குரு பெயர்ச்சி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 22, 2013
பார்வையிட்டோர்: 9,403 
 

காஃபி மேக்கரில் கோப்பையை நிறைக்கும்போது ஃப்ளாஸ்ஸி பின்னாலிருந்து முழங்கையை சுரண்டினாள். ‘எப்படிப் போயிட்டிருக்கு ரோசெஸ்டர் பிராஜெக்ட்?’ இன்றைய தேதியில் கம்பெனி முழுவதும் இந்த பிராஜெக்டைப் பற்றித்தான் பேச்சு. மின்னசோட்டா அரசின் சிவப்பு நாடா பிரச்சினைகளைப் பற்றி கொஞ்சம் புலம்பிவிட்டு வெண்டைக்காய் வழவழப்போடு ‘50-50 சான்ஸில் ப்ராஜெக்டை வென்று விடுவோம்’ என்று சொல்லிவிட்டு வந்தேன். மேசை மேல் டிரேக் (Drek) ’Product Manager – Rochester Project’ என்ற குறிப்போடு கூடவே ’இராமநாதன் தணிகாசலம்’ தலைப்போடு ரெஸ்யூம் ஒன்றையும் வைத்திருந்தான்.

மின்னஸோட்டா மாநிலத்தில் ஒரு சிறிய ஊர் ரோசெஸ்டர். மின்னஸோட்டா அரசாங்கம் ரோசெஸ்டரில் பெரிய தொழில் வளாகம் கட்ட திட்டம் தீட்டி ஒப்பந்ததாரர் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இறுதிச் சுற்று ஏலம் வரை நாங்களும் வந்து விட்டோம். எங்கள் கட்டுமான நிறுவனத்தில் டிரேக் பெரிய தலை என்றால், நான் சின்ன தலை. பத்து தலை ராவணனே இருந்தாலும் தலை தலையாக சொல்லி சொல்லி கிள்ளி எடுத்துக் கொண்டிருக்கிற பொருளாதார மந்தச் சூழலில் ரோசெஸ்டர் காண்டிராக்ட் கிடைத்த்தால் எல்லார் தலையும் தப்பியது. கூட நிறைய தலைகளும் தேவைப்படும். அதற்கான ஆள் தேர்வும் ஒரு பக்கம் நடத்திக் கொண்டிருக்கிறோம். காண்டிராக்ட் கிடைத்த கையோடு பணிகளை முழுவீச்சில் துவங்க வேண்டுமே. அதில் பிரச்சினை இல்லை. ஆனால் இந்த ‘இராமநாதன்’ என்ற பெயரைக் படித்ததுமே எனது பிபி மொத்தமாக இறங்கிவிட்டது. எத்தனை வருடங்களாக இந்தப் பெயர் துரத்திக் கொண்டிருக்கிறது என்னை?

மெலிதான மெட்டல் பிரேமில் கண்ணாடி போட்டுக்கொண்டு பெரிய பன் கொண்டை வைத்துக் கொண்டிருந்த இளமையான ஒன்றாம் வகுப்பு கிரேஸ் டீச்சர் ஞாபகம் வந்தார். ’அழகான கையெழுத்தைப் பாருங்கள்’ என்று அடிக்கடி எனது நோட்டுப் புத்தகத்தை உயர்த்தி வகுப்பறை முழுவதும் காட்டுவார். கடன் வாங்கி கழிக்க அவர் சொல்லிக் கொடுத்தபோது வகுப்பே மிரண்டு சுருண்டு போயிருக்க எனக்கு கற்பூரமாக கணக்குகள் பிடித்துக் கொண்டது. எல்லாம் கொஞ்ச நாட்கள்தான். மூக்கை உறிஞ்சுக்கொண்டே வந்து சேர்ந்தான் குள்ளன் இராமநாதன். சரியாக இரண்டு மாதம்தான். ஹெட்மாஸ்டர் குரியகோஸ் வந்து ‘குரு பிரசாத்… பிரமோட்டட் டூ செகண்ட் கிளாஸ்’ என்று வாழ்த்திவிட்டு எனது அப்பா மேனேஜராக இருந்த பாங்கில் டூ வீலர் லோன் வாங்க அச்சாரம் போட்டுவிட்டுப் போய்விட்டார். ‘எம்பையனுக்கு டபுள் பிரமோஷன் போட்டுட்டாங்க’ என்று அம்மா பீற்றிக் கொண்டிருந்தாலும், கிரேஸ் மிஸ்சின் அண்மையை இழந்த வலி எனக்குத்தான் தெரியும். அப்பொழுதெல்லாம் இராமநாதன் என்ற பெயரின் மேல் எனக்கு எந்த சந்தேகமும் வரவில்லை.

மும்பைக்கு அப்பாவிற்கு டிரான்ஸ்ஃபர் ஆனபோது ஆச்சார்ய தீன தயாள் பள்ளியில் ஏழாம் வகுப்பிற்கு கஷ்டப்பட்டு சேர்த்தார். கிரிக்கெட் பயிற்சிக்கு மிகவும் பிரபலமான பள்ளி. ராமதேவ் அர்சேக்கர் கோச்சாக பணியாற்றிக் கொண்டிருந்தார். இன்றும் இந்திய அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் பிரபல மும்பை வீரர்கள் பலரை இளமையில் பட்டை தீட்டிய புண்ணியவான் அவர். இரண்டு வருடங்கள் கடுமையாக உழைத்து ஒன்பதாம் வகுப்பில் அவர் கடைக்கண் பார்வையில் படுகிற மாதிரி எனது மட்டையடித் திறமைகளை வளர்த்துக் கொண்டேன். எப்படியும் அடுத்த வருடம் அவருடைய பயிற்சி அகாடமியில் இடம் பெற்று விட்டால் தேசிய under-16 அணியில் கட்டாயம் வாய்ப்பு பெற்று விடலாம். அது ஒரு தங்க வாய்ப்பு இந்திய அணியில் பிரவேசிக்க. நினைத்தபடி நடந்திருந்தால் இன்று கோக்கைக் குடித்துக் கொண்டே கோடிகளை அள்ளியிருப்பேன். அரைப் பரீட்சை விடுமுறையில் வந்து சேர்ந்தான் கருப்பு இராமநாதன். தந்தை தவறிப் போய்விட்டதால் இடம் மாறி ஏதேதோ அரசியல் தலைவரின் சிபாரிசினால் அவ்வளவு தாமதமாக வந்து பள்ளியில் சேர்ந்திருந்தான். சரியாக இரண்டு மாதங்கள்தான், என் அப்பாவிற்கு கேரளாவில் ஷோரனூர்க்கு மாற்றல் உத்தரவு வந்துவிட்டது. கிரிக்கெட் கனவை மூட்டைக் கட்டிவிட்டு ஷோரனூரில் ஐஐடி பயிற்சி புத்தகங்களுடன் மாரடிக்க ஆரம்பித்தேன்.

மதுரை தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் இடம் கிடைத்து ஒரு வருடத்தில் நல்ல மதிப்பெண்கள் பெற்று, எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன்ஸ் பிரிவு எடுத்த மிதப்பில் இருந்தபோது புதியதாக் வந்து சேர்ந்தவன் மொட்டைத்தலை இராமநாதன். பாலிடெக்னிக் படித்து விட்டு நேரடியாக பி.இ. இரண்டாம் வருடம் வந்து சேர்ந்தான். அவனைச் சந்தித்த இரண்டாம் மாதம் கல்லூரி பின்புறம் இருக்கும் மயில்காட்டில் யசோதாவின் நட்பை வென்றுவிட்ட மகிழ்ச்சியில் பியர் குடித்துவிட்டு கன்னாபின்னாவென்று புல்லட்டை ஓட்டியதில் தூக்கியடித்து மல்டிப்பிள் ஃப்ராக்சரோடு திருச்சி திரும்பிவிட்டேன். பிழைத்து வந்ததே புண்ணியம் என்று அம்மா திருச்சியிலே படி என்று செய்ண்ட் ஜோசப்பில் இயற்பியலில் சேர்த்து விட்டார்கள். ஆமை புகுந்த வீடு மாதிரி இந்த இராமநாதன் என்ற பெயர் எனது வாழ்க்கையில் எதிர்ப்படும் போதெல்லாம் ஏதாவது சிக்கல்தான் என்று எனக்கு புரிய ஆரம்பித்தத்து அப்பொழுதுதான்.

மூச்சைப் பிடித்துக் கொண்டு ஒரு எம்.சி.ஏ படித்து புவனேஷ்வர் பக்கம் ஒரு வேலையும் தேடிக் கொண்டு விட்டேன். இரண்டாயிரம் ஆண்டு பிறந்தவுடன் கணிணிகள் எல்லாம் செயலற்றுப் போய்விடும் என்று ஊரெல்லாம் வதந்தியாக இருந்தக் காலம் அது. ’ஐ அம் ராம். ராம்நாத்’ என்று ஸ்டைலாக அறிமுகப்படுத்திக் கொண்டான் இராமநாதன் எம்பிஏ. ஐஐஎம்-மில் படித்துவிட்டு மார்கெட்டிங் மானேஜராக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தான். சரியாக இரண்டு மாதங்களில் y2k எல்லாம் ஒரு புண்ணாக்கும் இல்லை என்று மொத்தமாக பிளக்கை புடுங்கி புவனேஷ்வரிலிருந்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்கள். அன்று எனக்கு நன்றாக புரிந்து விட்டது. இராமநாதன் என்று யார் எனது வாழ்க்கையில் வந்தாலும் உத்தரவாதமாக இரண்டு மாதங்களில் குரு பெயர்ச்சிதான்.

அப்புறம் Autocad அது இது என்று படித்து இன்று இங்கே ஐந்து வருடங்களாக குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கிறேன். ரெஸ்யூமின் பின்புறம் டிரேக் எழுதியிருந்த குறிப்பைப் பார்த்தேன். ‘வெரி இம்ப்ரஸிவ். ப்ளீஸ் டாக் டு ஹிம் அண்ட் வொர்க் அவுட் த ஆஃப்பர் வித் ஷெரோன்’. டிரேக்கிற்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டு விட்டால் நிச்சயம் உள்ளே இழுத்துப் போட்டுவிடுவான். ஷெரோனை தொடர்பு கொண்டு டிரேக்கின் உள்ள கிடக்கையை கோடிட்டு காட்டிவிட்டு இராமநாதன் தணிகாசலத்திற்கு அடுத்த கட்ட நேர்முகத் தேர்வுக்கான நாளைக் குறிக்க சொல்லிவிட்டு கொஞ்சம் நோண்ட ஆரம்பித்தேன். தலைவர் தற்போது வெஸ்போர்ன் கண்ஸ்டிரக்‌ஷண்ஸ் என்கிற சாண்டியாகே நிறுவனத்தில் இருக்கிறார். எனக்கு பரிச்சயமான, பிரபலமான நிறுவனம்தான். அங்கிருந்து மின்னஸோட்டா வருவதற்கு சம்மதிக்கிறான் என்றால் அங்கே நிலமை சரியில்லை என்றுதான் அர்த்தம். ஒன்று மட்டும் நிச்சயம். எப்பொழுது மொத்தமாக விழுவேனோ என்று தடுமாறிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் இன்னொரு இராமநாதனா? அதுவும் டிரேக்கி எதிர்பார்ப்பை திருப்தி செய்திருக்கிறான் என்றால்… சுத்தம்.

சாண்ட்பைப்பர் கண்ஸ்டிரக்‌ஷன் சைட்டில் ஒரு மீட்டிங்கிற்காக போய்க் கொண்டிருக்கும் போது காருக்கு கேஸ் (gasoline) போட ஒதுங்கினேன். அப்பொழுதுதான் அந்த திட்டம் சட்டென்று உருவானது. உண்மையில் இதுவரை இராமநாதன் என்றப் பெயரில் பயமிருந்தாலும் அதை விதி என்று எண்ணி பேசாமல்தான் எதிர் கொண்டு இருந்திருக்கிறேன். எதிர்த்து விளையாடிப் பார்க்க வேண்டும் என்றெல்லாம் தோன்றியதில்லை. ஆனால் தற்போது வேலைக்கே ஆப்பு வரும் நிலையில் வேறு வழியில்லை. வெஸ்போர்ன் நிறுவனமும், ரோசெஸ்டர் காண்டிராக்டில் இறுதிச் சுற்றில் இருக்கிறார்கள் என்பதுதான் என்னுடைய திட்டத்தின் ஆணிவேர். டிம் கிரேமர் என்று ஒரு ரிலேஷன்ஷிப் மானேஜர் அதில் இருக்கிறான். அருகிலிருக்கும் ஏதாவது ஸ்டார் பக்ஸிலிருந்து இணையத்தில் ஏறி முகமறியா அநாமதேயமாக டிம்மைத் தொடர்பு கொண்டு சில உள்ளடி வேலைகள் செய்தால் இராமநாதன் எனது வாழ்க்கையில் குறுக்கிடாமல் பார்த்துக் கொள்ளலாம். வெகு ஜாக்கிரதையாகப் பண்ண வேண்டிய விஷயமிது. ஸ்டார்பக்ஸ் எங்கிருக்கிறது இங்கே?

ரோசெஸ்டர் காண்டிராக்ட் கை நழுவிப் போனதில் அலுவலகத்தில் பெரிய அதிர்ச்சி அலை பரவியது உண்மைதான். இந்த இரண்டு மாதங்களில் சிலப் பெருந்தலைகள் மூழ்கும் கப்பலிலிருந்து குதிப்பது போல் தப்பித்து விட்டார்கள். ஃப்ளாஸ்ஸி நியூயார்க் பக்கமாக டீச்சர் உத்தியோகம் பார்த்துக் கொண்டு போய்விட்டாள். எனக்கு மட்டும் சிறிதளவு நிம்மதி. ஏனென்றால், கை நழுவிப் போன ரோசெஸ்டர் கட்டுமானப் பணி இராமநாதன் தணிகாசலம் வேலை செய்யும் வெஸ்போர்ன் நிறுவனத்திற்குத்தான் கிடைத்திருக்கிறது. ஆகவே ஆமை அபாயம் தற்சமயம் இல்லை. ஆட்குறைப்பு என்றாலும் முதல் கத்தி டிரேக்கிற்குத்தான். டிரேக் இல்லாத நிலையில் இருக்கும் ஒரு சில குஞ்சு குளுவான் பிராஜெக்டிற்கு கட்டாயம் நான் தேவைப்படுவேன். ஒரே கல்லில் பல மாங்காய்கள் அடித்தாகிவிட்டது. சட்டப்படி பார்த்தால் இந்தக் கல் கொஞ்சம் கிரிமினல் கல்தான். எங்களது சில முக்கிய பிராசஸ் டாக்குமெண்டுகளை, டிம் கிரேமரிடம் கொடுத்ததினால்தான் வெஸ்போர்ன் இறுதிச் சுற்றில் வெல்ல முடிந்தது. ஆனால் யாரும் என்னைக் கண்டுபிடிக்க முடியாத பக்கா திட்டம் அது.

இந்த வெள்ளிக்கிழமை கண்ணில் தென்பட்டவர்கள் யாரும் TGIF (Thank God It is Friday) என்றெல்லாம் முகமன் கூறிக் கொள்ளவில்லை. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆட்குறைப்பு பயத்திலேதான் போய்க் கொண்டிருந்தது. ஐந்து மணி வரை மேலாளரிடமிருந்து அழைப்பு வராமல் இருந்தாலேப் போதும். தப்பித்தோம் என்று வாரம் வாரமாக தள்ளிக் கொண்டிருந்தார்கள். அன்று டிரேக்கிடமிருந்து அழைப்பு வந்தபோது எனக்குக் கொஞ்சம் குறுகுறுப்பாக இருந்தாலும் பயமில்லை. டிரேக்கைத் தூக்கி விட்டார்கள் என்று எல்லோரும் எதிர்ப்பார்த்துக் கொண்டுதான் இருந்தோம்.

‘எனக்கு அப்புறம் இந்தத் துறையை நீ திறம்பட நடத்தி செல்வாய் என்று தெரியும்’

என்பது போன்ற பேச்சுகளை கேட்கத் தயார்படுத்திக் கொண்டு போனேன். டிரேக் அவனது அறை வாயிலிலே நின்று கொண்டிருந்தான்.

‘குரு! பயப்படத் தேவையில்லை. உன்னைப் பற்றி உயர்வாக சொல்லியிருக்கிறேன். தைரியமாக, உண்மையை மட்டும் சொல் அவர்களிடம்’

என்று எனது கையைப் பிடித்துக் கொண்டு காதில் சொன்னவன், அறையுனுள் செல்லுமாறு சைகை செய்தான். சுத்தமாக புரியாமல் அறையினுள் எட்டிப் பார்த்தால் கறுப்பு சூட் அணிந்து இரண்டு பேர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களில் வெள்ளை முறுக்கு மீசை ஆசாமி எழுந்து தனது அடையாள அட்டையக் காட்டினான் ‘ஐயாம் இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரு ஹட்ஸன். இவர் டிடெக்டிவ் ஜோ டிகாலே. உங்களைச் சில கேள்விகள் கேட்க விரும்புகிறோம். நீங்கள் அமருங்கள்’

எனது கால் மூட்டுகள் கழண்டு போனது போல தொப்பென்று உட்கார்ந்தேன். ஒரு நம்பிக்கை கீற்று தோன்றியது. இரண்டு மாதங்களுக்கு முன்னால் இராமநாதன் என்று பெயரை மட்டும்தான் படித்திருக்கிறேன். இராமநாதன் என்று யாரையும் நேரில் சந்தித்திருக்கவில்லை. அதனால் குருபெயர்ச்சி அதற்குள் ஏற்பட முடியாது. இது ஏதோ காரை டபுள் பார்க்கிங் பண்ணியதற்கோ, சிவப்பு விளக்கைத் தாண்டியதற்கோ துரத்தி வந்திருக்கிறார்கள் என்று பெரிதும் நம்பினேன்.

‘எதுவும் IRS பிரச்சினையா? வரி எல்லாம் பக்காவாக கட்டிவிட்டேனே’ என்று அசட்டு சிரிப்பு சிரிதேன்.

’இது உங்கள் கையெழுத்தா பாருங்கள்’ என்று நீட்டிய பேப்பரில் க்ரெடி கார்ட் பில்லின் ஃபோட்டோ பிரதி. உற்றுப் பார்த்ததில் சாண்ட்பைப்பர் ஊரில் கிளேட்டன் தெருவிலிருந்த கேஸ் ஸ்டேஷனில் பெட்ரோல் போட்ட பில் என்று தெரிந்தது.

’ஆம். சாண்ட்பைப்பரில் எங்கள் கட்டுமானப் பணி ஒன்று நடந்து கொண்டிருந்தது. அங்கே மீட்டிங்க்கு போயிருந்தேன்’

இன்ஸ்பெக்டர் திரும்பி ஜோவைப் பார்த்துவிட்டு என்னிடம் சொன்னார்.

‘மிஸ்டர் குரு பிரசாத். உங்கள் கம்பெனி இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடந்த’

குனிந்து தனது கையிலிருந்த குறிப்புகளை சரிபார்த்துக் கொண்டே

‘ரோசெஸ்டர் நகரத்து கட்டுமான பணிகளுக்கான ஒப்பந்த ஏலத்தில், சில முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று புகார் தந்திருந்தார்கள். அந்த விசாரணையில் நீங்கள் இவா மெண்டிஸ் என்ற பெயரில் வெஸ்போர்ன் கம்பெனியின் மானேஜரான டிம் கிரேமர்….’

’வெய்ட் வெய்ட்’ எனது குரலிலிருந்த நடுக்கத்தை மறைக்க முடியவில்லை. ’சாண்ட்பைப்பருக்கு நான் சென்றதற்கும் நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டிற்கும் என்ன சம்பந்தம்?’

ஜோ தனது பையிலிருந்த கத்தையான பேப்பர்களை எடுத்து மேஜை மேல் வைத்தார்.

‘இந்த ப்ராசஸ் டாக்குமெண்டுகளுக்கு உங்கள் துறையில் இருவருக்குத்தான் அனுமதி இருக்கிறது இல்லையா? மிஸ்டர் டிரேக் சைடலுக்கும், உங்களுக்கும் மட்டுமே’

’எனக்கு அனுமதி இருக்கிறது என்ற ஒரே காரணத்தினால் நான் அதைப் போட்டி கம்பெனிகளுக்கு கொடுத்திருப்பேன் என்று சொல்வது எனது நேர்மையை குற்றஞ்சாட்டுவதுப் போல’ என்னால் நம்பவே முடியவில்லை. எப்படி இவா மெண்டிஸ் ஐடி எல்லாம் துருவி எடுத்தார்கள்? இருந்தாலும் என்னை அதில் சம்பந்தபடுத்த எந்த முகாந்திரமும் இல்லை. தேவை தைரியம். பதட்டத்தை காண்பிக்கவே கூடாது.

தொடர்ந்து மேலும் சில பேப்பர் கத்தைகளை எடுத்த ஜோ

‘இது கிளேட்டன் தெருவில் இருந்த ஸ்டார்பக்ஸிலிருந்து இவா மெண்டிஸ் என்றப் பெயரில் டிம் கிரேமரைத் தொடர்பு கொண்டு செய்த இணைய உரையாடலின் ப்ரிண்ட் அவுட். t-90 கணெக்‌ஷன் ஐபி அட்ரஸ்… எல்லாவற்றுக்கும் மேலாக…’

என்று இடைவெளி விட்டவர்

‘அந்த பெட்ரோல் பங்ககில் நீங்கள் சுற்று வட்டாரத்தில் ஸ்டார்பக்ஸ் எங்கிருக்கிறது என்று விசாரித்திருக்கிறீர்கள். உடன் சில நிமிடங்களில் இந்த இவா மெண்டிஸ் அக்கவுண்ட் அருகிலிருந்த ஸ்டார் பக்ஸ் இணையத்தின் வழியாக துவங்கப்பட்டிருக்கிறது. நேர வித்தியாசம் எல்லாம் கோர்வையாக இருக்கிறது. முக்கியமாக நீங்க விசாரித்த இந்திய மாணவனின் சாட்சியம் பக்காவாக இருக்கிறது. உங்கள் கார் லைசன்ஸ் பிளேட், உங்கள் முக அடையாளம் எல்லாம் மிகச் சரியாக சொல்லிவிட்டான். ஆகவே இந்த டாக்குமெண்டுகள் வெஸ்போர்ன் நிறுவனத்தினருக்கு கிடைத்ததில் இப்பொழுது நீங்கள்தான் எங்களின் சந்தேகப் பட்டியலில் முதலானவர்.’

எந்த இந்திய மாணவன்? யாரிடமோ விசாரித்த ஞாபகம் இருக்கிறது. யாரவன்? எங்கேயிருந்து முளைத்தான்?

இன்ஸ்பெக்டர் ஆண்ட்ரு சொன்னார் ‘குரு பிரசாத், உங்களை சந்தேகத்தின் பேரில் கைது செய்கிறோம். நீங்கள் சொல்லும் பதில்கள் பதிவு செய்யப்பட்டு உங்களுக்கெதிராக பயன்படுத்தப்படும்….’ நீளமாகப் பேசிக் கொண்டே போனார்.

குறிப்பு: பின்வரும் உரையாடல் எனக்கும் கதை சொன்ன குருவிற்கும் இடையே நடந்தது.

எனது குறிப்பு புத்தகத்தை மூடிவிட்டு கம்பி தடுப்புக்கு அப்பாலிருந்த குருபிரசாத்தைப் பார்த்தவாறே தொலைபேசியில் சொன்னேன்.

‘குரு! ஒரே ஒரு தகவல் மட்டும் தேவை. அது கிடைத்தால் முழுமையாகிவிடும்’

ஆல்ம்ஸ்டட் (Almstead) கவுண்டி ஜெயிலின் பார்வையாளர் அறை. குருபிரசாத் பதில் எதுவும் சொல்லாமல் கை நகங்களை பார்த்துக் கொண்டிருந்தான்.

‘உங்களுடைய முந்தைய அனுபவங்களைப் பார்த்தால் ஒவ்வொன்றிலும் நீங்கள் இராமநாதன் என்ற நபரை நேரில் சந்தித்திருக்கிறீர்கள். உங்கள் தியரிப்படி பார்த்தால் நீங்கள் சந்திக்காத இராமநாதனால் எப்படி நீங்கள் ஜெயில்வரை…?’

குரு வெறுமையான கண்களோடு என்னைப் பார்த்துவிட்டு சொன்னான்

‘இராமநாதனை சந்தித்தேனே.’

‘எப்பொழுது? இரண்டு மாதங்களுக்கு முன்னரா?’

‘ஆம். சாண்ட்பைப்பரில் கேஸ் ஸ்டேஷனில் அன்று சந்தித்த இந்திய மாணவன். அவன் பெயரும் இராமநாதன்தான். லைசன்ஸ் ப்ளேட்டில் ‘RAMNAT’ என்று இருந்தது. பிறகுதான் போலிஸில் சொன்னார்கள். அவன் முழுப்பெயர் இராமநாதன் கொல்லிவாக்கமாம்’

கவுண்டி ஜெயில் விட்டு வெளியில் வரும்போது குருவின் கேஸ் ட்ரையல் வரைப் போகுமா என்று யோசனையாக இருந்தது. செம வீக்கான கேஸ். ஆனால் இத்தனை குரு பெயர்ச்சி நடந்தும் அவனுக்கு திருமணம் மட்டும் நடக்கவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *