காட்டிக் கொடுத்தவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 3,362 
 
 

(2002ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) 

அன்று பொழுது என்னவோ வழக்கம்போல்தான் விடிந்தது. தாமோதரனும் வழக்கம் போலவே அதிகாலையில் எழுந்துவிட்டார். காகங்கள் கரைவதும், இதர புள்ளினங்கள் ஆர்த்ததும், அற்புத ஒளி வீசிக் கதிரோன் வந்ததும், உலகம் இனிய காட்சிப் பொருளாகத் திகழ்ந்ததும் – எல்லாம் வழக்கம்போல்தான் இருந்தன.

என்றாலும் தாமோதரன் உள்ளத்தில் மட்டும் புரிந்து கொள்ள முடியாத ஒரு குழப்பம் குடிகொண்டு விட்டது. ஏதோ இன்னல் விளையப்போகிறது என உணர்த்தும் முன்னறிவிப்பு போன்று ஒரு குறுகுறுப்பு அவர் உள்ளத்தில் கறையான் மாதிரி அரித்துக் கொண் டிருந்தது. ஏன்? என்ன காரணம்? அவருக்கு எதுவும் புரியவில்லை. வருவதை உணர்ந்து கொள்ள முடியாத போது, என்னவோ நேரப் போகிறது என்ற அர்த்தமற்ற , தெளிவற்ற குழப்பம் மனசை அரித்துக் கொண்டிருப்பதனால் என்ன பிரயோசனம்? இவ்வாறு எண்ணினார் அவர்.

எனினும் அவர் தனது அலுவல்களை ஒழுங்காகச் செய்து கொண்டிருந்தார். அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்த அனைவரோடும் பேசினார். அன்றாட நடப்புகளை அவரிடம் சொல்லிப்போக வந்தார்கள் சில பேர். அவருடைய அறிவுக்கூர்மையை உணர்ந்து பயன்பெறவும், தங்கள் அறிவொளியைக் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ளவும், அவருடைய ஆழ்ந்த கல்வியின் பலனைத் தாங்களும் ஓரளவாவது பெறலாமே என்றும், தங்களுடைய படிப்பின் தன்மையை விவாதத்தின் மூலம் வெளிப்படுத்திக் கொள்ளலாமே என்றும், வெவ்வேறு நோக்கங்களுடைய விதம் விதமான மனிதர்கள் அவரைக் காண வருவது உண்டு. இது நித்திய நியதி ஆகிவிட்டது.

இப்படி அவர் எல்லார்க்கும் எளியவனாக விளங்குவதால் அவருடைய பொன்னான காலம் வீணாகிப் போகிறதே என்று சில மெய்யன்பர்கள் வருத்தப்படுவது வழக்கம். அவர்கள் அவ்விதம் எடுத்துச் சொல்லும் போதெல்லாம் தாமோதரன் மோகன முறுவல் ஒன்றையே பதிலாகத் தந்துவிடுவார். சிற்றொளி சிதறக் கூடிய சிறு விளக்காயினும் பலருக்கும் அது பயன்படக்கூடுமாயின் அதன் சிறப்பே தனிதான். தன்னால் இயன்றவரை இருளை அகற்றவும் வேறுபல விளக்குகளில் ஒளி ஏற்றவும் அது பயன்படுவது நல்லதா? அல்லது குடத்துள் வைத்த விளக்காகி விடுவது நல்லதா?” என்று கேட்டுவிட்டுச் சிரிப்பார் அவர். அவருடைய சிரிப்பு குழந்தையின் களங்கமிலா நகை ஒலி போல் தொனிக்கும். ஞானியின் கவலையற்ற சிரிப்பாகவும் தோன்றும்.

‘நீங்கள் எல்லோரையும் ஒரே மாதிரியாகக் கருதுகிறீர்கள். அது சரியல்ல என்று சில நண்பர்கள் அவரிடம் சொல்வது உண்டு.

மனிதர்கள் எல்லோரும் சமம். இல்லையா?” என்று புன்னகை புரிந்தவாறே கேட்பார் அவர்.

“உண்மைதான். ஆனால் மனிதர்கள் உருவில் கயவர்களும் இருக்கிறார்களே!” என்று யாராவது சொன்னால், மனித சுபாவத்தை ஒரே அடியாக மாற்றி விட முடியாது அல்லவா? சிலரின் பண்பாட்டை முற்றிலும் மாற்றி விட இயலாது என்பதற்காக, அவர்களை ஒதுக்கி வைப்பதும் நல்லதில்லைதான்” என்பார் தாமோதரன்.

அவர் உயர்ந்தவர். அவர் உத்தமர். அவர் சிந்தனையாளர். அவர் நல்லவர். அவர் ஞாளி இவ்விதம் அவருடைய புகழ் பரவியிருந்தது.

உயர்ந்த கொள்கைகள் உடைய லட்சியவாதி. உண்மை தெரிந்து சொல்பவர். ஊருக்கு நல்லது செய்பவர். ஓயாது உழைப்பவர். பிறரை உழைக்கத் தூண்டுகிறவர். உழைப்பவர்கள் உரிமைகளைப் பெற்றே தீர வேண்டும் என்று வாதாடுபவர் உரிமை களைப் பெறுவோர் தம் கடமைகளைத் தவறாது செய்தாக வேண்டும் என வற்புறுத்துபவர். வாழ்விக்க வந்த வழிகாட்டி – அவரைப் பற்றி அறிந்தவர்கள் இவ்வாறு சொல்வர்.

தாமோதரனின் பேச்சும் எழுத்தும், உணர்வும் உயிர்ப்பும் உடையனவாகத் திகழ்ந்தன. மக்களின் உள்ளத்தைக் தொட்டான. அங்கு உணர்வு கனலச் செய்தன. அவருடைய செயல்கள் நாட்டிலே விழிப்பு ஏற்படுத்தின.

ஆகவே அவா கிளர்ச்சி செய்கிறார். நாட்டின் அமைதியைக் குலைக்கிறார் என்றெல்லாம் குறை கூறியது ஆளும் வர்க்கம். கண் காணித்தது. எச்சரிக்கை விடுத்தது. அவர் தனது பணிகளைத் தொடர்ந்து செய்துவந்ததால், ஆட்சியினர் அவரைச் சிறையில் அடைத்து வைக்க விரும்பினர். அவ்விஷயம் தெரியவந்ததும் அவர் “அஞ்ஞாத வாசம்” புகுந்தார். சிறையில் அடைபட்டுக் கிடப்பதைவிட, மக்கள் மத்தியில் இருந்து கொண்டு, தான் செயல் புரிவதோடு பிறரையும் செயல் புரியத் தூண்டுவதே சிறந்தது என்பது அவர் கருத்து.

தாமோதரனுக்கு வேண்டியவர்கள் பலர் இருந்தார்கள். அழகான, அருமையான, பாதுகாப்பான இடங்களில் வசித்து வந்தார்கள். அவர்களில் அநேகர் அவரைத் தங்களோடு வந்து வசிக்கும்படி கோரினார்கள். அவரும் ஒவ்வொரு இடத்திலும் கொஞ்ச கொஞ்சகாலம் தங்கியிருக்க இசைந்தார்.

தாமோதரன் நிறைய நிறையப் படித்தவர். மதிப்பு பெற்றவர். என்றாலும் கர்வம் கொள்ளாதவர். எல்லோரிடமும் பழகி, எல்லோரையும் போலவே சாதாரணத் தோற்றத்தில் திரிந்து, சகல அலுவல்களையும் செய்யும் பண்பு பெற்றிருந்தார். அதனால் அவர் தங்கியிருக்கும் இடத்தில் வசிப்பவர்களில் ஒருவராகவே அவரையும் கருதினார்கள். அவரைச் சந்தேகிப்பதற்கோ அல்லது காட்டிக் கொடுப்பதற்கோ காரணமாகக் கூடிய விசேஷத் தன்மைகள் அவரிடத்திலும் அவரது சூழ்நிலையிலும் இல்லாதவாறு தாமோதரனும் கவனித்துக் கொண்டார்; அவருடைய நண்பர்களும் விழிப்புடன் இருந்தார்கள்.

எனினும், சிலருக்குச் சில நண்பர்கள் மீதே சந்தேகம் இருந்தது. “கேசவன் விஷயத்தில் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது” என்று அவர்கள் தாமோதரனிடம் சொல்லவும் தவறவில்லை. “நல்ல நண்பர்களால் ஆபத்து வராது. விரோதிகளினால் ஆபத்து விளையக்கூடும் என்றாலும் அவர்களை நாம் விழிப்புடன் கவனித்துக் கொண்டிருப்பதனால், எதிர்பாராத விபத்து எதுவும் அவர்களால் ஏற்பட்டு விடாது. நண்பர்கள் போல் நடிக்கிறவர்கள்தான் ஆபத்தானவர்கள்” என்று ஒருவர் கூறினார்.

ஆனால், தாமோதரன் புன்னகை புரிந்தவாறே சொன்னார்: “சந்தேகம் என்கிற பூதக்கண்ணாடி கொண்டு கவனிக்கிற மனம் எதையும் சரியாக எடை போடத் தவறிவிடுகிறது. அதன் நோக்கில் எல்லாமே கோணல்மாணலாகவோ, குறுகியதாகவோ அல்லது பூதாகாரமாகவோதான் தென்படும்”.

“எதற்கும் நாம் ஜாக்கிரதையாக இருப்பது நல்லதில்லையா? கேசவன் கண்காணிப்புக்கு உரிய புள்ளிதான்” என்று மற்றவர்கள் குறிப்பிட்டார்கள்….

இன்று – அவருடைய மனநிலை அமைதி இழந்து குழம்பிய போது தாமோதரனுக்கு ஏனோ கேசவனின் நினைப்புதான் அடிக்கடி ஏற்பட்டுக் கொண்டிருந்தது.

“நமக்கு அறிமுகமில்லாத மனிதர் அனைவரும் அயோக் கியர்களே என்று சிலர் எண்ணி விடுகிறார்கள். ஆகவே அவர்கள் பலருடன் பழக விரும்பாமல், கூட்டுக்குள் பதுங்கி வாழும் நத்தை மாதிரி சுயநலக் கூட்டினுள்ளேயே ஒடுங்கிக் கிடக்கிறார்கள். நமக்கு நன்கு அறிமுகமானவர்களிலும் அயோக்கியர்கள் உண்டு என்று நம்பி, தங்களுக்குள்ளேயே சந்தேகித்துக் கொண்டு அவதிப்படுகிறார்கள் அநேகர்… எப்படிப் பார்த்தாலும் மனிதர்கள் மனிதர்களாக வாழக் கற்றுக்கொள்ள வில்லை என்பதுதான் புலனாகிறது” என்று அவர் எண்ணினார்.

“என்ன ஐயா, தீவிரமான யோசனையோ?” என்ற குரல் அவர் கவனத்தைத் திருப்பியது.

அங்கே வந்து நின்றவனைப் பார்த்ததும் அவர் திகைப்படைந்தார். “நினைத்தவுடனேயே சைத்தான் எதிரே வந்து நிற்பான் என்பது சரியாக இருக்கிறதே என்றுதான் அவர் மனம் முதலில் நினைத்தது. பிறகு “சே நான் ஏன் கேசவனை சைத்தான் என்று கருத வேண்டும்?” என மனசின் நற்பண்பு கூறியது.

கேசவன் வழக்கம் போல் பல விஷயங்களை பற்றியும் பேசினான். அவருடைய வேலைத் திட்டங்கள் பற்றியும் அன்று அவர் செய்யப்போகிற வேலைகளைப் பற்றியும் நேரடியான கேள்விகள் மூலமும் சுற்றி வளைத்துப் பேசியும் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அவனுடன் பேசிக் கொண்டிருந்த போது தாமோதரனுக்கு அவன் பேரில் சந்தேகம் எழத்தான் செய்தது. முன்புகூட சில சந்தர்ப்பங்களில் அவனது பேச்சிலும் பார்வையிலும் கள்ளத்தனம் கலந்து கிடந்ததாக அவருக்குத் தோன்றியது உண்டு. சந்தேகம் கொடிய தொத்து நோய் அது யாரையும் எளிதில் பற்றிக்கொள்கிறது” என்று அவர் ஆத்ம உபதேசம் செய்து கொள்வதும் வழக்கம்தான். இன்று அத்தகைய சுயபோதனை கூட அவருக்கு அமைதி அளிக்கத் தவறிவிட்டது.

கேசவன் போன பிறகு யார் யாரோ வந்தார்கள். அவருடன் விளையாடிப் பொழுது போக்கவரும் குழந்தைகள் வந்தன. விளையாடின. அவற்றின் பேச்சும் விளையாட்டுக்களும் கூட அவருக்கு மன அமைதி தரவில்லை . “இன்று ஏதோ நேரப் போகிறது என்று உள்ளுணர்வு அரித்துக் கொண்டே இருந்தது. “ஏதாவது ஆபத்து வரலாம்” எனத் தோன்றியது.

அதற்காக அவர் வழக்கமான அலுவல்களைச் செய்யாமல் சோம்பிக் கிடக்கவில்லை.

சோம்பி இருக்கும் சுகம் அறியாத காலமும் ஓடிக்கொண்டுதான் இருந்தது.

பொழுது மயங்கி அந்தி வந்தது. அதை விழுங்கிவிட்டு இருள் வளர்ந்தது.

இரவு அடி எடுத்து வைத்ததும், வெளியே சிறிது தூரம் உலாவி விட்டு வருவது தாமோதரனின் பழக்கம்.

அன்றும் அவர் வழக்கம்போல் வெளியே போய்விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். வானத்து அதிசயங்களையும், வயல் வெளியில் காற்றிடையே தலையசைத்து நிற்கும் பசும் பயிர்களின் அழகு இரவின் கருமையில் கலந்து மடிவதையும், மரங்களும் வீட்டுக் கூரைகளும் கோயில் கோபுரமும் கரிய புகைப் புலனில் நிழல் உருவங்களாக மாறி வருவதையும் ரசித்தபடி நடந்தார் அவர். இயற்கை எப்பொழுதும் வசீகரமாகத் தான் இருக்கிறது” என்றது அவர் மனம்.

திடீரென்று அவருக்கு ஒரு திகில் பிறந்தது. அர்த்தமற்ற காரணமற்ற நடுக்கம் என்று அவர் உள்ளம் குறிப்பிட்டது.

அவருக்கு முன்னால், பூமியிலிருந்து முளைத்தெழுந்தவன் போல ஒருவன் நின்றான். அவனுடைய கண்கள் பூனையின் விழிகளைப் போல் அவரைக் கூர்ந்து நோக்கின. சிரிப்பதுபோல் அகன்று நீண்டிருந்த உதடுகளினூடே பளிச்சிட்ட பற்களின் வெண்மை தாமோதரனைப் பரிகசிப்பது போலிருந்தது. அவன் எங்கிருந்து வந்தான், அதுவரை எங்கே பதுங்கி நின்றான் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்ட அவர் ஏன் அவன் அப்படிச் சிரிக்கிறான் எனப் புரிந்து கொள்ள இயலாமல் திகைத்தார்.

“என்ன தாமோதரன் ஸார், உலாவப்போய் விட்டு வருகிறீர்களாக்கும்?” என்று கேட்டான் கேசவன்.

பெயர் சொல்லி அழைக்கும் பழக்கம் பெற்றிராத கேசவன் ஏன் திடீரென்று இவ்வாறு முன் வந்து விசித்திரமாக நடந்து கொள்ள வேண்டும்? குடி போதையாக இருக்குமோ? – இந்த ரீதியில் தான் எண்ண முடிந்தது அவரால்.

கேசவனின் திட்டம் வெற்றி கரமாகச் செயல்பட்டது. இவர் தான் நமக்கு வேண்டிய ஆள் என்று அறிவிக்க முயல்கிறவன் மாதிரி அவன் உரத்த குரலில் பெயரைக் குறிப்பிட்டதும், தயாராகப் பதுங்கியிருந்த போலீஸ் வீரர்கள் வேகமாக முன்வந்தனர் தாமோதரனைப் பிடித்துக் கொண்டனர். ஊருக்கு வெளியே சற்று தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியை நோக்கி அவரை அழைத்துச் சென்றார்கள்.

“இப்படி ஒரு அபாயம் வரவிருக்கிறது என உணர்த்து வதற்காகத் தான் என் உள்ளம் குறுகுறுத்தது போலும் ” என்று அவர் எண்ணினார். எல்லாம் வழக்கமான நியதிப்படி இயங்கிக் கொண்டிருந்த போதிலும், மனிதர்களில் ஒருவன் – நண்பர்களில் ஒருவன் – ஏறுமாறாக நடந்து கொள்ளத் துணிந்தானே!” என்று முனங்கியது அவர் மனம்.

இதற்குள் விஷயம் எப்படியோ தெரிந்து தாமோதரனின் நண்பர்கள் ஓடி வந்தார்கள். வேறு பலரும் விரைந்து வந்தார்கள். கேசவனைக் கண்டதும் அவர்களுடைய ஆத்திரம் அதிகரித்தது.

“துரோகி!”

“காட்டிக் கொடுத்தவன்!”

அயோக்கியன்! கருங்காலி! ஆள்காட்டி! கைக்கூலி…..

இன்னும் வேகமான வார்த்தைகள் சூடாக வந்து விழுந்தன. உள்ளத்தின் சூட்டை உணர்ச்சிக் கொதிப்போடு கூட்டி, பச்சை பச்சையான ஏச்சு வார்த்தைகளாக உதிர்த்தார்கள் சிலர். அவர்களுடைய கோபம் பேச்சு நிலையிலிருந்து மீறி, கைநீட்டும் வெறித்தனமாக ஓங்கி விடும் என்றே தோன்றியது.

“நண்பர்களே! கேசவனை விட்டு விடுங்கள். அவன் என்ன செய்கிறான்-செய்து விட்டான்- என்பதை அவனே உணரவில்லை. அவனுக்கு நீங்கள் எதுவும் செய்ய வேண்டாம். ஒரு கெடுதியும் விளைவிக்கக் கூடாது” என்று தாமோதரன் பணிவுடன் கேட்டுக் கொண்டார்.

“உங்களுடைய இந்த நற்பண்பு தான். உங்களுக்கே ஆபத்தாக முடிந்தது” என்று சிலர் முண முணத்தார்கள்.

“பிறர் பண்பு கெட்டவர்களாக வாழ்கிறார்கள் என்பதற்காக நாமும் அவ்விதமே மாறவேண்டியது இல்லையே? நாம் போற்றி வளர்த்து – பாதுகாக்க விரும்புகிற – நல்ல பண்புகளை நாமே நாசமாக்க முற்பட்டால், அப்புறம் நமக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?” என்று கேட்டுவிட்டு, மோகன முறுவல் புரிந்தார் அவர்.

எல்லோரும் தலை குனிந்து நின்றார்கள். கரம் குவித்து வணங்கினர் சிலர்.

அமைதி வழி அனுப்ப, அதிகாரம் துணை வர, இருளிலே நடந்து இருளாலே விழுங்கப்பட்டார் அறிவொளி பரப்ப அவாவிய தாமோதரன்.

இனி அவரை என்று காண்போமோ என்ற ஏக்கமே அவ்வூர்க்காரர்களின் உள்ளத்துச் சுமையாயிற்று. உறுத்தும் வேதனை ஆயிற்று. விழிகளின் சுடுநீராயிற்று. அவர்கள் கேசவனைத் திரும்பியும் பார்க்கவில்லை . அவன் “முகத்தில் விழிக்கக் கூட விரும்பவில்லை.

கேசவன் தனியனாய் நடந்து சென்றான். அன்று முதல் அவன் தனியனேயானான்.

தாமோதரனின் கடைசிப் பேச்சையும், புன்னகையையும் அறிந்தவுடனேயே, அவனுடைய உள்ளமே அவனைச் சுட ஆரம்பித்து விட்டது. ஒரு சில ரூபாய்களுக்கு ஆசைப் பட்டு – பதவியில் இருப்பவர்களின் தயவுக்கு ஆசை கொண்டு – கடமையைச் செய்து காட்டத் துடித்த அதிகாரவர்க்கத்தின் ஆட்களது மயக்குப் பேச்சுக்களால் அறிவு கெட்டு, அவன் பெரிய தீங்கு புரிந்து விட்டான். அழிக்க முடியாத களங்கத்தை ஏற்படுத்தி விட்டான். துடைத்து நீக்கிவிட முடியாத-திரையிட்டு மறைக்கவும் முடியாத ஒரு கறையை அவன் தனக்குத்தானே ஆக்கிக்கொண்டான். பிராயச் சித்தம் எதுவுமே இல்லாத கொடிய பாவத்தை அந்த அப்பாவி தன் அறியாத்தனத்தினால் செய்து முடித்துவிட்டான். இந்த உண்மை சிறிது சிறிதாக அவனுள் உதயமாகி அவனையே தகிக்கலாயிற்று.

தாமோதரனின் வாக்கை கெளரவிக்கும் பண்புடைய ஊரார்கள் அவர் சொன்னவற்றை ”வார்த்தைக்கு வார்த்தை சரியாக செயல் புரியத் துணிந்தார்கள். “கேசவனை விட்டு விடுங்கள். நீங்கள் அவனுக்கு எதுவும் செய்யக்கூடாது” என்று தானே அவர் சொன்னார்? நாம் அவனுக்குத் தீயதும் எண்ண வேண்டாம்; நல்லதும் செய்ய வேண்டாம் என்று முடிவு பண்ணி விட்டார்கள் அவர்கள்.

கேசவன் எதிரே வந்தால் மற்றவர்கள் விலகிச் சென்றார்கள். அவன் சிரித்தால், யாருமே அவனை அறிந்தவராகக் காட்டி மீண்டும் புன்னகை புரியத் தயாராக இல்லை. அவனாகப் பேச்சுக் கொடுத்தாலும் கூட மற்றவர்கள் பேசாமல் – அவன் முகத்தைப் பார்க்காமலே – தங்கள் வேலைகளைக் கவனிப்பதில் ஆர்வம் காட்டினார்கள். “குடிக்கத் தண்ணீர் வேண்டும்” என்று வீட்டு வாசல்படி ஏறி அவன் கேட்டால் கூட வீட்டில் இருந்தவர்கள் அவனுக்குத் தண்ணீரும் தரவிரும்பவில்லை. “இல்லை” என்று வாயினால் சொல்லவும் முன்வரவுமில்லை.

மனிதனாக வாழத் தவறிவிட்ட ஒருவனை-மனித உருவில் திரிந்தாலும், மனித மாண்பை மதிக்க மனமற்றுப் போன ஒரு அதமனை-தம்மில் ஒருவனாக ஏற்றுக்கொள்ள அவ்வூர் மக்கள் ஆசைப்படவில்லை. தங்களின் மதிப்புக்கும் போற்றுதலுக்கும் உரிய ஒரு உத்தம் மனிதனை துன்பத்துக்கும், தண்டனைக்கும், இருண்ட வாழ்வுக்கும் காட்டிக் கொடுக்க முன் வந்த ஒருவன் திட்டமிட்டு, நண்பன் போல் பழகி, நாச வேலை செய்துவிட்ட நயவஞ்சகன் தங்களை விட்டு வெகு தூரம் விலகிப் போனவன்; அவன் நிரந்தரமாக ஒதுக்கப்பட வேண்டியவனே என்று அவர்கள் தீர்மானித்துச் செயல் புரிந்தார்கள்.

கேசவனுக்கு அந்த நிலைமை சகிக்க முடியாததாக இருந்தது. அவன் யாருக்கு உதவி செய்தானோ அவர்களிடம் சென்றான். திரும்பத் திரும்பச் சென்றான்.
முன்பு அவனைக் கருவியாக்கிக் தாம் பயனடையத் திட்டமிட்டு, அவனை உற்சாகப்படுத்தி வந்த அதிகார வர்க்கத்து அங்கங்கள் தங்கள் காரியம் முடிந்துவிட்டதும் அவனை அலட்சியமாகவே பார்த்தார்கள். “என்ன வேணும்?” “ஏன் தொந்தரவு கொடுக்கிறாய்?” “ஓயாத தொல்லையாகிவிடுவாய் போலிருக்கிறதே!” என்றெல்லாம் கடுகடுத்தார்கள்.

அவன் மன ஆறுதல் பெறுவதற்காக, ஊராரின் போக்குப் பற்றி அவர்களிடம் ஒப்பாரி வைக்கத் தொடங்கினால், அவர்கள் சகஜ முறையிலே “தடை உத்திரவு போட்டார்கள். ” எங்களிடம் சொல்லி என்னப்பா பிரயோசனம்? யாரும் உனக்குக் காயம் ஏற்படுத்தவில்லையே? உன்னை உதைக்கவில்லையே? உன்னைக் கொன்று போடத் திட்டம் வகுக்கவில்லையே? அதற்காக நீ சந்தோஷப்படுவதை விட்டுவிட்டு மூக்கால் அழுது வழிகிறாயே!” என்று கேலி பேசினார்கள்.

“எல்லாம் உங்களுக்கு உதவி செய்ய இசைந்ததனால் வந்த வினைதானே? என்று அவன் முணங்கினால், “என்ன தம்பி, பூடம் தெரியாமல் சாமி ஆடுறதுக்கு வருகிறே? நீ சும்மாவா உதவி செய்தாய்? முள்ளங்கிப் பத்தை போல ரூபாய் ரூபாயாக எண்ணிக்கொடுத்தோமே நாங்க; அதை மறந்துவிட்டாயா?” என்று அவர்கள் உறுமினார்கள்.

“இவர்கள் தொடர்பு எப்பொழுதுமே ஆபத்தானதுதான்” என்று உணர்ந்து கொண்டான் அவன். அதனால், அவர்களை ஒதுக்கிவிட்டு அவனாகவே ஒதுங்கிப் போனான்.
இந்த நிலை ஏற்படவும் அவன் செய்த பாவத்தின் நினைவு மேலும் கடுமையாக அவனை வாட்டி வதைத்தது. அவன் உள்ளத்தில் அமைதி இல்லை; ஆனந்தமில்லை. அவன் முகத்தில் மலர்ச்சி பிறக்கவே இல்லை. இருந்த இனிமையும் கருகிவிட்டது. பித்துப் பிடித்தவன் போல் திரியலானான் அவன்.

பாவம் என்றால் என்ன என்றே தெரியாத சிறு குழந்தைகள் கூட அவன் முகத்தைக் கண்டால் அஞ்சி நடுங்கினார்கள். அவன் வருவதைப் பார்த்தாலே ஓடி ஒளியலானார்கள். அவன் எங்கு போனாலும், காட்டிக் கொடுத்தவன்” என்று யாரோ ரகசியக் குரலில் ள வேறு ஒருவருக்குச் சொல்வதை அவன் கேட்க முடிந்தது. கேட்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

உண்மையாகவே யாரும் அப்படிச் சொல்லாத வேளைகளில் கூட இடங்களில் கூட- “காட்டிக் கொடுத்தவன். மனிதத் தன்மை இழந்தவன்” என்று ஒரு குரல் வெறுப்புடன் உச்சரிப்பது போல் அவன் செவிக்குக் கேட்கும். கேட்பதாக நினைப்பான் அவன். அதனால் அங்கும் இங்கும் திரும்பித் திரும்பி நோக்குவான். இவ்வாறு, பிறரது புறக்கணிப்புக்கும் தனது மனச் சாட்சியின் நுண்ணிய, தீவிரமான கண்காணிப்பும் இடையே அகப்பட்டுத் தவித்த கேசவன் ஒரு நாள் காணாமலே போய்விட்டான்.

அதற்காக யாரும் வருத்தப்படவில்லை. “இந்த ஊரைப் பிடித்திருந்த சனியன் ஓடிப்போய் விட்டது. இனி இந்த ஊருக்கு நல்ல காலம்தான்” என்றுகூடச் சொன்னார்கள் சில பேர்.

– வல்லிக்கண்ணனின் சிறப்புச் சிறுகதைகள், முதற் பதிப்பு: ஆகஸ்ட் 2002, பாவை பப்ளிகேஷன்ஸ் வெளியீடு, சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *