அட நாராயணா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 27, 2014
பார்வையிட்டோர்: 21,983 
 

காலையில் நான் பேப்பர் படிக்க உட்காருவதும், “ஸார்!” என்று கூப்பிட்டுக் கொண்டு அடுத்த வீட்டு நாராயணசாமி ஐயர் வருவதும் சரியாக இருக்கும். ஆசாமி வந்து விட்டால் நான் பேப்பர் படித்தாப் போலத்தான்! அவர் கையில் அதைக் கொடுத்து விட்டுச் ‘சிவனே’ என்று உட்கார்ந்து விட வேண்டியதுதான்! இதுதான் தொலையட்டும். இன்னும் கேளுங்கள்.

 

சாயந்திரம் ஆபீஸிலிருந்து வருகிறோமா? சற்று விச்ராந்தியாக சம்சாரத்தோடு பேசிக் காலங் கழிக்கலாமென்று ஆவல் இருக்குமா, இராதா? நமக்கு இல்லாவிட்டாலும் சம்சாரத்துக்காவது இருக்கும் அல்லவா? என் அகமுடையாளைப் பேரைச் சொல்லி நான் கூப்பிட வேண்டியதுதான். “ஸார்” என்று இந்த நாராயணசாமி ஐயர் என் அறைக்குள் நுழைந்தது விடுவார். “சாயந்திரம் என்ன விசேஷம்?” என்பார்.

எனக்கு வயிற்றைப் பற்றிக் கொண்டு எரியும். “என்ன விசேஷம் வேண்டிக் கிடக்கிறது! நம்ம தலையில் தான் இன்னும் குண்டு விழவில்லை!” என்பேன்.

சற்று நெருங்கி உட்கார்ந்து கொண்டு, “என்னதான் நடக்கும் ஸார்?” என்று கேட்பார்.

“ஒரு கொலையாவது நடக்கும்” என்று சொல்லிவிட்டு அவர் மென்னியைப் பிடித்து அமுக்குவோமா என்று தோன்றும். நான் ஒன்றும் சொல்லாமல் இருக்கும் போதே, “என்ன நடந்தால் நாம் என்ன பண்ணப் போகிறோம்?… ‘இன்றைக்கிருப்பாரை நாளைக்கிருப்பரென்று எண்ணவோ’ என்று தாயுமான சுவாமிகள் தெரியாமலா பாடினார்?” என்பார்.

நான் அதற்கும் பதில் சொல்வதில்லை. சற்று நேரம் பேசாமல் இருந்தால் ஆசாமி ஒழிந்து விடுவார் என்று நினைத்து பல்லைக் கடித்துக் கொண்டிருப்பேன். அந்த விடாக்கண்டன் “ஏன் ஸார், நீங்க சர்க்கரை எங்கே வாங்குகிறேள்?” என்பார்.

“நான் சர்க்கரையே வாங்குவதில்லை” என்பேன் ஆத்திரத்துடன்.

“நம்மால் அப்படி இருக்க முடிகிறதில்லை. ஸார்! நம்ம பயல் இருக்கானே, கடைசிப் பயல், அவன் பாருங்கோ, காப்பியிலே துளி சர்க்கரை குறைந்தால்கூட துப்பி விடுகிறான் மூஞ்சியிலே!”

‘நன்றாய் உம்ம மூஞ்சியிலே துப்பலாமே!’ என்று நினைத்துத் கொள்வேன். அதைச் சொல்ல முடிகிறதா? ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு பேசாமல் இருப்பேன்.

ராஜி காப்பியை வைத்துக் கொண்டு கதவு மறைவில் நின்று ஜாடை செய்வாள். “அவரைப் போகச் சொல்லுங்கள்” என்று இரகசியமாக அதட்டுவாள். காப்பி ஆறுகிறதே!” என்று கையை ஆட்டுவாள் தலையில் அடித்துக் கொள்வாள். நான் என்ன செய்வேன்? நாராயணசாமி ஐயரும் லகுவில் போக மாட்டார். நானும் ஆறின காப்பியைத் தவிர சூடான காப்பியை சாப்பிட்டதில்லை.

அவர் போனவுடன் ஏதாவது படிக்கலாம் என்று புஸ்தகத்தை எடுத்துக் கொள்வேன். சொல்லி வைத்தாற்போல் அடுத்த வீட்டில் ஒரு ‘காண்டாமிருகம்’ கர்ஜிக்கும் அதைப் பார்த்துக் கிட்டத்தட்ட அதே மாதிரி ஒரு ‘பூனை’ கத்திப் பார்க்கும். காண்டாமிருகம் என்பது கோபாலசாமி பாகவதர். பூனை என்பது நாராயணசாமி ஐயருடைய பெண். பாகவதர் இந்தப் பெண்ணுக்குப் பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறார்… தினமும் ஒன்றரை மணிநேரம் வனப் பிரதேசங்களில் கேட்கும் சப்தங்கள் தான் கேட்கும். நமக்குப் புஸ்தகத்தில் கவனம் எப்படிச் செல்லும்?

சாப்பாடாகி, பிறகு விச்ராந்தியாய்ப் பேசிக்கொண்டிருக்கலாமென்றால், அதுவும் முடிகிறதில்லை. நாராயணசாமி ஐயரின் தாயார் வந்து விடுவாள். ராஜியுடன் அவர்கள் வீட்டுக் கதையை அளப்பாள். “மாட்டுப் பெண் மீனாட்சி எப்படித் தன் பிள்ளையைக் கையில் போட்டுக் கொண்டிருக்கிறாள். அவன் எப்படி அவள் சொல்கிறபடியெல்லாம் ஆடுகிறான்” என்று வர்ணிப்பாள். கடவுள் தன்னை இந்தப் பொல்லாத உலகத்தில் வைத்து, தன் கண்முன்னே தான் வளர்த்த பிள்ளை சொன்னபடி கேட்காமல் நேற்று வந்த ஒருத்தியிடம் இழுத்தபடியெல்லாம் இழுபடுவதை அழுகையுடன் விவரிப்பாள். “ஒரு புடலங்காய்ப் பால் கூட்டு வேண்டுமென்றேனடி, ராஜி! ஒரு மாசமாச்சடி! ஓரணா செலவாகுமாடி? நான் ஒரு கிழவி கேட்கிறேன் பண்ணிப் போட்டால் என்னடி?” என்பாள்.

ராஜி “அதுக்கென்ன, பாட்டி, நீங்க வருத்தப் படாதங்கோ. நான் பண்ணிப் போடறேன், நீங்க மட்டுமா சாப்பிடப் போறேள்,; எங்காத்துக்காரரண்டே சொல்லி…” என்பாள்.

நான் நகத்தைக் கடித்துக் கொள்வேன். மார்க்கெட்டில் புடலங்காய் இல்லாமல் போக வேண்டுமென்று மனதாரச் சபித்துக் கொள்வேன்.

“உனக்குப் பிள்ளைக் குழந்தையாகப் பிறக்க வேண்டுமடி, ராஜி!” என்பாள் பாட்டி.

“அது வேறயா?” என்று நான் முண முணப்பேன். பாட்டி வீட்டுக்குப் போவாள்.

ஞாயிற்றுக்கிழமை, அல்லது விடுமுறை தினங்களிலாவது தொந்தரையின்றி இருக்கலாம் என்று நான் மனதைத் தேற்றிக் கொள்வதுண்டு. ஆனால் வெகு சீக்கிரத்தில் அந்த ஆசையையும் கைவிட்டேன். ஞாயிற்றுக் கிழமைகளில் நாராயணசாமி அய்யருடைய அருமந்தப் புதல்வன் நம் வீட்டுக்கு விளையாட வருவான். என் மருமான் விச்சுவுடன் முதலில் விளையாட …ஆரம்பித்துக் கடைசியில் குஸ்தியில் நிறுத்திக் கொள்வான்.

அவருடைய பெண் கரண்டி முட்டையையும், ஆழாக்கையும் எடுத்துக்கொண்டு, “நெய் இருக்குமா, மாமி? எங்கம்மா வாங்கிண்டு வரச் சொன்னாள்,” “காப்பிக் கொட்டை இருந்தால் பாட்டி வாங்கிண்டு வரச்சொன்னாள்” என்று நாற்பது தடவையாவது சாரி வைக்கும். பெண் வந்துவிட்டுப் போன பிறகு பெண்ணுக்குத் தாயார் வருவாள்.

“வாருங்கோ மாமி அவர் உள்ளே தான் இருக்கார்” என்பாள் ராஜி.

“நிற்க நேரமில்லை! அடுப்பிலே பருப்பைப் போட்டுட்டு வந்தேன். குழைஞ்சு போயிடும்” என்று அவள் உட்கார்ந்து கொள்வாள்.

“என்ன மாமி, வர போதெல்லாம் அவசரப்படறேளே! உங்கள் பெண் பார்த்துக் கொள்ளமாட்டாளா? மாமியார்தான் கவனிச்சுக்கபடாதா?” என்பாள் பார்யை.

“அதைச் சொல்லு! ஆயிரம் தரம் சொல்லு! மாமியார் சுருக்கப் பார்த்துண்டுடுவார்…! அம்மா! அவர் ஒரு காரியமும் செய்ய வேண்டாம். என்னைத் தூற்றாமல் இருந்தால்போதும்” என்பாள்.

“உங்களை என்ன தூற்றுக் கிடக்கிறது?” என்று கேட்பாள் ராஜி. என் சம்சாரத்தை நான் குற்றமற்றவள் என்று சொல்லவில்லை. இவள் யார் வீட்டிற்கும் பேசப் போவதில்லை வாஸ்தவம். ஆனால் சகல வம்புகளையும் இங்கே வரவழைத்துப் பேசுகிறாள்.

அவள் சொல்லுவாள்: “என்னமோ போ! உசிரை எதுக்கு வச்சிண்டுருக்கோம்னு தோண்றது ஒரோரு சமயம். மாமியாரைத் தூற்றினேன்னு சொல்லாதே! ஆத்திலே ஆறு ஏழு பேர் இருக்கலாம். திடும்னு ‘ஒரு கூட்டைப் பண்ணு’ ‘கறியைப் பண்ணு’ன்னா முடிகிறதா சொல்லு நீதான்!”

“முடியாது, மாமி!” என்று ராஜி ஒத்துப் பாடுவாள்.

நான் என் மனைவியைக் கூப்பிடுவேன். அப்படிக் கூப்பிட்டாலாவது அவள் போவாளோவென்று, “போய் கேட்டுட்டு வா, ராஜி! நான் இருக்கேன்” என்பாள் அவள்.

இவ்வளவுதான் தொல்லைகள் என்று நினைத்துவிடவேண்டாம், நம் வீட்டில் ஒரு பட்சணம் செய்தால், அது நமக்குக் கிடைப்பது, அடுத்த வீட்டுக்குக் கொடுத்து மிஞ்சினால்தான். நம் வீட்டில் உடையாத இங்கிபாட்டில் கிடையாது. நாராயணசாமி அய்யர் ‘கொடுக்கு’கள் கவனித்துக் கொள்ளும். பென்சில்கள், ரப்பர்கள் எல்லாம் மாயமாய் மறையும். நம் வீட்டு விச்சுப் பயல் புஸ்தகத்தை எடுத்து வைத்துக்கொண்டால், நாராயணசாமி அய்யர் பிள்ளையாண்டான் போட்டியாக இரைச்சல் போட்டுப் படிப்பான்:இல்லாவிட்டால், இவனை ‘விஸில்’ அடித்து விளையாடக் கூப்பிடுவான்.

இப்பேர்ப்பட்ட நிர்ப்பந்தங்களுக்கிடையில், அந்த வீட்டில் இருப்பானேன் என்றால், இவ்வளவு செளகரியங்களுடன் எனக்கு வேறு வீடு கிடைக்கவில்லை வேறு பேட்டைக்கே போய் விடலாமென்றால் மருமானைப் பள்ளிக் கூடத்தில் சேர்த்திருந்தேன். நாராயணசாமி அய்யராவது போவாரோ என்றால், அதுவும் நடப்பதாயில்லை. தவிர என்னிடம் அவர், “நீர் எங்கேயாவது வேறு ஜாகைக்குப் போனால், பக்கத்தில் நமக்கும் ஒரு ஜாகை பாரும்” என்றார்.

“அழகுதான்!” என்று நினைத்துக் கொண்டேன். நான் பதில் சொல்லவில்லை.
ஓட்டல் கவிஞர்.

சாப்பிட வந்தவர் : என்னய்யா இருக்கு?

ஓட்டல் கவிஞர் : இட்லி பொங்கல் இரண்டொழிய வேறில்லை. சாற்றுங்கால் இருப்பதைத் தின்போர் மேலோர். இல்லாததைக் கேட்போர் இழிகுலத்தோர்.”

-விஜி ஜகன்

இந்த மாதிரியான சமயத்தில்தான் சென்னைப் பட்டணத்தில் அபாயச் சங்கு அலறியது. நான் அதை நாராயணசாமி ஐயருக்காக வரவேற்றேன் என்று ஒப்புக்கொள்கிறேன். அப்போது ஏற்பட்ட நெருக்கடியிலும் கலவரத்திலும் ஓட்டத்திலும் நான் நாராயணசாமி ஐயரைக் கவனிக்கவே இல்லை நாராயணசாமி ஐயரும் என்னைக் கவனிக்கவில்லை. சென்னை வீட்டை அவசரமாகக் காலி செய்தேன்.

வேலூரில் வீடு பார்த்தேன். மிகுந்த பிரயாசையின் பேரில் ஒரு வீட்டில் ஒரு ‘போர்ஷன்’ கிடைத்தது. புது வீட்டுக்காரர் ரொம்ப நல்ல மாதிரி. எங்களை அன்புடன் அவர் வரவேற்றார். “உங்களைப் பற்றி ‘நல்ல மாதிரி’ என்று பட்டணத்திலேயே கேள்விப்பட்டிருக்கிறேன், கிருஷ்ணசாமி சாஸ்திரிகள் விவரமாகச் சொல்லியிருக்கிறார். உங்கள் வீடு போல் இதை நினைத்துக் கொள்ளுங்கள். கவலையை விட்டுத் தள்ளுங்கள்!” என்றார் அவர்.

வாஸ்தவமாகவே நான் கவலையை விட்டேன். என் மனதில் குதூகலமே நிரம்பியிருந்தது. இந்த ஆனந்தத்துக்கு என்ன காரணம் என்று என் மனதைத் துழாவிப் பார்த்தேன். ‘நாராயணசாமி ஐயர் தொல்லைவிட்டது!” என்பதுதான் அது என்று அறிந்தேன். நல்ல வேளையாக அவரிடம் சொல்லாமலேயே வந்த விட்டேன். சொல்லியிருந்தால், தமக்கும் பக்கத்தில் ஒரு வீடு பார்க்கும்படி வற்புறுத்தியிருப்பார், சந்தேகமில்லை!

வேலூரைப் பற்றி விசாரித்தேன். திவ்யமான ஊர் வேலூர்க் கத்திரிக்காய் மாகாணப் பிரசித்தி பெற்றதாம். வேலூரில் அரிநெல்லிக்காய் மிக மலிவாம். முல்லைப் பூ இனாமாகக் கூடக் கிடைக்குமாம். “இப்போது, பட்டணத்துக் குடும்பங்கள்தான் இந்த ஊரில் அதிகமாகிவிட்டன. அவர்களால் தான் விலைவாசிகள் கூடச் சற்று உயர்வு” என்றார் வீட்டுக்காரர்.

“சரிதான்” என்றேன்.

“இந்தத் தெருவிலேயே சுமார் ஆறு குடும்பங்கள் பட்டணத்திலிருந்து வந்திருக்கின்றன.”

“அப்படியா?” என்றேன்.

“இந்த அடுத்த வீட்டில் கூட ஒருவர் இன்று காலையில் தான் வந்தார். உங்களுக்கு ஒரு வேளை அவரைத் தெரிந்திருக்கலாம்” என்றார்.

“எனக்குப் பட்டணத்தில் அதிக பேரைத் தெரியாது” என்றேன்.

பேசி முடித்திருப்பேன். தெரு வழியே நாராயணசாமி ஐயர் போனார்! சாட்சாத் நாராயணசாமி ஐயர்தான்! என்னைப் பார்த்ததும் அவர் பிரமித்து நின்று விட்டார்.

“இங்கே எங்கேங்காணும் வந்தீர்?” என்று கேட்டார்.

“இந்த ஊரில் இந்த வீட்டில்தான் ஜாகை! என்றேன்.

“ரொம்ப பேஷாப் போச்சு!” என்றார். “நானும் இந்தத் தெருவில்தான் இருக்கிறேன். பதிமூணாம் நம்பர்!” என்றார்.

எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என் வீடு பன்னிரண்டாம் நம்பர்!”

நான் பதில் சொல்லவில்லை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *