காந்தரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,674 
 
 

(1969 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தி மாலைப் பொழுது. மேற்கே செம்பஞ்சுக் குழம் படைந்து கிடந்த மேகத்திரளின் பின்னாற் சரிந்து கொண்டிருந்த கதிரவனின் செம்பொற் கிரணங்கள், பூமி யைத் தொட்ட இடமெல்லாம் பொன்னாக்கி இரசவாத வித்தை புரிந்து கொண்டிருந்தன.

செசாரின் கட்டளையைச் சிரமேற்கொண்டு குடிசனக் கணக்கெடுக்கையிற் தம் ஜனன பூமியில் இருக்கவேண்டும் என்பதற்காக நாட்கணக்காக வழிநடந்து வந்த அந்த இருவரும் ‘கொம்பினார் குயில்’ கூவும் சோலைகளையும், மஞ்ஞைகள் ஆடும் மலைகளையும் கடந்து தம் ஜனன பூமியை அண்மித்துவிட்டார்கள். இளைத்துக் களைத்த அவர்களின் நடையைக்கண்டு இது தான் அன்ன நடையோ என ஓதிமங்கள் மயங்கின.

பாவம்! அவளோ நிறை மாதச் சூலி! முதற் குழந்தையை வயிற்றிற் தரித்திருக்கும் எந்தப் பெண்ணும் அழகாகத்தான் இருப்பாள் என்று சொல்லுகிறார்கள்.

ஆனாற் ‘தூயனம் தாண’ நடை பயின்று வரும் அந்தப் பெண்ணோ உலகின் நித்திய சௌந்தர்யம்! பெண்ணழகு என்பதன் இலக்கணமே அந்தப் பெண்ணைக் கண்ட பின்னர் தான், கவிஞன் ஒருவனால் வரையறுக்கப்பட்டி ருக்கும். அத்தனை பேரழகி அவள்! அம்மாதரசியின் முக காந்தியிற் சந்திரனின் தன்மை நிலவுகிறதா? அல்லாற் கண்ணைப் பறிக்கும் சூரியப் பிரகாசமே விடித் தாற் தோன்ற வேண்டும் என்ற ஆதங்கத்தோடு அவள் முகத்திற் குடிகொண்டுவிட்டதா? இல்லை; ‘நான் ஒளியா யிருக்கிறேன்’ என்றவரின் ஒளிதான் அவள் முககாந்தியா? தெய்வீக சௌந்தர்யம்தான் அது!

சொற்கடந்த அந்தச் சுந்தரியோடு அவள் பத்தாவும் மூட்டை முடிச்சுகளுடன் வந்து கொண்டிருக்கிறார். ‘வேள்வி மந்திரத் தீக்கொழுந்து போல நெடிதுயர்ந்து, வேதமே உருவினனாக அவர் நடந்து வருகிறார். ‘அவ னைப் போல ஞானி பிறந்ததுமில்லை; பிறக்கப் போவது மில்லை’ எனப் புகழப்பட்ட சலமோனின் ஞானமும், பென்னம் பெரிய இராக்கதனைத் தன்னந் தனியனாய் எதிர்த்து நின்ற தாவீதின் காம்பீர்யமும் அத்தனை ஏழ்மைக் கோலத்திலும் அவர் முகத்திற் பளிச்சிடு கின்ற ன. 1

இராஜ கட்டளைக்குப் பணிந்து, குடிசனக் கணக் கெடுக்கப் படுகையில் தம் ஜன்ம பூமியில் இருப்பதற்காக அவர்கள் இருவரும் அலுத்துக் களைத்து நடந்து வரு கிறார்கள். எனினும் வழி நடந்த களைப்போ , சிரமமோ அவ்விருவரதும் முக காந்தியை மாற்றுக் குறையச் செய்வதற்குத் திராணியற்றிருந்தன. அவர்கள் உள்ளத் கின் உள்ளொளி, ஒளி மங்கிய அம்மாலைப் போதில், அவர்கள் முகத்தில் ஒளிர்ந்து கொண்டேயிருந்தது. தெய் வீக ஒளி! ‘ வழிநடந்த அல்விருவரும் இப்போது ஊருக்குள் வத்து விட்டார்கள். பாலையையும் சோலையையும் சிரமத்தோடு கடந்தாயிற்று! சொந்த ஊரிற் கால் வைத்து விட்டார்கள். ஊர் தான் எனினும் பிரிந்து சென்று எத் தனை காலமாயிற்று! இனபந்துக்கள் எங்கிருக்கிறார் களோ? இருப்பினும் ஓர் ஏழைத் தச்சனையும், அவன் மனைவியையும் எங்கள் இன்பந்துக்கள் என்று சொல்லிக் கொள்ள எவனுக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது? இருட்டு முன்னர், தங்குவதற்கு எங்காவது இடம் தேடிக் கொள்ளவேண்டும்! .

தளர்ந்து சோர்ந்த அவர்கள் நடையிலே ஒரு வேகம்… ஒரு விரைவு…. இன்னமும் வீடுகளிலே விளக்கேற்றப்படவில்லை. அவர்கள் நடக்கிறார்கள்!

வந்து கொண்டிருக்கும் இரவை மகிழ்வோடு களிப்பதற்காகப் பிற்பகற் சோம்பேறித் தூக்கத்துக்குப் பின்னால் நீர் குடைந்தாடிப் பீதாம்பரம் பூண்டு, வாசனைச் சாந்துகள் பரிமளிக்க, ‘வாழ்க்கை சுகிப்பதற்கே’ என்ற வைராக்கியம் படைத்தவர்களாய் வரும் வாலிப முறுக் கேறிய கூட்டம் வீதிகளிற் பவனி வரத் தொடங்கியது.

தம் நீண்ட பயணத்தின் முடிவை நெருங்கிக் கொண் டிருக்கும் அத்தம்பதிகள் இருவரும் இராப்பொழுதை எங்கே கழிப்பது? என்ற கேள்விக் குறியோடு நடந்து, வானை முட்டும் மாடங்கள் நிமிர்ந்து நின்ற வீதிக்குவந்து விட்டார்கள்,

உப்பரிகை ஒன்றிலே மெல்லென்றரற்றும் மெட்டி களின் ஒலி கேட்கிறது!

நீர் குடைந்தாடி, பீதாம்பரம் பூண்டு, வாசனைச் சாந்துகள் பரிமளிக்க, வாழ்க்கை சுகிப்பதற்கே என்ற வைராக்கியம் படைத்தவர்களாய் வந்த வாலிப முறுக்கேறிய கூட்டம் அங்கே கூடுகிறது.

மேலே உப்பரிகையில் மெல்லென்றரற்றும் சிலம் பணிந்த இடக்காலின் மேல் வலது பாதத்தை வைத்து, ஒருக்களித்த நிலையிலே பொற்றூணிற் சாய்ந்தபடி அவள் நின்றாள்!

காந்தரி நின்றாள்!

புகையன்ன மென்துகில் உடுத்து காத தூரம் மணம் பரப்பும் புத்தம் புது மலர் மாலைகளைப் பூண்டு, களபச் சாந்தணிந்து, பொன் நகைகளால் அணி செய்யப் பெற்ற பொம்மையாய்க் கூற்றன் ஏந்திய வாட் கண்ணினளாய்க், கடற் பவளத்தின் நீண்ட துறைகளிலே முத்துக்களைக் கோத்தது போலத் தன் வெண் பற்களைக் காட்டிக் கொண்டு காந்தரி நின்றாள்! அவள் கண்களிலே ஒரு தாபம்… ஓர் அழைப்பு… அவள் கணிகை! நாட்டியக்காரி! பரத்தை!

அமிர்தம் பூசிய விஷம் என்பதை அறிய மாட்டாத வாலிபர்கள் வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக்கொண்டு நின்றனர்.

மெல்லென்றரற்றும் சிலம்பணிந்த இடது பாதத்தின் மேல், வலக்காலை வைத்து. ஒருக்களித்த நிலையில் பொற்றூணிற் சாய்ந்து கொண்டு, கண்களிலே ஓர் அழைப்போகும், இதழ்க் கடைகளிலே ஒரு தாபத்தோடும் கண்டோர் எவரையுமே தன் குறு நகையில் கொக்கி போட்டிழுத்துக் கொண்டு இருந்த காந்தரி ஆடத் தொடங்கினாள்.

மலையின் மீது மயில்போல, அகிற்புகையில் தோய்ந்த தன் மென் துகிலை விரித்து அங்கங்களின் குழைவையும் திரட்” யையும் வெளிக் காட்டி தாள லயந்தவறாது அவள் ஆடினாள்!

விரித்த மேகக் கூந்தலிடையே மின் வெட்டும் முகத்தை இப்படியும் அப்படியும் வெட்டி, கண்களிற் காமத் தீயைக் கூட்டி, அகிற்புகையின் கம்மென்ற சுகந்தத்தை. அவளையே வெறித்துப் பார்த்துக்கொண்டு இருக்கும் காமுகர்களுக்குத் தூதாக்கி அவள் ஆடினாள்!

கோலமிட்ட அவள் முகமும், அங்கங்களும் அவளது அகவிருளை மறைத்து ஒளிசெய்யக் காந்தரி ஆடிக்கொண்டேயிருந்தாள்!

வண்டாய்ச் சுழலும் அவள் கண்களிற்தான் எத்தனை தாபம்! ” ஓர் தோக்கிலே அவற்றில் காமத் தீ எழும்! அடுத்த நோக்கில் சினம் பொங்கி அச்சுறுத்தும்! திரண்ட மார்பும், குழைந்த புஜங்களும், ஒல்கிய இடை யும் எல்லாமே கண்டோரைக் கிறங்க வைக்கக் காந்தரி ஆடிக் கொண்டேயிருந்தாள்!

வழி நடத்து இளைத்து வந்த அவ்விருவரும் அவள் ஆட்டத்தைக் கண்டு நெட்டுயிர்த்து நின்றனர். மேகத்தினால் மூடப்பட்ட சூரியனைப் போலத் தன் தரித்திரக் கோலத்திலும் காந்தியுமிழ்ந்து கொண்டு இருந்த உலக நாயகி, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறையாய், அமிர்தம் பூசிய விஷமாய், அழகு மிக்க எட்டிக் கனியாய்க் கண்டோரை மயக்குவிக்கும் லளிதத்தோடும், லாவண்யத் தோடும் நர்த்தனஞ் செய்து கொண்டிருக்கும் காந்தரியை ஆதுரத்தோடும் அனுதாபத்தோடும் பார்த்தாள்!

ஆட்டத்தின் சுழற்சியில் எங்கெங்கெல்லாமே கண்களை ஓடவிட்ட காந்தரியும் ‘சொற்கடந்த சுந்தரி’யின் பார்வையைச் சந்தித்தாள்!

ஒரு கணந்தான்! மனுக் குலத்தின் மீட்பவரை தன் உதிரத்திற் தாங்கிய தேவியின் அருள் நோக்கிற் காந்தரியின் பாவங்கள் கரைந்தன!

கடற்பவளத்தின் நீண்ட துறையிலே வெண் முத்துக் களைக் கோத்தது போலத் தன் பவள இதழ்களிடையே வெண்பற்கள் மின்னச் சிரித்துக் கொண்டு இருந்த கணிகை இப்போது சிரிக்கவில்லை!

அழுதாள்!

அவளது கண்ணீரில் அவள் பாவங்கள் கரைந்து கொண்டு இருந்தன. ஞான சூரியனைக் கண்ட தினால் அவள் மனதின் அந்தகாரம் விலகிக்கொண்டு இருந்தது.

அந்த விலகலிற் காந்தரி, கண்டோரை மயக்கும்படி தான் அணிந்திருந்த பொன் அணிகளைக் கழற்றி எறிந் தாள். பூமாலைகளைப் பிய்த்து வீசினாள். இசைமிழற்றிக் கொண்டிருந்த வீணையையும் தாளலயங் கொட்டிக் கொண்டு இருந்த முழவையும் சிதைத்தாள். அடுத்த கணம் மேகத்துட் புகுந்துயர்ந்த தன் மாடத்துட் புகுந்து, தன் பஞ்ச புலன்களும் செய்த பாவங்களை எண்ணி அழுது கொண்டெயிருந்தாள். பெத்லேகம் நகரிலே இராத்தங்குவது எங்கே? என்ற கேள்விக் குறியோடு மரி யன்னையும் மாமுனி சூசையும் தம்வழியில் மீண்டும் நடந்தார்கள்!

– சிந்தாமணி 1969

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *