கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: March 18, 2015
பார்வையிட்டோர்: 9,859 
 
 

தலைவர் நரசிம்மனும், சின்னப்பா வாத்தியாரும் வழக்கத்துக்கு மாறாக கிருஷ்ணர் கோயிலின் பின் பக்கம் இருக்கும் குப்பை மேட்டை ஒட்டிய நிலத்தினை, பார்த்து கொண்டும் அளந்து கொண்டும் இருந்தது அங்கிருந்தவர்களுக்கு சற்று வித்தியாசமாக இருந்தது. நேரம் போகப்போக ஒன்றிரண்டு பேராக சுற்றி பார்ப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது.

எதிர் நிலத்தின் பக்கவாட்டில் தான் சின்ன மொட்டையின் கூரை கொட்டகையும் இருக்கிறது. அவனை எல்லோரும் சின்ன மொட்டை என்று கூப்பிட்டாலும், அவனது நிஜ பெயர் என்னவோ ராமச்சந்திரன் தான், புரட்சித்தலைவரின் மீது கொண்ட அளவுகடந்த அன்பினால் அவனுக்கு அப்படி ஒரு பெயரை அவன் அப்பா வைத்திருந்தார். இவனும், இவன் அப்பாவும் ஒரு முறை திருத்தணி கோயிலுக்கு சென்று வேண்டுதலின் பெயரில் மொட்டை போட்ட பொழுது இருவரையும் எளிதாக கூப்பிட, அவன் அப்பாவை பெரிய மொட்டை என்றும், இவனை சின்ன மொட்டை என்றும் கூப்பிட்டது இன்று வரை நிலைத்து போனது.

கூட்டம் அதிகரித்திருந்த நேரத்தில், ஒரு கவசகி மோட்டார்சைக்கிளில் வந்த மணியக்காரரும், சிப்பந்தியும் கோவிலின் முகப்பிலேயே வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தனர். அங்கிருந்தவர்கள் அனைவரும் மணியக்காரர் சின்னப்பா வாத்தியாரிடம் கை நீட்டி பேசுவதை கவனிக்க ஆரம்பித்தனர். சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்த சின்ன மொட்டை, வண்டியை நோக்கி ஓடினான். ஆரம்பத்தில் இருந்து அங்கு இல்லாமல் போனதால், சின்ன மொட்டைக்கு அவர்கள் பேசுவதை புரிந்து கொள்வதில் சற்று சிரமம் இருந்தது. இருந்தாலும் கேட்டவரையில் அவர்கள் குறிப்பிட்டுகொண்டிருந்த இடத்தில் ஒரு காங்கிரீட் கட்டடம் வருவது மட்டும் தெளிவாக புரிந்தது, விடாமல் அங்கிருந்த அவன் கூட்டாளிகளுடன் பேசியதில் அந்த இடத்தில் கக்கூஸ் வரப்போவதாக தெரிந்தது.

அந்த ஊரில் யார் வீட்டிலும் கழிவறை இல்லை. அதே நேரம் அந்த ஊரில் காலை கடன்களுக்கு கழிவறையை பயன்படுத்தியதாக அவன் கேள்விபட்டதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் ஊருக்கே புதிதான ஒரு விஷயம் அவன் வீட்டெதிரில் வரப்போவதை நினைத்து பெரும் மகிழ்ச்சி கொண்டான். அன்றிலிருந்து கழிப்பறை குறித்த அவனது கற்பனைகளும் எதிர்பார்ப்புகளும் அதிகமானது. இந்த விஷயம் அவன் மனதில் ஒரு ஓரத்தில் நிரந்தரமாகவே ஒட்டிக்கொண்டது. கழிவுகளுக்கான ஒரு இடம், ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் இடம், இதையெல்லாம் தாண்டி கொட்டகைகள் நிறைந்த இடத்திற்கு நடுவில் ஒரு வெள்ளை கட்டடம், அதையும் தாண்டி இன்னும் சில மாதங்களுக்கு கட்டிட பணிகளின் காரணமாக ஆட்கள் நடமாட்டமும், பிறகு திறப்பு விழாவிற்கான கொண்டாட்டமும் நடக்க போவதை நினைத்து குதுகலமானான். தனது எல்லைக்குள் ஒரு கட்டிடம் என்கின்ற எண்ணம் அவனை பூரிப்பின் எல்லைக்கு கடத்தியது. அதனால் திறப்புவிழாவின் போது சிறப்பு விருந்தினருக்கு பின் தன்னால் மட்டுமே உள்ளே நுழைய முடியும் என்ற எண்ணமும், அதை சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியும் என்ற எண்ணமும் அதிகமானது.

கழிப்பறைகளுக்கான இவனது அறிமுகம் சொல்லிகொள்ளும் படி இல்லை, முத்துகடையில் பார்த்திருக்கிறான், இவன் பள்ளி நவல்பூரில் இருப்பதால், பள்ளிக்கு செல்ல இவன் கட்டாயம் முத்துக்கடையை கடந்து தான் போகவேண்டும். முத்துகடை என்பது சுற்றியிருக்கும் ஏறக்குறைய 10 கிராமங்களுக்கு மட்டுமே உண்டான பெரிய டவுன். இங்கு மக்கள் நடமாட்டம் அதிகம் என்பதால், இங்கு மட்டும் தான் கழிவறை இருக்கிறது. இந்த நிகழ்வுகளுக்கு பிறகு சின்ன மொட்டை பள்ளிக்கு செல்லும் போதெல்லாம், அவன் கவனம் முழுதும் கழிவறை கட்டிடம் மீது தான் இருந்தது. இவன் கடக்கும் போது உள்ளே சென்று வருபவர்களை பற்றிய யோசனையாக இருப்பான். காரணம், ஒரு நாளும் உள்ளே சென்றதில்லை அதனால் எப்படி உபயோகபடுத்த வேண்டும் என்பது பற்றியும் ஆர்வம் அதிகமானது. இவனின் இந்த எதிர்பார்ப்பு தான் அரசை வெகு வேகமாக இயங்க வைத்தது போல, கட்டிட வேலைகள் மிக வேகமாக நடந்தது. அடிக்கடி ஊர்பெரியவர்கள் கட்டிட வேலைகளை பார்ப்பதும் விசாரிப்பதுமாக இருந்தனர். சின்ன மொட்டையும் தன பங்கிற்கு தவறாமல் தனது கங்காணி வேலையை செய்துவந்தான்.

இந்த கழிப்பறை, கட்டிடம், வேகமான பணிகள் இதையெல்லாம் தாண்டி இவன் நினைவும் எதிர்பார்ப்பும் அதிகமா இருந்தது என்னவோ கழிவறையின் திறப்பு தினத்தை பற்றிதான். காரணம், ஒரு வயது வந்த பெண் சடங்கிற்கு தயாராவது போல ஒரு புது தன்மையையும், அழகியலையும், புது பொலிவினையும் அந்த கட்டட வளர்ச்சியில் பார்த்தான். இவன் கற்பனையில் கழிப்பறை என்பது வெள்ளை மாளிகையாகவும், ஒருவர் மட்டுமே அதிகபடியான ஒரு இடத்தை நிரப்பி கொள்ளும் அறையாகவும், வெளிர் வெள்ளை நிறத்தில் உக்கார்ந்திருக்கும் பொழுது தன்னை சுற்றிக்கொள்ளும் சுவராகவும் இருந்தது. முத்துக்கடை கழிவறையை கடக்கும் போதெல்லாம் அவன் நுகர்ந்த அந்த நாற்றம், இந்த கழிவறையில் இல்லாதிருக்கப்போகும் அந்த நாளையும் எதிர்பார்த்தான். நாளுக்கு நாள் வளரும் கட்டடம் போல் இவன் ஆசையும் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

கிட்டத்தட்ட வேலைகள் நிறைவு பெரும் தருவாயில் வேலைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. விசாரித்ததில் குறித்து கொடுத்த தேதியில் முன்னாள் MLAவால் வர இயலாது என்பதால், அந்த கட்டிடத்திற்கான பணிகளை நிறுத்தியிருந்தனர்.

இந்த நேரத்தில் ராந்தத்தில் வசிக்கும் தன் தாய்மாமன் கேசவன், காதல் தோல்வியால் பூச்சி மருந்தை குடித்துவிட்டதாக தகவல் வரவே, சின்ன மொட்டையும் அவன் தாயும் அன்றே பாரதி பஸ் பிடித்து வேலூர் சென்று, அங்கிருந்து ராந்தம் சென்றனர்.

குடல் வெந்து கேசவன் படுக்கையில் கிடந்தான். அவனை பார்த்துக்கொள்ள அவன் தாயும் சின்ன மொட்டையின் அம்மாவும் உடனிருந்தனர். இவர்களுக்கு டி மற்றும் நாஷ்டா வாங்கி வரவும், மற்ற சின்ன சின்ன எடுபிடி வேலைகள் செய்யவும் சின்ன மொட்டை ராந்தத்திலேய தங்கிவிட்டான். இப்படியே இரு வாரங்கள் ஓடிவிட்டன ஆனாலும், சின்ன மொட்டையின் எண்ணம் முழுவதும் கழிவறை திறப்பு தினத்தில், முதல் ஆளாக உள்ளே சென்று பார்க்க வேண்டும் என்பதிலேயே இருந்தது. மூன்று வாரங்களுக்கு பிறகு கேசவனின் சுடும் பேச்சுகளால் வழக்கமான சண்டைகளோடு கொஞ்சம் பச்சை மல்லாட்டையை எடுத்துக்கொண்டு அம்மாவை கூடிக்கொண்டு வீட்டிற்கு புறபட்டான்.

ஊரை நெருங்கியதும் சின்ன மொட்டை, வழக்கத்துக்கு மாறாக சுத்தமான சாலைகளையும், வெட்டப்பட்ட வேலி காத்தான் முள் செடிகளையும், புதிதாக வண்ணம் பூசப்பட்ட கம்பங்களையும் கண்டு சற்று சந்தேகப்பட்டவன், கழிவறை கட்டிடம் நோக்கி வேகமாக ஓடினான். அங்கு இரண்டு நாட்களுக்கு முன் வெட்டப்பட்ட கல்யாண பூசணியையும், சில குங்கும பூச்சுகள் இருந்ததை பார்த்து ஏமாற்றம் அடைந்தான்.

தனக்கு முன்பே வேறொருவரால் அந்த புதுப்பெண் தழுவப்பட்டதை போல உணர்ந்தான். ஏற்று கொள்ள முடியாத ஒன்றாகத்தான் இருந்தது. திறப்புவிழாவினை பார்க்கமுடியவில்லை என்பதைக்காட்டிலும், முதலாளாக அந்த வெள்ளை ஸ்பரிசத்தை நுகரமுடியாமல் போனது அவனை என்னவோ செய்தது. இருப்பினும் வெள்ளை நிறத்தால் ஆனா சுவரையும், பீங்கானை வைத்து கட்டப்பட்ட கழிவறையை பார்க்க நினைத்து உள்ளே சென்றவன் வெள்ளை சுவரெங்கும் பெண்ணின் மார்பகம் கரிகோட்டில் கிறுக்கபட்டு “சுந்தரி” எனஎழுதபட்டிருந்தது. விம்பி வெளியேறியவனுக்கு, மனித கழிவுகளுக்கு மட்டும் அல்ல வக்கிர மனகழிவுகளுக்கும் தான் என்ற எண்ணத்தோடு மூக்கை மூடினான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *