கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 23, 2012
பார்வையிட்டோர்: 9,373 
 
 

கனகுசுந்தரம் என்கிற கனகு நோயுற்றிருந்தான்.

தூக்கலான புற அடையாளங்கள் ஏதும் புலப்படாத ஒருவித நுட்பமான நோய் அது. எனவே கனகு நோயுற்றிருந்த விஷயம் அவனைச் சுற்றியிருந்த உறவுகளுக்கோ நண்பர்களுக்கோ தெரிந்திருக்கவில்லை.

இது நோய் என்கிற வரையறைக்குள் வைத்து எண்ணப்பட ஏதுவான உடல் ரீதியான குறைபாடுகள் இல்லாத காரணத்தால்- கனகுவிற்கு தான் நோயுற்று இருக்கும் உண்மை தெரியாமலேயே காலம் கடந்து போனது. கால ஓட்டத்தில் அது அவனது இயல்பின் ஒரு பகுதியாகவே தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருந்த காரணத்தாலும், அதனை அவனால் தன்னிலிருந்து அந்நியப்படுத்தி புரிந்து கொள்ள இயலாமல் போனது.

OCD எனப்படும் Obsessive Compulsive Disorder எனும் ஒருவகை மனம் சார்ந்த நோய்க்கு பலியாகியிருந்தான் கனகுசுந்தரம் என்கிற கனகு.

இந்த OCD என மனநல மருத்துவர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஒருவித மனப்பிறழ்வு நிலை குறித்த சுருக்கமான விளக்கம் அளிப்பது- வாசகர்களான உங்களுக்கு கனகுவை சரியானதொரு கண்ணோட்டத்தில் புரிந்து கொள்ளவும் – தொடரப்போகும் அவனது விசித்திரமான சில செயல்பாடுகளை அதனையொட்டிய தளத்தில் பொருத்தி அணுகவும்- ஓரளவு உதவும் என்பதால் இங்கே அதனை விவரிக்க முற்படுகிறேன். செய்த ஒரு செயலையோ அல்லது எண்ணிய ஒரு எண்ணத்தையோ மீண்டும் மீண்டும் எவ்வித அறிவுபூர்வமான காரண காரியம் ஏதுமின்றி செய்தலையோ எண்ணுதலையோ – Obsessive Compulsive Disorder என வகைப்படுத்துவதாக புரிந்து கொள்ளலாம்.

உதாரணத்திற்கு, ஒருவன் உணவு முடிந்து கைகழுவச் செல்கிறான். ஓரிரு முறையில் வேலை முடிந்து திரும்ப வேண்டியவன். ஆனால் OCDயின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் இருப்பவன் அப்படி திரும்ப இயலாது. அவனது மூளை அவனைத் திரும்ப விடாது. மீண்டும் மீண்டும் எண்ணிக்கை வைக்க இயலாத அளவிற்கு அவன் கைகழுவும் சடங்கு தொடரும். தனது மூளையின் அர்த்தமற்ற விருப்பத்தை மறுதலித்து வெளியேறும் ஆற்றலை அவன் இழந்திருப்பான். இதனை ஒருவகை சித்திரவதை என்றாலும் தகும்.

இதனையே எண்ணங்கள் சார்ந்த இயக்கத்திலும் பொருத்திப் பார்க்கலாம். ஏதேனும் ஒரு குறிப்பிட்ட எண்ணம் மீண்டும் மீண்டும் தலைதூக்கி ஒருவனை ஆட்கொள்ளத் தொடங்கும் தருணம், அவன் OCDயின் கட்டுப்பாட்டு எல்லைக்குள் வந்துவிட்டதாக பொருள் கொள்ளலாம்.

இதனை மூளைக்குள் நிகழும் ஒரு அசம்பாவிதம் என்றும் சொல்கிறார்கள். அதாவது நியூரான்களின் தொடர்பில் நிகழும் சிதைவின் விளைவு என்கிறது மருத்துவம்.

சுருங்கச் சொன்னால், ஏதேனுமொரு செயலோ எண்ணமோ- தாறுமாறாகச் செயல்படத் தொடங்கி- ஒரு மனிதனின் இயல்பான வாழ்க்கையில் குறுக்கிட்டு அவனை முடக்கிவிடும் குணபாவத்தை OCD என்று புரிந்து கொள்ளலாம்.

இதன் அடிப்படையில் நாம் கனகுவை பரிசீலிக்க முற்பட, நமக்குக் கிடைக்கும் தடயம் அவன் ஒருவகை எண்ணங்கள் சார்ந்த OCDயின் பிடிக்குள் சிக்கியுள்ள உண்மை புலப்படுகிறது.

அவற்றை முறையே- டாக்டர் / தலைவன் – என்கிற இருவித நிலைகளில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ளது என்பதும் தெளிவாகிறது.

இதன் ரிஷிமூலம் குறித்த கேள்விக்கு விடை காண்பது அவனை மேலும் நெருங்கி நின்று படிக்க உதவும் என்பதால், அதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது.

அதற்கென பல ஆண்களை பின் நகர்த்தி நாம் பயணிக்க வேண்டிய இடம் அவன் சிறு பிராயத்து தோட்டப்புறம்.

அங்கு அப்போது பிரபலமாக விளங்கியவர் இவனது தந்தையான கூத்துக்கார மாரியப்பன். சிறந்த நடிகரும் தியாகராஜ பாகவதர் பாடல்களைப் பாடுவதில் வல்லவராக விளங்கிய சிறந்த நாடகக் கலைஞர்.

தோட்டப்புற கும்பாபிஷேக தீமிதி திருவிழாக்களின் அப்போதைய பிரபலங்கள் புராண இதிகாச கூத்துகள். அதிலும் முருகக் கடவுளின் மகிமை பேசும் வள்ளி தெய்வானை இடம்பெறாத கூத்துகள் இல்லை என்றே சொல்லலாம். இதிலெல்லாம் எங்கேனும் ஒரு ராஜா வேஷத்தில் வந்து நிற்பார் கூத்துக்கார மாரியப்பன்.

அதற்கான உடல் வாகும் முக லட்சனமும் குரல் வளமும் இருந்த காரணத்தால் அவ்வேடங்களில் அவர் மிகவும் இயல்பாகவே பொருந்திக் கொண்டார் என்றே சொல்ல வேண்டும்.

வேறு வகை வேடங்களும் அவருக்குப் பொருந்தக் கூடியதாக இருந்தபோதும், அவர் அவற்றை முற்றிலும் நிராகரித்து நின்றது ஏன் என்பது அப்போது பலருக்கும் ஒரு புதிராகவே இருந்ததாக தண்ணிக்கார தாத்தா கூறி, அவருடைய அவதானிப்பில் அதற்கான விளக்கத்தையும் முன் வைத்தபோது, அவரின் நுண்ணறிவு குறித்து வியக்காமல் இருக்க முடியவில்லை.

“அந்த கூத்துக்கார மாரியப்பன் ஒரு மாதிரி ஆளுப்பா! அவன் குச்சிகாட்ல எறங்கி நடந்து போறத அப்ப நீ பாத்திருந்தா நான் இப்ப எதுக்கு அப்படி சொல்றன்னு புரியும். ஆளு நல்ல ஒசரம். வெளிக்காட்டுல மம்மட்டி வேல பாத்த ஒடம்பு காச்சு இறுகி கட்டு கட்டா நிக்கும். நெஞ்சு பூரா மொச மொசன்னு கன்னங்கரேல்னு மசுரு”.

நெஞ்ச நிமுத்தி தலய ஒசத்தி நேரா பாத்து நடக்கிற கூத்துக்கார மாரியப்பனுக்கு தான் ஒரு பெரிய ஆளுங்கிற எண்ணம் உள்ளார இருக்கிறது அவனோட நடயிலயே தெரிஞ்சது.

அது நெறவேத்திக்கத்தான் அவன் ராஜாவா வேஷங்கட்டி ஆடனான்னு எனக்கு அப்பவே தெரியும்.

OCDயின் பிரதான மூலக் கூறுகளில் ஒன்றாக மனிதனின் மரபணுவும் உட்படுத்தப்படுவதால், நாம் கனகுவைப் பிடித்துவிட்டிருந்த இந்த ‘தலைவன்’ ஆக வேண்டும் என்கிற வேட்கையையும்-, எவ்வகையிலேனும் ஒரு டாக்டர் பட்டத்தை தன் பெயரோடு இணைத்துக் கொள்ள வேண்டும் என்கிற அவனது தீராத ஆதங்கத்தையும், இந்த மரபணு சூத்திரத்துள் நிறுத்தி பரிசீலிப்பது நிஜத்தை அறிய பெரிதும் உதவும்.

அந்த வகையில் கனகுவின் தந்தையான கூத்துக்கார மாரியப்பனின் (முன்பே நாம் பார்த்துவிட்ட) – சில குணபாவங்களை சற்றே நெருங்கி நின்று கிளறிப் பார்க்க, அவற்றில் கனகுவின் இத்தகைய தீவிர OCDயின் பின்னணி புலப்படுகிறது.

நமது அவதானிப்பிற்குள் வந்துவிட்ட இந்தக் கருதுகோளை மேலும் வலுப்படுத்தும் முகாந்திரமாய் கூடுதலான ஆதாரங்களை சேகரிக்க முற்பட்டபோது ஆச்சரியப்படுத்தும் விதமாய் வந்து நின்றார் கனகுவின் தாய்வழி மாமனான, வேலுச்சாமி என்கிற காங்கி மண்டோர்.

மரபணு சார்ந்து நாம் வந்தடைந்திருந்த இந்த முடிவுக்கு ஒத்திசைவாய் இருந்தது அவரது குணபாவங்களும் செயல்பாடுகளும்.

குண்டும் குழியுமாக இருந்த மண் சாலைகளை வழவழப்பான தார் சாலைகளாக உருமாற்றுவதில் நமது இனத்தின் அளப்பரிய பங்கு குறித்துப் பேசுகையில் நமது பொதுப்பணித் துறையில் கூலிகளாக நட்ட நடுப் பகலின் சுட்டெரிக்கும் வெயிலிலும் சாலையோரங்களில் அனல் அடுப்புகளின் மேலிருந்த தகரத் தோம்புகளில் கொதித்துக் கொண்டிருந்த கருமை தாரும் அதனை கொட்டும் வியர்வை மழையில் தொப்புர நனைந்தபடி அள்ளிசமன் செய்யப்பட்ட சரலைக் கற்களின் மேல் ஊற்றி நகரும் மனிதர்களின் கால்களில் காலணிக்கும் பதிலாய் சடம்புநாரால் இறுக்கப்பட்ட டயர் துண்டுகளும் காட்சி ரூபமாய் முன் தோன்ற கிடைத்த ஒரு சந்தர்ப்பமாவும் அமைந்திருந்தது இந்த தேடலின் பயண வழியில்.

வேலுச்சாமி என்கிற இவனது மாமன் ஒரு காலத்தில் JKR காங்கி மண்டோராக வேலை பார்த்ததாகவும் அவரிடமும் இந்த ‘தலை’க்கான மரபணு விவகாரம் தூக்கலாகவே வெளிப்பட்டதாகவும் அப்போது அவரின் கீழ் வேலை பார்த்த பல வயதான கூலிகளை நாம் அணுகி விசாரித்ததில் அவர்கள் விவரித்த பல சம்பவங்களின் வழி அறிய முடிந்தது.

அவற்றின் மையச் சரடாக அடையாளம் காட்டியது அன்றைய தோட்டப்புற பொதுப்பணித்துறை மண்டோர்களுக்கே உரிய ஜபர்தஸ்த் அதட்டல் உருட்டல் மிரட்டல் எல்லாமே ஒருசேர மையமிட்டிருந்த ஒரு அல்டாப் பேர்வழியாக அடையாளப்படுத்தியது, கனகுவின் மாமாவான அந்த வேலுச்சாமியின் (பெயரைத் திருப்பிப் போட்டு வேறொரு JKR பெரிய மண்டோருடன் ஒப்பிட்டுக் குழப்ப வேண்டாம்!) அனைத்து நடவடிக்கைகளும்.

இவை அனைத்துமே ஒரு மனிதரிடம் இருக்கக் கூடாத எதிர்மறை மனிதப் பண்புகள் என்றாலும் பின்தங்கிய அடிமை மனிதக் குழுக்களில் அவை தலைமைத்துவத்தின் அங்கீகரிக்கப்பட்ட பண்புகளாக மதிக்கப்படுவதால் இங்கே அதனை அதன் அடிப்படையிலேயே நாம் அணுகுவது உசிதமாக இருக்கும்.

ooo

எனவே தனது தந்தை கூத்துக்கார மாரியப்பன் வழியும் தாய்வழி மாமன் வேலுச்சாமி என்கிற JKR மண்டோர் வழியும் தனது தலைமைத்துவ மோகத்திற்கான மரபணுக்களை உடலில் ஏற்றிருந்த கனகு எனும் கனகுசுந்தரம் அவனது ‘டாக்டர்’ மோகத்திற்கான காரணிகள் எங்கு வேர் கொண்டிருந்தன என்பதை அறிவதும் அவனை ஒரு முழுமையான ஆளுமையாக புரிந்து கொள்ளத் தேவையான கருவிகளை நமக்கு வழங்கும் சாத்தியம் கருதி- நாம் அதற்குள்ளும் பிரவேசிப்பது அவசியமாகிறது.

கனகுவின் தந்தையான கூத்துக்கார மாரியப்பன் ஒரு சிறந்த நாடக நடிகர் பாடகர் என்பதை இதற்கு முன்பே அறிந்துள்ள நமக்கு அவர் ஒரு சிறந்த சினிமா ரசிகராகவும் இருந்துள்ளார் என்பதை அறிய வியப்பேதும் ஏற்பட வாய்ப்பில்லை. காரணம், ஒரு நல்ல கூத்துக் கலைஞன் அதன் அடுத்தக் கட்ட நகர்வான சினிமா மேல் மோகம் கொண்டிருந்தது இயல்பானதொரு விஷயமே.

அதிலும் ஒரு காலகட்டத்தில் நீள முடியை வளர்த்துக் கொண்டு வதனமே சந்திர பிம்பமே என்று குச்சிக்காட்டில் பாகவதராக அவதரித்திருந்த கூத்துக்காரன், பின்னொரு காலகட்டத்தில் அதிதீவிர சிவாஜி பக்தனாக மாறியபோதுதான் அந்த விபத்து நடந்திருக்க வேண்டும் என்பது நமது ஊகம்.

தீவிர சிவாஜி ரசிகனான பின் கூத்துக்கார மாரியப்பன் சிவாஜி படங்கள் பட்டணத்து தியேட்டர்களில் கோலாகலமான வாழைமர ஜோடனைகளுடன் அரங்கேற முதல் நாளே பிளேக்கில் டிக்கெட் வாங்கியாவது பார்த்து விடுவதை வழக்கமாகிக் கொண்டிருக்கிறான்.

இதற்காகவே வெளிக்காட்டு வேலை முடிந்து வீடு திரும்பிய வேகத்தோடு குளித்து சீவி சிங்காரித்து தனது பழைய சைக்கிளை மிதித்துக் கொண்டு பதினைந்து மைல்களுக்கு அப்பால் இருந்த பட்டணத்து எம்பயர் தியேட்டரை நோக்கி விரைந்து மூன்று மணி காட்சிக்கு ஆஜாராகிவிடுவது வழக்கமாம்.

இதனை நம்மிடம் பகிர்ந்து கொண்ட அவனது அப்போதைய அண்டை வீட்டுக்காரனான தண்ணிக்கார தாத்தா அடுத்து அவர் சொன்ன செய்திதான்- கனகுவின் ‘டாக்டர்’ OCDயின் மூலத்தை தொட்டுக் காட்டியது.

“அவன் ஒரு பைத்தியக்கார கூத்துக்காரன் தம்பி! இந்த சிவாஜி கணேசன் நடிப்பு மேல அவனுக்கு பைத்தியம் புடிச்ச பின்னால அவனோட கூத்துக்கார நடிப்புல கூட அந்த சிவாஜி வந்து பூந்துகிட்டாருன்னா பாத்துக்க!”

அவரு மாதிரியே ஸ்டைலா நிக்கறது. ஸ்டைலா கைய வீசி நடக்கறது. ஸ்டைலா ஒதட்ட குவிச்சு சிரிக்கிறது. ஸ்டைலா தலமுடிய தள்ளி விடறது. ஸ்டைலா பேசறது. நடக்கறது. அப்படின்னு எல்லாமே மாறிப்போச்சு.

அதுலயும் தம்பி இந்த பாலும் பழமும் படம் வந்த பின்னால அதுல டாக்டரா வந்து ஸ்டைல் காட்டன சிவாஜிய பாத்து மயங்கி- இவனும் தன்ன ஒரு ‘டாக்டராவே’ நெனக்க ஆரம்பிச்சுட்டான்!”

பாலும் பழமும் படத்தில் சிவாஜி டாக்டராகத் தோன்றி அந்த வெள்ளை கவுனில், தோளில் ஸ்டெதெஸ்கோப் ஆட்டம் போட்டு வர ஒய்யார நடை பயின்று அசமந்தப் புன்னகை முகத்தில் படர திரையில் முதல் முறை சிவாஜி தோன்றியபோது கனகுவின் தந்தையான கூத்துக்கார மாரியப்பன் அருள்வந்த பக்தனைப் போல் உணர்ச்சிப் பெருக்கெடுத்து தனது இருக்கையிலிருந்து எழுந்து நின்று இருகரங்கூப்பி வணங்கியதாக அவருடன் படம் பார்க்கச் சென்ற சிலர் கூறியதாக தண்ணிக்கார தாத்தா கூறியபோது வியப்பாக இருந்தது.

அதன் நீட்சியாக கூத்துக்கார மாரியப்பனின் வீட்டில் தோட்டம் தூங்கப்போன பின்னிரவுக்கு சற்றே முந்திய பொழுதுகளில் டாக்டர் சிவாஜி கணேசன் உலா வரத் தொடங்கியதாகவும், அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்கள் தூக்கம் வராத நாட்களில் அதனை விழித்திருந்து கேட்டு சிரித்து மகிழ்ந்ததாகவும் கூறியபோது ஒரு மிகச் சிறந்த நாடகக் கலைஞனை அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது.

அதிலும் குறிப்பாக கீழ்க்காணும் வசன வரிகளை அவர்களை பலமுறை திரும்பத் திரும்ப கேட்டுள்ளதாக தண்ணிக்கார தாத்தா, தனது வயதின் முதிர்வையும் கடந்த நிலையில் நினைவு கூர்ந்தார்.

“How are you my dear? இன்னக்கி ஒடம்புக்கு எப்படிம்மா இருக்கு? மருந்து மாத்திர எல்லாம் ஒழுங்கா சாப்பிடறயாமா? நம்ம ஒடம்ப நாமதானமா ஒழுங்க கவனிச்சுக்கனும்! புரிஞ்சுதா? நர்ஸ் இங்க வாம்மா. இந்த அம்மாவுக்கு வேண்டிய மருந்து மாத்திர எல்லாம் ஒழுங்கா குடுக்கறயாமா? நம்மல நம்பி வந்தவங்க நாமதானமா நல்லா கவனிச்சுக்கனும்?”

இப்படியாக தனது வீட்டின் நான்கு சுவர்களுக்குள் பலநூறு தடவைகள் அரங்கேறிய இந்த ‘டாக்டர்’ கூத்தை போர்வைக்குள்ளிருந்து பார்த்து ரசிக்கும் பாக்கியம் விதிப்படி பெற்றிருந்த கனகுவிற்கு அது அவனது ப்ரக்ஞையை கடந்த ஓர் ஆழ்மனப் பதிவாக தடம் பதிக்க அவனது OCDயின் முக்கிய அம்சமாக தன்னை நிறுவிக் கொள்ள வழிவகுத்தது என்பது நமது கணிப்பு.

இதில் இன்னுமொரு அம்சத்தையும் நாம் கருத்தில் கொள்வது அவசியம் என நினைக்கிறேன். கனகு தனது விபரம் அறியும் பருவத்தை நெருங்கும் தருவாயில் இந்த தமிழ்ச் சமூகம் சார்ந்த ஒரு விசித்திர மனநிலையை தரிசிக்க நேர்ந்தது.

இன்றைய தமிழ் அப்பா அம்மாக்களைப் போலவே அன்றும் பல அப்பா அம்மாக்களும் ஏதோ ஒரு வகையில் தன் மகனையோ மகளையோ அந்த பாலும் பழமும் டாக்டர் சிவாஜியின் வெள்ளை நிற கவுனில் எங்கேனும் ஒரு மருத்துவமனை மக்கள் நடமாடும் வராண்டாவில் கழுத்தைச் சுற்றிய ஸ்தெடெஸ்கோப் ஆடிவா பக்கம் வரும் டாக்டரோடு ஆங்கிலத்தில் உரையாடியவாறு, தன் தவப்புதல்வன் / புதல்வி நடந்து வரதைப் பார்ப்பதே தன் பிறவிப் பயனை அடைந்துவிட்ட ஆனந்தத்தை வாரி வழங்கும் என நம்பும் ஒரு மக்கள் கூட்டத்தை கனகு என்கிற கனகுசுந்தரம் மிக உன்னிப்பாக கவனித்து வந்துள்ளான் என்பதை அவள் கைப்பட எழுதிய சில குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன.

அதன் விளைவுதான் நிஜ டாக்டர் ஆக இயலாத நிலையில் நோயுற்ற ஆவனின் OCD சார்ந்த மனநிலையில் விபரீதமான அந்த எண்ணம் தோன்றியிருக்க வேண்டும்.

எனவே என்ன விலை கொடுத்தேனும் ஒரு ‘டாக்டர்’ பட்டம் பெற்றே ஆக வேண்டும் என்கிற முடிவுக்கு அவன் வந்திருந்தான்.

அதனை நிறைவேற்றும் பொருட்டு பல இணைய தளங்களில் வலை வீசி தேடத் தொடங்கினான். அவன் எதிர்பார்த்த நல்ல செய்தி ஒரு வலை தளத்தில் இருப்பதைக் கண்டு ஆனந்தமடைந்தான். ஹவாய் தீவிலுள்ள ஓர் அமெரிக்க பல்கலைக்கழகம் நல்ல விலை தரத் தயாராக இருக்கும் எவருக்கும் ஒரு ‘டாக்டர்’ பட்டத்தை வழங்க தயார் என்று அறிவித்திருந்தது தொடர்பு கொள்ள வேண்டிய மலேசிய ஏஜென்டின் விபரங்களும் தரப்பட்டிருந்தன.

அதற்கான ஒற்றை விதி, ஒரு ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிக்கப்பட்ட வேண்டும். ஆய்வுக் கட்டுரையின் தராதரம் குறித்தெல்லாம் கவலைகொள்ளத் தேவையில்லை என்றும் அது வெறும் பாதுகாப்பு கருதிய நடவடிக்கையே என்பதாக கனகுவிடம் உறுதி கூறப்பட்ட நிலையிலேயே அவன் அதனை ஏற்றான்.

அதோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலேயே இன்றைய பட்டப்படிப்புக்கான ஆய்வுக் கட்டுரைகளின் தரம் சிரிப்பாய் சிரிப்பதாய் ஒரு பெரியதொரு வெடிச் சிரிப்புடன் அந்த ஏஜெண்ட் சொன்னது இவனுக்கு மேலும் ஆறுதலும் தைரியமும் கொடுத்தது.

அந்த வருடத்திலேயே கனகுவின் கைகளில் ‘டாக்டர்’ பட்டம்.

அதன் பின்புதான் அவன் சற்றம் எதிர்பாராத விதமாக சனி வறுவாய் பிடித்துக் கொண்டது. அவனது ‘டாக்டர்’ பட்டத்தின் மகாத்மியம் வெளியே கசிய வருவோர் போவோர் எல்லாம் “என்னங்க டாக்டர் எப்ப எங்க கிளினிக் தெறக்கப் போறீங்க” என்று கண் சிமிட்டாமலே கிண்டலடிக்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் கோபம் தலைக்கேறி அப்படிக் கேட்ட ஒருவனை சட்டைக் காலரைப் பிடித்து தரதரவென்று வீடு வரை இழுத்துப் போய் சாமி படத்துக்குப் பின்னால் ஒளிந்து வைத்திருந்த மலேசியத் தமிழர்களும் ஜக்கூன் ஆதிவாசி மக்களும் என்கிற ஆய்வுக் கட்டுரையை எடுத்து அவன் முகத்தில் வீசி தனது தந்தையான கூத்துக்கார மாரியப்பனுக்குப் பிடித்த அதே டாக்டர் சிவாஜி தோற்றத்தில் ஒருக்களித்து சாய்வாய் நின்று ஒரு அனாயசய புன்னகையை வீச வந்தவன் அதே குறும்புச் சிரிப்புடன் திரும்பிப் போனதை இவன் இன்றும் நினைவில் வைத்திருக்கிறான்.

அதன் பிறகான சிறிது கால இடைவெளிக்குப் பின் இந்த முதல் அலையின் தாக்குதல் தணிந்து விட அடுத்த கட்ட OCD-யின் தாக்குதல் தொடங்கியபோது கனகு நிலைகுலைந்து போனான்.

அவனது அடுத்த கட்டப் பயணம் தலைமைத்துவம் நோக்கி நகர்ந்தது.

அந்த எண்ணம் முற்றிலுமாக தன்னை ஆட்கொள்ளத் தொடங்கிய நாளிலிருந்து மீண்டும் ஒருமுறை கனகு தன் தூக்கத்தைத் தொலைத்திருந்தான்.

அதை நிறைவேற்றுவதற்கான தெளிவான திட்டமோ செயல் முறையோ இல்லாத நிலையில் அது குறித்து தீவிரமாக சிந்திக்கவும் தகவல்களைச் சேகரிக்கவும் தொடங்கியிருந்தான்.

அதற்கான தனது சகாக்களின் வழிகாட்டுதலை வேண்டி, அவர்களை புளியமர மாமாக் கடைக்கு வரச் சொல்லி ஆளுக்கொரு தேதாரேக் சகிதம் நீண்ட விவாதத்தில் ஈடுபட்டான்.

அவர்கள் ஆளுக்கொரு ஆலோசனை வழங்க, அவற்றை கவனமாக செவிமடுத்து உள்வாங்கி பரிசீலித்தும், எவ்வித தெளிவான முடிவுக்கும் வர இயலாத குழப்பத்துடன் தனக்கு முன்பே அறிமுகமான வளைவு கோயில் தலைவர் இங்கிலீஸ் மணியத்தை தேடிக் கொண்டு போனான்.

தலைவர் இங்கிலீஸ் மணியத்தைக் கண்டு பேசிவிட்டுப் போன இரவே அவனுள் நோய் தீவிரம் கொள்ளத் தொடங்கியிருந்தது. தலை கனத்து வலித்தது. மனதில் ஓயாத அலையாய் வந்து தாக்கிய உளைச்சல்.

நீண்டு போன இரவின் பின்பகுதியில் கண்ணயர்ந்தவனின் கனவிலும் தலைவர்களின் பவனி. உள்ளூர் தானைத் தலைவர் ச.சாமிவேலு புதிய கோமாளி முருகையா தொடங்கி தமிழக மஞ்சள் துண்டு புகழ் கருணாநிதி வரை ஏகப்பட்ட தலைவர்கள். ஒரு கட்டத்தில் அத்தனை பேரும் இவனைத் துரத்தி ஓடிவர இவன் அலறித் துடித்து எழுந்து கண்களைக் கசக்கி இருளைப் பார்த்து உட்கார்ந்திருந்தான்.

அப்போதே இதற்கு மேலும் தாமதித்தல் கூடாது என்பதை உணர்ந்து கொண்டான். பேனாவையும் பேப்பரையும் எடுத்துக் கொண்டு உட்கார்ந்து பட்டியல் ஒன்றைத் தயாரித்தான்.

அதில் முதல் இடத்தில் ‘ஆளுமை வளர்ச்சி’ என்று குறித்துக் கொண்டான்.

அதனைக் கொண்டு செலுத்தும் வாகனமாக அவன் தேர்வு செய்து கொண்டது அவனது கூத்துக்கார மாரியப்பனுக்குப் பிரியமான கூத்துக் கலையையே.

அன்றைய இரவே தனது பயிற்சியைத் தொடங்கிய கனகு பிள்ளைக்குட்டிகள் தூங்கப்போகும் வரை காத்திருந்து மெல்ல தன் அறைக் கதவைச் சாத்தி தாழ்ப்பாள் போட்டு சத்தமெலாத வண்ணம் எண்ணெய் இல்லாத கறையில் பெரிய ஓசையுடன் வழக்கமாய் திறக்கும் அலமாரியை திறந்து மதியமே வேகாத வெயிலில் காயத்ரி பேரங்காடிக்குப் பயணித்து கவனமுடன் வாங்கி வந்திருந்த வெள்ளை நிற ஜிப்பா, குர்தா, கறுப்புக் கண்ணாடி, பச்சை நிற ஜப்பான் சிலிப்பர் கொண்ட பொட்டலத்தை எடுத்து ஒவ்வொரு ஐட்டமாக அணிந்து கொண்டு- ஆளுயர பீரோ கண்ணாடி முன்னால் நின்று ஒருமுறை அழகு பார்த்தான்.

தனது உடல் வண்ணத்துக்கு ஏற்ப அந்த வெள்ளை ஜிப்பாவும் குர்தாவும் கண்களை அழகுபடுத்திய கறுப்புக் கண்ணாடியும் இருப்பதைக் கண்டவன் முகத்தில் முழுத் திருப்தி. கால்களில் பொருத்திய பச்சை நிற ஜப்பான் சிலிப்பார் பிற அயிட்டங்களோடு பொருந்தாமல் முரண்பட்டு நின்றாலும் வளைவு கோயில் தலைவர் இங்கிலீஸ் மணியம் கூறியது போல் தலைவனா எல்லாத்துலயும் ஒரு வித்தியாசம் இருக்கனும் கனகு. உடுத்துருதுல, நடக்கறதல, பாக்கறதல, சிரிக்கிறதல, பேசறதல, எல்லாத்துலயும் வேறயா இருக்கனும் என்ற தெய்வ வாக்குக்கு ஒப்ப அதனை தேர்வு செய்திருந்தான் கனகு.

கண்ணாடி முன் அழகு பார்த்த நின்றவன் சிறிது நேரம் அப்படியே தன்னுள் மூழ்கிப் போனான்.

அந்த ஆழ்ந்த மௌன நிலையிலேயே ஒரு கணம் பத்தாண்டுகளுக்கு முன்பே சொர்க்கம் போன தனது தந்தையும் கூத்துக்காரனுமான மாரியப்பனையும் தனது இன்றைய வாழ்வுக்கும் வளத்துக்கும் காரணமாக விளங்கிய இதய தெய்வமான ஆதி கடவுளையும் ஒரு முறை மனதுள் கொண்டு வந்து நிறுத்த- கண்ணீர் மல்க வணங்கி நின்றான்.

சில காலம் முன்பு தான் மிகுந்த சிரமப்பட்டு அரங்கேற்றிய ‘புருடா டாக்டர்’ என்கிற நவீன கூத்து – மக்கள் மத்தியில் எடுபடாமல் படுதோல்வியுற்று தனக்கு மிகுந்த தலைக்குனிவையும் கொண்டு வந்து சேர்த்தது போல் அல்லாமல் இனி தான் அரங்கேற்றப்போகும் இந்த ‘புருடா தலைவன்’ என்கிற பின் நவீனத்துவக் கூத்து மக்களின் அமோக வரவேற்பைப் பெற்று தன் கீர்த்தி பாரெல்லாம் பரவி உலக மகா தலைவனாக விளங்க அவர்கள் இருவரின் ஆசியையும் வேண்டி கைகூப்பினான்.

கிழக்கு மூலையில் பல்லி ஒன்று பசிக்கு கிச் கிச் என்று குரல் கொடுத்ததை தனது தெய்வங்கள் தனது வேண்டுதலுக்கு வழங்கிய ஆசிர்வதமாக நினைத்து மெய்சிலிர்க்க அத்திசைக்குத் திரும்பி மிகுந்த பவ்யத்துடன் தலையில் குட்டிக் கொண்டான்.

தனது பயிற்சியின் முதல் அயிட்டமாக தனது நடையழகில் மெறுகேற்ற நினைத்தவன் ஆழ மூச்சிழுத்து மெல்ல வெளியேற்றி உடலைத் தளரச் செய்து நேராக நின்று கொண்டான். பின் மெல்ல தனது வலது காலை ஓரடி தள்ளி பக்கம் நகர்த்தி இடுப்பை இடது புறம் 80 பாகை அளவுக்குச் சாயத்து நிறுத்தி வைத்தான். முன் நகர்ந்திருந்த உடலை சற்றே பின் நகர்த்தி சரி செய்து கொண்டான். தலையை மட்டும் மேலும் 10 பாகை அளவுக்கு இடது புறம் சாய்த்து ஒருவித விசித்திர தோற்றத்திற்கு தன்னை கட்டமைத்துக் கொண்டிருந்தான் கனகு.

அந்தக் கட்டமைப்பு குலையாத வகையில் தனது உடலை தெற்கு பார்த்து திருப்பி இடது கையை இடுப்பில் லாவகமாய் பதித்து வலது கையை முன்னும் பின்னும் நகரவிட்டு ஸ்டைலாக நடக்கத் தொடங்கி அறையை பல முறை வளைய வந்தான். இடையிடையே நிறுத்தி தனது உடலின் சாய்வை தனது திருப்திக்கேற்ப சரிசெய்து கொண்டு பயிற்சியைத் தொடர்ந்தான்.

இறுதிச் சுற்று முடிய பீரோ கண்ணாடியின் முன் வந்து நின்று தலைவனுக்குரிய பேச்சாற்றலைப் பெறும் விதமாக கையைக் காலை ஆட்டி பேசத் தொடங்கினான்.

எனது குலதெய்வமான ஆதிக் கடவுளே! எனது கூத்துக்கு தெய்வமான தந்தைக் கடவுளே! பொழப்புக்கு தெய்வமான தமிழ் கடவுளே! என்று தனது இயல்பான குரலைச் சற்றே சிதைத்து கரகரத்த குரலில் பேச்சு பயிற்சியைத் தொடர்ந்தான்.

இப்படியாக பல இரவுகள் கண்விழித்து தனது ‘தலைவன்’ பதவி நிறைவேற்றத்துக்கான கடும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கனகு ஒரு நாள் ஏதோ சிந்தனையில் மூழ்கி பேரங்காடியின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தான்.

“அதோ நிக்கிறாரே டாக்டர்- அவர தெரியுமாடா உனக்கு?”

பின்புறமிருந்து வந்த எகத்தானக் குரல் சுண்டி இழுத்தது. அவனுடைய குரல்தான். என்றுமே மறந்து விடாதபடி நினைவின் அடி ஆழத்துள் சென்று வேரூன்றிவிட்ட குரல். ஒரு வருடம் முன்பு இவனேதான் இதே கேள்வியைக் கேட்டு பெரிதாய் சத்தம் போட்டுச் சிரித்தான். இந்த முறை சிரிப்பில்லை. ஆனால் எகத்தாளம் இருந்தது.

அன்று அவன் அதைக் கூறியபோது வாடா நான் டாக்டரா இல்லயானு உனக்கு இப்பவே காட்டறேன். என்று அவனது கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வீடு வரை வந்து சாமி படத்துக்குப் பின்னால் ஒளித்து வைத்திருந்த ஆய்வுக் கட்டுரையை எடுத்து அவன் முகத்தில் வீசியதும் அப்பவும் அவன் முகத்தில் விஷமம் தாண்டவமாடும் அந்த புன்னகை கனகுவைப் பார்த்து எண்ணி நகையாடி பரிகசித்ததும் மீண்டும் ஒருமுறை குறுக்குவெட்டில் பாய்ந்து ஓட மனம் கோபத்தில் கொதித்தது.

ஓடிப்போய் அவன் கழுத்தைப் பிடித்து உலுக்கி கன்னத்தில் இரண்டு அறையேணும் வைக்க வேண்டும்போல் உடல் பரபரத்தது.

அவனை எதிர்கொள்ள திரும்ப போனவனை டக்கென்று ஏதோ உள் நுழைந்து, வேண்டாம் பொறு என்று தடுத்து நிறுத்தியது.

கனகு சுதாரித்துக் கொண்டான். உள் புகுந்ததை உற்றுக் கவனித்தான். பொறி தட்டியது. அதுதான் சரி என்று முடிவு செய்து கொண்டான்.

ஒரு முறை தனது கூத்துப் பட்டறையாக மாறிவிட்டிருந்த தனது இரவு நேர அறையை நினைவில் கொண்டான். தான் இதுகாறும் மேற்கொண்டு வரும் கடும் கூத்துப் பயிற்சியை மனதுள் அசைபோட்டுப் பார்த்தான்.

அத்தனையும் அதனதன் இடத்தில் அந்தத் தருணத்தில் தனக்கு சாதகமாக வந்து உட்கார்ந்து கொண்டதை அவனது நுண்புலன் உணர்ந்து, தனது கடும் பயிற்சியை சோதித்துப் பார்ப்பதற்கான மிகச் சிறந்த சோதனைக் களம் இதுதான் என மண்டையிலடித்து சொல்ல அவன் தன்னை உஷார் படுத்திக் கொண்டான்.

ஆழ மூச்சிழுத்து வெளியேற்றினான். இப்படியே சில முறை உடலின் மனதின் இறுக்கம் குறைவது போல் இருந்தது. கண்களை இறுக்க மூடி மீண்டும் மௌனமானான். தனது இரவு நேர அறைக்குள் மீண்டும் நடமாடினான்.

தலையைச் சற்றே பின்னோக்கி நகர்த்த நெஞ்சுக் கூடு அதற்கேற்ப முன் நகர்ந்து தூக்கலாய் நிமிர்ந்தது இடுப்பை வலது புறம் சாய்த்து 80 பாகை அளவில் நிறுத்தி முகத்தில் ஸ்பெஷலாக தனது அப்பனுக்குப் பிடித்தமான டாக்டர் சிவாஜியின் உப்பிய கன்னத்தில் உதடுகள் குவிந்து விரிய மலரும் அந்த அசமந்தப் புன்னகை.

கனகு தயார் நிலைக்கு வந்திருந்தான். தனது புது உடல் ஜோடனை கலைந்து விடாத எச்சரிக்கையுடன் பின்னாலிருந்து குரல் கொடுத்த அவனை எதிர்கொள்ள மெல்ல திரும்பினான்.

இரவின் நிசப்தம் நிறைந்து விளக்கொளியில் மிதக்கும் ஆள் அரவமற்ற பிரதேசமாக வெறிச்சிட்ட நிலையில் அவன் திரும்பிய குரல் வந்த திசையில் யாருமில்லாத வெற்றிடமாய் பேரங்காடியின் இழுத்து மூடப்பட்ட நுழைவாசல் மட்டுமே.

– பிப்ரவரி 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *