சத்தமில்லாமல் ஒரு சமூதாய செயல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 22, 2020
பார்வையிட்டோர்: 3,694 
 

காவல் துறையில் சேர்ந்து இருபத்தெட்டு வயதில் தொப்பை வந்து விட்டதே என்ற கவலையில் தன் நடை பயிற்சிக்காக வீட்டிலிருந்து விடியற்காலையில் கிளம்பி, தன் தெருவை தாண்டி இருக்கமாட்டான் சரவணன். வலது பக்க சுவரோரமாய், ரோட்டை பார்த்த வண்ணம் ஒரு இளைஞன் சைக்கிளில் உட்கார்ந்து ஒரு காலை கீழே வைத்தும் மற்றொரு காலை பெடலில் வைத்துக்கொண்டும் நின்று கொண்டிருந்தான். வயது இருபது அல்லது இருபத்தி ஒன்று இருக்கலாம். சட்டென்று அவன் இவன் கவனத்துக்கு வர, அந்த பையன் இவனின் பார்வையை தவிர்ப்பதற்காக சைக்கிளை மெல்ல திருப்பி சுவரை பார்ப்பது போல நின்றுகொண்டான.

சரவணனுக்கு போலீஸ் மண்டை குடைய ஆரம்பித்து விட்டது. யார் இந்த பையன்?

நம் தெருவில் இதுவரை பார்த்த்து இல்லையே? அதுவும் இந்த காலை வேலையில் எதற்காக இங்கு நிற்கிறான். நடை ஆர்வம் குறைய இவனை பற்றிய சிந்தனையே மனதுக்குள் ஆக்ரமித்துக்கொண்டது.

அம்மா அடிக்கடி இவனை பற்றி அப்பாவிடம் புகார் தெரிவித்துக்கொண்டிருப்பது ஞாபகம் வந்தது. எப்ப பார்த்தாலும், வேலைக்கு போய்ட்டு வந்து சமுக வேலை சமூக வேலை அப்படீன்னு சுத்தி கிட்டே இருக்கான். சீக்கிரம் அவனுக்கு ஒரு வழி பண்ணனும். அவன் அப்பா கல்யாணமானா பொறுப்பு வந்திடும். ஒற்றை வார்த்தையில் சொல்லி நழுவி விடுவார்

அவனை தாண்டி நடப்பது போல் சிறிது தூரம் நடந்து சட்டென்று திரும்பி மீண்டும் அவன் பக்கமே வந்தான் சரவணன். இவன் போய் விட்டான் என்ற நம்பிக்கையில் மீண்டும் சைக்கிளை ரோட்டு பக்கமாய் திருப்பி நிற்க முயன்ற அந்த பையன், சர்வணனின் திடீர் திரும்பலால் என்ன செய்வது என்று திகைத்து நின்றான்.

தம்பி இங்க என்ன பண்ணிகிட்டு இருக்கறீங்க?

சும்மா ஒரு பிரண்டு வர்றேன்னு சொன்னாரு, அவருக்குத்தான் வெயிட் பண்ணிகிட்டு இருக்கேன்.

அப்படியா, பரவாயில்லையே, எங்க பிரண்டு கூட ஜாகிங்க் போறீங்களா?

அ..ஆமா சார், பிரண்டு வந்தவுடனே இரண்டு பேரும் வ.உ.சி. பார்க் போய் விளையாட போறோம்.

ரொம்ப நல்லது, உங்க பிரண்டு பேரு என்ன? எங்கிருக்காரு?

இங்க..இங்கதான் இந்த தெருவுலதான் இருக்காரு.

அப்படியா, நான் எனக்கு விவரம் தெரிஞ்ச காலத்துல இருந்து இந்த தெருவுலதான் இருக்கேன்,

வாங்களேன், உங்க பிரண்டு வீட்டுக்கே போய் அவரை பாராட்டிட்டு போயிடறேன், இந்த வயசுல விளையாடறது ரொம்ப நல்லதுன்னு.

இல்லே வேண்டாம், நான் கிளம்பறேன், அவன் அங்கயே வந்துடுவான், நான் வர்றேன்.

சட்டென்று சைக்கிளை பிடித்துக்கொண்டான் சரவணன், இருங்க தம்பி, ஏன் பதட்டபடறீங்க? சும்மா சொல்லுங்க? அதுக்குத்தானே? சொல்லுங்க, நானும் உங்க வயச எல்லாம் தாண்டித்தான் வந்துருக்கேன்.

பையன் இப்பொழுது வித்தியாசமாய் சரவணனை பார்த்தான், சார்… ஆமாங்க சார் ஒரு தேவையில்லாமல் ஒரு சிரிப்பு சிரித்து தலையை கோதிக்கொண்டான்.

அஆ..அப்படி சொல்லுங்க? பொண்ணு யாரு? இந்த தெருதானா?

ஆமாம் சார் பிளஸ் டூ படிச்சுகிட்டு இருக்குது, இந்த வழியா காலையில ட்யூசன் போகும், அதான் பார்த்து பேசிகிட்டு போலாமுன்னு.

ஓ..அப்படியா, சரி தம்பி என்ன பண்ணீகிட்டு இருக்கறீங்க? காலேஜ் போறீங்களா?

இல்லை சார், பிளஸ் டூ முடிச்சுட்டேன், வசதி இல்லாததுனால காலேஜ் சேத்த மாட்டேனுட்டாங்க.

அப்படியா, அப்ப வேலைக்கு போயிட்டு இருக்கீங்களா?

இல்லைங்க சார் வேலை தேடிகிட்டு இருக்கேன்.

ஓ, சரி சரி எத்தனை வருசமா வேலை தேடிகிட்டு இருக்கீங்க?

இரண்டு வருசமா தேடிகிட்டு இருக்கேன்.

இரண்டு வருசமாவா, அது சரி இந்த பொண்ணும் உங்களை பாக்க வருமா?

சார் அது வாராது சார், ஆனா அத எப்படியாவது கவர் பண்ணனும்னு நினைச்சுகிட்டு இருக்கேன்..

அப்படியா ரொம்ப நல்லது, சரி உங்க காதல் எதுவரைக்கும் இருக்கு?

சார் இங்க பாருங்க சார் அந்த பொண்ணு பேரை என் இரத்த்துலயே என் கையில எழுதி இருக்கேன்.இதைய அந்த பொண்ணுகிட்ட காண்பிச்சு அப்படியே அவ மனசை கவரப்போறேன்

அடடா நிறை இரத்தம் செலவாகி இருக்கும் போலிருக்கே, இதுக்கு நான் ஒரு வழி சொல்றேன், வாங்க என் கூட.

சார் எங்க சார் என்னை கூப்பிடறீங்க, நான் வரமாட்டேன்.

தம்பி பயப்படாதீங்க, இந்த ரோட்டு மூலையில ஒரு ஹாஸ்பிடல் இருக்கு, அதுவரைக்கும் வாங்க, ஒரு உதவியா நினைச்சுக்குங்க.

சார்..அந்த பையன் தயங்கி தயங்கி சரவணின் பின்னால் நடக்க ஆரம்பித்தான்.

ஹாஸ்பிடல் ரிசப்சனிஸ்டிடம் நேத்து ஒரு பேசண்ட்டுக்கு பிளட் வேணுமின்னு கேட்டிருந்தீங்கள்ளே, இவரை செக் பண்ணி பாருங்க, பிளட் சூட் ஆகுமாண்ணு?

சார், என்ன சார் விளையாடறீங்களா? பிளட் எல்லாம் கொடுக்க முடியாது.எனக்கு ஊசின்னாலே பயம்.

பயப்படாதீங்க தம்பி, காதலிக்காக இரத்த்துலயே கையில எழுதிக்கறீங்க, ஒரு உயிருக்கு உங்க இரத்த்தை கொடுத்தா உங்க காதலி பாராட்டத்தானே செய்வாங்க?

சார் காலையில ஒண்ணும் சாப்பிடலை சார்,

ஏன் தம்பி ஒரு டீ கூடவா குடிக்கலை,

இல்லைங்க சார், டீ காப்பி குடிக்கறதுக்கெல்லாம் எங்க வீட்டுல வசதி கம்மி சார்.வீட்டுல நாலு பேர் இருக்கோம் சார், அப்பா மட்டும்தான் ஒரு வொர்க்ஷாப்புல வேலைக்கு போயிட்டு இருக்காரு.

சரி வாங்க ஒரு கடையில போய் டீ சாப்பிடலாம்.ஹாஸ்பிடல் ரிசப்சனிஸ்டிடம் அவர் ஒண்ணும் சாப்பிடலையாம், சாப்பிட வச்சு கூட்டியாறேன், சொல்லிவிட்டு நகர்ந்தான்.

டீயையும் கூடவே தான் வாங்கி கொடுத்த பிஸ்கட்டையும் ஆவலாய் சாப்பிடுபவனை கவலையுடன் பார்க்கிறான் சரவணன்.

தம்பி நான் ஒரு இடத்துல வேலை ஏற்பாடு பண்ணி தர்றேன் போறீங்களா? ஆனா ஒண்ணு இந்த மாதிரி பொண்ணுங்க பின்னாடி சுத்தற வேலை எல்லாம் அந்த ஓணருக்கு பிடிக்காது.

நீங்க சொல்லுங்க, அந்த வேலை வேணுமா? இல்லே இதே மாதிரி சுவத்தை பாத்துட்டு இந்த பொண்ணுக்கு காத்துகிட்டு இருக்கப்போறீங்களா?

பத்து நிமிடங்கள் மெள்னம், மெல்ல தலை நிமிர்ந்தவன், சார் எனக்கு அந்த வேலையை வாங்கி கொடுங்க சார்.

அப்ப இனி வேலைதான முக்கியம், முதல் மாசம் சம்பளம் கிடைச்சு உங்க அம்மா கையிலே கொடுப்பீங்கல்லே !.

கண்டிப்பா சார், பையன் முகத்தில் இப்பொழுது தெளிவு வந்திருந்த்து.

சரி, வீட்டுக்கு போயிட்டு ஒன்பது மணிக்கு இதே இடத்துல நில்லுங்க.. நான் வந்து உங்களை கூட்டிகிட்டு போய் சேர்த்து விடறேன்.

ஒரு மாதம் ஓடியிருந்தது, வேகு வேகு என்று நடந்து அவ்வப்பொழுது தன் தொப்பை குறைந்துள்ளதா என்று குனிந்து பார்த்துக்கொள்கிறான், காவல் துறையை சேர்ந்த இந்த சமூக சீர்திருத்தவாதி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *