“அம்புஜம், அடியே அம்புஜம் ”
“என்னன்னா, இதோ.. ஏன்னா இப்ப ஏன் காத்தாலே இப்படி கத்துறேல்”
“அடியே , நேக்கு ஆபீஸ்க்கு லேட் ஆகிடுச்சுடி, நோக்கு என்ன ,ஆத்துல நன்னா உட்கார்ந்துட்டு இருக்கே, வெளியே போறவாளுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும் டி, சத்த நேரம் ஆனாலும் இந்த தெரு சனங்க கூடியுரும்டி, அவாளாம் கிளம்புறதுக்குள்ள நான் தெருவவிட்டு வெளியே போனுமோலியோ அதான்டி , சேரி நான் போய்வரேன், நீ தாப்பால போட்டுக்கோடி ஏதும் வேணும்னா ஆபீஸ்க்கு போன் பண்ணு வரும் போது வாங்கி வர்றேன்”
“அவ்வளவு , ஆச்சாரம் பாக்குறேல், பின்ன ஏன் இங்கே குடிவந்தேளாக்கும், அக்கரகாரத்திலே இருந்துருக்கலாம்ல”
“அடியே அம்பு,இது தாண்டி என் ஆபீஸ்க்கு பக்கம், இந்த சனங்கதான்”
“என்ன , இந்த சனங்கன்னு மூஞ்சிய சுழிக்கேல் எல்லாரும் இந்த லோகத்தில மனுசங்க தான்,அவாலுக்கும் எல்லாம் இருக்கு புரிஞ்சுகோங்கோ”
“உன் கதாகலாட்சபம் கேட்க நேக்கு நேரமில்லை நான் வாறேன் ”
என்று சுந்தரமூர்த்தி தன் அலுவலகத்திற்கு தனது பஜாஜ் ஸ்கூட்டரில் சென்றார்.
அவர் இவ்வளவு சலித்துகொண்டு வாழும் அளவிற்கு அது என்ன இடம்.
அது பிழைப்பிற்காக,தொழிலுக்காக இங்கு வந்த பல ஊர் மக்கள் வாழும் ஒரு சிறிய பகுதி,நகரத்தின் மைய மற்றும், அடிப்படை வசதிகள் சிலவை மறக்கப்பட்ட பகுதி ஆகும்.
“மீன், மீனோய் ” என முனியம்மாவின் சத்தத்தோடு ஆரம்பிக்கும் அப்பகுதியின் காலை பொழுது.
“கருப்பு, ஒரு கிலோ மட்டன் போடுப்பா”
“ஏலேய் , சார்வால்க்கு கொலுப்பு இல்லாத மட்டன் போடுவே”
“அப்புறம் சார்வால், தொழில் எப்படி போகுது”
” அது போகுது, கடன் வாங்குறானுவ திருப்பி தரமாட்டேங்கிறானுவ,அவிங்க கிட்ட காசு வாங்குறதுக்குள்ள நாக்கு தள்ளிபோகுது”என வீரய்யா ,கரிக்கடைக்காரர் கருப்பசாமியிடம் பேசிவிட்டு சென்றுவிட்டார்.
“அக்கா, 100 பாமியில், காக்கிலோ சக்கரை, ஒரு காபி தூள் பாக்கெட்டு ஆத்தா கேட்டுச்சு”
“அடியே, உன் ஆத்தா, ஏற்கனவே அம்புட்டு கடன் தரனும், இதுல மறுபடியும் மறுபடியும் உன்ன அனுப்பி விடுறா”
“ன்னா, அக்கா பண்ண ஏன் அப்பன் டெய்லி குடிச்சுபுட்டு தான் வூட்டுக்கு வருது, ஆதாதாக்கும் ,அப்பனுக்கு இராபுல்லா சண்டை, அது அம்மாவ அடிச்சு புடிச்சுக்கா”
“உன் ஆத்தா தலையில அந்த ஆட்டோகார அந்தோனி குடிகாரன்னு எழுதி இருக்கு இந்தா போய் சாமான கொண்டு குடு”
இப்படி பலவகை மனிதர் வாழும் அந்த தெருவில், அனைத்து மக்களையும் ஒருசேர சங்கமிக்க வைக்கும் இடம் அந்த குழாயடி, ஆம் வாரத்தில் ஒரு முறை வரும் கார்ப்பரேசன் தண்ணீர்க்கா மக்கள் அங்கு நடத்தும் கச்சேரியே தனிதான்.அப்படியொருநாள் தண்ணீர் வரிசை மாற்றி பிடித்ததனால் இரு பெண்களிடையே நடந்த வாயாத்தகராறு, வளர்ந்து இரு வீட்டு ஆண்களும் கைகளப்பு வரை கொண்டு சென்று விட்டது, இதை கண்ட சுந்தரமூர்த்தி தன் மனைவி அம்புஜத்தை அந்த பக்கம் அனுமதிப்பதில்லை,தனியாக தண்ணீரை விலை கொடுத்து வீட்டில் லாரி மூலம் இறக்கி விடுவார். அந்த மக்களிடமும் பழகவிட மாட்டார்.
ஆனால் அம்புஜம் மனிதர்கள் அனைவரும் ஒன்று என்று நினைப்பார். சுந்தரத்திற்க்கு தெரியாமல் அங்குள்ள பெண்களிடம் பழகியும் வந்தார்.
“அக்கா, வா வா தண்ணீர் வந்துட்டு”
“அடியே நான் தான் முதல்ல கல்லுவச்சேன் டி , எனக்கு தான் மொத வருசை” என முனியம்மா கூற அப்படியே தண்ணீர் குடத்திற்கான வரிசை ஆரம்பித்தது.
“அடியே ,இந்த விஷயத்தை கேள்விபட்டியா?” என முனியம்மா கூற .
“ஹக்கான் கா ,அந்த மனுசனே அப்படி தான்” என செல்வி மேளம் தட்ட ,ஊர் புரனி கச்சேரி இனிதாய் ஆரம்பித்தது அந்த குழாயடியில்.
மேரிக்கு மேலுக்கு முடியலன்னு அந்தோணி குழாயடிக்கு தண்ணீர் புடிக்க வந்தான் , அப்படி யே கருப்பசாமியும் கொடத்தோட வர, அந்தோணி சிரிப்புடனே …
“ன்னா ,அண்ணாத்த, உன்னயும் உன் பொஞ்சாதி தண்ணீ எடுக்க அனுப்பிட்டா”
“ஏலேய், என்ன தான் நாம சிங்கம் மாதிரிதிரிஞ்சாலும் ,அந்த ஆத்தா மகமாயி காலுக்கு கீழே தான், ஆத்தாவ அனுசரிச்சு போனாதான் மக்கா வாழ்க்கை நல்லா இருக்கும்” என கருப்பு கூற,…சில நிமிடம் அங்கு அரசியல் வாடை வீசியது.
“ஹேய் , மாலா அந்த முக்குவிட்டு ராஜா ,நான் போகும் போதும் வரும் போது என்னயே வச்ச கண்ணு வாங்காமல் பாக்கான்டி”
“ஓய் சுதா, கண்டிசனா இது லவ்ஸ் தாண்டி” என கள்ளச்சிரிப்புடனே இளங்குமரிகளின் காதல் கிசு கிசுப்புகள் அரங்கேரியது.
இத்தனையும், பார்த்து கொண்டும் கேட்டுக்கொண்டும், எவ்வித சலனமில்லாமல் அந்த குழாயடி தன் பணியை செவ்வனே செய்தது தண்ணீரை வாறி வழங்கியது .
“அம்மா “என்ற அலறல் சத்தம் கேட்டு, குழாயடியில் நின்றவர்கள் மட்டும் அல்ல அந்த தண்ணீரும் நின்றது.
“அடியே என்னாதிது அந்த அம்புஜம் பொண்ணு சத்தம் மாதிரி இருக்கு ”
“ஆமாக்கா, அது வேற நிறமாசமா இருந்துச்சு, இடுப்புவலி வந்துட்டு போல”
“சரி டி ஆனா அந்த மனுசன் நம்ம வாசமே ஆகாதுன்னு இருக்குறவரு இப்ப என்ன பண்ண”
“அக்கா, அத பத்தி இப்பவா பேசுறது, இரட்டை உசுருக்கா வா போயி பார்ப்போம்”
இரு பெண்களும் தங்கள் சேலையை வரிந்து கட்டி விட்டு வீட்டினுள் சென்றனர், அங்கு அம்புஜம் சோபாவில் வழியில் துடித்து கொண்டிருந்தார்.
முனியம்மா மட்டும் வெளியே வந்து ” ஏய் அந்தோணி ஆட்டோ எடு அந்த பொண்ண ஆஸ்பத்திரி கூட்டிட்டு போணும், அண்ணே கருப்பண்ணே நீ அந்த சாமிக்கு போன போட்டு தர்மாஸ்பத்திரி வரச்சொல்லு” என கூறிவிட்டு அந்த பெண்கள் அனைவரும் அம்புஜத்தை கூட்டிக்கொண்டு அரசுமருத்துவமனை சென்றனர்.
இங்கு குழாயடி குடங்கள் சரிந்து கிட்டக்க, தண்ணீர் நின்றிருந்தது.
நாட்கள் நகர்ந்தது, சுந்தரம் இப்பொழுதெல்லாம் அப்பகுதி மக்க மனுசரிடம் பார்த்து பேசிவிட்டே செல்வார்.
மீண்டும் குழாயடி சங்கமம் நடந்தது, இம்முறை அம்புஜம் குடத்துடன் வர முனியம்மாவோ,
“அம்மாடி, பச்ச உடம்பு காரி தண்ணீ எடுக்கவரலாமா, நீ கொடத்தை வச்சுட்டு போ நம்ம அந்தோனி பைய தூக்கி வைப்பான் வாசல்ல என அம்புஜத்தை அனுப்பி வைத்தாள் முனியம்மா,
“அடியே, அந்த லோகு ,சரசு கதை தெரியுமா?, எந்த கட்சி வந்தா என்ன? ,அவன் லட்டர் கொடுத்துட்டான்டி .”… என மீண்டும் பல நிகழ்ச்சிகளை கண்டும்,கேட்டும் எவ்வித சலனமும் இன்றி தன் பணியை செய்து கொண்டிருந்தது அந்த குழாயடி.