மீண்டும் காந்தி பிறப்பார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,802 
 

(1962 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

வழமை போற் தேவநாயக வாத்தியார் அதிகாலை யிலேயே விழித்துக் கொண்டாலும் இன்னமும் படுக் ‘கையை விட்டு எழுந்திருக்கவில்லை. புரட்டாசி மாதத்துத் தலை மழை பெய்து தரை நனைந்ததும், நனையாதது மாகத் தன் வீட்டுத் தோட்டத்தை நேற்றுச் சாயந்தரம் முழுமையுமே கொத்திப் புரட்டியதில் உடம்பெல்லாம் அலுப்பாக இருந்தது அவருக்கு. மூப்படைந்து விட்ட வாழைப் பாத்திகளை எல்லாம் அழித்து இம்முறை அந் நிலத்திலே நிலக்கடலை பயிரிட வேண்டும் என்பது அவரது திட்டம். அதை மனதில் எண்ணிக் கொண்டே ஆசிரியர் படுக்கையிற் புரண்டு கொண்டிருந்தார். ‘ விடியற் கருக்களில் எழுந்து கடலுக்குச் செல்லும் மீன் பிடி வள்ளங்களின் தண்டுகள் வலிப்படுகையில், ஏற்படும் மறார் மறார்’ என்ற ஓசை, சாமக்கோழி களின் கூவலோடு அவர் காதுகளில் ஒலித்துக் கொண்டி ருந்தது. எங்கிருந்தோ ஒரு நாய் குலைக்கும் சப்தம். தொடர்ந்து பெரிய பள்ளி வாசலில் பாங்கு ஓதப்படும் நீட்டோசை.

இந்த மண்ணுலகத்து நல்லோசைகளை எல்லாம் கேட்டுக் கொண்டே அலுப்போடு படுத்திருந்தார் ஆசிரியர். உடல் முழுவதும் அடித்துப் போட்டது போல வலி! ‘

அந்தோனியார் கோயிலின் ‘திருந்தாதி’ மணி ஓசை இப்போது அவர் செவிகளில் விழுகிறது. தொடர்ந்து சுவர் மணிக்கூடு ஐந்து அடித்து ஓய்ந்தது.

என்னதான் அலுப்பாக இருந்தாலும் இன்னமும் படுக்கையில் இருப்பதென்பது அவரால் முடியாத காரியம். “யேசுவே!” என்ற முனகலோடு எழுந்து படுக்கையைச் சுருட்டி மூலையில் வைத்துவிட்டு, மெது வாக வெளிக் கதவைத் திறந்துகொண்டு கிணற்றடிப் பக்கம் போனார்.

புரட்டாசி மாதத்துக் கருக்கிருட்டைத் தேய்பிறைத் துண்டு ஒளி செய்ய முயன்றுகொண்டு இருக்கின்றது. அந்த மங்கலான ஒளியில் பழக்க வாசனையின் காரண மாகச் சிரமம் ஏதுமே இன்றித் துலாக் கொடியைக் கிணற்றுள் ஆழ்த்தி நீர் மொண்டு, வாய் கொப்பளித்து முகம் கழுவி விட்டு அடுக்களைப் பக்கமாக வந்தார் , வந்தவர் அடுக்களைக் கதவைத் திறந்து இரண்டு வாளி களை எடுத்துக் கொண்டு மீண்டும் கிணற்றடிக்கு வந்தார். சமீபத்தில் மழை பெய்திருந்ததினாற் பயிர் பச்சைகட்குத் தண்ணீர் ஊற்ற வேண்டிய வேலை இன்றைக்கு இல்லைத்தான். ஆயின் குடங்களில், சட்டி பானைகளில் எல்லாம் நீர் மொண்டு வைக்க வேண்டிய நித்திய கருமம் அவருக்கு இருக்கவே இருக்கிறது!

அந்த வேலை முடிந்ததும், தேவநாயகம் மீண்டும் கிணற்றடிக்கு வந்து அங்கே கிடந்த இரண்டு தகரப்பீப் பாக்களிலும் நீரை நிறைத்து வைத்த பின்னர் மண்வெட் டி.யை எடுத்துக் கொண்டு நிலத்தைக் கொத்தத் தொடங் கினார்.

அதிகாலை நேரத்தில் வேலை சுறு சுறுப்பாகவே ஓடியது. வீட்டோடு சேர்ந்திருந்த அந்த இரண்டு பரப்புக் காணியை அவர் எத்தனையோ தடவைகளிற் கொத்தி யிருக்கிறார். பென்னம் பெரிய ‘முதலை மார்க்’ மண் வெட்டியால் ஆழக் கொத்தி, ஒவ்வொரு வேராய், ஒவ்வொரு கிழங்காக அரித்து எத்தனை தான் சிரமப்பட் டாலும், வெட்ட வெட்டத் தழைக்கும் அசுரன்போல வளர்ந்து வரும் முத்தக்காசிக் கிழங்கையும் கோரைப்புல்லையும் அவரால் அழிக்கவே முடியவில்லை . ‘நிழல் இருந் தால் அவை வளராது’ என்று யாரோ சொல்லியதைக் கேட்டு ஒரு முறை அந்த நிலத்திலே மரவள்ளி நட்டிருக் கிறார். அதன் பின்னால் வாழைத்தோட்டம் போட்டார். என்ன தான் செய்தாலும் மனத்திலே கிளர்ந்தெழும் தீய எண்ணங்கள் போல, அவை வளரத்தான் செய்தன. அந்த ஆத்திரத்தில் வேதநாயக வாத்தியார், மண்வெட்டியை ஓங்கி எறிந்து பூமாதேவியே அதிரும்படியாகக் கொத்திப் புரட்டிக் கொண்டேயிருந்தார்.

சமையற்கட்டிலே எரிந்து கொண்டிருந்த குப்பி விளக்கொளி, பிள்ளைப் பேறுகளினால் ஒல்லியாய் இளைத்து விட்ட அவர் மனைவியும் வேலை செய்யத் தொடங்கி விட்டார் என்பதை அவருக்கு அறிவித்துக் கொண்டேயிருந்தது. எல்லாரும் கோப்பி போட்டு, ஒன்றரைக் கொத்து மாவிற் காலைப் பலகாரஞ் செய்து, அதற்கு வியஞ்சனமாக எதெதையோ படைத்து… ஆமாம். அவளுக்கு என்றைக்குமே ஓய்வே இல்லை.

தேவநாயக வாத்தியார் கொத்திக் கொண்டேயிருந் தார்.

ஆலய மணி ஓசை நீளமாக ஒலித்துக் காலைப் பூசையை நினைவூட்டிற்று.

ஆசிரியரைப் பொறுத்த அளவிற் தினப் பூசைக்குச் சென்று எவ்வளவோ காலமாகிவிட்டது. மனமில்லாத தினால் அல்ல. நேரந்தான் கிடைக்கவில்லை. காலைப் பசைக்கு அழைக்கும் கோயில் மணி, அவரைப் பொறுத்த மட்டிற் பாடசாலையில் அடுத்த பாடத்துக்கு அடிக்கப் படும் மணி ஓசையைப் போல ஒரு வெறும் அறிவித்தலாக மட்டுமே அமைந்திருந்தது.

அந்த அறிவித்தல் கிடைத்ததும் மண்வெட்டி யைத் தோளில் வைத்தபடி வீட்டினுள்ளே சென்று ஒரு மூலையில் அதைச் சார்த்தி வைத்துவிட்டு, மண்டபத் திலே கிடத்தப்பட்ட வாழைக் குட்டிகளைப் போல அணிஅணியாகப் படுத்திருக்கும் தன் குழந்தைகளை ஒவ்வொரு வராக எழுப்பத் தொடங்கினார். முணகலோடும், சிணுங் கலோடும், அழுகையோடும். ஒவ்வொருவராக அவர்கள் எழுந்ததும், எல்லாரையும் அழைத்துக் கொண்டு கிணற்றடிப் பக்கம் போனார். போகுமுன்னர், வானொ லிப் பெட்டியைத் திறந்து அதன் முள்ளைச் சென்னை நிலையத்திற்குத் திருப்பி வைக்கும் வழமையான பணி யைச் செய்ய அவர் மறக்கவேயில்லை!

அதிகாலையிற கிணற்றடியில் அவர் ஒரு போரே தடத்த வேண்டியிருக்கும். மூத்த குழந்தைகளை மொண்டு வைத்திருக்கும் நீரில் ஒவ்வொருவராகக் குளிப்பாட்டி, இன்னமும் அழுதபடியே இருக்கும் சின்ன துகளை’ முகம் கழுவித் துடைத்து, வீட்டுக்குள் எங்கெங்கெல்லாமோ கிடக்கும் அவர்கள் உடைகளைத் தேடி ஒவ்வொரு வருக்கும் அணிவித்து அவர்கள் எல்லாரையும் காலைப் பூசைக்கு அனுப்பி வைப்பது அவருக்கு ஒரு வில்லங்கமான சடங்கு!

அன்றும் அவரது அபிமான புத்திரன், ஐந்து வயதுத் ‘ தவா’ என்ற தவநாயகம் அடம்பிடித்துக் கடைசி ஆளா கப் பூசைக்குப் புறப்பட்டபோது சென்னைவானொலியிற் தோத்திரப்பாடல் முடிவடைந்து யாரோ உபதேசம் பண்ணிக் கொண்டிருந்தார்.

வானொலியின் உபதேசங்களையோ, அல்லது நெக் குருக வைக்கும், அதன் தோத்திரப் பாடல்களையோ ஆசி ரியர் என்றைக்குமே இரசித்துக் கேட்டவரல்ல. காலை நேரங்களில் அவ்வானொலிப் பெட்டி அவருக்கு ஒரு கடிகாரத்தின் சேவையைத்தான் பிரதிப்பயன் கருதாது செய்து கொண்டிருந்தது. தோத்திரப் பாடல்கள் முடிந் தால் மணி ஆறரை. பின்னர் ஆறு முப்பத்தைந்து வரை நிகழ்ச்சிக் குறிப்பு. மறை வழி என்ற உபதேசம் ஆறு நாற்பது வரை. அதற்கும் பின்னால் ஐந்து நிமிடங்கட்கு ஆங்கிலச் செய்தி. இந்த நேர அட்டவணை வானொலிக்காரரை விட வாத்தியாருக்கு நன்றாகத் தெரிந் திருந்தது. |

வீட்டைத் தட்டிக் கூட்டிக் கொண்டிருந்த ஆசிரியர், வானொலியைச் சென்னையிலிருந்து கொழும்புக்குத் திருப்பி வைத்தார். அங்கே இஸ்லாமிய நற்சிந்தனை நடந்து கொண்டிருந்தது.

நற்சிந்தனை என்பதிலேயே இஸ்லாம்–கிறீஸ்தவம்— சைவம் என்ற பாகுபாடு! இதெல்லாம் சுத்த அபத்தம் என்பது ஆசிரியரின் கொள்கை. ஆனாற் காலைட் போதில் வானொலி அவருக்கு ஒரு கடிகாரம் மட்டுமே. இஸ்லாமிய நற்சிந்தனையோ – அல்லது கிறீஸ்தவ நற் சிந்தனையோ முடிந்தால் நேரம் ஆறே முக்கால் மணி ஆகிறது என்பதில் மட்டுமே அவர் கண்!

இஸ்லாமிய நற்சிந்தனை முடிந்து இலங்கை வானொலி செய்திகளை ஒலி பரப்பிக் கொண்டிருந்தது. ஆசிரியர் வீட்டைப் பெருக்கி முடித்துக் கொண்டிருக்கை யிற் செய்திகள் முடிவடைந்து அறிவிப்புக்கள் நடைபெற் றுக் கொண்டிருந்தன. மரண அறிவிப்புக்கள்… காலை வேளையிலே அபசகுனம் போல….

ஆசிரியர் வானொலியின் கழுத்தைத் திருகி அதைக் கொன்று, மீண்டும் அதற்கு உயிரூட்டிச் சென்னைக்குத் திருப்பினார். சென்னை நாதஸ்வர கானத்தைப் பொழிந்து கொண்டிருந்தது.

வீட்டிலே இத்தனை ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றுக் கொண்டிருக்கையாலும் தூங்கிக் கொண்டே யிருந்த அவர் மூத்த மகன் ஜோசப், அப்போதுதான் எழுந்து வந்து முன் விறாந்தையிற் கிடந்த சாய்கதிரையிற் சார்ந்து கொண்டே, கையோடு கொண்டு வந்த புத்தகத் தைப் படிக்கத் தொடங்கினான். அவன் கோப்பியை எதிர் பார்த்திருக்க வேண்டும். ஆனால் அப்பா தும்புக்கட்டும் கையுமாக நிற்பது, அவன் அடுக்களைக்குட் செல்வதையோ, அதிகாரஞ் செய்வதையோ தடுத்து நிறுத்தி யிருக்கக் கூடும்.

தேவநாயக வாத்தியார் மகனின் கையிலிருந்த புத்தகத்தை ஒரு நோட்டம் விட்டார்! அவர் மனதிலே ஒரு நிறைவு… ஆமாம். எச். எஸ். சி. சோதனை எடுத்து விட்டுச் சர்வகலா சாலைக்குப் போக முடியாத வகையில் அப்பரீட்சையிற் சித்தியடைந்து வீட்டுக்கு வந்திருந்த ஜோசப், எந்தவிதத்திலும் உ.டம்பை வளைக்காது, குடும் பத்திற்குப் பாரமாய், நாளும் பொழுதும் கார்ல்மாக்ஸின் ‘கபந்த தத்துவ’ நூல்களையே படித்துக் கொண்டிருந் தான், ஆயின் இப்போது அவன் கையில் வைத்துக் கொண்டிருந்த நூல் மகாத்மாவின் சுயசரிதம்; சத்திய சோதனை…. |

‘எந்தத் தொழில் செய்வதிலும் இழிவில்லை’ என்ற தத்துவத்தை அந்த நூலாவது அவனுக்கு விளக்குமா? என்ற ஆசையோடு வீட்டைக் கூட்டி வெளியிற் தள்ளி, ஈர்க்கு விளக்குமாற்றை எடுத்துக் கொண்டு முற்றத்தைக் கூட்டத் தொடங்கினார். அப்படிப் பெருக்கிக் கொண்டி ருக்கையில் அவர் மனம் மட்டும், இறந்த காலச் சருகு களைப் பெருக்கிக் கொண்டிருந்தது.

இருபத்தொரு ஆண்டுகளின் முன்னே… அப்போது அவருக்குத் ‘திருமணம் நடந்து சில மாதங்கள் தான் ஆகி யிருந்தன. அப்போதுதான் அந்தச் செய்தி உலகையே அதிர வைத்தது.

தழதழக்கும் குரலிலே மனிதருள் மாணிக்கமான ஜவகர்லால் நேரு வானொலியிற் பேசினார். • நண்பர்களே! தோழர்களே! ஒளி அணைந்து விட்டது’

ஆட்டுப் பாலையும் மொச்சைக் கொட்டையையும் சாப்பிட்டு உலக வரலாற்றிலே விந்தை புரிந்த அந்த வாமனர் , வெறியனின் குண்டுக்கு இரையாகிச் செத்த அந்தச் சேதியைக் கேட்டு உலகமே கண்ணீர் வடித்தது.

அந்த அருட்டுணர்வின் காரணமாகத்தான் தேவ நாயகமும் மகாத்மா காந்தி பற்றிய நூல்களை எல்லாம் படித்தார். அம் மகாத்மாவின் பிரதம சீடர்களில் ஒருவரான ஜோசப் கொர் நீலியஸ் குமரப்பா எழுதிய கிராமப் பொருளதாாரம் என்ற நூலைப் படித்துக் கொண்டிருககையிலேதான் அவர் மூத்த மகனும் பிறந் தான். அவர் தாயார் எத்தனையோ தடுத்தும், தேவநாயக வாத்தியார், தன் குழந்தைக்குத் தன் தந்தையின் பெயரைச் சூட்டாது, ஜோசப் கொர் நீலியஸ் என்று பெயரிட்டார்!

இப்போது இருபது ஆண்டுகள் கழிந்து விட்டன. மகாத்மாவே ‘வலிந்து’ கைக்கொண்ட பிரமச்சாரியத் தைக் கைக் கொள்ளத் தவறியதினால் இன்று ஏழு குழந்தைகட்கு அவர் தந்தையாகி விட்டார். ஆசிரியத் தொழிலின் அற்ப ஊதியத்தினிடையே தன் மூத்த மகனை எங்கெங்கெல்லாமோ அனுப்பிப் படிக்க வைத் தார். இன்று அவன் படித்து விட்டு, அந்தப் படிப்பினால் உடலுழைப்பே அவமானம் என்ற எண்ணத்தோடு வீட்டிற் குந்திக் கொண்டிருக்கிறான். கார்ல் மாக்ஸின் ‘கபந்த தத்துவம்’ அவனை ஆட்கொண்டிருக்கிறது. தான் ஆசையோடு சூட்டிய பெயருக்கே ஹானி விளை விப்பனாய், ‘துப்பாக்கிக் குண்டுகளிலிருந்துதான் அதி காரம் பிறக்கிறது’ என்று வாதிக்கிறான். கூட்டங்களிற் பேசுகிறான். நண்பர்களைக் கூட்டுகிறான். உலகத் தொழிலாளர்கட்காகப் பரிந்து பேசும் அவனால் உழைத்து ஓடாகிக் கொண்டிருக்கும் அவன் தாய்க்கு ஒரு வாளித் தண்ணீர் அள்ளிக் கொடுக்க மட்டும் முடிய வில்லை !

நேற்றுப் பாடசாலைக்குப் புறப்படுகையில் அவர், ஜோசப்பிடம் சொல்லிவிட்டுப் போனார். ‘தம்பி. நம் வயலிலே அறுவடை நடக்கின்றது. மத்தியானச் சாப்பாட்டிற்கு அறுவடை செய்பவர்.கட்கு அரிசி சாமான்களைக்கொண்டு போய்க் கொடு.’

ஆனால் அவன் போகவே இல்லை.. புத்தகம் படித்துக் கொண்டே சோம்பேறித்தனமாக இருந்து விட்டான்.

.. அதை நினைக்கவே ஆசிரியருக்கு ஆத்திரமாக இருந் தது. காந்தியை மஹாத்மா ஆக்கிய முடிவுமட்டும் (Unto the last) என்ற நூலைப் படித்துவிட்டுக் காந்தியடிகள் குறிப்பிட்டது. அவர் ஞாபகத்திற்கு வந்தது.

எல்லாரும் தத்தமது தொழிலைச் செய்ய உரிமை இருப்பதால், ஒரு வழக்கறிஞன் தொழிலும் ஒரு நாவிதன் தொழிலும் – ஒரே மதிப்புடையவை. உழைப்பின் பாற்பட்ட வாழ்க்கைதான்-அதாவது வேளாண்மை செய்யும் உழவனின், கைத்தொழில் செய்யும் உழைப்பாளியின் வாழ்க்கை தான் வாழ் வதற்கே ஏற்றது.

தன் மைந்தனைப் பொறுத்தவரையிற் தொழில செய்வதையே அவன் இழிவாகக் கருதுகிறான். தோட்டத் தைக் கொத்துவதையோ, வயலில் வேலை செய்வதையோ, ஏன் புழுதியில் விளையாடி அலங்கோலமாக இருக்கும் தன் உடன்பிறப்புக்களைக் கழுவித் துடைப்பதுகூட அவனுக்கு வெட்கமாக இருக்கிறது. இந்த நிலையில் அவன் ‘சோஷலிஸம்’ பேசுவதில் மட்டும் சலிப்படையாது இருக்கிறான். ‘2.ழைப்பவனுக்கே நிலம் சொந்தம் என அடித்துப் பேசுகிறான். செல்வம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று குமுறுகிறான். அவனைப் போன்று உழைக்கவே முடியாத, சோம்பேறித்தனம் படைத்தவர் களால் சிருஷ்டிக்கப்பட்ட வறுமையைப் பகிர்ந்தளிப்பது தான் சோஷலிஸமா?

நாதஸ்வர கானம் பொழிந்து கொண்டிருந்த வானொலி, செய்தி அறிக்கையை ஒலிபரப்பத் தொடங்கிற்று .

ஏழேகால் மணியாகிவிட்டதைத் தெரிந்து கொண்ட ஆசிரியர் அவசர அவசரமாக முற்றம் பெருக்குவதை முடித்துக் கொண்டு, கிணற்றடிக்குச் சென்று தலையில் மளமளவென்று இரண்டுவாளி தண்ணீரை ஊற்றித் தன் குளிப்பை முடித்துக்கொண்டு வீட்டுக்கு வந்தார்.

செய்தி அறிக்கை இன்னமும் தொடர்ந்து கொண்டே இருந்தது.

ஜோசப்பிற்குத் தன் வாசிப்பில் இரசனை ஏற்பட வில்லை என்பதை அவன் முகம் காட்டிற்று. சத்திய சோதனையாவது மண்ணாவது! விறுவிறுப்போ வேகமோ இன்றி ஒரே ‘வழா வழா’ என்று வேகமே இல்லாமல் அந்நூல் இருப்பதாக அவன் எண்ணினான். ‘இந்த இயந்திர யுகத்திலே இராட்டையிலே நூல் நூற்பதும், ஆட்சியாளரின் தடியடிக்கு எதிராகக் கையைக் கூட உயர்த்தாமல் ராமநாம ஜபம் பண்ணிக் கொண்டு அமர்ந்திருப்பதும், பிறர் செய்த குற்றங்கட்காக உண்ணாவிரதமிருப்பதும்- எல்லாமே வேடிக்கையான வாதங்களாகத்தான் இருக்கின்றன’ என்று எண்ணிக் கொண்டே வெறுப்போடு புத்த கத்தை மூடினான் ஜோசப். மூடியவன் அப்போது தான் பூசை முடித்து வீட்டுக்கு வந்திருந்த தம்பியைப் பார்த்து “போய்க் கோப்பி கொண்டுவாடா’ என்று விரட்டினான்.

‘உழைக்காத உனக்குச் சாப்பிட மட்டும் என்ன உரிமை இருக்கிறது’ என்று கேட்க விழைந்தார் ஆசிரியர். ஆனால் வானொலி செய்தியை முடித்துக் கொண்டதை உணர்ந்ததும் தன் உணர்ச்சிகளை அடக்கிக்கொண்டு அவசர அவசரமாகத் தன் காலை ஆகாரத்தைக் கொறிக்கத் தொடங்கினார்.

செய்திகளை முடித்துக் கொண்ட வானொலி மகாத்மாவின் நூற்றாண்டு விழாவையொட்டி அவரது பொன்மொழிகளை ஒலிபரப்பத் தொடங்கிற்று.

‘நான் வெற்றி பெறும் ஆற்றல் ஏதுமே இல்லாத சாதாரணமான மனிதப் பிறவி. நான் செய்யமுடியும் ஒன்றை ஏன் எல்லோரும் செய்ய முடியாது? சாதாரண மனிதப் பிறவியாகிய நான், என் ஆசாபாசங்களைக் கட்டுப்படுத்துவதைவிட மற்றவர் கள் மிக எளிதில், அல்லது என்னளவுக்காவது நிச்சயம் கட்டுப்படுத்த முடியும்.’

இதனைக் கேட்டதும் ஆசிரியருக்கு மகாத்மா காந்தி யைப் பற்றி வின்சன்ற் ஷீன் என்பவர் எழுதிய வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. ‘இவ்வாக்கியங்களிலுள்ள முரண்பாடுதான் தென் ஆபிரிக்கா, இந்தியா, உலகம் ஆகியவற்றில் அவர் கண்ட தோல்விக்கு அளவுகோல். தான் செய்ததை மற்றவர்களும் செய்ய முடியும் என அவர் நம்பினார். காந்தியடிகள் இழைத்த இம்மாபெரும் தவறுதான் மனித வரலாற்றில் மகத்தான தோல்வி கண்ட சாக் ரட்டீஸ், புத்தர், யேசு ஆகிய மூவரின் வரிசையில் அவரைச் சேர்க்கிறது. இவர்கள் எல்லாரும் தாங்கள் செய்ததை எல்லாம் ஏனையோரும் செய்ய முடியும் என நம்பினர் . அவர்கள் தவறு செய்தனர். அதுபோலவே காந்தியடிகளும் செய்து விட்டார் ‘

மனக்கலக்கமடைந்த ஆசிரியர், எதிரே மாட்டப் பட்டிருந்த சேசுபிரானின் படத்தைப் பார்த்தபடி ‘ஆண்டவரே உடலுழைப்பு அவமானத்துக்குரியதல்ல’ என்று என் மகனுக்குப் புத்தி தருவித்து காந்தியடிகளைத் தவறு செய்யாதவராக ஆக்கிவிடும்’ என்று மனமுருகப் பிரார்த்தித்த வண்ணம் தன் பாடசாலையை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருந்தார்.

– காந்தி நூற்றாண்டுக் கதைகள் 1962

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *