கடவுள் இருக்கிறாரா, இல்லையா?

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 5,214 
 
 

ஒரு பட்டிமன்றம். காரசாரமான விவாதம் . தலைப்பு “ கடவுள் இருக்கிறாரா இல்லையா?”

முத்தாய்ப்பாக இரண்டு அணியின் தலைவர்களும் பேசவேண்டும் .

“கடவுள் இருக்கிறார்” அணியின் தலைவர் எழுந்தார் பேச:

“எல்லோருக்கும் என் தாழ்மையான வணக்கம்.

நாம் பார்க்கிறோமே இந்த அண்ட பெருவெளி, அதற்கு யார் அம்மா? அல்லது அப்பா ? அது எங்கிருந்து வந்தது ? இந்த பிரபஞ்சத்தில் ஒரு சிறு சிறு பகுதிகளே இந்த நட்சத்திரங்கள். அதில் ஒன்று தான் நமது சூரிய மண்டலம். அதில் ஒரு கோள் தான் நம் உலகம் .இந்த உலகம், பிரபஞ்சத்தில் ஒரு அனு, சிறு தூசு.

ஒரு வீடு கட்ட நாம் ஒன்று இரண்டு .வருடம் எடுத்து கொள்கிறோம் ஆனால் இந்த பிரபஞ்சம் ஏற்பட காரணமான பெருவெடிப்பு ( big bang) மூன்றரை நிமிடம் தான் எடுத்துக் கொண்டதாம் . விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். அதற்கு முன் என்ன இருந்தது ? யாருக்கும் தெரியவில்லை . விஞ்ஞானிகளை கேட்டால், கடவுளை தான் கேட்க வேண்டும் என்கிறார்கள் . இந்த பிரபஞ்சத்தை படைத்தது, நீங்களா, இல்லை நானா? இல்லை, ஏதோ ஒரு பெரும் சக்தி, அந்த சக்தி தான் இறைவன், கடவுள் .

கடவுள் இருக்கிறாரா ? இருக்கிறார். அந்த நம்பிக்கை தான் கடவுள் . அந்த நம்பிக்கை இல்லாதவனுக்கு கடவுள் இல்லை . ஒரு சிறு கதை சொல்கிறேன்.

கடவுள் இல்லை என்று வாதம் செய்பவர்களுக்காக ஒரு கதை: கடவுள் யார்? எங்கே இருக்கிறார் … இதற்கு பதிலை ஒரு கதை மூலம் விளக்குகிறேன்.

நாத்திகவாதியான ஒரு தத்துவப் பேராசிரியர் கடவுளின் இருப்பைப் பற்றி வகுப்பறையில் விளக்கிக் கொண்டிருந்தார். கடவுளை அறிவியல் ஆணித்தரமாக மறுப்பதைப் பற்றிப் பேசிய அவர், ஒரு மாணவரை எழுப்பி கேள்வி கேட்கலானார்.

நீ கடவுளை நம்புவதாகச் சொல்கிறாய். இல்லையா?”

“நிச்சயமாக ஐயா..”

“கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா.”

“கடவுள் அளப்பரிய சக்தி படைத்தவரா?”

“ஆம்.”

“என்னுடைய சகோதரர் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். தன்னைக் காப்பாற்ற கடவுளிடம் அவர் மனமுருகிப் பிரார்த்தனை செய்தபோதும் கடவுள் கைவிட்டு விட்டார். நாம் எல்லோருமே நோய்வாய்ப்பட்டோர்களுக்கு நம்மால் இயன்ற உதவியைச் செய்கிறோம். ஆனால் கடவுள் அவர்களைக் காப்பாற்றுவதில்லை. பின் எப்படிச் சொல்கிறாய் கடவுள் நல்லவர் என்று?”
மாணவர் அமைதியாய் இருக்கிறார்

“உன்னால் பதில் சொல்ல முடியவில்லை. இல்லையா? சரி.. நாம் மீண்டும் ஆரம்பிப்போம். கடவுள் நல்லவரா?”

“ஆம் ஐயா..”

“சாத்தான் நல்லவரா?”

“இல்லை.”

“எல்லாமே கடவுள் படைப்புத்தான் என்றால் சாத்தான் எங்கிருந்து வந்தார்?”

“கடவுளிடமிருந்துதான்.”

“சரி. இந்த உலகத்தில் கெட்டவை இருக்கின்றனவா?”

“ஆம்.”

“அப்படியென்றால் அவற்றை உருவாக்கியது யார்?”

மாணவர் பதில் சொல்லவில்லை

“இவ்வுலகத்தில் பசி இருக்கிறது, பஞ்சம் இருக்கிறது, மூட நம்பிக்கைகள் இருக்கின்றன. இவையெல்லாம் எங்கேயிருந்து வந்தன?”

“அறிவியல் சொல்கிறது, விஷயங்களைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு நமக்கு ஐம்புலன்கள் இருக்கின்றனவென. இப்போது சொல். கடவுளைக் கண்ணால் கண்டிருக்கிறாயா? அவர் பேசுவதைக் காதால் கேட்டிருக்கிறாயா? அல்லது வேறு எப்படித்தான் அவரது இருப்பை உணர்ந்திருக்கிறாய்? ஆனாலும் நீ கடவுளை நம்புகிறாய்?”

“ஆம் ஐயா”

“நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது ‘கடவுள் இல்லை’ என்று. இதற்கு நீ என்ன பதில் சொல்லப் போகிறாய்?”

“ஒன்றுமேயில்லை. எனக்கு நம்பிக்கை மட்டுமே உள்ளது.”

“ஹ்ம்ம்.. நம்பிக்கை.. அதுதான் இப்போது பிரச்சினையே..” ஆசிரியர் பெருமூச்செறிகிறார்.

இப்போது மாணவர் தன் வாதத்தை ஆரம்பிக்கிறார்

“ஐயா.. வெப்பம் அல்லது சூடு என்ற ஒன்று உள்ளதா?”

“நிச்சயமாக உள்ளது.”

“அதேபோல் குளிர் என்ற ஒன்றும் உள்ளதா?”

“நிச்சயமாக”.

“இல்லை ஐயா. நிச்சயமாக குளிர் என்ற ஒன்று இல்லை”.

வகுப்பறை நிசப்தத்தில் ஆழ்கிறது.

“ஐயா. வெப்பத்தில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு நிலை வெப்பத்திற்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. மனித உடல் தாங்குவதற்கு ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையும், தண்ணீர் ஆவியாவதற்கு ஒரு வெப்பநிலையும், இரும்பு குழம்பாவதற்கு ஒரு வெப்பநிலையும் இருக்கின்றன. ஆனால் இதுபோல் குளிரை அளக்க முடியுமா? வெப்பம் என்பது ஓர் ஆற்றல். குளிர் என்பது வெப்பத்திற்கு எதிர்பதம் அல்ல. வெப்பம் எனும் ஆற்றலின் இல்லாமையே குளிர் என்பது. வெப்பம் இல்லை” என்பதைத்தான் குளிர் என்று சொல்கிறோம். பூஜ்யம் டிகிரியும் குளிர்தான். பூஜ்யத்திற்குக் கீழே -240 டிகிரியும் குளிர்தான். இரண்டிற்கும் வித்தியாசம் கிடையாது”.

குண்டூசி விழும் சப்தம் கூட கேட்குமளவிற்கு அமைதியாயிருக்கிறது வகுப்பறை.

“சரி. இருட்டென்றால் என்னவென்று சொல்லுங்கள் ஐயா. அப்படி ஒன்று உண்மையிலேயே இருக்கிறதா?”

“ஆமாம் தம்பி. இரவில் இருட்டாகத்தானே இருக்கிறது”.

“நீங்கள் மறுபடியும் தவறாகக் கூறுகிறீர்கள் ஐயா. இருட்டு என்பதே ஏதோ ஒரு இருப்பின் இல்லாமைதான். நீங்கள் வெளிச்சத்தை அளக்க முடியும். குறைந்த ஒளி, நிறைந்த ஒளி, கண்ணைக் கூசச் செய்யும் ஒளி எனப் பற்பல வகைகளில் வெளிச்சத்தைப் பிரிக்கமுடியும்; அளக்கவும் முடியும். ஆனால் ஒளி என்பதே இல்லாவிட்டால் அதற்குப் பெயர்தான் இருட்டு. அதை அளக்க முடியாது. இல்லையா?”

“சரி தம்பி. நீ என்னதான் கூற வருகிறாய்?”

“ஐயா. நான் கூறுகிறேன், கடவுளைப் பற்றிய உங்கள் கருத்து பிழையானது.”

“பிழை?? விளக்கிக் கூற முடியுமா?”

“ஐயா, நீங்கள் எதிலுமே இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறீர்கள். ஒன்று இருந்தால் அதற்கு எதிரிடையான ஒன்றும் இருக்கிறது என்பது உங்கள் வாதம். உதாரணத்திற்கு நல்ல கடவுள், கெட்ட கடவுள். இருட்டு, வெளிச்சம். வெப்பம், குளிர். நீங்கள் கடவுள் என்பவருக்கு ஒரு முடிவு, அல்லது எல்லை என்ற ஒன்று உண்டு என்பதாகக் கருதுகிறீர்கள். அதை நம்மால் அளக்க முடியவேண்டும் எனவும் வாதிடுகிறீர்கள்.

அறிவியல் மூலம் எண்ணங்கள் எப்படி உருவாகின்றன என்பதை உங்களால் விளக்கமுடியாது. எண்ணங்கள் உருவாவதே உடலினுள் கலக்கும் மின் மற்றும் காந்தத்தூண்டல்களினால்தான்.

மின்சாரத்தை அளக்கமுடிந்த உங்களால், காந்தத்தன்மையை விவரிக்க முடிந்த உங்களால் எண்ணங்களின் தோற்றத்தை அளக்க முடியவில்லை.

இறப்பு என்பதை வாழ்வதின் எதிர்ப்பதமாகக் கருதுகிறீர்கள். உண்மையில் “வாழ்வு இனி இல்லை” என்ற தன்மையே இறப்பு என்பதை அறிகிறீர்கள் இல்லை.

சரி இப்பொழுது சொல்லுங்கள் ஐயா.. குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்கிறீர்களா?”

“இயற்கையான பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் பேசுவோமானால்.. ஆம்.. அது உண்மை. குரங்கிலிருந்து மனிதன் உருவானான்”. பேராசிரியர் பதிலுரைத்தார்.

“உங்கள் கண்களால் மனிதப் பரிமாண வளர்ச்சியைக் கண்டிருக்கிறீர்களா?”

பேராசிரியர் தன் தலையை ‘இல்லை’ என அசைத்தவாறே, புன்முறுவல் பூக்கலானார், விவாதம் செல்லும் போக்கை அறிந்தவராய்.

“அப்படியென்றால், யாருமே மனிதப் பரிமாண வளர்ச்சியை தத்தமது கண்களால் கண்டதில்லை. எல்லாமே ஒருவகையான’ அனுமானம்தான். இன்னும் சரியாகச் சொல்லப்போனால் அது உங்கள் கருத்து, குரங்கிலிருந்து மனிதன் உருவானான் என்பது. அதை நிரூபிப்பதற்கு நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் எவையுமே, எவரும் கண்டதில்லை, அனுபவம் செய்ததில்லை என்பதே உண்மை. உங்களுக்குச் சரியெனப் படும் ஒன்றை எங்களுக்கு போதிக்கிறீர்கள், இல்லையா?. எனவே, நீங்கள் ஒரு விஞ்ஞானியா அல்லது போதகரா?”

மாணவர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விடுகிறார்கள்

“இங்கே யாராவது நம் பேராசிரியரின் மூளையைப் பார்த்திருக்கிறீர்களா?”

வகுப்பறை ‘கொல்’லெனச் சிரிப்பொலியால் அதிர்ந்தது.

“யாராவது பேராசிரியரின் மூளையைத் தொட்டுப் பார்த்திருக்கிறீர்களா? அது இருக்கிறதென உணர்ந்திருக்கிறீர்களா? அதன் வாசனையை நுகர்ந்திருக்கிறீர்களா? உங்கள் ஐம்புலன்களும் என்ன சொல்கின்றன?

அப்படியென்றால் நம் நடைமுறை வாழ்க்கையிலும் சரி, பரிசோதிக்கத்தக்க வகைகளிலும் சரி, ஆதாரங்களுடன் விளக்கக்கூடிய வழிமுறைகளிலும் சரி, எல்லாவற்றிலுமே அறிவியல் சொல்கிறது, உங்களுக்கு மூளை இல்லை என்று.

மூளையே இல்லாத நீங்கள் நடத்தும் பாடங்களை நாங்கள் எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் ஐயா?”

மாணவரின் சரமாரிக் கேள்விகளால், வகுப்பறையில் அமைதி நிலவுகிறது. ஆசிரியரின் முகமோ வெளிறிப்போனது!

“நீ எனக்கு மூளை இருக்கிறதென நம்பித்தான் ஆகவேண்டும் தம்பி!”

“அது தான் ஐயா.. இவ்வளவு நேரம் நான் சொல்ல வந்தது. மனிதனையும் கடவுளையும் இணைக்கும் ஊடகத்தின் பெயர்தான் நம்பிக்கை என்பது. இது தான் உலகத்தில் சகலமானவற்றையும் இயக்கிக் கொண்டிருப்பது. நம்பிக்கை இல்லையேல் வாழ்க்கை இல்லை.”

(நன்றி – கூகிள் )

“எனவே கடவுள் உள்ளார் என்பதே நிஜம். அதையே நம்புவோம். எனக்கூறி என் வாதத்தை முடிக்கிறேன்.”

கரகோஷம் விண்ணை பிளந்தது.

***

கடவுள் இல்லை அணியின் தலைவர் எழுந்தார் பேச: நான் ரொம்ப பேச வேண்டியதில்லை. என் கேள்விகளுக்கு மட்டும் எதிரணியினர் பதில் சொல்லட்டும். வெறும் நம்பிக்கை மட்டுமே இறைவனாகாது. ஆதாரம் வேண்டும். அது இருக்கிறதா உங்களிடம்?

இப்பொழுதும் எங்கள் கேள்வி இதுதான். இறைவன் என்று ஒருவர் இருந்தால், அவரை காண்பியுங்கள், பார்ப்போம், நிருபியுங்கள், ஒப்புக் கொள்ளுகிறோம்“

இறைவன் தான் இவ்வுலகை, அண்ட சராசரங்களை படைத்தான் என்றால், அவனை படைத்தது யார்? பதில் சொல்லுங்கள்.

கண்ணுக்குத் தெரியாது, கைக்குச் சிக்காது, புத்திக்கும் எட்டாது என்கிறார்கள் . அப்படியானால் எப்படி கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறார்கள் . நம்பு என்பதில் தான் கடவுளை வைத்து இருக்கிறார்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினார்கள் ? கருணையே வடிவானவர் என்கிறார்கள் . அவர் கையில் ஏன் சூலாயுதம், வேலாயுதம், அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவைகள் எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரர்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு?

ஒன்றும் வேண்டாத கடவுளுக்கு என்னத்துக்கு ஆறுகால பூசை? யார் இறைவன் உண்ணுவதை பார்த்தது? பார்த்து இருந்தால் சொல்லட்டுமே!

மதம் ,அதுவம் மதத்தின் பெயரால் செய்யும் ஏமாற்று வேலைகள், கடவுள் பெயரால் பணம் பண்ணும் திருட்டு தனங்கள், அதை விட பெரிய அட்டூழியம் வேறு எதுவும் இருக்க முடியாது .

இதை கேளுங்கள். கடவுள், எங்கேயோ வானத்தில் ஒரு மூலையில் இருப்பாராம், அவர் நம் ஒவ்வொரு மனிதனியும் தனித்தனியாக, ஒவ்வொரு நொடியும் பார்த்துக் கொண்டேயிருப்பாராம் . இதில், யாரேனும், அவர் கட்டளைகளை, ஏதாவது ஒன்றை , பத்து கட்டளைகளாக இருக்கட்டும், கருட புராணமாக இருக்கட்டும்,. திருக் குரானாக இருக்கட்டும், ஏதேனும் மீறினால், அவர் அவர்களை பிடித்து நரகத்தில் தள்ளி விடுவாராம் . அங்கு, அவர்கள், பட்டினி, பூச்சி கடி, நெருப்பு வாட்டல், தூக்கு, சீழும் ரத்தமும் நிறைந்த ஆற்றில் முக்கி எடுப்பது போன்ற சித்திர வதைகளை காலம் காலமாக அனுபவிக்க வேண்டுமாம். இந்து மதத்தில் இதை நிறைவேற்ற, யமதர்மன், சித்ரகுப்தன் போன்ற அடியாட்கள் வேறு.

ஆனால், கடவுளை நம்புவர்கள் சொல்வது, “இறைவன் அன்பே உருவானவன்”. இது என்ன நியாயம்? எவ்வளவு பெரிய வேடிக்கை ? “இறைவனுக்கு தேவை அன்பாம். உண்மையில்,அவருக்கு தேவை பணம். வரி இல்லாத பணம் . “இது என்ன பம்மாத்து? இது மத குருமார்களின் கள்ள வேலை. இறைவனை, இறைவன் என்று இல்லாத ஒருவரை காட்டி, பயமுறுத்தி பணம் பறிப்பது..நான் சொல்லுவேன், இது கடவுள் அன்பு அல்ல, இறை திருட்டு.

மற்றொன்று, எதிரணி தலைவர் கேட்டார். இறைவன் இல்லை என்பதை நிருபியுங்கள் என்று சவால் விட்டார். நான் கேட்கிறேன். இறைவன் இருக்கிறான் என்று சொல்வதே நீங்கள் தானே? அதற்குதானே எதிர்ப்பு தெரிவிக்கிறோம். நீங்கள் இறைவன் இருக்கிறான் என நிருபியுங்கள் .

கடைசியாக சொல்கிறேன். கடவுள் உயிர் அல்ல, மெய்யல்ல, உண்மையில் அவர் எழுத்தே அல்ல. இத்துடன் எனது சிற்றுரையை முடித்துக் கொள்கிறேன். வணக்கம்.

கடவுள் இல்லை அணியின் தலைவர் அமர்ந்தார . இதற்கும் கரகோஷம் விண்ணை பிளந்தது .

வழக்கம் போல, பட்டிமன்ற தலைவர், வழ வழ , கொழ கொழ என்று பேசி, பட்டிமன்றத்தை முடித்து வைத்தார். கூட்டம் கலைந்தத .

***

கடவுள் இருக்கிறார் என்று அடித்து பேசிய குழுவின் தலைவர், அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் .

“எங்கே தலைவா இப்படி வேக வேகமாக கிளம்புகிறீர்கள்?” என்று கேட்டார் அவர் குழு நண்பர்.

“ஒன்றுமில்லை! இன்னொரு விவாத மேடை. அதில், கடவுள் இல்லை என்ற தலைப்பில் பேசவேண்டும்“ என்றார் கடவுள் இருக்கிறார் என்று அடித்து பேசிய குழுவின் தலைவர்.

***

கடவுள் இல்லை என்று அடித்து பேசிய குழுவின் தலைவர், அவசர அவசரமாக கிளம்பிக் கொண்டிருந்தார் .

“எங்கே தலைவா இப்படி வேக வேகமாக கிளம்புகிறீர்கள்? சீக்கிரமாகவே உங்கள் பேச்சை முடித்து விட்டீர்களே?” என்று கேட்டார் அவர் குழு நண்பர்

“ஒன்றுமில்லை! வடபழனி முருகன் கோவிலில் இன்று பால் காவடி எடுக்கிறேன். நேரமாகி விட்டது. அதுதான் அவசரம்“ என்றபடியே கிளம்பினார் கடவுள் இல்லை என்று அடித்து பேசிய குழுவின் தலைவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *