கூடுதுறை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 23, 2023
பார்வையிட்டோர்: 1,928 
 
 

முத்துநகர் எக்ஸ்பிரஸில், நள்ளிரவில் திருச்சியில் இருந்து சென்னைக்கு ரயில் ஏறியவன் சென்றாயன். அரிசிக்குப் பெயர்பெற்ற மண்ணச்சநல்லூர்க்காரன். 

பாலிடெக்னிக்கில் பயின்று வாங்கிய சான்றிதழ்களை நெல் மூட்டைகள் மணக்கும் வீட்டில் போட்டுவிட்டு, சினிமா இயக்குநராகும் கனவில் சென்னை, வடபழனியில் வசிக்கும் நண்பனின் அறையை நோக்கி, அவனது அந்த முதல் பயணம் அமைந்தது. 

பால் பீச்சும் மாடு, பஞ்சாரத்துக் கோழி, பஞ்சாயத்துத் தலைவரான அப்பா, பசும்பால் தந்து தூங்க வைக்கும் அம்மா, பால்ய கால பாலிடெக்னிக் நண்பர்கள் அவ்வளவையும் விட்டுத்தான் ரயிலேறினான். இன்னும் ஐந்தே ஆண்டுகளில் இயக்குநராவேன் என்று உறுதியெடுத்திருந்தான். 

ரயில் பயணத்தின் டகடக குக்கூ காபி காபி சத்தங்களுக்கு இடையிடையே ஐந்து படங்களுக்கு ஒன்லைன்களை மனதில் உருவாக்கிய ஜித்தன். 

யார் யாரிடம் உதவியாளராகச் சேர வேண்டும் என்பது உட்பட திட்டங்கள் வைத்திருந்தான். மூன்று படங்களில் பாதியில் விலகினான். துணை இயக்குநராகப் பணியாற்றிய அடுத்த இரு படங்களில் டைட்டிலில் பெயர் வந்தது. டைட்டிலில் வந்த பெயர் ‘சென்றாயன்’ அல்ல; ‘சம்யுக்தன்”. 

துருவ நட்சத்திரம் முதல் எரி நட்சத்திரம் வரை அத்தனை வகை விண்மீன்களுக்கும் ஏற்றவாறு கதை வைத்திருந்தான் சம்யுக்தன். ஒவ்வொரு துண்டுப் பிக்சராக, ஒலி ஒளி உட்பட மனதில் வண்ணம் கண்டு வைத்திருப்பவன். 

படங்களின் வெற்றிகளில் சம்யுக்த னின் பங்கு கணிசமானது என்ற உண்மை உள்வட்டாரங்களுக்குத் தெரிந்திருந்தது, கதை சொல்வதற்கான கதவுகளைத் திறந்துவிட்டது. 

ஏழு படங்களில் நான்கு வெற்றி, மற்றும் இரண்டு சுமார் ஓட்டப் படங் களைக் கொடுத்த கதாநாயகனுக்குக் கதை சொன்னான், தயாரிப்பாளருக்கு சம்யுக்தனையும், சம்யுக்தனுக்குத் தயாரிப்பாளரையும் கதாநாயகன் முடிச்சுப் போட்டுவிட, முதலாம் படம் உதயமானது, தமிழ் உலகம் இதுவரை காணாத புதுமுகம்கொண்ட நாயகியை அறிமுகப்படுத்த முடிவு செய்தான். 

அம்மாவும் பெண்ணுமாக வாய்ப்புக் கேட்டு வருவோர், ஆல்பங்களுடன் வரும் ஆரணங்குகள் அனைவரையும் தள்ளிவிட்டு, கனவுக்கன்னியை தன் வழியில் அதற்கான ஆள் உதவியுடன் தேடினான் சம்யுக்தன். அந்த ஆள், சினிமாவுக்கென்றே பிறந்தவன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்கத் தெரியாதே தவிர, மற்ற எல்லா சூட்சுமங்களையும் தெளிவாகத் தெரிந்தவன் நம்ம ஆள். 

பெங்களூரின் எம்.ஜி.ரோட்டில் எல்லாக் கடைகளுக்குள்ளும் சம்யுக் தனை ஏற்றி இறக்கினான் அவன். பப்களில் அமர்ந்து பீராட்டினான். பிரிகேட் ரோடில் ஆவா, ரெக்ஸ் தியேட்டர்களுக்கு மத்தியில் காரில் போகும்போது, கூடை விற்றுக்கொண்டு இருந்த பவானியைப் பார்த்தான் சம்யுக்தன். விதியை மாற்றும் காற்று அப்போது வீசியது. விலகிய ஆடையை அவள் சரிசெய்வதற்கு முன், யாரும் காணாத காட்சியை சம்யுக்தன் கண்டான். அது பவானியின் முகத்தில் தோன்றிய வெட்கம். பெங்களூருக்குக் காற்று புதிதல்ல. ஆனால், அந்த வெட்கம் புதுமையானதென எண்ணிய சம்யுக்தன், காரை ஓரமாக நிறுத்தச் சொன்னான். “கரெக்ட் சாய்ஸ் சார்!” என்றான் நம்ம ஆள். 

பிரிகேட் ரோட் பவானிக்கு, சௌமியா என்ற பேரைத் தேர்ந்தெடுக்க மட்டும், தொலைபேசியிலும் குளிர் ஏசியிலுமாக இருபதாயிரம் ரூபாய் செலவாயிற்று சம்யுக்தனின் தயாரிப்பாளருக்கு. 

அவளது இயற்பெயர் அவ்வளவு சூட்டிகையாக இல்லை என்பது சம்யுக்தனின் முதல் முடிவு. அடுத்தது, பெயர்கள் ஆகாரத்தில் முடிவதே (ஜோதிகா, த்ரிஷா, சினேகா, சோனியா, நயன்தாரா, நமீதா) அழகின் லட்சணம் மற்றும் அன்பர்க்கு விருந்து என்ற புரிதலில், ஆகார முடிவை உடைய இந்தப் பெயர் சூட்டப்பட்டது. 

பெயருக்குப் பின்னால் அவளது சாதிப் பெயரை ஒட்டவைத்துப் பார்த்தபோது, அது அவ்வளவு கவர்ச்சி தரத் தக்கதாக இல்லை. தகப்பனாரின் பெயரை இணைக்கலாம் என்றால் பவானியின் பாட்டி, தன் மகனுக்கு ‘ராமுடு’ எனப் பெயர் இட்டிருந்தார். ஆகவே பவானி, வெறும் சௌமியா ஆனாள். 

தமிழ்ப் படத்துக்கு ஆந்திர மாநில சித்தூர் அருகிலுள்ள முலபாகல் கோட்டா பவானியை கர்நாடகத் தில் பிடித்து, படப் பிடிப்புப் பாடல் காட்சியில், கேரள மாநில குமரகப் புழயில் வஞ்சிப் படகு மீது முண்டு கட்டியவாறு அவள் ஆடிய ஆட்டத்தின் பாட்டு, அவ்வாண்டின் திராவிட உற்சவ அங்கமாக தமிழ் நாவுகளிலும், செல்போன் மெட்டு களிலும் ஒலித்தது. 

முதல் படம், சம்யுக்தன் எதிர் பார்த்ததைவிடவும் சில மடங்கு வசூலைக் குவித்தது. படத்தின் பெயர். ‘விடாதே பிடி’:. கரிசல் தரிசு, கள்ளிக் காடு, குப்பம், பாக்கம், ஆயக்கட்டு, கணினி நகர் என சகல வட்டாரங் களிலும் மாரத்தான் ஓட்டத்தை நிகழ்த்தியது ‘விடாதே பிடி 

படத்தின் நாயகியான – கோட்டா பவானி என்கிற சௌமியாவுக்கு திண்டுக்கல்லிலும் மதுரையிலும் ரசிகர் மன்றங்கள் உருவாகி மாநிலத் தலைமையை யார் கொள்வது என்ற பூசல்கள் உருவாகிவிட்டன. ‘மணிப் புறாவே! சௌமியாவின் விலாசம் என்ன?’ – சௌமியப் பிரியன், செம்பரப் பாக்கம் என்கிற ரீதியில் ஞாயிற்றுக் கிழமை பேப்பர் ஒன்றுக்கு கடிதங்கள் பறக்க ஆரம்பித்தன. 

‘விடாதே பிடி’ வெளிவந்த நான்கு நாட்களுக்குள், அப்படத்தின் கதா நாயகனுக்கு எதிரியாக தன்னைத்தானே கருதிக்கொண்டும் வருத்திக்கொண்டும் இருக்கிற ஒரு நாயகனிடமிருந்து சம்யுக்தனுக்கு ஐந்து தடவை தொலை பேசி வந்தது. 

படத்தின் வெவ்வேறு கட்டங்களில் வருகிற காட்சிகள் பற்றி நிமிடக்கணக் கில் அவர் வியந்ததும், ‘திருட்டு வி.சி.டி. மார்க்கெட்டுக்கு வந்துவிட்டது’ என சம்யுக்தன் நினைத்துக் கொண் டான். ஆறாவது தடவை அவர் போனில் வந்தபோது, சம்யுக்தன் “உங்களுக் குன்னே ஒரு கதை வெச்சிருக்கேன் சார். ரொம்ப நாள் கனவு.” என்றான். ஏதோ, அந்தக் கதாநாயகன் பிறக்கும் முன்பே, கதையைத் தயார் செய்து வைத்திருப்பவன் போல! 

இரண்டாவது படம் வொர்க் அவுட் ஆகியது இப்படித்தான். அந்தப் படத்திலும் கதாநாயகி சௌமியாவே. இரண்டு படங்களுக்கும் இடைப்பட்ட காலத்தில் சில காரியங்கள் நடந்தன. 

‘விடாதே பிடி வெற்றி நாள் நூறின் கொண்டாட்டத்துக்கு மறுநாள், சௌமியாவுக்கு பின்னணிக் குரல் பேசிய பெண்ணுக்கு சம்யுக்தன் ஐந்து பவுன் சங்கிலி ஒன்றைப் பரிசளித்தான். “இந்தப் பரிசு உங்க கழுத்துக்குதான். உங்க குரலுக்குப் பரிசு தர என்னால் ஆகாது” என்று பணிவாகக் கூறினான். பவானி மென்று துப்பிய தமிழ் ஒலி மாத்திரை அளவுகளைச் சாதுர்யமாக மறு உருச்செய்து, கூடுதலாக சங்கீதத் தன்மையும் சேர்த்து, பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் பெண்ணே இருக்கிறாள் என மெய்ப்பித்த பின்னணியாள் நன்றியுடன் முறுவலித் தாள். “உங்க டேஸ்ட்டே தனி சார்” என்றான் நம்ம ஆள். 

பத்திரிகைகளும் சின்னத்திரைகளும் பிரஸ்மீட்டில் கூட்டப்பட்டிருக்க, பேட்டிக்கு சம்யுக்தனுடன் கிளம்பி னாள் சௌமியா. பிரிகேட் சாலையில் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, உருது, அரைகுறை ஆங்கிலம், கொங்கணி என பலவித மொழிகளில் பேரம் பேசிக் கூடை விற்ற சரளம் அவளைக் கைவிட வில்லை. பேட்டியாளர் அசந்துபோகுமாறு சில கூடைப் பொய்களை வழங்கவும் அவள் தயங்கவில்லை. 

“சித்தூர் ராஜவம்சத்தின் கஜானாப் பொறுப்பு எங்க முன்னோர்கிட்டே இருந்துச்சு. ஆமா, நாங்க ராயல் ஃபேமிலிதான்!” 

பேட்டி முடிந்து கலையும்போது மூத்த நிருபர் ஒருவர் இளைய நிருபரிடம், “சாண்டில்யன் கதை படிச்ச யாரும், இவ இளவரசின்னு சொன்னா நம்பத்தான் செய்வாங்க” என்றார். 

உப்பரிகையில் நின்று தரிசனம் தருகிற அழகோடுதான் துலங்கினாள் சௌமியா. சம்யுக்தனோடு சேர்ந்து கொண்டு, சுனாமிக்கு முந்தைய கடற்கரைகளில் சுற்றினாள். கூரைச் சார்ப்பின் கீழ், காடா விளக்கெரியும் உலகின் மிகச் சிறிய ரெஸ்டாரென்ட்டில், பணியாரம் தின்றாள். சிங்கப்பூர் பிரீமியருக்குச் சேர்ந்து சென்று வந்தார்கள். புதுப் பட கம்போஸிங்கிற்கு, இசையமைப்பாளர், கவிஞருடன் சம்யுக்தன் கிளம்பினான். பின்னாலேயே அதே மொரீஷியஸுக்கு அடுத்த விமானத்தில் சௌமியாவையும் அனுப்பி வைத்தான் நம்ம ஆள். எதற்கும் இருக்கட்டும் என ஒரு முன்னணிப் பத்திரிகை நிருபருக்கு, அதைச் செய்தியாகவும் வழங்கி சேவை செய்தான். ஊர் திரும்புவதற்குள் ஒரு கவர் ஸ்டோரியும், ஏழெட்டுப் பெட்டிச் செய்திகளும் தமிழகத்தை மகிழ்வித்திருந்தன. “என்னய்யா?” என சம்யுக்தன் கேட்க, “இன்னிக்கு நாம நியூஸ்ல இருக்கோம், அவ்ளோதான் சார்!” – சிரித்தான் நம்ம ஆள். 

சம்யுக்தன் செளமியா மேல் காதலில் விழுந்ததோடு தவிர்க்க முடியாமல் அஞ்செழுத்து சென்டிமென்ட்டிலும் விழுந்தான். ‘விடாதே பிடி சென்டி மென்ட் தமிழில் சித்தர்களுக்கு அடுத்தபடி அஞ்செழுத்தை நெஞ்சழுத்தி நின்றான். நல்லவேளையாக, இரண்டாம் படத்துக்கு ‘குண்டலினி’ என்று பெயர் வைக்கவில்லை. 

ஆக்ரோஷத்தை கனல் பறக்கவைத்த அந்தப் படத்துக்கு ‘சம்மட்டி’ என்று பெயர் வைத்தான். சம்மட்டி அடியில் கல்லா பொங்கி வழியவில்லை என்றாலும், நிறையத்தான் செய்தது. உத்தரவாதமான இயக்குநர் என்கிற அங்கி அவன் மேல் போர்த்தப்பட, மூன்றாவது படத்தை இயக்கினான். 

சௌமியாவுடனான தனது காதல் வெளியில் ஊர்ஜிதப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கதாநாயகியை மாற்றினான். சைடில் சௌமியாவும் நான்கு படங்களோடு பிஸியாக இருந்தாள். அந்த பிஸிக்கு இடையேயும் அவள் நட்சத்திர ஓட்டல் ஒன்றினுக்குப் போக நேர்ந்தது, சம்யுக்தனுக்குப் பிடித்த கிரகணத்தையே காட்டுகிறது. 

அந்த ஓட்டலின் வரவேற்பறையில் இருந்து அவனுக்கு செல்பேசி வந்தது. அவசரமாகக் கிளம்பிப் போய் ஓட்டலின் மதுபான விநியோகப் பகுதிக்குச் சென்றான். முறிந்த கூடை யைப் போல சோபா ஒன்றில் 

கிடந்த சௌமியாவின் கோலம் கண்டு சோடாக்களுடனும் கோட்டுகளுடனும் நடந்த பரிமாறர்களை ஏசினான். மண்ணச்சநல்லூரில் நெல் தவிர பதர்கள், பாளைகள், களைகள் யாவும் 

விளையக்கூடுமென்பது அவனது பேச்சில் தெரிந்தது. 

“சார்! நாங்கதான் சோபாவுல தூக்கிப் போட்டோம். முதல்ல அங்கே கிடந்தாங்க” என்று தரையைக் காட்டினார்கள். அமைதியுற்றவனாக சௌமியாவிடம் வந்தான். 

“புட்டி ஜவத்து ரூபாய்… புட்டி ஜவத்து ரூபாய்” என பிதற்றிக்கொண்டு இருந்தாள். போதையில் சாராயம் விற்கிறாளோ என ஐயுற்றவன், பிறகு பேதலிப்பின் பழைய வாசனையில் பிரிகேட் சாலையில் கூடை விற்கிறாள் என ஊகித்தான். கண்ணீர் மல்கியது. 

காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு வீட்டுக்கு விரைந்தான். வீட்டுக்குப் போகும் வழியில் செல்போன் ஒலித்தது. சௌம்யாவின் செல்போன். எடுத்தான். எதிர் முனையில் குழறலான குரல். 

“ஏய்..தொங்கி. பக்கத்து டேபிள் வரைக்குப் போய்ட்டு வர்றதுக்குள்ள எங்க தொலைஞ்சே?”. இந்தக் குரல் சம்மட்டியைப் போல் தாக்க, செல் போனை அணைத்தான். சௌம்யா வுடன் உத்தேசித்திருந்த திருமண பந்தம் முறிவுற்றது இந்தக் கட்டத்தில் தான். “கரெக்ட்தான் சார், நானே உங்ககிட்டே சொல்லணும்னு இருந் தேன் சார்!” என்றான் நம்ம ஆள். ஆனால், அவள் மீது சம்யுக்தன் கொண்ட காதல் அபூர்வ விநோத வழியில் திரும்பியது. நான்காவது படத்துக்குக் கதை நாயகியை அதே ஆள் மூலம் தேடினான். 

கோயமுத்தூரில் மைக்ரோ பயாலஜி படித்துக்கொண்டு இருந்த மில் அதிபர் மகள், டப்பிங் பேச ஆள் வேண்டியிராத குரலையும் பெற்றிருந்தாள். ஷரத்துக்களைப் படித்துப் பார்த்து, கேள்வி கேட்டுக் கையெழுத்திடவும் தெரிந்து வைத்தி ருந்தாள். இவளுக்குச் சூட்டப்பட்ட பெயர் சஞ்சிதா. “பின்னிட்டீங்க சார்” என்றான் நம்ம ஆள். 

சம்யுக்தனின் நாயகி என்பதால், படத்துக்கு முன்பே பேட்டிகள் வரத் தொடங்கின. சஞ்சிதா என்ற பெயருக்கு அர்த்தம் வினவப்பட்டபோது, ‘சம்ஸ்கிருதத்தில் பொறுமையானவள் என்று பொருள்’ என்றாள். 

சஞ்சிதாவை வைத்துப் படமெடுக்கும்போது சென்டி மென்ட் கடந்த துணிச்சலோடு, ‘ஓடாதே` எனப் பெயரிட்டான் சம்யுக்தன். படம் ஐம்பதாம் நாள் கண்டபோது, சஞ்சிதா குடியிருக்கும் ஃபிளாட்டுக்கு பூங்கொத்தும் கையுமாகச் சென்றான். முகமன் நிலைப் பேச்சு வார்த்தைகள் முடிந்ததும், மென்று விழுங்கியவாறு ஆரம்பித்தான். “முக்கியமான விஷயம் ஒண்ணு சொல்லணும்.” 

சஞ்சிதா, “கால்ஷீட்டைப் பத்தி வேணும்னா பேசுங்க சார், ப்ளீஸ்!’ என்றாள். கண்களில் கெஞ்சலும் கண்டிப்பும் ஒருசேர இருந்தன. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத சம்யுக்தனாகிய சென்றாயன், தன் காதலெனும் வேதாளத்தைத் தோளில் தூக்கிப் போட்டுக்கொண்டு வெளியேறி, ஐந்து நட்சத்திர ஓட்டலின் பாருக்குள் அதிகாலையின் முதல் வாடிக்கையாளனாக, மொத்தமாக மூன்று லார்ஜ்களை ஆர்டர் செய்து, ஒரே டம்ளரில் ஊற்றி ‘ஆன் தி ராக்ஸ்’ அடித்தான். சுர்ர்ரென மூளை சூடாக, செல்லில் என்னென்னவோ தட்டிப் பார்த்துவிட்டு, நம்ம ஆளுக்கு போன் செய்ய, “சார், சொல்லுங்க சார்” என்றான் நம்ம ஆள். 

“அவ நம்பர மாத்திட்டாளா?” என்றான் சம்யுக்தன் மொட்டையாக 

“சார், சௌமியாவோட புது நம்பர் சொல்லட்டுமா?” என்றான் நம்ம ஆள் ஆர்வமாக 

“எப்பிடிய்யா கற்பூரமா பிடிச்சுக்கிறே?” என்றான் சம்யுக்தன் ஆர்வமாக. “எப்பிடியும் ஒரு நாள் நீங்க கேட்பீங்கன்னு தெரியும் சார்” என்றான் நம்ம ஆள், மிகப் பணிவாக!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *