(Title inspired by Dr.Abdul Kalam’s quote ”KANAVU KANUGAL”)
வேலைக்கு நேரமாகிக்கொண்டிருந்தது..
கடிகார முட்கள்..7.20யை நெருங்கிக்கொண்டிருந்தன..
சட்டென்று விழித்து…மேற்படி வேலைகளை முடித்து..கிளம்புவதற்குள்..மணி 8.25..!
9.30 மணிக்கு ஆபிஸில் கார்ட் “பன்ச்” பண்ணியாகவேண்டும்..இல்லையெனில்..இரண்டாவது ஷிப்ட் கணக்கில் தான்..அன்றைய நாளை ஓட்டவேண்டியிருக்கும்!.
எனது ரூமில் இருந்து 3 கிமீ தான்..அந்த MNC கம்பெனி.. கம்பெனிக்கு அருகிலேயே வீட்டை பிடிக்க நான் பட்ட பாடு..அப்பப்பா!!..
பெரிதாக நாகரீகம் பெறாத..நகரத்தையே சார்ந்திருக்கும் சிறு கிராமத்தில்..ஏதோ, தீப்பெட்டி போன்று ஒரு ரூம்..காலை சென்றால்..இரவு 8 மணிக்குத்தான் வீடு வருவேன்..எனவே, எனக்கும் அந்த கிராமத்துக்குமான உறவென்பது இரவுகளில் மட்டுமே.. பெரிதாக அந்த ஊர் மனிதர்களின் பரிட்சயம் எனக்கில்லை.. ஏதோ..முக்கில் உள்ள அண்ணாச்சிக்கடை.. அருகே, ஒரு டீக்கடை..பக்கம் மட்டுமே என்றோ ஒரு நாள் என்னை காணலாம்..லீவு நாட்களில் கூட வீட்டுக்கு சென்று விடுவேன்..
மொத்தத்தில், சாதாரண நடுத்தர குடும்பத்தை..ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவருவதற்காக ஊர் விட்டு ஊர் வந்து பஞ்சம் பிழைக்கும் ஒரு இளைஞன் நான்..!!அவ்வளவே..
அடித்து பிடித்து..கிளம்பி..பைக்கில் ஏறி..”கிக்கரை” உதைத்தேன்..விறுவிறென்று..வேகத்தை 40க்கு முடுக்கினேன்..ஊர் ரோட்டை அடைந்தது வண்டி..
திடீரென்று.. போகும் வழியை மறித்து ஏதோ ஒன்றை(?) சூழ்ந்தபடி ஒரு கூட்டம்..
ஒன்றும் விளங்கவில்லை..எனக்கு..! மணி..9-ஐ தொட்டுவிட்டது..என் பின்னால் வந்துக்கொண்டிருந்த பைக்குகள் கூட ஹாரன் சத்தத்தை எழுப்பாமல்..ஓரமாய் நின்றன..
எனக்கோ அவசரம்..இருமுறை ”ஹாரன்” அடித்தேன்..பக்கத்தில் இருந்த “கெழடு” ஒன்று..ஏய்..? ஏண்டா..சும்மாயிருக்க மாட்டியா..?? என்று நாக்கை..கடித்தது..
ஏதோ..விபத்து போல..என்று எண்ணி..பைக்கை ஓரமாய் அனத்திவிட்டு,கூட்டத்தை விலக்கி உள்ளே நுழைந்தேன்.
கூட்டமெல்லாம்..பரபரப்பாக பேசிக்கொண்டிருந்தது.. ரோட்டின் ஓரமாய்..சிறு “சூலம்” நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது..அதற்கு பின் ஒரு வெள்ளைக்கல்..அதன் இருபக்கமும்.இரண்டு சிறு கற்கள்..!!!
அதற்கு மஞ்சள் பூசி.பொட்டிட்டுருந்தார்கள்..தேங்காய் உடைத்து,பழம் வைத்து,ஊதுவத்தி கொளுத்தி சூடம் ஏற்றப்பட்டிருந்தது..
அதன் முன்..ஒரு 45 வயதை தொட்ட..கட்டுமஸ்தான ஆள்..சட்டையில்லாமல்..காவி வேட்டிக்கட்டி, உடல் முழுக்க சந்தனம் பூசியபடி, “கடா” மீசை, கழுத்து வரை முடிவைத்து..கழுத்தில் கரிய “சாட்டை” வைத்து ஏதோ..ஒரு ராகத்தில் பாடி, குதித்துக்கொண்டிருந்தார்..!
ஒன்றும் புரியாமல்..”திருதிரு”வென்று முழித்துக்கொண்டிருந்தேன்..பக்கத்து பெரியவரிடம்..”என்ன இது?” என்றேன்..
அதற்கு, அவர், “என்னப்பா நீ.. இதான்பா..இந்த ஊருக்கே தண்ணிக்கொடுக்குற “பூமிக்கருப்பன்” சாமீ..!!” அவருதான்..இந்த ஊரு அம்மன் கோவில் பூசாரி..ரொம்ப நாளா ஊர்ல மழை இல்ல;அதான் அவர வரவழைச்சு “குறி” கேக்குறோம்..!! என்றார்; இப்ப அவரு மேல சாமீ வந்து குறி சொல்லும் பாருங்களேன்..என்று சொல்லி முடிப்பதற்க்குள்..அந்த காவி ஆ”சாமி” கொக்கரித்தார்..!!
‘சாமி வந்துடுச்சு!’..மஞ்ச தண்ணீ கொண்டாங்க..என்றார் கூட்டத்தில் ஒருவர்..
பெண்கள் தங்கள் கைகளில் வைத்திருந்த மஞ்சள் தண்ணீர் நிரம்பிய குடங்களை..வரிசையாக தர..ஒருவர் அதை அவர் மேல் ஊற்றி முடித்தார்..!!
எனக்கு ஒன்றும் பிடிபடவில்லை..இந்த தண்ணி கஷ்டத்திலும் சாமீயாடிக்கு இவ்வளவு தண்ணியா?.. என்று வேடிக்கையாக(!) இருந்தது..
கூட்டம் அமைதியானது..!
திடீரென்று..அந்த காவிசாமி.. சுற்றி நின்ற கூட்டத்தை..என்னைப்போலவே திருதிருவென்று பார்த்தார்; மறுபடியும்..கொக்கரித்து..கண்ணை உருட்டி, ”அடேய்..”தோலாடை,”கருப்பாடை” எனக்கு ஆவாதுனு தெரியும்ல..” என்றார்.
.
அப்போதுதான் கவனித்தேன்..சுற்றி இருந்தவர் யாரும்..கருப்பு நிற ஆடை அணியவில்லை..என்பதை..(அப்பதான் புரிஞ்சுது..என்னபோல “பைக்”ஆசாமிகள் ஏன் கூட்டத்துக்குள்ள வரல என்று..)
ஏன்னா??…அன்னைக்கு நான் கருப்பு பேண்ட்,கருப்பு நிறகோடு விழுந்த சட்டை,கருப்பு பெல்ட் கட்டியிருந்தேன்..
அனைவரும் என்னை நோக்கினர்..யாருப்பா இது..! புரியாம வந்து நிக்குற..என்று கத்தினர்.
உடனே நழுவப்பார்த்தேன்;அந்த காவிசாமி..என்னை அழைத்தார்(!!!)..
உள்ளுற ஒரே நடுக்கம்..ஷூவை கழட்டிவிட்டு..கிட்டே போனேன்..”பளார்” என்று என் கன்னத்தில் ஒரு அறை..!!அய்யோ!! வென்று கத்தினேன்..(இதுவே வேறு யாரென்றால்..அந்த அறை..திரும்பியிருக்கும்..ஆனா..”சாமியாடி” என்றபெயரில்!..ஊரே அவர் பக்கம்…!! பொறுத்துக்கொண்டேன்..)
அதோடு நிற்கவில்லை..என் இடுப்பு பெல்டை சடாரென்று..உருவினார்(ன்)..அப்பவே நான் சூதாரித்திருக்கவேண்டும்..!!
பின்..பெல்டை தூக்கி எறிந்து விட்டு..என் காலரை பிடித்து கொஞ்சம் நேரம்..கண்ணை உருட்டி, நாக்கை மடித்து கொக்கரித்தான்; “பிராந்தி” வாடை வீசியது.!!.
சாட்டையை என்மீது 5 முறை விளாசினான்..
ஊரே நின்று வேடிக்கை பார்த்தது; சிலர், சாமிக்குத்தம்..அதான் சாமீ இப்படி அடிக்குறாரு..இவனெல்லாம் ஊர்ல புழங்க விட்டது நம்ம தப்பு..!.என்றனர்;
சிலர்..இந்தமாறி, சுத்தமில்லாத இளந்தாரை பசங்களாலதான் ஊர்ல மழையே பெய்யல..என்றனர்.!
எனக்கோ..”கிறுகிறு”வென்று வந்தது; கண் சொக்கியபடி சரியும் போது, தூரத்தில் நட்டுவைத்த பெரியார்சிலை “கவனிப்பாறின்றி” சிதிலமடைந்திருந்ததை பார்த்தேன்; கீழே இருந்த வெள்ளைக்கல்லையும் பார்த்தேன்…”பெரியார்” நினைவுக்கு வந்தார்..
சாமியாடி..மீண்டும் என்னை நெருங்கினான்..
கருப்பு நிற ஃபேன்டை தொட்டான்..(ஊரார் முன்னிலையில் மானபங்கம் உறுதி!!)..
விருட்டென்று..அவன் கழுத்தை சுற்றியிருந்த சாட்டையை..கழுத்தை சுழற்றி இறுக்கினேன்; மூச்சுத்திணறி..மயங்கியபடி..சாமியாடி சரிந்தான்..(சாமீ மலையிறங்கிவிட்டது போலும்).
கீழே இருந்த பெல்டை எடுத்து இடுப்பில் இறுக்கிக்கொண்டு..ஷூவை மாட்டி..பைக்கை எடுத்து அனாயாசமாய் “கிக்கரை” உதைத்தேன்; கூட்டத்தை கிழித்து “சருகாய்” பறந்தது பைக்..மனம் லேசானது..!!
இப்போதும்..கூட்டம் ‘அமைதி’ காத்துக்கொண்டிருந்தது..!!!!