கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 26, 2024
பார்வையிட்டோர்: 5,537 
 

வெயிலின் தாக்கம் ஏறுவதற்குள் எப்படியும் புறப்பட்ட காரியத்தை முடித்து விட்டு வந்துவிட வேண்டும் என்ற நினைப்பு மண்ணாய்த்தான் போனது ஆறுமுகத்திற்கு.

வியர்வை பிடரி வழியாக வழிந்து சட்டைக்குள் இறங்கி தார்க் கோடு போட்டுக் கொண்டு இருந்தது. நரைத்திருந்த தலைக்கு மட்டும் ஏதோ ஜீவனில்லாத வெறுமை வந்து ஒட்டிக் கொள்கிறது. எண்ணெய் வைத்தால் தலை நோகும் புதுவியாதி அவருக்கு…

ரோட்டோர கடையில் நின்று ஏதாவது தாகத்துக்குக் குடித்து விட்டு நகரலாமா என்று யோசித்தார். வரிசையாய் நின்றிருந்த தூங்குமூஞ்சி மரங்களின் அடியில் தள்ளுவண்டிக் கடைகளில் குளிர்பானங்கள் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன.

“விலை மலிவு’ என்ற வாசகம் வெயிலைக் கவர்ந்து இழுத்துக் கொண்டு இருந்தது. இரண்டெட்டு நகர்ந்தவர் லேசாய்த் தயங்கினார். எதிர்வரிசையில் இளநீர்க்காரன் கடைபரப்பி இருந்தான் கொள்வார் இல்லாமல்…

நடைபாதை வாசிகளின் வாழ்க்கை மீது ஓர் அவசர கரிசனம் வந்து உட்கார்ந்து கொண்டது. இத்தனை இளநீர்களையும் இவன் இரவுக்குள் விற்றாக வேண்டும் அல்லது இதை பத்திரப்படுத்தி எடுத்துப் போக வேண்டும் அதுவும் முடியாத பட்சத்தில் இங்கேயே இவன் படுக்கையைப் போட வேண்டும்…

மூன்றுமே அவ்வளவு சுலபமான காரியமில்லை. ஆனால் இது அவர்களுக்கு வாழ்க்கைப்பாடு. கையில் இருந்த சில்லறைகளைப் பொறுக்கிக் கொண்டு அவன் கடையை நோக்கி நடந்தார்.

இவனைக் கண்டதும் இளநீர்க்காரன் காட்டிய ஆவலில் அவன் வாடிக்கையாளரைப் பார்த்து சிலமணி நேரங்கள் கடந்து இருக்கும் என்று தோன்றியது.

விலை பேசாமல் இளநீர் வெட்டச் சொன்னது வேறு அவனுக்கு சந்தோசமாக இருந்திருக்க வேண்டும்.

இளநீருக்கு வாய் கீறி ஸ்ட்ரா சொருகி நீட்ட, அதை வாங்கிக் கொண்டவர் ஸ்ட்ராவை தூக்கி எறிந்துவிட்டு பதமாகக் குடித்தார். இளநீர்க்காரன் முகத்தில் சின்ன ஆச்சர்யம்… அவன் பார்வையின் பொருள் அறிந்து சிரித்தார்.

“என்ன அப்படிப் பாக்குறீங்க? நான் என்ன பட்டணத்துக்காரனா? இப்படி குழலைப் போட்டு உறிய? கிராமத்துக்காரன்… பதறாம சிதறாம குடிக்கத் தெரியும். அதுசரி எங்கத்த இளநீ இது?”

“பொள்ளாச்சி”

“இருக்கவே இருக்காது… அது கரும்புச்சாறில கல்கண்டைப் போட்டாப்புல இல்ல இனிக்கும்… இது வெறெங்கத்த காய்ப்போ… இப்பத்தான் ஆயிரம் காய்ச்சியும், ஐயாரெட்டு மகசூலாட்டம் வந்துருச்சே… உலகம் சுருங்கச் சுருங்க எல்லாம் ருசியத்துத் தான் போச்சு… அது சரி… என்ன இந்த அக்னி கழுவுக்கே கூட்டத்தைக் காணோம்…” கண்கள் அலைபாய்ந்தன. இவர் வார்த்தைகள் அந்த இளநீர்க்காரனுக்கு ஆறுதலாய் இருந்திருக்க வேண்டும்? நன்றியாய்ப் பார்த்தான்.

“என்னங்க செய்ய? யாரும் முப்பது நாற்பதுன்னு தந்து இளநீ வாங்கி குடிக்கறதில்லே. கண்ட தண்ணியில ஏதோ கலரைப் போட்டு பத்து ரூபாயுக்கும் இருபது ரூபாயுக்கும் தர்றான். அங்கேதான் குவியுது ஜனங்க… யாரையும் சொல்றாப்புல இல்ல” சில நொடிகளுக்குள் பொருளாதர நலிவை அவன் பார்வையில் பதிவு செய்து இருந்தான்.

“வருத்தப்படாதய்யா… நமக்குன்னு போட்டது நமக்கு கிடைச்சே தீரும்… நீயேன் அதுக்கு கவலைப்

படற… கடையைத் திறக்க வேண்டியது தான் நம்மோட வேலை… ஆளை அனுப்பறது ஆண்டவன் வேலை… விடியும் விடியும் பொறுமையா இரு” பேசியபடியே பாக்கெட்டுக்குள் கைவிட்டு ஐம்பது ருபாய்த் தாளை எடுத்து நீட்டினார்.

அவன் மீதியைத் தர, உற்றுப் பார்த்தார்.

“என்னய்யா கொறைவா எடுத்திருக்க போல”

“அதெல்லாம் இல்லீங்க… முப்பது ருவா இளநீ உங்களுக்கு இருப்பதைஞ்சு தந்திருக்கேன்” அவன் சொல்ல இப்போது இன்னும் பெருங்குரலெடுத்துச் சிரித்தார்.

“எனக்கு எதுக்கு குறைச்ச? நான் இரண்டு வார்த்தை பேசின்னனா? அங்கதான்யா நாம எல்லாரும் தப்பு செய்றோம்… இது மனுசனுக்கு மனுசன் செய்ய வேண்டிய மரியாதை… பேச்சுக்கும், விசாரிப்புக்கும் ஏதோ ஒரு வகையில லஞ்சத்தைத் தந்து ஊரைக் கெடுக்கறோம்.” அவன் கையில் சில்லறையைத் திணித்துவிட்டு நிழலில் நடந்தார். அவன் கண்கள் முதுகில் குளுமையாக ஊர்வது தெரிந்தது.

வங்கியில் கூட்டம் அதிகம் இல்லை. கிட்டத்தட்ட மூன்று மாதமாய் நடையாய் நடந்து ஓய்ந்து ஆகிவிட்டது.

வீடு ரொம்பவும் பழுதடைந்து போய்விட்டது. வங்கியில் கடனை வாங்கி வீட்டை மராமத்து செய்து கொண்டால், அடுத்த அறுவடையில் கடனைக் கட்டிவிடலாம் என்று முடிவு செய்துதான், இங்கே நடையாய் நடந்து தேய்ந்து கொண்டு இருந்தார்.

வீட்டுப் பத்திரத்தில் இருந்து மூலப்பத்திரம் மட்டுக்கும் கொண்டு வரச் சொன்னார்கள். அதை எடுத்துக் கொண்டு ஒருநாள் வந்து நின்றார்.

அன்றைக்கு -அங்கே இருந்த அதிகாரி மறுநாள் மாறி இருந்தார். இவரைப் புதுசாய்ப் பார்த்தார். மறுபடியும் ஆதி முதல் அந்தம் வரைக்கும் விளக்கினார்.

இவர் இன்னொரு மறுநாளை வழங்கினார். கூடவே வில்லங்க சர்ட்டிபிகேட்டைக் கொண்டு வரச் சொன்னார். அதுக்கு இரண்டு நாள் பிடித்தது.

முதல்நாள் இவர் சென்றபோது கணிணி மையத்தில் மின்சப்ளை இல்லை. திரும்பி வந்து விட்டார். அடுத்த நாள் போய் போராடி ஒரு முழு நாளைத் தந்து வில்லங்க சான்றிதழுடன் வந்து நின்றார்.

இவர் கொண்டு போய் நீட்டியபோது அந்த செக்ஷன் ஆபிசர் அதை தன் கண்ணாலும் வாங்கிப் பார்க்கவில்லை என்பதுதான் மனசு வலிக்க வைத்தது.

ஆறுமுகத்தை விட நைந்து கிடந்த பேப்பர்களை ஒருமுறை திருப்பி பார்த்துவிட்டு முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு ஆங்கிலத்தில் பேசினார்,

ஆறுமுகத்தின் மனசில் சடுதியில் அந்த சந்தேகம் வந்தது. இதுபோல பதவிகளில் இருப்பவர்கள் முகங்கள் மட்டும் ஏன் கருணையைத் தொலைத்ததாகவே இருக்கின்றன? படிப்பறிவில் குறைந்தவர்கள் என்று அறிந்திருந்த போதும் எதுக்காக ஆங்கிலத்தில் பேசுகிறார்கள்? புரியத்தான் இல்லை…

“தமிழ்ல சொல்லுங்கய்யா” என்றார் அமைதியாக.

“இது வேறயா… உங்களோட டீடெயில் எல்லாம் தந்துட்டுப் போங்க. நாளைக் கழிச்சு ப்ரைடே பேங்கல இருந்து வெரிபிகேசனுக்கு வருவாங்க… அதுக்கு முன்னாடி உங்களுக்கு கால் பண்ணுவாங்க. உங்க நம்பர் சொல்லுங்க” பேனாவைத் திறந்து ஆறுமுகத்தின் ஃபைலில் கை வைக்க ஆறுமுகம் திருதிருவென விழித்தார். ஆபிசர் எரிச்சலாகப் பார்த்தார்.

“செல்போன் நம்பர் கேட்டேன். என்ன இன்னைக்கு முழுக்க உங்க ஒருத்தரை வச்சுட்டே நான் உட்கார்ந்து இருக்கணுமா?” வார்த்தைகள் சுள்ளென்று வந்தன.

“போன் எல்லாம் இல்லீங்க” என்றார் பரிதாபமாக.

“என்ன போன் இல்லையா? எந்த காலத்துலயா இருக்க நீ?” போன் கூட இல்லாதவன் என்றதும் வார்த்தை ஒருமையில் இறங்கியது போலும்.

“ஏங்க, போன் இல்லாட்டி இருக்க முடியாதுங்களா?” என்றார் வெள்ளந்தியாக.

“அப்புறம் எப்படிய்யா எல்லார் கூடயும் பேசுற?” வார்த்தையில் அத்தனை எக்காளம்.

“போனை பக்கத்துல வச்சுகிட்டு மனுசங்களை தூர வைக்கிற மனுசங்க இல்லீங்க நாங்க எல்லாம். போனை தூரமா வச்சுட்டு பக்கத்துல இருக்கிற சனங்ககிட்ட முகம் பார்த்து அளவளாவுவோம்” சாட்டையாய் விழுந்தது பதில். அதுவே அந்த அதிகாரிக்கு உவப்பாய் இல்லை.

“சரி சரி… அது உன் பிரச்னை… நேர்ல வர்றவங்களுக்கு திருப்தியா இருந்து லோன் அப்ளிகேசன்ல கையெழுத்து போட்டாத்தான் லோன் சாங்சன் ஆகும்… அதுவும் நினைவுல வச்சுக்க” பேப்பர்களை அலட்சியமாய் தூக்கிப் போட்டார்.

வெளியில் இறங்கி வந்தார். லேசான தளர்வாய் இருந்தது. வீட்டுப் பத்திரங்களை வாங்கிக் கொண்டு கடன் தரப்போகிறார்கள். கடன் கட்டவில்லை என்றால் வீட்டை ஜப்தி செய்வார்கள். அரசு தந்த மானியமாக ஒரு தொகை கழியும் இதில். மீதியுள்ள காசை குறிப்பிட்ட தவணையில் கட்டவேண்டும். இவ்வளவுதான் லோன் தருவதிற்கான சாராம்சம். அதற்கு ஏன் இத்தனை இழுத்தடிப்பு?

இவரை நோக்கி உள்ளிருந்து ஒருவன் வந்தான்.

“நில்லுங்க ஐயா லோனுக்கா வந்தீங்க?” என்றான். தலையசைத்தார்.

“நீங்க எதுக்கு இவ்வளவு அலைஞ்சுகிட்டு இருக்கீங்க? புரியல. இதெல்லாம் இப்போ அத்தனை எளிதாக நடக்காது. எங்கே போகணும், யாரைப் பார்க்கணும்கிற விவரம் எல்லாம் உங்களை மாதிரி ஆளுங்களுக்குப் புரியாது. எல்லாம் ஏற்பாடு பண்ணி ஆளுங்களை வீட்டுக்கு கூட்டிட்டு வந்து சரிக்கட்டி செக்கை கூடவே இருந்து வாங்கித் தருகிற வரைக்கும் ஆள் இருக்கு… கமிசன் தந்தாப் போதும்” அவன் குரல் தாழ்த்திச் சொன்னான்.

ஆறுமுகம் கண்களை குறுக்கிப் பார்த்தார்.

“அதுசரி, அதுக்கு எம்புட்டு கமிசன்…”

“பத்து ப்ரெசண்ட்… லோன் தொகையில. உங்களுது லோன் அம்பதாயிரம்னா ஐயாயிரம் தந்தாப் போதும்” தந்தாப் போதும் என்பதில் அழுத்தம் பதிந்து கிடந்தது. ஆறுமுகம் லேசாய் சிரித்தார்.

“அதென்ன சாமி கணக்கு? புரியல… மானியக் காசை உனக்கு தந்துட்டுத் தான் நான் லோன் எடுக்கணும்னா எனக்கு இதுல என்ன அவசியம் வந்துச்சுன்னு தெரியல… அது மட்டுமில்ல என் பொருளை காட்டறேன். அதுல திருப்தி இருந்தா பேங்குக்காரன் காசு தரட்டும். இல்லாட்டி போறான். எதுக்குய்யா நடுவுல தரகன் எல்லாம்” கிராமத்தானின் வெவரம் அவனுக்கு உவப்பானதாக இல்லை. முனங்கிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான்.

சொன்ன நாளில் வெரிபிகேசனுக்கு வரவில்லை. அடுத்தநாள் ஆறுமுகம் வேகாத வெயிலில் பேங்குக்கு வந்து நின்றார். இன்று வெரிபிகேசனுக்கு வரும் அதிகாரியின் மனைவிக்கு குழந்தைக்கு பிறந்திருக்கிறது என்று விடுப்பில் போய் இருந்தார்.

மூன்று நாட்கள் கழித்துத் தான் அவர் வெரிபிகேசனுக்கே வந்தார். அவர் வந்து மோலோட்டமாய் வீட்டைச் சுற்றிப் பார்த்தார்.

“வீடு நல்லாத்தானே இருக்கு… இப்போ எதுக்கு லோன் கேட்குறீங்க? லோன் வாங்கிட்டு வேற செலவு செய்யப் போறீங்களா?” மாட்டுக் கொட்டகை போல் இருந்த வீட்டை தாஜ்மகால் போல் சித்திரித்து அவர் சுற்றி சுற்றிப் பார்த்தது ஆறுமுகத்துக்கு அத்தனை வேதனையாக இருந்தது

“என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க…’புள்ளை குட்டி இல்லாதவன் பஞ்சத்துல ராஜா, மாடு கன்னு இல்லாதவன் மழைக்கு ராஜா’ன்னு சும்மாவா சொன்னாங்க… மழைக்காலத்துல மறைய இடமில்லை அத்தனை ஒழுகுது. ஓட்டை பிரிச்சு மாத்தினா, பொம்பளைப் புள்ளைக்கு கல்யாணம் பேசலாம்னு பார்க்கிறேன்” வாழ்க்கையின் வலிகளைச் சொன்னார்.

“ஓடு மாத்தவா ஐம்பதாயிரம் கேட்டு இருக்கீங்க?”

“என்னங்க இப்படி கேட்குறீங்க? பெரிய பெரிய இடங்கள்ல சின்ன மீட்டிங் போட்டா அதுக்கு காப்பி பலகாரம் பண்ண செலவுன்னு பல ஆயிரம் கணக்கு காட்டுறாங்க. அதுல்லாம் சரியா தப்பான்னா யாரும் கணக்கு கேட்குறதில்ல… ஓட்டு வீடுங்க… கிழிஞ்ச கோவணம் மாதிரி ஒருபக்கம் தொட்டா ஒரு பக்கம்இழுத்துக்கும். இதை மராமத்து செய்றதே உம்பாடு எம்பாடு ஆயிடும். இதுல செய்கூலி சேதாரத்துக்கெல்லாம் கணக்கு காட்டச் சொல்றீங்களே?” கிழவனின் ஆணித்தரமான கேள்வியில் கொஞ்சம் அசந்து போனாலும், அவர்கள் அதை அங்கீகரிக்கத் தயாராகயில்லை.

இன்ஸ்பெக்ஷன் செய்த எட்டு நாள் கழித்துத்தான் லோன் ஆர்டரில் கையெழுத்துப் போட்டார்கள். அதன் பிறகு ஆதார் சரி பார்ப்பு முடிந்தது. அதற்கு ஒரு முழு நாள் இழுத்து கல் வைத்தது.

ஒரு வழியாக எல்லாம் முடிந்தது என்று இவர் காத்திருக்க, பத்திரத்தில் இருந்த பேருக்கும் ஆதாரில் இருந்த பேருக்கும் வித்தியாசமாக இருக்கிறது என்று அனுப்பி வைத்தார்கள்.

இ-சேவை மையத்திற்கு வந்து அங்கேயும் தவழ்ந்த அலட்சியப் பார்வைகளை தன்னக்கட்டி தன்னுடைய பேரில் விட்டுப் போன எழுத்தைத் திருத்தி ஆதார் கார்டை எடுத்து வந்தார்.வாழ்க்கை மீதான பிடிப்பு அற்றுப் போனதுஆறுமுகத்துக்கு. மனைவி தனலட்சுமி கூட அவர் படுகின்ற அவஸ்தையைப் பார்த்து வலியாகச் சொன்னாள்:

“எதுக்குங்க இத்தனை அலைச்சல்? ரெண்டு சவரன் சங்கிலி கிடக்கு என்கிட்ட போடாம. அதை செட்டியாரம்மாகிட்ட தந்துட்டு அஞ்சு வட்டிக்கு வாங்கினா நாளைக்கு காசைக் கண்ணுல பார்க்கலாம். இப்படி ஒத்தை பனமரம், காத்துல அல்லாடுற மாதிரி அலையுறீகளே… மனசு அத்தனை வலிக்குது” என்ற மனைவியை அன்பாய்ப்பார்த்தார்.

“பாதி கிணறு தாண்டியாச்சு தனம். இப்ப விட்டுட்டு வந்தா நஷ்டம் அவுகளுக்கு இல்ல. நமக்குத்தேன். இன்னும் கொஞ்சம் தூரம்தான்” என்றார் களைப்பாக.இதோ இன்று அவரை வரச் சொல்லி அவருடைய மகனின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி வந்திருந்தது. அதற்காகத்தான் இத்தனை தூரம் வந்திருக்கிறார் வெயிலில் போராடி.

ஏ.சி காற்று சில்லென்று இருந்தது. அறையை நறுமணம் நிரப்பி இருந்தது. பணப்புழக்கம் வேண்டுமானால் இல்லாமல் இருக்கலாம். ஆனால் பணம் புழங்கும் இடங்களில் மனிதர்களுக்கு வேலை இருக்கிறது.

மடக்க முடியாத இரும்பு நாற்காலியில் சரிந்து அமர்ந்தார். இவரைப் போலவே ஏகப்பட்ட பேர்கள் அங்கே இருந்தார்கள். பணம் எடுக்கவும், கணக்கு சரிபார்க்கவும், வங்கிகள் மும்மரமாகவே இருக்கின்றன எப்போதும்.

இவரை அமரச் சொல்லி இருந்தார்கள். சின்ன முள்ளும் பெரிய முள்ளும் துரத்தி பிடித்து விளையாடிக் கொண்டே இருந்தன. விநாடி முள் மட்டும் மௌனச்சாட்சியாய் கண்காணித்துக் கொண்டு இருந்ததுஇயக்கங்களை.

சரியாய் ஒரு மணிக்கெல்லாம் பரிவர்த்தனைக் கவுண்டர்கள் மூடப்பட, சாப்பாட்டு நேரம் என்று புரிந்தது. பெருமூச்சு வந்தது. கூட்டம் நிறையவே கரைந்து இருந்தது. ஆறுமுகத்தைப் போல ஓரிருவர் மட்டும் அவர்கள் உணவு முடித்து வர காத்திருந்தார்கள்.

கேபின்களுக்குள் சத்தம். சிரிப்பு, உணவின் நறுமண பசியாறல்கள். ஆறுமுகத்திற்கும் பசித்தது. காலையில் சீக்கிரமாய் கிளம்ப வேண்டிய கவனத்தில் கொஞ்சமாய் நீராகாரம் சாப்பிட்டு வந்தவர் தான். வரும் வழியில் இளநீர் குடித்தார்.

எதுவுமே திட ஆகாரம் இல்லை. ஐம்பதைக் கடந்த தேகத்துக்கு கொஞ்சம் அயர்ச்சியாகத் தான் இருந்தது. ஆனால் சாப்பிட வெளியில் கிளம்பிய நேரம் அந்தசெக்ஷன் ஆபிசர் எங்கும் போய் தொலைத்தால் என்ன செய்வது என்றுதான் அமைதியாக அங்கேயே அமர்ந்து இருந்தார்.

இரண்டு மணிக்கு கவுண்டர் திறந்தார்கள். ஏப்ப எக்காளமும், சிரிப்பும் அவர்களின் உணவின் பகுமானத்தை சொன்னது. இவருடைய பசி அதைப் பார்த்து ஏங்கி ஒரு நொடி வயிற்றில் ஏறி இறங்கியது.சரியாய் இரண்டு நாற்பதுக்கு உள்ளே அழைக்கப்பட்டார். மேனேஜரின் ரூமில் கூடுதல் ஏ.சி. காற்று இன்னும் வீரியமான நறுமணத்துடன் வீசியது.அவர் இப்போதுதான் பார்ப்பதைப் போல் எல்லாவற்றையும் திருப்பி பார்த்துக் கொண்டு இருந்தார். அந்தப் பார்வையே ஆறுமுகத்துக்கு அடிவயிற்றைப் புரட்டியது.

“பேப்பர்ஸ் எல்லாம் சரியாத்தான் இருக்கு… ஆனால் இப்போ எல்லாம் எண்ட்ரி போட்டுட்டு உங்களுக்கு சைன் பண்ண சிஸ்டம் ஓர்க் ஆகல, காலையில இருந்து. நீங்க இப்போ கிளம்புங்க. மன் டே வந்து பாருங்க” நாற்காலியில் தன்னைச் சரியாக பொருத்திக் கொண்டுசொன்னார்.

தன்னுடைய சின்னக் கண்ணை குறுக்கி அவரைப் பார்த்தார் ஆறுமுகம். அந்த பார்வை கருப்பணசாமி கோயில் குங்குமம் போல் தீம்பிழம்பாக இருந்தது “சிஸ்டம்னா என்னங்க?” என்றார் தீர்க்கமாய்ப் பார்த்து “கம்ப்யூட்டர்ல ஏதோ டெக்னிக்கல் டீபால்ட்… ஐ மின் திடீர் கோளாறு.”

“ஓஹோ… காலையில இருந்தே வேலை செய்யலயா?”

“ஆமாம்”

“அது செய்யாட்டிக் கிடக்குது. நீங்க எல்லாரும் இங்கதான் இருக்கீங்க? உங்களை விடவா அந்த சின்னப் பொட்டி பெரிய ஆபிசர்? உங்களை விடவா அதுக்கு அதிகாரம் இருக்கு? நீங்க கையெழுத்து போட்டு தந்திடுங்க” ஆறுமுகம் லேசாய் குரலை உசத்த கண்ணாடித் தடுப்பிற்கு பின்னால் இருந்த ஊழியர்கள் கவனம் மேனேஜரின் அறையை நோக்கித் திரும்பியது.

“அதெல்லாம் நான் செய்ய முடியாது. ப்ராபரா சிஸ்டத்துல ஏத்துன பிறகுதான் எதுவுமே செய்ய முடியும்? யூ கேன் கோ நவ்”

“ஓ ஹோ… என்னய்யா சொல்றீங்க? மூணு மாசம் இந்த காசுக்காக அலையோ அலைன்னு அலைஞ்சாச்சு… வெயில்லுன்னு பார்க்காம நீங்க சொன்னதெல்லாம் ரெடி பண்ணியும் தந்தாச்சு. இன்னும்கூட பொறுமையாத் தான் நிக்கிறேன்.”

“நின்னுதான் ஆகணும் பெரியவரே… இதொன்னும் உங்க அப்பா வீட்டு சொத்தோ, என் அப்பா வீட்டு சொத்தோ இல்ல. நீங்க வந்து கேட்டதும் தூக்கி கொடுக்க.”

“வாஸ்தவம் தான். அது எங்கள மாதிரி பொதுஜனத்தோட உரிமை. ஆனா எங்க உரிமையை நாங்க அடைய எத்தனைதான் அலைக்கழிப்பீங்க?” குரல் உயர, ஊழியர்கள் உள்ளே வந்தார்கள்.ஆவேசமாய் இவரை அப்புறப்படுத்த முயல, அந்த கிராமத்து தேகம் தளராமல் அப்படியே நின்றது.

“எதுக்கு என்னை வெளியில இழுத்து விடறீங்க? நான் கேட்கறதுக்கு பதில் வராட்டி நான் இம்மியும் அசைய மாட்டேன் இங்கே இருந்து. நேரா வக்கீல்ட்ட தான் போய் நிப்பேன். எனக்கு உங்களால மன உளைச்சல்னு சொல்லி மானநஷ்ட வழக்கு போடுவேன்” அவர் கத்த அங்கே ஓர் அதிகாரச் சிரிப்பு எழுந்தது பேரிரைச்சலாய்.

“போயா போய்க்க… இத்தனைக்கும் பின்னாடி நீ தம்படி காசு வாங்கிட மாட்ட இங்கே இருந்து. என்ன நாங்க உன் வீட்டு வேலைக்காரன்னு நினைச்சியா? போய் நிரூபி… நாங்க உன்னை அலைகழிச்சோம்னு” கேசியர் சிரிக்க, மற்றவர்களின் முகத்தில் அதே ஆணவப் புன்னகை இந்த பாமரனைப் பார்த்து.

அவர் கண்கள் சிவக்க ஒருமுறை அவர்களை ஏறிட்டார். இகழ்வாய் சிரித்தார்.

“சார்… நான் படிக்காதவன் தான். ஆனா புத்தி கெட்டவன் இல்லை. நீங்க நினைக்கிற மாதிரி நான் மூணு மாசக் கதைய பேசினத்தானே என்னை பைத்தியக்காரன்னு சொல்லுவீங்க? நான் பேசப் போறது இன்னைக்கு ஒருநாளையக் கதையைத் தான். இங்கே காலையில இருந்து மிசின் வேலை செய்யலைன்னு மேனேஜர் சொல்றாரு. அப்போ என்னை எதுக்கு இங்கே நாலு மணிநேரமா உட்கார்த்தி வச்சீங்கன்னு கேட்பேன். இங்கே இருக்கிற படம்பிடிக்கிற கருவிகள்ல நான் இம்புட்டு நேரமா உட்கார்ந்து கிடக்கிறது பதிஞ்சுதானே இருக்கும். எல்லாம் தெரிஞ்சவன் தான்யா கிராமத்தான். ஆனா சத்தம் செய்யாத சாமானியன் அவன். இங்கே மிசினுக்குத் தான் அதிகாரம்னா எந்த அதிகாரியும் சம்பளம் கேட்டு போராட்டம் நடத்த என்னய்யா உரிமை இருக்கு உங்களுக்கு? நான் மனசார சொல்லட்டா? நீங்கயெல்லாம் எங்களை மாதிரி இல்லாத, பட்டம் படிக்காதவங்களுக்கு உதவி செய்யாததால தான் எங்க சனங்க எல்லாம் வட்டிக்கடைகள்ல தங்களோட வாழ்க்கையை அடகு வச்சிட்டு கிடக்காங்க… கோடி கோடியா வாங்கிட்டு ஓடிப்போற பெரிய மனுசனுங்களுக்கு தர்ற மரியாதையை நேர்மையான கிராமத்துகாரனுக்கும் குடுங்க…” சட்டென்று அவர் உடைந்து போய் குரல் கமற, அங்கே ஒரு நீண்ட மௌனம் வியாபித்தது.

அந்த சிறு தொகைக்காக அவர் அலைந்து திரிந்த வலி இப்போது அவர்களுக்கும் உரைத்தது.

மேனேஜர் ஏதோ சொல்ல ஆறுமுகத்தை வெளியில் காத்திருக்கச் சொல்லிவிட்டு பேப்பர்களைத் தயார் செய்து எடுத்து வந்தார்கள்.

“இந்தாங்க பெரியவரே இங்கே வாங்க… இதுல குறிச்சிருக்கிற இடத்துல எல்லாம் கையெழுத்து போடுங்க… குறிப்பா மேலே எழுதி இருக்கிற விதிமுறைகளை படிச்சுக்கங்க… தமிழ்லயும் இருக்கு பாருங்க” கேசியர் நீட்டினார்.

வாங்கிக் கொண்டார். தாள்களைப் புரட்டி நடுக்கமாய் கையெழுத்துப் போட ஆரம்பித்தார்.

“விதிமுறைகளை ஒரு தடவை வாசிக்க வேண்டியது தானே? இல்லாட்டி நாளைக்கு வந்து இது தெரியாது… அது தெரியாதுன்னு சொல்ல வேண்டியது” என்றார் கேசியர்.

ஆறுமுகத்தின் முகத்தில் புன்சிரிப்பு தவழ்ந்தது.

“எதுக்கு அதெல்லாம்? நல்லவனுக்கு சட்டம் எதுக்கு? அவனுக்கு அவன் மனசாட்சி தான் சட்டம்… காசு வாங்குனா திருப்பிக் கட்டணும். இவ்வளவு தெரிஞ்சா போதும் எனக்கு. அதுல என்ன எழுதி இருந்தா எனக்கு என்னய்யா?” அவர் வெள்ளந்தியாய் சொல்ல, காசோலையை அவரை நோக்கி நீட்டினார் கேசியர்.

– ஆகஸ்ட் 2020

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *