காவல் தெய்வம் !

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 6, 2017
பார்வையிட்டோர்: 6,389 
 
 

பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள மிகப்பெரிய விநாயகர் கோவில் அதுதான். சுற்றுப்பட்டிக் கிராமங்களிலே மிகப்பெரிய விநாயகர் கோவில், அதில ஆறடி உயரத்தில் அதிவீர விநாயகர் என்ற பெயரில் வீற்றிருக்கிறார். கோவில் பின்புறத்தில் தார்ச்சாலை அதை அடுத்து மிகப் பெரிய கண்மாய் இருந்தது. அந்தக் கண்மாயில் மழைக் காலங்களில் தண்ணீர் நிரம்பி இருந்தால், அது ஒரு குட்டிச் சமுத்திரம்போல் காட்சியளிக்கும். அந்தக் கண்மாயில் தண்ணீர் நிரம்பி விட்டால், நெல் முப்போகம் விளையும் என்பதால், சுற்றுப்புறக் கிராம மக்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

அந்த அருள்மிகு அதிவீர விநாயகர் கோவில் அந்தக் காலத்தில் ஒரு தனிப்பட்டவரால்,மிகப்பெரிய சுற்றுச் சுவருடன் கட்டப்பட்டது. என்றாலும் ஊர் பொது மக்கள் அனைவராலும் ஒற்றுமையுடன் இருந்து , ஆண்டுதோறும் அந்த விநாயகர் கோவிலில் பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள்.

அந்தக் கோவில் பூசாரியின் பெயர் பாலசுப்ரமணியபிள்ளை என்றாலும் கிராம மக்கள் அனைவரும், சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் ‘கோவில்தாத்தா’ என்றுதான் பூசாரியை அழைப்பார்கள்.. இப்போது அவருக்கு வயது எண்பதைத் தாண்டி விட்டது. தள்ளாத வயதிலும் அந்த அதிவீர விநாயகர் கோவிலில் முறைப்படி பூஜை செய்து கோவிலையும் நன்கு பராமரித்து வருகிறார்.

பிள்ளையார்குளம் கிராமத்தில் வசிக்கும் வாசுவும் மணியும் இருவரும் நெருங்கிய நண்பர்கள். அவர்கள் எங்கு சென்றாலும் சேர்ந்தே செல்வார்கள். அவர்கள் இருவரும் தினமும் மாலை ஆறு மணியானால் போதும், அதிவீர விநாயகர் கோவிலுக்கு வந்து விடுவார்கள். கோவிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, கோவில் பிரகாரத்தையும் சுற்றி விட்டு கோவில் முன்புறத்தில் உள்ள மண்டபத்தில் உட்கார்ந்து விடுவார்கள். கோவில் தாத்தாவும் பூஜைஎல்லாம் முடிந்து விட்டால், அவர்கள் அருகில் வந்து உட்கார்ந்து விடுவார். வாசுவும் மணியும் அவரிடம் ஏதாவது அந்தக் கிராமத்தைப் பற்றி, ஏதாவது கேட்டுக் கொண்டும் பேசிக்கொண்டும் இருப்பார்கள். அவர்கள் இருவரும் கோவிலை விட்டு ஏழு மணிக்குத்தான் எழுந்து செல்வார்கள்.

அன்று அப்படித்தான் மாலை ஆறு மணிக்கு வாசுவும் மணியும் விநாயகர் கோவிலைச் சுற்றி விட்டு வழக்கம்போல் கோவில் மண்டபத்தில் உட்கார்ந்தார்கள். அன்று விநாயகருக்கு உகந்த சங்கடசதுர்த்தி என்பதால், கோவிலில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. பக்தர்கள் கூட்டம் குறைந்தவுடன் கோவில் தாத்தா எப்போதும்போல அவர்கள் அருகில் வந்து , இடுப்பில் கட்டியிருந்த துண்டை எடுத்து, தோளில் போர்த்திக்கொண்டு அப்பனே முருகா ‘ என கூறிக்கொண்டே உட்கார்ந்தார்.

அவர் அருகில் வந்தவுடன் வாசுதான் பேச ஆரம்பித்தான்.“ தாத்தா நம்ம ஊர் கண்மாய்க் கரையில் உள்ள அய்யனார் கோவில் அருகில் ஒரு குத்துக்கல் இருக்கிறதே. அதைக் காவல் தெய்வம் என்று இந்த பிள்ளையார்குளம் ஊர் கிராமமக்கள் எல்லாம் வணங்குகிறார்களே, அது பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள் தாத்தா, இதை உங்களிடம் கேட்க வேண்டும் என்று ஒரு வாரமாக நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றுதான் எனக்கு ஞாபகம் வந்து உங்களிடம் கேட்கிறேன் தாத்தா !”
கோவில்தாத்தா அவர்களுக்கு விரிவாகக் கதை சொல்ல ஆரம்பித்தார்.

பிள்ளையார்குளம் கிராமத்தின் அய்யனார் கோவில் கண்மாய்க்கரையின் மேல்பகுதியில் அமைந்துள்ளது. அந்த பெரிய கண்மாய் மழையினால் நிரம்பி விட்டால், அய்யனார் கோவில் கல்மண்டபத்தின் பின்புறச் சுவரில் பாதி அளவு வரைத் தண்ணீர் தழும்பி நிற்கும்.

சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பு ஐப்பசி மாதத்தில் பிள்ளையார்குளம் கிராமத்தில் விடாது மழை பெய்தது. பெரிய கண்மாய் மழையினால்,அய்யனார்கோவில் கல்மண்டபத்தில் பாதிச்சுவர் அளவு தண்ணீர் தழும்பி நின்றது. மேலும் பெருமழை பெய்தால் ,கண்மாய்க்கரை உடைந்து, கண்மாய்க்கரைக்கு நேர் எதிரே உள்ள பள்ளமான இடத்தில் அமைந்துள்ள அக்ரஹாரம் தெருவில் உள்ள வீடுகள்தான் முதலில் பாதிக்கப்படும்.

கோவில் தாத்தா இருவரையும் பார்த்து “ தம்பிகளா ! அப்போது எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. ஐப்பசி அடைமழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஊரிலுள்ளவர்கள் எல்லாம் சேர்ந்து கொண்டு நிரம்பிய கண்மாயைப் பார்த்து விட்டு பயத்துடன் ‘ ஐயோ ! கண்மாய்க்கரை எந்த நேரத்தில் உடைந்து ஊருக்குள் வெள்ளமாக வந்து விடுமோ !’ பயந்துபோய் அந்த இரவு முழுதும் கிராம மக்கள் எல்லாம் தூங்காமல் இருந்தார்கள். நானும் வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்துகொண்டு அப்போது தூங்காமல் விழித்துக் கொண்டும் பயந்துகொண்டும் இருந்தேன். தெய்வாதீனமாக அன்று இரவு மழைபெய்து ஓய்ந்துவிட்டது. “ என்றார்.

மேலும் தாத்தா தொடர்ந்தார். “அந்தக் காலத்தில் எல்லாம் இப்போதுபோல் அவசரத் தகவல் தெரிவிக்க செல்போன் போன்ற வசதிகள் ஏதும் கிடையாது. எந்தத் தகவலும் தண்டோராப் போட்டுத்தான் ஊர்ப்பொது மக்களுக்குத் தெரிவிப்பார்கள். இப்போது நம்ம கிராமத்திற்கு எவ்வளவு வசதிகள் வந்து விட்டது பார்த்தீங்களா !”

மறுநாள் கிராமத்தில் விடிந்தவுடன் தெருவெங்கும் பறை அடிப்பவன் தண்டோராப்போட்டு கொண்டே சப்தமாக “ இதனால் சகலமானவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் நம்ம ஊர்க் கண்மாய் நிரம்பி கரைஉடைப்பு நிலையில் இருப்பதால், வீட்டில் உள்ளவர்கள் கவனமாக பாதுகாப்பான இடத்திற்குச் சென்று விடுங்கள். அல்லது அனைவரும் கவனமாக பாதுகாப்பாக இருங்கள். கண்மாயை இப்போது வெட்டினால் ,ஊருக்குள் தண்ணீர் புகுந்து விடும். எனவே கண்மாயைக் கரையை வெட்டி விட தோது இல்லாமல் இருப்பதால், சிறியவங்க மற்றும் வயசான பெரியவங்களெல்லாம் பக்கத்து கிராமத்துக்கு அழைத்துச் சென்று விடுங்கள்.

“ மழை இத்துடன் வெறித்து விட்டால் , எந்தக் கவலையும் இல்லை. இது சம்பந்தமாக் நம்ம ஊர் நாட்டமை ஐயா சாயந்தரம் விநாயகர்கோவில் முன்பாக ஊர்க் கூட்டம் போட்டு இருக்காங்க எல்லாரும் வந்திடுங்க சாமியோவ்…”என்று தண்டோராப் போட்டுக் கொண்டே சென்றான்.

அன்று மாலையே ஊர் நாட்டாமை வேலுத்தேவர் தலைமையில்தான் அதிவீர விநாயகர் கோவில் முன்பாக கூட்டம் கூடியது. அந்தக்கூட்டத்தில் பெரும்பாலும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் வந்திருந்தார்கள். அக்ரஹாரம் தெருவில் குடியிருக்கும் மக்கள் மட்டும், பயந்து கொண்டு வீட்டிலேயே இருந்து கொண்டார்கள். அவர்களுக்கெல்லாம் அந்தக் காலத்தில் அந்த ஊர் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள்தான் ,அடிமைகள்போல் வேலை செய்து கொண்டும் , அக்ரஹாரம் ஜனங்களுக்கும் காவல் காத்து நின்றார்கள்.

நாட்டமை வேலுத்தேவர் கூட்டத்தைப் பார்த்து “நம்ம கிராமத்துக் கண்மாய்க்கரை அடைமழையால் தண்ணீர் நிரம்பி , ஆபத்தான நெலமையில் உள்ளது. கண்மாய் எப்போது உடைப்பு எடுக்கும் என்று சொல்ல முடியாது. எனவே வீட்டுக்கொருவராக தவறாமல் கண்மாய்க்கரைக்குச் சென்று காவல் காக்கவேண்டும். ஏதேனும் ஆபத்தான நெலமை வந்தால் ,காவல் காப்பவர்கள் தெருவுக்குள் சென்று ,தகவல் தெரிவிப்பதோடு நம்ம கிராம மக்களைப் பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிச் செல்லவேண்டும். “ என்று கூறிய நாட்டாமை மேலும் தொடர்ந்தார்.

“ கண்மாய்க் கரைக்கு நேராக உள்ள பள்ளத்தில் அய்யமார் தெரு இருப்பதால் ,அவங்களுக்கு மிகவும் ஆபத்து. அந்த தெருவுக்குப் போய் அவங்களை தூங்காமல் இருக்குமாறும் பாதுகாப்பான இடத்திற்கு அவங்களைக் கொண்டுபோய் சேர்க்கணும். அவங்கெல்லாம் நமக்கு தெய்வம் மாதிரி .நமக்கு படி அளக்கர சாமிகள் தெரிஞ்சுக்கோங்க
“ஒரு வாரம் வரை பார்ப்போம் மழை இல்லாமல் இருந்தால் , காவல் காக்க வேண்டாம். மலையில்லேன்னா கண்மாய் கரையும் உடைப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது. என்ன நான் சொன்னதைக் கேட்டு நடந்து கொள்ளுங்க.” எனக் கூறி கூட்டத்தை முடித்தார். கூட்டத்தில் அனைவரும் பயத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே கலைந்து சென்றார்கள்.

கோவில் தாத்தா கதை சொல்வதை நிறுத்தியவுடன்.

வாசு “ என்ன தாத்தா மழை நின்று விட்டதா ? கண்மாய்க் கரை ஏதும் உடையவில்லையே “ என கவலையுடன் கேட்டான்.

மணி “ என்ன தாத்தா திடீரென்று நிறுத்தீட்டிங்க. என்ன நடந்தது என்று சொல்லுங்க தாத்தா” என ஆர்வமாக கேட்டான்.

“ தம்பிகளா அவசரப்படாதீங்க. கோவிலுக்குள் சாமி கும்பிட ஆட்கள் வந்திருக்காங்க , அவங்களைக் கவனித்து விட்டு வரேன் ” எனக் கூறிக்கொண்டே தன்னோட தோளில் கிடந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டே கோவிலுக்குள் சென்றார்.

தாத்தா சென்றபின் வாசுவும் மணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே பேசாமல் அமைதியாக ஏதோ யோசனையில் இருந்தார்கள். கோவிலுக்குள் சென்ற தாத்தா அரை மணி நேரம் கழித்து வந்தார். “ என்ன தம்பிகளா நீங்க ரெண்டு பேரும் என்னை எதிர் பார்த்துக் கொண்டிருக்கிகளா ?சரி தொடர்ந்து சொல்றேன்.” என்று கதையை அவர் விட்ட இடத்திலிருந்து தொடந்தார்.

ஒரு வாரம் தொடர்ச்சியாக மழை பெய்யாமல் இருந்ததைக் கண்ட கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். நிம்மதியாக வீட்டில் அவர்கள் தூங்கினார்கள். ஊர்மக்கள் தினமும் நிரம்பியிருக்கும் கண்மாயைப் பார்த்து பார்த்து மகிழ்ந்தார்கள். கண்மாய் நீரால் நிரம்பி வழிந்தாலும் , கரை உடைப்புக்கு வாய்ப்பில்லை . இனி நம்ம ஊருக்கு மழைபெய்யாது என்ற முடிவுக்கும் அவர்கள் வந்தார்கள்.

ஒரு வாரம் கழித்து இந்தக் கிராமத்தில் ஒருநாள் இரவில் அதிசயமும் துக்கமும் சேர்ந்தே நிகழ்ந்தது என்று கோவில் தாத்தா கூறி நிறுத்தினார்.

“என்ன தாத்தா என்ன அதிசயம் நடந்தது என்ன துக்கம் நடந்தது? சொல்லுங்கள் தாத்தா ! “ என வாசுவும் மணியும் கோரஸாக ஆர்வமுடன் கேட்டனர்.

கோவில் தாத்தா கதையைத் தொடர்ந்தார். அன்று இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கிராம மக்கள் அனைவரும் தன்னை மறந்து, கிராமத்தில் மழை இனிமேல் பெய்யாது என நம்பிக் கொண்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அசதியில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, கிராமத்தில் பலத்த மழை கொட்ட ஆரம்பித்தது.

திடீரென்று பலத்த மழை அன்று இரவு பெய்ததால், அந்தக் கண்மாய்க் கரையில் திடீரென்று ஒரு பக்கத்தில் உடைப்பு ஏற்பட்டது. கண்மாய்க்கரையில் கோவில் கொண்டிருக்கும் அய்யனார்சாமி தன்னோட அகன்ற பாதத்தினால் கரையை அழுத்திக்கொண்டு அதனை அடைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது தற்செயலாக வெளியூருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த முனியாண்டி என்ற இளைஞன் மழை பெய்வதைக் கண்டு, கண்மாய்க்கரை உடைப்பு ஏற்பட்டு விடுமே எனப் பயந்து கொண்டே கண்மாய்க் கரையை நோக்கி வேகமாக ஓடினான். அவன் அந்தப் பெருமழையிலும் நனைந்துகொண்டே அய்யனார் கோவில் ஆலமரத்தடிக்குச் சென்றான். அங்கிருந்து பார்த்தால் கண்மாய்க் கரை நன்கு தெரியும்.

கண்மாய்க் கரையின் ஓர் ஓரத்தில் உடைப்பைக் கண்டு பயந்து என்ன செய்வது என்று அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்போது அந்த உடைப்பை யாரோ ஒருவர் தன்னோட அகன்ற பாதத்தைக் கொண்டு தடுத்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து, சற்று அருகில் சென்று பார்த்தான். பார்த்தவன் திகைத்தான். ஊர்க்காரர்களின் நல்ல நேரமோ, என்னமோ கோவில் அய்யனார்சாமிதான் தன்னோட பாதத்தைக் கொண்டு கரை உடைப்பை தடுத்துக்கொண்டு இருந்தார்.

அவனது கண்ணுக்கு அப்போது கோவில் அய்யனார்சாமி அந்த இரவில் மின்னல்போல் ஜொலித்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் சென்ற முனியாண்டி நெடுஞ்சானாக அய்யனார்சாமி காலில் கீழே விழுந்து கொண்டே , “சாமி எங்க ஊரை, கண்மாய்க்கரையிலே உடைப்பிலிருந்து காப்பாத்து சாமி! “ என வேண்டினான்.

அய்யனார்சாமி அவனை நோக்கி “ நீ உடனே ஊருக்குள்ளே சென்று ஆட்களை எவ்வளவு சீக்கிரம் அழைத்து வருவாயோ வா ! அதுவரை இந்த கரை உடைப்பை நிறுத்தி வைக்கிறேன். ..

உடனே முனியாண்டி “ சாமி நல்லது சாமி நான் இங்கு திரும்பி வரும் வரைக்கும் உடைப்பை தடுத்து வையுங்க சாமி. நான் இந்த ஊர் நாட்டாமையையும் , ஆட்களையும் கூட்டிட்டு வந்திடுறேன் சாமி “என அவர் பாதத்தை மீண்டும் தொட்டு வணங்கினான்.

“ சரி உன்னோட தலையைக் கண்ட பிறகுதான் நான் இங்கிருந்து இந்த உடைப்பை தடுத்து நிறுத்திய என்னோட கால்பாதத்தை எடுப்பேன் உனக்குத் திருப்திதானே ! என்று வாக்கு கொடுத்துவிட்டு நீ கிராம ஆட்களை அழைத்து வா ! “ என அவனை அய்யனார்சாமி விரைவுபடுத்தினார்

முனியாண்டி அந்த பெருமழையில் நனைந்துகொண்டே மூச்சிரைக்க ஓடி நாட்டாமை வீட்டினை அடைந்தவுடன் ,அவர் வீட்டுக் கதவை படபடவென்று வேகமாக தட்டினான். நாட்டமை வேலுத்தேவர் கதவைத் திறந்துகொண்டு வருவதற்குள், அவர் வீட்டின் அருகில் உள்ள சூலாயுதததுடன் காணப்பட்ட பீடத்தில் ஓடி வந்த களைப்பு மிகுதியில் உட்கார்ந்து கொண்டான்.

அந்த பீடத்தில் உள்ள சூலாயுதத்தைப் முனியாண்டி பார்த்தவுடன் மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டான். தானும் நாட்டமையுடன் கிராம மக்களும் சென்றாலும் கண்மாய் உடைப்பை தடுக்க முடியாது என்று அவன் நினைத்தாலும், கரை உடைப்பால் அக்கிராம மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினை தடுத்து நிறுத்திவிட வேண்டுமெனச் சிந்தித்து முனியாண்டி செயல்பட்டான்

“ என்ன முனியாண்டி நேரங்கெட்ட நேரத்தில் இங்கே வந்திருக்கே “ என நாட்டாமை குரல் கொடுத்தவுடன், தன் நிலைக்கு வந்தவன் ,அவர் காலில் விழுந்து கொண்டே “ ஐயா நம்ம ஊர்க் கண்மாய்க் கரை உடைப்பு ஏற்பட்டு விட்டது அய்யா நம்ம கண்மாய்க்கரைக் கோவில் அய்யனார்சாமிதான் தன் காலால் அதனைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கிறார். நான் அங்கு வரும்வரை கரையைப் பாதுகாக்கிறேன்னு எனக்கு வாக்கும் கொடுத்துருக்கிறார். மழை பெய்வதைப் பார்த்தால் நம்மால் கரை உடைப்பை தடுத்து நிறுத்த முடியும்ன்னு எனக்குத் தோணலே “

நாட்டாமை அவனை நோக்கி ” முனியாண்டி நீ ஏன் இப்படி சொல்றே. நாம எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்வோம். வா போகலாம்…” எனக் கூறிக்கொண்டே வீட்டிற்குள் செல்லத் திரும்பிய நாட்டாமையைத் தடுத்து நிறுத்தினான் முனியாண்டி

“ நாட்டாமை அய்யா நான் சொல்வதைத் தயவுபண்ணிக் கேளுங்கள் ஐயா. நம்ம ஊர் மக்களை, இப்போது ஏற்பட்டுள்ள கரை உடைப்பில் மட்டுமில்லாமல் எப்போதும் நம்ம கிராம மக்களை இதுபோல கரை உடைப்பிலிருந்து நான் பாதுகாக்கும்படி செய்கிறேன். என்னோட உயிரையும் கொடுக்கறேன்.” என்று கூறிய முனியாண்டி கண்ணிமைக்கும் நேரத்தில் பீடத்தில் இருந்த சூலாயுதத்தை எடுத்து தன்னோட நெஞ்சில் ஓங்கிக் குத்திக் கொண்டான்..

முனியாண்டியின் இந்தச் செயலைக் கண்ட நாட்டமை பதட்டத்துடன் “ என்ன முனியாண்டி இப்படி செய்திட்டே… “

“ அய்யா நம்ம கிராம மக்களைக் காப்பாத்த, எனக்கு இதைத் தவிர வேறு வழி தெரியல… இப்போ நான் செத்த பெறகு என் பிணத்தைக் கூட நம்ம ஊர்க்கண்மாய்க்கரை வழியாக எடுத்துச் செல்லாதீங்க அய்யா . ஊருக்கு வெளியே ஓர் இடத்திலே புதைத்து விடுங்க”

“ என்ன முனியாண்டி சொல்றே “ கண்ணீர் மல்க நாட்டாமை கேட்டார்.

“ அய்யா நம்ம கோவில் அய்யனார்சாமி இப்போது தன் காலால் கரை உடைப்பைத் தடுத்துக்கொண்டு இருக்கார். ‘என் தலை தனக்குத் தெரியும்வரை இந்தக் கரை உடைப்பை நிறுத்தி வைக்கிறேன்னு எனக்கு வாக்கும் கொடுத்திருக்கார். உன் தலை தெரிந்தவுடன் நான் இங்கிருந்து சென்று விடுவேன்னு வேறு சொல்லியிருக்கார்.’

நான் உயிருடன் அங்கு சென்றால்தானே அவர் அங்கிருந்து செல்வார். நான் அங்கு செல்லவில்ல என்றால் நம்ம கோவில் அய்யனார்சாமி அந்த இடத்தை விட்டு நகராமல் நம்ம கிராமத்தை எப்போதும் பாதுகாப்பார். அதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன் ஐயா! “ என நாட்டாமையைக் கை எடுத்து வணங்கிக் கொண்டே, என்னோட கிராம மக்களைப் பாதுகாத்து விட்டேன் என்ற மன நிம்மதியுடன் குருதி வெள்ளத்தில் முனியாண்டி மிதந்தான்.

அவன் உயிர்த் தியாகத்தை எண்ணி நாட்டமை கண்ணீர் விட்டார். நாட்டாமை ஊர்ப்பொதுவில் முனியாண்டியின் நினைவாக கிராமத்தில் அய்யனார்கோவில் அருகில் கல்தூண் எழுப்பினார். முனியாண்டியை காவல் தெய்வமாக கிராம மக்கள் இப்போதும் விழா எடுத்து வணங்கி வருகிறார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *