கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 6, 2020
பார்வையிட்டோர்: 7,017 
 

“டாக்டர், நான் ‘சையின்ஸ் டுடே’ எடிட்டர் தியாகு பேசறேன்… நாங்க கொரானா பத்தி விஞ்ஞான பூர்வமாக ஒரு கட்டுரை உங்களிடம் கேட்டிருந்தோம். ஆனால் நீங்கள் தத்துவார்த்தமாக ஒரு கட்டுரை எழுதி அனுப்பி விட்டீர்கள்… ஏன் டாக்டர்?”

“இதுதான் இப்போதைய உண்மை தியாகு. உலகமே கொரானா பற்றி செய்வதறியாமல் திகைத்துப்போய் கிடக்கிறது. அதனால்தான் உண்மையை எழுதி அனுப்பினேன்… முடிந்தால் பப்ளிஷ் பண்ணுங்க, இல்லைன்னா வேண்டாம்…”

டாக்டர் ஜெயராமன் மொபைலைத் துண்டித்தார்.

எடிட்டர் தியாகு மறுபடியும் ஒருமுறை டாக்டர் ஜெயராமனின் கட்டுரையை நிதானமாகப் படிக்க ஆரம்பித்தார்…

கொரோனா – டாக்டர் ஜெயராமன்

கடந்த நான்கு மாதங்களாக உலகத்தில் மனிதகுலம் அரண்டு கிடக்கிறது.

காரணம் கொரோனா வைரஸ்.

அமெரிக்காவில் இருந்து அண்டார்ட்டிக்கா வரை மக்கள் பீதியில் உறைந்துபோய் வீட்டில் அடங்கிக் கிடக்கிறார்கள். உலகின் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டு விட்டன. கடந்த மார்ச் இருபதாம் தேதி வெள்ளிக்கிழமை பாரதப் பிரதமர் தொலைக்காட்சியில் தோன்றி நம்மை எச்சரிக்கை செய்தார். அதைத் தொடர்ந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் நாம் அடைந்து கிடந்தோம். அடுத்த சில தினங்களிலேயே மறுபடியும் தொலைக்காட்சியில் தோன்றி ஏப்ரல் பதினான்காம் தேதிவரை நம்மை வீட்டிலேயே இருக்கச் சொல்லிவிட்டார் பிரதமர்.

பிரதமரின் சொல் கேட்டு இப்போது நாம் மறுபடியும் வீட்டினுள் அடைந்து கிடக்கிறோம். எனக்கு என்னவோ இது தேவையின் பொருட்டு மறுபடியும் மே மாத இறுதிவரை நீட்டிக்கப்படும் என்றே தோன்றுகிறது.

கொள்ளை நோயான, கொடிய நோயான, நாம் இதுவரை அறிந்திராத விசித்திர நோயான கொரோனா வைரஸ் நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடங்கள் பல. ஒவ்வொரு மனிதனும் கொரோனாவிடமிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்கிறான்.

அவற்றில் சில:

நாம் டெக்னாலஜியில் மிகவும் முன்னேறிவிட்டோம் என்கிற இறுமாப்பில் இருந்தோம். நமக்கு எல்லாம் தெரியும் என்கிற மமதையில் இருந்தோம். பறந்து பறந்து உலக நாடுகளுடன் வியாபாரம் பேசினோம். ஆனால் நமக்கும் மேலே ஒருவன் இருக்கின்றான். அவன் நடத்தும் நாடகத்தில் நமக்குக் கொடுக்கப்படும் பாத்திரங்களை நாம் ஏற்கும் போது பல சமயம் மகிழ்கிறோம்; சில சமயம் சொல்லவொண்ணா துக்கத்தையும் பயத்தையும் அடைகிறோம். இப்போது இதில் இரண்டாவது பாத்திரம் நமக்கு.

மனிதகுலம் ஒன்றே. ஜாதி, மதம், இனம், மொழி, நாடு, ஆண், பெண் என்ற பால் வேறுபாடு; ஏழை, பணக்காரன் என்ற அந்தஸ்த்து வேறுபாடு போன்றவைகள் அர்த்தம் இல்லாதவைகள். அவைகள் கொரோனா போன்ற பெரிய இடருக்கு முன்னால் குன்றிக் குறுகிப் போகின்றன.

விஞ்ஞானம் வளர வளர வியப்பூட்டும் வளர்ச்சியை நாம் பெற்றாலும் கூட, நம்மால் விளக்க முடியாத விஷயங்கள் ஏராளமாக உள்ளன. ஏன்? இப்போது நம்மிடையே அந்த ‘ஏன்’ என்ற கேள்விக்கு விடையே இல்லை.

அரசு மட்டுமே ஒரு தேசத்தில் உள்ளவர்களுக்கு நல்லதைச் செய்து கொண்டிருக்க முடியாது. தனி மனிதனும் அரசுக்கு நூறு சதவீதம் மனமுவந்து ஒத்துழைக்க வேண்டும். இல்லையேல் இடரை வெல்லவே முடியாது. அதை நாம் நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

பாமரர்களை விட, படித்தவர்கள் ஒழுக்கமின்றி நடப்பதைப் பார்த்து நம்மால் ஆச்சர்யம் மட்டுமே பட முடிகிறது. ஏன் இப்படி என்ற கேள்விக்கு விடையே இல்லை. தனிமனித ஒழுக்கம், கட்டுப்பாடு அனைத்து அறிவையும் விடச் சிறந்தது. அதைக் கொண்டவர்களே சிறந்த மனிதர்கள்.

இந்தப் பேரிடலிலும் கூட ஆதாயம் பார்க்க நினைப்பவர்களை நாம் என்ன சொல்வது? இதிகாசப் புராணம் கூறும் ‘இரக்கமில்லா அரக்கர்கள்’ என்பது இவர்கள்தானோ?

ஊடகங்கள் பெரும்பாலும் நல்லவற்றையே செய்வதைப் பாராட்டும் அதே வேளையில், பர பரப்பூட்டியே பழக்கப்பட்ட ஊடகங்கள் பொய்ச் செய்திகளைப் பரப்புவதை பார்க்கும்போது நாம் பெரும் வியப்பை அடைய வேண்டியிருக்கிறது.

வதந்திகளைப் பரப்புவதில் வாழ்க்கையை ஓட்டுபவர்கள், தன்னையும் தன்னைச் சார்ந்தவர்களையும் பேரிடர் ஒருநாள் பாதிக்கும் என்று எண்ணுபவதில்லை என்பதை நினைத்தாலே ஆச்சர்யமாக இருக்கிறது. இவர்களால் ஒரு கணத்தில் பீதியைக் கிளப்பி மரண பயத்தை ஏற்படுத்தி நாட்டு மக்கள் அனைவரையும் கலக்கமுறச் செய்ய முடியும்; பல்வேறு துறைகளை முடக்க முடியும். நாளைக்கு யாருக்கு என்ன நடக்குமோ என்ற நிலையற்ற தன்மையை ஏற்படுத்த முடியும். நாடுகளின் அடிப்படைப் பொருளாதாரத்தையே ஆட்டிவிட முடியும். இவர்களிடம் நாம் மிகக் கவனமாய் இருக்க வேண்டும்.

நம் பாட்டி, தாத்தா எத்தகைய படிப்பினையை நமக்கு விட்டுப் போயிருக்கிறார்கள்? அவைகளை நாம் நினைத்தோமா? வீட்டு வாசலில் சாணம் தெளித்தார்கள். அது கிருமி நாசினி. எறும்புக்கு உணவாக அரிசி கோலம் போட்டார்கள். வேப்பிலையையும், மஞ்சளையும் கலந்த தண்ணீரில் காலைக் கழுவிவிட்டு வீட்டிற்குள் வரச் சொன்னார்கள். சுத்தம் சோறு போடும் என கற்றுக் கொடுத்தார்கள்.

பூண்டு ரசம், வேப்பம்பூ ரசம்; கண்டந்திப்பிலி ரசம் வைத்தார்கள். சித்தரத்தை, கீழாநெல்லி, பசலைக் கீரையை நிறைய உபயோகித்தார்கள். கருஞ்சீரகம், பூண்டு, இஞ்சி, மிளகு, எலுமிச்சை என அடிக்கடி சமையலில் சேர்த்தார்கள். பத்து மிளகு சேர்த்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாமாம். என் பாட்டி சொல்லக் கேட்டிருக்கிறேன்.

காலையில் வெறும் வயிற்றில் மூன்று பூண்டுகளை பச்சையாகவே கடித்து மென்று, குடிக்கும் சூட்டில் குடி தண்ணீரில் முழுங்கி விடுவது உத்தமம். இவைகள் அனைத்தும் நம் இம்யூனிட்டியை அதிகரிக்கச் செய்யும் சங்கதிகள். பிறகென்ன பிறகு? கொரோனாவாவது சுண்டைக்காயாவது?

ஆனால் நாம் சோம்பேறித் தனமாக மொபைலை கையில் வைத்துக்கொண்டு ஆப்பை (App.) நோண்டித் துருவி கேடுகெட்ட மைதாவில் செய்யப்பட்ட பீட்ஸாவையும், பர்கரையும் ஆர்டர் செய்து சப்புக்கொட்டித் தின்று கொண்டிருக்கிறோம். போதாதற்கு அதனுடன் கக்கூஸ் கழுவும் கோக், பெப்ஸி, தம்ஸ்அப் வேறு! நாம் உடனே மாறியாக வேண்டும். இல்லையேல் நம்மைக் கடவுளாலும் காப்பாற்ற முடியாது.

முடிவற்ற ஒரு சோகமான பட்டியலை ஒரு கணத்தில் கொரோனா தர முடியும் என்பது என்ன ஒரு விசித்திரம்!!

தத்துவம் கூறுபவர்களை விட, சாஸ்திர வியாக்கியானங்களைச் செய்பவர்களை விட, களத்தில் முன்னணியில் நின்றுகொண்டு தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சேவை செய்யும் மருத்துவர்களையும், சேவாதளத்தினரையும் மனிதர்கள் என்ற சொல்லால் மட்டும் விளக்க முடியுமா? இவர்களின் அருங்குணத்தை எப்படி நாம் விவரிப்பது? எப்படி நாம் நன்றியால் இவர்களுக்கு ஈடு கட்டுவது? நம் ரத்தக் கண்ணீரால் இவர்களின் கால்களை நாம் கழுவத்தான் முடியும்.

மாட்டு வண்டி, குதிரை வண்டியிலிருந்து; சைக்கிள், மோட்டார் சைக்கிள்; கார், ரயில், விமானம் என பல்வேறு பயண சாதனங்களைக் கண்டாலும் கூட, அவற்றைப் பயன் படுத்த முடியாமல் செய்ய ஒரு சின்ன ‘மரணம் வந்து விடுமோ’ என்கிற பீதி போதும் என்பது என்ன ஒரு விசித்திரம்?!

அமைதி தரும் ஆலயங்களும் மூடப்படும் என்பது அதிசயமாக இல்லை?

சேர்ந்து வாழும் சமூகத்தை, தூர தள்ளி இருக்க வேண்டிய சமூகமாக, ‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’ என்ற புதிய நடத்தை கொண்ட சமூகமாக, ஒரு சின்ன வைரஸ் மாற்ற முடியும் என்பதை – அதுவும் உலக அளவில் – இதுவரை நாம் நினைத்துப் பார்த்திருப்போமா?

என்றாலும்கூட மனிதகுலத்திற்கு ஒரே ஒரு நல்ல, பெரிய நம்பிக்கை உள்ளது. அது இதுதான்!

அறம் வெல்லும்; பாவம் தோற்கும்

தர்மம் வெல்லும்; அதர்மம் அழியும்

கொரோனா தோற்கும்; மனிதகுலம் வெல்லும்!

நாடகத்தை நடத்துபவனைச் சரண் அடைகிறோம். நாடகத்தில் நீடு வாழும் ஆரோக்கியம் கொண்ட நல்ல பாத்திரத்தை அனைத்து மக்களுக்கும் கொடு என்று கேட்டுப் பிரார்த்திக்கிறோம்.

‘கொதியுறு காலன் அங்கி நமனோடு தூதர் (கொரோனா உள்ளிட்ட) கொடு நோய்கள் ஆன பலவும் அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே’ (வேயுறு தோளி பங்கன் – திருஞானசம்பந்தர் அருளிய பதகம்)

சர்வே ஜனா சுகினோ பவந்து!

எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறு ஒன்றும் அறியேன் பராபரமே!!

மனிதகுலம் வாழ்க! மனிதகுலம் வெல்க!!

எடிட்டர் தியாகுவின் கண்கள் கலங்கின. சப்-எடிட்டரை கூப்பிட்டு உடனே டாக்டர் ஜெயராமனின் கட்டுரையை அச்சில் ஏற்றச் சொன்னார்.

Print Friendly, PDF & Email

2 thoughts on “கொரோனா

  1. உண்மையை உரைக்கும் கதை. உலகில் நாம் அனைவரும் போராடிக் கொண்டிருக்கிறோம். மனிதகுலத்தின் அகம்பாவமும், ஆணவமும் அழிந்தது. பக்தி மட்டும் மேலோங்குகிறது. காரணம் – உயிர் பயம். வெல்டன் கண்ணன் சார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *