குரோட்டன்ஸ்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 9, 2023
பார்வையிட்டோர்: 2,989 
 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

காரை ஷெட்டில் விட்டுவிட்டுச் சொல்லிக் கொண்டு போக வந்த போது டிரைவரின் கையில் ஒரு கட்டுக் கரும்பும், மஞ்சள் கொத்தும், பெரிதாக ஒரு சீப் வாழைப் பழமும் இருந்தன. –

“நாளைக்குப் பண்டிகைங்க.”

“அதாவது நீ வர மாட்டாய் இல்லையா?”

அவன் சிரித்தான். உடனே போய் விடாமல் தயங்கினாற் போல நின்றான். டம்பப் பையை எடுத்துத் திறந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை அவனிடம் நீட்டினாள் அவள். அவன் போவதற்கு முன், “உனக்கு எத்தினி குழந்தைங்க?” என்று இது வரை அவனைக் கேட்டிராத கேள்வி ஒன்றைக் கேட்டாள்.அவன் முதலில் கொஞ்சம் நாணினாற் போல் தெரிந்தது. அப்புறம் வேறெங்கோ பார்த்தபடி பதில் சொன்னான்: “ரெண்டு பசங்க” மேலும் ஏதாவது கேட்கக் கூடுமோ என்ற தயக்கத்தில் சிறிது நின்று விட்டு, அப்படி ஒன்றுமில்லை என்பது உறுதியானதும் புறப்பட்டான் அவன்.

வெளியே தோட்டத்தில் கூர்க்கா நடந்து செல்கிற ‘சரக் சரக்’ ஒலி மாடி வரை கேட்டது. இந்த வீட்டுக்குக் குடி வந்த நாளிலிருந்து இவ்வளவு சலிப்பூட்டும் தனிமையை அவள் உணர்ந்ததே இல்லை. டெலிபோன் ஏதாவது வந்தால் கூட வெளியே கூர்க்கா ஓடி வந்து எடுக்கா விட்டால் அவளேதான் எடுத்துப் பேச வேண்டும். இதற்கு முன்பு இப்படி நேர்ந்ததே இல்லை. இரசிகர்களின் தொந்தரவுக்குப் பயந்து அவள் போனை எடுப்பதே கிடையாது. யாராவது எடுப்பார்கள். அவளே பேசித் தீர வேண்டிய அவசியம் இருந்தாலொழிய அவளிடம் கொடுக்க மாட்டார்கள், முந்திய நாளே சமையற்காரி ஊருக்குப் போக வேண்டும் என்று போய் விட்டாள். வருவதற்குப் பத்து நாள் ஆகலாம். காரியதரிசியாக, பி.ஏ. படித்த பெண் ஒருத்தி இருந்தாள். அவளுக்குப் போன வாரம் குருவாயூரில் கல்யாணம். மறுபடி அவள் வேலைக்கு வருவாளா என்பது சந்தேகந்தான். இந்தக் கல்யாணத்துக்கு நேரில் போய் வர எண்ணியிருந்தும், கடைசியில் ஏதோ ஒரு வகைக் கூச்சமும், தயக்கமும் தடுத்ததனால் அவள் போகாமல் விட்டு விட்டாள். அந்தப் பெண் கணவனோடு, மீண்டும் தன்னைப் பார்த்து விட்டுப் போக இங்கே வந்தால், தானே வேண்டியவர்களை எல்லாம் அழைத்து ஒரு வரவேற்புக்கும், விருந்துக்கும் ஏற்பாடு செய்யலாம் என்று உள்ளூற ஓர் ஆவல் உண்டு. ஆனால் அவள் வர வேண்டுமே. கல்யாணத்துக்கு தான் நேரில் வரவில்லை என்ற கோபத்தினால் அவளும் வராமல் இருந்து விடுவாளோ என்றும் தோன்றியது.

அப்படியே வந்தாலும் இனி அதிக நாள் இங்கே தங்கி வேலை பார்க்கமாட்டாள். கணவனோடு அவன் வேலை பார்க்கிற ஊருக்கு அவள் போக வேண்டியிருக்கும். அவள் போய்விட்டால் அப்புறம் ஒரு நம்பிக்கையான புதுக்காரியதரிசியைத் தேடி அமர்த்திக் கொள்ள வேண்டியிருக்கும்.

முப்பத்தெட்டு வயதுவரை ‘குமாரி’யாகவே இருக்கும் அவளைப் போன்ற ஒரு புகழ்பெற்ற நடிகையால் அந்தச் சமயத்தில் புதிதாகத் திருமணமான பெண்ணின் மனநிலை எப்படிஎப்படி இருக்கும் என்று முழுமையாகக் கற்பனைசெய்ய முடியாமல் இருந்தது. பல படங்களில் திருமணக் காட்சிகளில் அவள் மணமகளாக நடித்திருக்கிறாள்; குடும்பம் நடத்தியிருக்கிறாள்; குழந்தை குட்டிகளைக் காப்பாற்றும் தாயாக வேடந் தாங்கியிருக்கிறாள். ஆனால் அவை எல்லாமே நடிப்பு. வாழ்க்கை நடிப்பிலிருந்து வேறுபாடுடையதாகத் தான் இருக்க வேண்டும்.

அது என்ன வேறுபாடு, எந்த அளவு வேறுபாடு என்பதைத்தான் அவளால் துல்லியமாக உணரவோ நினைக்கவோ முடியாமல் இருந்தது. ஆவலால் உந்தப் பட்டவளாக அறைக்குள் போய் மேஜையில் கிடந்த பல கடிதங்களுக்கும் அழைப்பிதழ்களுக்கும் நடுவே தேடி அந்தக் கல்யாணப் பத்திரிகையை மட்டும் தனியே எடுத்தாள்.

ஒரு விநாடியில் படித்து முடித்து விடக்கூடிய அந்தக் கல்யாணப் பத்திரிகையை ஒருமணிநேரமாகக் கையில் வைத்துத் திரும்பத் திரும்பப்படிப்பதும் யோசிப்பதுமாக இருந்தாள் அவள்.

அவளுடைய காரியதரிசிப் பெண்ணைக் குருவாயூரில் மணந்து கொள்ள இருந்த மாப்பிள்ளைக்குப்பம்பாயில் உத்தியோகம் என்பதை அழைப்பிதழிலிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. கணவன் பம்பாயிலும், அவள் சென்னையிலுமாக உத்யோகம் பார்ப்பது என்பது சாத்தியமல்ல. உடனே இல்லாவிட்டாலும் ஒரு மாதம் கழித்தாவது அவள் இந்த வேலையை விட்டுப் பம்பாய் போய்விடுவாள் என்பதை இப்போது சுலபமாகவே அநுமானம் செய்து கொள்ள முடிந்தது.

ஒருநாளும் இல்லாத புதுமையாக அன்று தான் ஏன் அப்படி டிரைவரிடம் போய், “உனக்கு எத்தனை குழந்தைங்க” என்று கேட்டு வைத்தோம் என்பதை இப்போது நினைத்தபோது அதைக் கேட்டே இருக்க வேண்டாம் என்று பட்டது அந்தக் கேள்விக்கு அவன் பதில் கூறியபோது தன் முகத்தை நேருக்கு நேர் பார்க்கக் கூசி வேறெங்கோ பார்த்துக் கொண்டே பதில் சொல்லியதையும் இப்போது நினைவுகூர்ந்தாள் அவள்.

கீழே கூர்க்கா பங்களாவின் முன்புறத்து விளக்குகளுக்கான சுவிட்சுகளை ஒவ்வொன்றாக அணைக்கும் ஒலி கேட்டது. இரவு மணி பத்துக்கு மேல் ஆகியிருக்க வேண்டும் சரியாக இந்த நேரத்துக்கு விளக்குகளை அணைத்துவிட்டு முன்புறம் கேட் அருகே உள்ள தன் அறைக்குத் தூங்கப் போய்விடுவான் கூர்க்கா. அதற்குப்பின் தான் எங்காவது ஸ்டுடியோவிலிருந்து தாமதமாகத் திரும்பினால் கதவுகளைக் காருக்காகத் திறந்துவிட்டு மூடும் வேலைதான். நேற்றோ, இன்றோ, நாளையோ தான் எங்கும் வெளியில் போய்த் திரும்பப் போவதில்லை என்பதை அவள் அவனிடம் சொல்லியிருந்தாள். ஸ்டுடியோக்கள் எல்லாம் விடுமுறை; கால்ஷீட் எதுவும் கொடுக்கவில்லை. முழு ஒய்வு. சமையற்காரி ஊரில் இல்லாததனால் ஹோட்டலுக்கு அவ்வப்போது போய்வரும் வேலையும் கூர்க்காவிடம் சுமந்திருந்தது.

அவள் மாடி ஹால் விளக்குகளை அனைத்துவிட்டுப் படுக்கையறைக்குப் போனாள். படுக்கையறைக்கு நேரே தெருவைப் பார்த்த பால்கனியின் சுவரில் தொட்டிகளில் இருந்த பூஞ்செடிகள் கொஞ்சம் வாடியிருந்தன. இரண்டு மூன்று நாட்களாக அந்தச் செடிகளுக்கு யாரும் தண்ணிர் ஊற்றவில்லை என்பது ஞாபகம் வந்தது. குளியலறைக்குள் போய் பிளாஸ்டிக் வாளியில் கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணிர் எடுத்துச் சென்று ஊற்றினாள். ஒரு வாளி நிறையத் தண்ணிர் எடுத்துக் கொண்டு போனால் ஒரே நடையில் மூன்று தொட்டிச் செடிகளுக்கும் அதையே ஈவு வைத்துச் சிறிது சிறிதாகப் பிரித்து ஊற்றிவிடலாம். ஆனால் அப்படிச் செய்துவிட்டால் ஒரே நடையில் வேலை முடிந்துவிடும். அப்போதிருந்த மனநிலையில் எதையாவது உடனே முடிந்துவிடாத எதையாவது செய்து கொண்டிருக்க வேண்டும் போல உணர்ந்திருந்தாள் அவள். எதையாவது தாறுமாறாக நினைக்கிற மனத்தை எதையுமே நினைக்கவிடாமல் உறங்கச் செய்துவிட்டுக் கைகளை எந்தச் செயலிலாவது பிணைத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது. ஆனால் அப்படிப் பிணைத்துக் கொள்கிற எந்தச் செயலிலும் தரிக்கவும் முடியவில்லை. எவ்வளவோ மெதுவாக ஊற்றியும் பத்து நிமிஷங்களில் தண்ணிர் ஊற்றி முடிந்துவிட்டது.

வழக்கமாகப் பார்க்கும் இரசிகர்களின் பாராட்டுக் கடிதங்களை ஒரு கற்றை அள்ளி வந்து படுக்கையில் குவித்துக் கொண்டு ஒவ்வொன்றாகப் படிக்கலானாள். சோர்வாகவும், தனிமையாகவும் உணர்ந்த வேளைகளில் இந்தக் கடிதங்களைப் படித்து அவள் புத்துணர்ச்சி பெற்றிருக்கிறாள். இன்றோ சோர்வும் தனிமையும், அந்த இரண்டும் அல்லாத, அவற்றையும் விடப் பெரிய வேறொன்றும் மனத்தை உறுத்திக் கொண்டிருந்தன. அது இன்னதென்று தெளிவாகப் புரியவில்லை; புரிந்து கொள்ள முடியவும் இல்லை.

சில இரசிகர்கள் தங்களுக்கு இருக்கும் அபார உற்சாகத்தில் விலாசங்கூட முழுமையாக எழுதாமல் ‘நடிகை பிரேமகுமாரி – சென்னை’ என்று மட்டுமே போட்டிருந்தார்கள். அவளுடைய பிராபல்யத்தால் கடிதங்கள் தவறாமல் வந்து சேர்ந்திருந்தன.

அன்று என்னவோ வழக்கத்துக்கு மாறாக நாலைந்து கடிதங்களைப் படித்ததுமே அவையும் சலிப்பூட்டின. எல்லாப் பாராட்டுக் கடிதங்களுமே ஒரே ராகத்தைத் திரும்பத் திரும்பக் கேட்பது போல் இருந்தன. காரண காரியங்களை உணர்ந்து பாராட்டாத குருட்டுப் புகழாகவும் அவை தோன்றின. அவளுடைய உடலழகிலும், அதனால் விளைந்த விடலை மயக்கத்திலுமே அந்தப்பாராட்டுக்கள் பிறந்திருந்தனவே தவிர, நடிப்புத்திறமையை உணர்ந்து எழுதப்பட்டதாக ஒரு கடிதமும் தோன்றவில்லை. காதற் கடிதமாக நேரடியாய் எழுதத் தெம்பில்லாத ஆட்கள் பாராட்டுக் கடிதங்கள் என்ற பெயரில் அவற்றை எழுதியிருந்தார்கள். சிலர் அதிலும் துணிந்து பச்சையான காதற் கடிதங்களாகவே எழுதியிருந்தார்கள்.

கடிதங்களும் படிப்பதற்கு அலுப்பூட்டும்படி அன்று தனக்கு வந்த மன வேதனை என்ன என்று தானே புரிந்து கொள்ள முடியாமல் தவித்தாள் அவள்.

விளக்கை அணைத்துவிட்டுஇருளின் சுகத்தில் தூங்கிவிடமுயன்றாள்.அரைமணி நேரம் புரண்டு புரண்டு படுத்தபின் துக்கமும் வரவில்லை. மறுபடியும் விளக்கைப் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தாள்.

இருந்தாற்போலிருந்து முப்பது வயது வரை திருமணம் செய்து கொள்ளாமலே படங்களில் நடித்துப் புகழேணியின் உச்சிக்குப் போய் விட்டு அப்புறம் திடீரென்று ஒருநாள் திருப்பதியிலோ குருவாயூரிலோபோய்க் கல்யணம் செய்துகொண்டுவிட்டுப் படிப்படியாய் நடிப்பதைக் குறைத்துக் கொண்டு கணவனோடு வாழத் தொடங்கி விட்ட சில சக நடிகைகளைப் பற்றி நினைத்தாள் அவள். அந்த நினைவை விரைந்து தவிர்க்க முனைந்தும் திரும்பத் திரும்ப அவள் மனத்தில் அதுவே வட்டமிட்டது.

திடீரென்று மேஜை டிராயரைத் திறந்து பாங்குப் பாஸ் புத்தகங்கள், டிபாசிட் ரசீதுகள், கணக்கு வழக்கு எல்லாவற்றையும் பார்த்தாள்.

பாங்கில் பிக்ஸட் டிபாஸிட் மட்டும் இருபது லட்சத்துக்கு மேல் இருந்தது. லாக்கரில் மூன்று லட்சத்துக்கு நகைகள் இருந்தன. கணக்கில் வராத தொகையைச் சில தனி ஆட்களுக்கு வட்டிக்குக் கொடுத்திருந்தாள்.பங்களா மதிப்புப் பதினைந்து லட்சம் இருக்கும். ஒரு பெரிய கார்.மற்றொரு சிறிய கார் மகாபலிபுரம் போகிற வழியில் பத்து ஏக்கர் அளவில் ஒரு தென்னந்தோப்பு. இப்போது ஒப்பந்தமாகியிருக்கிற படங்களோடு விட்டு விடுவதானால் கூட இன்னும் ஏழு படங்கள் இருந்தன.

மற்ற நடிகைகளுக்கும் தனக்கும் உள்ள ஒரு வேறுபாடும் அவளுக்கு இப்போது ஞாபகம் வந்தது. எப்போதாவது தீர முடியாத மனவேதனை வந்தால் அவர்களுக்கு எல்லாம் ஆறுதல் கூற அம்மாவோ, அப்பாவோ, உறவினரோ இருந்தார்கள். தனக்கு யாருமில்லை என்பதை நினைத்தபோது அவள் தவிப்பு வளர்ந்தது. முதற் படத்தை முடித்துக் கொஞ்சம் பெரிய வீட்டைத் தேடி வாடகைக்குக் குடிபோன வருஷம் அம்மா காலமானதை எண்ணியபோது அவள் கண்களில் நீர் நெகிழ்ந்தது. அம்மா போன பின்புதான் மளமளவென்று படங்கள் வந்தன. பணம் வந்தது; புகழ் வந்தது. ‘என்ன வந்து என்ன ஆகப் போகிறது? நான் தனி’ என்பதை அவள் பல முறை உணர்ந்து தவித்திருந்தாலும் இன்று படுகிற அளவு கொடுமையான சலிப்பையும் தனிமையையும் அவள் என்றுமே பட்டதில்லை.

– பாங்குப் பாஸ் புத்தகங்கள், கணக்கு வழக்குகளை டிராயரில் திணித்து மூடினாள். அதிலும் மனம் செல்லவில்லை. பால்கனிக்குப் போய் நின்று பங்களாவின் தோட்டத்தையும் புல்வெளியையும் பூஞ்செடிகளையும் அந்த நேரத்தில் அவை யனைத்தும் எழுதிவைத்த சித்திரம்போல் தெரிவதையும் பார்த்தாள். இரவும்,பனியும், மங்கிய தெருவிளக்குகளும் எல்லாம் நீலநிற மஸ்லின் துணியால் போர்த்தினாற்போல் தென்பட்டன. தண்ணிர் ஊற்றிய பின்பும் பால்கனியிலிருந்த தொட்டிச் செடிகள் இன்னும் வாடித்தான் இருந்தன. காலையில்தான் அவை சரியாகும் என்று அவளாக நினைத்துக் கொண்டு உள்ளே திரும்பினாள் மறுபடியும் மேஜையருகில் போய் அந்தக் குருவாயூர்க் கல்யாணப் பத்திரிகையை எடுத்துப் பார்த்தாள். பெருமூச்சு விட்டாள். ‘உனக்கு எத்தனை குழந்தைகள்’ என்று டிரைவரிடம் கேட்டதை நினைத்துக் கொண்டாள்.நடிப்பை நிறுத்திக் கொண்டு இருந்தாற் போலிருந்து கல்யாணம் செய்து கொண்டு குடும்ப வாழ்வில் ஈடுபட்ட புகழ்மிக்க சக நடிகைகளைப் பற்றி மீண்டும் நினைத்தாள்.

மறுபடியும் ஒரு கிளாஸ் தண்ணிர் குடித்தாள். திரும்பத் திரும்பச் செய்ததையே செய்து கொண்டிருந்தாள். புதிதாக என்ன செய்வது என்று அவளுக்குப் புரியவில்லை.

உடனே துக்க மாத்திரை சாப்பிட்டு விட்டுத் துரங்கலாமா என்று நினைத்தாள். ‘ஓவர்டோஸ்’ ஆகிவிடுமோ என்று பயமாகவும் இருந்தது.சில நாட்களில் அப்படியும் ஆகிச் சமையற்காரி டாக்டருக்குப் போன் செய்து வரவழைக்க நேர்ந்திருக்கிறது. இன்று அப்படி ஆனால் ஃபோன் செய்து டாக்டரைக் கூப்பிடச் சமையற்காரிகூட இல்லை. தூக்கம் வரவில்லையே என்ற வெறியில் கை கட்டுப்பாடின்றி மாத்திரைகளை எடுத்து வாயில் போட்டாலும் போட்டுவிடும். படுக்கையறை விளக்கை அணைக்காமலே கீழே இறங்கி ஒவ்வொன்றாக எல்லா விளக்குகளையும் போட்டுக் கொண்டு தோட்டத்தில் போய் உலாவினாள். பவழமல்லிகை மணம் குப்பென்று வந்து மோதியது. வழக்கமாக அந்த முன்நேரத்திலேயே அது பூத்துவிடும். விளக்குகள் எரிவதையும் தோட்டத்தில் யாரோ நடப்பதையும் கண்டு கூர்க்கா எழுந்து வந்தான். நடப்பது எஜமானி தான் என்று புரிந்ததும் ஒரு சலாம் வைத்துவிட்டு மெளனமாகத் திரும்பினான் அவன். அவனால் எப்படி இரவில் தூங்காமல் இருக்க முடிகிறது என்று அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. நிலா ஒளியில் அவன் நடந்து வந்தது ஒரு கம்பீரமான ராணுவக்காரன் வருவது போலிருந்தது. தக்காளிப் பழம்போல் செழித்த கன்னமும் உள்ளாழ்ந்த இடுங்கிய கண்களும் மீசையுமாக அவன்கூடத் திடீரென்று மிக மிக அழகாயிருப்பதுபோல் பட்டது அவளுக்கு.

அப்படியே தோட்டத்தில் கொஞ்ச நேரம் சுற்றிவிட்டு மறுபடி மாடிப் படியேறி மேலே போகும்போது விளக்குகளை அணைக்க அவள் மறந்திருந்தாள்.

அவள் மேலே போய்ப் படுக்கையறையில் நுழைந்தபோது கீழே கூர்க்கா வந்து மறுபடி பொறுமையாக ஒவ்வொரு ஸ்விட்சாக அணைக்கிற சப்தம் அவளுக்குக் கேட்டது.

ஏதோ நினைத்துக் கொண்டவள்போல் படுக்கையறையில் இருந்த ஆளுயரக் கண்ணாடி முன் போய் நின்றாள் அவள் புருவங்கள் கத்தரிக்கப்பட்டு மேக்கப் இல்லாமல் திடீரென்று ஒரு சீனாக்காரிபோல் தன் முகம் தெரிவதாகத் தோன்றியது அவளுக்கு. அங்கங்களும் உடற்கட்டும் செயற்கையானதொரு செழிப்பைக் காட்டினாலும் முகம் முற்றியிருப்பதை அவளே உணர்ந்தாள். கண்ணிமையின் கனிவும் குறுகுறுப்பும் தெரியும் வேறு பல இளம்பெண்களின் முகத்திலிருந்து தன் முகம் வேறுபடுவதை இப்போது தன் மேல் தனக்கே ஏற்படும் ஒருவித நிர்தாட்சன்யத்தோடு உணர்ந்தாள் அவள். மேக்கப் போட்டு காமிராவில் பிடித்துப் படமாகப் போகும் போது இந்த முகந்தான் பலரது உள்ளங்களைச் சூறையாடும் என்பதை நம்புவது இப்போது அவளுக்கே அசாத்தியமாக இருந்தது. ஒப்பு நோக்கி உணர்வதற்காக அவளே பென்சிலை எடுத்துப் புருவங்களைத் தீட்டிக் கொண்டு பவுடர் பூசி, நகைகளை அணிந்து மறுபடி பார்த்தாள். இப்போது நம்பிக்கை அளிக்கிற வசீகரம் தெரிந்தது.

இரவு மணி இரண்டை நெருங்கியிருக்க வேண்டும். தெருவில் இரண்டாவது ஆட்டம் சினிமா விட்டுப் போகிற கூட்டத்தின் குரல்கள் திடீரென்று வால்யூமை அதிகப்படுத்தின ரேடியோவிலிருந்து கேட்பதுபோல் கேட்டன. அதில் யாரோ ஒருத்தன் கொச்சையாகவும் பச்சையாகவும் அவளைப் பற்றி உரத்த குரலில் தன்னுடன் வருகிறவனிடம் பேசிக் கொண்டு போன வாக்கியத்தை அவளும் கேட்டாள்.

உடனே தூங்க வேண்டும். எல்லாவற்றையும் மறந்துவிட்டுத் தூங்க வேண்டும். பணம், புகழ், வேதனை, பெயர் புரியாத ஊமை அவஸ்தை அத்தனையையும் மறக்கத் தூங்குவதுதான் ஒரே வழி. ஆனால் தூக்கமும் வரவில்லை. அந்தக் கல்யாணப் பத்திரிகை, குழந்தை குட்டிகளோடு மறுநாள் வீட்டில் தங்கிப் பண்டிகை கொண்டாடப் போன டிரைவர், கல்யாணமாகி நடிப்பதை நிறுத்திவிட்ட நடிகைகள் எல்லாருமே திரும்பத் திரும்ப நினைவு வந்து தூக்கத்தை வரவிடாமற் செய்து கொண்டிருந்தனர்.

எப்படியும் தூங்கியே தீருவதென்று விளக்கை அணைத்துவிட்டுப் படுத்தாள் அவள்.இன்னதென்று சொல்ல முடியாமல், ஏதோ மனத்தைக் குடைந்தது; அதை ஒரு வாக்கியத்திலும் சொல்ல முடியாது, ஒராயிரம் வாக்கியத்திலும் சொல்ல முடியாது போலிருந்தது.

படுக்கையில் புரண்டபடியே எதை எதையோ ஒழுங்காகவும், தாறுமாறாகவும் நினைத்தாள் செழுமையான முகமும், அரும்பிய மீசையுமாக அந்தக் கூர்க்கா தோட்டத்தில் நடந்து வருவதை மனக்கண்ணில் மீண்டும் பார்த்தாள். தெருவில் இரண்டாவது ஆட்டம் படம் விட்டுப் போனவர்கள் பேசிக் கொண்டு போனதை மீண்டும் நினைத்தாள்படுக்கை ஒரு கொந்தளிக்கும் சமுத்திரமாகியது. உறக்கம் மட்டும் வரவில்லை. கரையும் தெரியவில்லை.

அந்தக் கரை தெரிகிறவரை நீந்தியே ஆகவேண்டும். கரையும் தெரியவில்லை. உறக்கமும் வரவில்லை. ஆனால் அதற்குள் காலை வந்துவிட்டது. வீடு பெருக்கித் தரை மெழுகிக் கோலம் போடுகிற ஆயா வந்தாள். அவள் படுக்கையறையை பெருக்க வந்தபோதும் பிரேமகுமாரி விழித்தபடி படுத்திருந்தாள். படுக்கையிலிருந்தே நேர் எதிரில் தெரிந்த பால்கனியின் தொட்டிச் செடிகள் இன்னும் வாடியே தென்பட்டன. அவளுக்கு முன் இரவில் தான் தண்ணீர் ஊற்றியது நினைவு வந்தது. அப்படியும் அந்தச் செடிகள் வாடியிருக்கவே தான் ஊற்றிய நீர் போதாதோ என்று நினைதது, “ஆயா! நீ பெருக்கறதுக்கு முன்னே அந்தத் தொட்டிச் செடிங்களுக்குக் கொஞ்சம் தண்ணி ஊத்திட்டு அப்புறம் பெருக்கு.நேற்று நான் ஊத்தினேன்.அது போதாது போலிருக்கு” என்றாள் அவள். ஆயாவாளியில் தண்ணிர் எடுத்துக்கொண்டு போனாள். போனவள் சில விநாடிகளில் திரும்பிவந்து,”தண்ணி ஊத்தாததுனாலே கோளாறு இல்லிங்கம்மா. தொட்டிலே மண் மாத்தனும், அடி மண் செத்துப் போச்சு செடிக்கு வேரூன்றதுக்கு இடம் இல்லே. எவ்வளவு தண்ணி ஊத்தினாலும் வேரூன்றத்துக்கு மண் இல்லாட்டி வாடித்தானம்மா போவும்.”

“……”

“தோட்டத்திலே மரத்தைப் பாருங்கம்மா. நாம தண்ணி ஊத்தாட்டியும் அது ஜிலுஜிலுன்னுதான் நிக்குது. தொட்டிச் செடி அப்பிடியா? கொஞ்ச மண்ணிலே வேர் பரவறதுக்கு எடம் எது? அந்தக் கொஞ்ச மண்ணும் உரம் செத்துப் போனா இன்னா செய்யிறது?”

“……”

பிரேமகுமாரிக்கு மெய் சிலிர்த்தது. இரவெல்லாம் அவளுக்கு ஒரு வாக்கியத்திலும் சொல்லத் தெரியாமல் இருந்த வேதனை எதுவோ அதை இந்த ஆயா ஒரே வர்ககியத்தில் துல்லியமாகச் சொல்லியே விட்டாள்.

“வேரூன்ற மண் வேண்டும்.”

உறக்கமின்றி ஓயாமல் நீந்தி நீந்தி அலுத்தபின் கரை தெரிந்தாற்போலிருந்தது. ஆனால் அந்தக் கரையை அடைவதற்கு இன்னும் நெடுந்துரம் நீந்த வேண்டும் போலவும் இருந்தது.

சிறிதுநேரத்துக்கெல்லாம் கூர்க்காவைக் கூப்பிட்டு வாடிப்போன அந்த மூன்று தொட்டிக் குரோட்டன்ஸ்களையும் தோட்டத்தின் ஒரு மூலையில் கொண்டுபோய் போட்டு உடைத்து விடும்படி கட்டளையிட்டாள் அவள்.

தொட்டிச் செடிகளை எடுத்தபின் பால்கனி வெறிச் சென்றிருந்தது. ஆனால் நேர் எதிரே தோட்டத்தின் மகிழ மரமும், வேப்ப மரமும் பச்சென்று அடர்த்தியாய்த் தெரிந்தன.

– கல்கி, தீபாவளி மலர், 1971, நா.பார்த்தசாரதி சிறுகதைகள் (இரண்டாம் தொகுதி), முதற்பதிப்பு: டிசம்பர் 2005, தமிழ்ப்புத்தகாலயம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *