ஊர் எங்கும் மழை , விடிய விடிய ஓயாமல் கொட்டியது . பூமி தாய் போதும் போதும் என்கிற அளவிற்கு மழை. மழை புயலாக மாறியது.
என்னுடைய கைபேசிக்கு ராகவனிடம் இருந்து விடியற்காலை சுமார் 4 மணியளவில் அழைப்பு வந்தது. இரவு பணியை முடித்து விட்டு வீடு திரும்பி விட்டதாக கூறினான். சென்னை முழுவதும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும், மிகவும் சிரமப்பட்டு வீடு திரும்பியதாகவும் கூறினான். மேலும் அவனுடைய கார்ப்பரேட் நிறுவனம் புயலை முன்னிட்டு, அவனையும், அவனுடன் வேலை பார்ப்பவர்களையும், மும்பைக்கு அனுப்புவதாக கூறினான். இதை கேட்ட எனக்கு, என்ன சொல்வது என்று தெரியவில்லை. எப்போது கிளம்பவேண்டும் என்று கேட்டேன். அதற்கு இன்று மாலை செல்ல வேண்டும் என்றுக்கூறினான். ஏன் எனில், அவனுடைய நிறுவனம் புயலை காரணம் காட்டி வேலையை நிறுத்த விரும்பவில்லை என்றுக்கூறி உறங்க சென்றான்.
எனக்கு அதன் பிறகு தூக்கம் வரவில்லை. நான், என்னுடைய பழைய நினைவுகளை அசைபோட துவங்கினேன். நான், 7 வருடங்களுக்கு முன்பு ராகவனை சந்தித்தேன். அனைத்து கதைகளிலும் வருவதுபோல, நண்பர்களாக பழகிய நாங்கள், பிறருக்கு காதலர்களாக மாறினோம். இதுதான் எங்களை பற்றிய சுருக்கமான முகவுரை. சரி, கதைக்கு வருவோம்.
பழைய நினைவுகளை அசைப்போட்ட நான் எப்போது உறங்கினேன், என்று தெரியவில்லை. தூங்கி எழுந்த நான், என்னுடைய பணிக்கு சென்றேன்.
நான்,ராகவனுக்கு மதியம் போன் செய்தேன். அப்போது, அவன் 10 நாட்கள் மட்டும் செல்வதாகவும், சென்னையில் நிலைமை சரியானதும்,திரும்புவதாகக்கூறி விமானநிலையம் நோக்கி சென்றான். அன்று மாலையே, மும்பை நிறுவனத்திற்கு சென்று பணிகளை ஆரம்பித்தான், ராகவன்.
மும்பையில் இருந்து பணிகளை ராகவன் பார்த்துக்கொண்டு இருந்தான். 10 நாட்களும் சென்றது. சென்னையில், புயலும் ஓய்ந்தது. ராகவனும் சென்னை திரும்பினான். நாட்களும் முயல் வேகத்தில் சென்றது, திடீர் என்று ஒரு நாள், ராகவனின் வேலை செய்யும் நிறுவனம், புயலை காரணம் காட்டி, சென்னையில் இருந்து மும்பைக்கு நிறுவனத்தை மாற்ற விரும்புவதாகவும்,விருப்பம் உள்ளவர்கள் மும்பைக்கு செல்லலாம் என்றும், விருப்பமில்லாதவர்கள், வேறு வேலையை தேடிக்கொள்ளலாம் என்றுக்கூறியதாக சொன்னான்.
அன்றில் இருந்து,ராகவனும் சென்னையில் ஒரு நல்ல வேலை தேட துவங்கினான். ஆனால்,எங்கள் நேரம் எதிர்பார்த்த வேலை கிடைக்காததால், மும்பைக்கு சென்றான் ராகவன், ஒரு சில மாதத்தில் திரும்புவதாகக் கூறி.
நாட்கள் மாதங்கள் ஆகின,மாதங்கள் வருடங்கள் ஆகின. ராகவன், மும்பையில் பணியை தொடர்ந்தான்.
2020 பிறந்தது…. கூடவே கொடிய நோயும் பிறந்தது… உலகத்தையே ஆட்டிப்படைக்க துவங்கியது. அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க துவங்கியது. ராகவனின் நிறுவனம், வீட்டில் இருந்து வேலை பார்க்க சொல்லியது.
நான், அவனிடம் கேட்டேன் “சென்னை புயலை காரணம் காட்டி, உங்களை மும்பைக்கு அனுப்பியது உங்கள் நிறுவனம், இப்போது உலகமே நோயால் பாதிக்கப்பட்டுள்ளது… இப்போது, உங்களை எங்கு அனுப்புவார்கள்??? உங்கள் கார்ப்பரேட் நிறுவனம்… சந்திர மண்டலத்திற்க்கா??? ” என்று கேட்டேன்.