கொலையும் சா(த்)தியம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 12, 2016
பார்வையிட்டோர்: 9,615 
 
 

” சூடான சூடான சுண்டல்.. சுட சுட இருக்கு சார்..”, தனியாக கட்டு மரத்தின் அமர்ந்த என்னிடம் கேட்டான், வேண்டாம் என தலையை அசைத்தேன். அவள் இன்னும் வரவில்லை அவளுக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். கரை ஒதுங்கிய ஒரு செருப்பும், மாலை நாறும்; தூரத்தில் நண்டு மண்ணில் புதைந்து வெளியே வருகையும், அதன் கூர்மையான கால் தடங்கள் ஈர மண்ணில் கோலம் இடாமல் புள்ளி வைத்தார் போல இருக்க; இந்த அலைகளாய் முன் வந்து பின்னே சென்றது என் நினைவுகளின் நுரைகள், அப்பெரிய பெரிய நுரை முட்டையில் எண்ணற்ற முகங்களின் சம்பாக்ஷனைகள்; அவனும் வந்தான் பெரிய நுரையில் பிம்பமாய் .அவன் அவளை விட்டு விலகி இன்றுடன் 4 ஆண்டுகள் ஓடிவிட்டது, இல்லை.. இல்லை.. அவள் அவனை விட்டு சென்று; இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை செய்து கொள்வதிலும் அதீத விருப்பமில்லை, தனிமையின் உக்கிரமான வெயிலில் நிழல் தேடாமல் காய்ந்துக் கொண்டிருக்கும் படாதப் பாடுபட்ட பட்டு போன மரம். சிலரின் அக உலகத்தின் புரிதலையும் காயங்களையும் யாராலும் உணர முடியாது அப்படியே அவனும். அவன் என் நண்பன் மதி. மதியை பற்றி சிந்திக்கும் போது பெரிய வியப்பாகவே இருக்கும், அவனுடைய காதலும் அவ்வாறே ! மதியும் அவளும் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு நிறுவனத்தில் பணி புரிந்தார்கள், அவ்வபோது சந்திக்க நேர்ந்தது.அவளை மதிக்கு மிகவும் பிடித்திருந்தது எதை பற்றியும் யோசிக்காமல் தேநீருக்கு அழைத்தான், அவளுக்கும் அவன் மீது ஓர் ஈர்ப்பு இருக்க தேநீர்க்கு சென்றாள். இரண்டு தேநீர் வாங்கினான், அக்குவளைகளை அவள் எடுத்து வருகையில் அது பெண் பார்க்கும் படலமாக திகழ்ந்தது , இவருவரும் ஓர் இடத்தில் அமர்ந்தனர், அவள் குவளையை எடுத்து அதே சூட்டுடன் உரிந்தாள். மதியை எடுத்து பருக சொன்னாள்.

ஒரு நீண்ட நிசப்தத்திற்கு பிறகு “என்னைய கல்யாணம் பண்ணிக்கிறிய ?? உன்ன காதலிக்க லைசென்ஸ் வேணும் ” என்றான் மதி.

அவள் சிரித்தாள், நிச்சயம் மதி அழைக்கும் போதே தெரிந்திருக்கும் அவனது நோக்கத்தை.

தேநீரை குடித்துக் கொண்டே ” எங்க வீட்ல ஸ்ட்ரிக்ட் ங்க .. முடியாது ” என்றாள்.

நம் ஆள் விடவில்லை, அவன் பேச்சில் வீழ்ந்தாள், அரை மணி நேரத்தில் மார்கழி கச்சேரி நடந்தேறியது.

“டைம் எடுத்து கோங்க அப்பறம் சொல்லுங்க ” என்றான் வழக்கமான ஆணின் பாணியில். அமைதியாக அவள் எழுந்து ” என்னங்க டீ அப்படியே இருக்கு ??? ” என்றாள். அதற்கு “லைப் புல்லா டீ போட்டு தரப் போறீங்க இந்த டீ போன பரவா இல்லைங்க ” என்று கூறி வீர நடை போட்டான்.

அடுத்த நாள் மதி அலுவலகத்திற்கு செல்லவில்லை, அவளும் தேடினாள், அலைபேசியில் அழைத்தாள், அவன் நண்பர்களிடம் விசாரித்தாள், அவன் கிட்டவில்லை, பதைத்தாள். இரண்டு நாட்களுக்கு பிறகு அவனது அலைபேசி தொடர்பு கொள்ள முடிந்தது, அழைத்து ” இதோ பாருங்க நான் நீங்க நினைக்கறாப்ல இல்ல, நான் கீழ் ஜாதி .. உங்க வீட்ல ஏத்துக்க மாட்டங்க .. விற்றுங்க.. ” என்றாள்.

மதியின் பதில் “நான் அப்படி நினைக்குரேன்னு எப்படி முடிவு பண்ண ?? எங்க அப்பா அம்மா ஏத்துக்க மாட்டங்க ன்னு தெரியுமா ??.. எனக்கு முன்னாடியே தெரியும் நீ வேற வகுப்ப சேர்ந்தவ ன்னு அது தெரிஞ்சி தான் கல்யாணத்துக்கே கேட்டேன். கலப்பு திருமணம் மட்டுமே சாதிய வக்கரங்கள ஒழிக்கும், சாதிகள் இல்லையடி பாப்பா ன்னு முண்டாசு மீச சொன்னது எனக்கு இன்னும் கேக்குது ” அவள் மறுமுனையில் அழுதுக் கொண்டிருந்தாள்.

இருவரும் இனிதே காதலித்தனர், மதியின் வீட்டில் பூரண சம்மதம் அவர்கள் சாதியை விட மனிதத்தை நேசிப்பவர்கள் அது மட்டுமில்லாமல் அவர்கள் சென்னை வாசி. அவளோ ஊர் பக்கம் அதுவுமில்லாமல் வீட்டிற்கு கடைசி பெண். அவளின் ஆசையை பூர்த்தி செய்து தானே ஆகா வேண்டும், எங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் பெரும் மகிழ்ச்சி நண்பன் விரும்பிய வாழ்கை அமையப் போகிறது என்று. நாள் போக போக அவளின் வீட்டில் பிடி கொடுத்து பேசவில்லை, இரு வீட்டாரும் கலந்து பேசினர் ஆனால் அவளின் அம்மா ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எப்படியோ நன்றாக முடியும் என எல்லாரும் நினைத்தார்கள். ஒரு நாள் திடீரென பெண் பார்க்க வருகிறார்கள் ஊருக்கு வா என்று அவளின் வீட்டில் இருந்து அழைப்பு வந்தது, அவள் போக மறுத்தாள் இருப்பினும் அவளை அழைத்தார்கள், மதியிடம் பகிர்ந்தாள் இச் செய்தியினை அவன் சலனமில்லாமல் இருந்தான், அவள் மீண்டும் மூச்சை இழுத்து ” ஏங்க .. நான் போய் கரக்ட் ஆஹ் பேசிற போறேன்.. அவன் யாரா இருந்தாலும் செரி.. நான் ஒருத்தர காதலிக்கிறேன் ன்னு சொல்லிடுவேன்”.

மதி ” சரி .. பாத்து பேசு, போயிட்டு வா .. நானே விடறேன்” மனதில் இருக்கும் கலக்கத்தை வெளிக் காட்டாமல் அவளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வழி அனுப்ப சென்றான். அன்று ரயில் தாமதம், 11 மணிக்கு செல்லும் ரயில் 2 மணி அதிகாலையில் சென்றது. அதுவரை மதி அவள் கூடவே இருந்தான். ரயில் சென்றது, அவன் மட்டும் அதே சிமன்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான் ஏதோ மனக் கலக்கத்தால் அங்கயே உறங்கி விட்டான். அடுத்த நாளில் அவள் தான் இவனை அலைபேசி மூலம் எழுப்பி விட்டாள் திட்டவும் செய்தாள்.

6 மணி நேரம் கழித்து , அவள் மீண்டும் அழைத்தாள் “பையன் கலரா இருக்கான், பிஸ்னஸ் பண்ணனுமா .. வெளி நாட்ல வேலையாம்” என்று அடுக்கினாள், மதி அமைதி காத்தான்.

அவள் புரிந்து ” வெறுப்பேத்தின.. கொஞ்சம் சிரிங்க .. அவன் சத்தியமா குண்டா மொக்கைய இருந்தான் ”

அது தான் அவளது இறுதி மகிழ்ச்சியான உரையாடலாக இருந்தது. அவள் வீட்டில் பெரிய சண்டை ஏற்ப்பட்டு அவளை அந்த கலரா இருக்கிரவருக்கே நிச்சியம் செய்தார்கள், மதி மதியிழந்தான், என்ன செய்வது என்று புரியாமல் இருந்து தத்தளித்த நேரம், அதுவரையில் சிகரெட் தொடாதவன் ,குடி இல்லாதவன், தொட்டான் இதனை அவள் விட்டாள் அவனை, மதி அவளது வீட்டில் பிச்சையாக கெஞ்சிக் கேட்டும் அவர்கள் செவி சாய்க்கவில்லை, எல்லாம் இனிதே முடிந்தது அவளுக்கு.

கடந்த மூன்றாண்டில் அவன் எதுவும் என்னிடம் சொன்னதில்லை, அன்று பூங்கா வைன் ஷாப்பில் மாலை 5 மணிக்கு சொன்னான் அழுதே ” டேய்.. எழிலு .. அவ பொறந்த நாள் டா இன்னிக்கி அவளுக்கு 12 மணிக்கு எல்லாரும் விஷ் பண்ணும் போது நான் பண்ண மாட்டேன் , சரியா 5.20 க்கு பண்ணுவேன், அப்ப தான் அவ பொறந்தாலாம்.. இப்ப சொல்லணும் ஆனா அவ இல்ல ” என்று சொல்லும் போது அவளை அவன் இன்றுவரை சுமந்து கசந்துக் கொண்டிருக்கிறான் என்பது புலப்பட்டது.

அவன் முற்போக்குவாதி தர்கத்தை பார்ப்பவன் எப்படி சராசரி காதல் முரிவிற்காக மது புகையை நாடினான் என பெரும் குழப்பம் என்னுள் நிலவியது , அந்த குழப்பத்துக்கு முடிவு கட்ட ஒரு நாள் மாலை கேட்டேன் அதற்கு மதி ஆரம்பித்தான் “எழில்.., சரக்கு தம்மு உள்ள போன கொஞ்ச நேரத்துக்கு மனசுல இருக்கறது வாந்தியா வெளிய வரும் , இத நான் நியாப் படுத்துல , ஒரு மொழம் கயிற ஒரு சுருக்கு ல முடிஞ்சிரும் ஆனா சில சொல்லு வார்த்தை ஒவ்வொரு நேரமும்..; நிச்சயம் ஆனா பிறகு அவ போன் ல சொன்னா, என்கூட கல்யாணம் ஆச்சுனா கொஞ்ச நாளுக்கு அப்பறம் ஜாதின்னு சொல்லி அவள கொலை பண்ணிடுவேனா; அத கூட விடு எழில் அவ அம்மா சொல்றா, ‘மேல் ஜாதி பையன் நீ உனக்கு ஏதோ தோஷம் இருக்கு; ஆண்மை இல்லாதவன் ; நீ அல்பாய்சு ன்னு குறி சொல்லிடாங்க , உனக்கு ஊர்ல யாரும் பொண்ணு தரமாட்டாங்க ன்னு என் பொண்ண கல்யாணம் பண்ண ஆசைப் பட்ரே, மரியாதையா போய்டு இல்ல வன்கொடுமை ன்னு போலீஸ் ல என் பொண்ண வெச்சி கம்ப்ளைன்ட் பண்ணுவேன் , உன் ஆத்தா அப்பன் எல்லாரும் கம்பி எண்ணனும்’, அட கேடுகெட்ட உலகமே ன்னு ஆச்சு”.

அவன் பேசிய பின் எனது நா தழுதழுத்தது. சாதி வெறியால் கத்தியாலும் சொல்லாலும் கொலைகள் நடந்துக் கொண்டே இருக்கிறது, கத்தியால் சில நொடிகள் வலி ஆனால் சொல்லால் ஒவ்வொரு நொடியும் வலி என்று நினைத்து அங்கிருந்து கிளம்பினேன்.

அன்று தான் மதியை இறுதியாக பார்த்தது,சமீபத்தில் ஒரு வேலை காரணமாக திருப்பூர் அருகே சென்றிருந்தான் அங்கு பட்ட பகலில் மூவர் இளம்வயது தம்பதியரை வெட்ட வந்தனர், அதை கண்டு தடுக்க போனான். அவர்களிடம் இருந்த பெரிய அரிவாளுக்கு இவனது சிறிய தலையை கொடுத்தான், இவன் ரத்த வெள்ளத்தினால் அவர்கள் தப்பித்து கரையேறினர். என் நண்பனுக்கு தெரியாது ஜாதி வெறியினால் அந்த இளம் ஜோடியை கொலை செய்ய வந்தார்கள் என்று,தெரிந்தால் அவன் இறக்கும் போது துடித்ததை விட பல மடங்கு அல்லோலப் பட்டிருப்பான். சாதியின் சிலந்தி வலையில் பல இரண்டு கால் பூசிகள் இருக்கின்றன, என் கண்ணோரத்தில் ஒரு துளி கடல் இந்த க்ஷணத்தில், நான் காதலிக்கும் பெண் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து வருபவள், எங்களது திருமணம் தேதி குறித்தாயிற்று. மதியின் கனவு சாதி இனி சாத்தியம் இல்லை, அதை நோக்கி நான்,

யாரோ என் கண்ணை மூடி “யாருன்னு கண்டு பிடிங்க ??” சிறு புன்னகையுடன் கண்டுபிடித்தேன் எனது முற்போக்கு சிந்தனையை இலட்சியத்தை !!!

“என்னடி இவளோ லேட்டு ??”

“டிராபிக் ல வர …….” அலைகளின் இசையில் இவர்களது சொற்கள் கரைந்தது…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *