கோபுர கலசம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: December 29, 2023
பார்வையிட்டோர்: 1,675 
 
 

சுப்பையனுக்கு பெருமாள் சுவாமி மீது அளவற்ற பக்தி சிறுவயதிலிருந்தே இருந்த காரணத்தால் சனிக்கிழமை நாள் முழுவதும் உண்ணாமல் விரதமிருந்து தான் குடியிருக்கும் குடிசை வீட்டிற்கு அருகிலிருக்கும் தோட்டத்தில் உள்ள துளசி இலைகளைப்பறித்து மாலையாகக்கட்டிக் கொண்டு வந்து கோவிலில் உள்ள அர்ச்சகரிடத்தில் கொடுத்து விட்டு மனமுருகி, கண்களில் கண்ணீர் பெருக வணங்கி விட்டு அன்று நாள் முழுவதும் கோவிலைச்சுற்றிலும் உள்ள பகுதியில் நிறைந்து கிடக்கும் குப்பைகளை சுத்தம் செய்து விட்டு இரவு துவங்கிய பின் வீட்டிற்கு செல்வார்.

ஒரு சனிக்கிழமை ஊரின் முக்கியஸ்தர்கள் ஒன்றாகக்கூடி கோவில் கும்பாபிசேகம் நடத்த முடிவு செய்து அதற்கு செலவு செய்ய பக்தர்களிடம் வசூல் செய்வதென முடி செய்தனர். அங்கு வந்திருந்தவர்கள் சிலர் பணமும் கொடுத்தனர். சிலர் எவ்வளவு கொடுக்கப்போகிறோம் என்பதையும் சொல்லிக்கொண்டு இருந்தனர்.

மற்றவர்கள் கும்பாபிசேகம் செய்ய பணம் கொடுப்பதை பார்த்துக்கொண்டிருந்த சுப்பையனுக்கும் தானும் ஏதாவது கொடுக்க வேண்டுமென யோசனை வர, கோவில் எவ்வளவு பெரிதாகக்கட்டினாலும் கலசம் எனும் கும்பத்துக்கு தீர்த்த அபிசேகம் செய்வதைத்தானே முதன்மையாகப்பேசுகின்றனர். எனவே அந்த கும்பமெனும் கலசத்தை பெருமாளுக்கு தான் வாங்கி கொடுத்து விட வேண்டுமென முடிவு செய்து சபையில் தன் விருப்பத்தைச்சொன்ன போது அங்கிருந்தவர்கள் கந்தை வேட்டி கட்டியிருந்த ஏழை சுப்பையனை ஏளனமாகப்பார்த்து சிரித்தனர்.

“நீ தெனமும் உன்ற மாட்ட மேய்க்கப்போவியே அந்த தோட்டத்து முதலாளியே அவ்வளவு பணம் கொடுக்க முடியாம பத்து பேர் சேர்ந்து கலசம் செய்யலாம்னு சொல்லறாரு. குடிசைல குடியிருந்துட்டு, ஒரு மாட்ட சொந்தமா வெச்சு மேய்க்கிற உன்னால கொடுக்கவே முடியாது. அப்படிக்கொடுக்கோணும்னா எங்காவது போய் திருடிட்டு வந்து தான் கொடுக்கோணும்” என பேச “நாராயணா…‌” என தனது இரண்டு காதுகளையும் கைகளில் பொத்திக்கொண்டு, கண்ணீர் மல்க “என்ற மாட்ட வித்துக்கொடுத்துப்போடலாம்னு முடிவு பண்ணிப்போட்டனுங்க. உங்களுக்கு நாளைக்கே பணத்தக்கொடுத்துப்போடறேன்” என உறுதி கூறி விட்டு மாட்டு வியாபாரி வீட்டுக்கு சென்றவர் அன்றே பணத்தை கோவில் தர்மகர்த்தாவிடம் கொடுத்தார்.

“நீ எதுக்கு திருடங்கணக்கா வந்து ஊட்ல ஆறுகுட்டையும் சொல்லாம மாட்டப்புடிச்சுட்டு போன? நம்முளுக்குன்னு இருந்த ஒரே சொத்து அந்த மாடு மட்டும் தான். ஒன்ன ரெண்டு நாள்ல கண்ணுப்போட்டிருச்சுன்னா மாடு கறக்கற பால வித்து கூலி வேலைக்கு போகாம பொழைச்சுக்கலாம். ஒன்னி வேல வெட்டிக்குத்தாம் போகோணும். அதுக்கும் வயசான காலத்துல ஒடம்புல தெறனில்ல… ” என கண்ணீர் மல்க கண்டபடி திட்டிப்பேசிய மனைவியின் பேச்சையும் பொறுத்துக்கொண்டார்.

அன்று காலை கும்பாபிசேகம் நடைபெறவிருந்த கோவிலுக்கு மனைவியுடன் சென்றார் சுப்பையன். கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருந்தது. ‘கோவிந்தா’ எனும் கோசம் விண்ணை முட்டியது. தான் கொடுத்த பணத்தில் வாங்கி கோபுரத்தின் மீது வைத்திருந்த கலசம் தங்க நிறத்தில் மின்னியது கண்டு மகிழ்ச்சியடைந்தார்.

பாதுகாப்புக்கு காவலர்கள் நின்றிருந்தனர். குப்பாபிசேகம் செய்ய ஹோம குண்டத்திலிருந்து கலசதீர்த்தத்தை எடுத்துக்கொண்டு புரோகிதர்கள் கோவில் கோபுரத்துக்கு செல்ல கட்டப்பட்டிருந்த தற்காலிக படிகளில் ஏறினர். சுப்பையனும் ஏற முற்பட்ட போது அங்கே நின்றிருந்த ஒருவர் “கலசம் செய்ய பணம் கொடுத்தவர் மட்டும் தான் ஏறோணும். இதபாரு இவருதான் அவரு” என வெள்ளையும் சொல்லையுமாக நின்றிருந்த ஒருவரைக்காட்ட, அந்த நபர் மட்டும் மேலே ஏற அனுமதித்த காவலர்கள் சுப்பையனை ‘வெளியே போ’ என கழுத்தைப்பிடித்து தள்ளிய போது எழுபது வயதின் உடல் தளர்வினாலும், ‘தான் செய்த கலசத்தை பிறர் செய்ததாகக்கூறுகிறார்களே…?’ எனும் மனச்சோர்வினாலும் கீழே விழுந்து, பின் தள்ளாடி மனைவியின் பிடியால் எழுந்தவர் கண்களில் கண்ணீர் ஆறாக ஓடியது.

கீழிருந்தே கலசத்தின் மீது ஊற்றப்பட்ட தீர்த்தத்தை கைகளில் ஏந்தியவாறு பிடித்து தன்மீதும், மனைவி மீதும் தெளித்து விட்டு பெருமாளை தரிசனம் செய்ய கூட்டம் நிரம்பியிருந்ததாலும், பெரிய மனிதர்கள் மட்டும் கோவிலுக்குள் நிற்பதாலும் வெளியில் நின்ற படி மனதால் நினைத்து வணங்கி அங்கே கொடுத்த அன்னதானத்தைக்கூட வாங்க மனமின்றி வீடு சென்றவருக்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது.

மாடு வாங்கிய வியாபாரி மாட்டுடன் நின்றிருந்தார். ” செனை மாடு வகுறு இத்தன பெருசா இருந்தத என்ற வேவார அனுபவத்துல பாத்ததில்லை. வகுறு பெருசா வீங்கியிருக்கற மாதர தெரியுதுன்னு சந்தைல ஆறும் வாங்க மாட்டேன்னு சொல்லிப்போட்டாங்க. நீ வேற வேவாரிக்கு வித்து எனக்கு பணத்தக்கொடுத்துப்போடு. இல்லேன்னா நல்லபடியா கன்னு போட்டுச்சின்னா…. சொல்லியனுப்பு” எனக்கூறி கட்டுத்தரையில் மாட்டைக்கட்டிவிட்டுச்சென்று விட்டார் வியாபாரி கண்ணப்பன்.

மாட்டின் வயிறு இயல்புக்கு மாறாக பெரிதாக இருப்பதால் ஏதாவது கட்டியாக இருக்கலாம். மாடு இறக்க நேரலாம் என வியாபாரி கணித்ததால் திரும்பவும் மாடு விற்றவரிடமே விட்டுச்சென்றுள்ளார் என்பது வியாபாரிக்கு மட்டுமே தெரியும்.

” கலசம் வெக்கிறதுக்கு மாட்ட வித்தது தப்புன்னு பெருமாளே நெனைச்சுப்போட்டாரு. வித்த மாடு திரும்பி வந்தது அந்தக்கடவுளோட கட்டளை. கன்னு போடற வரைக்கும் நம்ம கிட்டயே இருக்கட்டும்” என கூறிய சுப்பையன் நம்பிக்கையுடன் இரவு படுத்து உறங்கினார். ஆனால் அவரது மனைவியோ கண் கலங்கியவாறு அடிக்கடி எழுந்து மாட்டை கவனித்தவாறு இருந்த போது மாடு படுத்தவாறு ஒரு கன்றை ஈன்றது.

கணவனை எழுப்பி கவனித்த போது இன்னொரு கன்றும் மாடு ஈன்றதில்‌ சுப்பையன் ஆச்சர்யத்தில் திக்குமுக்காடிப்போனார்.

ஒரே பிரசவத்தில் மாடு இரண்டு கன்றுகளை ஈன்ற செய்தியால் காலையில் குடிசை வீட்டின் முன் ஊரே கூடியிருந்தது. மாட்டை ஏற்கனவே வாங்கியிருந்த வியாபாரி ஒரு செல்வந்தரின் விருப்பத்திற்காக மேலும் இரண்டு மாடுகளை சுப்பையனுக்கு பரிசாகக்கொடுத்து விட்டு முன்பு கொடுத்த பணத்தையும் கேட்காமல் இரண்டு கன்றுகளுடன் மாட்டைப்பிடித்துச்சென்றார். கடவுள் கொடுத்த வரமாக எண்ணிய ஏழை சுப்பையன் வியாபாரி கொடுத்த இரண்டு மாடுகளில் ஒரு மாட்டை தான் வைத்துக்கொண்டு, இன்னொரு மாட்டை பெருமாள் கோவிலுக்கு தானமாக வழங்கினார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *