கலாநிதியும் வீதி மனிதனும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 7, 2022
பார்வையிட்டோர்: 2,579 
 
 

நள்யாமப்பொழுதினைத் தாண்டிவிட்டிருந்தது. மாநகர் (டொராண்டோ) செயற்கையொளி வெள்ளத்தில் மூழ்கியொருவித அமைதியில் ஆழ்ந்திருந்தது. சுடர்களற்ற இரவுவான் எந்தவித அசைவுகளுமற்று நகருக்குத் துணையாக விரிந்து கிடந்தது. பிரபல ஹொட்டலில் தனது நிறுவனம் சார்பில் நிகழ்ந்த விருந்து வைபவத்தில் கலந்து கொண்டு யூனியன் புகையிரத நிலையத்தை நோக்கி, ‘·ப்ரொண்ட்’ வீதி வழியாக நடந்து வந்துகொண்டிருந்தான் தெற்காசியர்களில் ஒருவனான சஞ்சய். இவன் ஒரு கலாநிதி. இரசாயனவியலில். பிரபல மருந்து தயாரிக்கும் அமெரிக்க நிறுவனமொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தான். சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியாக அமைந்து இவனைப் போல் பலர் நல்ல உயர் பதவிகளிலிருந்தாலும் பெரும்பாலான குடிவரவாளர்கள் தகுந்த பதவியினை அடைவதற்கு வருடக்கணக்கில் முயன்று கொண்டிருந்தார்கள். பலர் வங்கிகள் போன்றவற்றில் சாதாரண கோப்புகளை ஒழுங்குபடுத்தும் குமாஸ்தாக்கள், தபால் குமாஸ்த்தா, தரவுகளை உள்ளிடும் (Data Entry) பணியாளர்கள், பாதுகாவலர்கள், தொழிற்சாலைகளில் உற்பத்தி உதவியாளர்கள் (Production Assistant), சுயமாகத் தொழில் செய்யும் டாக்ஸி சாரதிகள், சிறு வர்த்தக வியாபாரிகள், உணவகங்களில் உதவியாளர்களெனப் பல்வேறு வகைகளில் தமது இருப்பினைத் தக்க வைத்துக் கொண்டிருந்தார்கள். கனவுகளுடன் முயன்று கொண்டிருந்தார்கள். தூரத்துப் பச்சைக்காய்ச் சொர்க்கங்களை இழந்தவர்கள் பலர். பலருக்கு இழக்க வேண்டிய நாட்டுச் சூழல். இவர்களில் முதலாவது தலைமுறையினைச் சேர்ந்த குடிவரவாளர்களில் பலரின் நிலை இதுவாகத் தானிருப்பது வழக்கம். ஆனால் இந்நிலை இரண்டாம் தலைமுறையில் வெகுவாக மாறி விடும். இரண்டாம் தலைமுறையினச் சேர்ந்த பலர் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்றுப் பணியாற்றத் தொடங்கி விடுவார்கள்.

யூனியன் புகையிரத நிலையத்தின் முன்பாகவும் , ரோயல் யோர்க் ஹொட்டலின் முன்பாகவும் டாக்ஸிகள் சில மீனுக்காக வாடி நிற்கும் கொக்குகளாக அமைதியாக இரைக்காகக் காத்துக் கிடந்தன. ஆப்கானிஸ்த்தானைச் சேர்ந்த ‘ஹாட் டாக்’ (Hot Dog ) விற்பனையாளர்கள் சிலர் யூனியன் புகையிரத நிலையத்தை அண்மித்த நடைபாதைகளில் வாடிக்கையாளர்களை எதிர்பார்த்து விழிவைத்துக் காத்திருந்தார்கள். ஒரு சில பிரபலமான உணவகங்களில் சிலவற்றில் இன்னும் சில வெள்ளையினத்தவர்கள் உணவைச் சுவைபார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘லூஸ் மூஸ் (Loose Moose)’ என்னும் பிரபல உணவகமொன்றின் முன்னால் காத்திருந்த சோமாலியனான டாக்ஸிச் சாரதியொருவன் “You want taxi Sir” என்று நடந்து கொண்டிருந்த கலாநிதியைப் பார்த்துக் கேட்டு வைத்தான். அவனது முயற்சியையெண்ணி மனதுக்குள் சிரித்தவனாக இவன் தேவையில்லை எனப் பொருள்படும்படியாகத் தலையசைத்தவனாக மேலும் நடந்தான். இவர்களைப் போன்ற பலர் தமது பூர்வீகத்தில் பேராசிரியர்களாக, பொறியியலாளர்களாக, டாக்டர்களாக.. எனப் பல்வேறு விதமான தொழில்களைச் செய்தவர்களாக இருப்பார்கள். மூன்றாம் உலகத்தின் மூளை(ல) வளம்.

இதற்கிடையில் கலாநிதி யோர்க் வீதியை அண்மித்திருந்தான். யோர்க் வீயும் ·ப்ரண்ட் வீதியும் சந்திக்குமிடத்தில், வடகிழக்கிலிருந்த நடைபாதையில், ரோயல் யோர்க் ஹொட்டல் சுவருடன் சாய்ந்திருந்தான் டொராண்டோ மாகநகரின் வீடற்ற வாசிகளிலொருவன். இவனொரு வெள்ளையினத்தைச் சேர்ந்தவன். அடிக்கடி சிறு சிறு குற்றச் செயல்கள் புரிந்து விட்டு மாமியார் வீட்டில் சிறிது காலம் ஓய்வெடுத்து விட்டு வீதிக்கு வந்துவிடுவான். சிறிது காலத்தில் வீதி வாழ்க்கை அலுத்துவிடும். குளிர்காலத்துக்காகக் காத்து நிற்பான். வெப்பநிலை பூச்சியத்துக் கீழே செல்லத் தொடங்கும் வரையில் பொறுமையாகக் காத்திருப்பான் மீண்டுமொரு குற்றச் செயல் புரிவதற்காக. தனியாகச் செல்லும் முதியவர்களிடமிருந்து பணப்பைகளைப் பறிப்பது; குடிவகைகள் விற்பனை செய்யும் மதுபானக் கடைகளின் கண்ணாடிகளை உடைத்து உட்புகுந்து மதுபானப் புட்டிகளைத் திருடுவது..போன்ற குற்றச் செயல்களைப் புரிவது இவனது விருப்பமான செயல்கள். நீதிமன்றத்தில் ஒவ்வொருமுறையும் குற்றத்தை ஒப்புக் கொண்டு அதற்காக மன்னிப்புக் கேட்கவும் இவன் தவறுவதில்லை. அவனது கவனத்தை புகையிரத நிலையத்தை நோக்கி வேகமாக நடந்து கொண்டிருந்த தெற்காசியக் கலாநிதி சிறிது ஈர்த்தான். மெல்லத் தன்னைச் சுதாரித்துக் கொண்டு எழுந்தவனாக அவன் கலாநிதியை நோக்கி நடந்தான். அதே சமயம் கலாநிதியின் கவனமும் இவனை நோக்கித் திரும்பியது. அதற்கிடையில் ‘நான் ஒரு பட்டினியாயிருக்கும் வீடற்றவன். தயவு செய்து உதவி செய்யவும்” எனப் பொருள்படும் விதமாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த சிறியதொரு அடையாள அட்டையினைத் தூக்கிப் பிடித்தவனாக அவன் கலாநிதியை நோக்கி வந்தான்.

அறிமுக அட்டையினத் தூக்கிப் பிடித்தவனாக இவனை நோக்கி வந்த அந்த வீடற்றவன் அருகில் வந்ததும் இவனைப் பார்த்து ” நான் பசியாயிருக்கிறேன். உன்னால் முடிந்த உதவியைச் செய்கிறாயா?” என்றான். பெரும்பாலான குடிவரவாளர்கள், குறிப்பாகத் தெற்காசியர்கள், கனடிய டாலரைத் தமது நாட்டு நாணயத்தில் வைத்துச் சிந்திப்பவர்கள். வெகுமதி (Tips), பிச்சைக்காரர்களுக்குத் தானம், இலாப நோக்கற்று நிறுவும் நிறுவனங்களூக்கு உதவி போன்றவற்றுக்கெல்லாம் இலேசில் உதவி செய்ய முன்வரமாட்டார்கள். ஆனால் அத்தகைய நிறுவனங்கள் வழங்கும் உதவிகளை ஏற்பதில் எப்பொழுதுமே பின் நிற்காதவர்கள். [அதற்கு வெள்ளையர்களைக் கேட்டுத்தான். ஒரு பிரச்சனையென்றால் கொடுப்பதற்குப் பின்நிற்காதவர்கள்.] ஆனால் பெருமை பேசுவதற்காகவும், ஆலயங்களுக்காகவும் அள்ளி வழங்கத் தயங்காத கொடைவள்ளல்கள். சக பணியாளர்கள், மேலதிகாரிகள் முன்னிலையில் இத்தகைய சந்தர்ப்பங்கள் ஏற்பட்டு விடும் சந்தர்ப்பங்களில் மட்டும் கருணை பொங்கி வழிய அள்ளிக் கொடுப்பார்கள். அருகிலிருப்போர் மத்தியில் தம் பெருமையினைப் பதவியினைத் தக்க வைக்க முயன்று விடும் செயலுக்கும் இவர்களைக் கேட்டுத்தான்.

இவனது மறுப்பு அந்த வீடற்றவனுக்குச் சிறிது சினத்தினை ஏற்படுத்தியது. அது முகத்தில் தெரிய அவன் மீண்டுமொருமுறை இவனிடம் இரத்தல் செய்தான். இவன் மீண்டும் கை விரித்து விட்டு நடையினைக் கட்டினான். அண்மையில் சில வீடற்ற வீதி மனிதர்கள் சிலர் இழைத்த குற்றச் செயல்களை இவன் வெகுசன ஊடகங்கள் வாயிலாக அறிந்திருந்தான். எந்தப் புற்றில் எந்தப் பாம்போ என்பதே இவனது நடையின் விரைவுக்குக் காரணமாகவிருக்கக் கூடும். இவனை நோக்கி இவனது இனத்தைக் குறித்த துவேசச் சொற்கள் சிலவற்றை உதிர்த்த அந்த வீதி மனிதன் தொடர்ந்தும் வார்த்தைகளை உதிர்த்தான்: “உங்களால் எங்களுக்கு வேலையில்லை. எங்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைகளையெல்லாம் நீங்கள் களவாடி விடுகிறீர்கள்……..”.

கலாநிதிக்குச் சிறிது பயம் பிடித்துக் கொண்டது. நடையினைச் சிறிது மேலும் விரைவாக்கினான். அதனைத் தொடர்ந்து அவனை நோக்கி அந்த வீதி மனிதனின் மேலதிக வார்த்தைகள் சில தொடர்ந்து வந்தன:

“Go to your …..g country. Go Home!”

நன்றி: பதிவுகள், திண்ணை.

(நவரத்தினம் கிரிதரன், வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்)  ஒரு குறிப்பிடத்தக்க கனேடிய. ஈழத்து எழுத்தாளர். இவர் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள். ஆராய்ச்சி நூல்கள் ஆகியவற்றை ஆக்கியுள்ளார். பதிவுகள் இணைய இதழின் ஆசிரியரும் ஆவார். வ.ந.கிரிதரன் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாக கொண்டவர். இவரின் தந்தை பெயர் நவரத்தினம். இளமையில் வவுனியாவில் வாழ்ந்த இவர். வன்னி மண்ணின் பற்று காரணமாக வ என்று தன் பெயருக்கு முன் சேர்த்து கொண்டார். ஆரம்ப கல்வியை வவுனியா மகாவித்தியாலத்தில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *