரர்கள் ஆகஸ்ட் புரட்சியில் முதல் பலி என்னையே கொடுப்பதென்று நிச்சயித்தார்கள். நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டேன். ஏழெட்டு நாள் வரையில் போலீஸார் என்னைக் கைது செய்வதற்கு எவ்வளவோ முயற்சி செய்தும் முடியாமல் போய் விட்டது. கடைசியில் நான் 144-வது சட்டத்தை மீறிவிட்டேன் என்பதற்காக போலீஸார் என்னை 1942 ஆகஸ்ட் மாதம் 16 -ம்தேதி, மகா தேவ தேசாய் இறந்த தினத்தில் கைது செய் தார்கள். முதலில் கைதியாகும் பாக்யம் எனக்குக் கிடைத்தது. என்னை நேராகத் திருவாடானை ஸப்ஜெயிலில் கொண்டுபோய் அடைத்தார்கள். 

“எந்த தேசபக்தரைப் போலீஸார் கைது செய்த போதிலும், உடனே கைதியாகாத இதர தேச பக்தர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பொது ஜனங்களின் உணர்ச்சியைத் தூண்டி, ஜனங்களைத் திரட்டிக் கொண்டுவந்து கைதியான தேசபக்தரை சிறையிலிருந்து விடுதலை செய்து விடவேண்டும்” என்பது எங்களுடைய ரகசியத் திட்டங்களில் மிகவும் முக்கியமான திட்டமாகும். 

எங்கள் ரகசியத் திட்டத்தின்படி என்னை விடுதலை செய்வதற்காக முன்வந்தவன் தான் முனியய்யா. அவனுடைய முழுப்பெயர் முனியாண்டித் தேவன். முனியய்யா என்பது அவனுக்குச் செல்லப் பெயராகும். ஆள் வாட்ட சாட்டமாக இருப்பான். நல்ல உயரமான வாலிபன். சலியாத உழைப்பாளி. மாசுமருவற்ற தேசபக்தன். இனிய சுபாவமுடையவன். உணர்ச்சி ததும்ப ஆவேசமாகப் பிரசங்கம் செய்யக்கூடிய வல்லமை வாய்ந்தவன். பேச்சு வன்மையினால் பொது ஜனங்களைத் திரட்டுவதில் சூராதி சூரன். இயக்கம் நடத்துவதற்கு இன்றியமையாதவன். அவனுடைய தலைமையில் பொதுஜனசக்தி திரண்டெழுந்ததில் ஆச்சர்யமில்லை. 

“முனியய்யா பெரும் ஜனக்கூட்டத்துடன் ஊருக்கு வெளியேயுள்ள ஊருணிக் கரையில் வந்து தங்கியிருக்கிறான். பகல் பன்னிரெண்டு மணிக்கு என்னை விடுதலை செய்யப் போகிறான் என்ற அதிசயச் செய்தி காட்டுத்தீபோல் ஊரெல்லாம் பரவியது. எனக்கும் எட்டியது. சிறையிலிருந்த எனக்கே மேற்படி விஷயம் தெரிந்தபொழுது, திருவாடானை ஸப் இன்ஸ்பெக்டருக்குத்தானா தெரியாமலிருக்கும்? எனவே அவர் ஒரேயடியாகத் துள்ளிக் குதித்து, கர்ஜனை புரிந்தார். எதிரில் நின்றுகொண்டிருந்த கான்ஸ்டேபிள்களை வெடவெடக்க ஆட்டி வைத்தார். அவர் தன்னுடைய ரிவால்வரைப் பார்த்த பார்வையிலிருந்து, ஸப் இன்ஸ்பெக்டர் தங்களையே சுட்டுவிடுவாரோ என்றுகூட கான்ஸ்டேபிள்கள் அஞ்சினார்கள். 

“வரட்டும் அந்தப் பயல்கள், தொலைத்துவிடுகிறேன்” என்று உறுமினார் ஸப் இன்ஸ்பெக்டர். அங்கு அழகாக அடுக்கி வைத்திருந்த ஆறு துப்பாக்கிகளையும் ஒருதடவை பார்த்துக் கொண்டார். அவைகளில் மூன்று ஓட்டை என்பதும், மேலும் இரண்டில் குண்டுபோட இயலவில்லை என்பதும், பாக்கி இருக்கும் ஒழுங்கான துப்பாக்கியை உபயோகிக்கத் தெரிந்த கான்ஸ்டேபிள் அங்கு ஒருவரும் இல்லை என்பதும் அவர் அறியாத விஷயமல்ல. ஆயினும் அவர் அதுவரை செய்துவந்த ஆர்ப்பாட்டத்திற்கும், அதிகாரத்திற்கும் பக்கபலமாக இருந்தது அந்த மேன்மைதங்கிய ஆறு துப்பாக்கிகள் தானே! 

வதந்திகள் பலவாறாக வந்து கொண்டிருந்தன. பக்கத்துநகரத்தில் ஒரு ஸர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஜனங்களால் அடித்துக் கொல்லப்பட்டார் என்றும், ஜில்லா சூப்பரிண்டெண்டண்ட் துரை மண்டை உடைந்துவிட்டதென்றும், மாஜிஸ்டிரேட் போன இடம் தெரியவில்லையென்றும், இவ்வாறு வதந்திகளுக்குக் கால் கை முளைத்து, தாராளமாக நடமாட ஆரம்பித்தன. ஸப் இன்ஸ்பெக்டர் சூரப்புலி சொக்கலிங்கம் பிள்ளை அவைகளைக் கேட்டுக் கொஞ்சங் கொஞ்சமாகக் கலங்க ஆரம்பித்தார். பரபரப்படைந்தார். தன்னுடைய பாதுகாப்புக்காக, மலபார் ரிஸர்வ் போலீஸாரை அனுப்பும்படி தலைமை அதிகாரிக்குத் தந்தி கொடுக்க, தபாலாபீஸுக்குக் கான்ஸ்டேபிளை அனுப்பி ர் போனவன் உடனே திரும்பிவந்து, “எஜமான் வழியெல்லாம் தந்திக் கம்பி அறுந்து கிடக்கிறதாம். ஆகையால் தந்தி போக்கு வரத்து தடைப்பட்டிருக்கிறது” என்று சொன்னான். 

இதைக்கேட்ட ஸப் இன்ஸ்பெக்டர் அசந்து போனார். அவ்வூரில் டெலிபோனும் இல்லை. பஸ்ஸில் யாரையாவது அனுப்பலாம் என்றாலோ, பஸ் போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. 

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தைப் பாதுகாக்கும் பெரும்பொறுப்பு இப்படித்தன்னுடைய தலையில் விழுமென்று அவர் கனவிலும் கருதவில்லை. அவ்வளவு பெரிய பாரம் தன் தலைமீது விழுந்தால், “தன்னுடைய சரிகைத் தலைப்பாகையின் கதி என்ன ஆவது?” என்பதைப்பற்றி நினைத்த போது அவருடைய தலை கிர்ரென்று சுற்ற ஆரம்பித்தது. கை பதட்டத்துடன் தலையிலிருந்த சரிகைத் தலைப்பாகையைத் தடவிக்கொடுத்தது! திருவாடானையில் போலீஸ் ஸ்டேஷன், மாஜிஸ்டிரேட் கோர்ட், சர்க்கார் கஜானா, ஸப்ஜெயில் எல்லாம் ஒரே காம்பவுண்டுக்குள் சேர்த்துக் கட்டப்பட்டிருந்தது. மேற்படி போலீஸ் ஸ்டேஷன் வராந்தாவில், ஸப் இன்ஸ்பெக்டர் சூரப்புலி சொக்கலிங்கம் பிள்ளை சாதாரண நாட்களில் சரிகைக் குல்லாவோடு ‘ஜம்’ என்று கையில் ஒரு அழகிய தடியைச் சுழற்றிய வண்ணம், ‘ராஜபார்ட்’ நடை நடப்பது வழக்கம். அப்பொழுது அவரைப் பார்த்தால், ஏதோ ராஜகுமாரியைத் தேடிப்போகும் ராஜாவைப் போல காட்சியளிப்பார். ஆனால் அவரு டைய அதிர்ஷ்டம் அதுவரை அவர் எந்த ராஜ குமாரியையும் சந்தித்தது கிடையாது. அதற்குப் பதில் கைதிகளின் முகத்தையேதான் கண்டிருக்கிறார். ஆகையால் அவருக்குக் கைதிகளைக் கண்டால் எரிச்சல் வருவது இயற்கைதானே ! 

அதனால் அவர் கைதிகளைப் பார்த்தவுடன் ஒரு ஏளனப் புன் சிரிப்பு சிரித்து, “என்னடா திருடினாய்? என்று அதிகாரத் தோரணையில் ‘டா’ போட்டுப் பேசும்பொழுது, இந்த ஈரேழு பதினாலு லோகத்திற்கும், அவர்தான் சக்ரவர்த்தியோ! என்று நினைக்கும்படி இருக்கும். யாராயிருந்தாலும், கைதியாக வந்துவிட்டால் அவருக்கு ‘டா’ போட்டுத்தான் பேசவரும். அப்படி அவருடைய நாக்கு அதிகாரத்தில் ஊறியிருந்தது. 

ஆனால் அன்றையதினம் அவர் அடக்கமாக அங்குமிங்கும் அலைந்து திரிந்ததையும், விறைப்பு மிகுந்த அவருடையநாக்கு, சொரத்துக் குறைந் திருந்ததையும் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. ‘டா’ விலே வாழ்ந்தவர், அடாடா படாதபாடு பட்டார்! நான் இருந்த ‘லாக்கப் அறைக்கு எதிரில் அவர் பேந்தப் பேந்த விழித்துக்கொண்டு உலாவினார். அவருடைய கையில் ‘ரிவால்வர்’ இருந்தது. உடனடியாக என்ன செய்வது என்று அவருக்கு யோசனை எட்டவில்லை. 

அவர் அகத்தில் ஓடிய சஞ்சலம் முகத்திலே பிரதிபலித்தது. “உள்ளத்திலே பயத்தின் ஒளி உண்டாயின், வாக்கினிலே பேச்சின் தொனி உண்டாகாது” என்ற உண்மை அவரைப்பார்த்த போது தெரிந்தது. அந்தச் சமயத்தில் அவரைக் காப்பாற்ற அங்கு ஒரு கான்ஸ்டேபிள் கூட இல்லை. எல்லோரும் தலை தப்பினால் போதும் என்று சர்க்கார்தந்த தங்கள் தலைப்பாகையை எறிந்துவிட்டு எட்டுத்திக்கும் பதினாறு கோணமு மாகப் பிரிந்து போய்விட்டார்கள். 

மாஜிஸ்டிரேட் அடுத்த ஊர் கலகத்தை அடக்கப் போனவர், கலகத்தை அடக்கினாரா, அல்லது அவர் அங்கேயே அடக்கமாகிவிட்டாரா, பிழைத் திருக்கிறாரா என்பதும் தெரியவில்லை. 

சப் இன்ஸ்பெக்டர் இரண்டு மூன்று முறை என்முகத்தைப் பரிதாபமாகப் பார்த்தார். ஒரு கைதியுடன் அவராக வலுவில்வந்து பேசுவது அதிகாரத்தில் ஊறிய அவருக்கு சட் டென்று முடியாத காரியமாக இருந்தது போலும். ஆகையால் பேச்சை நானே ஆரம் பித்தேன். “ஸார்! உங்களால் இந்த இடத்தைக் காப்பாற்ற இயலாது. முயற்சித்தால் உங்கள் உயிருக்குத்தான் ஆபத்துண்டாகும்” என்று நான் சொல்லியவுடன் அவர் முகம் சட்டென்று கடூரமாகியது. 

சூரப்புலி என்மீது பாய்ந்துவிடுமோ என்று நான் கிலேசப்படும்படிக்கூட இருந்தது. அவரோ “ரிவால்வர் இருக்கும்வரை ஒரு கை பார்த்து விடுகிறேன்” என்று மீண்டும் ஜம்பம் பேச ஆரம்பித்தார். உடனே நான் “உங்கள் கையிலிருக்கும் ரிவால்வரால், கூட்டத்தில் ஒருவரைச் சுட்டு வீழ்த்தினால், உடனே மற்றவர்கள் நாற்புறமும் உங்களைச் சூழ்ந்து அமுக்கி நிச்சயம் கண்டதுண்டமாக்கி விடுவார்கள். ஆகையால், நீங்கள் பேசாமல் இந்த இடத்தைவிட்டுப் போய்விடுவதுதான் நல்லது” என்று யோசனை கூறினேன். இந்தச் சமயத்தில் போலீஸ் லயனிலிருந்து பெண்பிள்ளைகள், குழந்தை குஞ்சுகள், எல்லோரும் நான் இருந்த லாக் – அப்பிற்கு முன்வந்து குய்யோ முறையோ என்று சப்தமிட்டார்கள். 

“ஐயா! சாமி! கலகக்காரர்கள் வருகிறார்களாமே. வந்தால் போலீஸ்காரர்களையும் கொன்று அவர்களுடைய பெண்சாதி, பிள்ளைகள், குழந்தை, குட்டிகள், எல்லோரையும் நெருப்பில் போட்டுப் பொசுக்கி விடுவார்களாமே! நீங்க தான் காப்பாத்த வேணும் ஐயா ! என்று கூக்குரல் போட்டார்கள். 

உடனே என் மனம் துடித்தது. மகாத்மாவின் பெயரைச் சொல்லி நடைபெறும் இயக்கத்தில் யாரும் தன்னுயிர் மகாத்மாவின் தொண்டர் களால் போக்கப்படும் என்று கருதுவதற்கே இடமிருக்கக் கூடாதே! ஆனால் துரதிர்ஷ்ட வசமாக இப்படி நேர்ந்திருக்கிறதே! முரட்டுத் தனமாக இந்த இயக்கத்தை ஆரம்பித்திருக் கிறோமே! என்று அறிவு சொல்லிற்று. ஆனால் மறுநிமிஷத்தில் உணர்ச்சிக்கு அடிமையாகிப் போனேன். அறிவு யோசனை செய்யும்; உணர்ச்சி யோசனை செய்யாது. 

அறிவு யோக்கியதையை விரும்பும்: உணர்ச்சி போக்கிரியாகவும் தோன்றப் பயப்படாது. அந்தக் குழந்தைகளையும் பெண்களையும் பார்த்த பொழுது ரொம்பவும் பச்சாதாபம் உண்டா யிற்று. “அம்மா கவலைப்படாதீர்கள்; நான் உங்கள் எல்லோரையும் காப்பாற்றுகிறேன்” என்று அவர்களுக்கு “அபயப் பிரதானம்” கொடுத்து வீடுகளுக்குப் போகும்படி சொன்னேன். உடனே ஸப் இன்ஸ்பெக்டரும் தன் போலீஸ் உடைகளைக் களைந்துவிட்டு, சாதாரண உடையுடன் கிளம்பிப்போனார்! 

ஸப் இன்ஸ்பெக்டர் தன்னுடைய பதவியைத் துறந்து சென்றபோது, அங்குள்ள துப்பாக்கிகள் ஆறும், ஒன்று ஒன்று கூடி ஒப்பாரி வைத்தன! 

அவர் போன கொஞ்ச நேரத்தில் “திமு திமு” வென்று ஆவேசத்துடன் ஓடிவந்தது ஜனக் கூட்டம். எதிர்ப்பை நினைத்துக்கொண்டு ஆவேசமாக ஓடி வந்த ஜனங்களுக்கு ஒருவித திர்ப்பும் இல்லாமல் போகவே அவர்களுடைய ஆனந்தம் கரைபுரண்டோடியது. அந்தக் கூட்டத்திற்கு முனியய்யா தலைமைவகித்து வந்த போது ஒரு பெரிய யுத்த தளபதி போல் காட்சியளித்தான். அவன் தோளில் சாத்தி யிருந்தது ஓட்டைத் துப்பாக்கியாக இருந்த போதிலும் அவன் அதை வைத்திருந்த கம்பீ ரத்தைப் பார்த்த போது அச்சப்படாமல் இருக்க முடியாது. 

ஜனக்கூட்டத்தில் அரிவாளைப் பலர் ஏந்திக் கொண்டிருந்தனர். சிலர் ஈட்டி வைத்திருந் தார்கள். இன்னும் சிலர் மண்வெட்டி கடப் பாரை முதலிய விவசாய உபகரணங் களையே கொண்டுவந்துவிட்டார்கள். ஒரு சிலர் தாம்புக் கயிறு கொண்டுவந்திருந்தார்கள். (போலீஸாரைப் பிடித்துக் கட்டுவதற்காக இருக்கலாம் ) இன்னும் சிலர் கம்பு கோடாரி, இப்படிக் கைக்கு அகப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு வந்திருந்தார்கள். எல்லோரும் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களைத் தூக்கிப்பிடித்து “மகாத்மா காந்திக்கு ஜே!” என்று கோஷ மிட்டபோது ஊரே அதிர்ந்தது. அதைப் பார்த்ததும் எனக்குச் சிரிப்பு சிரிப் பாய் வந்தது. ஆயுத பலத்தை நம்பாத மகாத் மாவின் பெயரால், அத்தனைவித ஆயுதங்கள் கொண்டுவந்திருந்தது வேடிக்கைதானே? அதற்கு ‘ஜே!’ வேறு போட்டார்கள். 

ஓடிவந்த ஜனங்கள் நான் இருந்த “லாக் – அப்” அறைக்கு முன்வந்து நின்றார்கள். முனியய்யா கம்பீரமாக எனக்கு வணக்கம் செய்தான். நானும் பதிலுக்கு வணங்கினேன். அந்த வெற்றி வீரனைக்கண்டதும் என்னுள்ளத்தில் உணர்ச்சிப்புயல் வீச ஆரம்பித்தது. முனியய்யா தன் கையாலேயே ‘லாக்-அப்’ பூட்டை உடைத்து என்னை விடுதலை செய்தான்.

என்னைத் தோளில் தூக்கி வைத்துக்கொண்டு “விடுதலை ! விடுதலை!!” என்று வெற்றிச்சங்கம் முழக்கினான். அங்கு கூடியிருந்த பல்லாயிரக் கணக்கான மக்களின் இதயம் பூரிப்படைந்தது. ஜே கோஷம் வானைப்பிளந்தது. ஒவ்வொருவரும் தங்களை மறந்து ஆவேசத்துடன் ஆடினார்கள். 

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தில் அதுவரை நடைபெறாத ஒரு மகத்தான அதிசயச் சம்பவத்தை டத்தியிருக்கிறார்கள் அல்லவா ? பட்டப்பகல் பன்னிரெண்டுமணி சமயத்தில் சட்டங்களைத் தகர்த்து பிரிட்டிஷ் ராஜ்யத்தின் கைதி ஒருவனை விடுதலை செய்த பெருமை அவர்களுக்கே உரித் தான தல்லவா? ஒரு மனிதருக்கும் தொந்திர வின்றி, ஒரு உயிருக்கும் ஆபத்தின்றி விடுதலைப் புரட்சியை நடத்திய வீர மக்களல்லவா அவர்கள்! 

இந்தப் புரட்சிக்கு அடியேன் ஒரு முக்யஸ்தன் என்பதால் என்னுடைய தோள்களும் பூரித்தன. 

முனியய்யாவின் கொண்டாட்டத்தைப் பற்றிச் சொல்லவா வேண்டும் ? ஒரே கோலாகலத் துடன் ஸப் ஜெயிலை விட்டு கூட்டமாகக் கிளம்பினோம். சுமார் மூன்று மைல் தூரம் நடந் திருப்போம். ஜனங்களோ சந்தோஷ ஆரவாரம் செய்துகொண்டு, கலகலவென்று பேசிக் கொண்டு வந்தார்கள். 

ஒருவன் சொன்னான் “ஜவஹர்லால் நேருவை ராஜாவாக்க வேண்டும்” என். று. அதற்கு மற் றொருவன் “போடா போ! ஜவஹர்லால் நேருவைவிட சுபாஷ் சந்திரபோஸ்தான் ரொம்பப் படித்தவர், அவர்தாண்டா ஆள வேண்டும்” என்று சொன்னான். 

“ராஜ்யம் ஆள்வதிலே ராஜகோபாலாச்சாரி யாருக்கு நிகர் யாருமில்லையடா” என்று வேறொருவன் சொன்னான். 

இப்படிப் பேசிக்கொண்டு வரும் போது ஒருவன் நான்கைந்து துப்பாக்கிகளையும், துப்பாக்கி ரவைகளையும் அள்ளிக்கொண்டு வந்தான். அங்கு போலீஸ் ஸ்டேஷனில் இவைகள் கிடந்த தாகவும், எடுத்துக் கொண்டு வந்ததாகவும் சொன்னான். 

உடனே அங்கிருந்த ஒருவன் “தனக்குத் துப் பாக்கி சுடத்தெரியுமென்றும், தான் ஒரு மகாராஜாவுடன் வேட்டைக்குப் போய் சுட்டுப் பழகியிருப்பதாகவும் அதனால் தானே துப் பாக்கிகளை வைத்துக் கொள்ள வேண்டும். என்றும் சொன்னான். 

உடனே மற்றவர்களும், சுடத்தெரிந்தவனே துப்பாக்கியை வைத்துக்கொள்ளட்டும் என்று சொல்லி, அவனிடம் துப்பாக்கிகளைக் கொடுத் தார்கள். ரவைகளையெல்லாம் வேறொருவன் மடியில்கட்டிக்கொண்டான். இப்படியாக நாங்கள் நடந்து கொண்டிருக்கும்போது வெகு தூரத்தில் ரிஸர்வ் போலீஸ் லாரி வேகமாக வருவது தெரிந்தது. 

ரிஸர்வ் போலீஸ் லாரியைக்கண்டதும் நானும் முனியய்யாவும் ஜனங்களைக் கலைந்து போகும்படி வேண்டிக் கொண்டோம். ஆனால் பலர் கலைந்து போக மறுத்தனர். ரிஸர்வ் போலீஸாரை வளைத்துப் பிடித்துவிட வேண்டுமென்று ஆளுக்கு ஒரு பக்கம் ‘கூ கூ வென்று கூச்சல் போட்டு ஆவேசமாகக் குதித்தார்கள். துப் பாக்கி வைத்திருந்தவன் தான் ஒருவனே எல்லோரையும் சுட்டுப் பொசுக்கி விடுவதாக மார் தட்டினான். ஆவேசம் கொண்ட ஜனங்களிடம் நாம் இப்பொழுது எது சொன்னாலும் ஏறாது எனத்தெரிந்து, மெதுவாகப் பக்கத்தி லுள்ள புதர் ஒன்றில் நானும் முனியய்யாவும் மறைந்து கொண்டோம். ஜனங்கள் இரண்டாகப் பிரிந்து ரோட்டின் இரண்டு பக்கங்களிலும் நின்று கொண்டு ரிஸர்வ் போலீஸ் லாரியை வளைத்துப் பிடிப்பதற்குத் தயாராயிருந்தார்கள். 

போலீஸ்லாரி கிட்டவந்துவிட்டது. ஆள் அரவம் கேட்டுப் போலீஸார் சுட ஆரம்பித்தனர். நம்முடைய துப்பாக்கிவீரனும் சுடுவதற்காகத் துப்பாக்கியை எடுத்தான். ஆனால் துரதிர்ஷ்ட வசமாகத் துப்பாக்கி வைத்திருந்தவன் சாலையின் இந்தப்பக்கத்திலும், ரவை வைத்திருந்தவன் அந்தப்பக்கத்திலும் பிரிந்து விட்டார்கள்! ஆகை யால் மேற்படி துப்பாக்கிவீரன் ரவையில்லாமல் தவித்து, ரவை வைத்திருந்தவனை வாயில் வந்தபடி திட்ட ஆரம்பித்தான். தோட்டா வைத்திருந்தவனோ பெரிய மோட்டா பேர்வழி. அவன் கையிலிருந்த தோட்டாக்களை எடுத்து லாரிமீது லாரி மீது வீச ஆரம்பித்தான். பாவம் அவன் நினைத்தமாதிரி அந்தக் குண்டுகள் வெடிக்கவில்லை. அதற்குள் போலீஸார் சுழல் துப்பாக்கி களைக் கொண்டு, சுட்டுப் பொசுக்கிவிட்டார்கள். சுமார் அறுபத்தைந்து பேர் இறந்துவிட்டார்கள். லாரி மீது ஜனங்கள் கல்மாரி பொழிய ஆரம் பித்தார்கள். பதிலுக்கு போலீஸார் குண்டு மாரி பொழிந்தார்கள். 

