காலத்தால் சாகாதது

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 30, 2021
பார்வையிட்டோர்: 3,119 
 
 

(1958ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நூற்றி ஐம்பது ஆண்டுகளாக நம்மீது-இலங்கை மக்கள்மீது-ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர், கட்டிக் காத்த ஆட்சி அமைப்பு. இயந்திரத்தின் உபயோகமுள்ள இரும்புச் சக்கர அங்கங்கள் தான் விதானைமார்கள். இந்தத் திருக் கூட்டத்தினர், இப்பொழுது பல்லிழந்த பாம்புகளைப்போல தங்கள் அதிகாரங்கள் பலவற்றை இழந்திருப்பினும், இந்த உண்மையை உணராது விதானைமார் பரம்பரையில் உதித்து, மமதையுடன் வாழ்பவர்தான் மயில்வாகனம் அவர்கள்.

“அவருடைய விருத்தாந்தங்களையெல்லாம் எழுதிமுடிப்பதற்குள், ஒரு பாரதமே பாடி முடித்து விடலாம். அவற்றை நான் விஸ்தரிக்கப் போகும் உத்தேசமில்லையாயினும், அவரை மயில்வாகனம் என்று . மொட்டையாக அறிமுகப்படுத்தியது தவறென உணருகின்றேன். அவரை நம்மைப் போன்றவர்கள் ‘ஐயா’ என்றழைக்கக் கூடாது. ‘சிதானையார்’ என்றும் கூப்பிடக்கூடாது. ‘கமக்காரர்’ என்றால் உச்சி குளிர்ந்து விடுவார். அதிலும் ‘பெரிய கமக்காரர்’ என்று யாராவது அழைத்துவிட்டாலோ……. இத்தனைக்கும் அவருக்குக் கமமோ, ஊரில் வயல்களோ, இல்லை. அவருடைய இந்த அபிலாஷைக்கு ஒரு அடிப்படைக் காரணமுண்டு. மிக உயர்ந்த குடிப்பிறப்புக்கு அவரது வட்டாரத்தில்- அயலில்-‘பெரியகமக்காரர்’ என்ற அடை மொழியுண்டு.

அவருடைய ஆசையைக் கெடுப்பானேன்? அவர் பெரிய ‘மனுஷன்’-‘பெரிய கமக்காரன்’!

இந்திய நாட்டிலிருந்து, முதன்முதல் வந்து யாழ்ப்பாணக் குடாநாட்டிலுள்ள மயிலிட்டியில் இறங்கிக் கால் வைத்த சிங்க மாப்பாணர் பரம்பரைதான் ‘அவருடைய வம்சம். இப்படி அவர்கூட அடிக்கடி சொல்லிக்கொள்வார். அதைச் சொல்வதில் அவருக்கு வெகு பெருமை. சாயம் போன சரிகை வேஷ்டி; நீண்டு, துடைப்பத்தின் முனையை ஞாபகப்படுத்தும் மீசை; பரந்த நெற்றி; அதன் கரைகளுக்கு எல்லையிட்டனவாகத் திகழும் விபூதிப் பூச்சு; அதிற்றுலங்கும் குங்குமத் திலகம்; திடகாத்திரமான ஆகிருதி; நன்றாகப் பழுத்த செம்பாட்டு மாம்பழத்தைப்போன்ற தேகக் காந்தி; உயர்சாதி என்ற இறுமாப்பினை வெளிப்படுத்தும் பார்வை; ஏகவசனத்தில் பேசும் பேச்சு; இவற்றின் மொத்த உருவந்தான் நமது விதானையார் அவர்கள்.

காலைக் கடன்களை முடித்து, சைவாசாரப்படி வயிற்றை நிரப்பிக் கொண்டார். சிவப்பழமாகத் தோன்றி, தொந்தியை இலேசாகத் தடவிக்கொண்டே, தாம்பூலம் தரித்துச் சுவைத்தார். அந்தச் சுவையுடன் ஒன்றி, மதிய போஜனத்திற்கான மரக்கறிப் பட்டியலை, மனைவியிடம் விஸ்தரித்துக் கொண்டிருக்கும்பொழுது ‘ஐயா…….’ஐயா……’ என்ற குரல் அவர் செவிகளில் விழுந்தது.

“யாரது”-என்று கேட்ட வண்ணம் வெளிவிறாந் தைக்கு வந்தார்.

“நான் தான்” – வந்தவனின் பதில்.

“நீ யெண்டார் ஆர்? நீதான் பிரதம மந்திரியா? நானாம்……நான்! நீ ஆர்?”.

‘நான் தானுங்க, பொன்னுத்துரை……’

“இருக்கிறது?”

“பலாலி றோட்; மதவடி…”

வந்தவனை, ஊடறுத்து, நோட்டமிட்டுப் பார்க்கிறார். பின்னர், எதையோ நினைவுக்குக் கொண்டுவந்துவிட்டவரைப் போன்று திருப்தி அடைந்தார்.

“அட, நீ மக்கிக்கிடங்கடிப்பொக்கன் கணபதின்ரை மகன் பொன்னனல்ல?–என்னடா செய்யுறாய்?”

“படிக்கிறேனுங்க…..”

பேச்சு விதானையாருக்கு சுவாரஸ்யப்படவில்லை. ‘படிக்குதுகளாம், படிக்குதுகள். பள்ளுப் பறையும், நான்கு பதினெட்டுச் சாதியும் படிச்சா அப்புறம் படிப்புக்கு என்ன மதிப்பு? இந்தக் கட்டலே போற சாதிகள் படிக்கத் தொடங்கி ‘பல்லோ, நம்ம ஜாதிப் பொடியங்களுக்கும் வேலை கிடைக்குதில்லை’ என்று கல்வி, பொருளாதாரத் தத்துவங்களில் நுனிப்புல் மேய்ந்து விட்டு, ‘காலம் கலிகாலம். இந்தக் கீழ்சாதிகளெல்லாம் ராசாவெண்டும், துரையெண்டுமல்லோ பெயர் வைக்கத் தொடங்கீட்டுதுகள். அந்தக் காலத்திலே, இப்படி யெல்லாம் – பேர் வைக்க நாம் விட்டோமா? ஆறுமுகம் என்றால் ‘ஆறன்’ என்றும், செல்வராஜன் என்றால், ‘செல் லன்’ என்றும், பொன்னுத்துரை என்றால் ‘பொன்னன்’ என்றும் அல்லவா பெயர்கள்கத்திரிப்பு வேலைகள் நடத்தினோம், பிறப்புப் பதிவெல்லாம் அப்ப எங்களோடை…இப்ப?…… ஆயிரம்தான் செய்தாலும் வெள்ளைக்காரன் வெள்ளைக் காரன் தான்! அவன்ரை ஆட்சியிலை எங்களுக்கிருந்த சுதந் திரம் அதிகாரம் இப்ப இருக்குதா?’ என்று சிந்திக்கலானார்… வந்தவன், மீண்டு மொருமுறை “ஐயா!” என்று குரல் கொடுத்து அவருடைய மனதைக் அக்கற்பனா உலகத்தினின்றும் இறக்கிவைத்தான்.

“சரி. என்னத்துக்கு வந்தனீ?”

“போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் சேரலா மென்று நினைக்கிறேன். ‘இன்டர்வியூ’க்குப் போய்வந்தனான். அனேகமாக என்னை எடுப்பார்கள். என்னைப் பற்றிப் ‘போலீஸ் பகுதியினர் ஏதாவது நற்சாட்சிப் பத்திரமோ, தகவலோ எடுக்க வந்தால், நாலு நல்ல வார்த்தைகளாகச் சொல்லுங்கள். அவ்வளவும் போதும்.”

போலீஸ் உத்தியோகத்தில் சேருபவனைப் பற்றியும், அவனுடைய மூதாதையர்- இனத்தவர்கள் ஆசியோரின் நடத்தையைப் பற்றியும், போலீஸ் பகுதியினர் விதானை மாரிடம் விசாரித்து அறிவது என்ற சம்பிரதாயம் இன்றும் இருக்கின்றது. கடவுள் வரங் கொடுத்தும், அதைப் பெறுவதற்குப் பூசாரியை வணங்கி நிற்பதைப்போன்ற விவகாரம் இது. இருப்பினும், அவனுடைய உத்தியோகம் இந்த விதானையாரின் ‘நாலு நல்ல வார்த்தைகளில்’ தொங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார்.

”சரி, சரி. நீ போ. எல்லாம் பார்க்கலாம்”

ஒரு நளவன்- தாழ்ந்த சாதிக்காரன்-சப் இன்ஸ்பெக்டராக நாளைக்குத் தன் வீட்டிற்கே வந்து, உள் வீட்டில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு, அதிகாரம் செலுத்தும் காட்சி அவருடைய மனதில் தோன்றி, அவரை என்னவோ செய்தது. தீயைத் தீண்டிவிட்டவரைப்போன்று அவருடைய உள்ளம் கொதியாய்க் கொதித்தது.

“சரி. ஏன் நிற்கிறாய்? எல்லாத்தையும் நான் பாத்துக்கிறன்” என்றார்.

அவனுக்கு நம்பிக்கை பிறக்கவில்லை.

நம்பிக்கை பிறக்காததற்குக் காரணமுண்டு. நெருஞ்சி முள்ளான அச்சம்பவம் அவன் உள்ளத்தில் மறுதடவையும் வலம் வந்தது.

***

சில மாதங்களுக்கு முன்னர், ஒருநாள் திடீரென்று அவனுடைய சகோதரியின் குழந்தையொன்றிற்கு வலிப்புக் குணம் ஏற்பட்டது. மணியோ பத்து. ‘உடனடியாகக் குழந்தையை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனால் தான் ஏதாவது சுகம் கிடைக்கும்’ என்று பசுபதிப் பரியாரியார் சொல்லிவிட்டார். குழந்தையையும் தாயையும் காரிலே கொண்டுபோனால் தான் நல்லது. கார் தேடிப் பொன்னுத் துரை அலைந்தான். சமயத்தில் ஒன்றும் கிடைக்கவில்லை. அப்பொழுது தான் விதானையார் கள்ளப் பெயரில் கார் ஒன்று வைத்திருந்து வாடகைக்கு விடுவது அவனுக்கு ஞாபகத்திற்கு வந்தது. அவரிடம், அவனுடைய பகுதி மக்கள் கார் கேட்கப் பயம். ஆனால் அந்தக் குழந்தையின் நிலை அவனுக்குத் துணிச்சலை அளித்தது.

விதானையாரிடம் கரை வாடகைக்கு விடும்படி கெஞ்சிக் கேட்டான். அவருடைய மனம் மசியவில்லை. ஆரம்பத்தில் அவர் ஏதோவெல்லாம் நொண்டிச் சாக்குகள் சொல்லித் தட்டிக் கழித்தார். அவனுடைய கெஞ்சுதல் அதிகரித்தது. இறுதியாக விதானையார் அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்: “கண்ட நீண்ட சாதிக்கெல்லாம் என்ரை கார் ஓடாது!”

அப்புறம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு தாயைப் பிடி நடையாக ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோக நேர்ந்தது. குழந்தை எப்படியோ தப்பிப் பிழைத்தது. அன்று ஒரு குழந்தையின் உயிருக்குக் கருணை காட்டாத விதானையார் இன்று தன் உத்தியோகத்திற்குக் கருணை சாட்டுவார் என்ற நம்பிக்கை பிறக்கவில்லை.

சிரித்த முகம்; மலர்ந்த மனம்; இனிய சொல்; பணிவன்பு மிக்க நடை; இதமான பண்பு. படிப்பில் வெகுசுட்டி; விளையாட்டில் புலி; நல்ல உடற்கட்டு. உத்தியோகத்திற்குத் தேவையான சகல தகுதிகளும் இருந்தன. இருப்பினும் – ஜாதி?

என்ன இருந்தும் என்ன? அவன் தலையைக் குனிந்தபடி நடந்தான். அமெரிக்க நாட்டுப் பிரபல விளையாட்டு வீரர்களான நீக்கிரோ வாலிபர்களின் மனோபாவத்துடன் வீட்டை நோக்கி நடந்தான்.

***

பொன்னுத்துரை பயந்தபடியே நடந்தது.

விதானையார் தனது சகுனித் திறமையைக் காட்டிவிட்டார். போலீஸ் இலாகா பொன்னுத்துரையைப் பற்றிக் கேட்டிருந்த குறிப்பில் பின்வருமாறு எழுதினார்:

‘இவனுடைய குடும்பம் சண்டியர்கள் பரம்பரை. இரண்டு தலைமுறைக்கு முந்தி இவன் குடும்பத்தவர்கள் இருவர் ஒரு கொலைக் கேஸில் சம்பந்தப்பட்டிருந்தனர். இன்றும் அவனுடைய சொந்தக்காரர் இருவர் ரௌடிகள் என்றே கணக்கிடப் படுகின்றனர். இவனைப்பற்றியும் ஊரில் நல்ல பெயர் கிடையாது. போலீஸ் உத்தியோகத்திற்கு எள்ளளவேனும் தகுதியற்றவன்’

ஒரே கல்லில் இரண்டு பழங்களை வீழ்த்திவிட்டார். ஒன்று தாழ்ந்த சாதிக்காரனுக்குச் சரியான பாடம் படிப்பித்தோம் என்ற நிறைவு; மற்றது, இந்த ‘நள்ளு பள்ளு’களை இப்படிப் பின்னுக்கு வைப்பதினால், உயர் சாதிப் பொடியன்களுக்கு அச்சந்தர்ப்பம் கிடைத்துவிடும் என்ற பெருமை.

வேலை தேடி அலைந்தான் பொன்னுத்துரை. சில வியாபாரக் கடைகளுக்கும் வேலைக்காக ஏறி இறங்கினான். பல இடங்களில் சாதி குறுக்கிட்டது; சில இடங்களில் படிப்பும் குறுக்கிட்டது. அவன், வேலையற்றவனாகி, வேலை தேடுவதே வேலையாகி, அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது…

ஒரு நாள்……

வீதியில் வந்து கொண்டிருக்கும் பொழுது –

திடீரென்று பலர் சேர்ந்து கூச்சலிடும் குரல் அவன் காதில் விழுந்தது. கிராமங்களில் வீடுகள் தீப்பற்றிக் கொண்டால் பலர் சேர்ந்து கூக்குரலிடுவார்களே, அதைப் போன்ற அலறல். அதை அவன் உற்றுக் கேட்டான்.

சிலர் சமீபத்திலுள்ள வீட்டை நோக்கி ஓடிக் கொண்டிருந்தனர். கூர்ந்து நோக்கினான். அது விதானையாரின் வீடு. மனம் துணுக்குற்றது. அவரை நினைத்த பொழுது அவனுடைய மனம் வெறுப்படைந்தது. அவனுடைய மனிதத் தன்மையின் மீதே கீறல் விழச் செய்த பயங்கர ராட்சதப் பிறவியாக அவர் தோன்றினார்.

‘நமக்கென்ன’ என்ற எண்ணத்துடன் நடையைக் கட்ட நினைத்தான். கூக்குரல் வலுவடைந்தது. ஏதோ ஒன்றுகண்ணுக்குத் தெரியாத மனச்சாட்சியின் கரங்கள் – அவனைத் தடுத்து நிறுத்தின. போக மனம் வரவில்லை. அலறல் கேட்ட திசையை நோக்கி விரைந்தான். விதானையார் வீட்டுப் படலையடியில் நின்று கிடுகு வேலிக்கு மேலாக எட்டிப் பார்த்தான்.

கிணற்றைச் சுற்றி ஆட்கள் நிறைந்திருந்தனர். சில பெண்கள் தலையில் கை வைத்த வண்ணம் ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். விதானையாரின் மகள் – குமர்ப்பிள்ளை – கால் தவறிக் கிணற்றுக்குள் விழுந்து விட்டாளாம். பாவம், அடுத்த கிழமைதான் அவளுக்குக் கல்யாணம் நடக்கவும் ஏற்பாடாகி இருந்தது.

கூடிநின்ற ஆண்களில் சில வீரத் தமிழர்கள் அரசியல் வாதிகளைப் போலவே சும்மா ‘ஆய் ஊய்’ என்றார்களே தவிர ஒருவரும் கிணற்றுக்குள் இறங்க முயற்சிக்கவுமில்லை; தயாராகவுமில்லை. உயிர் ஒவ்வொருவனுக்கும் கரும்பாகப்பட்டது. அதனால் பயப்பட்டார்கள். தந்தையான விதானையார் மயில் வாகனம் மட்டும் என்ன செய்வதென்று அறியாமல், உணர்ச்சிகள் இழந்து, கற்சிலையாக நின்றார்.

பொன்னுத்துரை, வீட்டு வளவிற்குள் நுழைந்தான்; கிணற்றை எட்டிப் பார்த்தான்.

மரணத்தின் கோரப் பிடிகளுக்குள் சிக்கிக் கொண்ட வளைப்போல அந்தப் பெண் கிணற்றுக்குள் தத்தளிக்கிறாள். இன்னும் கொஞ்சம் தாமதித்தாலும் அவளைக் காப்பாற்ற முடியாது என்ற உண்மையை உணருகின்றான். இறுதி முறையாக நீரின் மட்டத்திற்கு வந்து, நீருக்குள் அவளுடைய உடல் அமுங்கிக் கொண்டிருக்கின்றது…

அவன் விளைவைப் பற்றிச் சிந்திக்கவுமில்லை கவலைப்படவுமில்லை. அவனுடைய உள்ளத்தில் மின்னலைப் போன்ற ஒரு வேகம் பிறந்தது. துலாக் கொடியைப் பிடித்தபடி அவன் கிணற்றுக்குள் இறங்கிவிட்டான். ‘ஆ’ என்று வாயைப் பிளந்தனர், தங்களுடைய பிரமிப்பு நிலையிலிருந்து விடுபட்டவர்கள். அப்பொழுது தான் தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றியது. அந்தப் பெண்ணை துலாக்கொடியின் நுனியில் கட்டப்பட்டிருந்த பெரிய வாளியில் ஏற்றினான். அந்தர நிலையில் நீந்தியும், நீந்தாமலும் நின்று கொண்டு, “துலாக்கொடியை மூன்றுபேர் சேர்ந்து வெளியில் இழுங்கள்” என்று சத்தமிட்டான். பின்னர் தானும் ஏறிக்கொண்டு..

வெகு சிரமத்துடன், சோர்ந்து மூர்ச்சை யடைந்திருந்த அந்தப் பெண்ணை, இளமையுடன் திரண்டுகிடந்த தனது கரங்களில் தாங்கியபடி, விதானையாரின் காலடியில் கிடத்தினான். அவன் தண்ணீர் சொட்டும் தனது கேசத்தினை, வலதுகை மணிக்கட்டின் கீழிருந்த உங்ளங்கையினால் இழுத்து மேலே விட்டு விட்டு விதானையாரைப் பார்த்தான். அவரும் அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்தார். அவருடைய தேகம் சில்லிட்டது. மயிர்க்கால்கள் சிலிர்த்தன. அவர் உதட்டில் ஒரு வகைத் துடிதுடிப்பு; உள்ளத்தில் தாங்க முடியாத தவிப்பு; தேகத்தில் இனங்காண இயலாத பதை பதைப்பு.

இந்திய நாட்டிலிருந்து, முதன் முதல் வந்து யாழ்ப்பாணக் குடா நாட்டிலுள்ள மயிலிட்டியில் இறங்கிக் காலடி வைத்த சிங்கமாப்பாணர் வம்சத்தில் வந்துதித்த விதானையார் மயில்வாகனம் அவர்கள், எமன் வாயில் இருந்து மீட்கப்பட்ட மகளையும், அந்த ‘மக்கிக் கிடங்கடி நளப்பொடிய’னையும் மாறி மாறிப் பார்த்தார். அவர் வாயே திறக்கவில்லை.

அவன் மௌனமாக நின்றான். பின்னர் குழுமி நின்ற கூட்டத்தைப் பிரித்துக் கொண்டு அவன் நடையைக் கட்டினான். அவனை அவர் தடுத்து நிறுத்தவில்லை; கூட்டத்தில் நின்ற எவரும் தடுத்து நிறுத்த வில்லை…

…அடுத்த நாள், விதானையார் வீட்டுக் கிணறு இறைக்கப் பட்டது.

– 10-10-1958 – தண்ணீரும் கண்ணீரும் – சரஸ்வதி வெளியீடு – முதற் பதிப்பு – ஜூலை 1960

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *