காவல் தெய்வம்!

1
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 20, 2022
பார்வையிட்டோர்: 8,111 
 
 

பிள்ளையார்குளம் கிராமத்தில் மிகப்பெரிய விநாயகர் கோவில். அதிவீர விநாயகர் என்ற பெயரில் ஆறடி உயரத்தில் வீற்றியிருக்கிறார். கோவிலின் பின்புறத்தில் நீண்டு வளைந்து செல்லும் தார்ச்சாலை. அதை அடுத்து பெரியகுளம் கண்மாய் இருந்தது. அந்தக் கண்மாயில் தண்ணீர் நிரம்பி விட்டால், நெல் முப்போகம் விளையும் என்பதால், சுற்றுப்புறத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள்.

சிதம்பரம் கோடை விடுமுறைக்கு மகன் பரதன், மனைவியுடன் குடும்பத்துடன் பிள்ளையார்குளம் கிராமத்திற்கு வந்திருந்தான். எட்டாம் வகுப்பு படிக்கும் மகன் பரதன் துடுக்கானவன். எதையாவது பார்த்து விட்டால் அதைப்பற்றி கேள்விமேல் கேள்வி கேட்டு துளைத்து விடுவான். அவன் தாத்தா அப்புசாமி பேரன் பரதனை அழைத்துக்கொண்டு மாலையில் காற்று வாங்க கண்மாய்க்கரை வழியே நடந்து சென்றார். கோடைகாலமாக இருந்ததால் கண்மாயில் வெட்டுக்கிடங்குகளில் மட்டும் தண்ணீர் தேங்கி நின்றது.

பரதன் “தாத்தா கண்மாய் இவ்வளவு பெரிசா இருக்கு. தண்ணீ கொஞ்சம்தான் கெட்டிக்கிடக்கு. கம்மாய் தண்ணீர் :.புல்லாகி நீ பார்த்திருக்கிறாயா தாத்தா” என்றான்.

“பார்த்திருக்கேன் பரதா. இந்தக் கண்மாய் நிரம்பி இருக்கும்போது நீ பார்த்தால் குட்டி சமுத்திரம்போல் தோணும் தெரியுமா”

“அப்படியா தாத்தா” என்று பரதன் கண்மாய் கரையில் வைத்திருந்த சிலையின அருகில் சென்றான். அந்த கம்பீரமான சிலையை பார்த்து திகைத்து நின்றான். ஆஜானபான உடம்பு முறுக்கி விட்ட மீசை ஒய்யாரமான முடிந்து வைத்த கொண்டை நெற்றி நிறைய விபூதி ஒரு கையை தரையில் ஊன்றிக்கொண்டு ஒரு காலை மடக்கி மற்றொரு காலின் முட்டியில் கையை வைத்து உட்கார்ந்த நிலையில் இருந்தது.

“இந்தச் சிலை யார் தாத்தா ஊருக்கு வெளியே கம்மாக்கரையிலே வெச்சு இருக்காங்க” என்று பரதன் கேட்டான்.

“இதுக்கு ஒரு கதையே இருக்கு சொல்றேன். சிலை பக்கத்திலே இருக்கும் படியில் நாம உட்காருவோம், வா ‘’ என்று கூறி படியில் அமர்ந்தார்கள்.

சிதம்பரம் அவனுக்கு விரிவாகக் கதை சொல்ல ஆரம்பித்தார். அவர் கதைபோல் சொல்லச்சொல்ல அவனுக்கு திரைப்படக் காட்சிபோல் மனதில் ஓடியது.

பிள்ளையார்குளம் கிராமத்தில் உள்ள அய்யனார்கோவில் கண்மாய்க்கரையின் மேல்பகுதியை ஒட்டி கல்மண்டபத்தில் அமைந்துள்ளது. கண்மாய் மழையினால் நிரம்பி விட்டால், அந்த அய்யனார்கோவில் கல்மண்டபத்தின் பின்புறச்சுவரில் பாதி அளவு வரை கண்மாய்த் தண்ணீர் தழும்பி நிற்கும்.

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஐப்பசி மாதத்தில் பிள்ளையார்குளம் கிராமத்தில் விடாது மழை பெய்து கொண்டிருந்தது . கண்மாய் மழையினால் தண்ணீர் நிரம்பி அய்யனார்கோவில் கல்மண்டபத்தின் பின்புறத்தில் பாதிச்சுவர் அளவு தண்ணீர் தழும்பி நின்றது. மேலும் மழை பொழிய ஆரம்பித்தால், கண்மாய்க்கரை உடைந்து, கண்மாய்க்கரைக்கு நேர் எதிரே உள்ள பள்ளமான இடத்தில் இருக்கும் அக்ரஹாரத்தில் உள்ள வீடுகள்தான் முதலில் பாதிக்கப்படும்.

சிதம்பரம் “பரதா! எனக்கு நல்ல ஞாபகம் இருக்கு. ஒரு ஐப்பசியில் இங்க அடைமழை விடாமல் பெய்து கொண்டிருந்தது. ஊரிலுள்ளவர்கள் எல்லாம் நிரம்பிய கண்மாயைப் பார்த்து விட்டு பயத்துடன் ‘ஐயோ! எந்த நேரத்தில் இந்தக் கண்மாய்க்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் வெள்ளமாக வந்து விடுமோ!’ என்று பயத்துடன் இரவு முழுதும் கிராம மக்கள் தூங்காமல் இருந்தார்கள். நானும் வீட்டில் அப்ப தூங்காமல் பயந்துகொண்டுதான் இருந்தேன். தெய்வாதீனமாக அன்று இரவு மழைபெய்து ஓய்ந்துவிட்டது“ என்றார்.

சிதம்பரம் தொடர்ந்தார். “பரதா அந்தக் காலத்தில் எல்லாம் இப்போதுபோல் அவசரத் தகவல் தெரிவிக்க செல்போன் போன்ற வசதிகள் ஏதும் கிடையாது. எந்தத் தகவலும் தண்டோராப் போட்டுத்தான் ஊர்ப்பொது மக்களுக்குத் தெரிவிப்பார்கள். இப்ப பாரு பரதா நம்ம ஊருக்கு எவ்வளவு வசதிகள் வந்துட்டது.!”

மறுநாள் கிராமத்தில் விடிந்தவுடன் தெருவெங்கும் பறை அடிப்பவன் “இதனால் சகலமானவர்களுக்குத் தெரிவிப்பது என்னவென்றால் நம்ம ஊர்க்கண்மாய் நெறைஞ்சு கண்மாய்க்கரை உடையற மாதிரி இருக்கு. எல்லாரும் அவங்கவங்க வீட்டில பத்திரமா இருந்துக்கோங்க. கண்மாய்க்கரையை வெட்டிவிட இப்போதைக்கு தோதுல்லாம இருக்கு, சிறியவங்க வயசானவங்களெல்லாம் பக்கத்து ஊருக்கு போயிடுங்க. இது சம்பந்தமா சாயந்தரம் விநாயகர்கோவில் முன்பாக ஊர் பொதுக்கூட்டம் நம்ம ஊர் நாட்டாமைஐயா போட்டுருக்காங்க. எல்லாரும் தவறாம வந்திடுங்க சாமியோவ்…”என்று கூறி தண்டோராவை அடித்துக்கொண்டே சென்றான்.

அன்று மாலையில் ஊர் நாட்டாமை வேலுத்தேவர் தலைமையில் விநாயகர் கோவில் முன் கூட்டம் கூடியது. அந்தக்கூட்டத்தில் பெரும்பாலும் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தார்கள். அக்ரஹாரம் தெருவில் குடியிருக்கும் ஒரு சிலர் வந்திருந்தனர். பலர் பயந்து கொண்டு வீட்டிலேயே இருந்து கொண்டார்கள். அந்தக் காலத்தில் தேவர் இனத்தைச் சேர்ந்தவர்கள், நிலங்களில் வேலை செய்து கொண்டும், அக்ரஹார ஜனங்களுக்கும் உடமைகளுக்கும் காவல் காத்து நின்றார்கள்.

நாட்டமை வேலுத்தேவர் கூட்டத்தைப் பார்த்து “நம்ம கிராமத்துக் கண்மாய் அடைமழையால் தண்ணீர் நெறைஞ்சு, ஆபத்தான நெலமையில இருக்கு. கண்மாய்க்கரை எப்ப உடைப்பு எடுக்கும்ன்னு சொல்ல முடியாது. அதனாலே நம்ம ஊர் வெட்டியான் முனியாண்டியை கண்மாயை காவல் காக்கும்படி சொல்லியிருக்கேன். ஆபத்தான நெலமை வந்தால், நம்ம கிராம மக்களைப் பத்திரமான இடத்துக்கு கூட்டிச்செல்லணும்” என்று கூறிய நாட்டாமை மேலும் தொடர்ந்தார்.

“கண்மாய்க் கரைக்கு நேரா இருக்கற பள்ளத்தில் அய்யமார் தெரு இருக்குது. ஆபத்து அதிகம். அதனாலே அவங்களை தூங்காமல் இருக்கணும்ன்னு சொல்லி பத்திரமான இடத்துக்கு அவங்களைக் கூட்டிக்கொண்டுபோய் சேர்க்கணும். அவங்கெல்லாம் நமக்கு தெய்வம் மாதிரி .நமக்கு படி அளக்கர சாமிகள் தெரிஞ்சுக்கோங்க. ஒரு வாரம் வரைக்கும் நாம பார்ப்போம் மழை பெய்யலன்னா, நாம் பயப்பட வேணாம். கண்மாய் கரை ஒடைப்பு ஏற்படாது. என்ன நான் இப்ப சொன்னதை எல்லாரும் மனசுலே வெச்சு நடந்துக்கோங்க.” எனக் கூறி கூட்டத்தை முடித்தார். கூட்டத்தில் வந்திருந்த அனைவரும் பயத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே கலைந்து சென்றார்கள்.

சிதம்பரம் கதை சொல்வதை நிறுத்திவிட்டு வீட்டுக்குச் செல்ல எழுந்து நின்றார். பரதன் ‘’ என்ன தாத்தா திடீரென்று கதையை நிறுத்திட்டீங்க. என்ன நடந்ததுன்னு சொல்லுங்க தாத்தா? என்ன தாத்தா மழை நின்றுட்டதா ? கண்மாய்க் கரை ஏதும் உடையல்லயே “ என ஆர்வமுடன் கேட்டான்.

சிதம்பரம் வீட்டுக்குப்போய் மீதிக்கதையை சொல்வதாகக் கூறியும் பரதன் உடனே இப்ப சொல்ல வேண்டும் என்று தாத்தாவிடம் அடம் பிடித்தான் சிதம்பரம் நடந்துகொண்டே கதையைத் தொடர்ந்தார்

ஒரு வாரம் தொடர்ச்சியாக மழை பெய்யாமல் இருந்ததைக் கண்ட அக்கிராம மக்கள் நிம்மதி அடைந்தனர். ஊர்மக்கள் நிரம்பியிருக்கும் கண்மாயைப் பார்த்து பார்த்து மகிழ்ந்தார்கள். கண்மாய் நீர் நிரம்பி இருந்தாலும், கரை உடைப்புக்கு வாய்ப்பில்லை. இனி நம்ம ஊருக்கு மழைபெய்யாது என்ற முடிவுக்கு கிராமமக்கள் வந்துவிட்டார்கள்.

“ஒரு வாரம் கழித்து பரதா இந்தக்கிராமத்திலே ஒருநாள் ராத்திரி அதிசயமும் அதே நேரத்தில துக்கமும் சேர்ந்தே நடந்தது“ என்று சிதம்பரம் கூறி நிறுத்தினார்.

“தாத்தா ராத்திரி என்ன அதிசயம் நடந்துச்சு. என்ன துக்கம் நடந்துச்சு? சொல்லு தாத்தா!“ என பரதன் ஆர்வமுடன் கேட்டான்.

அன்று இரவு கிராம மக்கள் அனைவரும் மழை இனிமேல் பெய்யாது என நம்பிக்கொண்டு நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்கள். கிராமத்தில் எதிர்பாராமல் பலத்த மழை விடாமல் கொட்ட ஆரம்பித்தது. பலத்த மழை விடாமல் பெய்ததால், கண்மாய்க் கரையின் ஒரு பக்கத்தில் உடைப்பு ஏற்பட்டது. அப்போது கண்மாய்க்கரையில் கோவில் கொண்டிருக்கும் அய்யனார்சாமி, தன்னோட பாதத்தினால் கரையை அழுத்திக்கொண்டு, கரை மேலும் உடையாமல் இருப்பதற்கு அடைத்து காத்துக்கொண்டிருந்தார்.

தற்செயலாக வெளியூருக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த முனியாண்டி மழை பெய்வதைக் கண்டு, கண்மாய்க்கரை உடைப்பு ஏற்பட்டு விடுமே எனப் பயந்து கொண்டே, கண்மாய்க் கரையை நோக்கி மழையில் நனைந்துகொண்டு வேகமாக ஈட்டியுடன் ஓடினான். அவன் அந்தப் பெருமழையிலும் நனைந்துகொண்டே அய்யனார்கோவில் அருகில் அமைந்திருக்கும் ஆலமரத்தடிக்குச் சென்றான். அங்கிருந்து பார்த்தால் கண்மாய்க்கரை நன்கு தெரியும்.

கண்மாய்க் கரையின் ஓர் ஓரத்தில் ஏற்பட்ட உடைப்பைக் கண்டு பயந்து என்ன செய்வது என்று அவனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. அப்போது அந்த உடைப்பை யாரோ ஒருவர் தன்னோட பாதத்தைக் கொண்டு தடுத்துக்கொண்டு இருப்பது அவன் கண்ணுக்குத் தோன்றியது. அவன் கரையை ஒட்டி சற்று அருகில் சென்று பார்த்தான். பார்த்தவன் திகைத்தான். ஊர்க்காரர்களின் நல்ல நேரமோ, என்னமோ கோவில் அய்யனார்சாமிதான் தன்னோட பாதங்களால் கரை உடைப்பை தடுத்துக்கொண்டு இருந்தார்.

அவனது கண்ணுக்கு அப்போது கோவில் அய்யனார்சாமி அந்த நடுஇரவில் மின்னல்போல் நின்று ஜொலித்துக் கொண்டிருந்தார். முனியாண்டி அய்யனார்சாமியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்தான். “சாமி எங்க ஊரை, இந்த கரை உடைப்பிலிருந்து காப்பாத்துங்க சாமி!“ என கண்ணீர்மல்க வேண்டினான்.

முனியாண்டி வேண்டியவுடன் அய்யனார்சாமி “நீ உடனே ஊருக்குள் சென்று ஊர் ஆட்களை எவ்வளவு சீக்கிரம் அழைத்து வருவாயோ வா ! அதுவரை இந்த கண்மாய்க்கரை உடைப்பை நான் உடையாமல் நிறுத்தி வைக்கிறேன்.”

முனியாண்டி “ சாமி நல்லது சாமி நான் இங்க திரும்பறவரைக்கும் வரைக்கும் இந்த உடைப்பை தடுத்து வையுங்க சாமி. நான் இந்த ஊர் நாட்டாமை ஐயா, ஆட்களையும் கூட்டிட்டு வந்திடுறேன் சாமி “என பதட்டத்துடன் வணங்கினான்.

“சரி உனக்காக உன்னோட தலையைக் கண்ட பிறகுதான் நான் இங்கிருந்து இந்த உடைப்பை தடுத்து நிறுத்திய என்னோட கால்பாதங்களை எடுப்பேன் உனக்குத் திருப்திதானே! ‘’என்று வாக்கு கொடுத்தார்.

முனியாண்டி பெருமழையில் நனைந்துகொண்டே மூச்சிரைக்க ஓடி நாட்டாமை வீட்டுக் கதவை படபடவென்று தட்டினான். நாட்டமை வேலுத்தேவர் கதவைத் திறந்துகொண்டு வருவதற்குள், அவன் ஓடி வந்த களைப்பு மிகுதியில் வீட்டுத்திண்ணையில் உட்கார்ந்து விட்டான்.

முனியாண்டி கையில் எப்போது வைத்திருக்கும் ஈட்டியைப் பார்த்தவுடன் மனதிற்குள் ஒரு முடிவுக்கு வந்து விட்டான். நாட்டமையுடன் தானும் ஊர் மக்களும் சென்றாலும் கண்மாய்க்கரை உடைப்பை இப்ப தடுக்க முடியாது என்று அவன் மனதில் தோன்றியது. கண்மாய்க்கரை உடைப்பால் கிராம மக்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தினை எந்தவிதத்திலாவது தடுத்து நிறுத்திவிட வேண்டுமென மனதில் எண்ணினான். அவன் மனதில் எண்ணியதை தயங்காமல் செயல்பட்டான்

“என்ன முனியாண்டி நடுராத்திரியிலே நேரங்கெட்ட நேரத்தில் இங்கே வந்திருக்கே “ என நாட்டாமை குரல் கொடுத்தவுடன்தான், தன் சுயநிலைக்கு வந்தான். முனியாண்டி, அவர் காலில் விழுந்துகொண்டே “ ஐயா நம்ம ஊர்க் கண்மாய்க்கரையில் உடைப்பு ஏற்பட்டுடுச்சு நாட்டாமை அய்யா. நம்ம கண்மாய்க்கரைக்கோவில் அய்யனார்தான் தன்காலால் அதனைத் தடுத்து நிறுத்திண்டிருக்கிறார். நான் அங்க போறவரைக்கு கரையைப் பாதுகாக்கிறேன்னு எனக்கு வாக்கும் கொடுத்திருக்கார். மழை பெய்வதைப் பார்த்தால் நம்மால் கரை உடைப்பை தடுத்து நிறுத்த முடியும்ன்னு எனக்குத் தோணலே நாட்டமை ஐயா“

நாட்டாமை ” முனியாண்டி நீ ஏன் இப்படி சொல்றே. நாம எல்லாரும் சேர்ந்து முயற்சி செய்வோம். வா போகலாம்…” என்று கூறிய நாட்டாமையைத் தடுத்து நிறுத்தினான் முனியாண்டி

“ நாட்டாமை அய்யா நான் சொல்வதைத் தயவுபண்ணிக் கேளுங்க ஐயா. நம்ம ஊர் மக்களை, இப்ப ஏற்பட்டுள்ள கரை உடைப்பில் மட்டுமில்லாமல் எப்போதும் நம்ம கிராம மக்களை இதுபோல கரை உடைப்பிலிருந்து நான் பாதுகாக்கும்படி செய்றேன். அதற்காக என்னோட உயிரையும் கொடுக்கப்போறேன்.” என்று கூறிய முனியாண்டி கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் வைத்திருந்த ஈட்டியை தன்னோட நெஞ்சில் ஓங்கிக் குத்திக் கொண்டான்..

முனியாண்டியின் இந்தச் செயலைக் கண்ட நாட்டமை பதட்டத்துடன் “ என்ன முனியாண்டி இப்படி செய்திட்டே… “

“அய்யா நம்ம ஊர் மக்களைக் காப்பாத்த, எனக்கு இதைத் தவிர வேறு வழி எனக்குத் தெரியல… இப்ப நான் செத்த பெறகு என் பிணத்தைக்கூட நம்ம ஊர்க்கண்மாய்க்கரை வழியாக எடுத்துச் செல்லாதீங்க அய்யா. ஊருக்கு வெளியே ஓர் இடத்திலே புதைத்துடுங்க”

“என்ன முனியாண்டி இப்படி சொல்றே “ கண்ணீர் மல்க நாட்டாமை கேட்டார்.

“அய்யா நம்ம கோவில் அய்யனார்சாமி இப்ப கண்மாய் கரையில தன் காலால் உடைப்பைத் தடுத்துட்டு இருக்கார். ‘என்னோட தலை தனக்குத் தெரியும்வரை இந்தக் கரை உடைப்பை நிறுத்தி வைக்கிறேன்னு எனக்கு வாக்கும் கொடுத்திருக்கார். ‘உன் தலை எனக்குத் தெரிந்தவுடன் நான் இங்கிருந்து சென்று விடுவேன்னு’ வேறு சொல்லியிருக்கார்.

“நான் உயிருடன் அங்கு சென்றால்தானே அவர் அங்கிருந்து செல்வார். நான் அங்கு செல்லலன்னா நம்ம கோவில் அய்யனார்சாமி அந்த இடத்தை விட்டு நகராமல் நம்ம கிராமத்தை எப்போதும் பாதுகாப்பார்ன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு . அதான் நான் இந்த முடிவுக்கு வந்தேன் ஐயா!” என நாட்டாமையைக் கை எடுத்து வணங்கிக் கொண்டே, “என்னோட ஊர் மக்களைப் நான் காப்பாத்திட்டேன்” என்று கூறிக்கொண்டே மன நிம்மதியுடன் குருதி வெள்ளத்தில் முனியாண்டி மிதந்தான்.

அவன் உயிர் தியாகத்தை எண்ணி நாட்டாமை கண்ணீர் விட்டார். மக்களிடம் விவரத்தைக் கூறி ஊர்ப்பொதுவில் முனியாண்டியின் நினைவாக கண்மாய்க்கரையில் முனியாண்டி உருவச் சிலையை வைத்து வழிபடச் செய்தார். முனியாண்டியை பிள்ளையார்குளம் கிராம காவல் தெய்வமாக எண்ணி அவனுக்கு மக்கள் விழா எடுத்து வணங்கி வருகிறார்கள்.

– இந்த சிறுகதை கல்கி வார இதழில் 12.8.2022 ம் தேதி பிரசுரம் செய்யப்பட்டுள்ளது

Print Friendly, PDF & Email
எழுத்தாளரின் சுய குறிப்பு பெயர்: பூ. சுப்ரமணியன் வட்டாட்சியர் (பணிநிறைவு) வயது: 67 பெற்றோர்: தெய்வத்திரு பூவலிங்கம் பார்வதியம்மாள் சொந்த ஊர்: கீழராஜகுலராமன் இராஜபாளையம் அருகில். வெம்பக்கோட்டை வட்டம் விருதுநகர் மாவட்டம் வசிப்பிடம்: பிளாட் எண் 69, பிளாக் எண்- 1 முகவரி: எஸ்-2, ஆஞ்சநேயர் நகர், கலைவாணர் தெரு, ஜல்லடியான்பேட்டை, பள்ளிக்கரணை (அஞ்சல்),சென்னை 600 100 கைபேசி : 9894043308 மின்னஞ்சல்: psubramanian.family@gmail.com பொது: எனது மானசீக குரு…மேலும் படிக்க...

1 thought on “காவல் தெய்வம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *