கவரிமான்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 10, 2024
பார்வையிட்டோர்: 254 
 
 

(2005ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அன்று வெள்ளிக்கிழமை. அன்பானந்தன் சிராங்கூன் சாலையில் உள்ள அருள்நிறை வீரமாகாளியம்மன் கோவில் சன்னிதானத்தில் நின்றார். அவரது கண்கள் அலங்காரத் தெய்வமாக வீற்றிருக்கின்ற அன்னையின் மேல் பதிந்தன. மனமோ தாயின் திருவடிகளில் விழுந்தது.

“அம்மா, உன்னை நம்பித்தானே என் குடும்பத்தைத் தாய் மண்ணில் விட்டு வந்தேன். இத்தனை ஆண்டுக்காலம் இன்பத்தையே கொடுத்து வந்த நீ இப்போது ஏனம்மா இப்படி என்னைத் துன்பக் கடலில் ஆழ்த்தித் துயரப்படுத்துகிறாய்? இந்த ஏழைக்கு உன்னையன்றி வேறு யார் தான் ஆறுதல் சொல்ல முடியும் ?”

உள்ளம் உருக வாய்மூடி, மௌனியாய் அம்பாளிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். எதிரே நின்ற இளைஞர் பாடினார்.

“அத்தாளை, எங்கள் அபிராமவல்லியை, அண்டமெல்லாம், பூத்தாளை, மாதுளம் பூ நிறத்தாளைப், புவியடங்கக், காத்தாளை, அங்கையில் பாசாங்குசமும், கரும்பு வில்லும், சேர்த்தாளை. முக்கண்ணியைத் தொழுவார்க்கொரு தீங்கில்லையே!’

அன்பானந்தன் நெஞ்சில் யாரோ இதமாய்த் தடவிக் கொடுத்த ஆறுதல்…! அர்ச்சனைச் சீட்டைக் கொடுத்துப் பிரசாதம் வாங்கிக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு வெளியே வந்து தனது காலணியை மாட்டிக்கொண்டு பணிமனைக்கு விரைந்தார்.

முன்கைமணிப்பொறி நேரத்தைக் காட்டி அவர் கடமையை நினைவுறுத்தியது.

மக்கள் அரவம் நிறைந்த அந்த வியாபார மையத்தில் எப்போதும் களை கட்டி நிற்கின்ற மிகப்பெரிய பேரங்காடியில் தான் அவரது பணி. பலவிதமான பொருள்களை விற்பனை செய்து கொண்டிருக்கின்ற அந்த நிறுவனத்தில் துணிகள் பிரிவில் அன்பானந்தன் வரவு, செலவுப் பொறுப்பை ஏற்றிருந்தார்.

கடமையே கண்ணானவர். கண்ணியமான மனிதர். எப்போதும் தூய வெள்ளை ஆடை அணிந்து நெற்றியில் திருநீறும், குங்குமமுமாய் இருக்கின்றவர். வேலையாட்கள் அவரை “அண்ணாச்சி” என்று தான் அழைப்பார்கள். குடும்பம் ஊரில் இருந்தது.

சிராங்கூன் வட்டாரத்தில் நண்பர்களோடு அறையில் தங்கியிருந்து வேலையைச் செய்து வந்தார்.

முதலாளி வீட்டுப் பெண்கள், பிள்ளைகளுக்கு அன்பானந்தன் மேல் தனி அன்பும், பற்றும் எப்போதும் இருந்தன. அந்த நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே அவர் அங்கே வேலை செய்து வந்ததால் முதலாளியின் குடும்பத்தில் நல்ல அணுக்கம் அவர்க்கு இருந்து வந்தது.

நிறுவனத்தின் முதலாளி கதிரேசன் பிள்ளையின் நம்பிக்கைக்குரியவராய் இருந்து தன் வேலையை அவர் கவனித்து வந்தார்.

பல சமயங்களில் பலர் அன்பானந்தன் தான் கடையின் முதலாளியோ என்று கேட்கின்ற அளவுக்கு அவருக்கு உரிமை அந்த நிறுவனத்தில் இருந்து வந்தது.

எவ்விதக் கெட்ட பழக்கங்களும் இல்லாமல் எந்தவிதமான பிரச்சினைகளும் இல்லாமல் இருந்து வந்ததால் அன்பானந்தன் அந்த இடத்தில் தனிக் கௌரவத்துடன் இருந்தார்.

தன்னுடைய பிரிவுக்குள் நுழைந்து தன் அறைக்குள் சென்று தன் பணியைத் தொடங்குமுன் வள்ளலாரை ஒரு முறை நினைத்து ஓர் அருட்பாவை மனத்துக்குள் உருப்போட்டுக் கொண்டு தன்நாற்காலியில் அவர் அமர்ந்தபோது.

பாழாய்ப் போன தன் மகள் மனம் மட்டும் பல நூறு கற்களைக் கடந்து பரமக்குடியிலே புதுக்குடித்தனம் போயிருந்த மகள் பொன்னழகுவிடம் போய் நின்றது. சட்டைப் பைக்குள் கை விட்டார். அந்த நீலநிறக் கடித உறை கையில் வந்தது. எடுத்துப் படிக்கிறார்.

பாண்டி நாட்டில் பிறந்த பெண்ணல்லவா…! பாண்டி நாட்டு முத்துகளையே கோத்தது போல் தமிழை அடுக்கியிருந்தாள். அத்தனை அழகான எழுத்து.

ஆனால், அந்த அழகிய எழுத்துக்களைச் சுவைக்கின்ற நிலையில் இல்லை அன்பானந்தன். மகளின் எழுத்து ஒவ்வொன்றும் அவள் விழியிலிருந்து உதிர்த்த கண்ணீர் முத்தாகத் தெரிந்தது.

“அப்பா… சித்திரைப் பிறப்புக்கு நாலாம் வீட்டுக்கு வந்து திரும்பும் போது வைரக் கம்மல், வைர வளையலோடு தான் வர வேண்டும் என்று மாமியார், நாத்தனார் சொல்லிட்டாங்க.. அதுக்கு வழி பண்ணுங்கப்பா..”

முடிவாக எழுதியிருந்தாள். ஒரே பெண். ஆசை ஆசையாய் வளர்த்துப் படிப்பும் கொடுத்து, மாப்பிள்ளை வீட்டார் கேட்டதற்கு மேல் சீதனமும் கொடுத்து, வந்து மூன்று மாதந்தான் ஆகிறது, அதற்குள் இப்படி என்றால்…

இதுவரை முதலாளியிடம் கடனோ… முன்பணமோ வாங்கிய அனுபவம், பழக்கம் அவருக்குக் கிடையாது. அவரது சீரான வருமானத்தில் சிக்கனமாய்ச் செலவு செய்து பொறுப்புடன் சேர்த்து வைத்த மனைவி காஞ்சனாவினால் அவர் நிம்மதியாய் வாழ்ந்தார்.

இப்போது இப்படி ஒரு புதுச் செலவு வந்தால், அவர் தான் என்ன செய்வார்? மனம் வேலையில் பொருந்தாமல் கடலைத் தாண்டி அலைந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்லக் கூட்டம் அதிகமாகி வியாபாரம் சூடு பிடிக்கத் தொடங்கியது.

யார் யாரோ வந்தார்கள். பேசினார்கள். பரபரப்புடன் அவரும் வேலையில் ஈடுபட்டார். இடைஇடையே கடையின் நிர்வாகி நித்தியானந்தம் அவரை வந்து பார்த்ததும், போனதுமாய் இருந்தார். இயல்பாகவே நிர்வாகி கொஞ்சம் தன்மூப்பான போக்கை கொண்டவர். புதிதாய் நிறுவனத்தின் முழு நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருந்தார்.

புதிய படிப்பு.. புதிய வரவு, செலவு… இதற்கிடையில் பழைய பழக்க, வழக்கங்களோடு போராடிக் கொண்டிருக்கின்ற அன்பானந்தன் போன்றவர்கள் அங்கிருக்கின்றது அவருக்கு முற்றாக ஒத்து வரவில்லை.

முதலாளியிடம் நேரிடையாகச் சொல்ல முடியாமல் சாடைமாடையாகச் சொல்லிப் பார்த்தார். முதலாளி அதைக் காதில் வாங்கியதாகத் தெரியவில்லை… சமயத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

நேரம் ஒடிக் கொண்டிருந்தது. எல்லாரும் நண்பகல் உணவுக்குப் போய்த் திரும்பிய போது தீடீரென்று முதலாளி வந்தார்.

அன்பானந்தனைத் தன் அறைக்குள் அழைத்தார். ஒரு பிளாஸ்டிக் பையை அவர் முன் எடுத்து வைத்தார்.

“எத்தனை நாளா நடக்குது இது. என் கிட்டே கேட்டிருந்தால் நானே உங்களுக்குக் கொடுத்திருக்க மாட்டேனா.. உங்களை முழுசாக நான் நம்பினதுக்கு இதுதான் நீங்கள் காட்டற நன்றியா?” எண்ணெயில விழுந்த கடுகாய் வெடித்தார் முதலாளி.

எண்சாண் உடம்பும் குறுகிப்போனார் அன்பானந்தன். வாய் திறந்து எதையும் சொல்ல விரும்பாதவராய் ஒரே ஒரு முறை தனது இரு கைகளையும் குவித்து முதலாளியை வணங்கி விட்டு உதடுகள் துடிக்க, உள்ளம் குமுறக், கண்களிலிருந்து நீர் முத்துக்கள் வெடித்துச் சிதற, அந்த அறையை விட்டு மளமளவென்று வெளியேறினார் அவர்

கால்கள் பழக்கப்பட்ட சிராங்கூன் சாலையில் தங்கு தடையின்றி நடை போட்டன. முதலாளியின் அறையில் இருந்து அவர் வெளியேறியதைப் பார்த்த மற்ற பணியாட்கள் முதலாளியிடம் போய்ப் பேசப் பயந்து தயங்கி நின்றனர். அனுபவம் போதாத காரணத்தினால் அவர்களுக்குத் துணிவு வராமல் போனது. சற்று நேரம் கழித்து உள்ளே வந்த பணிப்பெண் கீதாவிடம் அவர்கள் விவரத்தைச் சொல்ல அவள் பதறிக்கொண்டு முதலாளியிடம் ஓடினாள்.

அவள் சொன்ன வார்த்தையைக் கேட்ட முதலாளியின் முகத்தில் அதிர்ச்சி படர்ந்தது.

“ஐயய்யோ..வீட்டுப் பிரச்சினையோடே கடைக்கு வந்த நான் அந்தப் பயல் சொன்னதைக் கேட்டு ஆத்திரத்துடன் அவசரப்பட்டுப் புத்திகெட்டதனமா அந்த மனிதரைத் திட்டிட்டேனம்மா.. என் புத்தியை நான் என்னன்னு சொல்ல ?…”

புலம்பினார் கதிரேசன் பிள்ளை. பல இலட்சம் வெள்ளியை நிர்வாகம் பண்ற உங்களுக்கே வீட்டு பிரச்சினையைத் தாங்க முடியலியே அய்யா! அவராலே மட்டும் எப்படி அவரோட வீட்டுப்பிரச்சினையைத் தாங்க முடியும்…?

“காலையிலேர்ந்து மனசு நல்லாயில்லேன்னு சொல்லிக்கிட்டு இருந்தாரு…”

“சாப்பாட்டுக்கப்புறமாகக் கணக்கை ஒழுங்கு பண்றேன்… சிறிது நேரம் வெளியே போய்விட்டு வர்றேன்… அது வரைக்கும் இது என்னோட மேசையிலேயே இருக்கட்டும்னு சொல்லிட்டுத்தான் போனாரு…”

“அதுக்குள்ளே நீங்களும், நிர்வாகியும் நெனைக்கிற மாதிரி அவர் இதைத் திருடி வைக்கலை, ஐயா.. இதோ மற்றதெல்லாம் என் கிட்டே இருக்கு…’

யாரோ முதுகில் சவுக்கால் அடித்தது போன்ற உணர்வு! தானே தன் கையால் தலையிலடித்துக் கொண்டார். நிர்வாகி, நித்தியானந்தத்தைக் கூப்பிட்டுக் கடுமையாகத் திட்டினார்.

காரை எடுக்கச் சொல்லிக் புறப்பட்டார் அன்பானந்தன் வீட்டுக்கு. அந்த நேரம் பார்த்து அவரைப் பார்க்க யார் யாரோ வந்தார்கள். பேசினார்கள். மனம் இருப்புக் கொள்ளாமல் தவித்தது.

வந்தவர்கள் தாங்கள் நடத்தப்போகும் சமய விழாவுக்கு நன்கொடை வேண்டியும், அழைப்பிதழ் கொடுக்கவும் வந்ததால் அவர்களை மறுக்க முடியாமல் போய்ச் சிலமணி நேரங்களை அவர் அவர்களோடு கழிக்க வேண்டியதாயிற்று.

முதலாளியின் சினத்திற்கு முன் எதிர் பேச முடியாதவராய் நித்தியானந்தனே காரை ஓட்டி வந்தார். இருவரும் இறங்கி விசாரித்தார்கள்.

பக்கத்து வீட்டுப் பெண்மணி வந்து பேசினாள். “மற்ற நண்பர்கள் யாரும் இல்லை என்றும் அன்பானந்தன் மட்டுமே உள்ளே இருப்பதாகவும் கூறினாள்.

கதவு திறந்து கிடந்தது. தள்ளிக் கொண்டு உள்ளே எட்டிப்பார்த்தார்கள். கதிரேசன் பிள்ளையும், நித்தியானந்தனும் ஊதுவத்தியின் நறுமணம் எங்கும் பரவிக் கிடந்தது. கூப்பிட்டுக் கொண்டே உள்ளே போனார். அறைக்கதவை மெல்லத் தள்ளியவாறு அழைத்தார்.

எதிரே நாற்காலியில் அமர்ந்தவாறு மேசை மீது தலை கவிழ்ந்த நிலையிலிருந்த அன்பானந்தனைத் தன் கையால் தோளைத் தொட்டு உசுப்பியவர் திடுக்கிட்டார். அவரது தலை சரிந்தது. உயிரற்ற உடல் முதலாளியின் கையில் சாய்ந்தது.

முதலாளி கதறினார்.

“அய்யய்யோ… போய்ட்டியா, அய்யா… அய்யா… உன்னை நானே கொன்னுட்டேனா… என்னோட வார்த்தையே உன்னைக் கொன்னுடிச்சா…” புலம்பிக் கொண்டே மேசையைப் பார்த்தார்.

உலகப் பொதுமறையாம் திருக்குறள் நூல் திறந்த நிலையில் கிடந்தது. பார்க்கிறார். பச்சை வண்ணத்தில் கோடு போடப்பட்டிருந்த அந்தக் குறட்பா முதலாளியின் முகத்தில் அறைந்தது போல் இருந்தது.

“மயிர் நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்”

நன்றி : தமிழ்முரசு, சிங்கப்பூர்

– மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005, சிங்கைத் தமிழ்ச் செல்வம், சிங்கப்பூர்

Print Friendly, PDF & Email
நூலாசிரியர் பற்றி... - மனங்கவர் மலர்கள், முதற் பதிப்பு: ஜூன் 2005 இலக்கிய வடிவங்களில் சிறுகதை. புதினம், கட்டுரை, உரைவீச்சு போன்ற அனைத்து நிலைகளிலும் சிந்தனையை வெளிப்படுத்துகின்ற ஆற்றல் மிக்கவராக மதிக்கப்படுகின்ற சிங்கை. தமிழ்ச்செல்வம் அவர்களை 1995-ம் ஆண்டு முதல் நான் நன்கு அறிந்து வைத்து உள்ளேன். சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகத்தில் உறுப்பியம் பெற்றுத் தொண்டாற்றினார். துணைச் செயலாளர் பொறுப்பேற்றுத் துணை நின்றார். கழகத்தின் வாழ்நாள் உறுப்பினராய்த் தொடர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *