கண்ணாடித்தேர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: January 31, 2012
பார்வையிட்டோர்: 6,728 
 

மகளுக்குக் கல்யாணம் என்று சரோஜா டெய்லர் வந்து பத்திரிக்கைக் கொடுத்தபோது, கல்யாணத்திற்கு போகவேண்டாம் என்று நினைத்திருந்தான். ஆனால் அவன் மனைவி கல்யாணத்திற்கு போயே ஆகவேண்டும் என்று அடம் பிடித்ததில் ஒப்புக் கொள்ள வேண்டியாதாயிற்று. வீடு வந்து பத்திரிக்கை வைத்தவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு எப்படிப் போகாமல் இருப்பது? என்று கேட்கிறாள் இவன் மனைவி. ஆண்டாள் கோவிலில் கல்யாணம், வடக்குரத வீதி பப்புச்செட்டி கல்யாணமண்டபத்தில் சாப்பாடு என்று சொல்லியிருந்தார்கள். மாப்பிள்ளை அழைப்பும் வைத்திருந்தார்கள், அதுக்கே போயிட்டு வந்துட்டா போதும். விடியக்காலைல முகூர்த்தம். இதுக்குன்னு மெனக்கெட்டு போகணும்னு நினைச்சா மண்டையடி, பையனை ஸ்கூல்ல விடமுடியாது, காலைல பண்ற வேலையெல்லாம் ஒரு அவசரத்திலேயே செய்ய வேண்டி வரும், ஒழுங்கா விடிஞ்ச மாதிரியே இருக்காது, என்று நினைத்துக் கொண்டான்.

முதல் நாள் சாயங்காலம் மாப்பிள்ளை அழைப்பு தான் அவனுக்குத் தோதுப்படும் என்று தோன்றியது. அதுக்கு கூட போகணும்னு அவசியம் இல்லை, ஆனா இவன் மனைவியோடு கொஞ்ச நாளா, சரோஜா டெய்லர் ரொம்ப ஒட்டுதலா ஆயிட்டதால, அவளுக்காக போக வேண்டியதாய் இருக்கிறது. சரோஜா டெய்லரிட்ட ரவிக்கை தைச்சா தான் ரவிக்கை போட்ட மாதிரி இருக்குங்க! இதுக்கு முன்னாடி தச்சவங்ககிட்ட எல்லாம் ஏதாவது பிரச்னை இருந்துட்டே இருந்துச்சு, இங்க பாருங்க, எப்படி ’கச்’சுன்னு இருக்குண்ணு! என்று கையின் உள்ளே விரலை விட்டுக்காட்டினாள். எத்தனையோ பேரிடம் கொடுத்தும் திருப்தி இல்லாமல், சரோஜா திருப்தியாய் அமைந்தது தான் காரணம் அவர்கள் சிநேகம் வலுப்பெற்றதற்கு. இதற்காக ரெண்டு தெரு தள்ளி, சரோஜாவிடம் வந்து தைக்க கொடுக்கிறாள்.

சரோஜாவின் வசீகரமான முகமும், எதையுமே சுவாரசியமாய் ஒரு ஏற்ற இறக்கத்துடன் பேசுகிற விதமும், புருவக்குறிகளும் இவன் மனைவிக்கு சரோஜாவை அதிகம் பிடித்து விடவும், அவள் தைத்ததில் குறை இருந்தாலும் அதை பெரிதாய் கண்டுகொள்ளாதபடிக்கும் செய்திருக்கிறது. இது தான் சரோஜாவின் சாமர்த்தியம். ஸ்கூல் விட்டதும் பையனையும் கூட்டிட்டு மனைவியை வரச்சொல்லிட்டா, ஒட்டுக்க பப்புச்செட்டி கல்யாணமண்டபத்துக்கு போயிட்டு வந்துடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

பப்புச்செட்டி கல்யாணமண்டபத்தில் எப்படித் தான் ஒரு விசேஷம் வைக்கிறார்களோ என்று தோன்றும் இவனுக்கு. மண்டபத்துக்குள்ளே தண்ணி வசதியே கிடையாது. கிணறோ, போர் தண்ணியோ கிடையாது. எந்த விசேஷம் வச்சாலும், தள்ளுவண்டில தண்ணி எடுத்து நடையா நடக்கணும். இல்லேன்னா ஒரு லாரித் தண்ணி அடிக்கணும், சுமாரா அறுநூறு ரூபா வரை ஆகும். தண்ணித் தொட்டி கடைசிலே இருக்கிறதால, கூட நூறு ரூபா கேட்பான் என்று தோன்றியது. சரோஜா டெய்லருக்கென்று சில சாமர்த்தியங்கள் உண்டு, அதில் இது மாதிரியான பொறுப்பெல்லாம் பார்த்துக் கொள்ள அவளுக்கென்று யாராவது இருப்பார்கள் என்று தோன்றியது. தண்ணீர் ஒரு பெரிய பிரச்னை என்றாலும், மண்டபம் பெரிய மண்டபம், நிறைய ஜன்னல் வச்சு, காத்தோட்டமா, செட்டிமாருங்க வீடு மாதிரியே இருக்கும். எல்லா முகூர்த்தத்துக்கும் தவறாம ஏதாவது கல்யாணமோ, சடங்கோ, இதர விசேஷங்களோ நடந்து கொண்டு தானிருந்தது. சரோஜா டெய்லர் அங்கு கல்யாணம் வைத்திருப்பதற்கும் ஏதாவது காரணம் இருக்கலாம்.

சரோஜா, பத்திரிக்கை வைக்க வரும்போது, அவளுடைய மகளும் வந்திருந்தாள். பதினெட்டு அல்லது பதினேழு வயசு தான் இருக்கும். ஒல்லியாய், அவளுடைய அம்மா போல முகத்துடனும் சிரிப்புடனும் இருந்தாள். கண்களில் ஒருவிதமான மருட்சியுடன் சிரித்தாள். இந்தப் பெண்ணை பார்த்த ஞாபகம் இருக்கிறது, ஒருவேளை அவள் அம்மாவின் சிறுவயது தோற்றத்தை வைத்துக் குழப்பிக் கொள்கிறோமோ என்று தோன்றியது. இல்லை, இந்தப் பெண்ணை மவுத்தன் (மவுத்தனின் பெயர் முருகன் தான், கருப்பா இருப்பதால, கருவாயன், ப்ளாக்மவுத் ஆகி, மவுத்தனாகி விட்டான்) கடையில் வைத்து நீலத் தாவணி, வெள்ளை ரவிக்கை காண்வெண்ட் பள்ளியின் யூனிபாரத்தில் பார்த்திருக்கிறான். கையில் கண்ணாடி வளையல்களும் இரண்டு தங்கவளையல்களுமாய், மஞ்சள் கலர், ஜரிகை லேஸ் வச்சத் தாவணியும், அரக்குக் கலரில் பாவாடையும் அணிந்து இப்போது கொஞ்சம் வேறு மாதிரி இருந்தாள். அண்ணே! பாபுவையும் அக்காவையும் கூட்டிட்டு வந்திருங்கண்ணே! என்று சம்பிரதாயமாய் கும்பிட்டு அழைத்தாள். சரோஜா இவனைப் பார்த்து வந்துரணும்.. என்று அழுத்தமாயும், இழுத்தமாதிரியும் சொல்லிவிட்டு, இவன் மனைவியிடமும் சொல்லிக்கொண்டு படியிறங்கினாள்.

சரோஜாவிடம் பெரிதாய் மாற்றங்கள் இல்லை. கொஞ்சமே கொஞ்சம் நரையும், இடுப்புக் குழைவும் தவிர அப்படியே இருந்தது மாதிரி தெரிந்தது. படியிறங்கி அவர்கள் வாசல் வருவதற்குள் பால்கனிக்குப் போனான். கீழே இறங்கிய சரோஜா, அண்ணாந்து இவனைப் பார்த்து வந்துடணும் என்று ஆள்காட்டி விரலை உயர்த்தி ஆட்டினாள். சரோஜாவை கவனித்துக் கொண்டிருந்தவனை, தொட்டு திருப்பினாள் அவன் மனைவி. என்னங்க செய்யலாம், போய் மொய் கவர்ல வச்சிட்டு வந்துடலாமா இல்லை ஏதாவது பாத்திரம் பண்டம் வாங்கி வைக்கலாமா? என்றாள். ஏதாவது செய்யலாம். உனக்கு ஏதாவது குறிப்பா செய்யணும்னு தோணினா உன் இஷ்டம் என்று சொல்லிவிட்டான்.

இன்று பத்திரிக்கை பார்த்ததும், அன்று நடந்தது எல்லாம் திரும்பவும் மனசுக்குள் ஓடியது. கடைக்குக் கிளம்ப வேண்டும், பையனை ஸ்கூல்ல விட்டுட்டு வந்ததன் பிறகு தான் கடைக்கு கிளம்ப வேண்டிய ஆயத்தங்களை ஆரம்பிப்பது அவனுடைய வழக்கமாகி விட்டிருந்தது. ஏதேதோ நினைப்புகள் வர, கூடைச்சேரின் மேல் கிடந்த ஆனந்தவிகடனை எடுத்துக் கொண்டு கக்கூஸுக்குப் போனான்.

உட்கார்ந்திருக்கும் போது சரோஜா பற்றிய நினைப்பு வந்தது. அவன் அப்போ படித்துக் கொண்டிருந்தான், ஹிந்து ஹைஸ்கூலில். அவன் வீடும் சரோஜா வீடும் அடுத்தடுத்த தெருவில் இருந்தது. அப்போது தான் சரோஜா கல்யாணமாகி வந்திருந்தாள், அழகாபுரிதான் அவ ஊர். பார்க்க அத்தனை அழகா, அழகாபுரி ராணி மாதிரி அப்படி ஒரு தினுஷான, சொகுசான அழகு. அவ நடக்குறதும், பார்த்து சிரிக்கிறதும் யாரையும் ஒரு மிதப்புல நிறுத்தும். அவ பேசிட்டா போதும், ஒரு பயல கையில பிடிக்கமுடியாது. இந்த கொன்னவாப்பயலுக்கு இப்படி ஒரு பொண்ணா? என்று வயிறெரியும் நிறைய சம்சாரிப்பயகளுக்கு. சரோஜா வீட்டு பின் சுவர் தான், இவன் வீட்டு பின் சுவரும். சுவரை ஒட்டி இருக்கிற பாத்ரூமில் அவ குளிக்கும் போது, அடிக்கிற மணம், சோப்பா, மஞ்சளா, இல்ல பூசுப்பொடியா என்று தெரியாமல் அவனை அப்படியே மல்லாத்திரும்.

சரோஜா கல்யாணமாகி வரும்போது, இவனை விட ஒரு வயசு ரெண்டு வயசு பெரியவ மாதிரி தான் இருந்தது. வயசுக்கு மீறின வளர்ச்சியினால கூட அப்படித்தெரிந்திருக்கலாம். சரோஜா புருஷனுக்கு கைக்கொள்ளாத அழகு அவ-ன்னு தோன்றும் இவனுக்கு. அவ மகளும் பார்க்க அப்படியே தான் இருக்கா, ஆனா உடம்பு, சரோஜா கணக்கா ஒரு தெறிப்பு இல்லை. ”என்னங்க உள்ளேயே தூங்கிட்டீங்களா? என்று அவன் மனைவி கதவு தட்டுவது கேட்டது. இந்தா வாரேன்! அவ்வளவுதான்! என்று வெளியே வந்தான். ”புஸ்தகத்தை எடுத்துட்டு போனா நேரம் போறதே தெரியாதே! அந்த மணத்துல ஒக்காந்து படிக்காட்டி தான் என்னவாம்?” என்று சலித்துக் கொண்டாள்.

வெளியே வந்தவனை, முறைத்தவளை கவனிக்காதது போல வெளியே வந்து கொடியில் கிடந்த துண்டை எடுத்துக் கொண்டு குளிப்பதற்கு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டான். சரோஜாவை அதிகம் கவனிக்க வைத்தது, அவனுடன் படித்த ராமராஜ் பயதான். பங்காளி! என்னா மாதிரி இருக்கா பாரு பங்காளி! இடுப்பையும், பையையும் பார்த்தியாடே? இவளுக்கு தொசுக்கு மாதிரி ஒரு புருஷன். என்று அலுத்துக் கொள்வான். சரோஜாவின் பாத்ரூம் சுவரு தான் இவன் வீட்டு கொல்லைச்சுவரு என்பதை அவனிடம் சொல்லவில்லை. சொல்லியிருந்தால், அதற்கும் ஏதாவது உபாயங்கள் சொல்றேன் பேர்வழி!ன்னு வந்து உட்கார்ந்து கொள்வான் ஞாயிற்றுக்கிழமைகளில்.

சரோஜா வீட்டு பாத்ரூமில் தண்ணீர் சத்தம் கேட்கும்போதெல்லாம், காய்ச்சல் வரும்போல இருக்கும் இவனுக்கு. எத்தனை சலனங்களைத் தந்திருக்கும் அந்தப் பொழுதுகள் என்று தோன்றியது அவனுக்கு. ஒருமுறை தண்ணீத் தொட்டியில் முருங்கை இலைகளும் பூக்களும் விழுகிறது என்று கிடுகு போட, சுவற்றில் ஏறிய போது குளித்துவிட்டு துணி மாற்றிக் கொண்டிருந்த சரோஜாவை தற்செயலாகப் பார்த்துவிட, அவளும் பதட்டமில்லாமல், ஏற்றிக்கட்டிய பாவாடையின் மீது கதவில் இருந்த துணியை எடுத்துப் போர்த்திக் கொண்டு வீட்டினுள் நுழைந்ததும், இன்னும் கண்ணுக்குள்ளேயே இருந்தது.

வெளியே அங்கே இங்கே பார்த்த நேரங்களின் அவள் கொடுத்த சமிக்ஞைகள், அவள் வீட்டில் யாருமில்லாத தருணத்தில், வீட்டுச்சுவர் தாண்ட வைத்தது. அதற்கு பிறகு, எப்போது படித்தாலும் பட்டாசாலில் உட்கார்ந்து படிப்பது தான் வழக்கம் என்றிருந்தவன், கொல்லையில் உட்கார்ந்து படிப்பது என்று வழக்கமாகிவிட்டது. அம்மாவுக்கு, புள்ள எந்நேரமும் புஸ்தகமும் கையுமா இருக்கானே! பெரிய கலெக்டராத்தேன் வரப்போறான் எம்மவன்! என்று மணத்துக் கொள்ள ஏதுவாய் இருந்தது. அக்காவின் திருமணத்தின் போது வீட்டை விற்றுவிட்டு தைக்காபட்டி தெருவுக்கு போனபிறகு எல்லாம் மறந்து போனது. கல்லூரிப் படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு, அப்பாவின் கடையைப் பார்த்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. அப்பப்போ, சரோஜாவை பஜாரில் பார்ப்பதோடு சரி, எப்போதும் சைக்கிளில் ஏதோ அவசரசோலி இருப்பது போல பறப்பாள்.

குளித்துவிட்டு வெளியே வந்தான். ஸ்வாமி படங்களின் முன்னால் நின்று கும்பிட்டு விட்டு, திருநீரைக் குழைத்து நெற்றியிலும், கையிலும் பூசிக் கொண்டான். அப்பாவிடம் இருந்து வந்த பழக்கம். கும்பிட்டானதும், பால்கனிக்கு வந்து சூரிய நமஸ்காரம் செய்து விட்டுத் திரும்பும் போது, செல்வராஜ் வீட்டிற்குள் இருந்து சரோஜாவும், அவள் மகளும் வெளியே வந்தனர். சரோஜா மேலே பார்ப்பது போல இருக்க, சடக்கென்று தலையை உள்ளிழுத்துக் கொண்டான்.

காலை உணவை முடித்துக் கொண்டு கடைக்கு கிளம்புகையில் இவன் மனைவி சகுனம் பார்த்து அணுப்புவது தான் வழக்கம். வெளியே வந்து மஞ்சப்பையை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு படியிறங்கினான். இவன் மனைவியும் உடன் வந்தவள், வெளியே நின்று கொண்டு, இவன் போகும் திசையைப் பார்த்தாள். வாங்க வாங்க என்று அவசரமாய் அழைத்தாள், நிறைகுடங்களை சுமந்து கொண்டு கௌசல்யாவும், கோவிந்தம்மாவும் வந்து கொண்டிருந்தார்கள். நல்ல சகுனந்தான் என்று கிளம்பியவன், தெருமுக்கில் நின்று அவன் மனைவிக்கு, கையசைத்து விட்டு பஜாருக்கு நடக்கத் தொடங்கினான்.

மனசு முழுக்க சரோஜா தான் இருந்தாள், வேறு கவனமே இல்லை. எதிரில் வந்த கொட்டாப்புளி ஆசாரி கூட, என்ன அண்ணாச்சி! சுகமாயிருக்கீயளா? என்று பேச வந்தபோது, ஒரு அவசர சோலியா போயிக்கிட்டு இருக்கேன்! கடைக்கு வாங்க, பொறவு பேசிக்கிடலாம்! என்று அவரைத் தவிர்த்து நடந்தான். பின்னால் சைக்கிளில் வந்த ஒரு பெண், இவனுக்கு முன்னால் வந்து குதித்தது மாதிரி இறங்கினாள். அது சரோஜா என்று தெளிவதற்கு கொஞ்ச நேரமானது. என்ன சரோஜா! என்றான்.

ரவி! கல்யாணத்துக்கு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டேன், கொஞ்சம் பொடவைக்கும், மாப்பிள்ளைக்கு துணி எடுக்குறதுக்கும் காசு குறையுது ரவி! எனக்கு யார்கிட்டயும் கேட்க சங்கடமா இருக்கு. என் புருஷங்காரனப் பத்தி தான் உனக்குத் தெரியுமே! உன்ன விட்டா எனக்கு யாரும் ஞாபகம் வரலை! ஒரு பத்து ரூவா இருந்தா கொடேன். முடியறப்போ திருப்பி தந்திடுதேன், என்று பேசிக் கொண்டே கையைப் பிடித்துக் கொண்டாள். நீ கடைக்கு போயிட்டிருக்கக் கூடாதே!ன்னு வேகமா வந்தேன் என்று இறைத்தாள். இவன் சுத்திமுத்தி பார்த்துவிட்டு சங்கடமாய் கையை உருவினான். நாளைக்குத் தரட்டுமா? என்றான். வீட்டுக்கு வந்திடாதே, நானே தோது பாத்து கொடுத்து விடுறேன் உன் வீட்டுக்கு! என்று யாரும் பார்த்து விடுவதற்குள் வேகவேகமாய் நடந்தான்.

கடைக்குப் போக மனசில்லாமல், பணத்தை எப்படி புரட்டுவது, மனைவியிடம் எப்படி மறைப்பது என்று யோசித்துக் கொண்டே ராமராஜோட பட்டறைக்குப் போனான். ராமராஜ் கடையில இல்லை, டேப் ரிகார்டர், எம்.ஜி.ஆர் பாட்டை, நம்பியார் குரலில் பாடிக்கொண்டிருந்தது. பட்டறைப்பையன், வாங்கண்ணே, டீ வாங்கியாரவா? என்று கேட்டு பதிலுக்கு காத்திருக்காமல், ரெண்டு டீயும் ஒரு ரெண்டு சிகரெட்டும் வாங்கி வந்தான். ஒரு டீயை அவனே குடித்துவிட்டு, சிகரெட்டை அவன் முதலாளிக்காக விட்டு வைத்தான். சிகரெட்டை பத்தவைத்துக் கொண்டே ஒரு கிளாஸில் டீயை உறிஞ்சும் போது, ராமராஜ் உள்ளே நுழைந்தான் குனிந்த படியே. குட்ட வாசக்கதவு அது.

வந்தவன், வாடா பங்காளி! இப்ப தான் வந்தியா?, ஏலே போய் இந்தப் பொட்டலத்தை உள்ள வச்சுட்டு, எனக்கு ஒரு டீ வாங்கியா! என்று அவனை விரட்டினான். பங்காளி, சரோஜா ஞாபகமிருக்கா? என்று கிசுகிசுப்பாய், அடிக்குரலில் கேட்டான். எந்த சரோஜா? என்று தெரியாதது போல கேட்டான் ரவி. அதாம்லே! ஒங்க பழைய வீட்டுக்கு பின்னால இருந்துச்சுல்ல, சரோஜா டெய்லர், அதுதான். அதுக்குள்ளாற மறந்திட்டியா? வயசாயிடுச்சுலே உனக்கு? என்று கெக்கெக்கே என்று சிரித்தான். இங்கு வந்திருக்கக்கூடாதோ? என்று தோன்றியது.

”அந்த சரோஜாவோட பொண்ணுக்கு கல்யாணமாம்லே, வந்து பத்திரிக்கை வச்சுச்சு. பாவம்லே அது புருஷங்காரன் ஒன்னத்துக்கு ஒதவலையாம். இதுவே எல்லாத்தையும் பார்த்துக்கணும்னா எம்புட்டு கஷ்டம்? கையப் பிடிச்சுக்கிட்டு, காசு கொஞ்சம் பத்தலை ராமருன்னு! கரகரன்னு அழுதுடுச்சு பங்காளி! எனக்கு வெசனமாப் போச்சு. மனசே கேக்கலை, அதான் போய், குப்பைய அலசுனதுல வந்த பத்து கிராம் தங்கத்த, சிலுவானக்கடையில வித்துட்டு வர்றேன்! அவளுக்கு கொடுக்குறத்துக்காக! அவளுக்கு கடன் பட்டுருக்கேன் பங்காளி!” என்று இளித்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *