களித்தார் காட்சி…! – திருக்குறள் விளக்கக் கதை

0
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 5,222 
 

அன்று திங்கட்கிழமை. காலை ஒன்பதரை மணி இருக்கும். வெளிநாட்டு அஞ்சல் தொடர்புக் கட்டணம் பற்றித் தெரிந்து கொள்ள நகரின் தலைமை அஞ்சலகத்திற்குச் சென்றிருந்தேன்.

பெரிய அறையொன்றில் நடு இருக்கையில் இருந்தார் அலுவலகப் பொறுப்பதிகாரி. அவரைப் பார்க்கும்போது, அந்தக்காலத்து அரசவையில் வீற்றிருக்கும் அரசரைப் போலத் தெரிந்தார்; மணிமுடி ஒன்றுதான் குறை!

மடிப்புக் கலையாத உலர்சலவை உடை; அழுந்த வாரிவிடப்பட்ட தலைமுடி; நடு நெற்றியில் ¾” x ½” அளவெடுத்து இடப்பட்டதைப் போன்ற திருநீறு! பார்ப்பவர் அனைவரும் மதித்து வணங்கும்படியான தூய்மையான ஆளுமைமிக்க தோற்றம்!

வருகின்றவர்களைச் சிறு புன்னகையுடன் தலையைச் சிறிதே அசைத்து மறுவணக்கம் கூறி வரவேற்கிறார். தேவையான அளவிற்கு மட்டும் வெட்டித் தறித்தாற் போல் பேசுகிறார்.

நான் சென்றபோது கூட்டம் குறைவாக இருந்தது. நான் கேட்ட செய்திக்குச் சுருக்கமாக விடைகூறி விளக்கினார். நன்றி கூறிவிட்டு வெளியே வந்தேன். பத்துமணிக்குள் என் அலுவலகம் செல்வதற்காக விரைந்தேன்.

அன்று மாலை மணி ஆறேகால் அல்லது ஆறரை இருக்கும் என்று எண்ணுகிறேன், அலுவலகத்திலிருந்து நூலகத்திற்கச் சென்றுவிட்டு, வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். ஊரின் நடமாட்டம் மிகுந்த பெரிய கடைத் தெருவின் வழியே வந்துகொண்டிருந்தேன். தொலைவில் ஓர் ஆள், வலப்புறமும் இடப்புறமுமாகத் தள்ளாடிக் கொண்டே எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்தார்.

கொஞ்சம் நெருங்கிச் சென்றதும் அந்த ஆளை எங்கேயோ பார்த்ததாற் போன்ற மங்கலான நினைவு(!) தோன்றியது. இடக்கையில் கடலைச் சுண்டல் பொட்டலம் ஒன்று இருந்தது. வேட்டி, சட்டை, கை, தலை எல்லாம் பட்டை பட்டையாக புழுதி ஒட்டியிருந்தது.

எங்கோ விழுந்து கிடந்திருக்க வேண்டும். வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. கால்கள் நேரே நிற்காது தள்ளாடிக் கொண்டே இருந்தன. எங்கேயோ விழுந்துவிடப் போவதைப் போன்ற மிகத் தள்ளாட்டமான தடுமாற்ற நடை! வாய்க்கு வந்தபடியான தொடர்பற்ற குழறிய சொற்கள்!

ஓர் அம்மா, சவளிக்கடை ஒன்றிலிருந்து இறங்கிச் சாலைக்கு வந்தார். ஐயோ! அந்த அம்மையார் மேல் மோதிவிடுவாரோ? அரண்டுபோய் விலகிச் சென்றுவிட்டார் அந்த அம்மையார்.

என்ன கொடுமை! ஓ! இவர்… இவர்… இவர் நான் காலையில் பார்த்த அந்த அலுவலகப் பொறுப்பதிகாரி அல்லவா?

ஒரு பால்காரர், தம் மாடுகளுக்குத் தீனி வாங்க வந்தவர், இவரைப் பார்த்தார். இந்தப் பால்காரர்தாம் இவர் வீட்டுக்குப் பால் தருகிறவராம்! பால்காரர் இவரை வலிய அழைத்துச் சென்று தம் மிதிவண்டியின் அகன்ற பின்னிருக்கையில் அமர்த்திக் கொண்டு இவருடைய வீட்டை நோக்கிச் சென்றார்.

மிதிவண்டியில் அமர்ந்திருந்த அவர், கிடையாகவும் சாய்வாகவும் ஆடிக்கொண்டே செல்கையில், அவர் அமர்ந்திருந்த அந்த மிதிவண்டியும் குடித்திருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது!

மதுவருந்தும் ஒருவன், தான் மது அருந்தாத நிலையில் தெளிவாக இருக்கிறான் என்று கருதிக் கொள்ளுங்கள். அப்பொழுது, மது அருந்திய வேறு ஒரு ஆள் மனத்தாலும் பேச்சாலும் செயலாலும் தன் கட்டுப்பாட்டை இழந்து இழிந்த நிலையில், ஆடையிழந்து, உளறிக் கொண்டு, கண்ட இடத்தில் விழுந்து எழமுடியாத நிலையில் கிடப்பதைப் பார்க்கிறான்.

அந்தக் காட்சியைக் கண்ட பிறகாவது, தான் மது அருந்துவதால் தனக்கும் இந்த நிலைதான் ஏற்படும் என்று உணர்ந்து கொள்ள வேண்டும்; மது அருந்தலைக் கைவிட்டு அதிலிருந்து விடுதலை பெறவேண்டும் என உணர வேண்டும். இதையே இரண்டடிகளில் வலியுறுத்திக் கூறுகிறது குறள்.

கள்ளுண்ணாப் போழ்திற் களித்தானைக் காணுங்கால்
உள்ளான்கொல் உண்டதன் சோர்வு.

– தமிழநம்பி [thamizhanambi44@gmail.com] (அக்டோபர் 2009)

Print Friendly, PDF & Email

யார் முதல்வன்?

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

தவிப்பு

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 19, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)