’உலகத்தின் எல்லையை கண்டுபிடிப்பதற்காக ஒரு மனிதன் நடக்கத் தொடங்கினான். பல நாட்கள் பயணம் செய்து பல மலைகளைக் கடந்து, பல ஆறுகளைத் தாண்டி உலகத்தின் எல்லைக்கு வந்து சேர்ந்தான். அங்கே ஒரு பாறை இருந்தது. அதன் உச்சிதான் எல்லை. ஒருநாள் முழுக்க ஏறி உச்சியை அடைந்தான். தான் வந்து சேர்ந்த அடையாளமாக அதிலே எழுதினான். ‘இங்கே நான் வந்தேன்.’ எழுதி முடிந்ததும் திகைத்தான். ஏற்கனவே பாறையின் உச்சியில் ‘இங்கே நான் வந்தேன்’ என்று எழுதியிருந்தது, ஆனால் தலைகீழாக.’
ரொறொன்ரோ பூங்கா இருக்கையில் உட்கார்ந்து ஒரு நடுமதியம் அந்தக் கதையை கிழவர் சொன்னார். அதைக் கேட்டவனுக்கு வயது 17 இருக்கும். பத்து வயதில் பெற்றோருடன் கனடாவுக்கு வந்தவன். இரண்டு நாள் முன்னர்தான் வீட்டைவிட்டு ஓடினான். அவனுடைய மூளை வளரும் வேகத்திலும் பார்க்க பள்ளிக்கூடத்தில் அவன் படித்து முடிக்க வேண்டிய புத்தகங்களின் எண்ணிக்கை வளர்ந்தது. சரித்திர பாடத்தில் கி.மு என்பதற்கு பதிலாக கி.பி என்று எழுதிவிட்டான். அவனுடைய அப்பா திட்டினார். அம்மா தலைமயிரை விரித்து ஓங்கி ஓங்கி தன் தலையில் தானே அடித்தார். அவனுடைய பெற்றோர் பள்ளிக்கு வரும்போது அவனுக்கு வெட்கமாக இருக்கும். அவனை அழைத்துக்கொண்டு சொந்தக்காரர் வீட்டுக்கு விருந்துக்கு போகும்போது பெற்றோருக்கு வெட்கமாக இருக்கும். நீண்ட தலைமயிரும், காதுக் கடுக்கனும் வாழ்க்கைக்கு அத்தியாவசியமில்லை என்பது பெற்றோர்களின் எண்ணம்.
அவனுக்கு இப்பொழுது உடனே ஒரு வேலை தேவை. கிழவர் சொன்னார். ’உலகத்தில் புதிது என்று ஒன்றுமே கிடையாது. அதை ஏற்கனவே ஒருத்தன் செய்திருப்பான். ஒருவன் ஒரு வேலையை செய்யமுடியும் என்றால் அதை இன்னொருவனும் செய்யலாம். உனக்கு முன்னால் தெரியும் உணவகத்தைப் பார். கனடாவின் ஆகப் பெரிய உணவகம் இதுதான். அங்கே இரண்டு வேலைகள் எப்பவும் கிடைக்கும். ஒன்று கோப்பை கழுவுவது; இன்னொன்று மேசை துடைப்பது.’ ’ஆனால் எனக்கு அனுபவம் இல்லையே?’ நீ பிறந்தபோது யார் உனக்கு பால் குடிக்கச் சொல்லித் தந்தது. நீ எப்படியோ உன் உணவுப்பை எங்கேயிருக்கிறது என்பதை தடவி கண்டுபிடித்து உறிஞ்சினாய் அல்லவா? துணிந்துபோ. மேசை துடைக்கும் வேலைக்கு ஆகக் குறைந்த மூளையே போதும்’ என்று துரத்தினார். சமையல்கூட மனேஜரை பார்க்கச் சொன்னார்கள். அவர் பெயர் ஐஸாக். பெரிய பொத்தான்கள் வைத்த வெள்ளை சீருடை இறுக்கமாக அவர் உடம்பை கவ்விப் பிடித்திருந்தது. அந்த உணவகத்தில் 200 பேர் ஒரே சமயத்தில் உட்கார்ந்து உணவருந்தமுடியும். 60 மேசைகளும் அதைச் சுற்றி நாற்காலிகளும் இருந்தன. ’இங்கே 2 மேசை துடைப்பாளர்கள் தேவை. இன்று ஒருவர் மட்டுமே வேலை செய்கிறார். அவர் வேலையை ஒரு மணி நேரம் அவதானித்துப் பார். அதற்கு பின்னர் நீ அவர் போலவே வேலை செய்’ என்றார். அவனுக்கு வேலை கிடைத்தது.
அவனுடைய வீட்டுப் பெயர் மகேஸ்வரன். பள்ளிப்பெயர் மார்க். வேலையில் அவனுக்கு கொடுத்த பெயர் busboy. வாடிக்கையாளர் உணவருந்திய பின்னர் மேசையில் இருக்கும் பிளேட்டுகளையும், கிளாஸ்களையும் அகற்ற வேண்டும். மேசையை துடைத்து அடுத்தவருக்கு அதைத் தயாராக்க வேண்டும். சீனி பக்கட்டுகளை அடுக்கி நிரப்பி வைத்துவிட்டு 38ம் நம்பர் அல்லது 39ம் மேசை தயார் என்பதை வரவேற்பு பெண்மணிக்கு அறிவிக்கவேண்டும். அப்பொழுதுதுதான் அவர் புதிய வாடிக்கையாளரை மேசைக்கு அனுப்புவார். 30 மேசைகளுக்கு அவன் பொறுப்பு. மீதி 30 மேசைகளுக்கு பிலிப்பினோ பொறுப்பு. ஓர் உணவகத்தில் இதுதான் ஆகக் கடை நிலை வேலை, ஆனால் முக்கியமானது. வாடிக்கையாளர் மேசையை விட்டு நீங்கிய இரண்டு நிமிடங்களில் மேசை அடுத்த வாடிக்கையாளருக்கு தயாராகிவிடவேண்டும். அதுதான் கட்டளை. மிகச் சுலபமான வேலை என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தான். ஆனால் எச்சில் பிளேட்டுகளை சுமந்து செல்லவேண்டும். கிளாஸ்களில் மீதமுள்ள குடிபானங்களை வாளியில் ஊற்றிவிட்டு அவற்றை ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி தூக்கிப் போகவேண்டும். பின்னர் நாற்காலிகளை நேராக்கி சுத்தமாக்கும் திரவத்தை மேசையில் அடித்துத் துடைத்து துப்புரவாக்கி அலங்காரம் செய்யவேண்டும்; நாப்கின்கள் புதியவை என்பதை உறுதிசெய்யவேண்டும்.
பிலிப்பினோக்காரன் இரண்டு வருடமாக அங்கே வேலைசெய்கிறான். மெலிந்து உயர்ந்த தேகம். அவனால் பதினைந்து பிளேட்டுகளை அனாயாசமாகத் துக்கிக்கொண்டு விரைந்து செல்லமுடியும். எதிர்ப் பக்கம் சாய்ந்தபடி வாளித் தண்ணீரை தூக்கிக்கொண்டு மேசை மேசையாக நகர்வான். ஒட்டகத்தின் நீண்ட கழுத்தில் தலை ஆடுவதுபோல ஆடும். அவனுக்கு களைப்பே கிடையாது. கழுத்திலிருந்து தோள்மூட்டுவரை பல் காயமாக இருக்கும். கழுத்திலிருந்து கீழே போகிறதா அல்லது தோள்மூட்டிலிருந்து மேலே போகிறதா என்பது மர்மம்தான். காதலியின் பல்காயங்களை முத்துமாலைபோல அணிந்திருப்பான். ’உனக்கு வலிக்காதா?’ ’வலிக்கும்தான்’ என்பான். ’நீ அவளுக்கு சொல்லலாமே.’ ’எப்படி? என்னுடைய வாய்க்குள் அவள் முழுக்கூந்தலும் இருக்குமே!’
பிலிப்பினோவின் ஒரே பயம் மனேஜர்தான். அவரின் முகம் வியர்த்திருக்கும். அக்குளில் வியர்வை சேர்ந்து சீருடையின் நிறம் அங்கே மாறியிருக்கும். எந்நேரமும் புகழப்பட விரும்புபவர். சுற்றிப் பார்க்க அவர் புறப்படும்போது பிலிப்பினோவின் முகம் 15 பிளேட்டுகளின் பின்னால் மறைந்துவிடும். அவன் அடிக்கடி சொல்லும் புத்திமதி இதுதான். ‘மனேஜர் மகிழ்ச்சியில் கைதட்டும்போது உன் தலையை நடுவே நுழைக்காதே.’ அவனுடைய புத்திமதியை சிலசமயம் அவனே மறந்துவிடுவதுண்டு. மனேஜர் எதிர்வரும்போது ஒதுங்கிப் போகவேண்டும். அவர் உடம்பை சுருக்க மாட்டார். ஒருமுறை பிலிப்பினோ அவர் தோள்மூட்டில் மோதி பிளேட்டுகளைக் கொட்டிவிட்டான். அவர் திரும்பியும் பார்க்காமல் நடந்து கொண்டேயிருந்தார். அவர் ஒரு விரலை உயர்த்தி நட்டத்தை அவனுடைய சம்பளத்தில் பிடிக்கலாம்; அல்லது அவனை வீட்டுக்கு அனுப்பலாம். அத்தனை அதிகாரம் அவருக்கு உண்டு.
மூன்று மாதம் வேலை செய்த பின்னர்தான் ஒருநாள் அவளைக் கண்டான். 24ம் நம்பர் மேசையில் தனிய உட்கார்ந்திருந்தாள்.. பல்கலைக் கழக மாணவி போன்ற தோற்றம். ஃபாஷன் இதழ் ஒன்றில் வெட்டி எடுத்ததுபோன்ற முகம், குழந்தைப் பிள்ளைத்தனமாகவும் அதே சமயம் நாகரிகமாகவும் இருந்தது. சாண்ட்விட்ச்சை கையிலே தூக்கி முன்னுக்கும் பின்னுக்கும் ஆராய்ந்தாள். அவளுக்கு அவன் ’பஸ்போய்’ என்பது தெரியாது. அவனை ஒரு பரிசாரகன் என்றே நினைத்துவிட்டாள். அவனைக் கிட்ட அழைத்து ’இது என்ன?’ என்று கேட்டாள். அவன் ’சாண்ட்விச்’ என்று கூறினான். ’மரக்கறியா?’ என்றாள். ’இல்லை, இல்லை கோழி’ என்று சொன்னான். நடுங்கியபடி திறந்து பரிசோதித்தாள். ’செத்துவிட்டதா?’ என்றாள். ’நெடுநாட்களுக்கு முன்பே’ என்றான். அதை மேசையில் வைத்தாள். சதுரங்க ராசாவை ஒற்றை விரலினால் அடுத்த கட்டத்துக்கு தள்ளுவதுபோல மெள்ள எதிர்ப்பக்கத்துக்கு தள்ளினாள். உதடுகள் துடித்து அவள் அழுதுவிடுவாள் போல இருந்தது. அவசரமாக தப்பு செய்த பரிசாரகனை அழைத்துவந்தான். அவன் பதிலுக்கு மரக்கறி சாண்ட்விச் கொண்டு வந்து கொடுத்தான். அவளால் அதிர்ச்சியிலிருந்து மீளமுடியவில்லை. பிளேட்டுகளை அகற்றச் சென்றபோது ஏதோ அவன்தான் பிழைவிட்டதுபோல ’மன்னித்துக்கொள்ளுங்கள்’ என்றான். சற்றுமுன் துடித்த அதே உதடுகளை மெல்லத் திறந்து சிரித்தாள். கைப்பையையும் செல்போனையும் தூக்கிக்கொண்டு எழுந்து நின்றாள். கறுப்பு மஞ்சள் ஸ்கர்ட்டும், நீண்ட கைவைத்த ஊதாக்கலர் பிளவுஸும் அணிந்திருந்தாள். மடித்த பின்விரல்களால் உடையை சரிசெய்தாள். பின்னர் விமானப் பணிப்பெண்போல டக்டக்கென நடந்துபோனாள். நாலு அடி தூரம் சென்றதும் அவனை ஒருமுறை திரும்பி பார்த்தாள். அன்று காலையிலிருந்து சேமித்துவைத்த பெருமூச்சை அவன் விட்டான்.
பல நாட்களாக அவளை நினைத்துக்கொண்டே அவன் வேலை செய்தான். ஒரு நாள் பிலிப்பினோ வேலையை விட்டுவிட்டான். மனேஜர் 60 மேசைகளையும் அன்று மட்டும் அவனை தனியாக கவனிக்கச் சொன்னார். ’அது எப்படி முடியும்?’ என்றான். அவர் ’முடியும், இன்று கடவுளை ஆச்சரியப்படுத்து’ என்றார். மதியம் முடிவதற்குள் அவன் பிளேட்டுகளைத் தூக்கிக்கொண்டு பத்து மைல் தூரம் ஓடியிருப்பான். ஆட்கள் வருவதும் போவதுமாய் இருந்தார்கள். தோள்மூட்டில் இருந்து கைகள் கழன்றுவிட துடித்தன. அன்று பார்த்து இந்தப் பெண் மறுபடியும் வந்தாள். அவனால் அவளை கிட்ட நெருங்க முடியவில்லை. அவளுடைய மேசை பரிசாரகன் அவளுக்கு வேண்டிய உணவை பரிமாறினான். அவள் உணவை முடித்தால்தான் பிளேட்டுகளை அகற்றும் சாட்டில் அவளை அணுகமுடியும்.
எங்கே சுற்றினாலும் அவன் கண்கள் அந்த மேசையிலேயே நிலைத்திருந்தன. கண்களை எடுத்தால் அவள் மறைந்துவிடுவாளோ என்று பயந்தான். நாலு மேசை தள்ளி கட்டையான ஒரு நடுத்தர வயதுக்காரர் உட்கார்ந்திருந்தார். அவர் கால்கள் நிலத்தில் தொடாமல் தொங்கின. வாய்க்குள் இறைச்சி இருக்கும்போதே இன்னொரு துண்டை வெட்டி முள்ளுக்கரண்டியால் வாயினுள் திணித்தார். கரண்டி அரைவாசி உள்ளே போனது. பின்னர் எலும்பை உறிஞ்சி சதையை எடுத்துவிட்டு அதைத் தூக்கி கண்ணுக்கு நேரே வைத்து அந்த ஓட்டை வழியே அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். தூரக்கண்ணாடியால் கப்பலில் காப்டன் பார்ப்பதுபோல. பெண் நெளிந்தாள். இவனுக்கு கோபம் வந்தது. ‘வணக்கம் சேர். நீங்கள் சாப்பிட்டு முடித்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் பிளேட்டை எடுக்கலாமா?’ என்று மரியாதையாகக் கேட்டுவிட்டு அவர் பிளேட்டையும் எலும்புத்துண்டையும் கிளாஸ்களையும் அகற்றினான். அவர் கதிரையில் இருந்து குதித்து உணவுக்கு பணத்தைக் கட்டிவிட்டு புறப்பட்டார். இவன் பெண்ணிடம் சென்று ’மன்னிக்க வேண்டும். ஒவ்வொருமுறையும் நீங்கள் இங்கே வரும்போது ஏதாவது ஒன்று நடந்துவிடுகிறது. அது தற்செயலானது. இந்த உணவகம் மதிப்பானது. தயவுசெய்து மனதில் ஒன்றும் நினைக்கவேண்டாம். தொடர்ந்து வாருங்கள்’ என்று வேண்டிக்கொண்டான். அவள் அதே புன்சிரிப்பை தந்தாள்.
அவளை ஒரு மாதமாகக் காணவில்லை. இவனுக்கு ஏமாற்றமாகிவிட்டது. ஏனெனில் இவன் இப்போது பஸ்போய் அல்ல. தற்காலிக பரிசாரகன். இந்த பரீட்சையில் அவன் வெற்றி பெற்றால் நிரந்திரமாகப் பரிசாரகன் ஆவான். சீருடை கொடுப்பார்கள். நல்ல பரிசாரகனுக்கு ஒருநாளில் குறைந்தது 100 டொலர் காசு டிப்ஸாகவே கிடைக்கும். அத்துடன் விதம் விதமான வாடிக்கையாளர்களை தினம் சந்திக்கலாம். முதல்முறையாக அவனுக்கு தன் வேலைமேல் பெருமையாக இருந்தது. அளவில்லாத மகிழ்ச்சியில் மதிய வேளையில் எப்போது அவள் வருவாள் என்று காத்துக்கொண்டே இருந்தான்.
ஒருநாள் அவள் வந்து வழக்கமாக உட்காரும் மேசையிலே அமர்ந்தாள். இவன் பரிசாரகனுக்குரிய சீருடையில் அவளுக்கு முன் போய் நின்றபோது அவள் சிரித்தபடி ’ஓ, நீங்களா’ என்று கேட்டாள். உதட்டில் கீறிய ஒப்பனைக் கோடுகள் துல்லியமாகத் தெரிந்தன. அவனைக் கண்ட மகிழ்ச்சி அவள் கண்களில் துள்ளியது. அவன் மூச்சு நிதானத்துக்கு வர ஒரு நிமிடம் எடுத்தது. அவள் உடையில் இருந்து உலர் சலவை மணம் எழுந்தது. அந்த இடத்தை விட்டு நகர மனம் விரும்பவில்லை. அவள் சாப்பிட்டு முடித்ததும் சொக்கலட் ஐஸ்கிரீமை கொண்டுபோய் முன்னால் வைத்தான். அவள் தான் ஓடர் பண்ணவில்லையே என்றாள். இவன் சொன்னான். ’உங்களுக்கு தெரியாதா? இந்த மாதம் முழுக்க மதிய உணவுக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு ஐஸ்கிரீம் இலவசம்.’ அவள் நம்பிவிட்டாள். பில்லுக்கு பணம் செலுத்தியபோது இவன் ஐஸ்கிரீம் காசை தன் கணக்கில் கொடுத்தான். பில்லின் பின் பக்கத்திலே அவளுடைய பெயரையும் டெலிபோன் நம்பரையும் அவள் படிக்கும் பல்கலைக்கழகத்தின் பெயரையும் குறித்து வைத்துக்கொண்டான். தன் பெயரை அவள் ’ஜெஸிக்கா’ என்று இனிமையாக உச்சரித்ததை பல தடவை மனதுக்குள் சொல்லிச் சரிபார்த்தான்.
அடுத்த வாரம் அவன் முற்றிலும் எதிர்பாராதது நடந்தது. அவள் தன்னுடைய இரண்டு சிநேகிதிகளை அழைத்துக்கொண்டு மதிய உணவுக்கு வந்தாள். அன்று அவனுடைய ஓய்வு நாள். உணவுக்குப் பின்னர் ஐஸ்கிரீம் ஒடர் பண்ணி சாப்பிட்டார்கள். பில் கொண்டு வந்த பரிசாரகன் ஐஸ்கிரீமுக்கு அப்படி ஒரு சலுகையும் இல்லை என்றான். மனேஜர் ’அப்படியா சரி, ஏதோ தவறு நடந்துவிட்டது’ என்று சொல்லி பெருந்தன்மையாக ஐஸ்கிரீமுக்கு காசு அறவிடவில்லை. அவளுக்கு அவமானமாக இருந்தது. தன்னை ஒருவன் இத்தனை இலகுவாக ஏமாற்றிவிட்டனே என்று ஆத்திரப்பட்டாள்.
மனேஜர் ஐஸ்கிரீம் காசை அவன் சம்பளத்தில் பிடித்துக்கொண்டு அவனை வீட்டுக்கு அனுப்பினார். இத்தனை சீக்கிரம் பிடிபடுவோம் என்று அவன் நினைக்கவில்லை. டெலிபோனில் அவளை அழைத்தபோது அவள் கோபமாக இருந்தாள். ’எதற்காக அப்படிச் செய்தாய்?’ என்றாள். ’உனக்கு ஏதாவது செய்யவேண்டும் போல பட்டது. நீ ஏற்றுக் கொள்வாயோ என்ற பயமாயிருந்தது’ என்றான். ’என் சிநேகிதிகளுக்கு முன் என்னை அவமானப்படுத்திவிட்டாய்.’ ’மன்னிக்கவேண்டும். எனக்கு வேலை போய்விட்டது. இனிமேல் உங்களை சந்திக்க முடியாது’ என்றான். ’ஏன் சந்திக்க வேண்டும்?’ ’நான் உங்களைக் காதலிக்கிறேன்.’ அவள் டெலிபோனை கிளிக்கென்று மூடினாள்.
ஒருநாள் மறுபடியும் மனேஜரிடம் போனான். ‘அவள் என்னை நிராகரித்துவிட்டாள். ஒரு குற்றத்துக்கு இரண்டு தண்டனை அதிகம். என் வேலையை திருப்பி தாருங்கள்.’ மனேஜர் ‘உன் வேலையா?’ என்றுவிட்டு சிரித்தார். தையல்காரர் அங்கம் அங்கமாக அளவெடுப்பதுபோல அவனை உற்றுப் பார்த்தார். ‘இனிமேல் உனக்கு வாடிக்கையாளர்களுடன் பேசும் வாய்ப்புள்ள வேலை கிடையாது. சாலட் பாரில் வேலை செய். இங்கேயிருந்து ஒருவர் துரத்தப்பட்டால் அவரை மீண்டும் வேலைக்கு எடுப்பதில்லை. உன்னை மன்னித்திருக்கிறேன். இனிமேல் ஒரேயொரு தவறு செய்தாலும் உன்னை நிரந்திரமாக வெளியே அனுப்பிவிடுவேன்.’
ஆறுமாத காலம் சாலட் பாரில் வேலை செய்தான். ஒரு வாளியை நிறைத்து முட்டை வெள்ளைக்கரு அவன் முன் இருந்தது. கரண்டியில் அதை எடுத்து ஊற்றி ஓம்லெட் செய்தான். ரொமெய்ன் லெட்டூஸ் வெட்டி, பர்மேசன் வெண்ணெய்க்கட்டி தூவி சின்னத் தக்காளி சேர்த்து சாலட் செய்துவிட்டு பம்ப் பண்ணினான். பரிசாரகன் வந்து எடுத்துப் போனான். அவனுக்கு வேலை பிடித்தது. படிக்கவேண்டும், முன்னேற வேண்டும் என்று முதல்தடவையாக மூளையில் யோசனை உதித்தது. எச்சில் பிளேட்டை எடுப்பதும் ஒரு வேலையா என்று தோன்றியது. ஒரேயொரு துயரம் ஜெஸிக்கா அங்கே வந்தாலும் அவனால் அவளை பார்க்க முடியாது. பார்த்தாலும் பேச முடியாது. ஆனால் அவன் கைப்பட தயாரித்த உணவை அவள் சாப்பிடக்கூடும்.
அவள் நினைவு வராத நாளே அவனுக்கு கிடையாது. அதிவேகமாகக் கழற்றக்கூடிய கவர்ச்சியான உடையில் அவள் சின்னச் சின்ன அடிகள் வைத்து நடந்துவரும் காட்சி. இடது தோளில் இருந்து உடம்பை நெளித்து கைப்பையை இறக்கி வைப்பது. செல்போனை நிமிடத்துக்கு ஒருமுறை வெளியே எடுத்துப் பார்ப்பது. விளக்கை அணைப்பதற்கு ஊதுவதுபோல சூப்பை ஊதிக் குடிப்பது. கழுத்தை பின்னுக்கு வளைத்து டயற்கோக் அருந்துவது. எல்லாம் நினைவுக்கு வந்தது. ’அவளும் என்னை என்றாவது ஒருநாள் நினைப்பாளா?’ அந்த எண்ணத்தை அவன் துரத்தினான்.
சாலட் பாரில் திறமை அடைந்ததும் அவன் ஹெவிசைட்டில் சேர்ந்து வேலை செய்வான். இரவுப் பள்ளிக்கு போய் படிப்பான். ’உலகத்தில் புதிது என்று ஒன்றுமேயில்லை. அதை ஏற்கனவே ஒருத்தன் செய்திருப்பான்.’ ஒருவன் செய்வதை இன்னொருவன் செய்யலாம். மனேஜராகக்கூட ஆகலாம். சம்பளம் அதிகமாகும் . நிரந்திரமான வேலை. போனஸ்கூட உண்டு. அவன் எதிர்பார்த்த சந்தர்ப்பம் ஒருநாள் அவனை தேடி வந்தது. தயாரிப்பு அறை பொறுப்பாளர் இரண்டு வார லீவில் போய்விட்டார். ஹெவிசைட் செய்தவர் உடல்நிலை சரியில்லாததால் வரவில்லை. மனேஜர் அவனிடம் வந்தார். ’நீதான் இன்று ஹெவிசைட் பொறுப்பு. இன்றைய நாள் முக்கியமான நாள். இன்று வெற்றி பெற்றால் நீ இங்கே நிரந்தரமாகிவிடுவாய். சீருடையை மாட்டு. மேலதிகமாக 60 பேர் கொண்ட விருந்தும் இன்றைக்கு வருகிறதாக இப்பொழுதுதான் டெலிபோன் வந்தது. உன்னால் முடியும்’ என்றார்.
அவன் பட்டன்கள் வைத்த வெள்ளை சீருடையை மாட்டினான். நீண்ட தலைமுடியை மறைத்து தொப்பியை அணிந்தான். சமையல் மேலாடையை தரித்தான். அன்று திறன் உச்சத்தில் இருந்தான். முதல் வேலையாக விருந்தினர்க்கு 60 ஸ்ரிப் லொய்ன் ஸ்டேக் செய்யவேண்டும். எந்த திறமையான சமையல்காரருக்கும் முதல் ஸ்ரிப் லொய்ன் ஸ்டேக் சரிவருவதில்லை. அதி விலைகூடிய உணவு. ஸ்டேக் துண்டுகளை கிரில்லில் வேகவைத்தான். மாட்டின் நடுவயிற்றுக்கும் பின்பக்கத்துக்கும் இடையில் வெட்டிய இறைச்சி. தொய்ந்த தசைக்கூட்டம் என்பதால் மிருதுவாக இருக்கும். இலக்க வெப்பமானியை வெந்த இறைச்சியின் மேலே பிடித்தபோது சூடு 60 டிகிரி காட்டியது. நடுவிலே கொஞ்சம் சிவப்பாகவும் ஓரத்தில் தடிப்பாகவும் நல்ல பதமாக வந்தது மணத்தில் தெரிந்தது. 60 பேருக்கு வேகமாக செய்யவேண்டும். உதவிச் சமையல்காரர் காத்திருந்தார். செல்போன் அடித்தது. இலக்கமாக மாற்றப்பட்ட மணி ஓசை. அழைத்தது ஜெஸிக்கா. அவன் இருதயம் துள்ளி வேகம் பிடித்தது. ஒருமாதமாக உதாசீனம் செய்தவள் திடீரென்று அழைக்கிறாள். ’என்ன?’ என்றான். ’உடனே பார்க்கவேண்டும்’ என்றாள். ’உடனேயா?’ ’உடனே.’ அவன் வாழ்க்கையை தலைகீழாக மாற்றக்கூடிய அதிசந்தோஷமான தருணம் சிலநிமிட தூரத்தில் இருந்தது. இருதயம் ஆடையை கிழித்து வெளியே வந்து அடித்தது. சமையல் அங்கியை கழுத்துக்கு மேலால் இழுத்து தூர வீசினான். சீருடையை கழற்றினான். தொப்பியிலிருந்து தலையை விடுவித்தான். உதவியாளர் ராபின்ஸனிடம் தான் வெளியே போவதாகச் சொன்னான். அவன் பதறிக்கொண்டு ’நில், நில்’ என்று கத்தினான்.
பின்கதவால் புறப்பட்டபோது முன் கதவு வழியாக பார்ட்டியை சேர்ந்த 60 பேரும் வரத்தொடங்கினர். மனேஜர் அவனை கண்டு விட்டார். மழைக்குள் ஓடுவதுபோல குனிந்தபடி அவனை நோக்கி வேகமாக வந்தார். ’எங்கே போகிறாய்? எங்கே போகிறாய்?’ அவன் விரைவாக நடந்தான். மனேஜர் துரத்தினார். அவன் திரும்பியும் பார்க்கவில்லை. ’நீ வெளியே போனால் மீண்டும் உள்ளே வரமுடியாது. இதுதான் கடைசி.’ அவன் திரும்பிப் பார்த்து மெல்லிசாகச் சிரித்தான். ’விளையாடுகிறாயா? 60 பேர் விருந்துக்கு வந்துவிட்டார்கள். திரும்பி வா. திரும்பி வா. நான் என்ன செய்வேன்?’ கதவை திறந்து வெளியே போனவாறே அவன் கத்தினான் ‘கடவுளை ஆச்சரியப்படுத்து.’ கதவு தானாக மூடுவதற்கு முன்னர் அந்த வார்த்தைகள் உள்ளே நுழைந்தன.
– April 2015