ஜனங்கள் உயிருக்குப்பயப்படாமல் முன்னுக்கு வந்துகொண்டே யிருந்தார்கள். கல் வீச்சு அதிகமாகவே போலீஸார் லாரியை வேகமாக விட்டுக்கொண்டு ஓடிவிட்டார்கள். 

போலீஸார் போன சிறிது நேரத்திற்குப்பிறகு ஜனங்களுடைய உள்ளத்தில் பீதி உண்டாகி விட்டது. பிணங்களைப் பார்த்தவுடன் ஜனங்க ளுடைய மனம் மருண்டுபோய்விட்டது. வீர கர்ஜனை புரிந்தவர்கள் கோழையைப்போல் ஓட ஆரம்பித்தார்கள். தங்களுக்கும் இயக்கத் துக்கும் சம்பந்தமில்லாதவர்களைப் போல் நடந்துகொண்டார்கள். நானும் முனியய்யாவும் வெகுநேரம் யோசனை செய்தோம். நாங்கள் நினைத்ததுபோல, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் செத்துவிடவில்லை என்பதற்குப் போலீஸார் ஜனங்களைச் சுட்டு வீழ்த்திவிட்டுப் போனதே சாட்சியாகும். 

ஆகையால் எங்கள் இருவருக்கும் ஏகாதிபத்ய அரசாங்கம் என்ன தண்டனை கொடுப்பார்கள் என்பதை நாங்கள் இருவரும் அறிவோம். அகப் பட்டால் எங்களிருவரையும் போலீஸார் சட்னி யாக்கிவிடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. நிச்சயம் தூக்குத் தண்டனை தான். எனவே போலீஸாரிடம் அகப்படாமல் தலை மறை வாகவே இருப்பதுதான் சிறந்த வழியெனத் தீர்மானித்தோம். அங்குநின்றால் இனிமேல் ஆபத்தென்று, உடனே பக்கத்து கிராமத்தி லிருக்கும் முனியய்யாவின் வீட்டிற்கு வேகமாகச் சென்றோம். 

அங்கு கவலைதோய்ந்த முகத்தோடு, வாசற்படியில் ஒரு இள நங்கை நின்று கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அவள் முனியய்யாவின் தங்கைதான் என்பதைத் தெரிந்துகொண்டேன். முனியய்யா தன் தங்கையிடம் அவசரம் அவசரமாக நடைபெற்ற முழு விவரத்தையும் கூறினான். அவளும் அவன் சொன்னவற்றை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள். இத்தனை அமர்க்களத்தின் மத்தியில் என்னுடை வாலிப முறுக்கு பொன்னழகியை அவள்தான் முனியய்யாவின் தங்கையை – பார்த்துக்கொண்டே யிருக்கச் செய்தது. அவளை நான் ‘குர்’ என்று பார்ப்பதை அவள் கவனித்து விட்டு தலைமறைவாக எங்கேயிருப்பதாக உத்தேசம்?” என்று என்னைக் கேட்டாள். 

திடீரென்று முன்பின் பழக்கமில்லாத ஒரு வாலிபப் பெண், ஒரு கேள்வியை நாம் எதிர் பாராத விதமாகக் கேட்டுவிட்டால் எப்பேர்ப் பட்ட சூரனும், கொஞ்சம் திகைத்துவிடுவான் என்பதில் சந்தேகமில்லை. எனக்கு முதலில் அந்தத் திகைப்பு இருந்தது. ஆயினும் சமாளித் துக்கொண்டு ஏ ற்கனவே நானும் முனியய்யாவும் முடிவுகட்டியிருந்தபடி “தற்சமயம் நான்கைந்து நாட்களுக்கு சங்கரப்பதிக் கோட்டைக்குள் தலை மறைவாக இருப்பதாக உத்தேசம்” என்று கூறினேன். என்னுடைய யோசனையை அவள் ஆமோதித்தாள். 

பொன்னழகி கறுப்பு நிறந்தான். ஆனால் அந்த கறுப்புக்குத்தான் என்ன மினு மினுப்பு! கறுப்பு நிறத்தோடு முக வசீகரமுள்ளவர்கள், உடல் வசீகரமுள்ளவர்கள் முன்னிலையில் எந்த சிகப்பு, வெள்ளை, மஞ்சள், மாநிற அழகிகளைக் கொண்டுவந்து நிறுத்தினாலும் ஈடாகாது என்பதில் ஐயமில்லை. அதிலும் கறுப்பு நிறத் தவள் கிராமத்துப் பெண்ணாக: யிருந்துவிட் டாலோ இயற்கை யழகுடன் எந்தப் பட்டணத்து அழகிகளும் போட்டி போட முடியாது. 

பொன்னழகியின் முகம் தேஜஸ் பொருந்திய தாக இருந்தது: கிராமத்து எழில் அதில் குடி கொண்டிருந்தது; உழைப்பின் உறுதி அவள் உடலில் அமைந்திருந்தது ; களங்க மற்ற உள்ளம் அவள் கண்ணில் தெரிந்தது; பழையது சாப்பிட்டுச் சாப்பிட்டு அதனால் வெண்மை ஏறிய பற்கள் பள்பள வென்றிருந்தன. மொத்தத்தில் சொன்னால் அவளை ஒரு மயக்கும் உருவமென்று சொல்லலாம். மோகினிதான்! ஆனால் இப்போது இந்தத் தலைபோகிற சந்தர்ப் பத்தில் காதலாவது கத்திரிக்காயாவது’! காடோ, மேடோ சுற்ற வேண்டியவன், கான்ஸ்டேபிள் கண்ணில் அகப்படாமல் தப்ப வேண்டியவன், காதலைப்பற்றிச் சிந்திக்க நேர மெங்கே? 

ஆகவே சங்கரப்பதிக் கோட்டைக்குச் சோறு கொண்டுவரும்படி, சொல்லிவிட்டு நானும் முனியய்யாவும் வேண்டிய சாமான் சிலவற்றை எடுத்துக்கொண்டு புறப்பட்டுச் சென்றோம். 


சங்கரப்பதிக் கோட்டை என்பது காரைக்குடிக்கும், தேவ கோட்டைக்கும் இடையே செல்லும் சாலையில் தேவகோட்டையை அடுத் திருக்கிறது. சங்கரப்பதிக் கோட்டையைச் சுற்றி ஐம்பது மைல்களுக்குள் அநேகம் கோட் டைகள் இருக்கின் றன . புதுக்கோட்டையி லிருந்தே இம்மாதிரிக் கோட்டைகள் ஏராளமாக இருக்கின்றன. இவைகள் மருத பாண்டியன் காலத்தில் உண்டாகியிருக்கலாம் என்று பலர் ஊகிக்கிறார்கள். இப்பொழுது சங்கரப்பதிக் கோட்டை நாதியற்றுக் கிடக்கிறது. 

சாலையிலிருந்து நூறுஅடி உள்ளே சென்றால், கோட்டையின் வாசலை அடையலாம். பிரமாண்டமான ஆலமரங்கள் கோட்டையைச் சுற்றி வளைத்துக் கொண்டிருந்தன. ஆலத்தின் விழுதுகள் கோட்டைச் சுவர்களை வளைத்து, அதிகாரம் செய்து கொண்டிருந்தன. பாழடைந்தும், பயங்கரமாகவும், நெருங்கிப் பார்ப்பதற்கு அச்சப்படும்படியாகவும், இராக் காலத்தில் திருடர்கள் மறைந்திருந்து போவோர் வருவோரை கொள்ளையடிப்பதற்கும் வசதியான ட மாயிருப்பதால் ஜனங்கள் யாரும் அந்தப் பக்கம் தன்னந் தனியாகச்செல்லுவதற்கு அஞ்சு வார்கள். 

நானும் முனியய்யாவும் அந்தப் பாழடைந்த கோட்டைவாசலை அடைந்தோம். வாசல்சுவர் உடைந்து அலங்கோலமாகக் கிடந்தது. சுவர்கள் இதோ விழப்போகிறேன் அதோ விழப்போகிறேன் என்று சொல்வதுபோல ஆடிக்கொண்டிருந்தன. “யாராவது தலை யெழுத்துச் சரியில்லாதவன் அந்தப்பக்கம் வரு வானா என்று கவனித்துக் கொண்டிருந்தது போல, நிலைக்கதவு பெயர்ந்திருந்தது. ஆலம் விழுதுகள் சிறைக்கம்பிபோல வாசலுக்குள் நுழைய முடியாமல் பின்னிக்கிடந்தன. கையில் வைத்திருந்த அரிவாளினால் விழுதுகளை வெட்டிக் கொண்டு முனியய்யா உள்ளே பிரவேசித்தான். உடனே தங்கள் குடியைக்கெடுக்க யாரோ வந்துவிட்டார்கள் என்று அபாயச் சங்கு ஊது வதுபோல அங்கு ஏகபோகமாகக் குடியிருந்து வந்த பட்சிஜாலங்கள் ‘கிரீச்…முரீச்…ஆ… கூ…’ என்று அதன தன் பாஷையில் திட்டிக்கொண்டு ஓடியதுபோல் தெரிந்தது. சிறு சிறு மிருகங்கள் ‘கர்புர்’ என்று சப்தமிட்டு ஒரு பார்வை பார்த்து உருமி ‘ஏண்டா எங்களுக்குத் தொல்லை கொடுக் கிறீர்கள்? காட்டிலும் வந்து எங்கள் அமை தியைக் கெடுக்கிறீர்களே!’ என்று சொல்வது போல கண்ணை விழித்துப் பார்த்துவிட்டு அங்கு மிங்கும் ஓடின. 

எல்லாம் ஏககாலத்தில் ஒன்று சேர்ந்து போட்ட அலறல் எங்களைத் தூக்கி வாரிப்போட்டது. பின்னர் அடர்ந்த புதர்களுக்கிடையே புகுந்து தட்டுத் தடுமாறி நாங்கள் அங்கிருந்த ஒரு விசாலமான மண்டபத்திற்கு வந்து சேர்வதற் குள் ‘ஆண்டாண்டு தோறும் அழுது புரண் டாலும் மீண்டும் வராத இடத்திற்கு போய் விடுவோமோ என்றநிலை ஏற்பட்டது. வெகு தூரம் நடந்த களைப்பும், புரட்சிச் சம்பவத்தின் எதிரொலியும் சேர்ந்து மனதில் எனக்கு ஒரே களைப்பாக இருந்தது. உடலில் வலுவுமில்லை; பசி பிடுங்கித்தின்றது. கையில் வைத்திருந்த பாட்டரி விளக்கின் உதவியைக்கொண்டும், அரிவாளை உபயோகித்தும் நாங்கள் இருவரும் அங்கு படுப்பதற்கு, வசதியாக ஒரு பாறையை முனியய்யா ஒழுங்கு செய்தான். இருவரும் புரண்டு புரண்டு படுத்துத் தூங்கிவிட்டோம். உலகத்தில் மனிதனுக்கு ஆண்டவன் அளித்த வரங்களில் தூக்கத்தைப் போல் சிறந்த வரம் கிடையாது. தூங்கிவிட்டால் அதைப்போல் நிம்மதி வேறொன்றும் இல்லை. 

நாங்கள் முதல் நாள் சொல்லிவிட்டு வந்தபடி பொன்னழகி சாப்பாடுடன் மறுநாள் காலையில் வந்துவிட்டாள். அவள் கொண்டுவந்த உணவை வெகு ஆர்வத்துடன் புசித்தோம். நல்ல பசியாக இருந்ததால் மூக்குப்பிடிக்க இழுத் தோம். பின்னர் ஊர் சமாசாரங்களைப்பற்றி அவளிடம் வி சாரித்தோம். பொன்னழகி சொன்ன சம்பவங்கள் எங்கள் இருவரையும் திடுக்கிடச் செய்தன. ஊருக்குள்ளே போலீஸார் நடத்தும் அட்டூழியங்களைப்பற்றி பொன்னழகி சொல்லிக்கொண்டு வந்தபோது மயிர்கூச் செரிந்தது. நானும் முனியய்யாவும், சொல்ல முடியாத வேதனையடைந்தோம். துக்கம் எங்கள் நெஞ்சை அடைத்துக் கொண்டது. 

பொன்னழகி மறுபடியும் பேச ஆரம்பித்தாள். அவளுடைய பால் வடியும் முகத்தில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது. 

“அண்ணா நீங்கள் இருவரும் போலீஸாரிடம் அகப்பட்டுக்கொண்டால், உங்களை முச்சந்தியில் கட்டி வைத்துச் சுட்டு விடுவார்களாம்” என்று சொல்லும்போதே பொன்ன ழ கி தேம்பித் தேம்பி அழுதாள், ‘உன் கண்ணில் நீர் வழிந் தால், என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி என்ற கவிதையை மெய்ப்பிப்பது போல பொன் னழகியின் கண்களில் நீர்வடியும்போது, முனி யய்யாவின் நெஞ்சில் இரத்தம் கொட்டுவது போல் எனக்குத் தோன்றியது. 

“எனக்குத் தாயும் தகப்பனும் நீதானே அண்ணா! உன்னையும் சுட்டுவிட்டார்களென்றால் அப்புறம் நான் என்ன கதியாவது?” என்று கதறினாள். 

நான் அவளைச் சமாதானம் செய்ய முன்வந்தேன். அவள் அருகில் சென்று என்னுடைய மேல் துண்டினாடினால் அவள் கண்ணைத் துடைத்துவிட்டு “பொன்னழகி நீ ஒன்றுக்கும் பயப்படாதே! நாங்கள் இருவரும் இன்னும் இரண்டொரு நாட்களில் வடஇந்தியா போகலா மென்றிருக்கிறோம். அங்கு போய்விட்டால் நம் ஊர் போலீஸ்காரர்கள் என்ன ஜகஜால வித்தை செய்தாலும், தலைகீழே நின்றாலும் எங்களைக் கண்டுபிடிக்க முடியாது. இன்னும் இரண்டு மாதத்தில் நிச்சயம் சுயராஜ்யம் கிடைத்து விடும். ஆகையால் இரண்டு மாதம்வரை தலை மறைவாக இருந்துவிட்டு, சுதந்திர இந்தியாவில் நாங்கள் தமிழ் நாட்டுக்குத் திரும்பி வரும் போது, இப்பொழுது நமக்கு யமனாக இருக்கும் இந்தப் போலீஸ்காரர்களே ஏவல் செய் வோராக மாறி, எங்களை எதிர்கொண்டு வர வேற்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. எந்தக் கையினால் குண்டாந் தடியைக் கொண்டடித்து, தேசபக்தர்களின் மண்டையை உடைத்து, சாக் கடையில் போட்டு இழுத்தார்களோ, அதே கையினால் இந்த தேசத்தின் சுதந்திரக் கொடிக்கும், தேசபக்தர்களுக்கும் ‘நமஸ்காரம் செய்யும் காலம், வெகு விரைவில் வர இருக்கிறது பொன்னழகி;” ஆகையால் இப்பொழுது நீ பயப் படாமல் இருக்கவேண்டும்” என்று அவளுக்குத் தைரியம் கூறினேன். 

“நிஜமாகவா?” என்று கேட்டாள் பொன்னழகி. 

“ஆமாம்! நிஜமாகத்தான்!” என்று மறுபடியும் உறுதி கூறினேன். 

“அப்படியானால், உங்களைப் பிரிந்து தனியாக நான் இருந்தால், எமனைப் பலகாரம் செய்து இந்திரனைச் சட்னி வைக்கும் இந்தப் போலீஸ் காரர்கள் என்னை இலேசில் சும்மா விடுவார் களா என்று பரிதாபமாகக் கேட்டாள். 

நானும், முனியய்யாவும் ஏக காலத்தில் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டோம். 

“ஆமாம் பொன்னழகியைத் தனியே விட்டுச் சென்றால் போலீஸ்காரர்கள் சும்மா விடமாட் டார்கள். ஏதாவது தொந்திரவு செய்து கொண்டே இருப்பார்கள். சிறுபெண், அழகி, ஆகையால் நிச்சயம் சும்மா விடமாட்டார்கள். துன்பத்தை அவள் தாங்கமாட்டாளே” என்று முனியய்யா துக்கம் கலந்த துக்கம் கலந்த தொனியில் சொன்னான். 

“அதைப்பற்றியும் இரண்டொரு நாட்களில் யோசிப்போம்” என்று நான் சமாதானம் சொன்னேன். 

அதுவரையில் அவள் தலைமறைவாக இருக்கும், எங்களுக்குச் சாப்பாடு கொண்டுவரும்போதும் போகும்போதும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விவரமாகச் சொல்லிக் கொடுத்தேன். அவளும் அதை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டாள். 

அன்று மாலை 5-மணிக்கு அவள் சங்கரப்பதிக் கோட்டையை விட்டுக் கிளம்பினாள். முனி யய்யா கோட்டைக்குள் இரவு படுப்பதற்கு வேண்டிய வசதி செய்து கொண்டிருந்தான். நான் பொன்னழகியுடன் கூடவே கோட்டை வாசல் வரை கொண்டுபோய் விட் டேன். கோட்டை வாசலுக்கு வந்தவுடன் ‘நான் போய் வரட்டுமா’ என்றாள். “சரி, போய்விட்டு ஜாக்ரதையாக நாளை வந்துசேர் என்று சொல்லி இலேசாக அவள் கன்னத்தில் ஒரு தட்டு தட்டினேன். குறும்பாக என்னை ஒரு பார்வை, பார்த்தாள். குறுகுறுத்த அவள் விழியின் கூர்அரிவாள் வீச்சினால் என் மனம் அப்பொழுதே அறுபட்டுத் துடித்து விட்டது! 

அவள் மறையும்வரை பார்த்துக்கொண்டே நின்றுவிட்டு, கோட்டைக்குள் திரும்பிச் சென்றேன். 

இப்படியே மூன்று தினங்கள் இனிமேல் நடை பெற வேண்டியவைகளுக்குத் திட்டம் போடு வதிலும், யோசனை செய்வதிலும் கழிந்தது. 

நான்காவது தினம் பொன்னழகி ஒரு பயங்கர மான சேதி கொண்டுவந்தாள். இனி வீட்டுக்குப் போனால் போலீஸார் தன்னை நிச்சயம் பிடித்துக் கொள்வார்களென்றும், ஆகையால் திரும்பிப் போகமாட்டேனென்றும் சொல்லிவிட்டாள். போலீஸார் பெண்களை மானபங்கப் படுத்துவ தாகவும் தகவல் கூறினாள். 

‘சரி இனி இங்கு தங்கவும் கூடாது; பொன் னழகியையும் தனியாக விட்டுச்செல்லவும் கூடாது. அவளையும் நம்முடன் கூட்டிக் கொண்டு நாளை இந்த இடத்தைவிட்டுப் புறப் படவேண்டியதுதான்’ என்று முடிவு கட்டினோம். 

யோசனை செய்திருந்தபடி திருச்சியில் ஒரு நண்பர் வீட்டில் பொன்னழகியை விட்டுவிட்டு நாங்கள் வடக்கே செல்வதென்று தீர்மானித் தோம். இதற்கெல்லாம் முக்கியமாகப் பணம் வேண்டுமல்லவா? அதற்குத்தானே முதலில் ஏற்பாடு செய்யவேண்டும். ஆகையால் பொன் னழகியிடம் எல்லா விஷயங்களையும் எடுத்துச் சொல்லி, எனது நெருங்கிய நண்பர் ஒருவருக்கு பணங்கொடுத்தனுப்பும்படி ஒரு கடிதம் எழுதிக் கொடுத்தேன். நண்பர் வீட்டையும், அடை யாளம் சொல்லி அனுப்பினேன். 


மேலே சொன்ன நான்கு நாளைய நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாகப் பசியுடன் படுத்திருந்த என்னுள்ளத்தில் வேகமாக ஓடி மறைந்தன. சோம்பல் முறித்துக்கொண்டும், கொட்டாவி விட்டுக்கொண்டும் புரண்டு படுத்தேன். 

முனியய்யா என் பசியைப் பார்த்துச் சகிக்க முடியாமல் எழுந்து நடந்தான். எங்கே போகிறாய் முனியய்யா’ என்று ஈன ஸ்வரத்தில் கேட்டேன். 

எங்கும் போகவில்லை; அதோ தெரியும் மா மரத்தில் மாங்காய் கிடைக்கும் போலிருக்கிறது; போய் பார்த்து வருகிறேன்” என்று சொல்லி விட்டு தன்னுடைய வேல் கம்புடன் புறப்பட்டுச் சென்றான். 

“சரி, ஜாக்ரதையாகப் போய்வா’ என்று சொன்னேன். 

அரைமணி நேரமாகியும், போன முனியய்யா திரும்பிவரக் காணோம். என்னால் எழுந்து நடக்கவும் சக்தியில்லை. தனியாகக் கிடந்து தவித்துக் கொண்டிருந்தேன். பொன்னழகியும் வருகிற வழியாகக் காணோம். மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியது. எமதூதர்கள் என்னைச்சுற்றி நிற்பதுபோல் ஒரு பிரமை உண்டாயிற்று. ஆலம்விழுது காற்றில் அசைந்த போது, பாசக்கயிறு தொங்குவதுபோல் உள்ளம் நிலை தடுமாறியது. சிறிது நேரத்திற் கெல்லாம் ஆள் அரவம் கேட்டது. 

சரி முனியய்யாதான் வந்து விட்டானென்று தலையைத் தூக்கிப் பார்த்தேன். பொன்னழகி பரபரப்புடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள். கலவரப்பட்டவளாகக் காணப்பட்டாள். கையும், காலும் வெட வெட வென்று ஆடிக் கொண்டிருந்தது. நான் எழுந்து உட்கார்ந்தேன். “என்ன சேதி பொன்னழகி…என்ன? என்ன?” என்று பரபரப்புடன் கேட்டேன். 

“அண்ணா எங்கே?” என்றாள். நான் விஷயத்தைச் சொன்னேன். 

“அய்யய்யோ இந்தப் பக்கத்துக்குப் போலீஸ் லாரி வரப்போவதாகவும், பொழுது சாய் வதற்குள் உங்கள் இருவரையும் தேடிப் பிடித்துவிடப் போவதாகவும் சொல்லிக் கொள் கிறார்கள். ஆகையால் இப்பொழுதே நாம் ஓடி விடவேண்டும். இல்லையென்றால் ஆபத்துதான் என்று சொல்லித் துடித்தாள். 

நானும் உடனே ‘சரி வா, வெளியில் போய் முனியய்யாவைக் கூட்டிக் கொண்டு நாம் கிளம்பலாம்” என்று அவளையும் அழைத்துக் கொண்டு புறப்பட்டேன். கோட்டை வாசலுக்கு வந்தவுடன் திடுக்கிட்டு நின்றோம். 

பல ரிஸர்வ் போலீஸ்காரர்கள் கூப்பிடு தூரத் தில் வந்துகொண்டிருந்தார்கள். தலை கிறுகிறு வென்று சுற்ற ஆரம்பித்தது. உள்ளம் அதல, தல, சுதல. பாதள, தராதலத்திற்குப் போய் விட்டுத் திரும்பியது. 

அபிமன்யு சக்ரவியூ கத்தில் அகப்பட்டுக்கொண்டு உயிர் துறந்த கதை, பளீர் என்று ஞாபகத்துக்கு வந்தது. “இனி ஆபத்துதான்; சரியானபடி அகப்பட்டுக் கொண்டோம்;” என்று நினைத்தேன். 

சட்டென்று எனக்கொரு யோசனை தோன்றி யது. இந்த அலங்கோல ஆபத்தான நிலைமை யில் அந்த யோசனை தோன்றியதே அது தான் ஈசன் ரகசியம் என்பதுவோ என்னவோ! பொன்னழகியின் கையைப்பிடித்து பரபர வென்று இழுத்துக்கொண்டு மறுபடியும் கோட்டைக்குள் திரும்பி ஓடினேன். 

நானும் முனியய்யாவும் ஒளிந்துகொள்வதற் காகத் தயார் செய்துவைத்திருந்த பாறையிடம் ஓடிவந்தோம். அந்தப் பாறையைப் புரட்டி னேன். அங்கு தென்பட்ட குகைபோன்ற இருட்டறைக்குள் பதுங்கி மறுபடியும் குகை வாசலைக் கல்லைக்கொண்டு அடைத்துவிட்டோம். இப்பொழுது எங்கள் இருப்பிடத்தை முனி யய்யாவையும், கடவுளையும் தவிர வேறு யாரா லும் கண்டுபிடிக்க முடியாது என்று எண்ணிக் கொண்டோம். 

சலக் சலக் சலக் என்ற சப்தம் மெதுவாகக் கேட்டது. சப்தம் சமீபத்தில் வரவர, எங்கள் இதயம் படக், படக், படக் என்று அடித்துக் கொண்டது. போலீஸார் எங்களைத் தேடு கிறார்கள் என்பதை அறிந்துகொண்டோம். அவர்களுடைய பேச்சுக்கள் ஒன்றிரண்டு இலேசாக எனது காதில் விழுந்தது. மூச்சு விடும் சப்தம் கேட்டாலும் தொலைய வேண்டியதுதான். உடம்பு வியர்த்துக் கொட்டிக் கொண்டே யிருந்தது. கால்கள் மரமரத்துப் போய்விட்டன. நாக்கு வறண்டு விட்டது. நெஞ்சு உறைந்துபோய்விட்டது. 

நாங்கள் பதுங்கியிருந்த பாறைக்கே ஆட்கள் வந்து விட்டதுபோல் தெரிந்தது. ஆனால் எங்க ளுடைய ஆயுள் கெட்டியாக இருந்ததால் போலீ ஸார் எங்களைக் கண்டுபிடிக்க முடியாமல் திரும்பிவிட்டார்கள். கோட்டைக்குள் நிசப்த மாக இருந்தது. ஆயினும் நானும் பொன் னழகியும், வெளியில் வரவில்லை. மறுபடியும் போலீஸார் திரும்பி வந்தாலும் வரலாமல்லவா? 

முனியய்யாவின் கதி என்ன ஆயிற்று என்பதும் தெரியவில்லை. ஆண்டவனே அவனைத் தப்பிப் பிழைக்கச் செய்துவிடு”, என்று பிரார்த்தனை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. 

சுமார் அரைமணி நேரத்துக்குப் பிறகு துப்பாக்கி சுடு சப்தம் ‘டமீல்’ என்று கேட்டது, அதைத் தொடர்ந்து ‘ஹா’ என்ற அலறல் சப்தம் காதைப்பிளந்தது. அந்த அலறல் என்னையும் பொன்னழகியையும் ஒரு உலுக்கு உலுக்கியது. அந்தக்குரல்…… ஆம் சந்தேகமில்லை…. முனியய்யாவின் குரல்தான். 

எங்களுக்கு வெளியில் வரவும் மனம் துணிய வில்லை. பொன்னழகியோ சுருண்டு விழுந்தாள். அதற்குள் மறுபடியும் ஆள் அரவம் கேட்டது. ஆங்காங்கே தேடிப்பார்ப்பது போலவும் தெரிந்தது. 

அவர்களில் ஒருவன் சொன்னான்:- அந்தப் பயலுக்கு என்ன துணிச்சல் ? எங்கே உன் சிநேகிதன் சொல்லிவிடு என்று கேட்டதற்கு ஒரே யடியாய் தெரியாது என்று சாதித்து விட்டானே! 

இன்னொருவன் ‘அவன் பெரிய வீரந்தாண்டா நம்மையெல்லாம் கொஞ்ச நேரத்தில் கலங்க வைத்துவிட்டானே அவனைப் பிடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதே’ என்றான். என்ன அதிசயமடா! மரத்தில் கட்டி வைத்து உன் சிநேகிதன் இருக்குமிடத்தைச் சொல்லி விடு. இல்லாவிடில் சுட்டுவிடுவேன்’ என்று இன்ஸ்பெக்டர் எஜமான் சொன்னபோது, அவன் எப்படிப் பதில் சொன்னான் பார்த்தாயா? ‘தேசத் துரோகம் செய்து என் நண்பனைக் காட்டிக் கொடுக்கமாட்டேன், தாராளமாய் சுடுங்கள், என்று சொன்னானே பெரிய சூராதி சூரண்டா, என்றான் வேறொருவன். 

“அப்யோ பாவம்! செத்துப்போனான். இன்ஸ் பெக்டர் எஜமான் அவனை லாரியில் போட்டு ஸ்டேஷனுக்குக் கொண்டுபோய்விட்டார்” என்று அவர்கள் பேசிக்கொண்டதைக் கேட்ட போது என் தலை சுக்கு நூறாக நொறுங்கியது போன்ற உணர்ச்சி உண்டாயிற்று. வாய்விட்டு கதறி அழமுடியாமல் தவித்தேன். அடாடா… கடைசியில் முனியய்யாவும் எனக்காகவே உயிர் விட்டுவிட்டானா? சுதந்திர தேவியே உனக்கு இதுவரையில் இந்திய மக்கள் கொடுத்தபலி போதாதா? முனியய்யாவின் உயிரையும் எடுத்துக்கொண்டாயே” என்று என்வாய் முணு முணுத்தது. 

ஆயினும் என் துக்கத்தை அதிகமாகக் காட்டிக் கொள்ளக் கூடாதென்று தீர்மானித்துக் கொண்டேன். ஏனெனில் பொன்னழகியைப் பின்னர் தேற்றுவது மிகவும் கஷ்டமாகிவிடும் அல்லவா? 

‘சரி இங்கே ஒருவரையும் காணோம் போகலாம் வாருங்கள், என்று சொல்லிவிட்டு எமகிங் கிரர்கள் போன்றிருந்த போலீஸ்காரர்கள் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டுப்போய் விட்டார்கள். 

பின்னர் நானும் பொன்னழகியும் பாறையைத் தள்ளிக்கொண்டு வெளியில் வந்தோம். உடம் பெல்லாம் ‘வெடவெட வென்று ஆடியது. உள்ளத்தில் புயல் கூத்தாடியது. 

பொன்னழகி அழுதாள்; தவித்தாள் சோர்ந்து சோர்ந்து மயக்க மடைந்தாள்; ஆனால் இனி என்ன அழுது என்ன செய்வது? 

இனிமேல் அந்த இடத்தைவிட்டே இருவரும் தப்பிவிட வேண்டியதுதான். ஆனால் கலியாண மாகாத இளம் பெண் ஒருத்தியுடன் நான் எப்படிப் போவது? ஊரில் உள்ளவர்கள் என்ன நினைக்கமாட்டார்கள்? என்று யோசித் தேன். பொன்னழகியை விட்டு விட்டுப் போனால் அவளுக்கு ஆதரவு ஏது? 

அவள்தான் என்ன செய்வாள்? அவளுடைய அண்ணன் எனக்காகத் தன்னுடைய உயிரையும் கூடத் தியாகம் செய்து விட்டானே. ஆகை யால் என்ன கஷ்ட நஷ்டம் வந்தாலும், பொன் னழகியைக் கூட்டிக்கொண்டு போக வேண்டி யதுதான் என்று முடிவு செய்து கொண்டேன். சோகமே உருவெடுத்தது போல் இருந்த பொன் னழகியை அழைத்துக்கொண்டு கோட்டைக்கு வெளியில் வந்தேன். 

இலேசாக வெளிச்சம் இருந்தது. முனியய்யா சுடப்பட்ட இடத்தைத் தேடிக்கொண்டு வந்தோம். அந்த வீரனுடைய இரத்தம் பல இடங்களில் சிந்திக்கிடந்தது. அதைப் பார்த்த பொன்னழகி கதறிப் பதறினாள். நானும் விம்மி விம்மிப் பொறுமினேன். இப்படி ஐந்து நிமிஷம் கழிந்தது. பின்னர் பொன்னழகி அழுவதை நிறுத்தி ஒரு ஆவேசக்குரலில் ” என் அண்ணா சாமியாகப் போய்விட்டார் !” என்றாள். 

நம் முன்னோர்கள் புகட்டிவைத்த தெய்வீக ஞானம், சோகத்தின் எல்லையில் எந்த நாஸ்திகனுக்கும் நிச்சயம் தோன்றும் என்பதில் சந்தேகமில்லை. 

“ஆம் முனியய்யா தெய்வந்தான். தேசத்துக்காகத் தியாகம் செய்த எவனும் தெய்வமே !” என்று நான் ஆமோதித்தேன். 

எங்கள் துக்கம் கொஞ்சம் அடங்கியது. ஒரு அரைமணி நேரம் நானும், பொன்னழகியும் மௌனமாகவே அந்த இடத்தில் உட்கார்ந் திருந்தோம். பின்னர் பொன்னழகி என்னைப் பார்த்து.”இனி நீங்கள் தான் எனக்கு ஆதரவு” என்றாள். 

“ஆம் நான்தான் இனி உனக்கு ஆதரவு” என்று ஆமோதித்தேன். 

“என் அண்ணா சாமியாகப்போன இந்த இடத்திலேயே நாம் இரண்டுபேரும் கலியாணம் செய்து கொண்டுவிடுவோமே” என்று சொன்னாள். 

உடனே நான் “எனக்கு ஆட்சேபணையில்லை. ஆனால் எந்த நிமிடமும் போலீஸார் என்னைச் சுட்டுக்கொன்று விடலாம்; சாவை எதிர் பார்த்துக்கொண்டிருக்கும் என்னைக் கலியாணம் செய்து கொண்டு என்ன பிரயோசனம்?” என்று அவளைக் கேட்டேன். அவளுடைய முகத்தில் ஒரு புதிய பிரகாசம் தோன்றியது. 

“அதனால் பாதகமில்லை; அதற்காக நான் கவலைப் படவுமில்லை. யாரோ ஊர் பேர் தெரியாத ஒரு வரைக் கட்டிக்கொண்டு நூறு வருஷம் சார மில்லாத வாழ்க்கை வாழ்வதைக் காட்டிலும், தங்களுக்கு ஒரு நாள் மனைவியாக இருந்தாலும் போதும். நாளையே தங்களைப் போலீஸார் சுட்டுவிட்டாலும் என் வாழ் நாள் முழுவதும் என்னை, இன்ன தேச பக்தருடைய மனைவி என்று ஊரார் சொல்லிக் கொண்டிருப்பார்கள் அல்லவா? அதுவே போதும்” என்று உணர்ச்சி யுடன் கூறினாள். 

இவ் வார்த்தைகள் என்னை ஒரு கலக்கு கலக் கியது. அறிவு தெளிந்தது. ஆகா! எப்பேர்ப்பட்ட அற்புதமான உண்மையைப் படிக்காத ஒரு கிராமத்துப்பெண் சொல்லிவிட்டாள். தேச பக்தியும் வீரமும் ஒன்றாக உருவெடுத்த பெண் தெய்வம்தான் பொன்னழகி! 

உடனே சட்டென்று கீழே குனிந்து அங்கு சிந்திக்கிடந்த முனியய்யாவின் இரத்தத்தை எடுத்து பொன்னழகியின் நெற்றியில் திலக மிட்டேன். எங்களுக்காக முனியய்யா சிந்திய இரத்தத்தின் சாட்சியாக எங்கள் திருமணம் நடந்தது! பின்னர் இருவரும், முனியய்யா எப் பொழுதும் கையில் வைத்திருக்கும் வேல் கம்பை எடுத்து, அவன் சுடப்பட்ட இடத்தில் நட்டு வைத்து வீர வணக்கம் செய்தோம். 

கடைசியாக, அந்த இடத்தை விட்டுப் பிரிய மனமில்லாமல் கண்கள் கலங்கப் பிரிந்து சென்றோம். 

பொன்னழகி நான் சீட்டுக் கொடுத்தனுப்பிய நண்பரிடம் வாங்கிக்கொண்டு வந்த ஆயிரம் ரூபாயையும் என்னிடம் கொடுத்தாள். பக்கத்தி லிருந்த ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்று ‘போட்மெயிலில்’ ஏறிச் சென்னைக்குச் சென்று, அங்கிருந்து காசிக்குப் பிரயாணமானோம். காசியிலிருந்த என்னுடைய நண்பர் ஒருவரின் உதவியால் நான்கு வருஷம் நானும் பொன்னமு கியும் செளக்கியமாக வாழ்ந்து வந்தோம். பொன்னழகி அந்த நான்கு ஆண்டுகளில் உலக விஷயங்களைக் கற்றறிந்தாள். தமிழும், ஆங்கிலமும் பயின்றாள். 

தேசத்திற்கு நல்லகாலம்பிறக்க, நான்கு ஆண்டு களாயிற்று. தலைவர்கள் எல்லோரும் விடுதலை செய்யப்பட்டார்கள். வாரண்டுகள் ரத்து செய்யப்பட்டன. இந்த விவரங்கள் தெரிந் ததும்,நானும் பொன்னழகியும் சொந்த ஊருக் குப் புறப்பட்டு வந்தோம். ரயிலிலிருந்து இறங்கி பஸ்ஸில் ஏறினோம். பஸ், சங்கரப் பதிக்கோட்டைக்கு வந்ததும், பஸ் கண்டக்டர் ஹோல்டன்’ என்றார். பஸ் நின்றவுடன், கண்டக்டர் கீழே இறங்கினார். உடனே பஸ்ஸி லிருந்த பிரயாணிகள் அனைவரும் ஆளுக் கொரு தேங்காய் எடுத்து கண்டக்டரிடம் கொடுத்தார்கள். தேங்காய் கொடுக்காதவர்கள் நானும் பொன்னழகியும் தான் ! 

கண்டக்டர் அத்தனை தேங்காயையும் உடைத்து விட்டுக் கும்பிட்டான். பிரயாணிகள் எல்லோ ரும் கும்பிட்டார்கள். எனக்கு ஒன்றும் விளங்க வில்லை. பொன்னழகிக்கும் ஒன்றும் புரிய வில்லை. ஏனெனில், நான்கு ஆண்டுகளுக்கு முன்னால் அந்த மாதிரி வழக்கம் அங்கே கிடை யாது. ஆகையால் விவரம் தெரிந்து கொள்ளும் பொருட்டு “இங்கென்ன விசேஷம்?” என்று ஒரு பிரயாணியைக் கேட்டேன். 

“சங்கரப் பதிக்கோட்டை முனியய்யாவுக்குத் தேங்காய் உடைப்பது பிரயாணிகள் வழக்கம்” என்று சொன்னார் மேற்படி பிரயாணி. 

“அது ஏன்?” என்று ஆச்சரியத்துடன் கேட் டேன். உடனே பக்கத்திலிருந்த ஒருவர் முனியய்யா என்று ஒரு தேசபக்தர் இருந்தார். அவரைப் போலீஸார் இந்த இடத்தில் தான் சுட்டுக் கொன்று விட்டார்கள். அவர் இறந்து கீழே விழுந்த அந்த இடத்தில் மறுநாள் ஒரு வேல்கம்பு முளைத்துவிட்டது. ஆகையால் அன்று முதல் ஜனங்கள் பயபக்தியுடன் இந்த இடத்துக்கும் பூஜை செய்வது வழக்கமாகி விட்டது” என்று சொல்லி நிறுத்தினார். 

வேல் கம்பு தானாக முளைக்கவில்லை என்பதும் அதை நானும் பொன்னழகியும் தான் நட்டு வைத்தோம் என்பதும் ஜனங்களுக்கு எங்கே தெரிந்திருக்கப் போகிறது? எனினும் ஜனங்கள் முனியய்யாவை எவ்வளவு கொண்டாடினாலும் தகும். தெய்வமாகக் கொண்டாடினாலும் தவறு ஒன்றுமில்லை. 

ஆம், தேசத்திற்காகத் தியாகம் செய்த முனி யய்யா தெய்வம் தான்!

– சீனத்துச் சிங்காரி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜனவரி 1950, தமிழ்ப் பண்ணை லிமிடெட், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *