கலைஞன் துயர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 5, 2022
பார்வையிட்டோர்: 1,058 
 

(1957 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அந்தக் கடிதத்தை-அந்த ஒரே வாக்கியத்தை அவன் மீண்டும் மீண்டும் திருப்பித் திருப்பிப் படித்தான் . “தங்கள் வாழ்க்கைப் போர் என்ற நாவல் முதற் பரிசுக் குரியதென…”

அவன் கண்கள் பனித்தன. பனித்து நிற்கும் அவன் கண்களுக்கு மேலே இமைகள் சுண்டித் துடித்தன. உடம்பு முழுவதும் உரோமங்கள் குத்திட்டு நிற்கையில், அவன் உள்ளிற் பாய்ந்து பரவிய அந்த ஆனந்த வெறி அவனைப் பைத்தியமாக்கித் திணற அடித்தது. அந்த உணர்ச்சி…….. ஆனந்தம் முற்றிய நிலையே பைத்தியமா?

தன் படைப்பிற் பெருமையும் திருப்தியுமடைந்த சச்சிதானந்தன் பித்தனாகி விட்டதைப் போல அவனும் உணர்ச்சி வெறியின் உச்ச நிலையிற் தன்னிலையிழந்து நிற்கையில், அவன் கண்கள் மீண்டும் அக்கடிதத்தை, அந்த ஒரே வரியைப் படித்தன. படித்தவன் விரித்த கடிதத்தை மார்பிலணைத்த படியே படுக்கையிற் பொத் தென்று வீழ்ந்தான்.

‘வெற்றி-வெற்றி’ என்ற அவன் அந்தராத்மாவின் கூக்குரல் அவன் சடலத்தின் ஒவ்வோர் உயிரணுவையும் நிறைத்து நிற்கையில், படுக்கையிற் கிடந்தபடியே அவன் மீண்டும் அடிக்கடிதத்தைப் படித்தான் அந்தக் கடிதத்தில் பென்னம் பெரிய எழுத்துக்களில் மிகத் தெளிவாகத் தான் அந்த வரிகள் எழுதப் பட்டிருந்தன. “தங்களின் ‘வாழ்க்கைப் போர்’ என்ற நாவல் முதற்பரிசுக்குரிய தெனத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.”

அதற்கு மேல் அவன் மனம் கடிதத்தைப் படிக்கும் சக்தியையே இழந்து விட்டதோ என்னவோ! நாவலுக்குக் கிடைக்கும் பரிசுத்தொகை கூட அவனுக்கு வேண்டாமோ என்னமோ! அவன் மீண்டும் மீண்டும் அந்த ஒரே வரியைத் தான் படித்தான்.

நிமிஷங்கள் கரை கையில் குத்திட்டு நின்ற அவன் உரோமங்கள் படிந்து, பனித்திரை படிந்த கண்கள் ஓர் புத்தொளி பெற்றுத் தெளிவடைந்தபோது அவன் மனதிலே அவளைப் பற்றிய எண்ணம் வந்தது.

கமலாவின் எண்ணம் வந்ததும் அவன் பரபரப்புடன் எழுந்து- கதவைப் பூட்டினானோ என்னவோ-படை பதைக்கும் வெயிலில் காலிற் செருப்பைக்கூட. மாட்ட மறந்தவனாய்த் தெருவீதியில் வேகமாக நடைபோடத் தொடங்கினான்.

இந்தக் கடிதத்தைக் கமலா கண்டதும் எத்தனை ஆனந்தமடைவாள் என்று அவன் எண்ணுகையில் பிறவி யின் பயனையே அடைந்துவிட்டது போன்ற ஓர் நிறைவு அவன் மனதை நிறைத்தது. அவன் நடந்து கொண்டிருந் தான்.

தெருவோரத்திற் பெட்டிக் கடை யொன்றில் தமிழ் நாட்டுச் சஞ்சிகைகள் எல்லாம் தொங்கிக் கொண்டிருந்தன.

எதையோ எண்ணிக் கொண்டவன் கடைக்குச் சென்று ‘அல்லி’ மாத சஞ்சிகையை வாங்கிக் கொண்டு மேலே நடந்தான். அவன் கையிலே ‘அல்லி’…

‘அல்லி’யைத் தான் அன்று கமலாவும் படித்துக் கொண்டிருந்தாள். அப்போதுதான் அவன் எழுத்துலகிற் பிரவேசித்திருந்தான். தமிழிலக்கியத்தை நாளும் பொழு தும் படித்துக் கொண்டிருக்க மிக்க வசதியேற்படும் என்ற எண்ணத்தினாற் எங்கேயோ காட்டிலாகாவில் உத்தி யோகமாயிருந்தவன் அவ்வேலையை உதறித் தள்ளிட்டுப் பாடசாலை உபாத்தியாயராக வந்தான்.

அப்பாடா! அப்போது அவன் தந்தை கொண்ட ஆத்திரம் “உருப்படத் தெரியாத தறுதலை!” என்றல்லவா அவர் திட்டினார். இப்போதே தந்தையாரிடம் சென்று ‘வெற்றி -வெற்றி’ என்று கதற வேண்டும் போல இருந்தது அவனுக்கு. ஆயினும் அவன் தந்தைக்காகவா கதை எழுதினான்? வாழையடி வாழையாக வந்த ரசிகனுக்காக அல்லவா எழுதினான். அந்த ரசிகனைத் தேடி அவன் கால்கள் நடந்து கொண்டிருந்தன.

அந்த ரசிகை…!

அவள் பாட சாலையிற் படிப்பிக்கத் தொடங்கிய முதல் நாள்… அப்பாடசாலையின் ஆசிரியர்கள் எல்லோரையும் இன்னும் அவனுக்குச் சரிவரத் தெரியாது.

அன்று ஒழிந்த நேரத்தில் அவன் ஆசிரியர்கள் தங்கும் அறைக்கு வந்திருந்தான். அங்கே ஓர் மூலையில் யாரோ ஒருத்தி (ஆசிரியையாகத்தான் இருக்கும்) ‘அல்லி’யை வைத்துப் படித்துக் கொண்டிருந்தாள். அவன் வந்தது கூட அவளுக்குத் தெரியாது. வாசிப்பில் அத்தனைக்கு லயித் திருந்தாள்.

அவனும் இன்னொரு மூலையில் உட்கார்ந்து கொண்டான்.

கதையை வாசித்து முடித்த கமலா அந்தச் சஞ்சிகையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ‘அபாரம், அற்புதம்!’ என்று குதித்தாள்.

எதிரே, அவன் இருந்ததைக் கண்டபோது அவள் நாணிக் கொண்டு….

அவன் கேட்டான், “யாருடைய கதையை இப்படிப் புகழ்கிறீர்கள்?”

“ராஜகோபாலன் என்ற ஒருவர் கதை எழுதியிருக் கிறார். எத்தனை அற்புதமாக மனித வாழ்வைச் சித்தரித் திருக்கிறார் பாருங்கள்” என்றாள் அவள்.

“ராஜகோபாலனா? புதுப் பெயராக இருக்கிறதே” என்றான அவன்.

“அதனால் என்ன? இளம் எழுத்தாளராகவே இருக்கலாம். ஆரம்பத்தில் மீன் குஞ்சு தவளையைப் போல இருந்தாலும் தவளையின் தன்மைகளை உள்ளடக்கிக் கொண்டிருப்பது போல’ என்று புதுமைப் பித்தன் சொன்னது போல இவருக்கும் எழுத்தாளனுக்கு வேண்டிய குணங்கள் இருக்கின்றன” என்றாள்.

“அப்படியா?” என்று சாதாரணமாச் சொன்னவன் மனதிலே, என் கதையைப் படித்துப்பாராட்டவும் இந்தத் தமிழ் நாட்டிலே ஒரு ரசிகை இருக்கிறாள் என்று எண்ணுகையில் அவன் உள்ளம் பெருமிதங் கொண்டு விம்மியது.

மணியயடிக்கவே இருவரும் பாடத்துக்குப் போய் விட்டார்கள். இப்போது அவன் அந்த ரசிகையிடம் தன் வெற்றியைத் தெரிவித்துக் கொள்ள வேகமாகச் சென்று கொண்டிருக்கையில், தன் வெற்றியைக் கேள்விப் பட்டதும் அவள் என்ன சொல்லுவாள் என்று எண்ணு கையில்……….

அடுத்த நாள் அவள் சொன்னாள்: “நீங்கள் நேற்று என்னை ஏமாற்றி விட்டீர்கள். நீங்கள் தான் அந்தக் கதையை எழுதிய ராஜகோபாலன் என்று இப்போது எனக்கு நன்றாகத் தெரியும்.”

“அப்படியா? என்னை ராஜகோபாலன் என்று தெரிந்து கொண்டுதான் நீங்கள் என் கதையைப் புகழ்ந்ததாக நான் எண்ணினேன்.”

“இந்த எழுத்தாளர்களே ஒரு அதிசயப் பிறவிகள். தங்கள் கதையைப் புகழாவிட்டாலும் மனமுடைகிறார்கள், புகழ்ந்தாலும் அது விஷமம் என்கிறார்கள்” என்றாள் அவள்.

“இப்படி எங்களைத்தேவர்கள், அமரர்கள், அதிசயப் பிறவிகள் என்று மற்றவர்கள் எண்ணுவதாற்றான் தமிழ் இலக்கியத்தின் உயிரோட்டம் தடை படுகிறது. தாங்களும் உங்களைப்போல உப்புக்கும் புளிக்கும் கவலைப்படும் மனிதர்கள் தான். உள்ளமும் உனர்ச்சியும் தசையும் என்பும் கொண்ட மனிதர்கள் தான்.” அவன் உணர்ச்சியோடு இப்படிச் சொன்னான்.

“தமிழ்நாடு இதை இப்போது அறிந்து கொண்டுதான் இருக்கிறது. எழுத்தாளனின் நிலையும் மாறிக் கொண்டு தான் வருகிறது. எதற்கும் நம்பிக்கையும் வேண்டும்” என்றாள் அவள் குத்தலாக.

“தங்களைக் கண்ட பிறகு சுத்த நம்பிக்கை எனக்கும் உண்டாகி விட்டது. இனி நான் உங்களுக்காக, ஆமாம், என் சிருட்டிகளை ரசிக்கத் தெரிந்த உங்களுக்காக மட்டும் ஓராயிரம் கதைகள் எழுதுவேன்” என்றான் அவன்.

“கலைஞன் கனவு ரசிகனின் திருப்தி” என்றாள் அவள்.

இப்போதும் அவன் அவளுக்காகவே எழுதினான். அவனுடைய ‘வாழ்க்கைப்போர்’ என்ற நாவலின் கதா நாயகியே அவள் தான்! இந்த உண்மையை அவளிடம் தெரிவித்து விடுவதற்காக அவன் கால்கள் வேகமாக, மிக வேகமாக நடந்தன.

புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்த கமலா, கதவு ‘ தட தட’வென்று தட்டப்படுவதைக் கேட்டதும் எழுந்து சென்று கதவைத் திறந்தாள்.

சீவாமற் குழம்பிக்கிடந்த பரட்டைத்தலை, கண் களிலே தேங்கி நின்ற லட்சிய வெற்றியின் வெறி. அந்த வெற்றியை வெளிப்படுத்த முனையும் படபடப்பு, வெயர்த்துக் கொட்டும் தேகம்…….

இந்தக் கோலத்தில் ராஜகோபாலனைக் கண்டதும் கமலா பயந்தே போனாள். ஊரிலிருந்து தந்தி வந்திருக்கும். அவனிடந்தான் பணம் இருக்காதே. அதற்காகத் தான் வந்திருப்பான் என எண்ணினாள்.

“எங்கே இவ்வளவு அவசரமாக?” என்று கேட்டாள் கமலா.

அவனாற் பேச முடியவில்லை. கடிதத்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

கடிதத்தை வாசித்த கமலா அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவன் சிலைபோல நின்றான்.

தன்னை மறந்து பாய்ந்து அவன் இரு கைகளையும் பிடித்து கொண்டே “அதிர்ஷ்டக்காரர்!” என்றாள். அதற்கும் மேல் அவளாலும் பேச முடியவில்லை.

ராஜகோபாலனின முகம் பேயறைந்தது போல ஆயிற்று

“மகிழ்ச்சி வெறி துள்ளியாடிய முகத்தில் ஏன் இத்தனை சோகம்?” கம்மிய குரலிலே அவள் கேட்டாள்.

“நான் என்ன அதிர்ஷ்டக்காரனா?”

“பின்னே என்ன? கைமேலே பத்தாயிரம் ரூபாயைப் பெற்ற தாங்கள் அதிர்ஷ்டக்காரன் இல்லையா?” கமலா மகிழ்ச்சி பொங்க இப்படிக் கேட்டாள்.

“சரிதான்! நான் வருகிறேன்” என்று எத்தனை வேகமாக வந்தானோ அதற்கும் மிஞ்சிய வேகத்தில் திரும்பிக் கொண்டு நடந்தான்.

கமலா திகைத்துப் போய் நின்றாள்.

அடுத்த நாள் அவன் பாடசாலைக்கும் வரவில்லை. ஆனால் கமலாவிற்கு அவன் எழுதிய ஒரு கடிதம் வந்தது. அதிலே அவன் எழுதியிருந்தான்.

அன்புள்ள கமலா,

உன்னை . முதல் நாள் சந்தித்த அன்றே என் இதயத் தின் நீண்ட.. நாள் தாபம் தீர்ந்தது. என் சிருஷ்டிகளை ரசிக்கவும் ஒருத்தி இருக்கிறாள் என்ற எண்ணத்தில் என் மனவேதனை களையும் மறந்து எத்தனையோ கதைகளை உனக்காக எழுதினேன். ஆம், உனக்காகக் கதைகள் எழுதி என் மனக் கருவிலிருந்த இலக்கியக் குழந்தையை ஒவ்வொரு தடவையும் பிரசவித்தபோது, அந்தப் பிரசவ வேதனையில் என் ஆயுளே அருகிக் கொண்டு வந்தது. கடைசியாய் என் உள்ளத்தை வருத்தி, உடலைத் தேய்த்து ‘வாழ்க்கைப் போரை’ எழுதி அந்தக் கதை வெற்றியுற்றபோது, கேவலம் என்னை நீ ‘அதிர்ஷ்டக் காரன்’ என்றாய். – நீ மட்டும் என்ன? வடமொழியையுந் தாய்மொழியையும் பழுதறக் கற்றுத் தன் உலகானுபவத்தாலும் திறமை யாலும் நமக்கு ஓர் மாகாவியத்தையே சிருஷ்டித்துத் தந்த கம்பனையே காளியருள் பெற்றுப் பாடினான் என்று சொல்லி அவன் மேதையை இன்னமும் இந்தத் தமிழ்நாடு அவமதித்துக்கொண்டு இருக்கிறது. அப்படியான தமிழ கத்திலே என் திறமை புகழப்படும் என்று நான் எண்ணி யதே என் மகத்தான மடமைதான்.

ஆனாலும் உனக்கு நான் ஒரு விதத்தில் நன்றி செலுத்தியாகத்தான் வேண்டும். ஏனென்றால் உன்னால் தான் நான் ‘வாழ்க்கைப் போரை’ எழுதினேன்.

உனக்காக நான் எழுதிய என் சிருஷ்டி, காலத்தை வென்று வாழுமாயிருந்தால், எத்தனை தலைமுறைக்குப் பின்னாலாவது ஓர் பிறப்பில் நீயும் இந்த நாடும் என் திறமையை ஒப்புக் கொண்டால், அப்போதுதான் இலக்கிய கர்த்தா இந்நாட்டில் தற்கொலை செய்துகொள்ளா மல் வாழ முடியும்!

இந்தத் தலைமுறையில் நான் போனால் என்ன? என் ‘வாழ்க்கைப் போர்’ இருக்கவே இருக்கிறது. வணக்கம்.

உன்
ராஜகோபாலன்

– சுதந்தரன் 10வது ஆண்டுமலர் 1957- ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது, ஐம்பது சிறுகதைகள், மித்ர வெளியீடு, முதற் பதிப்பு ஒக்டோபர் 1996

Print Friendly, PDF & Email

பகடை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

சதிவிரதன்

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *