கற்பனைக் கடிதம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கோகுலம்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 28, 2022
பார்வையிட்டோர்: 9,709 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒன்பதாம் வகுப்பின் தமிழாசிரியர் மாணவர்களுக்கு ஒரு போட்டியை அறிவித்தார்.

“இது கடிதம் எழுதும் போட்டி, இரண்டு பக்கங்களுக்கு மிகாமல், உங்கள் நண்பன் உங்களுக்கு எழுதுவதாக அது இருக்க வேண்டும். அதோடு முக்கியமானது, அக்கடிதம் இருபதாண்டுகளுக்கு முன்னதாக எழுதப்பட்டதாக இருக்க வேண்டும்!” என்று கூறினார் ஆசிரியர்,

நிபந்தனைகளைக் கேட்ட மாணவர்கள் வியந்து நின்றனர். மாணவர்களில் ஒருவன் எழுந்தாள்.

“ஐயா, இருபது ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பிறந்திருக்கவே மாட்டோமே?”

“அடுத்து வரும் இருபத்தென்றாம் நூற்றாண்டில் வாழ்க்கை எப்படி இருக்கும்? அறிவியல் முன்னேற்றத்தால் என்னென்ன மாறுதல்கள் உண்டாகக் கூடும் என்பதை எல்லாம் கற்பனை செய்து எழுதப் பெற்ற நூல்கள் பல வெளிவரத் தொடங்கியுள்ளன. அப்படிக் கற்பனை செய்து எழுதுவது சற்று சிரமமானதே. ஆனால், இருபதாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்றிருக்கக் கூடிய காரியங்களைக்கற்பனை செய்து எழுதுவது எளிது. இருபதாண்டுகளுக்கு முன்னால் நீங்கள் இதே ஒன்பதாம் வகுப்பில் படித்துக் கொண்டிருப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அச்சமயத்தில் கொடைக்கானலில் படித்துக் கொண்டிருக்கும் உங்கள் நண்பன் உங்களுக்குக் கடிதம் எழுதுவதாகக் கற்பனை செய்து கொண்டு எழுதுங்கள். உங்கள் நண்பனின் பெயர் கற்பனையாக இருக்கலாம்; ஆனால் கடிதத்தில் எழுதப்படும் செய்தி அந்த காலகட்டத்தைச் சேர்ந்த உண்மையான நிகழ்ச்சியாக இருக்க வேண்டும்” என்று விளக்கினார் ஆசிரியர்.

“ஐயா, இப்போட்டி சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இருந்தாலும் எங்கள் கற்பனைத் திறனுக்கு விடுக்கப்பட்ட சவாலாக இதை ஏற்று, எங்கள் திறமையைக் காட்டுவோம்” என்றாள் வகுப்பு மாணவத் தலைவன் கண்ணன்.

“நாளை மாலை நான்கு மணிக்கு இப்போட்டி, இதே வகுப்பறையில் நடைபெறும். போட்டியின் முடிவு மறு நாள் அறிவிக்கப்படும். முப்பது கடிதங்களும் பரிசீலிக்கப்பட்டு இரு கடிதங்கள் மட்டும் பரிசுக்குரியனவாகத் தேர்வு செய்யப்படும். அவற்றிற்கான பரிசுகள், பள்ளி ஆண்டு விழாவின் போது வழங்கப்படும்,” என்று கூறி ஆசிரியர் விடை பெற்றார்.

இப்போது மாணவர்கள் அனை வரும் பள்ளி அலுவலகத்தை நோக்கிச் சென்றனர். அலுவலகத்தின் முன் உள்ள சில தகவல் பலகைகளைக் கவனமாய் வாசித்தனர்; சில குறிப்புகளையும் தயார் செய்து கொண்டனர். இருபதாண்டுகளுக்கு முன்னர் பணி செய்த தலைமை ஆசிரியர், பிற ஆசிரியர்களின் எண்ணிக்கை, பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி சதவீதம் போன்றவை பற்றிக் குறிப்பெடுத்துக் கொண்டனர்.

ஆசிரியர் கூறியபடியே மறுநாள் மாலை கற்பனைக் கடிதப் போட்டி நடைபெற்றது. முப்பது மாணவர்களும் அந்த முப்பது நிமிடங்களில், உண்மைச் செய்திகள் அடங்கிய அழகான கற்பனைக் கடிதங்களை எழுதி முடித்தனர்.

ஆசிரியர் எல்லாக் கடிதங்களையும் பரிசீலனை செய்தார். மாணவர்களின் கற்பனாசக்தியை மனதுக்குள் பாராட்டினார். ஒருவருக்கொருவர் சளைத்தவர் அல்ல என்பதைப் புரிந்து கொண்டார்.

சில மாணவர்கள் கொடைக்கானலின் அழகை அற்புதமாக வர்ணித்திருந்தனர். சிலர் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிப் பூவைக் குறித்து எழுதியிருந்தனர். இருபதாண்டுகளுக்கு முன்னால் குறிஞ்சிப்பூ மலர்ந்த ஆண்டினைக் கணக்கிட்டு, அது பூத்துள்ளதையும் அதன் அழகைக் காணவருமாறு அழைத்தும் கூடச் சிலர் கடிதம் எழுதி இருந்தனர்.

இன்னும் சிலர் இருபதாண்டுகளுக்கு முன்னர் பெற்ற தேர்ச்சி வீதத்தை எழுதி அப்போதையதலைமை ஆசிரியரைப் புகழ்ந்து எழுதி இருந்தனர். இப்படி எல்லாக் கடிதங்களும் சுவையாகவும் உண்மையாகவும் இருந்தன.

கடிதத்தின் தொடக்கம், வணக்கம் தெரிவித்திருந்த முறை, செய்தி, முடிவு முகவரி அனைத்தும் அழகுற எழுதப் பெற்றிருந்தன. பரிசுக்குரிய இருகடிதங்களைத் தேர்ந்தெடுக்க ஆசிரியர் மிகவும் சிரமப்பட்டார்.

குற்றங்குறை உள்ள கடிதங்களைத் தள்ளிவிடலாம் என்று மீண்டும் மீண்டும் எழுத்துப் பிழைகளைத் தேடித் தேடிப் பார்த்தார். எந்தக் கடிதத்திலும் எழுத்துப் பிழை இல்லை.

முப்பது கடிதங்களின் தொடக்கப் பகுதிகளை மட்டும் ஒருசேர வாசித்தார். பின்னர் எல்லாக் கடிதங்களின் செய்திப் பகுதிகளை மட்டும் தொடர்ந்து வாசித்துப் பார்த்தார். அவரால் தேர்வு செய்ய முடியவில்லை. எல்லாமே சிறப்பாக எழுதப்பெற்றிருந்தன.

பின்னர் எல்லாக் கடிதங்களின் முகவரிப் பகுதிகளையும் ஒருசேர வாசித்தார். இப்போது அறிவில் பொறி தட்டியது. அதன்படி பரிசீலித்தார். ஒரே ஒரு கடிதத்தை மட்டும் தேர்வு செய்து கொண்டு அதற்கு மட்டும் பரிசு வழங்கத் தீர்மானம் செய்து கொண்டார்.

மறுநாள், போட்டியின் முடிவை அறிந்து கொள்ள மாணவர்கள் மிகுந்த ஆர்வமாய் இருந்தனர்.

“மாணவர்களே பரிசுக்குரியதைத் தேர்வு செய்வதற்கு நான் மிகவும் சிரமப்பட்டேன். ஏனென்றால் அத்தனை கடிதங்களும் மிகவும் அழகாக அமைந்திருந்தன. கற்பனைத்திறன், சொல்லாட்சி ஆகியவற்றில் ஒன்றை ஒன்று விஞ்சி இருந்தன. அது மட்டுமல்ல, எல்லாக் கடிதங்களும் இருபதாண்டுகளுக்கு முன்னர் தமது பள்ளிச் சிறப்புக்களில் எதையேனும் ஒன்றைக் கோடி காட்டி இருந்தன. அவற்றை மதிப்பீடு செய்யும் போது எந்தக் கடிதத்திலும் கருத்துப் பிழை இல்லை என்பதை அறிந்தேன். உண்மைச் செய்திகளைத் தான் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றிருந்தன. அதனால், பரிசுக் குரியதைத் தேர்வு செய்வது மிகவம் சிரமமாயிற்று” என்றார் அவர்.

பரிசு பெற்றவர்களை அறிந்து கொள்ள மாணவர்கள் மிகவும் ஆர்வமாய் இருந்தனர். அவர்கள் ஆவலும் எதிர்பார்ப்பும் கூடிக் கொண்டே இருந்தது.

“கடிதங்களின் முகவரிப் பத்திகளை வாசிக்கும் போதுதான் ஒரே ஒரு கடிதத்தில் மட்டும் ஒரு முக்கிய மாற்றத்தைக் கவனித்தேன். அந்த ஒரே ஒரு கடிதத்தில் மட்டும்தான் முகவரியில் பின்கோடு எண்ணைக் குறிக்கவில்லை; மற்ற அனைவரும் அதைக் குறிப்பிட்டு இருந்தனர். அதனால் முதற் பரிசுக்குரியதாக அதையே முடிவு செய்தேன். முதற் பரிசு பெற்ற மாணவள், தான் பின்கோடு எண்ணைக் குறிப்பிடாததன் காரணம் என்ன என்பதைக் கூறுவான்,” என்று கூறி நிறுத்தினார் ஆசிரியர்.

ஆசிரியர் யாரை அழைக்கப் போகிறார் என்பதை அறிய மாணவர்கள் ஆர்வம் காட்டினர்.

ஆசிரியர் தொடர்ந்து பேசினார். “பனியரசு, நீ பின்கோடு எண்ணைக் குறிப்பிடாதது ஏன் என்பதை இப்போது கூறு.”

பனியரசு எழுந்து நின்றான். “ஐயா, இருபது ஆண்டுகளுக்கு முன் நம் இந்திய நாட்டில் பின்கோடு எண் அறிமுகம் செய்யப்படவில்லை. அது 1972 ஆம் ஆண்டு ஆகஸ்டு 15 ஆம் நாள்தான் அறிமுகமானது. எனவே, இருபது ஆண்டுகளுக்கு முன் எழுதப்பெற்ற கடிதத்தில் பின்கோடு இருக்காதல்லவா? எனவேதான் நானும் எனது கடிதத்தில் பின்கோடு எண்ணை எழுதவில்லை,” என்றான்.

“நீ உன் கற்பனைக் கடிதத்தின் முகவரியில், பின்கோடு எண்ணை எழுதாததால் தான் முதற் பரிசு பெறுகிறாய்,” என்று ஆசிரியர் சொன்னார்.

பிற மாணவர்கள் அனைவரும் தங்கள் கற்பனைக் கடிதத்தில் ஏற்பட்ட தவறை அறிந்து கொண்டனர்; பனியரசைப் பாராட்டினர்.

– 01-12-1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *