காத்தரீன் ஒரு பொறுக்கி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 4, 2023
பார்வையிட்டோர்: 488 
 

(2014ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

எல்லோரும் நேரடியாக முன்பக்க வழியாக மளிகைக் கடைக்குப் போவார்கள் என்றால், காத்தரீன் மட்டும் குழப்படியான வழியில் தான் போவாள். கடைக்குப்போவும் முன்னர், கடையின் பின் பக்கம் போய் நோட்டம் விடுவாள், பின் என்னுடன் உள்ளே வருவாள், கடையில் எதுவும் வாங்க மாட்டாள், நான் விலையைப் பார்க்க பொருளை எடுப்பேன், அவள் தேதியைப் பார்த்துவிட்டு வைத்துவிடுவாள். நான் 20 ஈரோக்களுக்கு மேல் மிகாமல் அந்த வாரத்திற்கான பொருள் வாங்கிவிடுவேன். அவளோ தண்ணீர் போத்தலோ ஒரு குளிர்பான போத்தலோ மட்டுமே வாங்கிக் கொள்வாள். திரும்ப வீடு வரும்பொழுதும், கடைக்குப் பின்னர் போய் நோட்டம் விடுவாள். அங்கு ஏற்கன்வே சுற்றிக்கொண்டிருக்கும் வியன்னாவின் அசிங்கமான ஜிப்ஸிக்களும், கருப்பர்களும், ஏழைப் பாகிஸ்தானிகளும் அவளை ஒரு மாதிரியாகப் பார்ப்பார்கள். சிலரைப் பார்த்து சினேகமாக சிரிப்பாள், சிலரை முறைப்பாள்.

காத்தரீன் என் உடன் படிப்பவள், வாரத்தின் சில நாட்களில் என்னுடன் உறங்குபவள், தோழி என்றும் வைத்துக்கொள்ளலாம்.

ஓரிரு முறைதான் அவளின் வீட்டிற்குப் போய் இருக்கின்றேன். சைவ சாப்பாட்டுக்காரி என்பதால், அடுக்களை முழுவது காய்கறிகளாக அடுக்கி வைத்திருப்பாள். உயர் ரக பழச்சாறுகள் கூட இருக்கும். முந்தைய முறை இல்லாத நாற்காலிகள், படுக்கை விரிப்புகள் அலங்காரப் பொருட்கள் என அனேகத்திற்கு அவள் வீடு நிரப்பப்பட்டு அழகாக இருந்தது.

“நாளைக்கு வீட்டுக்கு வருகிறாயா,?” எனக் கேட்டதற்கு

“எத்தனை தடவை சொல்லி இருக்கின்றேன், சனிக்கிழமை மட்டும் எங்கும் கூப்பிடாதே என்று” யோசித்துப் பார்த்ததில் பழகிய இந்த ஆறு மாதங்களில் ஒரு நாள் கூட நாங்கள் சனிக்கிழமையன்று சந்தித்துக் கொண்டது கிடையாது.

பகுதி நேர வேலை பார்க்கிறளா என்றால் அதுவும் கிடையாது. ஏதாவது பணக்காரனுக்கு சனிக்கிழமை மட்டும் தொடுப்பாக இருக்கின்றாளா என்ற சந்தேகம் ஆசை அறுபது, மோகம் முப்பது முடிந்த சில மாதங்களாகவே எனக்கு இருக்கின்றது. ஒரு பிரெஞ்சுப் படத்தில், கல்லூரி மாணவி வாரத்தில் ஒரு நாள் மட்டும் 60 வயது கிழவனுக்கு வேண்டியதைக் கொடுத்துவிட்டு வருவாள், அவன் அவளை மிகவும் கொடுமைப்படுத்துவான்.

எந்தப் பொருளையும் வாங்க ஒரு ஈரோ கூட செலவழிக்காதவளுக்கு எப்படி அத்தனை விசயங்கள் அவள் வீட்டில் இருக்கின்றன என்ற வியப்பும் உண்டு. ஆனாலும் அவள் நடுத்தர வர்க்கமோ ஏழைப் பெண்ணோ இல்லை.

அவளின் அப்பா ஆஸ்திரிய அரசாங்கத்தில் தகவல் தொழில் நுட்பப் பிரிவில் பெரும் பதவியில் இருக்கின்றார். அவளின் அம்மா வியன்னாவில் இருந்து முன்னூறு கிலோ மீட்டர்கள் தூரத்தில் இருக்கும் ஒரு நகரத்தில் பேராசிரியை. அம்மாவும் அப்பாவும் அன்னியோன்னியமாக ஒன்றாகத் தான் இருக்கின்றார்கள். ஒரு முறை அவர்களைச் சந்தித்து இருக்கின்றேன், கொஞ்சம் டதுசாரி ஆட்கள், எனக்குப் பிடிக்காது. காத்தரீனும் அதே மனோநிலையில் இருப்பவள்தான். ஏழைகள், அகதிகள், ஒடுக்கப்பட்டவர்கள் என அடிக்கடி இந்த ரீதியில் பேசிக்கொண்டிருப்பாள். எனக்கென்னமோ அவர்கள் எல்லாம் சபிக்கப்பட்டவர்கள் எனத் தோன்றும், கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியவர்களுக்குத் தான் கஷ்டங்கள் வரும் என்ற மனப்பான்மையில் இருப்பவன் நான்.

“சாப்பாட்டை வீணாக்கதே, நீரை அளவாகப் பயன்படுத்து, மின்சாரத்தை தேவையான அளவு உபயோகி” என அரசாங்க விளம்பரங்கள் போல ஏதாவது பேசிக்கொண்டே இருப்பாள்.

இந்த எல்லா நச்சரிப்புகளைத் தாண்டியும், அவளின் தொடர்பில் இருக்கக் காரணம், அழகும் அழகு சார்ந்த விசயங்களும் தான்.

நீண்ட காலத்திற்கு பின்னர் விரும்பும் பெண்ணை வேவுப்பார்க்கப் திட்டமிட்டேன்.. பிரெஞ்சுப் படத்தில் காட்டியபடி எதுவும் நடக்கின்றதா என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அந்தக் காலத்தில் காதலித்த பொழுது, உளவாளிக்கே உளவாளி வைத்து, திருட்டுத்தனங்களை கண்டுபிடித்தவன் நான்.

மறுநாள், எழுந்தவுடன் இணையத்தில், மின்னரட்டையில் இருக்கின்றாளா எனப் பார்த்தேன், எனக்காகவே காத்திருந்தவளாய், மின்னரட்டையில் பேச ஆரம்பித்தாள். பிறகு தொலைபேசினாள். மாலை வரை இணையத்தில் தான் இருந்தாள். ஸ்கைப்பில் வந்ததால், வீட்டில் தான் இருக்கின்றாள் என உறுதி செய்து கொண்டேன்.

“வீட்டில் தானே இருக்கிறாய், எனது இல்லத்திற்கே வந்து இருக்கலாமே

“இல்லை, இல்லை முக்கியமான வேலை 8 மணிக்குப் பிறகு இருக்கின்றது, இன்னும் சிறிது நேரத்தில் கிளம்பிவிடுவேன்” என்றாள்.

விடுவிடுவென உடைகளை மாற்றிக்கொண்டு, டாக்ஸி எடுத்துக்கொண்டு அவளின் வீட்டின் தெருவில் முனையில் சடுதியில் வந்தேன்.

காத்தரீன் தனியாகத் தான் வந்தாள். முதுகில் மிகப்பெரும் பையை மாட்டி இருந்தாள். கைகளிலும் இரண்டு பைகள் இருந்தன. அதில் சுமைகள் எதுவும் இல்லை. சலனமே இல்லாமல் நடந்து வந்து கொண்டிருந்தாள்.

நான் மறைந்து கொண்டேன். என்னைக் கடந்தவுடன், அவளைத் தொடர்ந்தேன், மெட்ரோ ரயிலின் முதற்பெட்டியில் அவள் ஏறிக்கொள்ள, நான் அதற்கடுத்த இரண்டாவது பெட்டியில் ஏறிக்கொண்டேன். ஒவ்வொரு நிலையத்திலும் வெளியே வந்துப் பார்த்துக்நிலைகொண்டேன், அவள் இறங்குகிறாளா என்று,… கடைசி நிலையத்தில் இறங்கினாள். சில மீட்டர்கள் இடைவெளிவிட்டு தொடர்ந்தேன்.

நேற்று மளிகைக் கடைக்குப்பின்னால் பார்த்த ஜிப்சிக்களில் ஒருவன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவனும் அவளும் கட்டிக்கொண்ட பின்னர் உடன் நடந்தனர். எப்படியும் அரைக்கிலோ மீட்டர் நடந்து இருப்பார்கள்.

வியன்னாவிலேயே மிகப்பெரும் பலசரக்குக் கடைக்குப்பின்னால் இருந்த இருட்டிற்குள் நுழைந்தார்கள் சென்றார்கள், மனம் இருண்டாலும், இருட்டை கண்களுக்குப் பழக்கப்படுத்திக்கொண்டு அவர்களைத் தொடர்ந்தேன்.

கேவலம் ஜிப்சியுடனா !!! அதுவும் இந்த இருட்டிலா, ச்சேச்சே இருக்காது… பைகள் வேறு கொண்டு வந்திருக்கிறாளே !!! ஜிப்சிக்களில் சிலர் திருட்டுக்குப் பெயர் போனவர்கள் ஆச்சே !!! ஒரு வேளை சூப்பர் மார்க்கெட்டை கொள்ளையடிக்கப் போகின்றனரா !!!

இப்பொழுது மேலும் சில ஜெர்மன் குரல்கள் கேட்டன … உருது உச்சரிப்புடன் கூடிய ஜெர்மன், தடித்த கருப்புக்குரலில் ஜெர்மன் என சில வகையான ஜெர்மன்கள் …. பெண்களின் குரல்களும் கேட்டன.

மெலிதாக வெளிச்சம் வர, அது காரின் முகப்பு விளக்கில் வருவது…. அதற்கு நேர் எதிரே, மிகப்பெரும் கண்டெயினர்கள், அவைகள் சூப்பர் மார்க்கெட்டின் குப்பைகளை போடுபவை. ஒருவருக்கொருவர் உதவி செய்ய, தலையில் சுரங்கங்களில் வேலை செய்பவர்கள் வைத்திருக்கும் தலை விளக்கை, காத்தரீன் தலையில் கட்டிக்கொண்டு கண்டெயினரினுள் குதித்தாள்.

அவள் உள்ளிருந்து எடுத்துப்போட கூட்டம் தங்களுக்குள் மெலிதாக ஆர்ப்பரித்தது.

அவை எல்லாம் தேதி கடந்தவை என ஒதுக்கப்பட்ட பொருட்கள்.

இதை நான் கேள்விப்பட்டு இருக்கின்றேன், இப்பொழுதுதான் கண்கூடாகப் பார்க்கின்றேன். ஐரோப்பாவின் உணவுத்தரக் கட்டுப்பாடுகள் அதிகம். பயன்படுத்தக் கூடிய நாட்கள் அதிகமாக இருந்தாலு, அதில் கால்வாசி நாட்களுக்கு முன்னரே எக்ஸ்பையரி தேதி குறித்து விடுவார்கள். குப்பைகளில் இருந்து எடுக்கப்படுபவைகளை மேலும் ஒரு வாரத்திற்காவது பயன்படுத்திக் கொள்ளலாம். கிட்டத்தட்ட நான்கைந்து கண்டெயினர்கள். அவர்களின் தலைவியே காத்தரீன் தான் போலும். சத்தமாகப் பேசியவர்களை அதட்டியபடி, உற்சாகமாக தரம்பிரித்து எடுத்துக் கொண்டிருந்தாள். இரண்டு கருப்பர்கள் வேறு யாராவது வருகிறார்களா, என நோட்டம் விட்டுக்கொண்டிருந்தார்கள்.

பத்து பேர் கொண்ட குடும்பம், பத்து நாட்களுக்கு தாராளமாக சாப்பிடும் வகையிலா காய்கறிகள், பால், பழச்சாறுகள், பழ வகைகள்.

ஐரோப்பிய சாலடுகள், பிரெட், வெண்ணெய், என அத்தனையும்.

அனைத்துக் கண்டெயினர்களும் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், காரின் வெளிச்சத்தில் ஆளுக்குத் தகுந்தாற்போல அனைத்தையும் சமதர்மமாக பங்கிட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தாள். உற்று நோக்கியதில் அங்கிருந்ததில் சிலர் மட்டும் ஏழைகள், மற்ற அனைவரும் ஓரளவிற்கு வசதியானவர்களே !!!

“போன வாரம் இதற்காகத் தான் உன்னிடம் சண்டை போட்டேன், கோவிச்சுக்காதே, இந்த வாரம் நீ எடுத்துக்கோ” என பெரிய வாழைப்பழ பையை அவளிடம் நேற்று காத்தரீனா முறைத்த கருப்பன் நீட்டினான்.

“போன வாரக் கோபம், போன வாரத்தோட போச்சு, நீ தான் காலையில் ஓட்டப்பயிற்சி எடுக்கிறாய், உனக்குத் தான் தேவைப்படும்”

ஒருப்பக்கம் அருவெறுப்பாக இருந்தாலும், மறுப்பக்கம் நான் ஏற்றுக்கொள்ள மறுக்கும் ஏதோ ஒரு விசயத்தை சொல்ல வருவதைப்போல இருந்தது…

“மறக்காமல் வீட்டிற்குப்போனதும், அத்தனைப் பொருட்களையும் கழுவிடுங்கள், எது முன் தேதியோ அந்தப் பொருளை உடனேப் பயன்படுத்தவும்” காத்தரீனிடம் இருந்து மற்றொரு உத்தரவு கேட்டது.

தனக்குத் தேவையானதை எடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனித்த காத்தரீனின் கண்கள் என்னைக் கவனித்துவிட்டன என்பதை உணர்ந்தேன். எத்தனை இரவுகளில் இருட்டில் ஒருவருக்கொருவர் பழக்கப்பட்டிருப்போம்.

“கார்த்தீ….” என அவள் சொல்ல, அங்கிருந்த ஒருவன் அவள் பார்த்த திசையை நோக்கி, அதாவது என்னை நோக்கி டார்ச் வெளிச்சம் அடித்தான். அருவெறுப்பிற்கு அப்பால் இருக்கும் அழகியலுடன் இருக்கும் அவர்களுடன் சேர்ந்து கொள்ளலாமா, இல்லை அசிங்கத்தை மிதிக்காமல் இப்படியே விடுவிடுவென எதிர்ப்பக்கம் நடந்துவிடலாமா என யோசித்துக் கொண்டிருக்கின்றேன் !!!

அங்கிருந்த அனைவரும் என்னைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கையசைத்து அவர்களை நோக்கிக் கூப்பிட்டனர்.

நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கின்றேன்.

– வினையூக்கி சிறுகதைகள், முதற் பதிப்பு: 2014, மின்னூல் வெளியீடு:http://FreeTamilEbooks.com, வினையூக்கி செல்வகுமார், சுவீடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *