கோடுகளும் கோலங்களும்

0
கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 13, 2024
பார்வையிட்டோர்: 4,463 
 
 

அத்தியாயம் 10-12 | அத்தியாயம் 13-15 | அத்தியாயம் 16-18

அத்தியாயம்-13

சாந்தி காலனி வீட்டின் பெரிய முற்றத்தில் நெல் புழுக்கி உலர்த்தியிருக்கிறாள். தாழ்ந்த கூரையின் குட்டித் திண்ணையில் பிள்ளைகள் பள்ளிக்குப் போகும் சீருடையில் இருக்கிறார்கள்.

கூரை வீடானாலும் நல்ல அகலம், வசதி, பெரிய சாணி மெழுகிய முற்றம். திண்ணையும் கூட வழுவழுவென்று மிக நன்றாக இருக்கிறது. எந்த வேலையிலும் ஒரு திருத்தமும், மெருகும் தனக்கு வரவில்லை என்பது சாந்தியின் வீட்டைப் பார்த்தால் புலனாகிறது.

“வாங்கக்கா, வாங்க. வள்ளிக்கிழங்கு வெவிச்சேன், சாப்பிடுவீங்களா?” தட்டில் நான்கு கிழங்குகளுடன் உள்ளிருந்து வெளியே வருகிறாள். நெல் புழுக்கலில் அவித்ததா?

பிள்ளைகளுக்கு டிபன் டப்பியில் வைத்து மூடுகிறாள்.

அவளுக்கும் ஆவி பறக்கும் இரண்டு கிழங்குகளைத் தட்டில் எடுத்துக் கொண்டு வருகிறாள்.

“கிளம்புங்க; மணி எட்டே கால்… பஸ் வந்திடும்…!”

காலனியின் வளைவுக்கப்பால் சாலை வரை சென்று அவர்களை வழி அனுப்புகிறாள். “பத்திரம் சுஜாம்மா, தம்பி கையப் புடிச்சிட்டு கிராஸ் பண்ணணும்; பாத்து…”

டாடா காட்டிவிட்டு வருகிறாள்.

“நெல்லு இன்னக்கி வெவிச்சியா சாந்தி?”

“ஆமா விடிகாலம் எந்திரிச்சி ஒரு கால் மூட்ட வெவிச்சிப் போட்ட” செவந்தி கையிலெடுத்துப் பார்க்கிறாள்.

“பொன்னியா?”

“இது ஏ.டி.டி 36ன்னாங்க. கொஞ்சம் தாட்டியா இருக்கு. சோறு நல்லாருக்கும். புது நெல்லு தா…”

“சாந்தி, எனக்கு ஒண்ணுமே புடிக்கல. வெறுத்துப் போயி ஓடியாந்த. எங்கூட்ல தகராறு. இத்தினி வருசமா, உளுமையா, எல்லாரும் நல்லபடியா இருக்கணும்னு உழச்சி என்ன பலன்? ஒரு ஆதரவு, ஒரு பேச்சு இல்ல.”

“அன்னைக்குக் கடன் கட்டினப்ப, வங்கிக்காரரு, ‘சந்தோசம்மா அடுத்த பயிர் வைக்கக் கடன் வாங்கலாம் நீங்க’ன்னாரு. மொத மொதல்ல நா வங்கில கேக்கலாம்னு போயி செவனேன்னு வாசல்ல நின்னுட்டிருந்தே. எல்லாரும் சொன்னாங்க. நீல்லாம் போயிக் கேட்டா கிடைக்காது. வரதராச மொதலியாரோ, நாச்சப்பனோ போல பெரி… கைங்க சிபாரிசு பண்ணனுன்னாங்க. பயமாயிருந்திச்சி. பன்னண்டு மணி வர நின்னிட்டிருந்தே. அவுரே கூப்பிட்டு, உனுக்கு என்னம்மா வோணும் காலமேந்து நிக்கிறீங்கன்னாரு. சொன்னே. அதெல்லாம் தேவயில்ல. உங்கப்பா பேருல நிலமிருக்குன்னு சொல்றீங்க. அவரு வந்து கையெழுத்துப் போட்டாப் போதும்ன்னாங்க. உனுக்கும் தா. நா வாங்கினது தெரியும். இப்ப… பாப்பாம்மா சொன்னதைக் கேட்டு, எனக்கும் கொல்ல மேட்டுல வேர்க்கடலை சாகுபடி பண்ணணும்னிருக்கு. எங்கூட்டுக்காரரு கடனுக்கு உதவி செய்ய மாட்டாங்க. ஏ அண்ண வேற வந்து, வித்துப் போடுங்க, வூட்டக் கட்டுங்கன்னுதூபம் போடுறா! எனக்குக் கோபமா வருது. என்ன செய்யிறதுன்னும் புரியல. நீ ஒருத்திதா சாந்தி புரிஞ்சுக்கிற என்ன. அக்கம் பக்கம் ஒட்டு உறவு யாரும் தைரியம் குடுக்க மாட்டாங்க. அதென்ன, புருசன் சொல்றத மீறிச் செய்யிறதும்பாங்க. பொம்புளகோடு தாண்டக் கூடாது. சீத தாண்டினா, ஆனானா கஸ்டமும் பட்டாம்பாங்க. ஆ – ஊன்னா இதொரு கத. இன்னாதா ஆவுதுன்னு கால எடுத்து வைக்கத் துணிச்ச வரல. ஒரே வெறுப்பாருக்கு. இல்லாட்டி இப்பிடிக் காலங்காத்தால வூட்டப் போட்டுட்டு வாலறுந்த பட்டம் போல வந்திருக்க மாட்டே…”

செவந்திக்குக் கண்களில் நீர்த்துளி எட்டிப் பார்க்கிறது.

“சீ, இதென்னக்கா, நீங்க சின்னப் புள்ள போல விசனப்படுறீங்க. இங்க நீங்க வந்ததே சந்தோசம்க்கா. சிநேகம்ங்கறது. இதுதா. இப்ப என்ன, நீங்க பயிரு வைக்கக் கூடாதுன்னு சொல்றாங்களா, இல்ல, கடன் வாங்க உதவி பண்ண மாட்டேன்னு சொல்றாங்களா?”

“ரெண்டுந்தா சாந்தி. கடன் இல்லேன்னா, நா எப்படிப் பயிரு வைக்கிறது?”

“நீங்க முதல்ல நிலத்தப் பாருங்க. மண் பரிசோதனைக்கு அனுப்புங்க. மணிலாக் கொட்டை போடறதப் பத்திக் கேளுங்க.. அதுக்குள்ள யோசனை செய்யலாம்…”

“அப்படீன்னு சொல்லுறியா சாந்தி…?”

“ஆமாம்… முதல்ல ஒரு அஞ்சு நூறு போல புரட்ட வேண்டி இருக்கும். நா ஒரு அம்பது ரூபாச்சீட்டுக் கட்டுறே… பாக்கலாம். முன் வச்சகாலப் பின் வைக்க வேண்டாம். பயிர் வச்சிட்டோம்னா புடுங்கி எறியச் சொல்வாங்களா?”

சாந்தியின் கைகளை நேசமாகப் பற்றிக் கொள்கிறாள்.

“வள்ளிக் கிழங்கு சாப்பிடுங்கக்கா…”

மனத் தெம்புடன் வள்ளிக் கிழங்கை பிட்டுப் போட்டுக் கொள்கிறாள். நல்ல இனிப்பு.

அந்த மனதுடனே அவள் வீடு திரும்புகிறாள். நெல்லு மிசின் பக்கம் தானாகக் கால்கள் நகருகின்றன.

ஆயா பெருக்கிக் கொண்டிருக்கிறாள். புழுங்கல் நீர் கீழே ஓடி ஓடிப் புளித்த கள் வாடையாக மூக்கைத் துளைக்கிறது.

“ஆயா கன்னிப்பன் இல்லையா?”

“எங்கியோ அறுப்புன்னு போனா. வந்தா வாரச் சொல்லுறன்…”

வீட்டில் மச்சான் மாப்பிள்ளை இருவரும் இல்லை.

நீலவேனி வீட்டிலிருந்து இட்டிலி தோசை வாங்கிச் சாப்பிட்டிருக்கிறார்கள். சட்டினி சிறு கிண்ணத்தில் இருக்கிறது. வாங்கி வந்த பாத்திரம் கழுவியிருக்கவில்லை. இவள் புருசன் குளித்துவிட்டுக் கிணற்றடியில் லுங்கியும், பனியனும் போட்டிருக்கிறான். அவரைப் பந்தலடியில் சரோசா நின்று காய் பறிக்கும் சுவாரசியத்தில் இருக்கிறாள்.

“இட்டிலி வாங்கின. ஏனத்தைக் கழுவி வைக்கிறதில்ல? டீ போட்ட வடிக்கட்டி, ஆத்தின ஏனம் எல்லாம் அப்படியே இருக்கு” என்று சிடுசிடுத்துக் கொண்டு அடுப்பில் ஓலைக் குத்தை செருகி எரிய விடுகிறாள். உலையைப் போடுகிறாள். அரிசியைக் கழுவிப் போட்டு, குழம்புக்குப் புளியை எடுக்கையில் அம்மா வருகிறாள்.

“கால நேரத்துல கோவிச்சிக்கிட்டு எங்கயோ போயிட்ட இப்ப பருப்புக் குழும்புக்குக் கூட்டவேணாம். கறி வாங்கிட்டு வாரன்னு போயிருக்காப்பல… ஆசையாச் சொல்லிட்டுப் போச்சி…”

“அப்படியா? மச்சானும், மாப்புளயும் கறிக் குழம்புக்கு ஆசைப்படுறரா? சரி, நடக்கட்டும். பண்ணி ஊத்து…” என்று மனசுக்குள் சொல்லிக் கொள்கிறாள். பழைய சோற்றைக் கரைத்துக் குடிக்கிறாள்.

“அடுப்பப் பாத்துக்க. நா வாரேன்” என்று வெளியே கிளம்புகிறாள்.

அப்பன் சாவடியில் இருக்கிறார்.

“அப்பா ஒரு நிமிசம் வாங்க…!

முள்ளுக் காத்தான் செடி சேலையை உராய்கிறது.

“ஏம்மா?”

“நா அந்தச் சின்னம்மா பூமில கடலக்காப் பயிர் வைக்கப் போறேன். நான் கத்துக்கிட்டாப் போல, செய் நேர்த்தி செஞ்சி வைப்பேன். இப்ப மண் பரிசோதனைக்கு அனுப்பணும். அத்தோட சர்வே நம்பர் வேணும்… தாங்க…”

“இப்ப வேணுமா?”

“ஆமா…”

“நா இங்க நிக்கிற, நீங்க பாத்துக் கொண்டுட்டு வாங்க… மண்ண பரிசோதனைக்கு அனுப்புமுன்ன, சர்வே நம்பர்… விவரமெல்லாம் எழுதி அனுப்பணும்…”

“சரிம்மா, நீ மண்ணு கொண்டிட்டு வா… நானே கொண்டிட்டுப் போய்க் குடுக்கறேன் ஆபிசில…”

“அவங்களுக்குத் தெரிஞ்சா எதும் பேசுவாங்கப்பா, வானாம்… நானே போற…”

“சரி… நீ எடுத்திட்டு வா. நான் பாத்து எழுதித் தார…” வயல் வரப்புகளினூடே நடந்து, செல்லியம்மன் கோயில் பக்கம் பெரிய சாலை கடந்து அப்பால் ஏரிக்கரை மேடு தெரிகிறது. அதற்கும் முன்பாகத்தான் அந்த பூமி. கருவேல மரம் ஒன்று அடையாளம். முள்முள்ளாகத் தலைவிரித்த பேய்ச்சி போல் இருக்கிறது. இன்னொரு பக்கத்தில், எல்லைக் கல்லுடன் ஒர் உதிய மரம் இருக்கிறது. ஏரித் தண்ணிர் வரும் தடம் நீர் கண்டு எத்தனையோ நாட்களாயின என்று சொல்கிறது.

ஆட்டுக்குக் குழை தேடி ஒரு பயல் கம்பும் இரு ஆட்டுக் குட்டிகளுமாகப் பார்த்துக் கொண்டு போகிறான்.

நிலத்தின் நடுவே நடக்கிறாள். சிறு சிறு பாசி பூத்தாற் போல் ஒரு திட்டுப் பச்சை. வானம் எப்போதோ பொழிந்ததுண்டு என்று நம்பிக்கை கொடுக்கிறது. செவந்தி அப்போது தான் எல்லையில் கண் பதிக்கிறாள். எல்லைக் கல்லை அடுத்த பூமியில் ஒரு நரைத்த மீசைக்காரர் அரை டிராயர் போட்டுக் கொண்டு நிற்கிறார். அங்கு கிணறு வெட்டுகிறார்கள் என்று தெரிகிறது.

அந்த மண் யாருக்குச் சொந்தம் என்று அவளுக்குத் தெரியாது.

கிணறு வெட்டி, வெளியே மண்ணும் பாறைச் சில்லுமாகக் குவித்திருக்கிறார்கள். இப்போதும் வேலை நடக்கிறது. மேலே கயிறு கட்டி, உள்ளிருந்து வரும் மண்ணை அரை டிராயர்க்காரர் வாங்கிக் கொட்டுகிறார்.

அடுத்த நிலத்தில் வசதியுள்ள யாரோ கிணறு வெட்டுகிறார். அதனால் இவளுக்கு நீர் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. செவந்திக்கு மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது. வானை நிமிர்ந்து நோக்கி தெய்வத்தை நினைக்கிறாள்.

மண் பரிசோதனைக்கு மண் எப்படி எடுக்க வேண்டும்?

கூடை, சிறு மண் வெட்டி, பாலிதீன் பை, ஆகிய சாமான்களைக் கீழே வைக்கிறாள். கூடையில் அந்த நோட்டு இருக்கிறது. ஒரு தரம் பிரித்துப் படிக்கிறாள்.

நிலத்தில் ஓரிடத்தை, மேல் பரப்பை மண் வெட்டியால் வெட்டிக் கொள்கிறாள். கன்னியப்பனுக்கு இதைக் காட்ட வேண்டும் என்று ஆசை. ஆனால் அவனைக் காணவில்லை.

இவளே நன்றாகப் பல இடங்களில் வெட்டி மண்ணைப் பொல பொலப்பாக்குகிறாள். அவற்றைச் சேர்த்து ஒரு கூட்டல் குறி போடுகிறாள். இடைப்பட்ட நான்கு பகுதிகளில் இருந்தும், எதிர் எதிர் பகுதிகளில் இருந்து மண்ணை எடுத்துக் கொள்கிறாள். மறுபடியும் அதில் ஒரு கூட்டல் குறி போடுகிறாள். அப்போது அந்த அரை நிஜார்க்கார நரைத்த மீசைக்காரர்.அவளிடம் வருகிறார்.

“என்னம்மா? நீயும் கிணறு வெட்டப் போறியா? நாந்தா தனியாக இங்க கிணறு வெட்டப் போற. நீயும்…”

“வணக்கம் ஐயா. நான் கிணறு வெட்டல. இது மண் பரிசோதனைக்கு அனுப்பத் தேர்ந்து எடுக்கறேங்க…”

“அடஅப்படியா? எப்படி? எனக்குத் தெரியலியே?”

அவள் ‘V’ வடிவில் தோண்டி மண்ணை எடுத்ததைக் காட்டுகிறாள்.

“இதை நாம் உழவர் பயிற்சி ஆபிசில் கொண்டுக் கொடுத்தால் அவங்க நம்ம மண்ணுக்கு என்ன சத்து வேணும்னு சொல்லுவாங்க… பாலிதீன் பையில போட்டு. அரை கிலோ போதும்ங்க… கட்டி, நம்ம சர்வே நம்பர், பேரு, அட்ரசு எழுதிச் சீட்டுக் கட்டணும்…” என்று காட்டுகிறாள்.

“ஆமா, இதெல்லாம் உங்களுக்கு யாரு சொன்னாங்க?”

“என்ன அப்படிக் கேட்டீங்க! ‘தமிழ்நாடு பண்ணை மகளிர் பயிற்சி திட்டம்’னு ஒண்ணிருக்கு. டேனிடா ஆபீசில ஒரு பெரிய ஆபீசர் அம்மா இருக்காங்க. அவங்களும், நம்ம விவசாய ஆபீசருங்களும் சேர்ந்து எங்களைப்போல நிறைய பெண்களுக்கு அஞ்சஞ்சு நாள் பயிற்சி நடத்தி இதெல்லாம் சொல்லிக் குடுக்கிறாங்க. நான் முதல்ல பயிற்சி எடுத்ததும் கால் காணில நெல்லு, வெள்ளக் கிச்சிலி ஆடிப்பட்டம் போட்டு, ஒம்பது மூட்டை எடுத்தேங்க…”

“ஆ…? உங்கூட்டில, நீங்கதா விவசாயம் செய்யிறவங்களா வூட்டுக்காரர் அண்ணந்தம்பி இல்லையா?”

“இருக்கிறாங்கையா, அப்பா செய்வாரு. அவருக்கு வயசாச்சி. ஏகாம்பரம்னு பேரு. இத, இதக்கூட எங்க சின்னம்மா இருந்தப்ப, ஏரித் தண்ணி வந்து வெள்ளாமை கடலை கேவுறு போடுவாங்க. அவங்க பட்டணத்தோடு போயிட்டாங்க. அப்பாக்கு வயிசாயிடுச்சி, உழைக்க சிரமம். நாந்தா இப்ப இதுல மணிலா போடணும்னு தீவிரமா வந்திருக்கிறேன்.”

இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே கன்னியப்பன் வந்து விடுகிறான்.

“அக்கா, கூப்டனுப்பினிங்களாமே…?”

“ஆமா… நா இங்கே இருப்பேன்னு ஆயா சொல்லிச்சா? நீ அறுப்புக்குப் போயிருக்கேன்னாங்க…?”

“இல்ல வைக்கோல் கொண்டாந்து போர் போட்ட. வேல முடிஞ்சிச்சி வாரேன். அக்கா இங்க பயிர் வைக்கப் போறிங்க? இதா, இவங்க கூட கேணி தோண்டுறாங்க. தண்ணி வந்திருக்கு போல…?”

“ஆ…” என்று சிரித்துக் கொண்டு மீசையை முறுக்கிக் கொள்கிறார். அவள் அப்பனுக்கு மீசை கிடையாது. இவருக்கும் அப்பன் வயசு இருக்கலாம். ஆனால் தாட்டியாக, உயரமாக இருக்கிறார். காதோரம் மட்டுமே கம்பிகள் போல நரை இழைகள். கிருதாவும் வெளுப்பு. மற்ற இடங்கள் வழுக்கை. பார்த்தால் படித்து விவரம் அறிந்தவர் போல் இருக்கிறார். ஆனால் கூட நான்கு பேரை வைத்து வேலை வாங்காமல், இவரே வேலையாளுக்கு சமமாக மண் வாங்கிக் கொட்டுகிறார்.

“ஏம்மா, இவரு யாரு? தம்பியா?”

“தம்பி போலதா. ரொம்ப வேண்டியவரு. இவுரு ஒத்தாச இல்லன்னா நா ஒண்டியா வெள்ளாம செய்யிறது சிரமம். ஏங்க நா தரிசாக் கெடக்குற இந்த பூமில வெள்ளாம பண்ணனும்னு வாரப்ப நீங்க கேணி வெட்டிட்டிருக்கீங்க, நல்ல சவுனம். எனக்கும் தண்ணி குடுப்பீங்களா? தண்ணி எப்படி வந்திருக்கா?”

மீசைமுறுக்குவது இவர் வழக்கம் போல. ஏனோ சிரிப்பு வருகிறது. அவர் நகர்ந்து சென்று, “வா வந்து பாரு!” என்று கூப்பிடுகிறார். செவந்தி சென்று குனிந்து பார்க்கிறாள். உள்ளே கோவணம் மட்டும் உடுத்திய இரண்டு ஆட்கள் இருக்கிறார்கள். மேலே இதற்குள் இன்னோர் ஆள் வந்து கல் மண் தொட்டியை வாங்கிக் கொட்டுகிறான். உள்ளே சேரும் நீருமாக முழங்கால் அளவு இருக்கும் என்று தோன்றுகிறது. பதினைந்து இருபதடிக்குள் தான் தோண்டி இருக்கிறார்கள். தண்ணிர் வருகிறது…

“ஏரிக்கால் இல்ல? இதா கூப்பிடு தூரத்துல ஏரி. முன்னெல்லா தண்ணி எப்பவும் கிடக்குமாம். இப்ப அந்தப் பக்கமெல்லாம் பாக்டரிக்காரங்க வூடு கட்டிட்டாங்க. பெரிய ஸ்கூல் ஒண்ணிருக்கு. போர்டிங் ஸ்கூல். அவங்க வேற முந்நூறு ஏக்கர் வளச்சிட்டிருக்காங்க…”

“ஏம்மா, நீ சொன்ன பயிற்சி ஆம் புளங்களுக்கு இல்லியா?”

செவந்தி நின்று யோசிக்கிறாள்.

“ஆம்புளங்களுக்கு ஏற்கனவே இருக்குங்க. எஃப்டிஸியோ என்னமோ சொல்றாங்க. ஆனா, தான்வா பொம்புளங்களுக்கு மட்டுந்தா. சிறு விவசாயிங்க, பொம்புள நிலத்தில வேல செய்யிறவங்களுக்கு இது சொல்லிக் குடுக்கிறாங்க…”

“நா… பட்டாளத்துல இருந்தவ. வெட்டுவ கொத்துவ, எல்லா வேலயும் செய்வே. ஆனா வெள்ளாம சூட்சுமம் தெரியாது. இது என் தங்கச்சி நிலம். அவளுக்குப் புருசன் இல்ல. ஒரே ஒரு பொண்ணு இருக்கு. இந்த நாலு ஏக்கரா போல, ஏதோ ஆளவச்சி வெள்ளாம பண்ணேன்னா ஒண்ணுந் தேறல. இப்பதா நா ஓய்வு பெற்று வந்திட்டே. ஒரு கேணி எடுப்பம்னு வந்திருக்கே…”

“அதுனால என்னங்க? நீங்க என் அப்பனப் போல இருக்கறீங்க. இதொண்ணும் பெரி… விசயம் இல்ல. எப்படிப்படி பண்ணணும்னு நாஞ் சொல்ற முதல்ல ஏக்கருக்கு எட்டு செண்டு நாத்தங்கால் வுடனும். நீங்களும் மண் பரிசோதனைக்கு நாஞ் சொல்றாப்பல மண்ணெடுத்து அனுப்புங்க. பூமி தங்கச்சி பேரில தான இருக்கு?”

“இது சொல்லப் போனா, என் பூமிதா. எம் பய்யனதா தங்கச்சி மகளுக்குக் குடுத்துப் படுவெட்டாப் போய் சேந்தா… அதொரு சோகம். அதென்னத்துக்கு இப்ப…? இனி அத அந்தப்புள்ள பேரில எழுதி வச்சிடுவ. ஒரு புள்ள, மூணு வயசு போல இருக்கு… அதுவா ஆசப்பட்டு, கலியாணம் கட்டிக்கிறதுன்னாலும் அவங்க அனுபவிக்கணும்.”

குரல் கரகரக்கிறது.

“ஐயா, உங்களுக்கு எத்தினி பெரிய மனசு? பொம்புள பேருக்கு நிலம் யாருமே எழுதறதில்ல. உரிமையோடு இருக்க வேண்டிய நிலத்தக் கூட அவ பேருக்கு எழுதறதில்ல. இத, இந்தபூமி எங்க சின்னம்மாக்குச் சேர வேண்டியதுங்க. அவங்க புருசனும் செத்திட்டான். வாழவே இல்ல. ஒரு பொம்புள புள்ள அவங்கப்பா எங்க பாட்டனே அவ வேற கலியாணம் கட்டிக்கிட்டா, பூமி கைய வுட்டுப் போயிடும்னு எங்கப்பா பேருக்கு எழுதிட்டாரு. இப்ப இந்த பூமி எங்கூட்டுக்காரரு பேருல இருக்கு… எனக்கு லோன் வாங்கணுமின்னா, அவரு சம்மதிக்கணும், கையெழுத்துப் போடணும். பெரிய ரோட்ல, சைகிள் கடை வச்சிருக்காரு. வெள்ளாமையில் கொஞ்சம் கூட இஸ்டம் இல்ல. ஏங்க சோறு போடுற மண்ணவுட்டுப் போட்டு வேற என்ன தொழிலச் செய்ய?”

அவர் கை மீசையைத் திருகுகிறது. “சபாஷ் உம் பேரன்னம்மா?”

“செவுந்திங்க?”

அவருக்கு மண் பரிசோதனை செய்ய பத்து இடங்களில் இருந்து ‘V’ என்ற மாதிரியில் வெட்டி அந்த உட்புற மண்ணைச் சேர்க்கிறாள். பிறகு கூட்டல் குறிபோட்டு எதிரும் புதிருமான பகுதி மண்ணைச் சேர்த்து அதில் கூட்டல் குறியிட்டு கடைசியில் அரை கிலோ மண் வரும் வரையிலும் அதைக் குறைக்கிறாள்.

நேரம் போனதே தெரியவில்லை. கன்னியப்பனுக்கும் மண் பரிசோதனை காட்டியாயிற்று.

வயிறு பசி எடுக்கிறது. ஆனால் மிக உற்சாகமாக இருக்கிறது. உள்ளூர அவள் செய்து கொண்ட உறுதி மேலும் வலிமை பெறுகிறது. நம்பிக்கை ஒளி தெரிகிறது.

“கன்னிப்பா, இங்கமின்னப் போல, கொஞ்சம் காக்காணி, நெல்லும் போடுவம். தண்ணி பட்டாளத்துக்காரரு தருவாரு. அந்த மண்ணுல நவரைப்பட்டமா வேர்க்கடலை போடுறது. அதுக்கு அப்பா லோன் எடுத்துத் தருவாங்க. அன்னைக்கு அந்த மாநாட்டுல அஞ்சல அம்மான்னு ஒருத்தர் சொன்னாங்க. பயிரை மாறி மாறிப் போடணும்னு. நெல்லு விதச்சஇடத்துல கடலை போடுவோம்.”

“சரிங்கக்கா….”

இவள் கூடையில் பிளாஸ்டிக் பை மண்ணைப் பத்திரமாக வைத்துக் கொள்கிறாள். வீட்டுக்குச் சென்றதும் சர்வே நம்பர், விலாசம் எழுதிக் கட்டி ஆபிசில் கொண்டு கொடுக்க வேண்டும்…

அவர்கள் கிளம்பு முன் பட்டாளக்காரர் கூப்பிடுகிறார்.

“செவந்தியம்மா! வாங்க!”

“என்ன அப்படி சொல்லாம கொள்ளாம போறீங்க, செய்யிறத எல்லாம் செஞ்சி போட்டு?”

“சடையா, பூசை சாமானெல்லாம் எடுத்து வையி”

கிணற்றடியில் ஓர் இலைப் பரப்பி, அதில் பொரிகடலை, பழம் வெல்லம் வெற்றிலை பாக்கு வைக்கிறார்கள். கேணித் தண்ணிர் ஒரு செம்பில். உள்ளே இருந்த இரு ஆட்களும் வெளியே வந்திருக்கிறார்கள். சடையன் என்று பெயர் கொண்ட ஆள், அவற்றைப் பூமிக்கும் வானுக்கும் நீருக்கும் படைக்கிறான்.

“சாமி, தண்ணியும் பூமியும் மானமும் எங்களுக்கு என்னைக்கும் பக்க பலமா இருக்கணும்… பொங்கிப் பொழியணும். நல்லா வைக்கணும். ஊரு உலகம் சுபிச்சமாகணும்…”

எல்லோரும் கும்பிட்டு நிற்கிறார்கள்.

வெல்லமும் பொரியும் கடலையும் நெஞ்சமெல்லாம் அன்பாய்ப் பரவுகின்றன.

அத்தியாயம்-14

“இத பாருங்க செவந்தி அம்மா. உங்க பேரில எங்களுக்கு நிறைய நம்பிக்கை இருக்கு. அதனாலதான் இப்ப, நீங்க ஒண்ணரை ஏக்ராவில பயிரிடப் போகும் மணிலாப் பயிருக்கான இடு பொருட்கள் எல்லாம் தந்து உதவுறோம். உங்கப்பா பேரில் நிலம் இருக்கிறது. அவரை அழைத்து வந்து, எல்லாப் ஃபாரத்திலும் ஒப்புப் போட்டுக் கொடுக்கச் சொன்னிங்க. அதில் ஒரு சிக்கலும் இல்ல… ஆனா, அதே போல, இந்த பூமிச் சொந்தக்காரர் வந்து சான்றிதழ், ஃபாரங்களில் நிரப்பி ஒப்புப் போட்டு தரணும். இப்போது நீங்களே விவசாயம் பண்ணறவங்கண்ணு தெரிஞ்சாலும் ரூல், சட்டம் ஒண்ணிருக்கு. நிலம் யார் பேரிலே இருக்குதோ அவங்க பேருக்குத்தான் குடுப்போம்….”

செவந்தி சங்கடப்பட்டு நிற்கிறாள்.

“ஒரு கால் காணிக்கு… முன்ன கொடுத்த மாதிரி கொஞ்சமா, அதுகூடக் கொடுக்க மாட்டீங்களா சார்…?”

“எப்படிம்மா கொடுக்க? நீங்க உங்க புருசனக் கூட்டிட்டு வாங்க. இல்லாட்டி உங்க பேரில நிலத்த ரிஜிஸ்தர் பண்ணிக்குங்க…”

கடலைப் பயிருக்கு வேண்டிய நுண்ணூட்டச் சத்து, ஜிப்சம் எல்லாம் வாங்கி வண்டியில் அப்பாவும் கன்னியப்பனும் போய் விட்டார்கள். தைக் கடைசி. வேர்க் கடலைக்கு நடுவில் ஊடு பயிராகப் பயிறு விதைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறது. மண் காய்ந்திருக்கிறது. உழவோட்டிக் கடலையை விதைத்து விட்டு நுண்ணூட்டச் சத்து மணலைக் கலந்து தூவ வேண்டும். ஆட்கள், அப்பாவும், கன்னியப்பனும், இவளும் சாந்தியும்தாம்.

ஆனால், கடலை விதைத்த கையுடன், கால்காணி கொல்லை மேட்டில் நெல் எப்படிப் பயிரிடப் போகிறாள்?

பட்டாளக்காரர் நாற்றங்கால் உழவு ஓட்டி நிலம் தயார் பண்ணுகிறாரே?

ஒரு எட்டு நூறு – ஆயிரம் எப்படியானும் திரட்டி, பயிர் வைக்க வேண்டும். வண்டி சென்ற பிறகு பஸ் நிறுத்தத்தில் வந்து நிற்கிறாள். மோட்டார் போட்டு, கரெண்ட்டுக்கு அலைந்து கொண்டிருக்கிறார்.

அவர் பட்டாளக்காரர். விவரம் அறிந்தவர். எங்கே யாரைப் பார்த்துக் காரியம் சாதிக்க வேண்டும் என்று ஊக்கமாகச் செயல் படுகிறார். கடைசியாக ரங்கனிடம் கேட்டுப் பார்க்க வேண்டும்.

அவள் அண்ணன் விடை பெற்ற போது வீட்டில் இல்லை. வீட்டில் இப்போது பொருந்தி அவள் வேலை செய்வதில்லை. வெளியே செல்லவும் கடன் ஏற்பாடு பண்ணிப் பயிர் வைக்க முயற்சி செய்வதுமே நேரத்தைத் தின்று விடுகிறது. அம்மா இடை இடையே ஊசியாகக் குத்துவாள். உரைப்பதில்லை.

பஸ் கஜேந்திர விலாஸ் ஒட்டல் முன்பு நிற்கிறது. ஓரெட்டுத்தான் சைக்கிள் கடை. கசகசவென்று புழுதி குறையாத கூட்டம். பிற்பகல் மூன்று மணி இருக்கும்.

யாரோ ஒரு தாடிக்காரருடன் அவன் பேசிக் கொண்டிருக்கிறான். சிவலிங்கம் தான் பங்க்சர் ஒட்டுகிறான். இவளைப் பார்த்து விடுகிறான். “மொதலாளி, அம்மா வந்திருக்கிறாங்க!” என்று எழுந்து செல்கிறான். சிவலிங்கத்துக்கு முன் வெகு நாட்களுக்கு சோமயிஜிதான் இங்கே இருந்தான். நெளிவு சுளிவு வியாபாரம் கற்றான். புதிய சைக்கிள்கள் தருவித்து விற்பது, பழைய சரக்கு வாணிபம் எல்லாம் அவன் இருந்த போது செழிப்பாக இருந்தது. அவன் பத்துப் படித்தவன். அம்பத்துரில் எங்கோ கம்பெனியில் மாசம் மூவாயிரம் சம்பாதிக்கிறானாம். கல்யாணம் பண்ணிக் கொண்டு விட்டான். அந்தப் பெண் பள்ளியில் டீச்சராக இருக்கிறாளாம். பத்திரிகை வைக்க வந்தான். அவன் போகவில்லை. சிவலிங்கம் ஒரு வகையில் உறவுக்காரப் பையன். தொட்டுத் தொடாமல்… நீலவேணிக்கு அண்ணன் பிள்ளை உறவு. எட்டாவது ஃபெயில். இங்கே வேலைக்கிருக்கிறான். ரங்கனுடன் பேசும் ஆள் தாடி வைத்திருக்கிறான். பெரிய பொட்டு, மல் ஜிப்பா, தங்கப்பட்டைக் கடிகாரம், மோதிரம்…

“யாரப்பாஅது?” என்று மெல்லிய குரலில் கேட்கிறாள்.

“அவுருதாம் புரோக்கர் பன்னீரு.”

“முதலாளிக்கிட்டப் போயி, ஒரு நிமிசம் வந்திட்டுப் போகச் சொல்லு…”

நிற்கிறாள். அவன் ஏதோ சொல்லியனுப்பபுகிறானே ஒழிய வேண்டுமென்றே திரும்பிப் பார்க்கவில்லை.

சீ! இப்படி ஒரு அவமானமா?

இந்த ஆளிடம் என்ன கேட்க?

விடுவிடென்று வீட்டுக்கு வருகிறாள். முன்பே வண்டியில் இடுபொருட்கள், விதை மூட்டைகள் வந்திருக்கின்றன. வாசல் நடைத்திண்ணையில் அடுக்கியிருக்கிறான்.

செவந்தி உள்ளே சென்று பையில் உள்ள ரசீது, பத்திரங்களைப் பெட்டியில் வைத்துப்பூட்டுகிறாள்.

கிணற்றடியில் சென்று, தண்ணிரை இறைத்து ஊற்றிக் கொண்டு குளிக்கிறாள். சேலையைச் சுற்றிக் கொண்டு வருகையில், அப்பனும் மாப்பிள்ளையும் சாப்பிட உட்கார்ந்திருக்கிறார்கள்.

“சுடுதெண்ணி காச்சி வையி!” என்று சொல்கிறார் அப்பா.

சோறு ஆறி இருக்கிறது.

செவந்திதான் சோற்றை வைத்து, சட்டியில் இருந்த காரக் குழம்பை ஏனத்தில் ஊற்றி எடுத்து வருகிறாள்.

“அப்பளப்பூ வறுக்கலாம்னு பார்த்தே. எண்ணெயில்ல…” என்று அம்மா பின்பாட்டுப் பாடுகிறாள்.

“வெறும் சோத்த எப்படித்தின்ன? ஒரு கீரை, அவரை ஒரு எழவும் இல்ல! வரவர வூட்டுல ஏன் வாரோமின்னிருக்கு” என்று கணவன் கோபிக்கிறான்.

“அவரயில பூச்சி வுழுந்தடிச்சி. அதத்தா நாலு குழம்புல போட்ட. பொறியலுக்குப் பத்தாது. அதுல மாடு வாய் வச்சிடிச்சி. பத்தாத்ததுக்கு சோப்புத் தண்ணியெல்லாம் ஊத்துறீங்க…?” என்று அம்மா சொல்கிறாள்.

“ஆமா, நா சோப்புத் தண்ணிய ஊத்துர. மாட்டே அவத்து வுட்டே. ஏ, நெதியும் மெயின் ரோடுலந்து வராரு. முட்டக் கோசு, தக்காளி, உருளைக்கிழங்கு வாங்கியாரது! நீங்க வாங்கி வந்து நா ஆக்கிப் போடுறது தட்டுக் கெட்டுப் போச்சி!”

“தா, செவுந்தி அநாசியமா என்னிய வம்புக்கிழுக்காத? உங்கண்ணெ ஈரலு, தொடன்னு வாங்கியாந்தானே? ஆக்கிப் போட்டுக் கழிச்சுட்ட? உனுக்குக் கண்டவங்க கூட ஊர் சுத்தறதும் பேசுறதும், புருச சரியில்லன்னு சொல்லுறதும் சரியாப் போயிடுது…”

“ந்தாங்க! நீங்க மச்சான் ஒறவு புதுசுன்னா வச்சிக்குங்க! மச்சானுக்காகப் புதுசா அதெல்லாமும் சாப்புடக் கத்துட்டிருக்கிறீங்கன்னு நான் கண்டனா?” என்று நொடிக்கிறாள்.

“அட ஏம்பா, இப்படிச் சின்ன புள்ளகளப் போல சண்ட போடுறீங்க? கட்டிக் குடுக்கற வயசில பொண்ணு நிக்கிது. ஒருத்திர ஒருத்தர் அனுசரிச்சிப் போங்கப்பா. செவந்தி சொல்றதும் நாயந்தா. அது என்ன சொல்லுது? இப்ப மூணு மூட்ட எடுக்கற எடத்துல ஒம்பது மூட்ட எடுத்தமே, இது போலப் பயிரு செய்யணும்னு ஆசப்படுது. நாயந்தான? நீ கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமில்ல?”

“மாமா, அது மட்டும் பேசாதீங்க! இந்த வெவசாயம்லாம் சூது. நெல்லா வெளஞ்சிருக்கும் திடீர்னு மழை கொட்டி நட்டமாப்பூடும். போனவருசம் முத்து நாயக்கர் பண்ணையில, பத்தேக்கரும் மழ பெஞ்சி அறுத்துக்கறதுக்கு முந்தி ஊறி… பல்லு மொளச்சிப் பாழாப் போச்சி. மறுபடி மண்ணச் சரியாக்க அம்பதாயிரம் செலவு பண்ணாரு. நா ஏற்கனவே கடன் வாங்கி, வித்து வே.பாரம் பண்ணுற. நெலத்தில இவங்கள நம்பிக் கடன் வாங்க சம்மதிக்க மாட்ட? ஆளவுடுங்க!” அத்துடன் நிற்கவில்லை.

“பேச்சுக்குப் பேச்சு, இது இந்த வூட்டில நா எதுமே செய்யில போலயும், இவதா வேல செய்யறா போலும் பேசறது சரியில்லை. எங்கேந்தோ வார சில்வானமெல்லாம் அலட்சியமாகப் பாக்குதுங்க. காலம, எதிர்த்த எலக்ட்ரிக் சாப்புல ஒரு மீசைக்காரர் வந்து நின்னாப்பல. அவர் மெனக்கெட்டு வந்து, நீங்கதா, செவுந்தியம்மா புருசனா…? என்னு கேட்டாரு. எனக்கு எப்படியோ இருந்திச்சீ”

‘ஒ இதுதானா விசயம்?’ என்று மனசுக்குள் சிரித்துக் கொள்கிறாள்.

‘ரங்கா சைக்கிள் மார்ட்’ வாசலில் வந்து நின்று ‘செவந்தியம்மா புருசரா’ என்று கேட்க மீசைக்காரருக்கு என்ன தைரியம்?

“ஆமா, நானுந்தா கேக்குற. அது பயிர் பண்ண ஆசப்படுது நாயந்தான? அவவ பொஞ்சாதி பேச்சக் கேட்டு ஆடுறா. இவன் ஸ்கூல், டியூசன்னு மாசம் அஞ்சாயிரம், ஆறாயிரம் சம்பாதிக்கிறான்னு கேள்வி. வூடு கட்டியாச்சி. மாமியா வூட்டில அந்தஸ்துகாரங்க. துபாயி, அமெரிக்கான்னு மச்சாங்க இருக்காங்கன்னு சொல்லுறா. ஏ, நாம வந்து தங்கணுமின்னா வசதி செய்யணும்னா நாம பூமியை வித்துச் செய்யணுமா? தென்ன மரத்தோட வச்ச பூமி நம்ம கைக்கு வாரதக்கில்ல. இவம் படிப்பு, கலியாணம்… பத்து சவரன் தாலிச் சங்கிலி, சீலை எல்லாம் இவனா வாங்கினா? நம்ம கண்ணுமின்ன, நம்ம புள்ள ஒண்ணுமில்லாம நிக்கிது. இப்ப இன்னும் மூணு நாலு வருசம் போனா, அந்த புள்ளக்கி ஒரு கலியாணம்காச்சி செய்யத் தாவல? அது மனுசியானதுக்கு மாமங்காரன் என்ன செஞ்சா? கவுரதியா, ரெண்டு சவரன், ஒரு வளவி பண்ணிப் போட்டானா? பூன்னு ஒரு மோதிரம். அதுல பார்வையா ஒரு கல்லு கூட இல்ல. போலிப்பட்டுல ஒரு பாவாடை. ஏ, ஒரு நல்ல சீலைதா எடுத்தா என்ன? நா.அப்பவே தெரிஞ்சிட்டே அவனால நமக்குப் பிரோசனம் இல்ல. கடசி காலத்துல பொண்ணுதா நமக்குத் கஞ்சியூத்துவா, புள்ள புள்ளங்கறதெல்லாம் சும்மான்னு”

ஓடிச் சென்று அப்பனைத் தழுவிக் கொள்ள வேண்டும் போல் இருக்கிறது. அப்பனுக்கே உணர்ச்சி வசப்பட்டதில் தொண்டை கம்முகிறது.

அவள் அவசரமாக அடுப்பில் சூடு பண்ணிய வெந்நீரைக் கொண்டு வருகிறாள்.

“இந்தாங்கப்பா, சுடுதண்ணி…”

அம்மாவுக்கு இது ரசிக்குமா?

“எதுக்கு இப்ப அதும் இதும் பேசணும்? இருக்கிறது அது ஒண்ணு. ஆயிரம் சொன்னாலும் தலை சாஞ்சா அவந்தா வரணும். அத்தப் பகச்சிக்க முடியுமா?” என்று முணுமுணுக்கிறாள்.

சாப்பாடு முடிந்து சைக்கிளில் ஏறிக் கொண்டு அவன் போகிறான். செவந்தியும் சாப்பிட்டு முடித்துவிட்டுச் சாமான்களைக் கழுவி வைக்கிறாள்.

கடலை வித்து, ஜி.ஆர். ஐ. என்று கொடுத்திருக்கிறார்கள். இதை இரவு திரம் மருந்து கலந்து குலுக்கி வைக்கவேண்டும். ஊடு பயிர் என்று பயிறு விதை வாங்கி இருக்கிறாள். இதற்கு ரைசோபியம் என்ற நுண்ணூட்டச்சத்து சேர்க்க வேண்டும்… சோறு வடித்து ஆற வைத்த கஞ்சியில் அந்தப் பொட்டலத்தைக் கரைக்கிறாள். அதில் விதைகளைப் போட்டுக் கலக்கி வைக்கிறாள். அந்த மேடையையே சுத்தமாக துடைத்து, விதைகளை உலர்த்துகிறாள். பொழுது நன்றாக இறங்கி விட்டது. சரோவும் சரவணனும் பள்ளிக்கூடத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் அப்பா ஓட்டலில் இருந்து ஏதோ காரசாமான் பொட்டலமும் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

செவந்தி ஒர் உறுதியுடன் வீட்டிலிருந்து கிளம்புகிறாள்.

குறுக்கு வழியாகச்செல்லியம்மன் கோயில் பக்கம் சாலை கடந்து இவர்கள் பூமிப் பக்கம் வருகிறாள்.

கிணற்றுப் பக்கம் பளிச்சென்று விளக்கு எரிகிறது.

பம்ப் செட் ஓடித் தண்ணிர் கொட்டுகிறது… பெரியவர், அவருடைய மகள் போலிருக்கிறது. அவளும் இருக்கிறாள். சடையன் இருக்கிறான். நல்ல நேரம். வீடு வரை போக வேண்டியில்லை. பம்ப் ரூமொன்று கட்டியிருக்கிறார்கள். எவ்வளவு விரைவில் வேலை நடக்கிறது?

“அடேடே… செவந்திம்மா! வாங்க! உங்கள நினைச்சிட்டேன். இப்பதா தண்ணி கொட்டுது பாருங்க! நூறு வயசு உங்களுக்கு. போனது போக…”

“அவ்வளவெல்லாம் வாணாங்க! லோலுப்பட வேணும்…”

“அதுதான் சொகம் செவுந்தியம்மா! இதுதா எம் மருமக, மக எல்லாம் லச்சுமி… அதா என்தங்கச்சி சொர்ணம்மா…”

ஒரு குழந்தையைக் கையில் பிடித்துக் கொண்டு நிற்கிறாள். “வணக்கம்மா…”

“இந்த நிலத்துச் சொந்தக்காரங்க… இவங்க சொல்லித்தா மண் பரிசோதனைக்கு அனுப்பின. இன்னைக்குக் கேட்டு வாங்கிட்டே. ஏரி வண்டல். சான எரு போடுங்க போதும்னாரு. நீங்க உங்க ரிசல்ட் வாங்கிட்டீங்களா?”

“இனித்தா வாங்கணும் ஐயா…” எப்படிக் கேட்பது என்று தெரியவில்லை. நெஞ்சில் வார்த்தைகள் சிக்கிக் கொள்கின்றன.

“நா உங்களப் பாக்கத்தா வந்தேங்க. நீங்க காலம இவங்க கடைப்பக்கம் போயிருந்தீங்களாம், சொன்னாங்க…”

சிரித்துக் கொண்டே மீசையைத் திருகிக் கொள்கிறார். “எம் பேரு ராமையா, உங்க பூமிக்குப் பகத்துல கிணறு தோண்டிப் பயிர் பண்ணப் போறேன். செவுந்தியம்மா சொன்னாங்க ‘எங்க வூட்டுக்காரர்தா சைகிள் மார்ட் வச்சிருக்கிறார்னு’ ன்னு. நானே சிநேகம் பண்ணிட்டே. சரிதானே, செவுந்தியம்மா?”

“அதான் சொன்னாங்க…”

“இதா வீடு இருக்கு வாங்க பேசிக்கலாம். லச்சுமி, புள்ளையக் கூட்டிட்டுப் போங்க. பனி இருக்கு. இன்னும் போகலாம்…” அவர்களைப் போகச் சொல்கிறார். பம்ப்பை நிறுத்தி அறைக் கதவைப் பூட்டுகிறார். பிறகு இருவரும் நடக்கிறார்கள்.

“ஐயா, உங்ககிட்ட… எப்படி கேக்கிறதுன்னு தெரியல. ஆனா என்னமோ ஒண்ணு கேக்கலாம்னு தயிரியம் சொல்லுது. பாங்க்காரரு கடன் குடுக்க மாட்டே. வூட்டுக்காரரு கையெழுத்துப் போடணுங்கறாரு.. ஆனா எனக்குள்ள ஒரு காக்கானினாலும் இங்கே போடணும்ன்னு இருக்கு. நீங்க ஒரு உதவி மட்டும் செஞ்சா…”

“சொல்லுங்க செவுந்திம்மா…”

“எனக்கு ஒராயிரம் ரூபா கடனா குடுத்து உதவி செய்யனும். நா நிச்சியமா உழச்சி, முதலெடுத்து உங்கக் கடன எம்புட்டு வட்டி போடுறீங்களோ, அப்படிக் குடுத்திடறேன்…”

வானில் இருள்பரவி நட்சத்திரங்கள் பூத்துவிட்டன.

அவளுக்கு அவள் குரல் அந்நியமாகத் தெரிகிறது.

“செவுந்தியம்மா, வெள்ளிக் கிழம நா வார, உங்க வூட்டுக்கு. வூடு எங்க சொன்னிங்க?”

“கிழத் தெரு கோடிவூடு. அடுத்து ஒரு குட்டிச் சுவரு. எட்டினாப்புல சாவடி, இருக்கும்…”

“சரி. இப்ப வூட்டுக்கு வந்து ஒருவா காபி சாப்பிட்டுப் போங்க.”

“இருட்டிப் போச்சையா…”

“பரவாயில்ல ரோட்டுவர கொண்டாந்து வுடுறே!”

அவர்கள் நடக்கிறார்கள்.

அத்தியாயம்-15

“அப்பா, நீங்க வந்து கைவச்சதே பெரிய சந்தோசம். பாருங்க வேத்து வுடுது. போயி உக்காந்துக்குங்க. வேல்ச்சாமி, ஏரப் புடியப்பா…” என்று அப்பா கையை விடுவித்துக் கரைக்குக் கூட்டிச் செல்கிறாள் செவந்தி. புடவைத் தலைப்பால் அவர் நெற்றியைத் துடைத்து விசிறுகிறாள். செம்பில் இருந்து கஞ்சித் தண்ணிரை எடுத்துக் கொடுக்கிறாள்.

கடலை விதைப்பு நடக்கிறது. அப்பா தானும் ஓர் ஏர் பூட்டி உழுவேன் என்று பிடிவாதமாக வந்தது அவளுக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், முழு பூமியிலும் விதைப்பு. கன்னியப்பன் ஒர் ஏர்; வேல்ச்சாமி ஓர் ஏர். பூமி உள்ளே ஈரமாக, விதைக்கப் பதமாக இருக்கிறது. முன்பே கன்னியப்பன் ஒருவனே நான்கைந்து நாட்களாய் விதை நிலத்தைப் பதமாக்கி இருக்கிறான். உழுமுனை நிலத்தில் பதிந்து செல்கையில் திரம் மருந்து போட்டுக் குலுக்கி வைத்திருந்த கடலை வித்துக்களை ஒன்றொன்றாகச் செவந்தி விடுகிறாள். பின்னால் அடுத்த ஏர் அந்தக் கடலை மீதும் மண்ணைத் தள்ளி மூடுகிறது. எண்ணி ஐந்து வரிசைக்கு ஒன்றாக, ரைஸோபியம் போட்டு ஊட்டமேற்றிய பயிறு வித்தையும் விதைக்கிறாள்.

முழுதும் விதைத்து முடிய மாலை வரையாகிறது. இடையில் பசியாற ஒர் அரை மணி நேரம் தான் ஒதுக்கல்.

அப்பன் நிறைந்த மனசுடன் பூவரச மரத்தடியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறார். பணத்தை எண்ணிப் பையில் வைத்து அவரிடம் தான் கொடுத்திருக்கிறாள்.

நட்டு முடிந்ததும் தயாராக வைத்திருந்த பாண்டு சட்டியில் மணலையும் எம். என். மிக்ஸ்சரையும் கலந்து நெடுகவும் துரவுகிறாள்.

கரையேறி மாடுகளைத் தட்டிக் கொடுக்கிறார்கள். வேல்ச்சாமி ஏர் மாடு இரண்டும் அவனே கொண்டு வந்தான். அவனிடம் எண்பது ரூபாய் கூலியை அப்பா எண்ணிக் கொடுக்கிறார்.

“கன்னிப்பா… இந்தா!” கத்தையாக நோட்டுக்களைக் கொடுக்கிறார்.

“இருக்கட்டும் மாமா, வூட்டுல மாட்டை ஏரைக் கொண்டு கட்டிப்போட்டு தண்ணி ஊத்திட்டு வந்து வாங்கிக்கறேன்!”

ஒரு பெரிய மலையேறி நிற்பது போல் அழகாக உழுமுனை பதிந்து நடவு முடித்த நிலத்தைச் செவந்தி பார்க்கிறாள்.

இதற்கு முன் மணிலாப் பயிர் அவள் செய்ததில்லை. நெல் நாற்று நடவு, களை பறிப்பு, அண்டை வெட்டுதல் செய்திருக்கிறாள். இப்படிப் புழுதி உழவு செய்து ஈரமாக மட்டும் வைத்து நடும் சூட்சுமம் இப்போதுதான் கண்டிருக்கிறாள். கொல்லை மூட்டில் சின்னம்மா கடலைப் பயிர் செய்து வீட்டுக்கு வந்து எடுத்து வந்ததும், உருண்டை பிடித்ததும் வேக வைத்துத் தின்றதும் நினைவுகள்தாம்.

இப்போது இங்கே தண்ணிர் காணும் பூமியில் வேர்க்கடலை பயிரிட்டிருக்கிறாள்… ஒண்ணரை ஏக்கருக்கு மேல்…

கர்ப்பூரம் கொளுத்திக் கும்பிட்டு விட்டு இருட்டுக் கவ்வு முன் வீடு திரும்புகிறாள்.

மாடுகளைக் கால்வாயில் கழுவிவிட்டுத் தானும் சுத்தமானவளாக ஏர் சுமந்தபடி பின்னே வரும் கன்னியப்பனைப் பார்க்கிறாள்.

அப்பா இவனுக்கு அறுபது ரூபாய்தான் கொடுப்பாரோ? ஏனெனில் ஏரும் மாடும் இந்த வீட்டுக்குரியவை தானே?

“இரு… வாறேன்…”

அப்பன் முற்றத்துக் குறட்டில் புதிய ரேடியோவைப் பார்த்து மகிழ்கிறார். குழந்தைகளும், அவர்கள் தந்தையும் ஓட்டல் பகோடாவும் பஜ்ஜியும் தின்று கொண்டிருக்கிறார் கள். சினிமாப்பாட்டு கேசட்டில் ஒடிக் கொண்டிருக்கிறது.

“அப்பா… கன்னிப்பனுக்கு ரூபா கொடுங்க…”

அப்பா தயாராக வேட்டி மடிப்பில் வைத்திருக்கிறார். அதே கற்றையைக் கொடுக்கிறார்.

செவந்தி எண்ணுகிறாள்.

அறுபது ரூபாய்…

“அப்பா வேல்ச்சாமிக்கு எட்டுக் குடுதீங்க. இன்னொரு இருபது குடுங்க.”

அப்பன் நிமிர்ந்து பார்க்கிறார்.

பிறகு பதில் சொல்லாமல் உள்ளே எழுந்து செல்கிறார். பெட்டியைத் திறந்து இன்னும் இருபது ரூபாயைக் கொண்டு வருகிறார்.

பார்த்துக் கொண்டிருக்கும் அம்மாவுக்கு வாய் துடிதுடிப்பதைச் செவந்தி ரசிக்கிறாள்.

கன்னியப்பன் முற்றத்தில் நின்று “அஞ்சலி… அஞ்சலி” பாட்டை மகிழ்ந்து ரசிக்கிறான்.

“அஞ்சலி சினிமாவுல வருது…”

“நீ அந்த சினிமா பாத்தியா?” என்று சரோ கேட்கிறாள்.

“இல்ல. அது காஞ்சிவரம் கொட்டாயில ஓடிச்சி….”

“இதபாரு கன்னிப்பா, பேசாம ஒரு கலர் டி.வி. டெக்கு வாங்கி வச்சிக்க. படம் ஒரு நாளக்கி மூணு வாடகைக்கு எடுக்கலாம். காஞ்சிவரத்துக்குப் போகவேணாம். வேலூருக்குப் போக வேணாம். வூட்டிலேந்து படுத்திட்டே பார்க்கலாம்..”

கன்னியப்பன் வெள்ளையாகச் சிரிக்கிறான். “நீ வாங்கி வையி, சரோ நான் நெதியும் பாக்கறேன்.”

பாட்டிக்குக் கொள்ளாமல் கோபம் வருகிறது.

“த… வேல முடிஞ்சிச்சா, கூலிய அங்கேயே வாங்கிட்டுப் போக வேண்டியதுதானே? உள்ளாற வந்து, என்ன சிரிப்பு, பேச்சு? ஏ. சரோ, உள்ள உன் ரூம்புக்குப் போ கூலிக்காரங் கிட்ட என்னவெ கண்டப் பேச்சு?”

கன்னியப்பன் முகம் ஊசி குத்தினாற் போல் சுருங்கி விடுகிறது. அவன் மேற் கொண்டு இருபது ரூபாயை வாங்கிக் கொள்ளாமலே போகிறான்.

கையில் அந்தப் பணத்துடன் “கன்னிப்பா… கன்னிப்பா…” என்று ஓடுகிறாள். இல்லை. அவன் பரவி வரும் இருளில் மறைந்து போகிறான்.

இவள் கோபம், சரோவின் மீது திரும்புகிறது. கோபம் புருசனின் மீதுதான். இப்போது, ஆயிரத்தைந்நூறு கொடுத்து இது வாங்க வேண்டியது அவசியமா? பயிர் வைக்க அவள் பிறர் கையை எதிர்ப்பார்க்கிறாள்.

“பரிட்சைக்குப் படிக்க இது அவசியமில்ல? நா இங்க ஒரு வா கஞ்சி குடிக்க கணக்குப் பாத்துக்கிட்டு லோலுப்படுற. நெதியும் ஓட்டல் சாமான்… பாட்டு.. சமீன்தார் வூடு கணக்கா… இது இப்பத் தேவையா? பூமில போட்டா சோறு குடுக்கும். இந்தப் பாட்டக் கேட்டுப் பரிட்சை எழுதி, பாஸ் பண்ணி பொம்புளப் புள்ள சம்பாதிச்சிக் குடுக்கப் போவுது! நாளெல்லாம் அந்தப்புள்ள ஒழச்சிருக்கு. ஆனா இருபது ரூபா கணக்கு பாக்குற…” கண்ணில் கசியும் நீரைத் துடைத்துக் கொண்டு ஆற்றாமையை விழுங்குகிறாள்.

“நீதா இப்ப கச்சி கட்டுற செவந்தி. ஏ நீயுந்தா கேளேன்? இது ஸோனி… ஆயிரத்து நூறுக்கு வந்திச்சி. ரெண்டு மாசமாத் தாரேன்னு வாங்கிட்டு வந்தே. மத்தவங்க சந்தோசப்படுறதே பாத்தா உனக்கு ஏம் பொறுக்கல?”

அவள் பேசவில்லை. பட்டாளத்துக்காரர் வெள்ளிக் கிழமை வருவதாகச் சொல்லி இருக்கிறார். அவள் செய்து காட்ட வேண்டும்.

வெள்ளிக்கிழமை காலையில், வீடு மெழுகுகிறாள். நிலைப்படிக்கு மஞ்சள் குங்குமம் வைக்கும்போது, கணைப்பு குரல் கேட்கிறது.

“நீங்க உக்காருங்கையா, செவந்திம்மா வேர்க்கடல போட்டிருக்காங்க. பாத்தேன். நாமும் பயிர் பண்ணணும்னு தா வந்திருக்கிற. எனக்குப் பழக்கம் இல்ல. பட்டாளத்திலேந்து வந்த பெறகு வடக்க ஆஸ்பத்தரி ஒண்ணுல செக்யூரிட்டியா வேல பாத்தேன். சம்சாரம் சீக்காளி. ஒரு மகளக் கட்டிக் குடுத்து அது பங்களூரில் இருக்கு. சம்சாரம் போய்ச் சேர்ந்திச்சி. ஊரோடு வருவம்னு வந்திட்ட…”

அவள் கை வேலையை விட்டு விட்டு மனம் துள்ள வாயிலுக்கு வருகிறாள்.

“வாங்கையா. வணக்கம். வாங்கையா, உள்ளாற வாங்க திண்ணையில் உக்காந்துட்டீங்க…” என்று அகமும் முகமும் பூப்பூவாய் சொரிய வரவேற்கிறாள்.

“ம்… இருக்கட்டும்மா. இதுதா சவுரியமா இருக்கு… இவங்க ஊக்கமாப் பாடு படுறதப் பாக்கவே சந்தோசமா இருக்கையா… நான் படையில் இருந்தவன். எங்கோ பாலைவனப் பிரதேசத்தில் உள் நாட்டுச் சண்டைகளைச் சமாளித்து நிறுத்தும் அமைதிப் படைக்குப் போனவன். சண்டையெல்லாம் ஏன் வருது? சாப்பாடு, தண்ணி, காத்து, மானம் மறைக்கத் துணி, இடம் இதெல்லாம் எல்லோருக்கும் சரியாக இல்ல. ஒருத்தன மத்தவன் வஞ்சிக்கிறான். சுரண்டுறான். சனங்களுக்கு ஒருத்தர் மேல ஒருத்தர் நம்பிக்கையில்லை. பொம்பளங்க, கர்ப்பிணிங்க, பச்சபுள்ளங்களுக்குக் குடுக்கப்பட்ட தருமப் பால் ரொட்டியக் கொள்ளயடிச்சு விக்கிற மகா பாவம் பாத்தேன்… மனசு தவிச்சி என்ன புண்ணியம்? ஒரே மகன். தங்கச்சி மகளுக்குக் கட்டிக் கொடுத்தேன். நமக்குத்தா ரொம்ப படிக்க வசதியில்ல. பையன் நல்லா பி.ஏ., எம்.ஏ., ன்னு படிக்கணும்னு ஆசப்பட்டேன். அவன் படிக்கிறத வுட, அரசியல் அக்கப் போர், சினிமா நடிகர் விசிறிகள் சங்கம்னு தலையக் குடுத்திட்டு… பாவிப் பய, தலைவருக்காக தீக்குளிச்சிச் செத்தான். கலியாணம் கட்டி வேற வச்சேன். அந்தப் பொண்ணு பாவத்தைக் கொட்டிக்கிட்டான்…” தலையைக் குனிந்து கொள்கிறார்.

இவளுக்கு நெஞ்சு சில்லிட்டாற் போல் இருக்கிறது.

சிறிது நேரம் ஒலியே சிலும்பவில்லை.

லச்சுமி… பச்சை பால் மணம் மாறாத முகம். அதற்கு ஒரு குழந்தை. அதற்குள்…

“அரசியல் தலைவருக்காக, இவனுவ ஏ நெருப்புக் குளிக்கிறானுவ… பயித்தியம்தான் புடிச்சிருச்சி. அவனுவ ஓட்டு வாங்க என்னமோ புரட்டு பித்தலாட்டம் பேசுறானுவ. இந்த இளவட்டம் எல்லாம் அந்த மயக்குல போயி விழுந்துடுதுங்க. அதும் இந்த சினிமாதா ஊரக் கெடுக்குதுங்க. ஆம்புள், பொம்புள எல்லாம் போயி, வயித்துக்குச் சோறு இருக்கோ இல்லியோ போயி வுழுவுதுங்க…”

“எனக்கு இந்தப் பயிர்த் தொழில வுட மேன்மையானது ஒண்ணில்லன்னு நிச்சயமாருக்கு. எங்கப்பாரு காலத்திலோ, பாட்டன் காலத்திலோ, இந்தப் பூமி சர்க்கார் குடுத்திருந்திச்சாம். ஆனா, மேச்சாதிக்காரங்க, குடிமகன் வெள்ளாம பண்ணக் கூடாதுன்னு தடுத்தாங்களாம். நான் அந்தக் காலத்துல, குடியாத்தத்துல ஸ்கூல் படிச்சேன். பட்டாளத்துக்குப் போன. இந்தப் பூமிய எழுதிவுட்டு, மீட்டுக் கிட்டேன். எக்ஸ் சர்வீஸ் மேன்னு ஒரு பக்கம்… நாலு ஏகரா… சம்சாரம் சீக்குக்காரி. அதுக்காக மங்களுரில் இருந்திட்டிருந்தேன். அவ போன பெறகு, வந்திட்டே. செவந்தியம்மாளப் பாத்ததும், இவங்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. இவங்களுக்கு மட்டுமில்ல, சபிக்கப்பட்டதா நெனச்சிட்டிருக்கமே, பொம்புளப் புள்ளங்களுக்கே நல்ல காலம்னு தோணிச்சி…”

மனம் குதிபோட காபித் தூளை ஏனத்தில் போட்டுப் பொங்கு நீரை ஊற்றுகிறாள். இதற்குள் வெளியே பல்குச்சியுடன் சென்றிருந்த புருசன் கிணற்றடியில் முகம் கழுவுவது புரிகிறது. பளபளவென்று தேய்த்த தவலைச் செம்பில் காபியை ஊற்றுகிறாள். இரண்டு தம்ளர்களுடன் வருகிறாள்.

“குடு. நான் கொண்டுட்டுப் போறே…”

முகத்தைத்துடைத்துக் கொள்கிறான். சீப்பால் முடியைத் தள்ளிக் கொள்கிறான். தேங்காய்ப் பூத்துவாலையைப் போட்டுக் கொண்டு காபியுடன் செல்கிறான்.

உள்ளுக்குள் இருக்கும் சிறுமை உணர்வை, மரியாதைப் பட்டவர் முன்னிலையில் காட்டமாட்டான். சாந்தி புருசன் முன் மிக மரியாதையாக நடப்பான். ஆனால் அவர்கள் அகன்ற பின் குத்தலாக ஏதேனும் மொழிவான். அவனுடைய சிறுமை உணர்வுகள் ஆழத்தில் பதிந்தவை. அவை அவளைக் கண்டதும் ஏதோ ஓர் உருவில் வெடிக்கும்.

“நீங்கல்லாம் சாப்பிடுங்க. நான் காபியே குடிக்கிறதில்ல. என் தங்கச்சி குடிக்கிது. தங்கச்சிப் புள்ளயும் குடிக்கிது. இல்லாட்டி தல நோவுதுங்க. வடக்கேல்லாம் போறப்ப, தேத்தண்ணி குடிப்பம். மனசு இளகல, மறக்க பீர் குடிப்பம். இங்க எண்ணத்துக்கு? மனசு தெளிஞ்சி உறுதியாயிடிச்சி. பொய்யும் பித்தலாட்டமுமா இருக்கிற உலகத்துல வாழணும் பாருங்க.”

“கேணி எடுக்கறப்ப, சில்லும் களியும் கரம்பையும் எல்லாம் வந்திச்சி. பாறை இல்ல. தண்ணி அந்தச் சில்லிங்களா வர்றப்ப குபுகுபுன்னு வந்திச்சி. தெளுவா… இப்ப குழப்பம் இல்ல. காலம எந்திரிச்சி நீராகாரம்தா குடிப்ப. ஆச்சி, எனக்கு அறுபதாகப் போவுது. காலம கழனி வேல, அஞ்சாறு கிலோ மீட்டர் நடை, எல்லாம் நல்லாருக்கு…”

“இருக்கட்டும் நீங்க ஒரு டம்ளர் குடியுங்க. நம்மூட்ல கறந்த பாலு…”

அவர் எடுத்துக் கொள்கிறார்.

புருசன் முன்பு பணம் தருவது பற்றிப் பேசப் போகிறாரோ என்று செவுந்தி அஞ்சுகிறாள்.

ஆனால் அது நடக்கவில்லை.

அவன் சட்டையைப் போட்டுக் கொண்டு, “ஐயா, கொஞ்சம் வேலை இருக்கு. நீங்க உட்கார்ந்து பேசிட்டிருங்க…” என்று நடையில் உள்ள சைக்கிளை உருட்டிக் கொண்டு கிளம்புகிறான்.

அவன் சென்ற பிறகு அவர் செவந்தியைக் கூப்பிடுகிறார்.

ஒரு கவரை தன் சட்டைப் பையில் இருந்து எடுத்து நீட்டுகிறார்.

“செவந்திம்மா, இதுல ஆயிரத்தைந்நூறு இருக்கு. நீங்க எவ்வளவு பயிர் வைக்க முடியுமோ, அவ்வளவுக்கு வையுங்க.. பிடியுங்க…”

அவளுக்குக் கண்கள் நிறைகின்றன.

“ஐயா, இதுக்கு ஒரு பத்திரம் எழுதி வாங்கிக்குங்க. அப்பா நீங்க நம்ம ராமசாமிக்கிட்டச் சொல்லி ஒரு பத்திரம் எழுதிட்டு வாங்க…”

“எதுக்கம்மா? எனக்கு உம் பேரில நம்பிக்கை இருக்கு. நீ என்னை நம்பு. நீ பயிர் வைக்கணும். நல்லா வரணும். நாமெல்லாரும் சிநேகமா இருக்கணும். கஷ்ட நஷ்டம் பகிர்ந்துக்கணும்… இதுல பணம் குறுக்க வரக்கூடாது. அது ஒரு கருவி. ஒரு சாதனம். அது வாழ்க்கை இல்லம்மா… நா வரட்டுமா?”

அவர் மீசையை முறுக்கிக் கொண்டு எழுந்திருக்கிறார்.

அப்பனும் எழுந்திருக்கிறார்.

செவந்தி கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

குரலே எழும்பவில்லை.

– தொடரும்…

– கோடுகளும் கோலங்களும் (சமூக நாவல்), முதற் பதிப்பு: டிசம்பர் 1998, தாகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *