ஓயாத நினைவலைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 27, 2023
பார்வையிட்டோர்: 1,556 
 
 

(2012ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என் உள்ளம் உள்ளூர அழுது கொண்டது. இத்தனை வருடங்களுக்குப் பிறகு டீச்சரை பார்க்கும் பாக்கியம் கிடைத்ததை எண்ணி அல்லாஹ்வுக்கு நன்றி சொன்னேன். இன்று லீவு போடுமாறு கணவருக்கும் சொல்லிவிட்டு உம்மாவையும் அழைத்துக்கொண்டு டீச்சரைப் பார்க்க புறப்பட்டோம். ஆனால் என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை எப்படியிருந்த டீச்சர்? இன்று இப்படி உருக்குலைந்து… 


நசீமா டீச்சர்! 

பாடசாலை வாழ்க்கை பற்றிய எண்ணங்களின் போதெல்லாம் இந்த நசீமா டீச்சரின் ஞாபகம் வரத் தவறியதேயில்லை. அவர் மீது அளப்பரிய அன்பு எனக்கு. சின்ன வயதில் நான் படு சுட்டியாக இருந்தேன் என்று அடிக்கடி என் உம்மா கூறி சிரிப்பதுண்டு. டீச்சரும் என் குறும்புத் தனங்களை கூறி ‘இவள் ரொம்ப திறமைசாலியா வரணும்’ என்று துஆ கேட்டது இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. உம்மாவின் உயிர்த் தோழியான ஆதிலா மாமியை விடவும் நசீமா டீச்சரை ரொம்பப் பிடிக்கும் எனக்கு. 

நான் முதலாம் ஆண்டுக்கு செல்லும் போதே அவர் அங்கிருந்தார். எங்கள் ‘பெரிய சேரின்’ மனைவி தான் அவர். சேருக்கும் என் மீது பிரியம் அதிகம். மொண்டசூரி போகும் போதும் உம்மா அந்த பாடசாலைக்கு என்னை கூட்டிச் சென்றிருப்பதால் பெரிய சேரை நானும் அறிந்திருந்தேன். அவர் எனக்கு சொக்கலேட் தராத நாட்களில் அவருடன் பேசாமல் வந்ததை நினைத்தால் இப்போதும் எனக்கு சிரிப்பு வருகிறது. அன்றும் அப்படித்தான். சேருடன் கதைத்துக் கொண்டிருந்த போது டீச்சர் வந்தார். 

‘டீச்சர் கொஞ்சம் வெளியில போங்க சேருடன் தனியா பேசணும்’ என்றேன். 

கோபம் வந்திருக்காது தானே? சிரித்து விட்டு பேசாமல் பைலை பார்த்துக் கொண்டிருந்தார் டீச்சர். எனக்கோ கோபம் தலையுச்சிக்கு ஏறியது. மேசைக்கு முன்னால் சுவாரசியமாக என் கதைகளை கேட்டுக் கொண்டிருந்த பெரிய சேரிடம், 

‘சேர் இவங்கள வெளிய போக சொல்லுங்க’ என முறையிட்டேன். 

சேரும் என்ன நினைத்தாரோ ‘நசீமா டீச்சர் கொஞ்சம் அங்கால போங்க’ என்று கதவு இருந்த பக்கத்தைக் காட்டினார். 

எனக்கோ மிகவும் சந்தோஷம். மழலை மொழியில் மிச்ச மீதியிருந்த கதைகளை சொல்லிவிட்டு உம்மா படித்துக் கொடுத்துக் கொண்டிருந்த ஏழாம் வகுப்புக்கு ஓடிவிட்டேன். டீச்சர் என்னை வாஞ்சையோடு அணைத்துக் கொள்வார். பல கதைகள் சொல்லித் தருவார். 

வீட்டில் செய்து கொண்டு வரும் சிற்றுண்டிகளையும் எனக்குத் தருவார். ஸ்டாப் ரூமில் அனைத்து ஆசிரியைகளும் சாப்பிடும்போது சிலநேரம் என்னையும் உம்மா கூப்பிட்டுக் கொள்வார். அப்போது நசீமா டீச்சர், தான் செய்து கொண்டு வந்த உணவுகளையும் தந்து என்னை சாப்பிடச் சொல்வார். 

கொஞ்சம் என் சுட்டித் தனங்கள் குறைந்தது தெரிந்த போது, உம்மா டீச்சரின் வீட்டுக்கு அழைத்துப் போயிருக்கிறார். அங்கு அவரது இரண்டு மகன்மார் இருந்தார்கள். நளீர் நானா மீதுதான் நான் அதிகமாக இரக்கம் வைத்திருந்தேன். அவர் என்னைவிட இரண்டு வயது மூத்தவர். பழகுவதற்கு இனிமையானவர். மற்றவர் காமில். அதிகம் பேசமாட்டார். கழுவும் மீனில் நழுவும் மீனைப் போல சிரித்தும் சிரிக்காமலும் சென்றுவிடுவார். 

உம்மாவுக்கு அப்போது என் தம்பி பிறந்திருக்கவில்லை. அதனால் ஆண் பிள்ளையின் கனவை டீச்சரின் மகன்மாரிடம் நனவாக்கிக் கொண்டிருந்தார். உம்மா. டீச்சருக்கு பெண் பிள்ளைகள் இல்லை. நான் தான் நானாமார் இருவருக்கும் தங்கை என கூறி மகிழ்வார். 

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் சித்தியடைந்தவுடனேயே நானும் வேறு பாடசாலைக்கு போய்விட்டேன். அதன் பிறகு டீச்சர் பென்ஷன் போயிருக்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஊருக்கு வரும் போது டீச்சரின் தரிசனம் பெறாமல் போவதில்லை. நானும் சிறுமி என்ற ஸ்தானத்தில் இருந்து ஒரு படி உயர்ந்திருந்ததால் எனக்கும் பெரிய சேருக்கும் இடையில் இடைவெளி அதிகமாகி இருந்தது. 

என் உம்மாவுக்கோ டீச்சருக்கோ நானும் நானாமாரும் முன்போல் பழகுவதில் சங்கடங்கள் இல்லாதிருக்கலாம். ஆனால் நாம் யௌவன வயதுடையவர்கள் என்பதால் எம்மிடையே வேரூன்றப்பட்ட சகோதர உறவு கூட ஒரு சிரிப்புடன் மாத்திரம் மட்டுப்பட்டுவிட்டது. 

காலச் சக்கரம் வேகமாக சுழன்றது. சாதாரண தரப் பரீட்சை முடிந்து ஊருக்கு வந்திருந்தபோது நளீர் நானா வேலை கிடைத்து கொழும்புக்கு போயிருப்பதாய் சொன்னார்கள். காமில் ஏ.எல் செய்து கொண்டிருந்தார். எனக்கு நல்ல வரன் அமைய வேண்டும் என்று தினமும் அல்லாஹ்விடம் வேண்டுவதாக டீச்சர் சொல்லும் போதெல்லாம் என் காதோரம் சிவத்துப் போகும். 


நானும் தற்போது திருமணம் செய்து தலைநகரம் வந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்டன. என் திருமணத்துக்கும் டீச்சர் வரவில்லை. ‘என்னை பார்க்க வராமல் என்ன செய்தாராம்’ என்று நான் அழுதேன். இதற்கிடையில் டீச்சரும் குடும்பம் சகிதம் மட்டக்குளியில் இருப்பது தெரிந்தது. நளீர் நானாவின் திருமணம் முடிந்துவிட்டது. 

ஒரு மணித்தியாலத்துக்கும் மேல் இடம் தேடியலைந்து வீட்டைக் கண்டு பிடித்தபோது பெரியதொரு சாதனையை செய்துவிட்டது போல இருந்தது. போதாத குறைக்கு மதிய உணவுக்கு அழைப்பு விடுத்திருந்தார் டீச்சர். அங்கு போய் டீச்சரைப் பார்த்த முதல் வினாடியே மனசைப் போட்டு பிசைவது போல வலித்தது. ஏன் வந்தோம் என்று எண்ணினேன். டீச்சர் முகம் வெளுத்து தலை நரைத்து, வேறு யாரோ போல் இருந்தார். 

கடந்த இரு வருடங்களுக்கு முதல் டீச்சருக்கு சுகவீனம் ஏற்பட்டதாம் அதனாலேயே என் திருமணத்துக்கு வரவில்லை என்றபோது என் முகத்தை வேறெங்காவது கொண்டுபோய் வைக்க முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் எனத் தோன்றியது. 

நாம் வரும் மகிழ்ச்சியில்தான் இன்று இந்த அளவுக்காவது எழுந்து நடமாடுவதாக சேர் சொன்னபோது ஆனந்தம் பரவினாலும் சமையல்காரியின் உதவியுடன் எமக்காக அனைத்தும் தயாரித்ததை அறிந்து துடித்துப் போனேன். செல்லமாக கோபித்தேன். உம்மாவும் வெகுவாக கலங்கித்தான் போனார். 

உம்மாவுக்கும் டீச்சருக்கும் தேநீர் கொடுப்பதற்காக டீச்சரின் அறைக்கு நுழைந்தபோது, தாம் இளம் ஆசிரியைகளாக இருந்தபோது பாடசாலையின் அபிவிருத்திக்காக பட்டபாட்டை இருவருமாக கதையளந்து கொண்டிருந்தனர். நானாமாரும் வெளியில் போயிருந்ததால் பெரிய சேர்தான் என் கணவருக்கு பிஸ்கட், தேனீர் முதலியவற்றை கொடுத்துக்கொண்டிருந்தார். 

நிறைய நேரம் உம்மாவையும் டீச்சரையும் பேசவிட்டு நாம் முன் அறையில் இருந்தோம். வீட்டுக்கு வர வேண்டிய நேரம் நெருங்கவே டீச்சருக்கு தெரிவித்துவிட்டு அவரின் நலனுக்காக ப்ரார்த்தித்தவாறு வெளியே வந்தோம். பெரிய சேரின் கண்கள் கலங்கியதை காணத் தவறவில்லையாயினும் காட்டிக்கொள்ளவில்லை. கேட்டை விட்டு வெளியே வந்ததும் பீறிட்டுப் பாய்ந்த கண்ணீரை கணவருக்குத் தெரியாமல் துடைத்துக்கொண்டேன்!!!

– வைகறை (சிறுகதைகள்), முதல் பதிப்பு: நவம்பர் 2012, இலங்கை முற்போக்கு காலை இலக்கிய மன்றம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *