கதிர்சாமி குளம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,074 
 
 

வீட்டுத் திண்ணையில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்த பெரியசாமி முன்பு வணக்கம் தெரிவித்தபடி வந்த குமரன் மெதுவாக அவரருகில் அமர்ந்தான்.

“”அய்யா… போன வாரம் நான் உங்களோடு பேசிய விஷயமா ஏதும் முடிவு எடுத்தீங்களா?” என்று கேட்டான்.

“”என்னோட முடிவு உனக்கு ஏற்கெனவே தெரிஞ்சதுதானப்பா. அதுல புதுசாப் பேசுறதுக்கு என்ன இருக்கு?” என்றார் பெரியசாமி.

“”அய்யா… இந்தப் பிரச்னைய நீங்க விட்டுட்டீங்கன்னா அவுங்க ஒரு பெரிய தொகை தர தயாரா இருக்காங்க. உங்க மகன், எனது நண்பன் இளங்கதிர் இப்போ வாடகைக்கு ஆட்டோ ஓட்டுகிறான். அவனுக்கும், பட்டப் படிப்பு படிச்சிட்டு அட்டைக் கம்பெனியில அத்தக் கூலிக்கு வேலை பார்க்கும் உங்க மருமகளுக்கும் அவுங்க ஏற்கனவே நடத்துற பெரிய கம்பெனிகளுல நிரந்தரமா வேலை கிடைக்க ஏற்பாடு செய்ய முடியும்” சற்று நிறுத்தினான் குமரன்.

கதிர்சாமி குளம்பெரியசாமியிடம் எவ்வித அசைவும் இல்லை. சிறப்பான வாழ்க்கை அமைத்துக் கொள்ள தானாக வருகின்ற அதிர்ஷ்டங்களை ஏற்கிறாரா, மறுக்கிறாரா எனத் தெரியவில்லை. தொடர்ந்து செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார். சுத்தியலால் விடாமல் அடித்தால் ஒருவேளை பாறை பிளக்க வாய்ப்புண்டு என எண்ணி குமரன் தனது முயற்சியைத் தொடர்ந்தான்.

“”அய்யா, நீங்க மனசுல என்ன நினைக்கிறீங்கன்னு எனக்குத் தெரியாது. நீங்க ஆழ்கடல். ஒருவேளை… இன்னும் வேற ஏதாவது கூடுதலா நீங்க கேட்டாலும் ஏற்பாடு செய்ய முடியும் ” மீண்டும் தூண்டிலை வீசினான் குமரன்.

“”வேற ஏதாவதுன்னா?!” பெரியசாமி தலை நிமிர்ந்தார்.

“”அப்பாடா… மீன் சிக்குகிற மாதிரி தெரிகிறது” என தனது பேரம் பேசும் உத்தி பலனளிக்கப் போவதாக எண்ணி, குமரன் மனதிற்குள் மகிழ்ந்தான். இந்த மீனை மட்டும் வலையில் விழ வைத்துவிட்டால் அவனது முதலாளியிடமிருந்து மிகப் பெரிய தொகையும், கம்பெனியில் பதவி உயர்வும் அவனுக்குப் பரிசாகக் காத்திருக்கின்றன. அந்த நேரம், ஆட்டோ ஓட்டி வந்த இளங்கதிரும் அதை ஓர் ஓரமாக நிறுத்திவிட்டுக் குமரனைப் பார்த்துச் சிரித்தபடி திண்ணையில் வந்து அமர்ந்தான்.

“”அய்யா… இந்த விஷயம் நல்லபடியா முடிய உங்க ஒத்துழைப்பு கிடைச்சதுன்னா, நீங்க என்ன விரும்புனாலும் அவுங்க செஞ்சு தருவாங்க” என்றான் குமரன்.

அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. ஆனால் , யார் வரவையோ எதிர்பார்த்துக் காத்திருந்தார். பேச்சு வார்த்தையைச் சற்றுக் கூர்மைப்படுத்தலாமென்று குமரன் நினைத்தான். எதிராளியைக் கோபப்படுத்தி வீழ்த்தும் யுக்தியுடன் கொஞ்சம் சூடான வார்த்தைகளை வீசினான்.

“”அய்யா… இத்தனைக்கும் நிலம் உங்களுடையது அல்ல. அது ரெங்கசாமிக்குச் சொந்தமானது. அவருக்கிட்ட விலைக்கு வாங்குறத எங்க முதலாளி பார்த்துக்குவார். நீங்க தடையா இருக்குறதுனாலதான் ரெங்கசாமி நிலத்த விக்க மறுக்கிறார். அந்த நிலத்துல அப்படி ஒண்ணும் பெரிய வெளைச்சல் இல்லா. முதலாளிக்குத் தேவையா இருக்குறதுனால என்ன விலைன்னாலும் கொடுப்பாங்க. வறுமையில வாடுற ரெங்கசாமி நிலத்துக்கு நல்ல விலை கிடைப்பது உங்களாலதான் தடையா நிக்குது. ஒருத்தருக்குக் கிடைக்கும் உதவிய நீங்க ஏன் கெடுக்கணும்?” என்றான் குமரன்.

குமரனின் குரல் சற்று உயர்ந்தது கண்டு பெரியசாமி அவனை நேருக்கு நேர் பார்த்து புருவங்களைச் சுருக்கிக் கூர்மையாகப் பார்த்தார். “பெரிசுக்குக் கோபம் வந்திடுச்சோ?’ குமரனுக்கு உள்ளுக்குள் சற்று உதறல் எடுத்தது. பெரியசாமி அவனுக்குப் பதில் ஏதும் சொல்லவில்லை. சற்று நேரத்தில் அவர் எதிர்பார்த்ததுபோல பெரியவர்களும், இளைஞர்களுமாக சுமார் ஐம்பது பேர் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களில் ரெங்கசாமியும் இருந்தார். பெரியசாமியிடம் பிறகு தனியாகப் பேசிக் கொள்ளலாமென குமரன் எழுந்தான்.

“”உட்காருப்பா குமாரா… நீ தானப்பா இந்தக் கூட்டத்துல முக்கியமா இருக்க வேண்டிய ஆளு. உன்ன மாதிரி இளந்தாரிப் பிள்ளைங்க படிச்சு என்ன பிரயோசனம்? காசு பணம் கிடைக்குன்னா என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராகிடுறீங்க. காசைக் கொடுத்தா எதை வேண்டுமானாலும் வாங்க முடியும்னு நினைக்கிறீங்க. காசுக்காக எதையும் விக்கத் தயாராகிடுறீங்க. நீ இதுவரை என்னிடம் பேசுன விஷயத்துக்கு இந்தக் கூட்டத்துல பதில் கிடைக்கும்” என்றார் பெரியசாமி. எழுந்து செல்லத் தயாரான குமரன் சற்று திகைத்தபடி சென்று கூட்டத்தில் அமர்ந்து கொண்டான்.

கூரைக் கொட்டத்தில், பாய்களில் எல்லாரும் வசதியாக அமர்ந்து கொண்டனர்.

“”எல்லாருக்கும் வணக்கம். வந்திருக்கிற பெரியவங்களுக்கு பிரச்னை என்ன, அதன் ஆழம் என்னன்னு தெரியும். ரெங்கசாமியும் நல்ல புரிஞ்சுக்கிட்டதாலதான் நம்மளோட நிக்கிறாரு. ஆனால்… நம்ம ஊர் இளைஞர்களுக்குப் பிரச்னையை விளக்க வேண்டியிருக்கு. ஏன்னா… இப்போ… நெருக்கடி கொஞ்சம் அதிகமாக இருக்கு. கம்பெனி முதலாளி அவரோட மேனேஜர் குமரனைப் பேச்சு வார்த்தைக்கு அனுப்பியிருக்காரு. அவருக்கும் சில விஷயங்களைத் தெளிவுபடுத்த வேண்டியிருக்கு” சற்று நிறுத்தினான் இளங்கதிர்.

“”நம்ம ஊர் நடுப்பட்டியிலதான் செங்குளம் இருக்கு. குளமுன்னு சாதாரணமா சொல்லிட முடியாது. பெரிய கடல் மாதிரியான ஏரி அது. குளத்தின் மேற்கால பக்கம் இருக்கிற பெருமாள்ராயன் குன்றிலிருந்து, மழைக்காலங்களில் பெருகிவரும் ஓடைகளெல்லாம் செங்குளத்தில் சேர்ந்து ஆண்டு முழுக்க நீர் நிறைஞ்சிருக்கும். மழைக்காலத்தில் நீர் நிறைஞ்சு மறுகால் ஓடி, பக்கத்து கிராமங்களான சூலப்பட்டி, மேட்டுப்பட்டி குளங்களையும் நிரப்பிடும். சுத்துப்பக்கம் இருக்கிற ஐந்து கிராமங்களிலும் எல்லாக் கேணிகளிலும் ஆண்டு முழுக்க தண்ணீர் நிறைஞ்சிருக்கும். கிராமங்களுல குடிநீருக்கு போட்டிருக்கிற போர்கள்லேயும் இதுவரை தண்ணீர் வத்துனதில்ல. ஆக நம்ம ஐந்து கிராமங்களுக்கு விவசாய ஆதாரமும், குடிநீர் ஆதாரமும் இந்த செங்குளம்தான்” என சற்று நிறுத்தினான் இளங்கதிர்.

“”இளங்கதிர்… எங்க முதலாளி செங்குளத்தை எதுவும் எழுதிக் கேட்கல்ல. அதுக்கு எந்தப் பாதிப்பும் இல்ல. அவரு ரெங்கசாமியோட நிலத்தத்தான விலைக்குக் கேக்குறாரு?” எனக் குமரன் கேட்டான்.

“”மீதி விபரம் நான் சொல்கிறேன்” என எழுந்தார் பெரியசாமி. இளங்கதிர் தரையில் அமர்ந்து கொண்டான்.

“”செங்குளத்தோட மேற்காலப் பகுதி பெருமாள்ராயன் குன்று. அது அரசு நிலம். வடக்காலப் பகுதி நிலத்தையும், தெற்காலப் பகுதி நிலத்தையும் ஏற்கெனவே குமரனோட முதலாளி விலைக்கு வாங்கிட்டாரு. இப்போ இருக்கிறது கிழக்குப் பகுதி நிலம் மட்டும்தான். அது நம்ம ரெங்சாமிக்குச் சொந்தமானது. அதையும் அந்த முதலாளி விலைக்கு வாங்கிட்டாருன்னா செங்குளத்துக்கு அஞ்சு ஊர் சனங்க யாரும் போக முடியாது. நம்ம மாடுகளையும் கூட தண்ணிக்கு விட முடியாது” என்றார் பெரியசாமி.

“”குமரனோட முதலாளி, செங்குளத்த சுத்தியுள்ள நிலங்களை விவசாயம் பண்ணுறதுக்காக வாங்கல. அவர் இந்தியாவுல இருக்கிற பெரிய கோடீஸ்வரர்கள்ல ஒருத்தர். அவர் செங்குளத்துக்குப் பக்கத்துல பெரிய மினரல் வாட்டர் தொழிற்சாலை கட்டப் போறாரு. இப்ப ரெங்கசாமி நிலத்தை விலைக்கு வாங்கிட்டாருன்னா கட்டுமான வேலை தொடங்கிடும்” என்றார் பெரியசாமி.

“”ஆண்டு முழுக்க வத்தாத ஜீவ ஊத்து மாதிரி செங்குளத்து தண்ணியெல்லாம் மினரல் வாட்டராகப் பாட்டில்களில் அடைக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டால் அந்த முதலாளிக்கு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டித் தரும். செங்குளத்துல நேரடியா தண்ணி எடுக்க மாட்டாங்க. ஆனா, அதச் சுத்தி அவுங்க விலைக்கு வாங்கியுள்ள நிலங்களில் தொழிற்சாலை கட்டி போர் போட்டு தண்ணீரை உறிஞ்சி எடுத்து வித்து காசாக்குவாங்க” – தொடர்ந்தார் பெரியசாமி.

“”இந்த செங்குளம் நம் அஞ்சு ஊர் சனங்களுக்கும் தாய். மினரல் வாட்டர் தொழிற்சாலை கட்ட எப்படி அனுமதிக்க முடியும்? மினரல் வாட்டர் கம்பெனி வந்துச்சுன்னா நம்ம அஞ்சு ஊர்கள்ளேயும் விவசாயம் பாதிக்கும். சனங்களுக்குக் குடிநீர் பற்றாக்குறை ஏற்படும். கால்நடைகளுக்குத் தண்ணி கிடைக்காது. எனவே, தொடங்கக் கூடாதுன்னு ஆட்சேபம் தெரிவிச்சு இன்னிக்கு எல்லாரும் கலெக்டர் மூலமா அரசாங்கத்துக்கு மனுக் கொடுப்போம் ” எனப் பெரியசாமி தனது நீண்ட பேச்சை நிறுத்தினார்.

குமரனுக்கு பிரச்னையின் ஆழம் புரிந்தது. கிராமங்களின் நீர் வளத்தைக் காப்பாற்ற மக்கள் ஒரு நெடிய போராட்டத்துக்கு தயாராவதைத் தெரிந்து கொண்டான். ஏற்கெனவே தயார் செய்திருந்த மனுவில் இளங்கதிர் எல்லாரிடமும் கையெழுத்து வாங்கினான். பிறகு கலெக்டரிடம் நேரடியாக மனுக் கொடுத்தனர். சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் அனைத்துக்கும் அனுப்பி வைத்தனர்.

சில வாரங்கள் பிரச்னை ஏதுமில்லை. ஆனால் ரெங்கசாமியைக் காணவில்லை. கம்பெனி முதலாளி அடியாட்களை அனுப்பி ரெங்கசாமியை கொலை செய்துவிடுவதாக மிரட்டி நிலத்தை எழுதி வாங்கிவிட்டார் எனவும், ரெங்கசாமி உயிருக்குப் பயந்து குடும்பத்துடன் கோயம்புத்தூருக்குச் சென்றுவிட்டதாகவும் அவருடைய உறவுக்கார கிழவி ஒருத்தி தகவல் தெரிவித்தாள். பெரியசாமி பத்திர அலுவலகம் சென்று விசாரித்தபோது, இந்தத் தகவல் உண்மையெனத் தெரிய வந்தது. விஷயம் தெரிந்து ஐந்து கிராமங்களின் மக்களும் பதறிப் போனார்கள்.

சில நாட்களில் செங்குளத்தைச் சுற்றி லாரிகளில் கருங்கற்களும், கட்டுமானப் பொருட்களும் வந்தன. ஊர்ச் சனங்கள் பெரியசாமி, இளங்கதிர் தலைமையில் திரளாகக் கூடி லாரிகள் முன்பு அமர்ந்து மறியல் செய்தனர். கம்பெனி முதலாளியால் எவ்வித கட்டுமானப் பணியும் மேற்கொள்ள முடியவில்லை. அடியாட்கள் மூலம் கிராமங்களில் தீ வைப்பு, வழிப்பறி, கொள்ளை போன்ற செயல்களைச் செய்து பார்த்தார். பல வகைகளில் கிராமத்து சனங்களுக்கு மிரட்டல் விடுவதும், தொடர் துன்பங்களைக் கொடுப்பதுமாக இருந்தார். ரெங்கசாமியின் வறுமையைப் பயன்படுத்தி நிலத்தை எழுதி வாங்கினாலும் அவரால் மினரல் வாட்டர் தொழிற்சாலையைத் தொடங்க முடியவில்லை. ஐந்து கிராமத்து சனங்களின் தொடர்ந்த அறவழிப் போராட்டங்களால் மினரல் வாட்டர் தொழிற்சாலை கட்டுவதற்காக ஒரு குழியைத் தோண்டக் கூட முடியவில்லை.

ஒருநாள் அதிகாலையில் செங்குளத்துக்குக் குளிக்கச் சென்ற கிராமத்துப் பெண்கள் சிலர் அலறியடித்துக் கொண்டு தெருக்களில் ஓடி வந்தனர். செங்குளம் முழுக்க இரத்தம் பரவியிருப்பதாகவும், குளத்தின் நடுவில் பிணம் ஒன்று மிதப்பதாகவும் கதறியபடி சொன்னார்கள். சனங்கள் குளத்தைச் சுற்றித் திரண்டனர். இளைஞர்கள் சிலர் குளத்தில் குதித்து நடுவில் மிதந்த உடலைக் கரைக்கு இழுத்து வந்தனர். கழுத்து அறுபட்ட நிலையில் இளங்கதிர் செத்துக் கிடந்தான். கொலை செய்யப்பட்ட தன் மகன் இளங்கதிரின் உயிரற்ற உடலைப் பார்த்த பெரியசாமி நெஞ்சைப் பிடித்துக் கொண்டே கீழே சாய்ந்தவர் பின்னர் எழவே இல்லை. இளங்கதிரின் மனைவி மலர்விழி தலையிலும், நெஞ்சிலும் அடித்துக் கொண்டு விழுந்து புரண்டு கதறினாள். இளங்கதிரின் ஐந்து வயது சிறுவனான மகன் என்ன நடந்தது என்று புரியாமல் தனது அம்மாவின் சேலையைப் பிடித்து அழுது கொண்டிருந்தான். ஊர் சனங்கள் கோபமும், துக்கமும் ஒரு சேர, தலைக்கு ஏற கத்தினார்கள்.

காவல்துறையினர் வந்தனர். வழக்கமான சடங்குகள் நடந்தன. கொலைகாரன் யாரென்று சனங்களால் யூகிக்க முடிந்தாலும், கொலைகாரனைப் பிடிப்பதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. கொலை வழக்குக் கிடப்பில் இருந்தது.

ஓராண்டு கழிந்தது. இளங்கதிரும், பெரியசாமியும் கிராமத்து நீர்வளத்தைக் காப்பதற்காக உயிர்விட்ட சம்பவம் ஒவ்வொருவர் நெஞ்சிலும் நிறைந்து நீறுபூத்த நெருப்பாகவே இருந்தது.

ஆண்டுகள் பல கடந்தன. கிராமத்து நீர் வளம் கொள்ளை போகாமலிருக்கப் போராடி படுகொலை செய்யப்பட்ட இளங்கதிரின் இரத்தம் கலந்துபோன செங்குளம், இன்னும் இருக்கிறது. ஆனால் இப்போது அது இளங்கதிர், பெரியசாமி இருவருடைய பெயர்களையும் இணைத்து “கதிர்சாமி குளம்’ என அழைக்கப்படுகிறது. இளங்கதிரும், பெரியசாமியும் ஐந்து கிராமங்களிலும் சனங்களின் குலதெய்வங்களாக மதிக்கப்படுகின்றனர். அச்ச உணர்வினால் முதலாளி மினரல் வாட்டர் தொழிற்சாலையைக் கட்டவில்லை. விலைக்கு வாங்கிய நிலங்களை முதலாளி தன்னிடம் விற்றவர்களிடமே திரும்பவும் விற்றுவிட்டார். கால்நடைகள் எல்லாம் கதிர்சாமி குளத்தில் தண்ணீர் குடித்துச் சென்றன.

ஒவ்வொரு நாளும் பெண்ணொருத்தி அதிகாலையில் கதிர்சாமி குளத்தின் கரையில் வந்து அமர்ந்து கொள்கிறாள். கிராமத்துச் சனங்களைத் தவிர அந்நியர் யாரும் குளத்துப் பக்கம் வந்தால் அவள் வெறிபிடித்தவள் போல மாறிவிடுகிறாள். மரக்கிளையை ஒடித்து கையில் பிடித்து ஓங்கியபடி, தலைவிரி கோலமாக அந்நியர்களை நோக்கிக் கத்திக் கொண்டு ஓடுகிறாள்.

“”அடேய்… என் புருஷன் இரத்தம் கலந்த தண்ணிடா… அவரோட இரத்தம் கலந்த பூமிடா… கொள்ளையடிக்கவா வந்தீங்க… விடமாட்டேன்டா” என்று அந்நியர்களை விரட்டியடிக்கிறாள்.
***********************

சென்னையிலிருந்து மதுரை வரையிலான நெடிய வேன் பயணத்தில் ஜீவா சொல்லிக் கொண்டு வந்த கதிர்சாமி குளத்தின் கதையை அவனுடைய நண்பர்கள் மிகவும் ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு வந்தனர். ஜீவா சென்னைக் கல்லூரியொன்றில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிகின்றான். அவனுடைய நண்பர்களைத் தனது கிராமத்தில் நடக்கும் சாமி கும்பிடு திருவிழாவுக்காக இம்முறை ஜீவா அழைத்து வந்தான். மதுரை வரை பிரதான சாலையில் வந்த வேன் பின்னர் கிராமத்தை நோக்கிய மண் பாதையில் பிரிந்து பயணிக்கத் தொடங்கிய போது ஜீவாவின் நண்பன் ஒருவன் கேட்டான்:

“”ஜீவா இப்பவும் குளத்துக்கரையில் அந்தப் பெண் கையில் குச்சியோடு வெளியாட்களை விரட்டிக்கிட்டு இருக்காங்களா?”

“” ஆமா… கதிர்சாமி குளத்துக்கு அவுங்கதான் காவலாளி. சாகிற வரையில் அங்கதான் இருப்பாங்க. ஒவ்வொரு ஆண்டும் இளங்கதிர் கொலை செய்யப்பட்ட நாளன்று ஐந்து கிராமங்களின் சனங்களும் கதிர்சாமி குளக்கரையில் கூடி பொங்கல் வைத்து சாமி கும்பிடுவாங்க. அந்தச் சாமி கும்பிடு விழாவில கலந்துக்கத்தான் நான் உங்கள இந்தமுறை அழைச்சிட்டு வந்தேன்” என்றான் ஜீவா.

வேன் கதிர்சாமி குளத்தின் அருகே வந்து நின்றது. குளக்கரையில் திரண்டிருந்த மக்கள் நடுவில் அமர்ந்திருந்த மலர்விழி எழுந்து ஓடி வந்து மகன் ஜீவாவைக் கட்டிப் பிடித்துக் கொண்டாள்.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *