கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 29, 2020
பார்வையிட்டோர்: 28,317 
 
 

அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7

சாய்ந்த வேலியின் சுவர்களில் ஏறித் தாவிக் குதித்துத் தப்பிப்பது என்பது மிகவும் சுலபமான காரியமே என்னைப் பொறுத்தளவில். ஆனால் நாப்ஸை நான் மேலே ஏறிய பின் கயிறைத் தூக்கிப் போட்டு அதனை மேலே இழுத்தேன். பின் அதனை மறு பக்கம் இறக்கி விட்டேன். இங்கிருந்து வடக்கு நோக்கிச் சென்று அஜோரை இந்தப் புதிய உலகில் கண்டுபிடிப்பது என்பது முடியாத காரியமே. இருந்தாலும் முயற்சி செய்வது தவிர வேறெதுவும் தோன்றவில்லை. அவளது தந்தையிடம் அவள் பாதுகாப்பாகச் சென்று சேர வேண்டும் என வேண்டிக் கொண்டேன்.

விடியலின் முதல் வெளிச்சத்தில் நானும் நாப்ஸும் முன்னேறிக் கொண்டிருக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. கொடூரமான விலங்குகள் குறைவாக இருந்தன வடக்கு நோக்கி செல்லச் செல்ல. மாமிசம் உண்ணும் விலங்குகள் குறையக் குறைய தாவரங்கள் உண்ணும் விலங்குகள் அதிகமாகத் தொடங்கின. இருந்தாலும் கேஸ்பக் முழுவதும் ஒவ்வொரு இடத்திலும் அவை மிக அதிகமாகவே இருக்கின்றன மாமிசம் உண்ணும் விலங்குகளுக்கு உணவு தருவதற்காக. நான் இங்கே கடந்து சென்ற காட்டு எருமைகள், மறி மான்கள், மான்கள், குதிரைகள் அனைத்தும் தெற்கில் இருப்பவைகளில் இருந்து பரிணாமத்தில் உயர்ந்தே இருந்தன. பசுக்கள் சின்னதாகவும் சதைப் பிடிப்பாகவும் இருந்தன. குதிரைகள் பெரிதாக இருந்தன. க்ரோலு கிராமத்தின் வடக்கில் அந்தக் குதிரைகளின் ஒரு கூட்டத்தைப் பார்த்தேன். அவைகள் கிட்டத்தட்ட பழைய அமெரிக்காவின் மேற்கில் இருக்கும் சம வெளிப் பகுதிகளில் இந்தியர்கள் வளர்த்த குதிரைகள் போலவே இருந்தன. சொல்லப் போனால் இன்றும் அவைகள் இந்தியர்களின் பராமரிப்பில் வளர்கின்றன. அவைகள் நல்ல குண்டாகவும் நேர்த்தியாகவும் இருந்தன. நான் அவைகளை மிகவும் ஆவலோடு பார்த்துக் கொண்டே இருந்தேன் ஒரு பழைய மாடு மேய்க்கும் வீரனாக. அவைகளின் கால்களில் லாடம் கட்டினால் எப்படி இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவைகள் மிகவும் கவனமாக இருந்தன. வில் அம்பு எய்யும் தூரத்திற்குள் நான் வரும் போதே அவைகள் மிகவும் எச்சரிக்கை அடைந்தன. கயிறு எரியும் தூரத்திலும் கூட அவைகள் கவனமாகவே இருந்தன. இருந்தாலும் எனக்குள் நம்பிக்கை இருந்தது. நான் தளரவில்லை.

நண்பகலுக்கு முன் இரண்டு முறை எங்களை நரமாமிசம் சாப்பிடுபவர்கள் தாக்கினார்கள். என்னிடம் துப்பாக்கிகள் இல்லாத போதும் நாப்ஸ் இருந்ததால் எனக்கு மிகவும் பாதுகாப்பாக இருந்தது. அது து-சீனிடம் இருந்தோ அல்லது வேறு யாரோ காலுவிடம் இருந்தோ கேஸ்பக்கின் வேட்டையாடும் திறனைக் கற்றிருக்க வேண்டும். மேலும் அனுபவமும் அதற்குக் கை கொடுத்திருக்கும். ஆபத்தான எதிரிகளை எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டே இருக்கும். அதன் மெலிதான உறுமலால் நான் எந்தக் காட்டு விலங்கையும் கண்ணால் காண்பதற்கு முன்னோ காதால் கேட்பதற்கு முன்னோ காட்டிக் கொடுத்து விடும். அது எங்கள் முன் தோன்றியவுடன் நாப்ஸ் கால்களைத் தட்டிக்கொண்டு ஓட்டம் எடுக்கும். அந்த விலங்கு அதைத் துரத்த ஆரம்பிக்கும் அந்த நேரத்தில் நான் எதாவது ஒரு மரத்தில் ஏறி ஒளிந்து கொள்வேன். எப்பொழுதும் அது அந்த மிருகத்திடம் மாட்டிக் கொண்டு கறி ஆகிவிடவே விடாது. அதன் மின்னல் வேகத்தில் எந்த விலங்கும் துரத்திப் பிடிக்கவே இயலாது. அந்த விலங்கு ஏங்கித் துரத்தி இறுதியில் ஆத்திரத்தில் கத்துவதை நான் பார்த்திருக்கிறேன்.

அந்த விலங்குகள் எனக்குக் கொடுத்த தொல்லைகளில் முதன்மையானது என்னவென்றால் தாமதம்தான். அவைகள் தங்களுக்குத் தேவையானது கிடைக்காத போது ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்கள் வரை துரத்திக் கொண்டே இருக்கின்றன. அதன் பின் ஒரு வழியாக நாங்கள் கிழக்கு மேற்காகச் செல்லும் ஒரு மலைத் தொடரைக் கண்டோம். அவை கண்ணுக்கெட்டும் தூரம் வரை இருபுறமும் நீண்டிருந்தன. நாங்கள் க்ரோலு காலு நாடுகளின் இயற்கையான எல்லையைத் தொட்டு விட்டோம் என்பது புரிந்தது. அதன் தெற்கு முகத்தில் உள்ள மலைகள் மிக உயரமாய் இருந்தன. சில மலைகள் 200 அடிகள் வரை உயர்ந்திருந்தன கிட்டத்தட்ட செங்குத்தாய். கண்ணுக்கு எட்டும் தூரம் வரை எந்தவிதப் பிளவுகளும் இல்லாமல் இருந்தன. இதை எப்படித் தாண்டுவது என்பது நிச்சயம் எனக்குப் புரியவில்லை. இங்கிருந்து கிழக்கில் தேடுவதா? அங்கே இதை விட இன்னும் பெரிதான மலைத் தொடர்களாய் இருந்தன சமுத்திரத்தை நோக்கி. இல்லை மேற்கில் உள்நாட்டுக் கடலை நோக்கியா? எனக்கு ஒரே குழப்பமாய் இருந்தது. அங்கே நிறைய வழிகள் இருக்கின்றனவா, இல்லை ஒன்றே ஒன்றுதான் இருக்கிறதா? எப்படிக் கண்டு பிடிப்பதென்பதே தெரியவில்லை. விதியை நம்புவதைத் தவிர வேறெதுவும் வழி கிடைக்கவில்லை. நாப்ஸ் ஒரு முறையோ இல்லை பல முறையோ இதைக் கடந்து சென்றிருக்கும் என்பதை நான் எண்ணிப் பார்க்கவே இல்லை.நிச்சயம் அது என்னை வழி நடத்திச் செல்லும் என்று தோன்றவே இல்லை. அதனால் வேறெதுவும் வழி தெரியாத விரக்தியில் ஒரு முட்டாள் போல அதனிடம் கேட்டேன்.

“நாப்ஸ்” என்று அழைத்தேன். “எப்படித்தான் இந்த மலைத் தொடரை நாம் தாண்டுவது?”

அதற்குப் புரிந்தது என்று நான் சொல்ல மாட்டேன். இருந்தாலும் ஏர்டேல் வகை நாய்கள் மிகவும் புத்திசாலியானவை. அதற்குப் புரிந்தது போல் தெரிந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஏனெனில் அது என்னைச் சுற்றி வந்தது. பின் மகிழ்ச்சியாகக் குரைத்துக் கொண்டே மேற்கு நோக்கி நடக்க ஆரம்பித்தது. நான் அதனைப் பின் தொடரவில்லை என்ற போது கோபமாக என்னை நோக்கிக் குரைத்துக் கொண்டே ஓடி வந்தது. பின் எனது கெண்டைச் சதையைக் கவ்விக் பிடித்துக் கொண்டு அது செல்ல வேண்டிய திசையை நோக்கி இழுத்தது. எனது கால்களில் ஆடை எதுவும் இல்லாததாலும் அதன் பற்கள் மிகவும் கூரியதாக இருந்ததாலும் வேறு வழி இல்லாமல் நான் அதனைப் பின் தொடர ஆரம்பித்தேன். கிழக்கோ மேற்கோ சரியான திசையாய் இருந்தால் சரி.

அந்த மலையடிவாரத்தில் நாங்கள் நீண்ட தூரம் கடந்து விட்டோம். நிலம் ஏற்ற இறக்கமாய் இருந்தது. மரங்கள் ஆங்காங்கே இருந்தன. அதனருகே விலங்குகள் மேய்ந்து கொண்டிருந்தன தனியாக சிறு மற்றும் பெரு குழுக்களாக. இந்த உலகத்தின் நவீனமான மற்றும் அழிந்து விட்ட விலங்குகளின் கலவையான தொகுப்பு. ஒரு பிரமாண்டமான பெரணி மரத்தின் நிழலில் ஒரு பெரிய உடம்பு முழுவதும் மயிர் நிறைந்த யானை நின்று இங்கும் அங்கும் ஆடிக் கொண்டிருந்தது. அது ஒரு பெரிய காட்டெருமை தந்தங்கள் கொண்டது போல் இருந்தது. அதனருகில் ஒரு காளையும் பசுவும் தங்கள் கன்றுடன் மேய்ந்து கொண்டிருந்தன. அதற்கு மிக அருகில் ஒரு தூசு தட்டிய ஓட்டையினுள் காண்டாமிருகம் ஒன்று உறங்கிக் கொண்டிருந்தது. மான், மறி மான், எருமைகள், குதிரைகள், செம்மறி ஆடுகள், வெள்ளாடுகள் என்று அனைத்து விதமான விலங்குகளும் ஒரே இடத்தில இருப்பதைக் காண முடிந்தது. அங்கிருந்து சிறிது தூரத்தில் ஒரு பெரிய தேவாங்கு தனது வால் மேல் அமர்ந்து கொண்டு முன்னங்கால்களைத் தூக்கிக் கொண்டு மரத்தில் இருந்த இலைகளைப் பறிக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. நாம் மறந்து விட்ட பழைய உலகின் எச்சங்கள் இப்பொழுது நமக்கருகில் வந்து உரசி நிற்கின்றன. இங்கே டாம் பில்லிங்ஸ் ஆகிய நான், நவீனத்தில் நவீனமாகிய நான், பனியுகத்தின் முன் தோன்றிய மனிதர்களின் உடையில் நான் அவைகளைக் கடந்து சென்று கொண்டிருந்தேன். என் முன்னால் அறுபது வயதான ஒரு விலங்கு ஓடிக் கொண்டிருந்தது. அதனுடன் ஒப்பிடும் பொழுது நாப்ஸ் ஒரு அற்பமான விலங்காய்த் தெரிந்தது. இருந்தாலும் அதைப் பற்றியெல்லாம் நாப்ஸ் கவலைப்பட்டது போல் தோன்றவில்லை.

நாங்கள் உள்நாட்டுக் கடலை நெருங்கிக் கொண்டிருக்கும் போது பறக்கும் விலங்குகள் நிறையப் பார்த்தோம். இன்னும் பலவிதமான பெரிய நீர்நில வாழ்வன விலங்குகளையும் கண்டோம். ஆனால் அதில் எவையும் எங்களைத் தாக்க முற்படவே இல்லை. கிட்டத்தட்ட நண்பகலில் ஒரு உச்சியைச் சென்று அடைந்திருக்கும் வேளை, நான் கண்ட ஒரு காட்சி என்னை அப்படியே உறைய வைத்தது. அடிக்குரலில் நாப்ஸை அழைத்து அமைதியாய் இருக்கச் சொன்னேன். அது உடனே முன்னங்கால்களை மடக்கி அமர்ந்து கொண்டது. நானும் அப்படியே குப்புறப் படுத்துக் கொண்டு அந்த காட்சியைக் கவனிக்க ஆரம்பித்தேன். ஒரு புதரின் பின்னால் இருந்து வீரர்கள் கூட்டம் தென் திசையில் இருந்து அந்தப் பாறைகளை நோக்கி வந்து கொண்டிருந்தது. அவர்கள் காலுக்கள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவர்களைத் தலைமை ஏற்று நடத்தி வந்தது து-சீன் என்பதும் தெரிந்தது. அவர்கள் குறுக்கு வழியில் வந்ததால் எங்களை முந்திச் சென்று கொண்டிருந்தனர். அவர்களை நன்றாகவே கவனிக்க முடிந்தது. ஏனெனில் அவர்கள் இருக்கும் தூரம் ஒன்றும் அதிகம் இல்லை. அவர்களுக்கு மத்தியில் அஜோர் இல்லாதது கொஞ்சம் நிம்மதியை வரவழைத்தது.

அவர்கள் ஏறிச் சென்ற பாறைகள் உடைந்து கடினமாக இருந்தன. கிழக்கில் இருந்தும் மேற்கில் இருந்தும் வரும் பாறைகள் சந்திக்கும் இடம் அது. ஒரு ஒடுங்கிய கணவாயாக அமைந்திருந்தது. அவர்கள் ஓரிடத்தில் சில நிமிடங்கள் மேலே ஏறிச் சென்றார்கள். அதன் பின் பார்வையில் இருந்து மறைந்து விட்டார்கள். கடைசியில் சென்றவனும் கண்களில் இருந்து மறைந்த பின் நான் மெல்ல எழுந்து அந்தக் கணவாயை நோக்கி நடக்க ஆரம்பித்தேன். அதனை நோக்கித்தான் நாப்ஸும் என்னை வழிநடத்திக் கொண்டிருந்தது. அதனை நெருங்கிய போது மிகக் கவனமாகச் சென்றேன். அவர்கள் அங்கே அமர்ந்து இளைப்பாறிக் கொண்டும் இருக்கலாம். அவர்கள் அங்கு இளைப்பாறவில்லை என்றால் எனக்கு அவர்கள் என்னைக் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற அச்சமே இல்லை. ஏனெனில் அவர்கள் பின்புற கேடயம் ஈட்டி எதுவும் இல்லாமல் சென்று கொண்டிருந்தார்கள். அந்தக் கணவாயை அடைந்ததும் செங்குத்தாக ஒருவர் மட்டுமே மேலே ஏறும் ஒரு வழியைக் கண்டேன். நான் காலுக்களின் தலைவனாகச் சிறிது காலம் இருக்கக் கூடாதா என்று நினைத்தேன். தெற்கில் இருந்து வரும் ஒரு பெரும்படையையே இந்தக் கணவாயில் இருந்து கொண்டு வெறும் பனிரெண்டு பேர் சமாளிக்க முடியும். இருந்தும் இந்த இடத்தில் எந்தவிதக் காவலும் இல்லை.

காலுக்கள் கேஸ்பக்கில் சிறந்த மனிதர்களாய் இருக்கலாம். ஆனால் அவர்கள் மிகவும் எளிதான ஒரு ராணுவ யுக்தியில் இவ்வளவு மோசமாக இருக்கிறார்கள். இராணுவ அறிவில் கற்கால மனிதர்கள் இவ்வளவு பின் தங்கியா இருப்பார்கள் என்று நினைக்கும் போது எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. தற்போது இருக்கும் தலைமையோடு முரண்பட்ட அவனது படை ஒரு எதிரி நாட்டினுள் துளி அளவும் கவனமே இல்லாமல் நுழைவதைப் பார்த்தபோது என் கணிப்பில் து-சீன் மிகவும் கீழே சென்று விட்டான். ஆனால் ஜோரைப் பற்றி து-சீனுக்குத் தெரிந்திருக்கும். ஜோர் அங்கே காத்திருக்க மாட்டான் என்பதும் அவனுக்குத் தெரிந்தே இருக்கும். இருந்தும் அவன் செய்தது மிகப் பெரும் தவறுதான். ஒரு சிறு படையை வைத்தே கேஸ்பக்கை என்னால் பிடித்து விட முடியும்.

நானும் நாப்ஸும் ஒரு வழியாக அந்தக் கணவாயின் மேலே ஏறி அதன் உச்சியை அடைந்தோம். அங்கே அவர்கள் காலுவின் நாட்டினுள் நுழைந்து கொண்டிருந்தார்கள். மலை உச்சியில் இருந்து ஐம்பதடிக்கும் சற்று அதிகமான தூரம் கீழே இருந்தார்கள். க்ரோலு நாட்டில் இருந்து ஒரு நூறு அல்லது நூற்றைம்பதடி உயரமாய் இருக்கலாம். சட்டென்று நிலப்பரப்பு மாறுபட்டது. மரங்கள் பூக்கள் மற்றும் புதர்கள் அனைத்தும் கடினத் தன்மை கொண்டதாக இருந்தன. காலுவின் போர்வை இரவு நேரத்துக்கு நிச்சயம் தேவைப்படத்தான் செய்யும். பிசின் மரமும் யூகலிப்டஸ் மரமும் அதிகமாய் இருந்தன. சாம்பல், கருவாலி, தேவதாரு மரங்களும் இருந்தன. மரங்களுக்கு நடுவில் வாழ்க்கை அடிதடியாய் இருக்கும். காடுகள் மிகவும் அடர்த்தியாய் இருந்தன. பிரமாண்டமான மரங்கள் அடர்ந்து இருந்தன. அந்த மலை உச்சியில் இருந்து பார்க்கும் போதே மரங்கள் நான் இருந்த இடத்திற்கு நூறடிக்கும் மேலே வளர்ந்திருந்தன. அவைகள் இருக்கும் தூரத்தில் பார்த்தாலே அவைகள் மிகவும் பிரமாண்டமாக இருந்தன.

ஒரு வழியாக நான் காலுவின் நாட்டில் நுழைந்து விட்டேன். கேஸ்பக்கில் பிறந்திருக்காவிட்டாலும் நான் கோர்-ஸ்வ-ஜோ-ஆன ஆதியில் இருந்து வந்திருக்கிறேன். கேஸ்பக்கின் பரிணாமத்தில் கீழ் இருக்கும் மனிதர்களின் உறைவிடத்தில் இருந்து அனைத்து விதமான அபாயங்களையும் கடந்து வந்திருக்கிறேன். தோ-மர், சோ-ஆல் இருவரும் தாங்கள் பாண்ட்லுவில் இருந்து க்ரோலுவாக மாறும் போது அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கும் பெருமிதத்திற்குமான பொருளை இப்பொழுதுதான் உணர்கிறேன். நான் பாட்டுவாக இல்லை என்பதற்காக ஒரு அற்ப மகிழ்ச்சி என்னுள் ஓடியது.

ஆனால் அஜோர் எங்கே இருக்கிறாள்? என் முன்னால் இருந்த இந்த மாபெரும் நிலப்பரப்பை என் கண்கள் துழாவினாலும் என்னால் து-சீனின் வீரர்கள் மற்றும் இந்த நிலத்தின் விலங்குகள் தவிர வேறு யாரையும் பார்க்க இயலவில்லை. காடுகள் சூழ்ந்து மாபெரும் சமவெளிப்பகுதிகள் நிறைந்து இருந்தன கண்களுக்கு எட்டிய தூரம் வரை. ஆனால் எங்கும் அஜோர் அந்தச் சிறிய காலு தென்படவில்லை. என் அன்பிற்கினிய அந்தப் பெண்ணைக் காண்பதற்காக இவ்வளவு தூரம் கடந்து வந்திருக்கிறேன்.

நாப்ஸுக்கும் எனக்கும் பசிக்க ஆரம்பித்தது. நேற்றிரவில் இருந்து நாங்கள் இன்னும் சாப்பிடவே இல்லை. எங்களுக்கு ஆடு, மான், மாடு என்று கீழே ஒரு பசித்த வேட்டைக்காரனுக்குத் தேவையான அனைத்து விதமான உணவுகளும் இருந்தன. அதனால் கிட்டத்தட்ட செங்குத்தாக இறங்கும் மலைப்பாதையில் நாங்கள் கீழே இறங்க ஆரம்பித்தோம். நாப்ஸ் என் பின்னால் வர நான் படுத்து ஊர்ந்து கொண்டே சென்றேன் ஒரு செந்நிற மான்கள் கூட்டத்தை நோக்கி. அவைகள் காட்டிற்கு அருகில் சமவெளியின் ஓரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. அவைகள் அம்பின் எல்லையிலேயேதான் இருந்தன. அவைகளின் பின்னாலும் மரங்கள் மற்றும் புதர்கள் இருந்தன. அதனால் எந்தவிதச் சிரமமும் இல்லாமல் ஒரு ஐம்பதடி தூரத்தில் இருந்து ஒரு பெரிய கன்றுடன் இல்லாத மானைக் கொல்ல முடிந்தது. இருந்தும் துப்பாக்கி கையில் இல்லையே என்ற வருத்தம் இப்பொழுதுதான் அதிகமாகத் தாக்கியது. என் வாழ்வில் என்றுமே நான் அம்பு எய்திருக்கவே இல்லை.அம்பு எய்வது எப்படி என்று தெரியும். வில்லை ஏந்தி நாணை இழுத்துக் கவனமாக குறி பார்த்து எய்தேன். நாப்ஸைக் கூப்பிட்டுக் கொண்டே நான் அந்த மானை நோக்கி ஓடினேன்.

எனது அம்பு அந்த மானின் வலது புறத்தில் முழுவதுமாக ஊடுருவி இருந்தது. அதே நேரத்தில் நாப்ஸும் அதை நோக்கி ஓடி வந்தது. அது எங்களைப் பார்த்ததும் ஓட எத்தனித்தது. நாப்ஸ் தனது கூரிய பற்களைக் கோரமாகக் காட்டிக் கொண்டும், நான் எனது கோடரியை ஏந்திக் கொண்டும் அதை நெருங்கிக் கொண்டிருந்தோம். அந்தக் கூட்டத்தில் மீதி இருந்த மான்கள் எல்லாம் தலை தெறிக்க ஓடி விட்டன. அடிபட்ட மான் மட்டும் நொண்டிக் கொண்டிருந்தது. நாப்ஸ் சட்டென்று அதன் கழுத்தைக் கவ்வியது. நான் வந்த போது அது மானைக் கீழே தள்ளி இருந்தது. நான் எனது கோடரியை எடுத்து அதன் கதையை முடித்து விட்டேன். நெருப்பு மூட்டவும் அதன் கறியைச் சமைக்கவும் எனக்கு நெடு நேரம் ஆகவில்லை. நான் எனது சமையலைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது நாப்ஸ் அதன் பச்சைக் கறியைச் சுவைத்துக் கொண்டிருந்தது. இது போலொரு உணவை ரசித்துச் சாப்பிட்டதில்லை நான்.

கடலில் இருந்து கிட்டத்தட்ட அந்தச் செங்குத்து பாறைகள் வரை இரண்டு நாட்களாக நான் தேடிக் கொண்டே இருக்கிறேன் அஜோர் தென்படுவாளா என்று. ஆனால் ஒவ்வொரு முறையும் வடக்கு நோக்கியே சென்று கொண்டிருந்தேன். அங்கே எந்தவிதமான மனிதர்களுமே தென்படவில்லை. து-சீனின் படையில் இருக்கும் வீரர்களைக் கூடக் காணவில்லை. அதன் பின்தான் எனக்குச் சந்தேகம் ஏற்படத் துவங்கியது. க்ரோலு கிராமத்தில் இருந்து அஜோர் சென்று விட்டாள் என்று சால்-ஆஸ் சொன்னது உண்மையாய் இருக்குமா? ஆல்-டானின் உத்தரவுப்படி அவன் ஏன் நடந்து கொண்டிருக்கக் கூடாது? அவனது அடி மனதில் அவமானத்தின் நெருப்பு படர்ந்திருக்கலாம். தான் கொல்ல நினைத்த ஒருவன் க்ரோலு கிராமத்திற்கு வந்த ஒரு விருந்தாளி அந்த கிராமத்தின் வீரனை நண்பனாக்கியது அவனுக்குப் பொறாமை ஏற்படுத்தி இருக்கலாம். க்ரோலு கிராமத்திற்கு இந்தக் கெடுதலும் செய்யாத ஒரு விருந்தாளி. அதனால் ஆல்-டான் செய்ய நினைத்ததை கேஸ்பக்கின் விலங்குகள் செய்யட்டும் என்று எண்ணித் தேவை இல்லாத ஒரு காரியத்தில் ஈடுபட என்னை இங்கு அனுப்பி விட்டானோ? எனக்குத் தெரியாது. நான் அதைப் பற்றி நினைக்க நினைக்க அஜோர் க்ரோலு கிராமத்தை விட்டு வெளியேறவில்லை என்பது மட்டும் உறுதி என்று தோன்றியது. அப்படி இல்லை என்றால் து-சீன் இங்கு ஏன் அவளை விட்டு விட்டு வர வேண்டும். அதுவும் புதிராக இருந்தது. மீண்டும் நான் கடலுக்கருகில் வந்து விட்டேன்.

காலுக்களின் நாட்டில் எனது இரண்டாவது நாள் அனுபவத்தில் நான் என் கண்கள் விரியும் அளவுக்கு மிகப் பிரமாண்டமான குதிரைகளைக் கண்டேன். அது செந்நிறமான உடலமைப்பைக் கொண்டது. அதன் பிடரி மயிர் கருப்பாக இருந்தது. அதன் முகம் நெருப்பு போல் பிரகாசித்தது. அவைகளது முன்னங்கால்கள் முழங்கால் வரை வெள்ளையாக இருந்தன. அவைகளது உயரம் கிட்டத்தட்ட 16 கையளவு இருந்தது. ஆண் குதிரைகளுக்கும் பெண் குதிரைகளுக்கும் உயரத்தில் அவ்வளவு வித்தியாசமில்லை. இங்கிருந்த நூற்றுக்கணக்கான குதிரைகளில் மூன்று நான்கு மட்டுமே ஆண் குதிரை. மற்றதெல்லாம் குட்டிகளாய் இருந்தன. அவைகளின் உடம்பில் இருந்த அடையாளங்கள் அனைத்தும் அவ்வளவு நேர்த்தியாக இருந்தன. வெகு காலங்களுக்கு முன் கலப்படமில்லாத இனங்களாய் இருந்திருக்க வேண்டும். க்ரோலுக்களின் சிறிய குதிரைகளே பெருமிதம் கொள்ள வைத்தன. ஆனால் இது போன்ற பெரிய குதிரைகள் மேல் நான் அங்கு வந்து இறங்கி இருந்திருந்தால் எனக்குக் கிடைத்திருக்கும் மரியாதையே தனிதான். அப்படி நினைத்துக் கொண்டிருக்கும் போதே அதில் ஒன்றைக் கவர்ந்தால் என்ன என்ற சிந்தனையும் உதிக்காமல் இல்லை. மேலும் ஒரு அழகிய நான்கு வயதுடைய ஆண் குதிரையைத் தேர்வு செய்யவும் எனக்கு அதிக நேரம் ஒன்றும் ஆகவில்லை.

அந்தக் குதிரைகள் காட்டின் எல்லையில் மேய்ந்து கொண்டிருந்தன. அங்கேதான் நானும் நாப்ஸும் மறைந்து இருந்தோம். எங்களுக்கும் அந்தக் குதிரைகளுக்கும் நடுவில் இருந்த நிலத்திலும் பூக்கள் நிறைந்த செடிகள் இருந்ததாலும் மறைவதற்கு நல்ல வசதியாக இருந்தது. நான் தெரிவு செய்த குதிரை சில பெண் மற்றும் ஆண் குட்டிகளுடன் எனக்கு மிகவும் அருகில் மேய்ந்து கொண்டிருந்தது. கூட்டத்தில் இருந்து சற்று விலகியே இருந்தது. “தாக்கு” என்று மெலிதாக நான் உத்தரவிட்டதைச் சட்டென்று புரிந்து கொண்ட நாப்ஸ் நிலத்தில் அப்படியே படுத்துக் கொண்டது. நான் கூப்பிடும் வரை அது நகராமல் அப்படியே இருக்கும் என்பது எனக்கும் நன்றாகத் தெரியும் வேறெதாவது எனக்கு ஆபத்து வராத வரை. நான் கவனமாக அந்தக் குதிரையை நோக்கிச் சென்றேன். அதற்கு ஒரு இருபதடி தூரத்தில் இருக்கும் ஒரு புதரின் பின் மறைந்து நின்றேன். இங்கே நான் எனது சுருக்குக் கயிறை ஒழுங்கு படுத்தித் தரையில் விரித்து வைத்தேன்.

புதரின் ஒரு பக்கத்தில் இருந்து கயிறை வீசி எறிந்து பிடிப்பதில் நான் கில்லாடியாக இருந்தாலும் வெளியில் வருவதற்குள் அது பின்னங்கால் பிடரியில் பட எதிர்த் திசையில் ஓடி விடும். ஆனால் நான் சட்டென்று அதன் அருகில் போய் நின்று அதனை ஆச்சர்யப்படுத்தினால் மெதுவாக தன் கழுத்தைத் தூக்கிப் பார்க்கும். அதுதான் எனது சுருக்கு கயிரைப் பயன் படுத்த மிகவும் ஏதுவாக இருக்கும்.

ஆம், அதை அற்புதமாகச் செய்து முடித்தேன். அது எனது திசையை நோக்கித் திரும்புவதற்காகக் காத்திருந்தேன். கிட்டத்தட்ட அப்படித்தான் தெரிந்தது. அந்த நேரத்தில் அங்கிருந்த பெண் குட்டி ஒன்று தனது தலையைத் தூக்கிக் கணைத்தது. பின் எதிர்த் திசையில் ஓட ஆரம்பித்தது. எனது குதிரையும் அவைகளுடன் சேர்ந்து ஓட ஆரம்பித்து விட்டது. ஒருக் கணம் கடைசி நேரத்தில் எனது நம்பிக்கையே குலைந்து விட்டது போல் தோன்றியது. ஆனால் அவர்களது தற்போதைய பயம், பயமாக இருந்தால், குறைந்து விட்டதும் ஒரு நூறடி தள்ளித் திரும்பவும் மேய ஆரம்பித்து விட்டது. இப்பொழுது அவைகளிடம் இருந்து ஐம்பதடி தூரத்தில் புதர்கள் எதுவுமே இல்லை. அதனால் எப்படிச் சுருக்குக் கயிறை வீசுவது என்று குழப்பமாக இருந்தது. நாற்பதடிக்கும் குறைவாக இருந்தால் நான் அருமையாகச் சமாளிப்பேன். ஐம்பதடி பரவாயில்லை. அதற்கும் மேல் என்றால் தலை விதியைப் பொறுத்ததுதான் அந்த அழகிய கழுத்தில் எனது சுருக்குக் கயிறு மாட்டுவது என்பது.

அவ்வாறு நின்று கொண்டு யோசித்துக் கொண்டிருக்கும் வேளை கிட்டத்தட்ட அவ்வளவு தூரத்தில் நின்று எறியும் மன நிலைக்கு வந்து விட்டேன். என்னிடம் தேவைக்கு அதிகமாகவே கயிறு இருந்தது. அந்தக் காலுவின் கயிறு சுமார் அறுபதடி இருந்தது. என் பண்ணையாய் இருந்தால் இந்நேரம் எப்படி இருந்திருக்கும். ஒரு வார்த்தை சொன்னால் போதும். இந்தக் குதிரைகள் அனைத்தையும் வட்டமிட்டு என்னிடம் கொண்டு வந்து சேர்த்திருக்கும். அப்போது எனக்குள் ஒரு மின்னல். நாப்ஸ் பண்ணையில் உள்ள விலங்குகளுடன் ஓடி இருக்கிறது ஒரு கோடை காலத்தில். பசுக்களுடன் ஒவ்வொரு நாளும் மாலையில் புல் வெளிக்கு அவைகளுடன் சென்று திரும்பவும் பால் கறக்கும் இடத்திற்குக் கொண்டு வந்து விடும். அதை மிகவும் சாதுர்யமாகவும் செய்திருக்கிறது. ஆனால் அது எப்போதும் தனியாகச் செய்ததில்லை. அதைச் செய்தும் ஒரு வருடத்திற்கும் மேலாகி விட்டது. இருந்தாலும் நான் இந்தக் கயிறைச் சுழற்றி எறிவதை விட நாப்ஸ் இந்த வேலையைத் திறம்படச் செய்து விடும்.

ஒரு முடிவுக்கு வந்தவனாய் நாப்ஸைத் தேடி ஊர்ந்து செல்ல ஆரம்பித்தேன். அதைக் கூப்பிட்டு வந்து அந்த நான்கு குதிரைகள் இருந்த இடத்திற்கு அருகில் உள்ள ஒரு புதரின் பின் மறைந்து நின்றோம். இங்கே புதருக்குள் இருந்தே நேரடியாகப் பார்க்க முடிந்தது. நாப்ஸைப் பார்த்து அவைகளைக் கொண்டு வா என்று முணுமுணுத்தேன்.

மறு நொடியே அது பாய்ந்து சென்று விட்டது. ஒரு அகலமான வட்ட வடிவில் அவைகள் பின் வட்டமடித்தது. அதைப் பார்த்தவுடன் அந்தக் குதிரைகள் நாப்ஸிடம் இருந்து விலகி ஓட ஆரம்பித்தன. இருந்தாலும் இடம் அதிகமாக இருந்ததால் ஒருக்கணம் நின்று யோசிக்க ஆரம்பித்தன. நாப்ஸைக் கவனிக்க ஆரம்பித்தன தலையை மேலே தூக்கிக் கொண்டும் கணைத்துக் கொண்டும். அந்தக் காட்சி மிகவும் அழகாக இருந்தது. அதன் பின் நாப்ஸ் அவைகளின் பின் சென்று மெதுவாக என்னை நோக்கித் தள்ள ஆரம்பித்தது. அது குரைக்கவில்லை. என்னை நோக்கி வர அவசரப்படவுமில்லை. அவைகளின் அருகில் வந்தவுடன், மெதுவாக நடக்க ஆரம்பித்தது. அந்த அழகிய குதிரைகள் அதனைப் பார்த்துப் பயப்படுவதற்கு பதிலாக ஆச்சர்யமடைந்தன. நாப்ஸ் மிக அருகில் வரும் வரையும் அவைகள் தப்பிக்க முயற்சி செய்யவில்லை. அதன் பின் அவைகள் மெதுவாக நடக்க ஆரம்பித்தன செங்குத்தான கோணத்தில்.

இப்பொழுதுதான் ஆட்டம் ஆரம்பித்தது. நாப்ஸ் அவைகளைத் திருப்பத்தான் முயற்சி செய்தது. அது அந்த ஆண் குதிரையைத்தான் தேர்வு செய்திருந்தது. அதனால் மற்ற குதிரைகளைக் கண்டு கொள்ளவே இல்லை. அதனால் வளைக்கப்படுவதற்கு விருப்பமில்லாத நான்கு குதிரைகளைக் கட்டி வைப்பது சாத்தியப்படாது என்று புரிந்து கொள்ளும் அளவுக்கு அதுவும் புத்திசாலித்தனமாகவே செயல்பட்டது. அந்த ஆண் குதிரையும் தான் எப்படித் தப்பிப்பது என்று தன்னிச்சையாக முடிவெடுத்திருந்தால் அங்கே ஒரு ஓட்டப்பந்தயம் துவங்க ஆரம்பித்து விட்டது. அந்தக் குதிரை எவ்வளவு வேகமாக ஓடும். அது கால்களை மடக்கிக் காற்றினுள் பாய்ந்து செல்ல ரொம்ப நேரம் ஆகவில்லை. நாப்ஸ் அதனுடைய முன்னங்கால்களைத் தொடர்ந்து ஓடியது முடிந்தவரை அதனைக் கட்டுப்படுத்த வேண்டி. இப்பொழுது குரைக்க ஆரம்பித்தது. இரு முறை அதன் கால்களைக் கவ்வ எத்தனித்தது. ஆனால் அதனால் இயலவில்லை. ஒவ்வொரு முறையும் அது தொம்மென்று கீழே விழுந்தது. நாப்ஸின் விடா முயற்சியும் கை கொடுக்கத்தான் செய்தது ஒரு மேட்டின் மேலேறி அவைகள் கண்ணில் இருந்து மறையும் நேரத்தில். அந்தக் குதிரை வலது புறம் திரும்ப எத்தனித்தது. நாப்ஸ் அந்தக் கூட்டத்திற்கும் அதற்கும் நடுவில் இருந்தது. அதனுள் மற்ற சிறு குதிரைகள் கலந்து விட்டிருந்தன.

நாப்ஸின் வருகைக்காக நான் காத்துக் கொண்டிருந்தபோது எதாவது காட்டு மிருகம் என்னைத் தாக்கி விடுமோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். காட்டில் இருந்து சற்றுத் தூரம் தள்ளி இருந்தேன். சில ஆயுதங்கள் என்னிடம் இருந்தன. இருந்தாலும் அவைகளை எல்லாம் பயன்படுத்த என்னிடம் அனுபவமில்லை. க்ரோலு நாட்டில் இருந்து கிளம்பும் வேளையில் ஈட்டியை எப்படிப் பயன்படுத்துவது என்று சிறிது கற்று வைத்திருக்கிறேன். என்னுடைய எண்ணங்கள் ஒன்றும் மகிழ்ச்சிகரமானதாக இருக்கவில்லை, கிட்டத்தட்ட கோழைத்தனம் என்று கூட சொல்லலாம், அஜோர் இதே இடங்களில் வெறும் கத்தியுடன் கிளம்பியதை நினைத்தால். எனக்குள் அவமானம் வந்து ஒட்டிக் கொண்டது. அப்படி எண்ணிக் கொண்டிருக்கும் வேளை என் மனம் நான் கிட்டத்தட்ட நிர்வாணமாய் இருப்பதை எண்ணித்தான் மிகவும் கவலை கொண்டது. நீங்கள் பட்டப்பகலில் நீளம் பத்தாத ஒரு செம்மானின் தோலை அணிந்து கொண்டு நடமாடி இருக்காவிட்டால் எனது கவலையின் ஆழத்தை உங்களால் அறிந்து கொள்ள முடியாது. ஆடை அணிந்து பழக்கப்பட்ட ஒருவனுக்கு ஆடை தன்னம்பிக்கை கொடுக்கும். அது இல்லாவிட்டால் பேரச்சம் தோன்றும்.

இருந்தாலும் என்னை எந்த விலங்கும் தாக்கவில்லை. ஆனால் காட்டின் இருண்ட பகுதிகளில் பயங்கரமான உருவங்கள் ஓடிக் கொண்டுதான் இருந்தன. நாப்ஸ் நீண்ட நேரமாக வரவில்லை என்பதால் எனக்குள் கவலை அப்பிக் கொண்டது. அதற்கு ஏதும் நடந்திருக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டது. நான் எனது கயிறைச் சுருட்டி வைத்து விட்டு அதனைத் தேடித் செல்ல எத்தனித்தேன். அப்போது அந்தக் குதிரை எந்தப் புள்ளியில் மறைந்ததோ அதே புள்ளியில் தோன்றி வேகமாகப் பாய்ந்து வந்தது. நாப்ஸ் அதன் முன்னங்கால்களை ஒட்டி வேகமாக வந்து கொண்டிருந்தது. கிளம்பிச் செல்லும் வேளையில் இருந்த கோபமும் வேகமும் திரும்பி வரும்போது இரண்டு விலங்குகளிடமும் இல்லை.

அந்தக் குதிரை என்னை நோக்கி வரும்போது மிகவும் களைத்து வந்தது. இருந்தாலும் ராஜ நடைதான். நாப்ஸும் அதே போல்தான் வந்தது. என் தங்கம் அது அப்படியே நேராக என்னை நோக்கிக் கூட்டி வந்தது. நான் புதரின் பின் இருந்து சுருக்கைத் தயாராய் வைத்திருந்தேன். இரண்டும் என்னை நெருங்கியவுடன் நாப்ஸ் தன் வேகத்தைக் குறைத்தது. அந்த இடை வெளியில் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள அந்தக் குதிரையும் அதே போல் நடக்க ஆரம்பித்தது. இதே வேகத்தில்தான் அவைகள் என்னைக் கடந்து சென்றன. கயிறு வைத்திருந்த என் கை வேகமாக வீசியது. கயிறில் கட்டி இருந்த கம்பி நன்றாகக் கீழே இறங்கியதால் சுருக்கு நன்றாக விரிந்தது. அந்த அழகிய குதிரை வெகு லாவகமாகத் தன் கழுத்தை அதனுள் நுழைத்தது.

உடன் அது செங்குத்தாகத் திரும்ப முயற்சித்தது. என் இடுப்பில் கட்டி இருந்த கயிறை நான் கெட்டியாகப் பிடித்து அதை நிலை நிறுத்தினேன். அது தன்னை விடுவித்துக் கொள்ள மிகவும் போராடியது. இதற்கிடையில் நாப்ஸ் மூச்சிரைத்துக் கொண்டு தன் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு எனதருகில் வந்து படுத்துக் கொண்டது. அது தன் வேலை முடிந்து விட்டது என்று எண்ணிக் கொண்டது. அதனால் ஓய்வெடுக்க விரும்பியது. அந்தக் குதிரை நன்றாகப் போக்குக் காட்டியது. சில நிமிட போராட்டத்திற்குப் பின் அது தன் கால்களை விரித்து நின்று விட்டது. அதன் மூக்கு ஓட்டைகள் விரிந்த வண்ணம் இருந்தன. கண்கள் அகலத் திறந்து இருந்தன. அதனை நோக்கி வரும் என்னையே கவனித்தபடி இருந்தது. நான் கயிரைப் பிடித்தபடியே அதனை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஒரு டஜன் முறையாவது அது கயிறை அறுத்துக் கொண்டு ஓட முயன்று இருக்கும். ஆனால் நான் ஒவ்வொரு முறையும் அதனிடம் அன்பொழுகப் பேசிக் கொண்டே வந்தேன். ஒரு மணி நேர முயற்சிக்குப் பின் நான் அதன் தலையைத் தொட முடிந்தது. பின் அதன் பிடரியை வருடிக் கொடுத்தேன். கொஞ்சம் புல்லை எடுத்து அதற்குச் சாப்பிடக் கொடுத்தேன். எப்பொழுதும் நான் அன்பாகப் பேசத் தவறவில்லை.

ஒரு பெரும்போரை நான் எதிர் பார்த்தேன். ஆனால் அதனைக் கட்டுப்படுத்த அந்தளவு மெனக்கெடவில்லை. காட்டிலேயே வளர்ந்திருந்தாலும் அது கொஞ்சம் மென்மையாகத்தான் இருந்தது. அதே நேரத்தில் புத்திக் கூர்மை உடையதாகவும் இருந்தது. அதனால்தான் நான் அதற்கு எந்தவிதக் கெடுதலும் செய்ய வரவில்லை என்பதை உடனடியாகப் புரிந்து கொண்டது. அதன் பின் எல்லாமே சுமூகமாக நடந்தது. அன்றைய பொழுது முடிவதற்குள் அது முன்னே செல்வதற்கும் நிற்பதற்கும் கற்றுக் கொடுத்து விட்டேன் அதன் தலையையும் காலையும் வருடிக் கொடுத்து. என் கைகளில் இருந்து புற்களைச் சாப்பிடவும் கற்றுக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக என் மேல் இருந்த பயத்தை நான் சாகடித்ததை அதன் பெரிய புத்திசாலியான கண்கள் வழியாகப் புரிந்து கொண்டேன்.

எனது காலுவின் கயிறின் நுனியில் இருந்த அந்த உலோகத் துண்டில் இருந்து ஊசி போல் வளைத்தேன். அதன் பின் அதனை ஒரு மிகப் பெரும் போராட்டத்திற்குத் தயார் செய்தேன். அதில் இருந்து அது வெற்றிகரமாக மீண்டு வருமா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் அது என்னைக் கீழே தள்ளி விடத் துளியும் முயற்சி செய்யவில்லை. அதன் பின் அது அசுர வேகத்தில் எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது. வேறெந்தக் குதிரையும் கடிவாளத்தின் பொருளையும் முழங்கால்களின் அழுத்தத்தையும் இவ்வளவு விரைவில் கற்றிருக்க முடியாது. நான் நினைக்கிறேன் அது மிக விரைவாக என் மேல் அன்பு செலுத்தவும் கற்று விட்டது என்று. நானும் அதன் மேல் அன்பு செலுத்துகிறேன். அதுவும் நாப்ஸும்தான் எனது ஆருயிர்த் தோழர்கள். நான் அதற்கு ஏஸ் என்று பெயரிட்டேன். எனது நண்பன் ஒருவன் இருந்தான் அதே பெயரில். அவன் விமானியாகப் பணியாற்றியவன். ஏஸும் விட்டால் பறக்கக் கூடிய விலங்குதான்.

நீங்களும் ஒரு குதிரை வளர்ப்பவராக இல்லா விட்டால் நான் சொல்வது உங்களுக்குப் புரியவே புரியாது, அதன் மேல் ஏறி உட்கார்ந்தவுடன் என் மனதில் தோன்றும் இன்ப உணர்ச்சிகள் எப்படிப்பட்டவை என்று. நான் ஒரு புதிய மனிதனாகவே மாறி விட்டேன். என் மனத்திண்மை அவ்வளவு இருந்தது. தனி ஒருவனாக இந்த கேஸ்பக்கையே பிடித்து விடலாம் போன்று இருந்தது. எனக்கு மாமிசம் தேவைப் படும்போது ஏஸின் மேல் அமர்ந்து விரட்டிச் சென்று சுருக்கைப் போட்டுப் பிடிப்பேன். எதாவது காட்டு விலங்கு எங்களைப் பயமுறுத்தினால் ஏஸின் மேல் அமர்ந்து வேகமாக அந்த இடத்தை விட்டுச் சென்று விடுவோம். ஆனால் பெரும்பாலும் அந்த விலங்குகள் எங்களைப் பயத்தோடு பார்க்க ஆரம்பித்தன. நானும் ஏஸும் கூட்டணி போட்டதால் அவைகளுக்குக் கேஸ்பக்கில் இதுவரை கண்டிராத எதோ ஒரு புதிய விலங்கைப் பார்த்தது போல் இருந்தது.

ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக நான் இந்தக் காலுக்களின் நாட்டின் தென் கோடியில் இங்கும் அங்கும் அலைந்து திரிந்தேன். எங்கும் ஒரு மனிதத் தலை கூடத் தென்படவே இல்லை. ஒவ்வொரு முறையும் கொஞ்சம் கொஞ்சமாக வடக்கு நோக்கி முன்னேறிய வண்ணம் இருந்தேன். அஜோர் எங்காவது இருக்கக் கூடும் என்பதால் சல்லடை போட்டது போல் சலித்துக் கொண்டிருந்தேன். ஐந்தாவது நாள் ஒரு காட்டில் இருந்து வெளியே வந்தபோது ஒரு சிறு உருவத்தைப் பல பேர் தொடர்ந்து செல்வது தெரிந்தது. அது அஜோர்தான் என்பது எனக்கு உடனடியாகப் புரிந்து விட்டது. அவர்கள் அனைவரும் என்னிடம் இருந்து ஒரு மைல் தொலைவில் இருப்பார்கள். அவர்கள் என் வழியைச் செங்குத்தாகக் கடந்து கொண்டிருந்தார்கள். அஜோரைத் தொடர்ந்தவர்கள் ஒரு நூறடி தள்ளி இருந்தார்கள். அதில் ஒருவன் மட்டும் மற்றவர்களை விட முன்னேறி இருந்தான். அவளை அவன் வேகமாக நெருங்கிக் கொண்டிருந்தான். ஒரு சொல்லாலும் முழங்கால்களின் அழுத்தத்தாலும் ஏஸை நான் காற்றில் விரட்டிக் கொண்டிருந்தேன். நாப்ஸும் எங்களுக்கு மிக அருகில் தொடர்ந்து வர நாங்கள் அவளை நெருங்கிக் கொண்டிருந்தோம்.

முதலில் அவர்கள் யாரும் என்னைப் பார்க்கவில்லை. அஜோரை நெருங்க நெருங்க முதலில் வந்தவனின் பின்னால் இருந்தவர்கள் இது வரை என் வாழ்நாளில் நான் கேட்டிராத மாதிரி ஒரு கூச்சல் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரும் காலுக்கள். முன்னால் சென்றவன் து-சீன் என்பது உடனே எனக்குப் புரிந்து விட்டது. அவன் கிட்டத்தட்ட அஜோரை நெருங்கி விட்டான். இதுவரை கண்டிராத ஒரு பயங்கர வெறியோடு அவளை நெருங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒரு கத்தியோடு சென்று கொண்டிருந்தான். அவனது எண்ணம் அவளைக் கொல்வதுதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. நிச்சயம் அவளைச் சிறை பிடிக்க அல்ல. என்னால் அதைப் புரிந்து கொள்ள இயலவில்லை. ஏஸை இன்னும் வேகமாகப் போகச் சொல்வதைத் தவிர எனக்கு வேறெதுவும் புலப்படவில்லை. அந்த அருமையான விலங்கும் என் சொல்லுக்கு அழகாகச் செவி சாய்த்தது. ஒரு நான்கு கால் விலங்கு என்றாவது பறக்கும் என்றால் அது ஏஸாகத்தான் இருக்க முடியும் அன்று.

வெறியோடு சென்று கொண்டிருந்த து-சீன் இன்னும் எங்களைக் கவனிக்கவில்லை. அவன் ஓரடி இடைவெளியில் இருக்கும் அந்த நேரத்தில் நான் ஏஸை அவர்களுக்கு நடுவில் ஓட்டினேன். சற்று இடது புறம் குனிந்து அந்தச் சிறிய காட்டுமிராண்டிப் பெண்ணை எனது கையில் அள்ளிக் கொண்டு சிட்டாய்ப் பறந்து விட்டேன். து-சீனின் பிடியில் இருந்து அவளைக் காப்பாற்றி விட்டோம். அவன் அதிர்ச்சியில் நின்றான். குழப்பத்தோடு பார்த்தவன் கோபம் தலைக்கேறியது. அஜோரும் குழம்பிப் போனாள். ஏனெனில் அவளுக்குப் பின்னால் இருந்து நாங்கள் வந்தோம். குதிரையில் ஏறும் வரை அவளுக்கு என்ன நடந்தது என்றே தெரியாது. அவள் என்னைக் கொல்லத் தன் கத்தியை உருவினாள். நான் ஏதோ ஒரு புதிய எதிரி என்று அவள் நினைத்து விட்டாள். அவள் கண்கள் என்னைக் கண்டதும் என்னை அடையாளம் கண்டு கொண்டாள். சிறு விசும்பலுடன் என் கழுத்தைக் கட்டிக் கொண்டாள். மூச்சிரைக்க “டாம்! டாம்!” என்று அரற்றினாள்.

அதன் பின் ஏஸ் ஒரு குழியில் இடறி விழுந்தது. நாங்கள் இருவரும் அதன் தலைக்கு வெகு உயரத்தில் தூக்கி எறியப்பட்டோம். கேஸ்பக்கில் இருக்கும் பல சுனைகளில் ஒன்றில் அது கால் வைத்து விட்டது. சில நேரங்களில் அவை ஏரிகளாக இருக்கும், அதுவும் சிறு குளங்கள் போன்றவைதான். ஆனால் பெரும்பாலும் அதில் சேறும் சகதியுமாகத்தான் இருக்கும். இதில் பசுமையான புற்கள் வளர்ந்து மறைத்திருந்ததால் அதன் ஆபத்து தெரியவில்லை. ஏஸ் தன் கால்களை உடைக்காமல் இருந்தது பெரும் ஆச்சர்யம்தான். அது விழும் போது அவ்வளவு வேகமாய் விழுந்தது. தனது ஆரோக்கியமான நான்கு கால்களை வைத்தும் அந்தக் குழியில் இருந்து அதனால் எழுந்து கொள்ள இயலவில்லை. அஜோரும் நானும் முகங்கள் புல் தரையில் படும்படி விழுந்தோம். அதனால் மிகவும் ஆழம் செல்ல வில்லை. நாங்கள் எழ முயற்சி செய்யும்போது கால்களுக்குப் பிடிமானம் கிடைக்கவில்லை. அதே வேளை து-சீனும் அவனது ஆட்களும் எங்களை நெருங்கி வந்து கொண்டிருந்தார்கள். அங்கிருந்து தப்பிக்க எந்த வழியுமில்லை. நாங்கள் சாவது உறுதி என்பது தெளிவாகத் தெரிந்தது.

“என்னைக் கொன்று விடு!” என்று அஜோர் என்னிடம் கெஞ்சினாள். “என்னை வெறுக்கும் ஒருவனை விட நேசிப்பவனின் கைகளால் சாவதே மேல். நிச்சயம் அவனும் என்னைக் கொல்லத்தான் போகிறான். அவன் என்னைக் கொல்லச் சபதம் எடுத்திருக்கிறான். நேற்றிரவு என்னைக் கைது செய்து விட்டான். ஆனால் வழியில் அவனிடம் சண்டை போட்டுக் கத்தியால் குத்தி விட்டு நான் தப்பி விட்டேன். காயங்களுடன் கதற விட்டு முறியடிக்கப்பட்ட கைது நடவடிக்கையால் மனமுடைந்து அடிபட்ட விலங்காய் அவனை விட்டு விட்டு வந்தேன். இன்று அவர்கள் என்னைத் தேடிக் கண்டுபிடித்து விட்டனர். நான் ஓட ஓட அவன் என்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று கத்திக் கொண்டே வந்தான். என்னைக் கொன்று விடு. என் அன்பே டாம். அதன் பின் உனது ஈட்டியில் நீயும் விழுந்து விடு. ஏனெனில் உன்னைப் பிடித்துச் சென்றால் உன்னைக் கொடூரமாகக் கொலை செய்வார்கள்.!”

என்னால் அவளைக் கொல்ல முடியவில்லை. குறைந்தபட்சம் இறுதி வரையிலும். அதே போல் அதையும் நான் அவளிடம் சொல்லி விட்டேன். நான் அவளைக் காதலிப்பதாகவும் சொன்னேன். நான் இறக்கும் வரைக்கும் அவளுக்காகச் சண்டை இடுவேன் என்றும் சொன்னேன்.

நாப்ஸும் எங்களைத் தொடர்ந்தே வந்தது. தொடக்கத்தில் நன்றாக இருந்த அது நாங்கள் மூழ்கியதைப் பார்த்ததும் தத்தளிக்கத் தொடங்கியது. நாங்கள் இப்படித் தவித்துக் கொண்டிருக்கும் வேளை, து-சீனும் அவனது ஆட்களும் அந்தக் குழியின் ஓரத்திற்கு வந்து விட்டார்கள். அவர்களுடன் ஆல்-டான் மற்றும் பல க்ரோலு வீரர்களும் இருந்தார்கள். காலுக்களின் தலைவனாகிய ஜோருக்கு எதிரான உடன்படிக்கை வெற்றிகரமாக ஏற்பட்டு விட்டது என்பது புரிந்தது. இந்தக் கூட்டம் ஏற்கெனவே காலுவின் தலைநகரில் வெற்றி நடை போடுகிறது. எனக்கு வெறுமையாக இருந்தது நாம் அஜோரையும் அவரது தந்தை மற்றும் மக்களின் தோல்வி மற்றும் சாவில் இருந்து காப்பாற்றுவதற்கு எவ்வளவு அருகில் வந்து விட்டோம் என்று நினைத்துப் பார்க்கும் போது.

இந்தக் குழியைத் தாண்டி அடர்த்தியான காடு இருந்தது. அதனுள் நுழைந்து விட்டிருந்தால் நிச்சயம் பாதுகாப்பாக இருந்திருக்கலாம். ஆனாலும் உண்மையில் நூறடியாகவே இருந்தாலும் இந்தச் சேற்றில் இருந்து அது நூறு மைல் தொலைவுதான். குழியின் ஓரத்தில் நின்று கொண்டு அவர்கள் எக்காளமிட்டனர். அவர்கள் எங்களைக் கை கொண்டு எட்ட முடியவில்லை. ஆனால் து-சீனின் கட்டளைக்குப் பின் அவர்களது விற்களில் அம்புகளைப் பொருத்தினர். முடிவு வந்து விட்டது கண் கூடாகத் தெரிந்தது. அஜோர் என்னை நெருங்கிக் கட்டிக் கொண்டாள். நான் அவளது கைகளைப் பிடித்துக் கொண்டேன். “நான் உன்னைக் காதலிக்கிறேன் டாம்!” என்றாள். “உன்னை மட்டும்”. என் கண்களில் இருந்து நீர் வடியத் தொடங்கியது. என் நிலை கண்ட சுய பச்சாதாபத்தினால் அல்ல. முழுவதும் காதலினால் நிரப்பப்பட்ட இதயத்தில் இருந்து வந்த கண்ணீர். அந்த இதயம் தனது காதல் கதிரவன் உதிக்கும் போதே மறைவதையும் பார்க்கும் மோசமான நிலை.

துரோகம் செய்த காலுக்களும் க்ரோலு வீரர்களும் து-சீனின் சொல்லுக்கு எதிர்பார்த்து நின்று கொண்டிருந்தார்கள். அவன் சொன்னவுடன் அந்த அம்புகள் எங்களைக் கொல்வதற்குத் தயாராய் இருந்தன. அப்போது அந்தக் காட்டினுள் இருந்து ஒரு மனிதன் காதுகளுக்குக் கேட்க வேண்டிய இதமான ராகம் கேட்டது. இரண்டு துப்பாக்கிகள் விட்டு விட்டுக் கூர்மையாக படபடவென்று தன் விருப்பம் போல் ஒலித்தன. காலு மற்றும் க்ரோலு வீரர்கள் அனைவரும் வேரற்ற மரம் போல் அதே சகதியில் சாய்ந்தனர்.

இதற்கு என்ன பொருள். என்னைப் பொறுத்தவரை ஒரே ஒரு பொருள்தான் இருக்கிறது. ஹோல்லிஸ் மற்றும் ஷார்ட் குழுவினர் அந்தப் பாறைகளின் மேல் வெற்றிகரமாக ஏறி காலுக்களின் நாட்டின் வட திசையினுள் தீவின் மறு பக்கம் நுழைந்து விட்டார்கள். என்னையும் அஜோரையும் சாவின் விளிம்பில் இருந்து காப்பாற்றி விட்டார்கள். எனக்கு அவர்களின் அறிமுகம் தேவை இல்லை. ஏனெனில் துப்பாக்கிகளை ஏந்தி இருப்பவர்கள் எனது ஆட்கள். சிறிது நேரம் கழித்து அவர்கள் வெளியே வந்த பின் எனது கண்கள் எனது நம்பிக்கையை உறுதி செய்தன. இதோ வந்து விட்டார்கள் எனது ஆட்கள். திறமைசாலிகள். அவர்களுடன் மெல்லிய தேகம் கொண்ட ஆயிரம் காலு வீரர்கள். அவர்களை வழி நடத்தி காலுக்கள் உடையில் இருவர் வந்தனர். இருவரும் உயரமாய் நேராய் இருந்தனர். அருமையான திரண்ட தசை கொண்டிருந்தனர். இருந்தாலும் அவர்கள் முற்றிலும் வித்தியாசமாக இருந்தனர். ஏஸ் தனது இன்னொரு இனத்தில் இருந்து எவ்வளவு வேறுபடுமோ அப்படி இருந்தது. அவர்கள் அருகில் வந்ததும் அஜோர் கைகளை நீட்டிக் கத்தினாள். “ஜோர், என் தலைவனே, என் தந்தையே” என்று. அதில் இருந்த மூத்தவர் ஓடி வந்து தன் கையை நீட்டி முழங்கால் அளவு அந்தச் சேற்றில் இறங்கினார். அதன் பின் அந்த மற்றோர் உருவம் என்னை நோக்கி வந்து என் முகத்தை உற்று நோக்கியது. அதன் கண்கள் விரிந்தது. எனது கண்களும்தான். நான் அழ ஆரம்பித்தேன். “போவன். கடவுளே, போவன் டைலரா இது”

அவனேதான். என்னுடைய தேடலும் முடிந்தது. என்னைச் சுற்றிலும் எனது ஆட்கள் மற்றும் புதிய உலகைத் தேடித் சென்ற ஒரு மனிதன். எங்களைக் காப்பாற்ற மரங்களை வெட்டி ஒரு பாதை அமைத்தனர். அதன் பின் நாங்கள் காலுக்களின் நகரத்தை நோக்கிச் செல்ல ஆரம்பித்தோம். அஜோர் ஏஸின் மேலமர்ந்து அங்கு சென்றதும் அவளுக்கு உற்சாகமான வரவேற்பு கிடைத்தது.

டைலர் ஹோல்லிஸ் ஷார்ட் மற்றும் அனைத்து அமெரிக்கர்களும் கால் முட்டி தேயத் தேய காலு கிராமத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தோம். அதே போல் பல நாட்கள் நடந்து சென்றோம். அவர்கள் அந்த செங்குத்தான மலைப்பாறைகளை எவ்வாறு கடந்தோம் என்பது பற்றி சொல்லிக் கொண்டே வந்தார்கள். இருபத்தி நான்கு மணி நேரமும் மூன்று எட்டு மணி நேர மாற்று நேரங்களில் தொடர்ந்து வேலை செய்தார்கள். இடையிடையே அரை மணி நேரம் இரு முறை ஒவ்வொரு மாறுதலுக்கும் இடையில் ஓய்வெடுத்துக் கொண்டனர். இருவர் தொரியாதோரில் இருந்த மின்னாக்கப் பொறியினால் மின்னூட்டம் செலுத்தப்பட்ட மின் துளையிடும் கருவிகளைக் கொண்டு நான்கு அடி இடைவெளியில் இரு துளைகள் இட்டனர் ஒரே சம தளத்தில். துளைகள் இரண்டும் சிறிது கீழ் நோக்கி இருந்தன. இந்த ஓட்டைகளில் இதற்காகவே கொண்டு வரப்பட்ட இரும்புக் கம்பிகள் நுழைக்கப்பட்டன. அவைகள் ஓரடி பாறையின் விளிம்பில் இருந்து நீட்டிக் கொண்டிருந்தன. அதன் மேல் ஒரு பலகை வைக்கப்பட்டது. அதன் பின் பணி நேர மாறுதலில் வந்தவர்கள் மேலும் இரு துளைகளை ஐந்தடி தூரத்தில் அமைத்தார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் மேலே சென்றார்கள்.

இரவு நேரங்களில் தொரியாதோரின் பாவொளி விளக்கு வேலை செய்யும் இடத்தின் மீது பாய்ச்சப்பட்டது. ஒரு மணி நேரத்தில் பத்தடி விகிதத்தில் ஐந்து நாட்களில் அந்த மலையின் மீது ஏறி விட்டார்கள். அதில் கயிறுகள் இறக்கப்பட்டன. கிட்டத்தட்ட ஒரு தூக்கி செய்யப்பட்டது. அதன் மூலம் தொரியாதோரை இயக்குவதற்கு தேவைப்பட்ட இருவர் தவிர மீதி அனைவரும் மலைச் சிகரத்தை அடைந்தனர். அவர்கள் தேவைக்கு அதிகமாகவே ஆயுதங்கள் வெடி மருந்துகள் உபகரணங்கள் அனைத்தையும் மேலெடுத்துச் சென்றனர்.

ஊர்வன விலங்குகள் மிகுந்த அபாயகரமான தென் திசையில் நுழைந்து ஏற்பட்ட தோல்வியினால் அங்கிருந்து வடக்கு நோக்கி என்னைத் தேடித் சென்றனர். அவர்களிடம் துப்பாக்கிகள் அதிகம் இருந்ததால் அவர்களில் யாருக்கும் உயிர் இழப்பு ஏற்படவில்லை. ஆனால் அவர்களின் பாதை அவர்களால் கொல்லப்பட்ட கொடூரமான விலங்குகளின் சடலங்கள் நிறைந்து இருந்தன. அங்கிருந்து கஷ்டப்பட்டு வடக்கில் உள்ள காலுக்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்தனர். அங்கே அவர்கள் போவன் மற்றும் அவரது மனைவி இருவரையும் கண்டனர்.

போவன் நாப்ஸ் இருவரும் சந்தித்த வேளை நாப்ஸ் தன் நகங்களால் காலுக்கள் அளித்த அந்த உடையைச் சின்னாபின்னப்படுத்தி விட்டது. நாங்கள் காலுக்களின் நாட்டிற்கு வந்து சேர்ந்த போது லா ர்யூ எங்களை வரவேற்றாள். அவள் திருமதி டைலராக இருந்தாள் இப்போது. எனது ஆட்கள் அவர்களைக் கண்டு பிடித்த அதே நாளில்தான் தொரியாதோரின் எஜமானன் திருமணமும் நடந்திருந்தது. இருந்தும் லிஸ் போவன் இருவரும் கடவுள் தங்களை இணைத்து வைத்த பந்தத்தை விட மதச் சடங்குகள் செய்து வைத்திருக்காது என்று உறுதியாக நம்புகிறார்கள்.

பிராட்லி மற்றும் அவனது கூட்டாளிகள் யாரும் இதுவரை தென்படவில்லை என்று இருவரும் சொன்னார்கள். அவர்கள் தொலைந்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டபடியால் இனிமேல் கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையே தொலைந்து விட்டது. காலுக்கள் அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார்கள். ஆனால் யாரும் அவர்களை நேரில் பார்க்கவில்லை டைனோசர் கோட்டையில் இருந்து கிளம்பிய சில மாதங்களுக்குப் பின்.

நாங்கள் ஜோரின் கிராமத்தில் இரு வாரங்கள் தங்கினோம். அதன் பின் தென் திசை நோக்கி எங்களுக்காகக் காத்திருக்கும் தொரியாதோர் நிறுத்தி வைத்திருக்கும் இடத்திற்குச் செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருந்தோம். இந்த இரண்டு வாரங்களில் சால்-ஆஸ் க்ரோலு கிராமத்தில் இருந்து வந்தான். இப்பொழுது அவன் முழுமையான காலுவாகி விட்டான். ஆல்-டானின் மீதி இருந்த வீரர்கள் க்ரோலு கிராமத்திற்குள் நுழைய முயற்சி செய்தபோது அவர்கள் கொல்லப்பட்டு விட்டதாகச் சொன்னான். அதனால் சால்-ஆஸ் தலைவனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டான். அவன் கிளம்பிய பின் நம்பிக்கைக்குரிய ஒருவனைத் தலைவனாக்கி விட்டு வந்தான்.

நாப்ஸ் போவனுடன் நன்றாக ஒட்டிக் கொண்டு விட்டது. நான் அஜோர் இருவரும் ஏஸின் மீதேறி காலுக்களின் அழகிய வட நாட்டைக் கண்டு வந்தோம். சால்-ஆஸ் அவனது நாட்டில் விட்டு வந்த எனது ஆயுதங்களைக் கொண்டு வந்து கொடுத்தான். எனது உடைகள் மட்டும் கிடைக்கவில்லை. இருந்தும் காலுக்களின் உடை அணிந்த பிறகு எனது உடை தேவையாய் இருக்கவில்லை.

ஒருவழியாக நாங்கள் கிளம்பும் நேரம் வந்து விட்டது. மறு நாள் காலை நாங்கள் தொரியாதோர் நோக்கிக் கலிஃபோர்னியாவிற்குக் கிளம்ப ஆரம்பித்தோம். அஜோர் என்னுடன் வர வேண்டும் என்று நான் கேட்டேன். ஆனால் ஜோர் அவளது தந்தை அதற்கு உடன்படவில்லை. காஸ்-அட்டா-லோவாகிய அஜோரை விட்டுக் கொடுக்க அவருக்கு மனம் வரவில்லை. ஏனெனில் அவளின் சந்ததிகள் ஒரு உயர்ந்த இனமாக உருவெடுப்பார்கள் என்று அவர் நம்புகிறார். வேறெந்தக் காலு பெண்ணை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம், ஆனால் அஜோர் வர மாட்டாள் என்று உறுதியாகச் சொல்லி விட்டார்.

பாவம் அவளது இதயம் சுக்கு நூறாகி விட்டது. என்னைப் பொறுத்தவரை அவள் எனது இதயத்தின் மீது வைத்திருந்த பிடியை நான் கொஞ்சம் கொஞ்சமாக உணர ஆரம்பித்திருந்தேன். அவள் இல்லாமல் நான் எப்படி இருக்கப் போகிறேன் என்று யோசிக்க ஆரம்பித்தேன். அவளது கரங்களை நேற்றைய இரவு பற்றிக் கொண்டிருக்கும் வேளை அவள் இல்லாமல் என் வாழ்க்கை எப்படிச் செல்லும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அவள் மேல் நான் தீராத காதல் கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது. எனது காட்டுமிராண்டிப் பெண்ணை நான் காதலிக்கிறேன். பின் ஒரு வழியாக அவளைப் பிரிந்து எனது குடிசைக்குச் சென்று சிறிது நேரம் உறங்கலாம் என்று எண்ணினேன் நாளைக் காலையில் நீண்ட தூர பிரயாணத்திற்குத் தயாராக வேண்டி இருப்பதால். காலம் இந்தக் காயத்திற்கு நல்ல மருந்து இடும் என்று என்னை நான் சமாதானப் படுத்திக் கொண்டேன். எனது தாய் நாடு சென்றவுடன் அங்கு எனது கலாச்சாரத்தில் வளர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எண்ணினேன்.

காலை நான் நினைத்ததை விட வேகமாய் வந்து விட்டது போல் தோன்றியது. எழுந்து காலை உணவை முடித்தேன். அஜோரை அங்கு காணவில்லை. இப்படிச் சொல்லிக் கொள்ளாமல் சென்று விட்டால் துன்பமில்லை என்றே நானும் நினைத்தேன். எனது ஆட்கள் அனைவரும் தயாராகி விட்டார்கள். காலு வீரர்களும் எங்களுடன் வரத் தயாராய் இருந்தார்கள். நான் ஏஸின் லாயத்திற்குச் சென்று அதனிடம் சொல்லிவிட்டு வரக் கூட விரும்பவில்லை. நேற்று இரவு அதை அஜோரிடம் ஒப்படைத்தேன். அவர்கள் இருவரும் இப்பொழுது பிரிக்கவே முடியாதபடி ஒன்று சேர்ந்து விட்டனர்.

அதன் பின் நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். வீதியின் இரு மருங்கிலும் கற்களால் கட்டப்பட்ட வீடுகளுக்கு மத்தியில் நடந்தோம். அதன் பின் கல்லால் ஆன வாயில் சுவர் அந்த நகரைச் சுற்றி முழுவதும் எழுப்பப் பட்டிருந்தது அதையும் தாண்டி வெளியே சென்றோம். அங்கிருந்து காடு. அதற்குள் சென்றால்தான் காலு நாட்டின் வட எல்லையைத் தொட முடியும். அங்கிருந்து தென் திசை நோக்கிச் செல்ல வேண்டும். காட்டின் எல்லையில் இருந்து என் இதயத்தைக் கொண்டிருக்கும் அந்த நகரத்தைத் திரும்பிப் பார்த்தேன். அந்த பிரமாண்ட மதில் சுவர் தாண்டி நான் கண்ட காட்சி என்னை மேலே செல்லாமல் தடுத்தது. அங்கே ஒரு சிறிய உருவம் வாயில் கதவின் மேல் சாய்ந்து நின்றது. இந்த தூரத்தில் இருந்து பார்த்தபோது கூட அந்த உருவம் அழுத அழுகையினால் அதன் தோள்பட்டை குலுங்குவதைக் காண முடிந்தது.

போவன் என்னருகில் இருந்தான். “சென்று வருகிறேன் போவன்” என்று சொன்னேன். “நான் திரும்பிச் செல்கிறேன்”

அவன் என்னை ஆச்சர்யமாகப் பார்த்தான். “சென்று வா” என்று சொன்னான். என் கையை எடுத்துப் பிடித்தபடி சொன்னான் “நீ இதை இறுதியில் செய்வாய் என்று தெரியும்”

அதன் பின் நான் சென்று அஜோரின் கைகளை எடுத்து என் கைகளில் வைத்துக் கொண்டேன். அவள் கண்களில் வழிந்த நீரை முத்தமிட்டேன். பின் நாங்கள் இருவரும் கடைசி அமெரிக்கன் காட்டில் நுழைந்து மறைவதைப் பார்த்தபடி நின்றிருந்தோம்.

– முற்றும்

அருஞ்சொற்கள்:

 • உலாப்படகு – Yacht
 • மீகாமன் – Captain
 • நன்மகன் – Gentleman
 • கம்பி வடம் – Cable
 • கப்பி – Pulley
 • விசைப்பொறி – Motor
 • பாவியல் கலைத்திறம் – Impressionism
 • சித்திரப்படாம் – Canvas
 • புதைபடிமவியல் – Paleontology
 • புதிர்நெறி – Labyrinth
 • மின்னாக்கப் பொறி – Dynamo
 • பாவொளி – Search light
Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *