இந்த ஊஞ்சல் விளையாட்டு நந்தினிக்கு அப்படியொன்றும் புதிய அனுபவமல்ல. ஏற்கெனவே வீட்டு முற்றத்திலுள்ள பென்னம் பெரிய மாமரத்து உச்சாணிக் கிளையில், அண்ணா கட்டித் தந்த கயிற்று ஊஞ்சல், இன்னும் தான் இருக்கிறது. அதில் தினசரி தவறாமல்,அவள் ஆடி மகிழ்ந்ததெல்லாம்,இப்போது வெறும் சொப்பனம் போல்,தெரிகிறது.அவள் சிறு பிராயம் கடந்து, வயதுக்கு வரும் காலம் நெருங்கி வந்து கொண்டிருப்பதால், ஊஞ்சல் விளையாட்டுப்போன்ற ஏனைய விளையாட்டுகளுக்கும், வீட்டில் யாரும் அவளை அனுமதிப்பதில்லை.
இந்தக் கல்லூரிக்கு வந்து சேர்ந்த பிறகு, அதனோடு பொருந்தாத, இது ஒரு வித்தியாசமான இனிய அனுபவம் அவளுக்கு. அவள் ஊஞ்சல் ஏறி ஆடி மகிழ, இங்கு இப்படியொரு நிலையில் தானாக வந்து சேரவில்லை.
அவளை ஏற்றி வைத்து ஆட்டச் சொல்லி, வகுப்பு டீச்சரான கமலாவக்காவின் அபிரிதமான அன்புக் கட்டளைக்கிணங்கியே, அவள் வேறு வழியின்றி, இங்கு வர நேர்ந்தது, அது சாதாரண வெறும் கயிற்று ஊஞ்சலல்ல. பலமான இரும்புக் கம்பியில் பிணைக்கப்பட்ட, மிகவும் நீளமான இரு சங்கிலி ஊஞ்சல்கள். அதற்கே ஏகப்பட்ட குட்டித் தேவதைகள் போட்டி போட்ட வண்ணமிருந்தனர். அவர்கள் படிக்கிற வயதாக இருந்தாலும், கட்டறுந்து போன கனவுப் போக்கில் அக்கல்லூரி வளாகமெங்கும், களிப்பு மயமான, கற்பனை உலகிலேயே தம் வசமிழந்து உலாவித் திரியும், குட்டித் தேவதைகள் மாதிரி அவர்கள்.எத்துணை வண்ண மயமான, ஒளியுலகப் பார்வை அவர்களுக்கு. அப்படிப்பfட்ட அவர்கள், முன் நந்தினி வெறும் நிழல் போல.
அக்கல்லூரி மாணவிகள், சீருடை அணியும் வழக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, அவர்கள் விரும்பியவாறே, உடையலங்காரமும், அதுவும் கணுக்கால் தொடும்படியாக, முழுப் பாவாடை சட்டையோ அன்றிச் சேலையோதான் ,அணிந்து கொண்டு வர வேண்டுமென்பதே, அக்கல்லூரி நியதியாக இருந்தது. தமிழ் கலாச்சாரம் பேணவே, இப்படியொரு நிலைமை.
இந்தக் குட்டித் தேவதைகள், அவ்வண்ணமே, உடுத்தில் கொண்டு வந்தாலும், அதில் மெருகூட்டப்பட்ட ஆடை அலங்காரப் பவனியே கூடுதலாகக் காட்சிக்கு நின்றது.
அவர்கள் கல்வி மீது நாட்டமற்ற, மேல் போக்கு நடத்தை கொண்டவர்களாகவே, இருந்த போதிலும், நந்தினியைப் பொறுத்தவரை தானுண்டு தன் படிப்புண்டு என்று மட்டுமே இருப்பவள். ஒரு நடுத்தரக் குடும்பத்திலிருந்து வருவதால், கல்லூரிக்குப் போடும்படியாய், மிகவும் எளிமையான ஓரிரண்டு பருத்தியிலாலான உடைகள் மட்டுமே, அவளிடம் இருந்தன. அதைப் போட்டு வரவும் அவள் தயக்கம் காட்டுவதில்லை. எனினும் பளபளத்து ஒளி விட்டுச் சிரிக்கும், அவளைச் சுற்றியுள்ள அக்குட்டித் தேவதைகள் நடுவே அவள் ஒரு எடுபடமுடியாமல் போன, அப்படி அவர்களால் கருதப்படுகிற ஒரு கரும் புள்ளி மட்டுமல்ல, செல்லாக் காசும் கூட. அவளை அவ்வாறு பார்த்தாலே, அவர்களின் முகத்தில், கேலியான சிரிப்பு அலை தான் பொங்கி வழியும்.. வெறும் சிரிப்பு மட்டுமல்ல, அவள் காதில் விழும்படியாகவே, குத்தல் பேச்சும் வரும். அதைக் கேட்டு ஜீரணித்த நிலையிலேயே அவள் பரம சாதுவாய் நின்று கொண்டிருப்பாள். கமலாவக்காவுக்கும் இது சாடைமாடையாய் தெரியும். மேலும் நந்தினி ஒரு வற்றாத தமிழ் ஊற்றுப் போல் இருந்து வருவதால், கமலாவக்காவுக்கு அவளை மிகவும் பிடிக்கும்.
அவள் அப்படிக் கால் உளைய, நெடுநேரமாய் காத்துக் கொண்டிருந்தாலும்,
ஊஞ்சல் ஆடி மகிழ்கிற மாணவியர் எவருமே அவளுக்காக மனமிரங்கி விட்டுக் கொடுக்க முன் வரவில்லை. அவர்கள் அவ்வாறு கருணை கூர்ந்து
விட்டுக் கொடுக்க முன்வந்தாலும், தனியாக ஊஞ்சலில் ஏறி, அவளால் ஆட முடியாதென்பதைக் கருத்தில் கொண்டே கமலாவக்கா அதற்கும் ஒரு வழி செய்து கொடுத்திருந்தார். அவள் படிக்கிற ஏழாம் வகுப்புக்கு மொனிட்டராக இருக்கிற ராஜேசுவரியிடமே, அவளை ஊஞ்சலில் வைத்து, ஏறி நின்று ஆட்டுமாறு கமலாவக்கா ஏற்கெனவே பணித்திருந்தார். அவர் கூறியபடி, ராஜேசுவரியைத் தான் காணோம். அவள் வந்தால் தானே, நந்தினியை ஊஞ்சலில் இருக்க வைத்து அவளருகே கால் நுழைத்து மூச்சு வாங்க அவள் உழக்கி மிதித்தால் தான், நந்தினி ஊஞ்சலோடு சேர்ந்து அங்குமிங்குமாய் கால்கள் சரியத் தலை குப்புற வீழ்வது போல, ஆடி மகிழ்ந்து, எட்டாத உயரத்தில் பறப்பது போன்ற, பிரமை கொண்டு திரும்பி வரலாம். இடை வேளை முடிய, இன்னும் கொஞ்ச நேரம் தான் இருந்தது. அதற்குள் ராஜேசுவரி வந்தாக வேண்டுமே என்ற கவலை நந்தினிக்கு. நீண்ட நேரமாக அவளைக் காணோம்.. என்ன தலை போகிற, காரியமோ அவளுக்கு. அவள் வகுப்பை வழி நடத்துகின்ற, வெறும் மொனிட்டர் மட்டுமல்ல சக வகுப்புகளுக்கும் தீர்ப்பு வழங்குகிற ஒரு பஞ்சாயத்துத் தலைவி மாதிரி அவள். கனத்த குரலில் தொண்டை வரளாமல், வளவளவென்று ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். கமலாவக்காவின் வலது கை மாதிரி அவள். அவரோடு அப்படியொரு நெருக்கம். அவரோடு குழைந்து குழைந்து பேசவும், அவள் தவறுவதில்லை.
நந்தினியோ வேறு. ரகம்.கமலாக்காவைப் பொறுத்தவரை மனதைச் சில்லென்று குளிர வைக்கும் வற்றாத தமிழருவி மாதிரி அவள். நெருடலற்ற உயிர்ப் போக்கோடு தன்னிச்சையாய், சரளமாய் அவள் எழுதும் தமிழ் பிடிக்கும். சிறு வயதிலிருந்தே, நிறைய வாசித்து வருவதாலேயே, திறம்பட அவள் எழுதும் கட்டுரைகள், சிறந்த ஆளுமைப் பொலிவுடன், மனதை ஈர்த்தன. கமலாவக்கா தானும் அவற்றைப் படித்து மகிழ்வதோடு, கரகரத்த குரலில்சக மாணவிகளுக்கும் வாசித்துக் காட்டத் தவறுவதில்லை, அதை.
அவரை நினைத்தால் நந்தினிக்கு ஒரே புல்லரிப்புத்தான். காட்டாறு போல ஓடிக் களைக்கிற வாழ்க்கையின் நடுவே, பசுமை நிறைந்த, கறை ஏதுமற்ற காவியப் புனிதம் மாதிரியே, அவருடனான இந்த இனிய உறவு அவளுக்கு.. புறப் பிரக்ஞையாய் வெளிப்படுகிற, அழகின் துல்லியமான கதிர்களோடு காட்சிக்கு நிற்கும் அவர் முகம் கூட அப்படித்தான்.. திவ்வியமான கடவுள் தரிசனம் போன்ற, அவர் முகத்தில் விழித்தாலே அன்று யோகம் தான், என்று அவள் நினைப்பதுண்டு.. செந்தணலில், உருக்கி வார்த்த மாதிரி, அவர் முகத்திற்கு அப்படியொரு தனிக்களை விழுந்தவரை எழ வைக்கவே, விரும்புகிற, அவரின் முழுமையான அன்பையே ஒளிகொண்டு துலக்கிக் காட்டுகிற மாதிரியே அதுவும்.வற்றாத அன்பின், முழு ஒளியும் பிரதிபலிக்கிற, ஒரு தரிசன தேவதையே அவர்.அவர் விதித்த, பணிப்புரைக்கேற்ப, ராஜேசுவரி ஊஞ்சல் களத்தை நாடிக் களைக்கக் களைக்கக் குதிக்கால் தெறிக்க ஓடி வருவது தெரிந்தது.. அவள் வந்தாலென்ன .ஊஞ்சல் தான் இன்னும் காலியாகவில்லையே!
ஆடுகின்ற குட்டித் தேவதைகளை எப்படி எழுப்புவது?
ராஜேசுவரி உச்சி சூடேற, ஊஞ்சலைப் பிடித்து, இடை நிறுத்தியவுடன், சற்று ஆவேசமாகவே கூறினாள்.
“எழும்பும், நந்தினியை வைத்து ஆட்ட வேணும். இடைவேளை முடியப் போகுது”
“உந்தப் பயந்தாங்கொள்ளியையே? நீர் வைச்சு ஆட்டுற ஆட்டத்திலை உதின்ரை பழைய பாவாடை தாக்குப் பிடிக்குமே?”
“அதைப் பற்றி, உமக்கென்ன கவலை? விடும் என்றால் விட வேண்டியது தானே?”
“அதெப்படி?”
“கமலாவக்கா சொன்னால் விட வேண்டியது தானே”
“அவர் வந்து சொல்லட்டும் விடுறன்”
வீண் தர்க்கம் வேண்டாமே என்று தோன்றியது. போய் அழைத்து வந்து விட்டாள். எங்கு திரும்பினாலும் போராட்டம்தான் கருத்து முரண்பாடுகளோடு மோதியே சாக வேண்டியிருக்கிறது. இது அறியாமல் தான், அன்புக்குக் கொடி உயர்த்தியபடியே, ஒரு தர்ம தேவதை மாதிரிக் கறை துடைக்கக் கமலாவக்காவே. தரிசனமாக வந்து சேர்ந்தார். அக்கல்லூரியின் கல்வி சார், வெற்றிகளுக்கெல்லாம் அடிநாதமாகவே அவரின் பூரண அன்பின் தடம் விட்டுப் போகாத, இந்த எழுச்சி வருகையும் கூட. அவரின் பார்வை ஒளிபட்டாலே போதும். கல்லும் கனியும். .அதற்கு முன்னால் இக் குட்டித் தேவதைகளின் இருப்புக் கூட வெறும் நிழலே. அவர் வந்து பேசக்கூட இல்லை. பார்த்த பார்வையிலேயே சடுதியில் மாற்றங்கள் நேர்ந்து, ஊஞ்சல் மீது களம் கொண்டு விளையாட நந்தினி வந்து சேர்ந்தது, வெறும் கனவல்ல. அவள் ஏறி ஆடி மகிழ்வதை மன நிறைவோடு பார்த்து ரசித்தவாறே, கமலாவக்கா சிறிது நேரம் வரை, ஊஞ்சலருகே தரித்து நின்று கொண்டிருந்தார்.
அவர் அப்படி நின்று கொண்டிருப்பதை,நிஜம் விட்டுப்போன, மிகவும் பரவசம் கொண்டு வானில் பறக்கிற ஒருகனவுக் காட்சி போல, ஊஞ்சல் ஆடியபடியே நந்தினி மெய் மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள். உறவுகளும், உறவில்லாத மனிதர்களும் கரித்துக் கொட்டி, இரை விழுங்கியே பார்த்தும் கேட்டும் உணர்ந்தும் பழக்கப்பட்டிருந்த அவளுக்குச் சிறு விடயங்களில் கூடத் தாராளமாகத் தட்டிக் கொடுத்து, மனம் நிறைய வாழ்த்தி, ஆசீர்வதிப்பதோடு மட்டும் நில்லாமல், தான் ஊஞ்சல் ஆடி, சக மாணவியரைப் போல், சந்தோஷமாக விளையாடுவதொன்றையே கருத்தில் கொண்டு, முழுமனதோடு தன்னைத் தன் உணர்வுகளை இப்படி வாழவைத்துக் கைதூக்கி விட்ட, அவரின் அபரிதமான ,இந்த அன்பை எண்ணி, அவள் வெகுவாக மனம் கரைந்து போனாள். .அதில் உருகி அவளின் கன்னங்களில் வழிந்தோடும் கண்ணீர் முத்துக்கள், அந்த அன்பையே ஒளி கொண்ட மெய்ச் சாட்சியாகப் பிரதிபலிப்பது போல, கீழே இம் மண்ணின் கறை துடைத்துக் கொண்டு துளித்துளியாய் விழுந்து மறைந்தன. அந்த மகிழ்ச்சி மட்டுமே நிலவுகிற, துல்லியமான இனிய பொழுதிலும் அவளுக்கு ஏன் இந்தக் கண்ணீத் தடம் என்று பிடிபடாமல், பார்த்த விழிகளும் விறைத்துலர, அதனால் அங்கு குழுமிப் படை கொண்டு நின்ற அந்தக் குட்டித் தேவதைகளுக்கு ஏற்பட்ட முகம் சில்லிட்டுப் போன, திகைப்பு நீங்க வெகு நேரம் பிடித்தது.
– மல்லிகை (ஆகஸ்ட்,2009)