கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: முதல் அத்தியாயம்
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 8, 2024
பார்வையிட்டோர்: 1,042 
 
 

கானகத்தின் குரல் ஒருவிதத்தில் மண்ணுலகில் பெருகிப்போன தன்னலக் குரலின் எதிரொலி. நாயின் வாழ்க்கை வரலாறாக இல்லாமல் மானுட வாழ்வின் விமர்சனமாக நாவல் உருமாறும் முக்கியமான தளம் இது. வாசக மனத்தில் எண்ணற்ற கேள்விகளை உருவாக்குவதில் ஜாக் லண்டன் பெற்றிருக்கும் கலைவெற்றி மகத்தானது. ஜாக் லண்டனின் The Call of the Wild நாவல் 1958ல் பெ.தூரன் மொழியாக்கத்தில் கானகத்தின் குரல் என்ற பெயரில் வெளியானது. பக் என்ற நாயின் வரலாற்றை விவரிக்கும் சுவாரஸ்யமான புத்தகம். அலாஸ்காவில் தங்க வேட்டைக்குப் போனவர்களின் கதையைச் சொல்வதுடன் பனிச்சறுக்கு வண்டி இழுத்துச் செல்லும் நாயின் கதையினை அழகாக விவரித்திருக்கிறார் ஜாக் லண்டன். இந்த நாவல் நான்கு முறை ஹாலிவுட்டில் படமாக்கபட்டிருக்கிறது. ரஷ்ய மக்களால் விருப்பமுடன் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு சில அமெரிக்கப் படைப்பாளர்களில் ஜாக் லண்டன் முக்கியமானவர்.

1.ஆதிநிலை | 2.கோரைப்பல், குறுந்தடி ஆட்சி

பக் செய்தித்தாளைப் படித்ததில்லை; படித்திருந்தால் தனக்கு மட்டுமல்ல. தன்னைப் போன்ற உடற்கட்டும் அடர்ந்த உரோமமும் உடைய அந்த வட்டாரத்து நாய்களுக்கெல்லாம் தொல்லை உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டிருக்கும். பனி மயமான ஆர்க்டிக் இருட்டுப்பிரதேசத்திலே எப்படியோ நுழைந்து அங்கே தங்கம் கிடைப்பதாக மனிதன் கண்டுவிட்டான். கப்பல் கம்பெனிகளும், மற்ற போக்குவரத்துச் சாதன நிலையங்களும் தங்கள் லாபம் கருதி இந்தச் செய்தியை எங்கும் முழக்கின. வடக்குப் பனிநாட்டை நோக்கி ஆயிரக்கணக்கான மக்கள் விரைந்து புறப்படலானார்கள். அவர்களுக்கு நாய்கள் வேண்டும். எஃகு போன்ற தசைநாரும், உறைபனிக்கு இளைக்காத உரோமக்கட்டும் உள்ள திடமான பெரிய நாய்கள் அவர்களுக்கு வேண்டும்.

கதிரவன் ஒளி கொஞ்சுகின்ற சான்டா கிளாரா[1]. பள்ளத்தாக்கில் ஒரு பெரிய மாளிகையிலே பக் வாழ்ந்தது. மாளிகை நீதிபதி மில்லருக்குச் சொந்தம். அது சாலையை விட்டு உள்ளே தள்ளியிருந்தது. முன்னால் மரங்கள் ஓங்கி வளர்ந்திருந்தன. அவற்றால் மாளிகை பாதிக்குமேல் மறைக்கப்பட்டிருந்த போதிலும் அதன் நான்கு பக்கங்களிலுமிருந்த அகலமான தாழ்வாரத்தை வெளியிலிருந்தே ஓரளவு காணலாம். மாளிகையின் முன்புறத்திலே பசும்புல்வெளிகளுண்டு. பின்புறத்திலே இன்னும் விசாலமான இடமிருந்தது.

பெரிய லாயங்களும், திராட்சைக் கொடிகள் படர்ந்து ஊழியர்வீடுகளும், வரிசை வரிசையாக ஒழுங்காக அமைந்த புறவீடுகளாகிய விடுதிகளும், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் பழமரக்காடுகளும் அங்கே இருந்தன. இவைகளோடு அங்கே பொங்கியெழும் ஊற்றுக்கிணற்றிலிருந்து நீர் இறைக்க எந்திர அமைப்புக்களும், அவற்றின் பக்கத்திலே நீதிபதி மில்லரின் குமாரர்கள் காலையிலும் மாலையிலும் முழுகி விளையாடுவதற்காக சிமென்டால் கட்டிய குளமும் காட்சியளிக்கின்றன.

இந்தப் பரந்த நிலப்பகுதியிலே பக் அதிகாரம் செலுத்தியது. அது அங்கேயே பிறந்து அங்கேயே நான்காண்டுகள் வாழ்ந்திருக்கிறது. வேறு எத்தனையோ நாய்கள் அங்கே உண்டு என்பது மெய்தான். இவ்வளவு பெரிய இடத்திலே வேறு நாய்களும் இல்லாமலிருக்க முடியுமா? இருந்தாலும் அவையெல்லாம் ஒரு பொருட்டில்லை. எத்தனையோ நாய்கள் வரும், போகும். ஏதோ சில காலத்திற்கு நாய்ப்பட்டியிலே ஒரு மூலையிலே யாருடைய கவனத்திலும் படாமல் இருக்கும். ஜப்பான் தேசத்தைச் சேர்ந்த ஒரு வகை மொண்ணை மூக்குக் குள்ள ஜாதி நாயான டூட்ஸ், உரோமமில்லாத மெக்சிக்கோ நாட்டு மழுங்கை நாய் இசபெல் ஆகியவையெல்லாம் அப்படித்தான். அவற்றைப் பயமுறுத்தும் வேறு வகை நாய்களும் பத்து இருபதென்றிருந்தாலும் அவற்றோடு பக்கைச் சேர்த்து எண்ண முடியாது.

பக் வெறும் வீட்டு நாயல்ல; பட்டி நாயும் அல்ல. அதற்கு நீதிபதியின் இடமெல்லாம் சொந்தம். குளத்திலே அது முழுகிக் களிக்கும். நீதிபதியின் மக்களோடு வேட்டைக்குச் செல்லும். அந்திப்பொழுதிலும், அதிகாலையிலும் நீதிபதியின் குமாரிகளான மாலி , ஆலிஸ் இருவரும் உலாவச்சென்றால், அவர்களுக்குத் துணையாகப் புறப்படும்; குளிர்க் காலத்திலே இரவு வேளைகளில் நீதிபதியின் காலடியில் அவருடைய நூலகத்திலே கொழுந்து விட்டெரியும் கணப்புக்கு முன்னால் படுத்திருக்கும். நீதிபதியின் பேரப்பிள்ளைகள் அதன் முதுகில் சவாரி செய்வார்கள். அவர்களோடு பக் பசும்புல்வெளியே உருண்டு விளையாடும். லாயங்களுக்கு அருகிலோ, பழமரக்கூட்டங்களின் இடையிலோ அவர்கள் துணிந்து போகும்போது அவர்களுக்குக் காவலாக நிற்கும். மற்ற நாய்களின் மத்தியில் அது கம்பீரமாக நடை போடும். டூட்ஸ், இசபெல் ஆகிய நாய்களை அது கண்ணெடுத்தும் பாராது. நீதிபதி மில்லரின் இருப்பிடத்திற்கு அதுதானே ராஜா? ஊர்வன, பறப்பன எல்லாவற்றிற்கும் ராஜாவாக அது விளங்கியது. மக்களுங்கூட அதற்கு அடக்கந்தான்.

அதன் தந்தையின் பெயர் எல்மோ. செயின்ட் பெர்னாடு [2] என்ற பெரிய இனத்தைச் சேர்ந்த மிகப் பெரிய நாய். அது வாழ்ந்த காலத்திலே நீதிபதிக்கு அது இணைபிரியாத தோழன். இப்பொழுது பக் தந்தையின் ஸ்தானத்தை எட்டிப்பிடிக்கும் பக்குவத்திலிருந்தது. எல்மோவைப்போல் பக் அத்தனை பெரியதல்ல. எடை நூற்று நாற்பது ராத்தல் இருந்தாலும் சற்றுச் சிறியதுதான். அதன் தாயின் பெயர் ஷெப். அது ஸ்காட்லாந்து தேசத்துப்பட்டி நாய் வகையைச் சேர்ந்தது. சீராக வளர்ந்து எல்லோராலும் சீராகப் பாராட்டு பெற்றதால் பக்குக்கு ஒரு தனி மிடுக்குண்டு. அதனால் அது அரச தோரணையில் நடந்து வந்தது. எல்லா விதத்திலும் மனநிறைவு பெற்ற கனவானைப்போல் அது குட்டிப்பருவம் முதல் நான்காண்டுகள் வாழ்ந்து வந்தது. தன்னைப்பற்றி அதற்குத் தனிப் பெருமையும் உண்டு. தனக்கு மிஞ்சியவர் அந்தப் பக்கத்திலே இல்லையென்ற காரணத்தால் செருக்கடையும் நாட்டுப்புறச் சீமானைப் போல அது கொஞ்சம் அகம்பாவமும் கொண்டிருந்ததாகச் சொல்லலாம். ஆனால் செல்லமாக வளர்ந்து கொழுத்துக் கெட்டுப்போன வீட்டு நாயைப் போல அது கெட்டுப் போகவில்லை. வேட்டையாடுவதும், அதைப் போன்ற விளையாட்டுக்களும் பக் கொழுத்துப்போகாமல் தடுத்ததோடு அதன் தசைநார்களை வலுவடையவும் செய்தன. நீர் விளையாட்டு அதன் உடல் நலத்தை நன்றாகப் பாதுகாத்தது.

கி.பி. 1897-ஆம் ஆண்டிலே பக் இருந்த நிலை இதுவாகும். அந்தச் சமயத்திலேதான் தங்கம் கிடைக்கின்றதென்ற ஆசையால் மக்கள் தண்ணீர் உறைந்து பனிப்பாறையாகக் கிடக்கும் வடக்குப் பிரதேசத்தை நோக்கி விரையலானார்கள். பக் செய்தித்தாளைப் படித்ததில்லை. அதற்கு மானுவெலின் சேர்க்கை விரும்பத் தக்கதல்ல என்பதும் தெரியாது. தோட்டக்காரனுக்கு உதவி செய்யும் பணியாட்களுள் ஒருவன்தான் மானுவெல். அவனிடம் ஒரு பெரிய குறை உண்டு. சூதாட்டத்திலே அவனுக்குப் பைத்தியம். ஆனால் அதிலே அவனுக்கு எப்பொழுதும் தோல்விதான். வீட்டிலே மனைவியோடு பிள்ளை குட்டிகள் நிறைய இருந்தார்கள். அவர்களைக் காப்பாற்றவே அவனுக்குக் கிடைக்கும் ஊதியம் போதாது.

முந்திரிப்பழம் பயிர் செய்வோர் சங்கத்தின் கூட்டமொன்று ஒரு நாள் மாலையில் நடந்தது. அதற்கு நீதிபதி போயிருந்தார். பையன்கள் உடற்பயிற்சிச் சங்கம் ஒன்றை நிறுவுவதிலே ஈடுபட்டிருந்தார்கள். மானுவெலின் துரோகச் சிந்தனைக்கு நல்ல சமயம் கிடைத்தது. பக்கை அழைத்துக்கொண்டு அவன் பழமரக்கூட்டத்தின் வழியாகப் போவதை யாரும் பார்க்கவில்லை. கொஞ்ச தூரம் சுற்றிவிட்டு வருவதற்காகவே புறப்பட்டிருப்பதாக பக் எண்ணிக் கொண்டிருந்தது. காலேஜ் பாரக் என்ற பெயருடைய சிறிய ரயில்நிலையம் உண்டு. கொடி காட்டினால் தான் அங்கே ரயில் நிற்கும். அவ்விடத்திலே ஒரு மனிதன் மானுவெலைத் தனியாகச் சந்தித்து என்னவோ பேசினான்; அவனுக்குப் பணமும் கொடுத்தான்.

“சரக்கை நல்லாக் கட்டிக்கொடு” என்று அந்த மனிதன் உறுமினான். ஒரு தடிப்பான கயிற்றைக் கொண்டு பக்கின் கழுத்துப் பட்டைக்கடியிலே கழுத்தைச் சுற்றி மானுவெல் இரட்டையாகக் கட்டினான்.

“இந்தக் கயிற்றை இறுக்கினால் மூச்சுதிணறிப்போகும்” என்றான் மானுவெல். அது சரி’ என்று மறுபடியும் உறுமினான் அந்த மனிதன்.

கழுத்திலே கயிற்றைக் கட்டியதைப் பக் ஆட்சேபிக்காமல் அமைதியாக ஏற்றுக்கொண்டது. இதுமாதிரி முன்பு யாரும் கட்டியதில்லை. இருந்தாலும் பழகிய மனிதர்களிடத்திலே அதற்கு நம்பிக்கை உண்டு. ஆனால் மானுவெல் கயிற்றை அந்தப் புதுமனிதன் கையில் கொடுத்தவுடனே பக் பயங்கரமாக உறுமலாயிற்று. தனக்கு அந்தச் செய்கை பிடிக்கவில்லை என்பதைக் குறிப்பாக அப்படிக் காட்டியது. அந்தக் குறிப்பே போதும் என்பது அதனுடைய எண்ணம். ஆனால், கயிறு தனது கழுத்தை நெரிக்கத் தொடங்கியதை அது எதிர்பார்க்கவில்லை. அதற்கு மூச்சு திணறியது. புதுமனிதன் மேல் பக் கோபத்தோடு பாய்ந்தது. அதன் கழுத்தைப்பிடித்து அவன் அழுத்தினான். அதே சமயத்தில் திடீரென்று அதை மல்லாந்து விழுமாறு தள்ளிவிட்டான். உடனே கயிறு மேலும் குரூரமாகக் கழுத்தை இறுக்கத் தொடங்கியது. பக் ஆத்திரத்தோடு திமிறிப்பார்த்தது; முடியவில்ல; அதன் நாக்கு வெளியே தொங்கிவிட்டது. மூச்சுவிட முடியாமல் நெஞ்சு துடித்தது. அதன் வாழ்க்கையிலெ ஒரு காலத்திலும் யாரும் இப்படி கொடுமையாக நடத்தியதில்லை. இப்பொழுது அதன் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கும் கோபத்தைப் போல் பெரிய கோபம் அதற்கு எந்தக் காலத்திலும் வந்ததில்லை. ஆனால் அதன் பலமெல்லாம் ஒடுங்கிவிட்டது. கண்கள் சோர்ந்தன. ரயிலை அங்கே நிறுத்தியதும், மானுவெலும் அப்புது மனிதனும் மூட்டை முடிச்சு வண்டியிலே அதைத் தூக்கிப் போட்டதும் பக்குக்குத் தெரியவேயில்லை. அது நினைவிழந்து கிடந்தது.

அதற்கு நினைவு வந்தபோது அதன் நாக்கிலே நோவெடுப்பதையும், ஏதோ ஒரு வாகனத்திலே ஆடிக் குலுங்கிச் சென்று கொண்டிருப்பதையும் மெதுவாக உணர்ந்தது. ரயில் எஞ்சின் வீறிட்டுக் கத்தியபோதுதான் அதற்கு நிலைமை புலனாயிற்று. நீதிபதியுடன் அது பல தடவை ரயிலில் போயிருந்தது. அதற்கு மூட்டை முடிச்சுப் பெட்டியின் அனுபவம் முன்பே உண்டு.

பக் கண்களைத் திறந்தது. பலவந்தமாகக் கடத்திச் செல்லப்படுகின்ற ஒரு அரசனுக்கு வருகின்ற கட்டுக்கடங்காத கோபம் அதன் கண்களில் கொழுந்துவிட்டது. புதுமனிதன் அதன் கழுத்தைப் பிடித்து அழுத்தப்பாய்ந்தான். ஆனால் பக் முந்திக் கொண்டது. அவன் கையைக் கவ்விப் பிடித்துக் கடித்தது. மறுபடியும் மூச்சுதிணறி நினைவு தப்பிவிழும் வரையில் அது அவன் கையை விடவே இல்லை. கழுத்திலுள்ள கயிறு மீண்டும் அதன் மூச்சைத் திணற வைத்துவிட்டது.

அந்தப் பெட்டியிலுள்ள மூட்டை முடிச்சுகளைக் கண்காணிக்க ஒருவனிருந்தான். அங்கே ஏற்பட்ட போராட்டம் அவன் கவனத்தை இழுத்தது. புது மனிதன் காயமுற்ற தன் கையை மறைத்துக் கொண்டு, “இதற்கு அடிக்கடி வலிப்பு வரும். அதனாலே ஸான் பிரான்சிஸ் கோவுக்கு முதலாளி கொண்டு போகச் சொன்னார். அங்கே ஒரு டாக்டர் இதற்கு மருந்து கொடுப்பாராம்” என்று அவனிடம் விளக்கம் கூறினான்.

அந்த இராப்பிரயாணத்தைப் பற்றி அவன் அடுத்த நாள் ஸான் பிரான்சிஸ்கோவில் ஓர் உணவுவிடுதியின் பின்புறத்திலிருந்த கொட்டகைக்குள் உட்கார்ந்து கொண்டு பிரமாதமாகப் பேசிக் கொண்டான்.

‘இத்தனை சிரமத்துக்கும் ஐம்பது டாலர்தானா? கையிலே ரொக்கமாக ஆயிரங் கொடுத்தாலும் இனிமேல் இதைச் செய்ய மாட்டேன்” என்று அவன் முணுமுணுத்தான்.
அவன் கையில் கட்டியிருந்த கைக்குட்டை ரத்தம் தோய்ந்து கிடந்தது. அவனுடைய காலுடையின் வலது பக்கத்திலே ஒரே கிழிசல்.

“அந்தப் பயலுக்கு எத்தனை கிடைத்தது?” என்று விடுதிக்காரன் கேட்டான்.

“நூறு டாலர். அதிலெ கொஞ்சம்கூடக் குறைக்க முடியவில்லை ” விடுதிக்காரன் கணக்கு போடத் தொடங்கினான்.

‘அப்போ மொத்தம் நூற்றைம்பது டாலர் ; பரவாயில்லை; அந்தவிலை பெறும்.”

திருடி வந்தவன் தன் கையில் சுற்றியிருந்த துணியை மெதுவாக அவிழ்த்துப்பார்த்தான். ‘நாய்க்கடியாலே எனக்கு வெறி பிடிக்காமலிருந்தால்…”

“உனக்கு எதற்கு வெறி பிடிக்கிறது? நீதான் தூக்கிலே சாகப் பிறந்திருக்கிறாயே!” என்று சொல்லிவிட்டு விடுதிக்காரன் சிரித்தான். “சரி, கொஞ்சம் எனக்கு உதவிக்கு வா.”

உள்ளத்தில் ஒரே திகைப்பு; கழுத்திலும் நாக்கிலும் பொறுக்க முடியாத வலி; உயிரோ பாதி போய்விட்டது – இந்த நிலையிலே கிடந்த பக் அவ்விருவரையும் எதிர்த்து நிற்க முயன்றது. ஆனால் திரும்பத் திரும்பக் கயிற்றை முறுக்கி அதைத் திணற வைத்தார்கள். மூச்சு தப்பி விழும்படி செய்தார்கள். இப்படிச் செய்து அதன் கழுத்திலிருந்த பித்தளைப்பட்டையை அரத்தால் அராவி எடுத்து விட்டார்கள். பிறகு கயிற்றையும் அவிழ்த்துவிட்டு பக்கைச் சட்டங்களடித்த ஒரு கூண்டிற்குள் அடைத்தார்கள்.

கோபத்தோடும், தன் பெருமை குலைவுற்றதே என்று ஆத்திரத்தோடும் பக் அதற்குள்ளே இரவெல்லாம் படுத்துக் கிடந்தது. அதற்கு ஒன்றும் புரியவில்லை. இந்த மனிதர்களின் நோக்கந்தான் என்ன? இந்தக் கூண்டிற்குள்ளே எதற்காக அதை அடைத்து வைத்திருக்கிறார்கள்? ஏதோ தனக்குத் தீங்கு வரப்போகிறது என்று மட்டும் அது உணர்ந்து நைந்தது. இரவிலே பல தடவைகளில் அந்தச் சாளையின் கதவு திறப்பது போலச் சத்தம் கேட்கும் போதெல்லாம் நீதிபதியையோ அல்லது அவர் பையன்களையோ எதிர்பார்த்துப் பக் துள்ளியெழுந்தது. ஆனால் ஒவ்வொரு தடவையும் மெழுகுவர்த்தியின் மங்கலான வெளிச்சத்திலே விடுதிக்காரனின் உப்பிய முகந்தான் கண்ணை உறுத்தியது. ஒவ்வொரு தடவையும் பக்கின் தொண்டையிலே துடித்த மகிழ்ச்சிக்குரல் பயங்கர உறுமலாக மாறி வெளிப்பட்டது.

விடுதிக்காரன் அதைத் தனியே விட்டுவிட்டுப் போய்விட்டான். காலையில் யாரோ நான்கு பேர் வந்து சட்டக்கூண்டைத் தூக்கினார்கள். அவர்களுடைய கந்தல் உடையையும் குரூரப் பார்வையையும் கண்டதும் அவர்களும் தனக்குத் தொல்லை கொடுக்க வந்தவர்களே என்று பக் தீர்மானித்தது. சட்டக் கூண்டிலுள்ள கம்பைகளின் வழியாக அது கோபாவேசத்தோடு குமுறியது. அதைக் கண்டு அவர்கள் சிரித்தார்கள். கூண்டிற்குள் தடிகளை நீட்டினார்கள். பக் அவற்றைப் பல்லால் கடிக்க முயன்றது. அப்படி அது கடிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள் என்பதைப் பக் சற்று நேரத்தில் உணர்ந்துகொண்டு சட்டக்கூண்டின் நடுவில் உம் என்ற முகத்தோடு படுத்துக்கொண்டது. அவர்கள் கூண்டைத் தூக்கி ஒரு வண்டியில் வைத்தார்கள்.

பிறகு அந்தக் கூண்டு பல கைகள் மாறலாயிற்று. வண்டியிலும், நீராவிப்படகிலும், எக்ஸ்பிரஸ் ரயிலிலுமாகப் பக் பிரயாணம் செய்தது.

இரண்டு நாள் இரவு, பகலாக ரயில் ஓடிற்று. அந்த இரண்டு நாட்களும் பக் உணவைத் தொடவே இல்லை; தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. எக்ஸ்பிரஸ் ரயிலிலுள்ள பணியாட்கள் அதற்குப் பல வகைகளில் தொல்லை கொடுத்தார்கள். சட்டக்கூண்டிலுள்ள கம்பைகளின் வழியாக பக் கோபத்தால் வாயில் நுரை தள்ளத்தள்ளப் பாயும் போதெல்லாம் அவர்கள் உரத்துச் சிரித்தார்கள். அவர்களும் நாய்களைப் போல உறுமியும் குரைத்தும் கேலி செய்தார்கள். அதைக் கண்டு பக் மேலும் மேலும் கோபங்கொண்டது. தனது அந்தஸ்துக்குப் பங்கம் ஏற்பட்டுவிட்டதாக உணர்ந்து குமுறிற்று. வயிற்றுப்பசியை அது பொருட்படுத்தவில்லை. ஆனால் தாகம் வாட்டியது; அதன் கோபத்தை உச்சநிலைக்குக் கொண்டு சென்றது. பக் நுட்பமான உணர்ச்சிகளோடு கூடிய நாயாகையால், இந்தக் கொடுமைகளெல்லாம் சேர்ந்து அதன் உடலைக் கொதிப்பேறச் செய்தன. வறண்டு வீங்கிப்போன நாவும், கழுத்தும் இந்தக் கொதிப்பை மேலும் அதிகப்படுத்தின.

அதற்கு ஒரு வகையில் கொஞ்சம் ஆறுதல்; கழுத்திலே கயிறு இல்லை. அதனால் அல்லவா அவர்கள் அதை மடக்கிவிட்டார்கள்? இனிமேல் அவர்களை ஒரு கை பார்க்கலாம். இனி யாரும் அதன் கழுத்தில் கயிற்றைக் கட்ட முடியாது. அதற்கு இடம் கொடுப்பதில்லை என்று அது உறுதி கொண்டது. இரண்டு நாள் இரவு பகலாக அது பட்டினி ; தண்ணீர் கூடக் குடிக்கவில்லை. அந்த இரண்டு நாட்களிலும் அதுபட்ட தொல்லைகளால் அதன் உள்ளத்திலே கடுஞ் சீற்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. யாராவது இனி அதற்குத் துன்பம் கொடுக்க வந்தால் அவர்கள் கதி அதோகதிதான். அதன் கண்கள் இரத்தம் போலச் சிவந்தன. பக் கொதித்துக் குமுறும் அரக்கனாக மாறிவிட்டது. அந்த நிலையிலே நீதிபதி கூட அதை அடையாளம் கண்டு கொள்ள முடியாது. சீயட்டல் [3] என்ற இடத்திலே அதை ரயிலிலிருந்து இறக்கிவிட்டதும், எக்ஸ்பிரஸ் பணியாளர் களுக்கு ஒரு பெரும் பாரம் நீங்கியது போல் இருந்தது.

ரயிலிலிருந்து சட்டக்கூண்டை வண்டியிலே எடுத்துச் சென்றார்கள். பிறகு அதை நான்கு மனிதர்கள் வெறுப்போடு ஒரு முற்றத்திற்குத் தூக்கிச்சென்றார்கள். சிவப்பு மேலங்கியிட்ட ஒரு தடியன் அந்தக் கூண்டை ஏற்றுக்கொண்டான். அடுத்தபடியாகத் தன்னை வதைக்கப்போகிறவன் அவன்தான் என்று பக் ஊகித்துணர்ந்து கொண்டது. அது சட்டக்கூண்டிலுள்ள கம்பைகளின் வழியாக உறுமிக்கொண்டு அவன் மேல் மூர்க்கத்தோடு பாய முனைந்தது. அந்த மனிதன் கடுகடுத்த முகத்தோடு சிரித்தான்; கைக்கோடரி ஒன்றையும், பெரிய தடி ஒன்றையும் அவன் கொண்டு வந்தான்.

‘அந்த நாயைக் கூண்டிலிருந்து வெளியே விடப் போகிறாயா?” என்று கூண்டைத் தூக்கி வந்தவர்களில் ஒருவன் கேட்டான்.

‘ஆமாம்” என்று சொல்லிக்கொண்டே அந்த மனிதன் கைக்கோடரியால் சட்டக்கூண்டை உடைக்கத் தொடங்கினான்.

கூண்டைத் தூக்கி வந்த நால்வரும் உடனே வேகமாக ஓடி முற்றத்தைச் சுற்றியிருந்த உயரமான சுவரின் மேல் ஏறிக் கொண்டார் கள். அங்கிருந்து என்ன நடக்கிறதென்று பார்க்கலானார்கள்.

கோடரி விழுகின்ற இடத்தைப் பார்த்துப் பார்த்துப் பக் உறுமிக்கொண்டும், சீறிக்கொண்டும் பாய்ந்தது. சிவப்பு மேலங்கிக்காரனைத் தாக்க அதற்கு ஒரே ஆத்திரம்.

பக் வெளியே வரக்கூடிய அளவுக்குச் சட்டக்கூண்டில் அவன் வழி செய்துவிட்டான். அதே சமயத்தில் அவன் கோடரியை எறிந்து விட்டுத் தடியைக் கையில் எடுத்துக்கொண்டான்.

சிவந்த கண்களோடு பக் ஒரு பேய் போலக் காட்சியளித்தது. அதன் உரோமம் சிலிர்த்து நின்றது. கோபத்தால் வாயில் நுரை தள்ளியது. சிவந்த கண்களிலே ஒரு வெறி பளிச்சிட்டது. சீற்றமே உருவாகத் தனது முழுப்பலத்தோடு பக் அவன் மேல் பாய்ந்தது. இரண்டு நாள் இரவு பகலாக அதன் உள்ளத்திலே குமுறிக்கொண்டிருந்த கோபாவேசம் அதன் பாய்ச்சலுக்கு ஒரு தனி வேகம் ஊட்டியது. ஆனால் அந்த மனிதன் மேல் பாய்ந்து கவ்வுவதற்கு முன்னால் அதற்கு ஒரு பெரிய அதிர்ச்சி ஏற்பட்டது. அதன் திறந்த வாய் தானாக மூடிக்கொண்டது. மறுகணம் பக் தரையில் மல்லாந்து விழுந்தது. இதுவரை அதன் வாழ்க்கையிலே அதை யாரும் தடியால் அடித்ததில்லை. அதனால் அதற்கு ஒன்றும் விளங்கவில்லை. சீறிக்கொண்டும், வீறிட்டுக்கொண்டும் அது மறுபடியும் எழுந்து நின்று பாய்ந்தது. மறுபடியும் அதே பேரதிர்ச்சி. பக் சோர்ந்து தரையில் வீழ்ந்தது. தனக்கு ஏற்படும் அதிர்ச்சிக்கு அந்தத் தடிதான் காரணமென்று அப்பொழுதுதான் அதற்குத் தெரிந்தது. ஆனால், அதன் கோபம் வெறியாக மாறிவிட்டது. எதையும் பொருட் படுத்தாமல் அது பத்துப்பன்னிரண்டு முறை விடாமல் தாக்கியது. ஒவ்வொரு முறையும் தடியைக் கொண்டு அவன் அதைத் தாக்கிக் கீழே வீழ்த்தினான்.

பலமாக ஒரு தடவை ஓர் அடி வீழ்ந்தது. பக்கின் உணர்வு கலங்கிற்று. அதன் மூக்கிலும், வாயிலும், காதுகளிலும் இரத்தம் வழிந்தோடியது. உடம்பெல்லாம் இரத்தக்கறை. பக் தடுமாறிக் கொண்டு எழுந்து நின்றது. அந்தச் சமயத்தில் அவன் அதன் மூக்கின் மேல் பயங்கரமாக ஓங்கி அடித்தான். அது வரையில் பக்கிற்கு ஏற்பட்ட வலியெல்லாம் சேர்ந்தாலும் அப்பொழுது ஏற்பட்ட வலிக்கு ஈடாகாது. பக் மூர்க்கத்தோடு சிங்கம் போலக் கர்ஜித்துக் கொண்டு அவன் மேல் பாய்ந்தது. அந்த மனிதன் பக்கின் குரல்வளையைத் தனது கையால் பிடித்து அதை மேலும் கீழுமாகத் திருகினான். தலைகீழாகப் பக் விழுமாறு அதைப் பிடித்து உந்தினான்.

மீண்டும் ஒரு முறை பக் பாய்ந்தது. சரியான இடம் பார்த்து அந்த மனிதன் கடைசி முறையாக ஓங்கி அடித்தான். பக்கின் உணர்வு ஒடுங்கிவிட்டது; முற்றிலும் நினைவு தப்பி அது நிலத்தில் சாய்ந்தது.

சுவரின் மேல் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்த ஒருவன் “நாயைப் பழக்கி வசப்படுத்த இவனைப் போல் யாருமில்லை என்று உற்சாகமாகக் கூவினான். மற்றொருவன் அவன் சொன்னதை ஆமோதித்தான். பிறகு அந்நால்வரும் வண்டியில் ஏறிக்கொண்டு போய்விட்டார்கள்.

மெதுவாக பக்கிற்கு நினைவு வந்தது. ஆனால் அதன் உடம்பிலே பலம் சிறிதுமில்லை. விழுந்த இடத்திலேயே அது அப்படியே படுத்துக்கிடந்தது. படுத்துக்கொண்டே சிவப்பு மேலங்கிக்காரனைக் கவனிக்கலாயிற்று.

சட்டக்கூண்டைப் பற்றியும், அதில் அடைபட்டிருக்கும் நாயைப் பற்றியும், உணவுவிடுதிக்காரன் எழுதியிருந்த கடிதத்தைக் குறித்தும் அவன் எண்ணமிட்டுக் கொண்டிருந்தான். இந்த நாய்க்குப் பக் என்று பெயராம். ‘டேய், பக், நாம் சண்டை போட்டது போதும்; இனி அதை மறந்துவிடுவோம். நீ நல்ல விதமாக நடந்துகொண்டால் எல்லாம் சரியாக நடக்கும். இல்லாவிட்டால் தோலை உரித்து விடுவேன், தெரிஞ்சுதா?”

இப்படிச் சொல்லிக்கொண்டே அவன் கொஞ்சமும் அச்சமில்லாமல் பக்கின் தலையின் மேல் தட்டிக்கொடுத்தான். அவன் கைபட்டதும் பக்கின் உரோமம் சிலிர்த்தது. இருந்தாலும் பக் எதிர்ப்பு காட்டவில்லை. அவன் தண்ணீர் கொண்டு வந்து வைத்தான். அது ஆவலோடு குடித்தது. பிறகு அவன் பச்சை இறைச்சித்துண்டுகளை நிறையப் போட்டான். ஆவலோடு அவற்றை அது விழுங்கிற்று.

நன்றாக அடிபட்டிருந்த போதிலும் பக் மனமுடைந்து போகவில்லை. தடிக்கு முன்னால் அதன் வல்லமை பலிக்காது என்று அது தெளிவாகத் தெரிந்து கொண்டது. இந்தப் படிப்பினையை அது தனது வாழ்க்கையில் என்றும் மறக்கவேயில்லை. அந்தத் தடி ஒரு பெரிய உண்மையைப் புலப்படுத்திற்று. காட்டுத்தனமான ஆதி நிலையின் கொடிய ஆட்சியை அது காட்டியது. வாழ்க்கை அது முதல் குரூரமான தோற்றமெடுத்தது. அதைப் பக் அச்சமில்லாமல் எதிர்த்து நிற்கலாயிற்று. அதனுள்ளே மறைந்து கிடந்த அதன் இயல்பான சூழ்ச்சித்திறமைகளெல்லாம் மேலெழுந்தன. நாட்கள் செல்லச் செல்லச் சட்டக்கூண்டுகளிலும், கயிற்றில் கட்டப்படும் வேறு பல நாய்கள் வந்து சேர்ந்தன. சில நாய்கள் அடக்கமாய் இருந்தன. சில உறுமிக்கொண்டும், சீறிக்கொண்டும் வந்தன. அவையெல்லாம் அந்தச் சிவப்பு மேலங்கிக்காரனுடைய அதிகாரத்திற்குப் பணிந்து போவதைப் பக் கவனித்தது.

ஒவ்வொரு தடவையும் தடியடி நடந்த போது ஒரு விஷயம் அதன் மனதில் நன்றாகப் பதிந்தது; தடியை வைத்துக்கொண்டிருக்கும் மனிதன் இட்டதுதான் சட்டம். அவனிடம் அன்பு கொள்ளாவிட்டாலும் அவனுக்குக் கீழ்படிந்துதான் ஆக வேண்டும். ஆனால், அடிபட்ட பல நாய்கள் பின்னால் அவனிடத்தில் வாலைக் குழைத்துக்கொண்டும், அவன் கையை நக்கிக்கொண்டும் அன்பு காட்டுவதைப் பார்த்த பிறகு பக் அவனிடம் அன்பு காட்டும் குற்றத்தைச் செய்யவில்லை. புதிதாக வந்த நாய்களில் ஒன்றே ஒன்று அவனிடத்திலே அன்பு காட்டாததோடு அவனுக்குக் கீழ்ப்படியவும் மறுத்தது. அது கடைசியில் கொல்லப்பட்டதையும் இந்தப் போரில் வெற்றி யாருக்கு என்பதையும் பக் பார்த்தது.

அவ்வப்போது பல புதிய மனிதர்கள் வந்தார்கள்; சிவப்பு மேலங்கிக்காரனிடம் எப்படி எப்படியோ பேசினார்கள். அவனிடம் பணமும் கொடுத்தார்கள்; திரும்பிப் போகும்பெழுது ஒன்றிரண்டு நாய்களையும் கொண்டு போனார்கள். அந்த நாய்கள் எங்கு போயினவென்று தெரியாமல் பக் ஆச்சரியத்தில் மூழ்கியது. அவை திரும்பி வரவேயில்லை. எதிர்காலத்தைப் பற்றி அதற்குப் பெரிய பயம் ஏற்பட்டது. ஒவ்வொரு தடவையும் தன்னை யாரும் தேர்ந்தெடுக்காததைப் பற்றி அதற்கு மகிழ்ச்சிதான்.
ஆனால் கடைசியில் அதன் முறையும் வந்தது. கொச்சை கொச்சையாகப் பேசிக்கொண்டு, ஒட்டிய கன்னமும் உலர்ந்த மேனியுமாக ஒரு சிறிய மனிதன் வந்து சேர்ந்தான். பக்கின் மேல் அவன் நாட்டம் விழுந்தது.

“டேய், இந்தப் போக்கிரி விலை என்ன?”

“முந்நூறு டாலர். கொள்ளை மலிவு’ என்று உடனே சொன்னான் சிவப்பு மேலங்கிக்காரன். அரசாங்கப் பணந்தானே, பெரோல்ட்? அதைப் பற்றி உனக்கு என்னத்திற்குத் தயக்கம்?”

பெரோல்ட் பல்லைக் காட்டினான். நாய்களுக்கு என்றுமில்லாத கிராக்கி; அதனால் விலை மிக மிக ஏறிவிட்டது. அதை நினைத்துப் பார்த்தால் இவ்வளவு நல்ல நாய்க்கு முந்நூறு டாலர் அதிகமில்லை. கானடாதேசத்து அரசாங்கத்திற்கு அது எந்த வகையிலும் நட்டமாகாது; அரசாங்கக் கடிதங்கள் விரைவாகச் செல்லுவதற்கே அந்த நாய் சாதகமாகும். பெரோல்ட்டுக்கு நாய்களைப் பற்றித் தெரியும். பக் ஆயிரத்தில் ஒன்று என்று அவன் கண்டு கொண்டான். ‘பத்தாயிரத்தில் ஒன்று என்றும் சொல்லலாம்” என்று அவன் எண்ணிக் கொண்டான்.

பணம் கைமாறியதைப் பக் பார்த்தது. கர்லியையும், பக்கையும் அந்தச் சிறிய மனிதன் பிடித்துக்கொண்டான். கர்லி நியூபவுண்டு லாந்து நாய்; நல்ல சுபாவமுடையது.

சிவப்பு மேலங்கிக்காரனை அதற்கு மேல் பக் என்றுமே பார்க்கவில்லை. நர்வால் என்ற கப்பலின் மேல்தட்டில் அந்த நாய்கள் நின்றன. சீயட்டல் மெதுவாக மறையலாயிற்று. மிதவெப்பமான தெற்குப்பிரதேச வாழ்க்கையும் அத்துடன் முடிந்தது.

பக்கையும் கர்லியையும் பெரோல்ட் கீழ்த்தளத்திற்குக் கொண்டு போனான். அங்கே பூதம் போலப் பிரான்சுவா அமர்ந்திருந்தான். பக்குக்கு இந்த இரண்டு பேரும் புதுமாதிரி மனிதர்கள். அவர்களைப் போன்ற பல புதிய மனிதர்களை இனி அது பார்க்கப் போகிறது. அவர்களிடத்திலே அதற்கு அன்பு பிறக்கவில்லையென்றாலும் அவர்களிடம் அதற்கு உண்ைைமயான மரியாதை ஏற்பட்டது. பெரோல்ட்டும், பிரான்சுவாவும் நல்லவர்கள்; நியாயம் வழங்குவதிலே அமைதியும் நடுநிலைமையும் உடையவர்கள்; நாய்களால் அவர்களை ஏமாற்ற முடியாது. இந்த விபரங்களைப் பக் விரைவில் தெரிந்து கொண்டது.

நர்வாலின் கீழ்த்தளத்திலே பக்கும் கர்லியும் வேறிரண்டு நாய்களுடன் சேர்ந்தன. அவற்றில் ஒன்று மிகப்பெரியது; உறை பனி போல வெண்ணிறமானது. நார்வே தேசத்துக்கு வடக்கே ஆர்க்டிக் சமுத்திரத்திலுள்ள ஸ்பிட்ஸ்பர்கன் தீவுக் கூட்டத்தைச் சேர்ந்தது. திமிங்கல வேட்டையாடுபவர்களின் தலைவன் ஒருவன் அதை முதலில் கொண்டு வந்தான். பிறகு அது புவியியல் ஆராய்ச்சி செய்கிறவர்களிடமிருந்தது.

அது சிநேகமாகத்தான் இருக்கும்; ஆனால், அதே சமயத்தில் அதன் மனத்திலே வஞ்சனை இருக்கும்; வெளித்தோற்றத்திற்குச் சிரிப்பது போலிருந்தாலும் மனத்திலே ஏதாவது சூழ்ச்சி செய்து கொண்டிருக்கும். முதல் தடவையாக அந்த நாய்களெல்லாம் கூடி ஓரிடத்திலேயிருந்து உணவு கொள்ளுகிறபோதே அது பக்கின் பங்கிலிருந்து திருடிவிட்டது. அதைத் தண்டிக்க பக் பாய்கின்ற அதே சமயத்தில் பிரான்சுவாவின் சாட்டை ஓசையிட்டது; குற்றம் செய்த அந்த நாய்க்குத் தண்டனை கிடைத்துவிட்டது. பக்குக்குச் சிரமமில்லாமல் எலும்புத்துண்டு திரும்பக் கிடைத்தது. பிரான்சுவா நேர்மையுள்ளவன் என்று பக் தீர்மானித்தது. அது முதல் பக்குக்கு அவனிடம் மதிப்பு உயரலாயிற்று.

புதிய நாய்களில் மற்றொன்று சிடுமூஞ்சி; முகத்தை உம்மென்று வைத்துக் கொண்டிருக்கும்; நெருங்கிப் பழகாது. கர்லி அதனருகில் போனதே அதற்குப்பிடிக்கவில்லை. தனியாக இருக்கவே அதற்குப் பிரியம். டேவ் என்பது அதன் பெயர். உணவு கிடைக்கும்போது அது உண்ணும்; பிறகு தூங்கும் ; இடையிடையே கொட்டாவிவிடும். அதற்கு எதிலுமே அக்கறையில்லை. குவீன் ஷார்லட் சவுண்டு [4] என்ற கடற்பகுதியைக் கப்பல் கடக்கும் போது ஏற்பட்ட பேயாட்டத்தைக் கூட அது கவனிக்கவில்லை. பக்கும் கர்லியும் கப்பலின் ஆட்டத்தைக் கண்டு பயந்து பரபரப்படைந்தன. ஆனால் அதுவோ சற்றுத் தலையைத் தூக்கிப் பார்த்து ஒரு கொட்டாவி விட்டு விட்டு மறுபடியும் உறங்கத் தொடங்கிற்று.

இரவு பகலாகக் கப்பல் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு நாளைப் போலவே மற்றொரு நாளும் இருந்ததென்றாலும், குளிர் அதிகமாகிக்கொண்டு வருவதைப் பக் நன்றாக உணர்ந்தது. கடைசியாக ஒருநாள் காலையில் கப்பல் நிலை சேர்ந்தது. உடனே எங்கும் ஒரு பரபரப்பு. நாய்களை வாரிலே கட்டிப் பிடித்துக்கொண்டு பிரான்சுவா கப்பலின் மேல் தளத்திற்கு வந்தான். பக் அங்கே அடி வைத்தவுடனே ஏதோ மணல் போன்ற பொருளுக்குள்ளே கால் புதைந்தது. உஸ் என்று சீறிக்கொண்டு அது துள்ளிக் குதித்தது. உறைபனி எங்கும் விழுந்து கொண்டிருந்தது. பக் தன் உடம்பைக் குலுக்கியது; ஆனால் மேலும் மேலும் பனி விழுந்தது. ஆச்சரியத்தோடு பக் அதை முகர்ந்து பார்த்தது; பிறகு நாக்கால் நக்கிப்பார்த்தது. சுரீர் என்று நாக்கிலே குளிர் ஏறிற்று. வாயில் கவ்விய ஒரு சிறு பனித்துண்டை அடுத்த கணம் காணோம். பக் திகைத்தது. மறுபடியும் பனிக்கட்டியை வாயில் போட்டுப் பார்த்தது. மீண்டும் அதே அனுபவந்தான். பக்கைக் கவனித்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் வாய்விட்டு உரத்துச் சிரித்தார்கள். பக் நாணத்தால் பீடிக்கப்பட்டது; உறைபனியைப் பற்றி அதற்கு அதுவே முதல் அனுபவம்.

[1] இது அமெரிக்க ஐக்கிய நாட்டின் ஒரு பகுதியான காலிபோர்னியாவில் உள்ளது
[2] செயின்டு பெர்னார்டு கணவாய் என்பது ஐரோப்பாவில் ஆல்ப்ஸ் மலையில் 8000 அடிக்கு மேற்பட்ட உயரத்தில் அமைந்தது. அங்குள்ள ஓர் இனத்தைச் சேர்ந்த நாய்க்கு செயின்டு பெர்னார்டு நாய் என்று பெயர். அது நல்ல உடற்கட்டும். பெரிய தோற்றமும், மிகுந்த அறிவும் உடையது. பனிப்பிரதேசத்தில் வழி தப்பியவர்களைக் கண்டு பிடிக்க அதைப் பயன்படுத்துவர்.
[3]. அமெரிக்க ஐக்கிய நாட்டில் வாஷிங்டனில் உள்ள நகரம்; பசிபிக் துறைமுகங்களில் ஒன்று.
[4] இது வான்கூவர் தீவின் வடகிழக்குப்பகுதியைக் கானடாவிலிருந்து பிரிக்கிறது.

– தொடரும்…

– கானகத்தின் குரல் (நாவல்),”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.

– நன்றி: https://www.projectmadurai.org

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *