கிடங்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 18,581 
 
 

‘எறங்குடா’

அண்ணாச்சி காரை நிறுத்தினார்.

இருட்டு. எந்த இடம் என்று புரியவில்லை. முன்னால் ஏதோ பெரிய கட்டடம். அங்கேயும் விளக்கு எதுவும் தெரியக் காணோம்.

‘அண்ணாச்சி, இது என்ன இடம்?

சோமு கண்ணைக் கசக்கியபடி கேட்டான்.

அவன் தூங்கப் போனதே நடு ராத்திரிக்கு அப்புறம் தான். தினமும் அதுதான் வாடிக்கை. நாயக்கரின் ராத்திரி மட்டன் ஸ்டாலில் மல்லிகைப் பூ இட்லி வியாபாரம் முடிகிற நேரம் அது.

‘ரொம்ப கெறங்குதாடா? எனக்காக ஒரு நாள் பொறுத்துக்க.. தனியா ஆசுபத்திரிக்குப் போக வேணாமுன்னு தான் உன்னையும் எழுப்பிக் கூட்டியாந்தேன்’.

அண்ணாச்சி குரல் ஜீவனின்றி ஒலித்தது.

அவருக்காக எதையும் பொறுத்துக் கொள்ளலாம் தான். சின்னப் பையனாகப் பத்து வருடம் முன்பு இந்த மதுரைப் பட்டணத்தில் ஒண்டிய போது இவர் கண்ணில் மாத்திரம் படாமல் போயிருந்தால், சோமு இன்னேரம் கோயில் வாசலில் பிச்சையெடுத்துக் கொண்டோ, ஸ்டேஷன் யார்டில் மூட்டையைக் கிழித்து அரிசி திருடிக் கொண்டோ உருப்படி இல்லாமல் போயிருப்பான்.

‘நாயக்கரே..பையனுக்கு பனவிடலி கிராமமாம் .. எங்க ஊருப் பக்கம். என்னிய மாதிரி சொந்த பந்தம் இல்லாம கிளம்பி வந்திருக்கான்… சூது வாது தெரியாத புள்ளைன்னு முகமே சொல்லுது. கடையிலே நிக்கட்டும். நானு கியாரண்டி’.

அண்ணாச்சி சொன்னால் நாயக்கர் தட்ட மாட்டார். எத்தனையோ வருடப் பழக்கம்.

நாயக்கர் மெஸ்ஸில் சோமு சேர்ந்தபோது, ஆவணி மூலவீதி காதர் முதலாளியிடம் தான் கார் ஓட்டிக் கொண்டிருந்தார் அண்ணாச்சி. திருமயம் ஆவன்னாறுனா முதலாளியிடம் அவர் வந்து சேர்ந்தது அப்புறம் தான்.

அண்ணாச்சி கார் கதவை அறைந்து சார்த்தினார். வழக்கமாக அவர் எடுத்து வருகிற பேபி ஆஸ்டின் இல்லை இது. பின் சீட் அங்கங்கே கிழிந்து தொங்குகிற பழைய செவர்லே வண்டி.

‘பெரியாஸ்பத்திரியா அண்ணாச்சி? இருளோன்னு கெடக்கு..’.

சோமு தடுமாறி விழுந்து விடாமல் அண்ணாச்சியின் கையைப் பற்றிக் கொண்டான்.

நல்ல உறக்கதில் இருந்தவனைத் தட்டி எழுப்பிக் கூட்டி வந்திருக்கிறார். என்ன தலை போகிற் அவசரமோ..

‘இது ஆஸ்பத்திரிக்குப் பின் வாசல்’டா… சவக் கெடங்கு இங்ஙனக்குள்ள தான்..’

ஒரு வினாடி நின்று அவன் தோளில் கை வைத்து அண்ணாச்சி சொன்ன போது அவர் கை லேசாக நடுங்கியது.

சோமுவுக்குத் தூக்கம் முழுக்க விலகிப் போனது.

‘சவக் கிடங்கா? வயிற்றில் கலவரமாக ஏதோ உருள்கிறது.

கடையில் பின்கட்டுக்கு வந்து தட்டி எழுப்பிக் கூப்பிட்ட போது, ஹார்வி பஞ்சாலை ஷிப்டுக்குப் போகிறவர்கள தேத்த்ண்ணி சாப்பிட வந்திருந்த நேரம். விடிகாலை நாலு மணி இருக்கலாம். நாயக்கர் கல்லாவில் உட்கார்ந்திருந்தார்.

மதுரைப் பட்டணம் ராவானாலும் பகலானாலும் தூங்குவதில்லை. நாயக்கர் மெஸ்ஸும் தான்.

‘நாயக்கரே, இவனைக் கூட்டிப் போறேன்… ரொம்ப அவசரம்.. வந்து வெவரம் சொல்றேன்..’

அண்ணாச்சி இன்னும் விவரம் சொல்லவில்லை.

ஒற்றையடிப் பாதையாக நீண்டு போன வழி, சின்னக் கல் கட்டடத்தில் முடிந்தது. அதை ஒட்டி, தகரக் கொட்டகை மூடி, கோணலாக நீள விரிகிற இடம்.

முகப்புத் தாழ்வாரத்தில் சருகுகள் நிழலோடு உதிர்ந்திருக்க, ஓரமாகப் பூனையோ நாயோ படுத்திருந்தது.

பூனை தான். சோகையான வெள்ளை நிறத்தில் ஒரு பூனை. பாதை சட்டென்று வலப்புறம் திரும்ப, உள்ளே மங்கலாக எரிகிற விளக்கு. மர மேஜை போட்டு, நாலைந்து சாணிக் காகிதப் பேரேடுகளைப் பரத்தி வைத்து யாரோ கவிழ்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தார்கள். பக்கத்தில் கழற்றி வைத்த காக்கிக் குல்லா.

பின்னால் தெரிந்த தகரக் கதவுகள் மூடியே இருக்க, மிரட்டுகிற சிவப்பில் சுவரில் ஏதோ வரி வரியாக எழுதி இருந்தது.

‘எசமானே’.

அண்ணாச்சி குரல் சோமுவுக்கு வித்தியாசமாக ஒலித்தது. யாரையும் அண்ணாச்சி இப்படிக் கூப்பிட்டுப் பார்த்ததில்லை. இந்த ஆள் போலீஸ்காரனாக இருக்கலாம்.

சத்தம் கேட்டு விழித்தது பூனை தான். சோம்பல் முறித்தபடி உள்ளே வந்து சோமுவைப் பார்த்து விரோதமாக முனகியது அது.

நாயக்கர் மெஸ்ஸில் எலும்பும் தோலுமாக ஒரு பூனை உண்டு. கரப்பு தின்று தின்று ருசி கண்டு வேறு எதையும் தேடாத பூனை. சவக் கிடங்குப் பூனை என்ன சாப்பிடும் என்று சோமுவுக்குத் தெரியவில்லை.

’ஐயா’.

அண்ணாச்சி மறுபடியும் கூப்பிட்டார். குரல் மேலெழும்பி உயர்ந்து கேட்க, காலடியில் சுற்றி வந்த பூனை மேசையில் தாவி, மறு புறமாகக் குதித்து, மூடியிருந்த தக்ரக் கதவுகளின் பக்கம் வேகுவேகென்று ஓடியது.

‘தேவடியாளே’.

அந்த ஆள் கண் விழித்துச் சொன்ன முதல் வார்த்தை பூனையைப் பார்த்து. அதைத் துரத்திக் கொண்டு போனவன் திரும்பி வந்தபோது அவன் பார்வையில் படத் தயாராக அண்ணாச்சி சட்டைப் பையில் கையை வைத்தபடி நின்றார்.

உள்ளே ஏதாவது முக்கியமான கடுதாசி இருக்கலாம் என்று சோமுவுக்குத் தோன்றியது.

கடுதாசியா, நாடகத்துக்கு ஓசிப் பாசா?

சோமுவுக்குச் சிரிப்பு வந்தது. இருட்டோடு கிளம்பி, இந்த விடியா மூஞ்சி மனுஷனைத் தேடி வந்து நாடக பாஸ் கொடுக்கவ ஆவன்னாறுனா முதலாளி அனுப்பியிருப்பார்?

பட்டணத்தில் இருந்து வந்து சக்கைப் போடு போடுகிறது ஸ்பெஷல் நாடக் கோஷ்டி. ஆவன்னாறுனா முத்லாளிக்கு மர வியாபாரம், இரும்பு வியாபாரத்தோடு நாடகக் கம்பெனி காண்ட்ராக்டும் பணத்தை அள்ளிக் கொட்டுகிற விஷயம். கொட்டியதைக் குவித்து வைத்துக் கொள்ள அவர் குடும்பத்தோடு சுற்று பற்றில் நாலைந்து தொடுப்பு உண்டு என்றும் சோமு கேள்விப் பட்டிருக்கிறான். மெஸ்ஸுக்குச் சாப்பிட வருகிறவர்கள் மீன் கறியோடு அசை போடும் எத்தனையோ உருப்படிகளில் அதுவும் ஒன்று.

‘ரெண்டு வருஷமா அலைஞ்சு தலை கீழா நின்னு புது வருஷத்துலே நாகரத்னாவைக் கூட்டியாந்துட்டாரு ஆவன்னாறுனா.. வசூல் பிச்சுக்கிட்டுப் போகுது.. பத்துப் பதினஞ்சு பெரிய ரூபாயாவது பாத்திடுவாரு போல.. தொள்ளாயிரத்து முப்பத்தஞ்சு லாபக் கணக்கோடு தான் ஆரம்பிச்சிருக்கு அப்பச்சிக்கு..’

முந்தாநாள் ராத்திரி பவளக் கொடி நாடகம் பார்த்து விட்டு வந்து நேரே கல்லாவில் உட்கார்ந்தபடி நாயக்கர் சொன்னது ஞாபகம் வந்தது சோமுவுக்கு.

இப்போது கூடக் கல்லாவில் தான் இருப்பார். வர நேரமானால் ஏசுவாரோ? சொல்லி விட்டுத்தானே அண்ணாச்சி கூட்டி வந்தது..

காக்கி உடுப்பு மாட்டிய அந்த சர்க்கார் உத்தியோகஸ்தன் பூனையைத் தூக்கிக் கொண்டு திரும்பி வந்தான். அவன் பூனையின் பின்னங்கால்களுக்கு நடுவே விரல்களால் தடவிக் கொண்டு வந்தது சோமுவுக்கு அசிங்கமாகப் பட்டது.

சர்க்கார் உத்தியோகஸ்தன். மனதுக்குத் தோன்றிய எதையும் செய்யச் சர்வ சுதந்திரமும் உள்ளவன்.

அண்ணாச்சியை சோமு ஏற இறங்கப் பார்த்தான்.

‘என்னய்யா, என்ன வேணும்?’

குரலில் தெரிந்த ராஜாங்க மிடுக்கு, சோமுவைக் கொஞ்சம் பயப்பட வைத்தது. பூனை சர்க்கார் உத்தியோகஸ்தனின் வைப்பாட்டி போல் கூடவே சிணுங்கியது.

அண்ணாச்சி சட்டைப் பையிலிருந்து நாலாக மடித்து வைத்திருந்த பழுப்புக் காகிதத்தை அவனிடம் நீட்டினார்.

‘.தொழில்காரியா இருந்தா ஊரையே வளச்சுப் போட்டிருப்பே, இந்த நாக்கை வச்சு…’.

கையில் நக்கிக் கொண்டிருந்த பூனையைப் பார்த்துச் சொல்லிக் கொண்டே மறு கையால் விளக்குக்கு நேரே காகிதத்தைத் தூக்கிப் பிடித்தான்.

‘நாகரத்னா, வால்டாக்சு ரோடு, மதராஸ்’.

அவன் சத்தமாகப் படிக்க, சோமு அதிர்ந்து போய் அண்ணாச்சியைப் பார்த்தான். ஏதோ தப்பு செய்தவர் போல் அவர் தலையைக் குனிந்து நின்றிருந்தார்.

நாகரத்னா.. பட்டணத்திலிருந்து வந்து ஊரையே குண்டக்க மண்டக்கவென்று கலக்கிக் கலைத்துப் போட்டுக் கொண்டிருக்கும் நாடகக்காரியா?

’மண்டபம், தொண்டி, திருவாடானை பக்கம் இருந்தெல்லாம் ஸ்பெஷல் வண்டி விடறான்’யா.. எளந்தாரியிலே இருந்து நம்மை மாதிரி ஆத்த மாட்டாத சம்சாரி வரைக்கும் அவனவன் விழுந்தடிச்சு ஓடியாறான்.. நாடகத்தைப் பார்க்கவா.. நாகரத்னாவைப் பார்க்கத்தான்..’

‘அவ கண்ணை வெட்டுற வெட்டும், இடுப்பு துடுப்பு போடறதும், மாரை முன்னாலே தள்ளிக்கிட்டு தெனப் புனம் காக்க நிக்கறதும்..’

‘ஒண்ணும் சின்ன வயசுப் பிள்ளை இல்ல தான்.. முப்பது வயசு இருக்கும்.. அதுக்கு மேலேயும் இருக்கும்..ஆனா என்ன.. கச்சு தச்சானே தாயோளி.. அவன் கைக்கு முத்தம் தரணும்..’

‘சாயாத கொம்பு ரெண்டிருந்தாலும்னு வேடன் பாடறபோது ஒரு குலுக்கு குலுக்கறாளே.. நெசமாவே சாயாத கொம்புதான்’.

‘நாளைக்கு நாடகம் கெடயாது..அப்புறம் ரெண்டே நாள் தான்.. குலேபகாவலி.. லக்பேஷ்வா பகடை உருட்டறதைப் பாக்க கண் கோடி வேணும்.. ஆவன்னாறுனா மெடல் குத்தி விட்டு பத்தாயிரம் ரூபா வெள்ளித் தட்டுலே வச்சுத் தரப் போறாராம்..மெட்ராஸிலே இருந்து டாக்கி காரங்க கூட வராங்களாம்..’

‘என்னாது… நீ பார்க்கலியா இன்னும்.. சன்மம் கடைத்தேற வேணாமா.. எப்பாடு பட்டாவ்து தரிசனம் பண்ணிட்டு வந்து மத்த சோலியைப் பாரு’..

நேற்றைக்கு நாடகம் இல்லாத விடுமுறை நாள். அண்ணாச்சி சாப்பிட வரும்போது சொல்லி அந்த அதிரூப சுந்தரியை ஒரு பத்து நிமிஷமாவது இன்றைக்கு ராத்திரி தரிசிக்க வேண்டுமென்று சோமு நினைத்திருந்தான். அதற்குள்ளாகவா இப்படி? பெயர் சரியாகத் தானே கேட்ட்து? நாகரத்னா தானே?

‘என்னய்யா.. ஏடாகூடாமா எவனாவது எதாவது பண்ணிட்டானா.. நாண்டுக்கிட்டுப் போயிட்டா போல…நேத்து சாயங்காலம் உள்ளாற் கொண்டாந்து போட்டு நடு ராத்திரி வரைக்கும் அறுத்தானுங்க.. இப்போ அள்ளிப் போட்டு தச்சாறது.. ’.

எகத்தாளமாகச் சிரித்தபடி சர்க்கார் உத்தியோகஸ்தன் அண்ணாச்சியைப் பார்த்தான்.

உதட்டை அழுத்தக் கடித்துக் கொண்டு அண்ணாச்சி நின்றார். சாவி தீர்ந்து போன பொம்மை போல் அவர் தலை அப்படியும் இப்படியும் மெல்ல ஆடி, சுவரைப் பார்த்து நிலைத்தது.

’தானுண்டு தன் வேலையுண்டுன்னு வந்து போற ஆளு. வருவாரு. சாப்பிடுவாரு. போவாரு. பேசறதே அபூர்வம். என்ன கேட்டாலும் சிரிப்புத்தான். உத்தியோகம் என்னமோ கார் ஓட்டறது. ஆனா போக்கெல்லாம் பெரும்போக்கு தான். உன் மேலே என்னமோ பிரியம் விழுந்து போச்சு.. நல்லா இருடா’

நாயக்கர் சோமுவிடம் அடிக்கடி சொல்வது இது.

பெரும் போக்குதான். பேச்சிலும், நடையிலும் கம்பீரம். எல்லாம் எங்கே போனது?

’கையெழுத்து எல்லாம் போட வேண்டியிருக்குமே.. போடுவியா?’

பூனையை மடியில் வைத்துக் கொண்டு மேஜை விளிம்பில் உட்கார்ந்தபடி தோரணையாகக் கேட்டான் சர்க்கார் உத்தியோகஸ்தன். அவன் காக்கி நிஜாருக்கு வெளியே தெரிந்த கால்கள் சொறி வைத்து வீங்கிப் போயிருந்தன.

‘கையெளுத்து போடுவேன் ஐயா’

அண்ணாச்சி பணிவாகச் சொன்னார்.

மேசையைத் திறந்து ஒரு கட்டைப் பேனாவை எடுத்துத் தூக்கிப் போட்டான். கருப்பு மைக்கூடு அப்புறமாக வெளியே வந்தது.

‘மசி கொஞ்சமாத்தான் இருக்கு.. நல்லா உள்ளே விட்டு..’

அவன் கட்டை விரல் சைகையில் இருந்த விஷமத்தைக் கவனியாமல் அண்ணாச்சி மசியைப் பேனா முனையில் தொட்டு, விரித்து வைத்த பேரேட்டில் நீளமாகக் கையெழுத்துப் போட்டார்.

‘கொஞ்ச நேரம் எடுக்கும். ஒண்ணு செய்யி.. வாசல்லே தெற்காலே திரும்பி நாலு எட்டு நட்ந்தா ஜட்கா நிக்கற எடம். பொணத்தை எடுத்துப் போக யோசிப்பான். எவனாவது மாட்டுனா உன் அதிர்ஷ்டம்’.

அண்ணாச்சி உடனே வெளியே கிளம்பினார்.

‘காரு கொண்டு வந்திருக்கோம் சார்’.

சோமு, அண்ணாச்சியைத் த்டுத்தபடி சொன்னான். சர்க்கார் உத்தியோகஸ்தன் என்ன சொன்னாலும் உடனே கேட்கிற மனோபாவத்தில் அவர் இருந்ததாகப் பட்டது.

‘காரு வேறேயா எடுபட்டவளுக்கு.. யோகம் தான்..அங்கிட்டு உக்காருங்க..’

சர்க்கார் உத்தியோகஸ்தன் தகரக் கதவை ஓசையெழத் தட்டினான். ஒருக்களித்துத் திறந்து உள்ளேயிருந்த யாரிடமோ காகிதத்தைக் கொடுத்து விட்டு, மேஜைக்குத் திரும்பினான்.

சோமு வெளியே வந்து வேலிகாத்தான் செடிகளுக்குப் பக்கமாகக் குத்த வைத்தான். வயிற்றுக்குக் கீழே ரணமாக எரிந்தது. உலகத்து உஷ்ணம் எல்லாம் வயிற்றில் இறங்கியது போல் கந்தகச் சரடாக உடலெங்கும் பரவ, விட்டு விட்டு நீர் பிரிந்தது.

விடிந்து கொண்டிருந்தது. மாட்டை ஓட்டிக் கொண்டு ஆதீனமிளகிக் கோனார் வந்து போயிருப்பார். காலை பாசஞ்சரில் வந்திறங்கி ஜட்காக்களில் கோயிலுக்குப் போய்க் கொண்டிருக்கும் வட நாட்டு யாத்திரீகர்களை, வழி காட்டுகிறவர்கள் நாயக்கர் மெஸ்ஸுக்கு சாயா குடிக்க கூட்டி வரும் நேரம். ரொட்டி தவிர மற்றதை அறியாதவர்களை ஓட்டை இந்தி பேசி சோமு தான் இட்லியும் தோசையுமாக வயிறு நிறையத் தின்ன வைப்பான்.

நாயக்கர் தனியாக என்ன கஷ்டப் படுகிறாரோ?

சோமு திரும்பியபோது அண்ணாச்சி கட்டிட வெளிச்சுவரில் சாய்ந்து கண் மூடி நின்றிருந்தார். உள்ளொடுங்கிக் குவிந்த தோளும், அழுக்கான மேல் சட்டையும், முகத்தில் அப்பியிருந்த நரை முடியுமாக சீவன் ஓய்ந்து போய்த் தெரிந்தார் அவர். நாடகக் கோஷ்டி வந்ததில் இருந்தே ஓய்வு ஒழிச்சல் இல்லாத உழைப்பு. இப்போது இது வேறே.

ஆவன்னாறுனா வேறு யாரையாவது இங்கே அனுப்பியிருக்கக் கூடாதா?

சோமு அனுதாபத்தோடு அண்ணாச்சியைப் பார்த்தான்.

’மேலுக்கு முடியலியா, அண்ணாச்சி?’

ஆதரவாகக் கேட்டான்.

‘ஒண்ணும் இல்லேடா.. சரியாயிடும்..’

கண்ணைத் திறக்காமலேயே சொன்னார்.

பின்னால் கொஞ்சம் தொலைவில் விரிந்த கப்பி ரோடில் தாளமும் பாட்டுமாக அலையலையாக எழும்பி வருகிற சத்தம்.

பாகு கனிமொழி மாது குறமகள்
பாதம் வருடிய மணவாளா
காதும் ஒருவிழி காகமுற அருள்
மாயன் அரிதிரு மருகோனே.

திருப்புகழ் சேவைக் காரர்கள். நடந்து சுற்றிக் கொண்டு கோயிலுக்குப் போகிறவர்கள். உச்சமடைந்த குரல்களும் தாளமுமாக அவர்கள் கடந்து போகும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தார் அண்ணாச்சி.

‘பக்கத்துலே கடை ஏதாவது இருந்தா காப்பித்தண்ணி வாங்க்யாரட்டுமா அண்ணாச்சி?’

வேண்டாம் என்று சைகையில் சொன்னார்.

அவன் தோளில் கை ஊன்றியபடி மெல்ல உள்ளே வந்த பொழுது, நிஜாரைக் களைந்து விட்டு, அழுக்கான கௌபீனம் தெரிய சர்க்கார் உத்தியோகஸ்தன் வேட்டி உடுத்திக் கொண்டிருந்தான்.

‘ஓரமாகப் போய் உக்காருய்யா,, வந்துடும்..’

மேசையைத் திறந்து பல்பொடியோ எதுவோ தகர டப்பாவிலிருந்து உள்ளங்கையில் கொட்டி எடுத்துக் கொண்டு படி இறங்கிப் போனான்.

இரண்டு கைகளாலும் தலையைத் தாங்கியபடி அண்ணாச்சி குத்த வைத்து உட்கார்ந்தார்.

சோமு கொஞ்சம் தயங்கி, பக்கத்தில் குனிந்தான்.

‘எப்படி அண்ணாச்சி? எப்போ இதெல்லாம்…’

‘நேத்திக்குடா.. இந்நேரம் தான்.. முசாபரி பங்களாவுலே தனி ரூமிலே வச்சு .. உசிரை மாச்சிக்கிட்டா.. சேதி தெரிஞ்சு நேத்து முழுக்க.. மொதலாளி கூட போலீஸ் ஸ்டேஷன், கலெக்டரு ஆபீஸ், அது இதுன்னு போய்…’

அவர் முடிக்கும் முன் மூடியிருந்த தகரக் கதவு விரியத் திறந்தது. அறைக் கோடியில் இரண்டு பேர் நின்று கொண்டிருப்பது மங்கிய வெளிச்சத்தில் தெரிந்தது. நடுவில் மூன்று நீளமான பெஞ்சுகளில் துணி மூடி வைத்திருந்தது. அவை சவங்களாக இருக்கும் என்று சோமுவுக்குப் பட்டது.

‘சோமு, கதவு..கார்க் கதவைத் தொறந்து..’

அண்ணாச்சி வார்த்தை வராமல் தடுமாறி வாசலுக்கு ஓடினார்.

‘போத்திக் கீத்திக் கொண்டு போங்கய்யா.. ச்தி சாவித்திரி..’

திரும்பி வந்து மேசையைத் திறந்து சீப்பு எடுத்துத் தலை சீவிக் கொண்ட சர்க்கார் உத்தியோகஸ்தன் சோமுவைப் பார்த்து சினேகமாகச் சிரித்தான்.

‘போன வாரம் தாரா சசாங்கம் நாடகத்துலே இவ தாரை.. வேணு நாயரு இந்திரன்.. இடுப்பிலே சல்லாத் துணியைச் சுத்திக்கிட்டு இந்திரனுக்கு எண்ணை தேய்க்கறா பாரு.. சிறுக்கி மக.. காலுக்கு இடையிலே துணியை இறுக்கிக்கிட்டா.. சிலோன்லே ஒட்டுத் துணி இல்லாம தாரையா நடிச்சாளாம்.. சிங்களத்தான் பார்க்கலாமாம்.. நம்ம ஊரானுக்குக் காட்ட மாட்டாளாம்..எப்படி இருக்கு ஞாயம்?’

அவன் காலடியில் பூனை ஆமோதித்துக் குரல் எழுப்பியது.

அண்ணாச்சி திரும்பிய போது, தகரக் கதவுக்கு அந்தப் பக்கம் மூலையிலிருந்து கரகரவென்று சத்தம் எழுப்பிக் கொண்டு ஒரு படுக்கை வண்டியை மெல்ல இழுத்துப் போய் ந்டுவில் கிடத்தியிருந்த உடம்பை அசிரத்தையாகத் தூக்கிக் கிடத்தினார்கள்.

கதவைத் தள்ளிக்கொண்டு அண்ணாச்சி உள்ளே போனார். ஓரமாக நகர்ந்த பூனையைப் பார்த்தபடி சோமுவும் உள்ளே போனான்.

சக்கரங்கள் உருளுகிற ஓசை. முன்னால் ஒருவன் இழுக்கவும், பின்னாலிருந்து தள்ளவுமாக அசைந்து வந்து கொண்டிருக்கும் நாகரத்னா.

‘வர மாட்டேனுட்டாடா.. வாயைத் தொறக்காமலேயே திருப்பி அனுப்பிட்டா’.

அண்ணாச்சி திடீரென்று பேசினார். இரண்டு புறமும் வளைந்து கவிகிற சுவர்களில் அவர் குரல் மோதித் தெறித்து விழுந்தபோது வித்தியாசமாக ஒலித்தது.

‘முந்தாநாள் ராத்திரிடா.. நாகரத்னா வேணும்.. கூட்டிட்டு வான்னு மொதலாளி அனுப்பினாரு.. நான் தான் போனேன்.. முசாபரி பங்களாவுக்கு’.

முட்டியை மடக்கி இடது உள்ளங்கையில் குத்திக் கொண்டார். ‘தப்பு.. தப்பு..’ என்று தலை ஆடியது.

வண்டி வாசலை நெருங்கிக் கொண்டிருந்தது.

நடையில் செருப்புச் சத்தம்.

சர்க்கார் உத்தியோகஸ்தன் உள்ளே வந்தான். தோளில் மாட்டிய குடையோடு புறப்படத் தயாராக இருந்தான் அவன்.

‘சொப்பன சுந்தரி.. சிலோன்காரன் ஆசையா இவளுக்குப் பெயர் கொடுத்தான்..’

யாரிட்ம் என்றில்லாமல் சொல்லியப்டி நின்றான்.

வண்டி அசைவில் உடலைப் போர்த்தியிருந்த வெள்ளைத்துணி விலகி, நீலமும் ஜரிகையுமாக நாகரத்னா உடுத்தியிருந்த சேலை தெரிந்தது. முகம் மூடப்பட்டு இருக்க, விறைத்து இருந்த அந்த உடலைப் பார்க்கவே சோமுவுக்கு என்னமோ போல இருந்தது.

‘சொப்பன சுந்தரி.. மயிரு..’

சர்க்கார் உத்தியோகஸ்தன் சட்டென்று முன்னால் நகர்ந்து, நாகரத்னாவில் கால்களுக்கு இடையே புடவையைக் கொத்தாகப் பிடித்து உயர்த்தினான்.

‘எல்லார் மாதிரித்தான் இருக்கு இவளுக்கும்..’

திரும்பத் தழைத்து விட்டுக் கொக்கரித்தபடியே வெளியே இறங்கினான்.

சக்கரங்கள் கடகடக்கப் படுக்கை வண்டி வாசலைத் தாண்டிப் போகும்போது பூனை வேகமாக உள்ளே ஓடி வந்தது.

அண்ணாச்சி அதைப் பலம் கொண்ட மட்டும் எட்டி உதைத்தார்.

‘அவ என் பொண்டாட்டிடா..’

இடியாகக் குரல் உயர்த்தியபடி வண்டியைத் தொடந்து ஓடினார்.

(இரா.முருகன் கதைகள் நூலிலிருந்து)

கிழக்கு பதிப்பகம் வெளியீடு

ISBN 978-81-8368-253-4

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *