குருவும் சிஷ்யனும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 29, 2018
பார்வையிட்டோர்: 5,074 
 
 

சிவகுரு என்பது அவருடைய இப்போதைய ஞானப் பெயர். முதலில் அவரது பெயர் சிவச்சந்திரன் என்று சாதாரணமாக இருந்தது. தனக்குத் தானே ஞானம் கிடைத்ததாக அவசரக் குடுக்கை போல் எண்ணியதால் அவர் சந்திரனைத் தூக்கி எறிந்துவிட்டுச் சிவத்தை மாத்திரம் முதலில் எடுத்தார். பின்பு அதை மெருகூட்டக் குருவைச் சேர்த்துக் கொண்டார். கடைசியாக மொத்தமாகச் சிவகுரு என்று தனது அடையாளத்தை மாற்றிக் கொண்டார்.

‘உன்னை நீ அறியாது, நீ உன்னையும் ஏமாற்றி, மற்றவர்களையும் ஏமாற்றுகிறாய்.’ என்று ஒரு துறவி சிவகுரு அவரைத் தரிசிக்கச் சென்ற இடத்தில் பிரசாதமும் கொடுக்காது பேசி அனுப்பியதைப் பற்றி அவர் யாரிடமும் சொல்வது இல்லை. அவரால் அதை என்றும் மறக்க முடியாது. அதை எண்ணும் போது எல்லாம் அவருக்குக் குழப்பமாக இருக்கும். கோபம் வரும். கவலையாக இருக்கும். மான அவமானத்தைத் தான் வென்றதாய் நினைத்தாலும் அவமானமாய் இருக்கும். இந்த வாழ்வை இத்தோடு முடித்துக் கொள்வோமோ என்று அவர் பல முறை எண்ணியது உண்டு. உண்மையில் அவருக்கு அந்தத் துறவி ஏன் அப்படிச் செய்தார் என்று இன்றும் விளங்கவில்லை. சிவச்சந்திரன் சிவகுரு ஆகமுதலே அவருக்கு ஒரு சிஷ்யன் கிடைத்திருந்தான். அவன் என்றும் விலகாது அவரைப் பின்தொடர்ந்தான்.

சிஷ்யன் என்றாலும் அவன் சிஷ்யன் இல்லை என்பது போல் நடந்து கொள்வான். இது தனக்குத் தானே ஏற்படுத்திக் கொள்ளும் பிரச்சனை என்பது அவருக்கு அப்போது விளங்கவில்லை. ஆனால் சிஷ்யன் எப்போதும் குருவை அதைச் செய்தால் நன்றாக இருக்கும் இதைச் செய்தால் நன்றாக இருக்கும் என்று நச்சரிப்பான். தன்வழியில் அவரை இழுத்துச் செல்வதில் வெற்றி காண்பான். அவனுக்குத் தனது பிரசன்னத்தின் நோக்கம் என்ன என்பது தெளிவாகத் தெரியும். தன்னிடம் இருந்து தனது குரு தப்பிக்க முடியாது என்பதை அவன் விளங்கி வைத்திருந்தான். அதற்கு ஏற்பவே அவன் மிகவும் தந்திரமாகச் செயற்படுவான்.

அவன் சிவகுருவைக் குடிலைவிட்டு வெளியே வா வா என்று எப்போதும் இடைவிடாது நச்சரிப்பான். ‘உலகே சுவர்க்கம். அதை முதலில் தரிசிக்க வாருங்கள்.’ என்று ஆசை காட்டுவான். சிவகுருவை வெளியே கூட்டிச் செல்வதில் அவனுக்கு அளப்பரிய பிரியம். முதலில் பணிவாகப் பேசிவந்த சிஷ்யன் வரவரப் பழகப் பழக அதிகாரத் தொனியோடு பேசத் தொடங்கினான். சிவகுருவுக்கு அவன் பேசுவதில் நியாயம் இருப்பது போல் இருக்கும். அவன் சொல்வதை மறுக்க முடியாமல் இருக்கும். சில வேளைகளில் அவன் சொல்வது பிழை என்று தோன்றினாலும் அவனே அது சரி என்று அதற்கான காரணத்தை எடுத்துச் சொல்லுவான். அதில் சிவகுரு சமாதானம் ஆவார்.

சிஷ்யன் மிகவும் ஆசை காட்டுவான். அப்படி இருக்கலாம் இப்படி இருக்கலாம் என்று அழகாக் கற்பனை ஊட்டுவான். சிவகுருவால் அதை எடுத்தெறிந்து தன்பாட்டிற்குப் போக முடிவதில்லை. சில வேளைச் சிஷ்யன் ஆசை காட்டுகிறான் என்று விளங்கினாலும் அடுத்த கணமே அதிலும் உண்மை இருப்பதாகவே அவருக்குத் தோன்றும்.

சிவகுருவை சிஷ்யன் ஒரு நாள் வெளியே கூட்டிச் சென்றான். இருவரும் நடந்து சென்றார்கள். நீண்ட தூரம் அவர்கள் ஒரு நதிக்கரை ஓரமாக நடந்து சென்ற பின்பு அங்கே ஒரு அழகிய குடில் வந்தது. சிஷ்யன் குருவைப் பார்த்து அந்தக் குடிலில் இளைப்பாறிவிட்டு பின்பு மேற்கொண்டு பயணிப்போம் என்று அறிவுரை கூறினான். சிவகுருவுக்கு அதுவே சரி என்று பட்டது. அதனால் சிவகுருவும் அதை ஒத்துக் கொண்டு அந்தக் குடிலுக்குள் சென்றார். அங்கே ஆண் என்கின்ற ஒரு உருவத்தைச் செய்து வைத்தாலும் அது உயிர் பெற்று நடக்க வைக்கும் அழகு படைத்த ஒரு கன்னி இதயத்தைத் திருடும் பார்வையோடு இன்பத்தை மட்டுமே தருவேன் என்பது போல நின்றாள். அவள் துருத்தும் அங்கம் அவர் மனதை வருத்தும் நோயைப் பன்மடங்காக்கியது. அது இருப்பதே தெரியாது இருந்தது அவருக்கு இப்போது நன்கு விளங்கியது. இந்த இயற்கையின் அல்லது இறைவனின் லீலையில் தன்னையே தான் அறியாத சிவகுரு எம்மாத்திரம்? அவர் உண்மையில் தடுமாறிப் போய்விட்டார். சிஷ்யன் ‘உள்ளே போங்கள். அள்ளி அணைத்து ஆசையைத் தீர்த்துக் கொள்ளுங்கள். இது குற்றமும் இல்லைப் பாவமும் இல்லை. படைக்கப்பட்டதே அனுபவிப்பதற்காய் மட்டுமே. அவள் உங்களுக்காக இன்று காத்திருக்கிறாள். அதைப் போல் உங்களுக்காக என்றும் காத்திருப்பாள். உங்களிடமும் இன்றும் துடிக்கும் இளமை இருக்கிறது. ஆண்மை இருக்கிறது. அனுபவிக்கும் ஆசை இருக்கிறது. அவளிடம் வர்ணிக்க முடியாத அழுகு கொட்டிக் கிடக்கிறது. வண்ணங்களாக யொலிக்கும் அவள் மேனியைப் பாருங்கள். அதன் மென்மையும் தொட்டு உணருங்கள். வாசத்தை நுகர்ந்து அனுபவியுங்கள். அவளது என்றும் மாறாத இன்முகம் காட்டும் பண்பைப் பாருங்கள். தன்னையே இளக்கும் நிலையை உணருங்கள். இது உங்களுக்கும் அவளுக்கும் கிடைத்த மறக்க முடியாத கணங்கள். இன்று போனால் நாளை மீண்டும் திரும்பி வராத நிஜங்கள். எந்தத் தத்துவத்தாலும் அதை மாற்ற முடியாத வாழ்க்கை. தயங்காதீர்கள். தாகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள். இதுவே வாழ்க்கை. இதுவே இவ்வுலகு. ‘ என்று சிஷ்யன் கூறி அவரை ஊக்கப்படுத்தினான்.

சிவகுரு அவளைத் தன்னை மறந்து பார்த்துக் கொண்டு நின்றார். அவர் மனதில் ஆசையும் காமமும் கொழுந்துவிட்டு எரிய உடல் வெப்பத்தில் முறுகிய தோசைக்கல் ஆகியது. சிவகுருவுக்கு தான் பூமியில் அல்ல கற்பனைக்கும் எட்டாத சுவர்க்கத்தில் நிற்பது போன்று தோன்றியது. முன்வைத்த காலைத் தொடர்ந்து முன்வைப்பது பற்றியே அவர் அவாக் கொண்டார். ‘அப்படி இந்தச் சிஷ்யன் சொல்வது சரி என்றாலும், உன்னையே நீ அறியாதவன் என்று அந்தத் துறவி ஏன் என்னைப் பார்த்துக் கூறினார்?’ என்கின்ற எண்ணம் திடீரென அவருக்கு வந்தது. சிவகுரு அப்படியே நின்றார். துறவி வாய்விட்டு அவரைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது.

‘உள்ளே போங்கள்.’ என்று கூறிச் சிஷ்யன் சிரித்தான். துறவியின் சிரிப்பில் ‘உன்னையே நீ அறியாதவன்.’ என்கின்ற வார்த்தைகள் மீண்டும் மீண்டும் ஒலிப்பது போல இருந்தது. சிஷ்யன் சிரிப்பில் ‘உங்களுக்கு ஏன் இந்த வேஷம்?’ என்று கேட்பது போல இருந்தது. சிவகுருவுக்கு ஆசையாகவும் இருந்தது. கவலையாகவும் இருந்தது. அவமானமாகவும் இருந்தது. வெட்கமாகவும் இருந்தது.

சிவகுரு சிறிது நேரம் சிந்தித்தார். இந்தச் சிறிய விடையத்தையே தன்னால் தவிர்க்க முடியாவிட்டால் தன்னில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதாக விளங்கிக் கொண்டார். ‘சிஷ்யன் எப்போதும் சிஷ்யனாக இருப்பான். குருவே அதை உணர வேண்டும். எது தனது இலக்கு என்பதைத் தீர்க்கமாக உணர வேண்டும். சிஷ்யனின் சொற் கேட்டு இங்கு வந்திருக்கக் கூடாது. இங்கே மட்டும் அல்ல எங்கும் அவன் சொல்லைக் கேட்டுப் போக்க கூடாது. என்னை நான் என்னுள் அறிந்து அதற்கேற்ப நடந்திருக்க வேண்டும். இப்போதும் எதுவும் கெட்டுப் போய்விடவில்லை. திரும்பிப் போய்விட வேண்டியதே. அது உண்மையா? எண்ணத்தால் தீண்டியது மாறுமா? ‘ எண்ண எண்ணச் சிவகுருவுக்கு மீண்டும் மீண்டும் அவமானமாய் இருந்தது.
‘போங்கள் எதற்குத் தயங்கியபடி நிற்கிறீர்கள்?’ என்று சிஷ்யன் மீண்டும் கேட்டான். சிவகுரு தன்னை இந்த இக்கட்டான நிலையில் இருந்து விடுவிக்க எண்ணினார்.

‘இல்லை சிஷ்யா. நான் அதற்காக வெளியே வரவில்லை. நீ இங்கு அழைத்து வருவாய் என்றும் எனக்குத் தெரியாது. நீ எனக்குச் சேவை செய்யும் சேவகன் என்று நினைத்திருந்தேன். ஆனால் நீ எனக்கே குருவாக நடந்து கொள்ளப் பார்க்கிறாய். உன் இழுப்பில் நான் இங்கு வந்து இருக்கிறேன் என்பது உண்மையில் எனக்கு அவமானமாக இருக்கிறது. என்னை இப்போது குரு என்று நினைக்கவே அருவெருப்பாக இருக்கிறது. என் வழியில் உன்னைக் கொண்டு செல்லாது உன்வழியில் நான் வந்ததால் நான் அந்தத் தகுதியை இழந்து விட்டேன். இனி என்றாலும் உன்னை உன்னிடத்தில் வைத்துக் கொள்ள நான் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். வா வெளியே போகலாம். நதி ஓரமாக இன்னும் நான்கு மயில்கள் நடக்கலாம். அப்போது உணர்ச்சி தணியும். உண்மை மேலும் புலப்படும்.’ என்றார் குரு.

‘ஏன் குருவே இப்படி மறுக்கிறீர்கள்? அவள் அழகான தேவதை. இப்போது போனால் இனி வராத இந்த உலக வாழ்வின் கணங்கள். எப்போது முடியும் என்பது தெரியாத இவ்வுலக வாழ்க்கை. ‘கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்’ என்கின்ற என்றும் மாறாத உண்மை. அதற்கு மேல் என்ன இருக்கிறது? உங்களுக்குத் தெரியுமா குருவே? எப்போதாவது அதைக் கண்டு இருக்கிறீர்களா? நாளைய கற்பனைக்காக இன்றைய நிஜத்தை ஏன் தவற விடவேண்டும்? ‘ என்றான் சிஷ்யன்.

‘உனக்கு நான் பதில் கூறப் போவதில்லை. அது என்ன நோக்கமும் இல்லை. நான் குருவாக இருந்திருக்க வேண்டும். எனது தடுமாற்றம் சில கணங்கள் உன்னைக் குருவாக மாற்றிவிட்டது. அது மன்னிக்க முடியாத எனது தவறு. அது தவறு என்று சொல்வதற்கு காரணம் நீ வெளியே செல்பவன். அதில் ஆசை கொண்டவன். உலகைப் பார்த்து, மனித இச்சைகளில் இன்றும், என்றும் மயங்குபவன். நானோ என்னுள் என்னைப் பார்க்க வேண்டும் என்னும் அவாக் கொண்டவன். என்னுள் நான் என்னைக் காண கடும் பிரயத்தனத்தோடு பயணிக்க வேண்டும். அதற்காக என் நேரத்தையும் கவனத்தையும் முழுமையாகச் செலுத்த வேண்டும். இப்படி நதிக்கரையில் நடப்பதாலும், மங்கையைக் கண்டு மயங்குவதாலும் அதை நான் அடைந்துவிட முடியாது. சிஷ்யா இன்று இந்தப் பயணம் போதும். நாங்கள் எங்கள் குடிலுக்குத் திரும்புவோம்.’ என்று சிவகுரு தன்னை நிதானப்படுத்தி சிஷ்யனின் வழிகாட்டலைத் தவிர்த்து, தனது வழியில் திரும்பினார். இருந்தும் சிஷ்யன்.

‘குருவே நீங்கள் ஏன் அவசரப்படுகிறீர்கள்? மீண்டும் திருப்பி வாருங்கள். இந்த உலகமே நிஜமானது. இந்த வாழ்வே சுகமானது. இருப்பதை மாயை என்றும் இல்லாததை மறுவுலகு என்றும் எதற்கு உங்களுக்குத் தப்பிதமான கற்பனை? அதனால் உடலையும்இ மனதை எதுவும் இல்லாததிற்கு வருத்தி எதை அடையப் போகிறீர்கள்? இல்லாததை இருப்பதாயும், இருப்பதை இல்லாததாயும் குழப்பமாக கதைப்பதை மார்க்கமாகக் கொண்டால் மண்ணுலகம் சொற்கமாகத் தெரியாது நரகமாகத் தெரியலாம். எனக்கு விளங்கியதை உங்களுக்குச் சொல்கிறேன். நீங்கள் குரு. அனைத்தும் கற்று அறிந்தவர். நீங்கள் வருந்துவதோ, இழப்பதோ எனக்கு அமைதி தராது என்பதால் மட்டுமே இதை வற்புறுத்துகிறேன்.’

‘சிஷ்யா உன்னோடு நான் என்றும் விவாதம் செய்ய விரும்பவில்லை. இருந்தாலும் ஒன்று கூற விளைகிறேன். நீ குருவுக்குப் புத்தி கூறுவதற்கு இங்கு வரவில்லை. குருவின் சொற்படி நடக்கவே இங்கு வந்தாய். குரு சொல்வதை உன்னால் ஏற்று நடக்க முடிந்தால் ஏற்று நட. அல்லது நீ என்னை விட்டு விலகிவிடு. அதையும் மீறி என்னோடு இருக்க வேண்டும் என்றால் நீ மௌனமாக இருக்க வேண்டும். இது என் வேண்டுகோள் அல்ல. இதுவே என் கட்டளை.’

குரு தனது சொல்லைக் கேட்காதது மட்டும் அல்லாது தான் கதைப்பதற்கும் தடை போட்டுவிட்டுத் தன் விருப்பப்படி திரும்பி ஆச்சிரமத்திற்கு நடை போடுவது சிஷ்யனுக்கு பெரும் வேதனையை உண்டு பண்ணியது. அவன் எதுவும் செய்ய முடியாது அவர் பின்னால் சென்றான். குருவை எப்பிடியாவது கதைத்து மாற்ற வேண்டும் என்பதே அவனது குறிக்கோள். ஆனால் தற்போது கதைக்க முடியாது என்கின்ற உண்மையை உணர்ந்தவனாகத் தொடர்ந்தும் அமைதியாக நடந்தான். இன்னும் ஒரு நாள் அதைப் பார்த்துக் கொள்ளலாம் என்று தனது விடா முயற்சி பற்றிச் சிஷ்யன் நினைத்துக் கொண்டான்.

சில நாட்கள் சென்றன. சிஷ்யன் குருவைத் தொந்தரவு செய்யாது அமைதியாக இருப்பது போலத் தோன்றியது. சிஷ்யன் பற்றியோ, அல்லது வேறு எந்த உலக ஆசைகள் பற்றியோ அக்கறை இல்லாது குரு தன்னைத் தான் அறியும் உள்நோக்கிய பயணத்தில் மும்மரமானார். சிஷ்யன் அமைதியாக இருப்பது போலத் தோன்றினாலும் உண்மையில் அவன் அமைதி இன்றித் தவித்தான். அவனால் அப்படி இருக்க முடியவில்லை. குருவை வெளியே அழைத்துச் செல்ல வேண்டும். இவ்வுலக இன்பங்களை அவருக்குக் காட்ட வேண்டும். அத்தால் குருவையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்று சிஷ்யன் தவித்தான். அவனுக்கு எத்தினை நாட்கள் இப்படிப் பொறுமையாக இருப்பது என்று விளங்கவில்லை. மேலும் பல நாட்கள் சிஷ்யன் குருவைக் குழப்பாது அமைதியாகக் காலம் கழிந்தது. ஆனால் அவனால் அதைத் தொடர முடியவில்லை. இன்று அவரை நீராட அழைத்துச் செல்வது போல அழைத்துச் சென்று நதிக்கரையில் மது வாங்கிப் பருகக் கொடுக்க வேண்டும் என்று திட்டமிட்டான். அதன் மூலம் இவ்வுலக இன்பத்தில் ஒன்றையாவது அவருக்கு சுவைக்கக் கொடுக்க வேண்டும். அதனால் அவன் அமைதியாக குருவின் முன்சென்று பௌவியமாக நின்று,

‘குருவே இன்று நீராட வேண்டிய நாள். நீராடப் புறப்படுவோமா?’ என்றான். குரு கண் திறக்கவில்லை. எந்த அசைவும் இல்லாது அப்படியே சிலையாக இருந்தார். அப்படிக் குரு இருப்பது சிஷ்யனுக்கு பயத்தையும், கோபத்தையும் உண்டு பண்ணியது. அவன் மீண்டு தனது குரலை உயர்த்தி ‘குருவே குருவே’ என்று கூவினான்.

குருவின் உள்நோக்கிய பயணம் தடைப்பட்டது. குரு கண்விழித்தார். இருந்தும் கண்களில் சாந்தம் பரவி இருந்தது.

‘சிஷ்யனே எதற்கு என்னை இப்போது அழைத்தாய்? ‘ என்றார்.

‘இன்று நீராடப் போக வேண்டும். ‘ என்றான் சிஷ்யன்.

குரு மீண்டும் ஒருமுறை கண்ணை மூடித் தியானித்தார். அவருக்குச் சிஷ்யனின் எண்ணம் விளங்கியது. அவர் புன்னகை புரிந்த வண்ணம்.

‘சிஷ்யா இன்று, இப்போது ஸ்நானம் தேவைப்படுவது உனக்கு மட்டுமே. நீ செல். சென்று ஸ்நானம் செய்த பின்பு அப்படியே உன் பயணத்தைத் தொடங்கு. எனக்கு எப்போது ஸ்நானம் தேவைப்படுகிறதோ அப்போது நான் சென்று ஸ்நானம் செய்து வருகிறேன். உனக்கு இன்றோடு இந்தக் குடிலில் எந்த அலுவலும் இல்லை. நீ இங்கு மீண்டும் திரும்பி வரத் தேவை இல்லை. உனது ஸ்நானத்தை முடித்துக்கொண்டு அப்படியே பயணித்துவிடு.

‘குருவே’ சிஷ்யன் பதறியபடி கூவினான்.

குரு நிறுத்து என்று முதலில் கையைக் காட்டினார். பின்பு போ என்று கையாலேயே சைகை செய்தார். சிஷ்யனால் மேற்கொண்டு எதுவும் செய்ய முடியவில்லை. அவன் குடிலை விட்டு வெளியேறினான்.

குரு மீண்டும் கண்ணை மூடித் தனது தியானத்தைத் தொடர்ந்தார். திடீரென அவர் முன்னே அந்தத் துறவி தோன்றினார்.

‘உனக்கு நான் அப்போது சொல்லியது இப்போது விளங்குகிறதா? ‘ என்று கேட்டார்.

‘ம்… ம்… ‘ என்று குரு புன்னகையோடு அமைதியாக எந்தவித பெருமையோ, சிறுமையோ, மானமோ, அவமானமோ இல்லாது தலை அசைத்தார். அந்தத் துறவி அத்தோடு மறைந்துவிட்டார். துறவி மாத்திரம் அல்ல அந்தச் சிஷ்யனும். அவன் பிடியில் இருந்து அன்றில் இருந்து சிவகுரு முற்றுமாக விலகி இருந்தார்.

– செப்ரெம்பர் 2018

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *