கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 8, 2024
பார்வையிட்டோர்: 1,137 
 
 

2. கோரைப்பல், குறுந்தடி ஆட்சி | 3. பூர்வீக விலங்குணர்ச்சி | 4. தலைமைப்பதவி

பூர்வீகநிலையிலேயுள்ள விலங்குணர்ச்சி பக்கினிடத்திலே மிக வலிமையோடிருந்தது. பனிப்பாதையிலே சறுக்கு வண்டியிழுக்கும் கடுமையான வாழ்க்கை ஏற்பட்டதால் அந்த உணர்ச்சி மேலும் மேலும் வளர்ந்தது. ஆனால் அவ்வளர்ச்சி மறைமுகமாகவே நடைபெற்றது. அதனிடத்திலே புதிதாகத் தோன்றியுள்ள தந்திர உணர்ச்சியால் அதற்கு வாழ்க்கையிலே ஒரு சமநிலையும், கட்டுப்பாடும் பிறந்தன. புதிய வாழ்க்கைக்குத் தன்னைப் பக்குவப்படுத்திக்கொண்டிருந்த பக் சண்டைக்குப் போவதை அறவே விலக்கியது; தானாகவே சண்டை வந்து சேர்ந்தாலும் கூடுமான வரையில் அதை எப்படியாவது தவிர்க்கவே முயலும். அதன் போக்கிலே ஒரு நிதானம் தனிப்பண்பாக அமையலாயிற்று. அவசரப்பட்டு அது எதையும் செய்து விடாது. அதற்கும் ஸ்பிட்ஸுக்குமிடையிலே வளர்ந்திருந்த கடுமையான வெறுப்பினாற்கூட அது பொறுமையிழந்து குற்றமான செயலொன்றும் புரியவில்லை.

தலைமைப்பதவியிலே தனக்குப் போட்டியாக, பக் தோன்றியுள்ளதென்பதை யூகித்துக்கொண்டு , ஸ்பிட்ஸ் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கோபத்தோடு தனது பல்லைக் காட்டத் தவறாது. வேண்டுமென்றே அது பக்குக்குத் தொல்லை கொடுக்க முயலும்; எப்படியாவது அதனுடன் சண்டையிட வேண்டுமென்று பார்க்கும். அப்படிச் சண்டை உண்டாகுமானால் அவைகளுள் ஒன்று சாவது நிக்கயம்.

பிரயாணத்தின் தொடக்கநிலையிலேயே அவ்விரண்டிற்கும் சண்டை மூண்டிருக்கும். ஆனால் என்றுமே ஏற்படாத ஒரு புதிய சம்பவத்தால் அந்தச் சண்டை தடைபட்டுவிட்டது. அன்றையப் பகல் முடிவடையவே ‘ல பார்ஜ்’ என்ற ஏரியின் கரையில் தங்க வேண்டியதாயிற்று. பனிக்கட்டி வேகமாக விழுந்து கொண்டிருந்தது. கூரிய கத்தியைப்போலக் குளிர்காற்று உடம்பிலே பாய்ந்தது; இருளும் சூழ்ந்து கொண்டது. இந்த நிலையிலே முகாம் போட இடந்தேடினார்கள். ஏரியை விட்டு மறுபுறம் திரும்பினால் சுவர்போல் ஒரே செங்குத்தான குன்று நின்றது. அதனால் அந்த ஏரியின் மேல் மூடியிருந்த பனிக்கட்டியின் மேலேயே பெரோல்ட்டும், பிரான்சுவாவும் படுக்க வேண்டியதாயிற்று. வண்டியிலே பாரம் அதிகமில்லாதிருப்பதற்காக அவர்கள் கூடாரத்தை டையேனியிலேயே போட்டுவிட்டு வந்திருந்தார்கள். பனிக்கட்டி மூடாத காலத்தில் தண்ணீரில் மிதந்து வந்து ஒதுக்கப்பட்டிருந்த குச்சிகள் அங்கு கிடந்தன. அவற்றைக் கொண்டு அவர்கள் தீமூட்டினார்கள். ஆனால் தீ மூட்டிய இடத்தில் கொஞ்ச நேரத்தில் பனிக்கட்டி உருகியதால் குச்சிகளும், தீயும் ஏரிக்குள்ளே முழுகிவிட்டன. பெரோல்ட்டும் பிரான்சுவாவும் இருட்டிலே தங்கள் உணவை முடித்துக்கொள்ள வேண்டியதாயிற்று.

பக்கத்திலே குன்றின் அடிப்பாகத்தில் ஓர் ஒதுக்கான இடத்தில் பக் வளை தோண்டிப் படுத்தது. அந்த வளை மிக வசதியாகவும், வெதுவெதுப்பாகவும் இருந்ததால் அன்றைய மீன் உணவுக்காக பிரான்சுவா அழைத்தபோது பக்குக்கு அதைவிட்டுச்செல்ல முதலில் மனமில்லை. பிறகு அரைமனதோடு சென்று தனது பங்கைத் தின்றுவிட்டுத் திரும்பி வந்தது. அதற்குள் வளையை வேறொரு நாய் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டது. சீறுகின்ற அதன் குரலைக் கேட்டதும் அது ஸ்பிட்ஸ்தான் என்று பக் தெரிந்து கொண்டது. இதுவரையிலும் பக் தன் விரோதியுடன் சண்டையிடுவதைத் தவிர்த்துவந்தது. ஆனால் இப்பொழுது ஸ்பிட்ஸின் செய்கை வரம்பு கடந்துவிட்டது. அதனால் பக்கின் கொடிய விலங்குணர்ச்சி கர்ஜித்தெழுந்தது. அது என்றுமில்லாத மூர்க்கத்தோடு ஸ்பிட்ஸின் மேல் பாய்ந்தது. அதன் சீற்றம் பக்குக்கே வியப்பாயிருந்தது. ஸ்பிட்ஸோ அதைக் கண்டு திகைத்துவிட்டது. உருவத்தில் பெரியதாக இருப்பதால் தான் பக் மற்ற நாய்களை மிரட்டிக் கொண்டிருந்ததாக ஸ்பிட்ஸ் எண்ணியிருந்தது. அதற்கு அத்தனை வீரமுண்டென்று ஸ்பிட்ஸ் கருதவில்லை.

அவை ஒன்றின் மேலொன்று பாய முயல்வதைப் பிரான்சுவா பார்த்தான். பக்கின் ரோசத்தைக் கண்டு அவனுக்கே ஆச்சரியம். அந்தச் சண்டையின் காரணத்தை அவன் தெரிந்து கொண்டான். அந்தத் திருட்டுப்பயலுக்கு நல்லாக்கொடு, நல்லாக் கொடு”, என்று அவன் பக்கைப் பார்த்துக் கூவினான்.

ஸபிட்ஸும் பலிவாங்கத் தயாராக இருந்தது. அடங்காக் கோபத்தோடு அது கத்திற்று. முன்னும்பின்னும் அது வட்டமிட்டுப் பக்கின் மேல் பாய ஒரு நல்ல சந்தர்ப்பதை எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. பக்கும் சண்டையில் மிகுந்த ஆர்வங்காட்டிற்று. அதுவும் எச்சரிக்கையோடு முன்னும் பின்னும் வட்டமிட்டுத் தனக்கு அனுகூலமான சமயத்திற்காகக் காத்திருந்தது. அந்த வேளையில்தான் என்றும் நிகழாத அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. முதன்மை ஸ்தானத்திற்காக அந்த இரு நாய்களிடையே ஏற்பட்ட அந்தப் போராட்டம் அதனால் தடைப்பட்டு விட்டது. பல நாட்களுக்குப் பிறகுதான் அச்சண்டை மறுபடியும் நடந்தது.

திடீரென்று பெரோல்ட் கோபத்தோடு கூவினான்; எலும்புந்தோலுமாகக் கிடந்த ஒரு நாயின் முதுகிலே தடியடி விழுகின்ற சத்தமும் எழுந்தது. அடி பொறுக்காமல் அந்த நாய் வீறிட்டது. மறுகணத்திலே முகாமில் ஒரே கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. பசியால் வயிறொட்டிப்போன எழுபது எண்பது எஸ்கிமோ நாய்கள் முகாமிலே புகுந்துவிட்டன. சிவப்பு இந்தியர் வாழும் ஏதோ ஓர் ஊரிலிருந்த அந்த நாய்கள் அந்த முகாமிருப்பதை மோப்பம் பிடித்துக் கண்டு கொண்டன. பக்கும் ஸ்பிட்ஸும் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் சமயத்தில் அவை மெதுவாக முகாமுக்குள் வந்துவிட்டன.

பெரோல்ட்டும் பிரான்சுவாவும் பெரிய தடிகளை எடுத்துக்கொண்டு அவற்றினிடையே பாய்ந்த போது, அவை பல்லைக் காட்டிக்கொண்டு சண்டையிட முனைந்தது. உணவின் வாசனை அவைகளுக்கு ஒரு வெறியையே உண்டாக்கி விட்டது. உணவுப்பெட்டிக்குள் ஒரு நாய் தலையை விட்டுக்கொண்டிருப்பதைப் பெரோல்ட் கவனித்தான். அதன் விலா எலும்பின் மேல் விழுமாறு அவன் தடியால் ஓங்கி அடித்தான். உணவுப்பெட்டி கவிழ்ந்து விழுந்தது. அந்தக் கணத்திலேயே ரொட்டியையும் பன்றி இறைச்சியையும் நாடி ஒன்றின் மேல் ஒன்று மோதிக்கொண்டு பத்து இருபது நாய்கள் பாய்ந்தன. தடியடியை அவைகள் பொருட்படுத்தவே இல்லை. சரமாரியாக விழும் அடியால் அவைகள் ஊளையிட்டுக் கத்தினாலும், உணவுப்பொருள்களில் ஒரு துண்டு கூட விடாமல் விழுங்கும் வரையில் அந்த இடத்தைவிட்டு அவை நகரவில்லை.

இதற்குள் வண்டியிழுக்கும் நாய்கள் தங்கள் வளைகளை விட்டு வெளியேறின. படையெடுத்து வந்த அந்த மூர்க்கமான நாய்கள் அவற்றைத் தாக்கத்தொடங்கின. அந்த மாதிரி நாய்களைப் பக் பார்த்ததேயில்லை. அவற்றின் உடம்பில் உள்ள எலும்புகள் தோலைப் பொத்துக்கொண்டு வந்துவிடுமோ என்று சொல்லும் படியாக இருந்தன. தோலால் லேசாகப் போர்த்தப்பட்ட எலும்புக் கூடுகளே என்று அந்த நாய்களைச் சொல்லலாம். அவற்றின் கண்கள் தீயைப் போல் ஒளிவிட்டன. பசிவெறியால் அந்நாய்கள் பயங்கரத் தோற்றமளித்தன. அவற்றை எதிர்த்து நிற்பது சாத்தியமில்லை. முதல் பாய்ச்சலிலேயே அவை சறுக்கு வண்டி நாய்களைச் செங்குத்தான குன்றின் பக்கமாக விரட்டியடித்து விட்டன. மூன்று நாய்கள் பக்கைத் தாக்கின. நொடிப் பொழுதிற்குள் பக்கின் தலையிலும், தோளிலும் நீண்ட காயங்கள் ஏற்பட்டன.

அந்தச் சமயத்தில் அங்கே ஒரே பயங்கர ஆரவாரமாக இருந்தது. வழக்கம்போல் பில்லி அலறிற்று. டேவும், ஸோலெக்ஸும் பக்கம் பக்கமாக நின்று தைரியமாகப் போரிட்டன. அவற்றின் உடம்பில் ஏற்பட்டிருந்த பத்திருபது காயங்களிலிருந்து ரத்தம் சொட்டிக்கொண்டிருந்தது. ஜோ பிசாசு போலக் கவ்விக் கடித்தது. எஸ்கிமோ நாயொன்றின் முன்னங்காலை அது கவ்வியவுடன் எலும்பு முறியும்படிக் கடித்து விட்டன. நொண்டியான அந்த நாயின் மேல் பக் பாய்ந்து கழுத்தைக் கவ்வி வளைத்து முறித்தது. வாயில் நுரை தள்ளிக்கொண்டிருந்த ஒரு நாயின் கழுத்தைப் பிடித்து பக் கடித்தது. பக்கின் பற்கள் அதன் கழுத்திலேயுள்ள ரத்தக்குழாயிலே பதிந்த பொழுது ரத்தம் பீறிட்டு பக்கின் உடலெல்லாம் தெறித்தது. வாயிலே ஏற்பட்ட ரத்தச் சுவையினால் பக் மேலும் மூர்க்கமடைந்தது. பிறகு அது மற்றொரு நாயின் மேல் பாய்ந்தது. அதே சமயத்தில் அதன் கழுத்திலே பற்கள் பதிவதையும் அது உணர்ந்தது. பக்கவாட்டாக வந்து வஞ்சமாக ஸ்பிட்ஸ் அதைத் தாக்கிவிட்டது.

வெளி நாய்களைத் தங்கள் முகாமிலிருந்து விரட்டிய பிறகு பெரோல்ட்டும் பிரான்சுவாவும் தங்கள் வண்டி நாய்களைக் காப்பாற்றுவதற்காக விரைந்து வந்தார்கள். அவர்களுக்கு முன்னால் அந்த எஸ்கிமோ நாய்கள் எதிர்த்து நிற்க முடியாமல் பின்னடைந்தன. பக் தன்னை எதிரிகளிடமிருந்து விடுவித்துக் கொண்டது. ஆனால் ஒரு கணநேரத்திற்குத்தான். பெரோல்ட்டும் பிரான்சுவாவும் உணவுப் பொருள்களைக் காப்பாற்றுவதற்காக மீண்டும் முகாமிற்கு ஓடவேண்டியதாயிற்று. அதைக் கண்டு அந்தப் பகை நாய்கள் வண்டி நாய்களைத் தாக்கத் திரும்பிவந்தன. பில்லிக்குப் பயத்தாலேயே ஒரு தைரியம் பிறந்தது. வட்டமிட்டு வளைத்துக்கொண்டிருந்த அந்தக் கொடிய நாய்களினிடையே பாய்ந்து அது பனிக்கட்டியின் மேல் வேகமாக ஓடலாயிற்று. அதைத் தொடர்ந்து பக்கும் டப்பும் ஓடின. மற்ற வண்டி நாய்களும் அவற்றைப் பின்தொடர்ந்தன. அவற்றோடு பாய்ந்து செல்ல பக் தயாராகும் சமயத்தில் தன்னைக் கீழே வீழ்த்தும் நோக்கத்தோடு ஸ்பிட்ஸ் தன்மேல் பாய் வருவதை அது கடைக்கண்ணால் பார்த்துவிட்டது. அந்த எஸ்கிமோ நாய்களின் மத்தியில் கீழே விழுந்தால் அதன் கதி அதோகதிதான். அதனால் அது தயாராக நின்று ஸ்பிட்ஸின் பாய்ச்சலால் ஏற்பட்ட அதிர்ச்சியைச் சமாளித்துக் கொண்டது. பிறகு அது மற்ற வண்டிநாய்களைப் போல ஏரியின் மேல் படிந்திருந்த பனிக்கட்டிகளின் வழியாக ஓட்டமெடுத்தது.

வெகு நேரத்திற்குப் பிறகு வண்டிநாய்கள் ஒன்பதும் கானகத்திலே ஒன்றுசேர்ந்து அங்கேயே தங்க இடம் தேடின. அப்பொழுது அவற்றைத் துரத்திக்கொண்டு பகை நாய்கள் வரவில்லை யென்றாலும் அவற்றின் நிலை பரிதாபமாக இருந்தது. நான்கைந்து இடங்களில் காயமுறாமல் ஒரு நாயும் தப்பவில்லை. சில நாய்களுக்குப் பலத்த காயம். டப்பின் பின்னங்கால் ஒன்றில் ஆழமான காயம். டையேவில் வந்து சேர்ந்த டாலி என்ற எஸ்கிமோ நாயின் தொண்டை கிழிந்து போயிற்று. ஜோ ஒரு கண்ணை இழந்துவிட்டது. நல்ல சுபாவமுடைய பில்லியன் காதை ஒரு பகை நாய் மென்று பல துண்டுகளாகக் கிழித்துவிட்டது. அதனால் இரவு முழுவதும் பில்லி தேம்பிக்கொண்டும் கத்திக் கொண்டுமிருந்தது. பொழுது விடிந்ததும் அந்த நாய்கள் நொண்டி நொண்டி முகாமுக்குத் திரும்பின. பகை நாய்கள் போய்விட்டன. பெரோல்ட்டும், பிரான்சுவாவும் கோபத்தில் உட்கார்ந்திருந்தார்கள். உணவுப் பொருள்களில் பாதி போய்விட்டது. சறுக்குவண்டி வார்களையும், கித்தான் உறைகளையும் எஸ்கிமோ நாய்கள் பல இடங்களில் கடித்துத் தின்றுவிட்டன. தின்பதற்கு முடியும் என்று தோன்றிய எந்தப் பொருளும் அவைகளிடமிருந்து தப்பவில்லை. பனிமான் தோலால் செய்த பெரோல்ட்டின் பாதரட்சைகளையும் கடித்து தின்றுவிட்டன. வண்டியின் திராஸ்வார்களையும் கடித்துத் தின்றுவிட்டன. அதைப் பற்றி விசனத்தோடு சிந்தனை செய்து கொண்டிருந்த பிரான்சுவா காயங்களோடு திரும்பிய நாய்களைக் கவனிக்கலானான்.

“அடடா! உங்களுக்கெல்லாம் வெறி பிடித்தாலும் பிடித்துவிடும். பெரோல்ட், அவை எல்லாம் வெறிநாய்களோ என்னவோ – நீ என்ன நினைக்கிறாய்?”

பெரோல்ட் ஐயத்தோடு தலையை அசைத்தான். டாஸன்[1] என்ற நகரத்திற்குப் போய்ச் சேர இன்னும் நானூறு மைல் பிரயாணம் செய்யவேண்டும். அப்படியிருக்க நாய்களுக்கு வெறி பிடித்தால் அவன் நிலைமை திண்டாட்டமாக முடியும்.

இரண்டு மணிநேரம் சிரமப்பட்டுச் சேணங்களை ஒருமாதிரி சரிப்படுத்தினார்கள். பிறகு காயத்தால் ஏற்பட்ட வலியைச் சகித்துக் கொண்டு நாய்கள் ஓடலாயின. பாதையும் மிகக் கடினமாக இருந்தது. அந்த இடத்திலிருந்து டாஸன்வரை பனிப்பாதையில் செல்லுவது மிகவும் சிரமம். முப்பதுமைல் ஆறு என்னும் பெயர்கொண்ட ஆறு மிகுந்த வேகமுடையது. உறைபனி அதிற்பதிய முடியவில்லை. தண்ணீர் சுழிந்தோடும் இடங்களிலும், தேக்கமாகவுள்ள இடங்களிலுமே பனிக்கட்டி மூடியிருந்தது. ஆதலால் அந்த முப்பது மைல்களைக் கடக்க ஆறு நாட்கள் அலுப்பைப் பாராமல் உழைக்க வேண்டியிருந்தது. ஒவ்வோர் அடி எடுத்துவைக்கும் போதும் நாய்க்கும் மனிதனுக்கும் அங்கே மரணம் நேரலாம். அப்படி ஆபத்து நிறைந்த வழி அது. பாலங்கள் போலக் கிடந்த பனிக்கட்டியின் மீது வழிபார்த்துக்கொண்டு முன்னால் நடந்து போகும் போது பத்துப் பன்னிரண்டு தடவை காலடியிலுள்ள பனிக்கட்டி அமிழ்ந்ததால் பெரோல்ட் தண்ணீருக்குள் மூழ்கிவிட்டான். இப்படிப்பட்ட பகுதிகளில் நடக்கும் போது அவன் ஒரு நீளமான கழியைத் தன் மார்போடு சேர்த்துக் குறுக்காகப் பிடித்துக் கொள்ளுவான். அவன் தண்ணீரில் மூழ்கும் போதெல்லாம் அந்தக் கழி சுற்றியுள்ள பனிக்கட்டியின் மேல் குறுக்காக விழுந்து அவன் முற்றிலும் உள்ளே போய்விடாமல் உயிரைக் காப்பாற்றியது. அவ்வாறு உயிர் தப்பினாலும் தண்ணீரின் குளிர்ச்சியைத் தாங்குவது மிகக்கடினம். அந்தச் சமயத்திலே வெப்பநிலை பூஜ்யத்திற்கும் கீழே ஐம்பது டிகிரிவரை சென்றுவிட்டது. அதனால் ஒவ்வொரு தடவை தண்ணீரில் மூழ்கியெழும் போதும் தீ உண்டாக்கிக் குளிர்காய வேண்டியதாயிற்று.

பெரோல்ட் எதற்கும் அஞ்சுபவனல்ல. அப்படி அஞ்சாநெஞ்சம் கொண்டிருந்ததால்தான் தபால்களைக் கொண்டு செல்லும் அரசாங்க வேலைக்கு அவனைத் தேர்ந்தெடுத்தார்கள். அதிகாலையிலிருந்து இருட்டாகும் வரையில் அவன் ஓயாமல் உழைத்தான்; உறைபனியில் ஏற்படும் எல்லாவிதமான ஆபத்துக்களையும் உறுதியோடு எதிர்த்துச்சென்றான். ஆற்றின் கரைஓரங்களில் மட்டும் படிந்திருந்த பனிக்கட்டியின் மேலும் அவன் வண்டியைச் செலுத்தினான். பல தடவைகளில் பாரம் தாங்காமல் அப்பனிக்கட்டி உடைந்து முழுகலாயிற்று. ஒருதடவை சறுக்குவண்டி யே தண்ணீரில் அமிழ்ந்துவிட்டது. டேவும், பக்கும் அதனுடன் மூழ்கிவிட்டன. அவற்றை வெளியில் இழுப்பதற்குள் அவை குளிரினால் விறைத்து நடுங்கின. உடனே தீ உண்டாக்கித்தான் அவைகளைக் காப்பாற்ற முடிந்தது. அவற்றின் உடம்பெல்லாம் பனிக்கட்டி போர்த்தியிருந்தது. பெரொல்ட்டும் பிரான்சுவாவும் தீயைச் சுற்றிச்சுற்றி அவற்றை ஓடவைத்தார்கள். அப்பொழுதுதான் பனி உருகி அவற்றின் உடம்பில் உஷ்ணம் ஏறத்தொடங்கியது. அப்போது அவை தீக்கு வெகு சமீபத்தில் சென்றதால் தோல் பொசுங்கிவிட்டது.

மற்றொரு தடவை ஸ்பிட்ஸ் மூழ்கிவிட்டது. பக்கையும் டேவையும் தவிர மற்ற நாய்கள் எல்லாம் அதனுடன் மூழ்கின. பக்கும் டேவும் பலங்கொண்ட மட்டும் பின்புறமாகச் சாய்ந்து நிற்க முயன்றன. அவற்றின் கால்கள் பனிக்கட்டியில் வழுக்கின. பிரான்சுவா வண்டியின் பின்னால் நின்று அதை இழுத்துப் பிடித்து நிறுத்தத் தன் பலத்தை எல்லாம் சேர்த்து முயன்று கொண்டிருந்தான். ஒரு தடவை வண்டிக்கு முன்னாலும் பின்னாலுமிருந்த பனிக்கட்டிகள் சிதறிப்போய்விட்டன. அதனால் முன்னேறிச் செல்லவும் முடியவில்லை.பின்வாங்கித் திரும்பவும் முடியவில்லை. ஒரு பக்கத்திலே ஆறு. மற்றொரு பக்கத்திலே குன்று. அந்தக் குன்றிலேறி தப்புவதைத் தவிர வேறு வழியில்லை. முதலில் பெரோல்ட் அந்தக் குன்றின்மேல் ஏறினான். அவன் ஏறியதை ஓர் அற்புதச்செயல் என்றே சொல்லலாம். சேணத்திலுள்ளவர்களை யெல்லாம் எடுத்து ஒன்றோடொன்று இணைத்து நீளமான கயிறாகச் செய்தார்கள். அந்தக் கயிற்றின் உதவியால் நாய்களை ஒவ்வொன்றாகக் குன்றின் உச்சிக்கு ஏற்றினார்கள். பிறகு சறுக்கு வண்டியை மேலே ஏற்றிவிட்டுக் கடைசியாக பிரான்சுவா மேலே ஏறினான். பிறகு கீழே இறங்குவதற்கு வசதியான இடத்தைத் தேடினார்கள். கயற்றின் உதவியைக் கொண்டே முடிவில் கீழே இறங்க முடிந்தது. இவ்வளவு சிரமப்பட்டுச் சென்றும் அன்று இரவு நேரம் வரையிலும் அவர்கள் கால் மைல் தூரமே முன்னேறியிருந்தார்கள்.

ஹூட்ட லின்குவா போய்ச் சேருவதற்குள் பக் முற்றிலும் அலுத்துப் போயிற்று. மற்ற நாய்களும் அதே நிலையில் தான் இருந்தன. ஆனால் இதுவரையில் ஏற்பட்ட தாமதத்தை ஈடு செய்வதற்காகப் பெரோல்ட் முயன்றான். அதிகாலையிலேயே புறப்பட்டு இரவில் வெகுநேரம் வரை பயணத்தை விடாது நடத்தினான். முதல் நாள் முப்பத்தைந்து மைல் சென்று பெரிய சால்மன் சேர்ந்தார்கள். மறுநாள் மேலும் முப்பத்தைந்து மைல் சென்று சிறிய சால்மன் சேர்ந்தார்கள். மூன்றாம் நாள் நாற்பது மைல் பிரயாணம் செய்தார்கள்.

எஸ்கிமோ நாய்களின் பாதங்களைப் போல, பக்கின் பாதங்கள் உறுதியாக இருக்கவில்லை. அதன் முன்னோர்கள் மனிதனோடு பழகிப்பழகி நாகரிகமாக வாழத் தொடங்கியதால், அவற்றின் பாதங்கள் கடினத்தன்மையை இழந்துவிட்டன. பக்கின் பாதம் மென்மை வாய்ந்தது. நாள் முழுவதும் அது வலியோடு நொண்டி நொண்டிச் சென்றது. முகாம் போட்டுத் தங்கிய உடனே அது உயிரற்றது போல் படுத்துவிடும். மிகுந்த பசியாக இருந்தாலும் மீன் உணவைப் பெற்றுக்கொள்ள அது எழுந்து வராது. பிரான்சுவாதான் உணவை அதனிடம் கொண்டுவர வேண்டும். அவன் ஒவ்வோர் இரவிலும் தான் உணவருந்திய பிறகு பக்கின் பாதங்களை அரை மணி நேரத்திற்கு நன்றாகத் தேய்த்துவிடுவான். பனிமான் தோலால் செய்த அவனுடைய பாதரட்சைகளின் மேல் பாகங்களை அறுத்து அவன் பக்குக்குச் சிறிய பாதரட்சைகள் செய்து கட்டினான். அதனால் பக்குக்கு மிகுந்த ஆறுதலேற்பட்டது. ஒருநாள் காலையில் பக்குக்கு இந்தப் பாதரட்சைகளை அணியப் பிரான்சுவா மறந்துவிட்டான்; பக் தன் கால்களை மேலே தூக்கிக்கொண்டு மல்லாந்து படுத்துவிட்டது; பாதரட்சைகள் இல்லாமல் புறப்பட மறுத்தது. அது பாதரட்சைகளை வேண்டி மல்லாந்து படுத்துக் கிடப்பதைக் கண்டு பெரோல்ட் கூடப் பல்லைக்காட்டிக்கொண்டு சிரித்து விட்டான். நாளாக நாளாகப் பக்கின் பாதங்கள் பனிப்பாதையில் ஓடியோடி நன்கு உறுதி அடைந்து விட்டன. அதனால் தேய்ந்து போன அதன் பாதரட்சைகளைத் தூக்கி எறிந்து விட்டார்கள்.

ஒருநாள் காலை, பெல்லி[2] என்ற ஆற்றின் அருகிலிருந்து புறப்படுவதற்காக நாய்களுக்குச் சேணம் போட்டுக் கொண்டிருந்தார்கள். டாலிக்குத் திடீரென்று வெறி பிடித்துக் கொண்டன. அது ஓநாயைப்போல் நீண்ட நேரம் உள்ளம் உருகும்படி ஊளையிட்டுத் தனக்கு வெறி பிடித்திருப்பதை வெளிப்படுத்திற்று. பயத்தால் ஒவ்வொரு நாயும் மெய்சிலிர்த்தது. டாலி பக்கின் மேல் பாய வந்தது. வெறிபிடித்த நாயைப் பக் பார்த்ததுமில்லை. அதைக் கண்டு பயந்ததுமில்லை. இருந்தாலும் எப்படியோ அதற்குப் பயமேற்பட்டது; பீதியோடு அது ஓட்டம் பிடித்தது.

பெருமூச்சு விட்டுக்கொண்டும், வாயில் நுரை தள்ளிக் கொண்டும் டாலி துரத்திற்று. பக் பாய்ந்து பாய்ந்து சென்றது. அதற்கு ஒரே கிலி. டாலியும் விடாமல் துரத்தி வந்தது. அதற்கு ஒரே வெறி. அந்தத் தீவின் மத்தியிலிருந்த காடுகளின் வழியாகப் பாய்ந்தோடி , பக் கீழ்க்கோடியை அடைந்தது. அங்கிருந்து பனிக்கட்டி நிறைந்த ஒரு கால்வாயைக் கடந்து வேறொரு தீவுக்கு ஓடிற்று. அதைவிட்டு மற்றொரு தீவுக்குப் பாய்ந்தது. பக்குக்கு நம்பிக்கை குலையலாயிற்று. அது சுற்றி வளைத்து மீண்டும் ஆற்றிற்கே வந்து அதைக் கடக்க விரைந்தது. அது திரும்பிப் பார்க்கவே இல்லை. இருந்தாலும் அதைத் துரத்திக்கொண்டு மிக அருகிலேயே டாலி வருவதை அதன் உறுமலிலிருந்து அறிந்து கொண்டது. கால்மைல் தொலைவிலே பிரான்சுவா நின்று பக்கை அழைக்கும் குரல் கேட்டது. அவன்தான் தன்னைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையோடு பக் மூச்சுதிணறத் திணறத் திரும்பிப் பாய்ந்தோடிற்று. பிரான்சுவா கோடரியை ஓங்கிக் கொண்டு நின்றான். பக் அவனைத் தாண்டி ஓடவே வெறிபிடித்த டாலியும் பின்தொடர்ந்தது. அதன் தலையிலே கோடரி பலமாக விழுந்து உயிரை வாங்கியது.

ஒரே களைப்புடன் பக் சறுக்குவண்டியருகே தடுமாறித் தடுமாறிச் சென்று நின்றது. அதனால் மூச்சுவிடவே முடியவில்லை. ஸ்பிட்ஸுக்கு அதுவே நல்ல சமயம். அது பக்கின் மேல் பாய்ந்தது. இரண்டு முறை அதன் பற்கள் பக்கின் உடம்பிலே நன்கு பதிந்து வெளியிலே எலும்பு தெரியும்படியாகச் சதையைக் கிழித்துவிட்டன. பக்கால் எதிர்த்துப் போராட முடியவில்லை. அந்த நிலையிலே பிரான்சுவாவின் சாட்டை குறுக்கிட்டது. ஸ்பிட்ஸுக்கு அப்பொழுது கிடைத்த சாட்டையடியைப் போல அந்த வண்டி நாய்களின் வேறொன்றுக்கும் என்றுமே கிடைத்ததில்லை. பக் அதைக்கண்டு திருப்தியுற்றது.

“அந்த ஸ்பிட்ஸ் ஒரு பிசாசு. ஒரு நாளைக்கு அது பக்கைத் தீர்த்துவிடும்” என்றான் பெரோல்ட்

“பக் மட்டும் லேசல்ல. அது ரெட்டைப்பிசாசு. ஒரு நாளைக்கு அது பொல்லாத கோபங்கொண்டு அந்த ஸ்பிட்ஸை மென்று துப்பிப்போடும். எனக்கு நிச்சயமாய்த் தெரியும்” என்று பிரான்சுவா பதில் அளித்தான்.

அந்த நாள் முதல் ஸ்பிட்ஸுக்கும் பக்குக்கும் ஒரே போர். வண்டி இழுக்கும் போது ஸ்பிட்ஸ் முதலிடம் வகித்தது. மற்ற நாய்கள் அதையே தலைவனாக ஏற்றுப் பணிகள் நடந்தன. தென்பிரதேசத்து நாயான பக்கால் அந்தத் தலைமைக்குப் பங்கம் நேரலாயிற்று. தென்பிரதேச நாய்கள் பலவற்றை ஸ்பிட்ஸ் பார்த்திருக்கிறது. முகாமிலும், பிரயாணத்திலும் அவைகளில் ஒன்றாவது திருப்தியளித்ததில்லை. உழைப்புக்கும், உறைபனிக்கும், பசிக்கும் விரைவிலே அவை இரையாயின. பக் இந்த விதிக்கு இலக்காக இருந்தது. அது மட்டும் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு உடல் வளமும் பெற்று வந்தது. பலத்திலும், கொடுமையிலும், தந்திரத்திலும் அது எஸ்கிமோ நாய்களுக்கு இணையாக விளங்கிற்று. மேலும் அதற்கு ஆதிக்கம் செலுத்தும் தன்மையும் இருந்தது. சிவப்பு மேலங்கிக்காரனிடம் தடியடி பட்டதிலிருந்து அது கண்மூடித் தனமான ஆத்திரத்தையும், அவசரத்தையும் விட்டுவிட்டது. தலைமை வகிக்க வேண்டும் என்ற ஆசையாற்கூட அது நிதானத்தை இழக்கா மலிருந்ததால் தான் அதைப் பற்றிப் பயப்பட வேண்டியிருந்தது. அது மிக நல்ல தந்திரசாலி; ஏற்ற காலத்தை எதிர்பார்த்து மிகுந்த பொறுமையோடிருந்தது.

தலைமைப் பதவிக்காகப் போராட்டம் நேர்வதைத் தவிர்க்க முடியாததாயிற்று. பக் அதை விரும்பியது. பக்கின் தன்மை அத்தகையது. பனிப்பாறையிலே வண்டி இழுப்பதில் முதலிடம் பெற வேண்டும் என்று ஏதோ ஓர் இனந்தெரியாத ஆர்வம் பக்கை நன்றாகப் பற்றிக்கொண்டது. அந்த ஆர்வத்தால் தூண்டப்பட்டே பல நாய்கள் தமது கடைசி மூச்சு வரை உழைக்கின்றன. அந்த ஆர்வத்தாலேயே சேணத்தோடு சாவதில் அவை மகிழ்ச்சியடை கின்றன. இனிமேல், வண்டியிழுக்கத் தகுதியற்றவை என்று அவை தள்ளப்படும் போது உள்ளம் குலைகின்றன. அந்த ஆர்வமே டேவையும், சோலெக்ஸையும் வண்டியிழுப்பதில் மிகுந்த உற்சாகங்காட்டச் செய்தது. வண்டி இழுப்பதில் தவறு செய்யும் நாய்களையும், காலை நேரத்தில் சேணம் போடும் போது வராமல் மறைந்து திரியும் நாய்களையும் தண்டிக்கும்படி அந்த ஆர்வமே ஸ்பிட்ஸைத் தூண்டியது.

ஸ்பிட்ஸின் தலைமைப்பதவியைத் தகர்க்க பக் வெளிப்படை யாகவே முற்பட்டது. கடமையைச் செய்யத் தவறிய நாய்களை ஸ்பிட்ஸ் தண்டிக்க முயலும் போது அது குறுக்கிட்டது. வேண்டுமென்றே அது அவ்வாறு செய்தது. ஒரு நாள் இரவு பனி மிகுதியாகப் பெய்தது. மறுநாள் காலையிலே பக் தன் வளையைவிட்டு வந்து சேரவில்லை. ஓர் அடி ஆழத்திற்குப் பனியால் மூடிக்கிடக்கும் வளையிலே அது பத்திரமாகப் பதுங்கியிருந்தது. பிரான்சுவா அதைக் கூப்பிட்டுக் கூப்பிட்டுப் பார்த்தான்; தேடியும் பார்த்தான். அது அசையவேயில்லை. ஸ்பிட்ஸ் கோபத்தோடு சீறியது; முகாம் முழுவதும் தேடிற்று. பனிப்பரப்பை முகர்ந்து பார்த்து உறுமிக்கொண்டே பல இடங்களில் தோண்டிப்பார்த்தது. அதன் உறு மலைக் கேட்டு பக் நடுங்கியதென்றாலும் அது வெளியில் வரவேயில்லை.

ஆனால் கடைசியில் அதைத் தேடிக் கண்டுபிடித்தனர். உடனே ஸ்பிட்ஸ் அதைத் தண்டிக்க அதன் மேல் பாய்ந்தது. அந்த இரு நாய்களுக்குமிடையிலே கோபத்தோடு பக் பாய்ந்தது. ஸ்பிட்ஸ் இதை எதிர்பார்க்கவில்லை. மேலும் பக் மிகச் சாமர்த்தியமாகப் பாய்ந்ததால் ஸ்பிட்ஸ் பின்னால் சாய்ந்துவிழுந்தது. தலைமை நாய்க்கு எதிராக இவ்வாறு கலகம் மூண்டதைக் கண்டதும், நடுங்கிக் கொண்டிருந்த பக்குக்குத் தைரியம் வந்துவிட்டது. அது ஸ்பிட்ஸின் மேல் பாய்ந்தது. இதைக் கண்டு பிரான்சுவா உள்ளூர நகைத்தான். ஆனால், நீதி வழங்குவதில் தவறாத அவன் பக்கைத் தன் சாட்டையால் ஓங்கி அடித்தான். பக் சாட்டையடியைச் சட்டை செய்யவில்லை. அதனால் பிரான்சுவா சாட்டைத்தடியைத் திருப்பி அடித்தான். அந்த அடியால் அதிர்ச்சியுற்று பக் பின்னடைந்தது. மேலும் மேலும் அதற்குச் சாட்டை அடி கிடைத்தது. அதே சமயத்தில் பக்கை ஸ்பிட்ஸ் நன்றாக தண்டிக்கலாயிற்று.

டாஸனுக்கு அருகில் வர வர பக் தொடர்ந்து கலகம் செய்து கொண்டேயிருந்தது. குற்றம் செய்த நாய்களை ஸ்பிட்ஸ் தண்டிக்க முயலும்போதெல்லாம் அது குறுக்கிட்டது. ஆனால் பிரான்சுவா அருகில் இல்லாத சமயம் பார்த்துத் தந்திரமாகக் குறுக்கிட்டது. இம்மாதிரி பக் மறைவாகக் கலகம் செய்ததால், தலைவனுக்குப் பணியும் தன்மை எல்லா நாய்களிடமும் குறைந்து எதிர்ப்புணர்ச்சி வளர்ந்தது. டேவும், சோலெக்ஸும் மட்டும் என்றும் போல் இருந்தன. மற்ற நாய்களின் நடத்தை மோசமாய்க் கொண்டே வந்தது. முன்போல எல்லாம் ஒழுங்காக நடக்கவில்லை. தொடர்ந்து சச்சரவும் கூச்சலும் எழுந்தன. எப்பொழுதும் ஏதாவது ஒரு தொந்தரவு ஏற்படும். அதற்கு பக் தான் அடிப்படையான காரணமாக இருக்கும். ஸ்பிட்ஸுக்கும் பக்குக்கும் பெரிய சண்டை விரைவில் மூண்டுவிடும் என்று பிரான்சுவா சதா பயந்து கொண்டிருந்தான். இரவு நேரங்களில் மற்ற நாய்கள் தமக்குள் சண்டையிட்டுக் கொள்வதால் ஏற்படும் சத்தத்தைக் கேட்டு பக்கும் ஸ்பிட்ஸும்தான் சண்டையிட்டுக் கொள்வதாக எண்ணி, அவன் பலமுறை படுக்கையைவிட்டு எழுந்துவந்தான்.

ஆனால், அந்தப் பெரிய சண்டைக்குச் சமயம் வாய்க்கவில்லை. கடைசியில் ஒருநாள் மாலை நேரத்தில் அவர்கள் டாஸன் வந்து சேர்ந்தார்கள். அங்கே பல மனிதர்கள் இருந்தார்கள்; எண்ணற்ற நாய்களும் இருந்தன. அந்த நாய்களெல்லாம் வேலை செய்துகொண்டிருந்தன. முக்கியமான தெருக்களில் கூட்டங் கூட்டமாக வண்டியிழுத்துக்கொண்டு அந்த நாய்கள் நாளெல்லாம் போவதும் வருவதுமாக இருந்தன. இரவிலும் அவற்றின் கழுத்தில் உள்ள மணிகளின் ஓசை கேட்டுக்கொண்டிருந்தது. வெட்டு மரங்களையும், விறகுக்கட்டைகளையும் அவை இழுத்துச் சென்றன. சான்டா கிளாராவில் குதிரைகள் செய்த எல்லா வேலைகளையும் இங்கே நாய்கள் செய்தன. தென்பிரதேசத்து நாய்கள் சிலவற்றைப் பக் சந்தித்தது. ஆனால், அங்கேயிருந்த நாய்களில் பெரும்பாலானவை ஓநாய் இனத்தைச் சேர்ந்த எஸ்கிமோ நாய்களே. ஒவ்வோர் இரவிலும் ஒன்பது மணிக்கும், பன்னிரண்டு மணிக்கும், மூன்று மணிக்கும் அவை தவறாமல் ஒருவிதமாக ஊளையிட்டுக் கூவின. பக்கும் அவற்றோடு சேர்ந்து மகிழ்ச்சியோடு கூவிற்று.

இரவிலே அப்பிரதேசம் வெண்மையான பனியால் மூடப்பட்டு உணர்ச்சியற்றுக் கிடக்கும். அந்தச் சமயத்தில் விழுகின்ற உறைபனியினூடே நட்சத்திரங்கள் கூத்தாடுவதுபோலத் தோன்றும். வானத்திலே ஒரு விநோதமான ஒளி சில இரவுகளில் தோன்றும். இவற்றைக் கண்டு அந்த எஸ்கிமோ நாய்கள் தங்கள் வாழ்க்கை நிலையைக் குறித்து அழுவது போலவும், தேம்புவது போலவும் நெடுநேரம் ஊளையிட்டன. இவ்வாறு ஊளையிடும் பழக்கம் ஆதிகாலத்திலிருந்தே ஏற்பட்டிருக்கிறது. உலகத்திலே புதிதாக உயிரினங்கள் தோன்றிக்கொண்டிருந்த அந்தக் காலத்திலேயே இது ஏற்பட்டதாகும். எண்ணிக்கையில் அடங்காத பல தலைமுறைகளின் துன்ப உணர்ச்சிகளெல்லாம் இதில் பொதிந்திருக்கின்றன. ஊளையிடுவதைக் கேட்கும் போது பக்கின் உள்ளத்திலே புதியதோர் உணர்ச்சி ஏற்பட்டது. பக் புலம்பும் போதும், ஊளையிடும் போதும் காட்டிலே திரிந்த அதன் ஆதிமுன்னோர்கள் குளிரையும், இருட்டையும் கண்டு அஞ்சி அனுபவித்த பழைய துன்பங்க ளெல்லாம் அதன் குரலில் வெளியாயின. அந்தக் குரலிலே, பக்குக்குப் புதிய உணர்ச்சி உண்டானதிலிருந்து தனது நாகரிக வாழ்க்கையை மறந்து கொடுமை நிறைந்த பழையகால வாழ்க்கையை எய்திக்கொண்டிருந்தது என்பது நன்றாகத் தெரிந்தது.

டாஸனை அடைந்து ஏழு நாட்களாயின. பிறகு டையேவுக்குத் திரும்பிப்போக ஆயத்தமானார்கள். பெரோல்ட் அங்கு கொண்டு வந்து சேர்த்த கடிதங்களைவிட அவசரமான கடிதங்களை எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. துரிதமாகப் பிரயாணம் செய்வதில் வல்லவன் என்ற தற்பெருமையும் அவனுக்குண்டு; அதனால் மிக விரைவில் இந்த முறை பயணத்தை முடிக்கத் திட்டமிட்டான். பல விஷயங்கள் அவனுக்குச் சாதகமாக இருந்தன. ஒரு வாரம் ஓய்வு கிடைத்தமையால் நாய்களெல்லாம் அலுப்பு தீர்ந்து வலிமை பெற்றுத் துடியாக இருந்தன. வரும்போது அவர்கள் உண்டாக்கிய உறைபனிப்பாதையிலேயே பின்னால் பலர் பிரயாணம் செய்ததால், அப்பாதை நன்கு இறுகி வசதியாக அமைந்திருந்தது. வழியிலே இரண்டு மூன்று இடங்களில் மனிதர்களுக்கும், நாய்களுக்கும் வேண்டிய உணவுகள் கிடைக்குமாறு போலீஸார் ஏற்பாடு செய்திருந்தனர். அதனால் அதிகமான உணவுப்பொருள்களை வண்டியில் ஏற்றிச் செல்லாமல் பாரத்தைக் குறைக்க முடிந்தது.

முதல் நாள் ஐம்பது மைல் பிரயாணம் செய்தார்கள். இரண்டாம் நாள் பெல்லி ஆற்றை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வந்தனர். இவ்வளவு வேகமாக வந்தாலும் வண்டியைச் செலுத்தும் பிரான்சுவாவுக்குப் பல தொல்லைகளிருந்தன. பக் தொடங்கிய கலகத்தின் விளைவாக இப்பொழுது நாய்கள் அனைத்தும் ஒற்றுமையாக வேலை செய்வதில்லை. அவை சேர்ந்து ஒன்றாக இழுப்பது கிடையாது. பக் ஊட்டிய தைரியத்தால் மற்ற நாய்கள் சில்லறைக்குறும்புகள் செய்யத் தொடங்கின. அவைகளுக்கு ஸ்பிட்ஸிடத்திலிருந்த பயம் நீங்கிவிட்டது. அதனால் அதன் ஆதிக்கத்தை எதிர்க்க அவைகள் உரங்கொண்டன. ஓர் இரவு ஸ்பிட்ஸின் பங்கிலிருந்து ஓர் அரைக்குண்டு மீனைப் பைக் திருடி விழுங்கிவிட்டது. பக் அதற்குக் காவலாக நின்றது. மற்றோர் இரவு டப்பும் ஜோவும் குற்றம் புரிந்ததோடல்லாமல், அவற்றைத் தண்டிக்க வந்த ஸ்பிட்ஸை எதிர்த்துத் தாக்கின. இயல்பாகவே நல்ல சுபாவமுடைய பில்லி கூட இப்பொழுது அப்படியிருக்கவில்லை. முன்னைப்போல அது வாலைக் குழைத்தது அன்பு காட்டவில்லை. ஸ்பிட்ஸுக்குப் பக்கத்தில் வரும்போதெல்லாம் பக் சீறிக்கொண்டும், உரோமத்தைச் சிலிர்த்துக்கொண்டுமிருந்தது. எளியவரிடம் கொடுமையாக நடந்து கொள்ளுகிறவனைப்போல அது ஸ்பிட்ஸின் கண்ணுக்கெதிரில் பெருமிதத்துடன் மேலும் கீழும் நடக்கலாயிற்று.

இவ்வாறு கட்டுப்பாடு குலைந்து போகவே, நாய்களுக்குள்ளிருந்த தொடர்பும் சீர்கெட்டுவிட்டது. அவைகள் ஒன்றையொன்று எதிர்த்து முன்னைவிட அதிகமாகச் சண்டையிடலாயின. முகாமே சண்டையும் கூக்குரலுமாக மாறிவிட்டது. டேவும் சோலெக்ஸும் மட்டும், மாறாமல் பழையபடி இருந்தன. இருந்தாலும் அவைகள் மற்ற நாய்களுக்குள் ஏற்படும் முடிவில்லாத சச்சரவுகளால் எரிச்சலடைந்தன. பிரான்சுவா வாய்க்குவந்தபடியெல்லாம் திட்டினான்; கோபத்தால் கொதித்தான். சடார் சடார் என்று சாட்டையின் வீச்சு எப்பொழுதும் கேட்டது. ஆனால் அதனால் அதிகப்பலன் உண்டாகவில்லை. பிரான்சுவாவின் கவனம் வேறு பக்கம் திரும்பியதும் நாய்கள் மீண்டும் சண்டையிடலாயின. அவன் ஸ்பிட்ஸின் சார்பாகத் தன் சாட்டையோடு நின்றான். மற்ற நாய்களின் சார்பாக பக் நின்றது. இந்தத் தொல்லைகளுக்கெல்லாம் பக்கே அடிப்படையான காரணம் என்று பிரான்சுவாவுக்குத் தெரியும். அவனுக்குத் தெரியுமென்று பக்குக்குத் தெரியும். அதனால் அது மீண்டும் நேரிடையாக அகப்பட்டுக் கொள்ளாதவாறு தந்திரமாக வேலை செய்தது. வண்டி இழுப்பதில் அது சற்றும் தவறு செய்யவில்லை. அந்த வேலையிலே அதற்குப் பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டிருந்தது. ஆனால், அது சாமர்த்தியமாக மற்ற நாய்களிடையே சண்டை மூட்டி விட்டுத் திராஸ் வார்களில் சிக்கலுண்டாகும்படி செய்தது.

டாக்கீனா ஆற்றின் முகத்துவாரத்தில் ஒருநாள் இரவு தங்கினார்கள். உணவு முடிந்தது. அந்தச் சமயத்தில் ஒரு வெண்மையான பனிமுயலைக் கண்டு டப் அதைப்பிடிக்க முயன்றது. ஆனால் பனிமுயல் அதன்பிடியில் அகப்படாமல் தப்பியோடிற்று. மறுகணத்தில் வண்டி நாய்களெல்லாம் அதைத் துரத்திக்கொண்டு பாய்ந்தன. வடமேற்குப் பிரதேச போலீஸ்காரர்கள் நூறு கஜத்திற்கு அப்பால் முகாமிட்டிருந்தார்கள். அவர்களிடம் ஐம்பது நாய்களிருந்தன. அவைகளும் வேட்டையில் கலந்துகொண்டன. ஆறு ஓடும் திசையிலேயே பனிமுயல் தாவியோடியது. பிறகு ஒரு சிறிய ஓடைப்பக்கம் திரும்பி அதன் மேல் படிந்திருந்த பனிக்கட்டியின் வழியாக ஓடிற்று. பனிப்பரப்பின் மீது ஓடுவது அதற்கு எளிதாக இருந்தது. ஆனால் அதைப்பிடிக்க வந்த நாய்களுக்கு அது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. அறுபது நாய்களுக்கு முன்னால் பக் வேகமாக வந்தது. ஆனால் முயலை அணுக முடியவில்லை. தாவித் தாவி பக் பாய்ந்தது. மங்கிய நிலவின் வெண்ணொளியிலே அதன் கட்டான உடல் அழகாகத் தோற்றமளித்தது. ஏதோ ஒரு மூடுபனிக் குறளிபோலப் பனிமுயல் முன்னால் ஓடிற்று.

பட்டணங்களைவிட்டுக் காட்டுக்குச் சென்று துப்பாக்கிக் குண்டுகளைப் பொழிந்து, விலங்குகளையும் பறவைகளையும் கொன்று குவிக்க வேண்டும் என்ற ரத்தவெறி மனிதனுக்குப் பல சமயங்களில் தோன்றுகின்றது. அது பழமையான இயல்பூக்கத்தின் வேகமாகும். அந்த வேகமே இன்னும் அதிகமான வலிமையோடு பக்கைப் பற்றிக் கொண்டிருந்தது. உயிரோடு முன்னால் செல்லும் அந்த இரையைத் தனது பற்களாலேயே கடித்துக் கொன்று செங்குருதியை வாயில் சுவைக்க வேண்டு மென்று பக் எல்லா நாய்களுக்கும் முன்னால் தாவித் தாவிச்சென்றது.

ஒரு பரமானந்தம் வாழ்க்கையின் சிகரமாக ஏதோ ஒரு வேளையில் ஏற்படுகின்றது. அதற்குமேல் வாழ்க்கை உயர்வடைய முடியாது. துடிதுடித்து, உ வகையில் தன்னை மறந்திருக்கும் நிலையிலேயே அந்தப் பரவசம் பிறக்கின்றது. திரைச்சீலையிலே உருவாகிக் கொண்டிருக்கும் உணர்ச்சியால் பொங்கும் ஓவியத்திலே, உள்ளத்தைப் பறிகொடுத்திருக்கும் கலைஞனுக்குத் தன்னை மறந்த நிலையிலே அந்தக் கழிப்பேருவகை வாய்க்கின்றது. படுகளத்தில் போர்வெறியோடு நிற்கும் வீரனுக்கு அது கிட்டுகின்றது. நிலவொளியிலே பஞ்சாய்ப் பறக்கும் பனி முயலைத் துரத்திக் கொண்டு எல்லா நாய்களுக்கும் முன்னால் ஓநாய்போலக் குரல் கொடுத்துப் பாய்கின்ற பக்குக்கும் அந்தப் பரவச உவகை பிறந்தது. காலக்கருவில் உருவான விலங்குணர்ச்சியை, தனக்கு முன் தன் இனத்தில் தோன்றிய கொடிய தன்மையை பக் ஆழம் பார்த்தது. அந்த உணர்ச்சி மேலெழுவதை அறிந்தது. உயிர்வேகம் அதற்குள்ளே கொந்தளித்தெழுந்தது. மேலே தோன்றும் நட்சத்திரங்களுக்கும் கீழே விரிந்து கிடக்கும் அசைவற்ற சடப்பொருளான பனிப்பரப்புக்கும் இடையில் ஆர்வத்தோடு பாய்ந்து செல்லும் பக்கினிடத்திலே உறுதியான தசைநார்களின் துடிப்பும், வலிமையெல்லாம் பெற்றுள்ள வாழ்வின் எக்களிப்பும் வெளிப்பட்டன.

ஆனால் கிளர்ச்சி மிகுந்த காலத்திலும் திட்டமிட்டுக் காரியம் செய்யும் இயல்பு கொண்ட ஸ்பிட்ஸ் மற்ற நாய்களை விட்டுவிட்டு வேறொரு குறுக்குவழியில் பாய்ந்து சென்றது. ஒருநீண்ட வளைவைச் சுற்றிக்கொண்டு முயலும், அதன் பின்னால் பக்கும் வருவதற்குள், ஸ்பிட்ஸ் குறுக்குவழியில் முன்னால் சென்று மடக்கிக் கொண்டது. பக்குக்கு இந்தக் குறுக்கு வழி தெரியாது. வெண்குறளி போலச்செல்லும் முயலுக்கு முன்னால் தோன்றி அதன் மேல் பாய்வதற்குத் தயாராக நிற்கும் மற்றொரு பெரிய குறளிபோல ஸ்பிட்ஸ் நிற்பதை அது கண்டது. முயலால் முன்னேறிப்போகவும் முடியவில்லை. பின்னால் திரும்பி ஓடவும் முடியவில்லை. ஸ்பிட்ஸின் வெண்மையான பற்கள் அதன் முதுகிலே பாய்ந்தபோது அது அடிபட்ட மனிதனைப்போல வீறிட்டுக் கத்திற்று. சாவின் பிடியிலே அகப்பட்ட அந்தப் பிராணியின் கீச்சுக் குரலைக் கேட்டதும் பக்கைத் தொடர்ந்து அதன் பின் ஓடிவந்த நாய்களெல்லாம் கொடுங்களிப்போடு குரல் கொடுத்தன.

ஆனால் பக் அப்படிக் குரல் கொடுக்கவில்லை. இதுவரை வந்த முழு வேகத்தோடும் அது ஸ்பிட்ஸின் மேல் பாய்ந்தது. வேகம் மிக அதிகமாக இருந்ததால், பக்கினால் ஸ்பிட்ஸின் கழுத்தைப் பற்ற முடியவில்லை. இரண்டு நாய்களும் பனிப்பரப்பின் மீது பல தடவை உருண்டன. கீழே விழாதது போல ஸ்பிட்ஸ் சட்டென்று எழுந்து நின்று பக்கின் தோளிலே வகிர்ந்துவிட்டு அப்பால் தாவிச்சென்றது. அது நல்ல வசதியான இடம் பார்த்து நிற்பதற்காகச் சீறிக்கொண்டும் பற்களைக் கடித்துக்கொண்டும் சற்று பின்னால் நகர்ந்தது.

இறுதிச்சண்டைக்கு இதுவே தருணம் என்பதை பக் ஒரு கணத்திலே தெரிந்து கொண்டது. உயிர்போகும் வரையில் செய்ய வேண்டிய சண்டை அது. சீறிக்கொண்டும், காதுகளைப் பின்னால் மடித்துக்கொண்டும், நல்ல வசதியான சந்தர்ப்பத்தை நாடி அவைகளிரண்டும் சுற்றிச் சுற்றி வந்த போது, அந்தப் போர்முறை பக்குக்கு மிகவும் பழகினது போல் ஓர் உணர்ச்சி உண்டாயிற்று. வெள்ளைப்பனி போர்த்த மரங்கள், வெள்ளைப்பனி போர்த்த நிலப்பரப்பு, வெள்ளை நிலவொளி, சண்டையின் கிளர்ச்சி – இவையெல்லாம் அதற்கு நன்றாக நினைவில் வந்தன. எங்கும் ஒரே வெண்மை ; எங்கும் நிசப்தம். இவற்றினிடையே பயங்கரமான ஓர் அமைதி. காற்றுகூட அசையவில்லை. ஓர் இலை கூட ஆடவில்லை. நன்கு பழக்கப்படாத ஓநாய்கள் போன்ற எஸ்கிமோ நாய்கள் பனிமுயலை ஒரு நொடியில் தீர்த்துவிட்டு வந்து வட்டமாகச் சூழ்ந்து கொண்டன. அவைகளும் மௌனமாக இருந்தன. அவற்றின் கண்கள் மட்டும் ஒளிவிட்டன. உறைபனியிலே அவை விடுகின்ற மூச்சு புகைபோல மேலெழுந்தது. இந்தப் பண்டைக்காலக் காட்சியானது பக்குக்குப் புதியதாகத் தோன்றவில்லை. நடைமுறையில் எப்போதும் உள்ளதுதானே இது என்று தோன்றியது.

போரிடுவதில் ஸ்பிட்ஸுக்கு நல்ல அனுபவம் உண்டு. ஸ்பிட்ஸ்பர்கள், ஆர்க்டிக் சமுத்திரம், கானடா ஆகிய எல்லா இடங்களிலும் பல வகையான நாய்களோடு அது போரிட்டு வென்றிருக்கிறது. அதற்கு இப்பொழுது கடுங்கோபந்தான்; ஆனால் அது குருட்டுத்தனமான கோபமல்ல. எதிரியின் உடலைக் கிழித்து உதறிக் கொல்ல வேண்டும் என்று அதற்கு ஆத்திரமிருந்தாலும் தன் எதிரிக்கும் அத்தகைய ஆத்திரமிருக்கிற-தென்பதை அது மறக்கவில்லை. எதிரியின் பாய்ச்சலைச் சமாளிப்பதற்கு ஆயத்தம் செய்து கொண்ட பிறகே அது பாய முனைந்தது. எதிரியின் தாக்குதலைத் தடுப்பதற்கு ஆயத்தமான பிறகே அது தாக்கலாயிற்று.

அந்தப் பெரிய வெள்ளை நாயின் கழுத்திலே தனது பற்களைப் பதிய பக் எவ்வளவோ முயன்றும் பயன்படவில்லை. அதன் கோரைப்பற்கள் கழுத்தருகே செல்லும் போதெல்லாம் ஸ்பிட்ஸின் கோரைப்பற்கள் எதிர்க்கப்பட்டன. பற்களும் பற்களும் மோதின. உதடுகள் கிழிந்து ரத்தம் ஒழுகிற்று. எதிரியின் தற்காப்பைப் பக்கால் குலைக்க முடியவில்லை. பிறகு அது ஸ்பிட்ஸை சுற்றிச்சுற்றி வேகமாக வந்து பாய்ந்தது; உறைபனி போன்ற வெள்ளைக் கழுத்தைக் கவ்விப்பிடிக்க அடிக்கடி முயன்றது. ஒவ்வொரு தடவையும் ஸ்பிட்ஸ் அதைக் காயப்படுத்திவிட்டுத் தப்பித்துக் கொண்டது. பிறகு ஸ்பிட்ஸின் கழுத்தை நோக்கிப் பாய்வதைப் போலப் பல தடவை பாய்ந்து திடீரென்று அதன் தோள்பட்டையின் மேல் சாடி அதைக் கீழே தள்ள பக் முயன்றது. ஆனால் ஒவ்வொரு தடவையும் ஸ்பிட்ஸ் பக்கின் தோளை வகிர்ந்துவிட்டு லாவகமாக
அப்பால் தாவிவிட்டது.

ஸ்பிட்ஸின் மேல் ஒரு சிறு காயமும் இல்லை. பக்கின் உடம்பிலிருந்து இரத்தம் பெருகிற்று. அதன் மூச்சு மிக வேகமாக வந்தது. சண்டை மேலும் பலக்கலாயிற்று. எந்த நாய் கீழே விழுந்தாலும் அதைத் தீர்த்துக்கட்ட எஸ்கிமோ நாய்கள் தயாராக வட்டமிட்டு மௌனமாகக் காத்திருந்தன.

பக்குக்குப் பெருமூச்சு வாங்கிற்று. அதைக் கண்டு ஸ்பிட்ஸ் எதிர்த்துப் பாயத்தொடங்கியது. நிலையாகத் தரையின் கால்களை ஊன்றி நிற்க முடியாமல் பக் தவித்தது? ஒருதடவை பக் தலைகீழாக விழப்போவது போல் தோன்றியது. அதைப்பார்த்ததும் வட்டமிட்டிருந்த அறுபது நாய்களும் அதன் மேல் பாய எத்தனித்தன. ஆனால், தரையில் விழுவதற்கு முன்பே பக் சமாளித்துக்கொண்டு கால்களை ஊன்றி நின்றது. காத்திருந்த நாய் வட்டம் மேலும் காத்திருக்கலாயிற்று.

உயர்வடைவதற்கு வேண்டிய முக்கியமான ஒரு தன்மை பக்குக்கு உண்டு. அதுதான் கற்பனைத்திறமை. இயல்பூக்கத்தின்படி அது இதுவரை சண்டையிட்டது. ஆனால் அது தனது மூளையைக் கொண்டும் சண்டையிட வல்லது. முன்பு தோள்பட்டையிலே சாட முயன்றது போல இப்பொழுது அது பாய்ந்தது; ஆனால் கடைசி நொடியில் தரையோடு படியும்படி கீழாகச் சென்று முன்னால் தாவிற்று. இந்த யுக்தியை ஸ்பிட்ஸ் எதிர்பார்க்கவில்லை. ஸ்பிட்ஸின் இடது முன்னங்காலில் பக்கின் பற்கள் ஆழமாகப் பதிந்தன. எலும்பு முறிந்து நொறுங்கும் சத்தம் கேட்டது. வெள்ளைநாய் இப்பொழுது மூன்று கால்களில் நின்றுதான் போரிட வேண்டியதாயிற்று. அதைக் கீழே தள்ளுவதற்குப் பக் மூன்று முறை முயன்றது. அந்த முயற்சிகள் பயன்பெறாமற் போகவே சற்று முன் தாவியது போலத் தரையோடு படிந்து தாவி ஸ்பிட்ஸின் வலது முன்னங்காலையும் ஒடித்துவிட்டது. ஸ்பிட்ஸுக்கு மிகுந்த வலி ஏற்பட்டது. அதனால் சண்டையிடவும் முடியவில்லை. இருந்தாலும் அது பின்னிடாமல் நிற்பதற்குப் பெருமுயற்சி செய்தது. வட்டமிட்டு நிற்கும் நாய்களின் கண்களில் ஒளி வீசுவதையும், அவற்றின் நாக்குகள் ஆவலோடு தொங்குவதையும், அவற்றின் மூச்சு வெண்புகை போல மேலே கிளம்புவதையும் அது பார்த்தது; அந்த நாய்கள் சுற்றி நெருங்க முயல்வதையும் கவனித்தது. அப்படி நெருங்குவதை அது பல தடவை கண்டதுண்டு. அப்பொழுதெல்லாம் அந்த எதிரியின் மேல் விழவே அவை நெருங்கும். ஆனால் இப்பொழுது தோல்வி தனதே; தன் மேல் விழவே அவை நெருங்கிக்கொண்டிருந்தன.

இனி, அதற்கு நம்பிக்கை இல்லை. இரக்கமின்றிப் பக் தாக்கிக் கொண்டேயிருந்தது. இரக்கங்காட்டுவதெல்லாம் அந்தப் பிரதேசத்திற்கு ஏற்றதல்ல. நாகரிக வாழ்க்கை நடத்தும் தென் பிரதேசத்துக்கு அது ஏற்றதாக இருக்கலாம். இறுதிப்பாய்ச்சலுக்காகப் பக் நல்ல வசதி பார்த்துக் கொண்டிருந்தது. நாய் வட்டம் மிக அருகில் நெருங்கிவிட்டது. எஸ்கிமோ நாய்கள் தன்னைச் சுற்றி மூச்சு விடுவதைப் பக் நன்றாக உணர்ந்தது. ஸ்பிட்ஸின் மேல் விழுவதற்குத் தயாராக நின்று அவைகள் பக்கின் இறுதிப்பாய்ச்சலை எதிர்பார்த்திருந்தன. ஒருகணம் அங்கு அசைவே இல்லை. கல்லாகச் சமைந்தவை போல அந்த நாய்கள் நின்றன. ஸ்பிட்ஸ் மட்டும் துடித்துக்கொண்டும், சீறிக்கொண்டும், உரோமத்தைச் சிலிர்த்துக் கொண்டும் சாவையே எதிர்த்து விரட்டியடிப்பது போலக் காட்சியளித்தது. பக் மாறிமாறிப் பாய்ந்தது. கடைசியில் தோளோடு தோள் மோதிற்று. நிலவு வெள்ளத்திலே முழுகியிருந்த பனிப்பரப்பின் மீது வட்டமிட்டுக் காத்திருந்த நாய்கள் மையத்திற்குத் தாவின; அவைகளுக்கிடையிலே ஸ்பிட்ஸ் மறைந்துவிட்டது. வெற்றி வீரனைப்போல் ஒரு புறத்தில் நின்று பக் பார்த்துக் கொண்டிருந்தது. பூர்வீக விலங்குணர்ச்சி தலைக்கேறி, கொல்வதிலே குணத்தைக் கண்டது.

[1] யூக்கான் பிரதேசத்தின் தலை நகரம், கிளாண்டைக் ஆறு யூக்கான் ஆற்றுடன் கலக்குமிடத்திற்கருகில் உள்ளது.
[2] இது கானடாவில் யூக்கான் பிரதேசத்திலிருக்கிறது. இது லூயிஸ் என்ற ஆற்றுடன் கலந்து யூக்கான் ஆறாக மாறுகிறது.

– தொடரும்…

– கானகத்தின் குரல் (நாவல்), ”The Call of the Wild” by Jack London, ஜாக் லண்டன், தமிழில்: பெ.தூரன், முதற் பதிப்பு: 1958, பதிப்பு: 2000, புதுமைப்பித்தன் பதிப்பகம், சென்னை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *