ஓடும் ரயிலின் ஓரத்து ஜன்னல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: August 8, 2014
பார்வையிட்டோர்: 11,196 
 
 

கண்ணன் சார் ! உங்களை எம்டி கூப்பிடறார் ! மாணிக்கம் சொல்லிட்டுப் போனான்.

கதவைத் தட்டிவிட்டுக் கண்ணன் ‘உள்ளே வரலாமா ‘ என்று கூறி எம்டி அறைக்குள் நுழைந்தான் .

‘கண்ணன்! நீ டெல்லி வரைக்கும் போகணும் பிராஜெக்ட் விஷயமா நேரா வரச் சொல்லிட்டாங்க ! உனக்குத் துணையாக முரளியை அனுப்பலாம் ,ஆனா அவன் லீவு போட்டுப் போய்ட்டான்.

சுகுணா இருக்காங்க !உன்னோடு வருவாங்க ! என்ன !’ என்றார்.

‘அப்புறம் இன்னொரு விஷயம் !’

‘என்ன’ என்றான் .

பிளைட் லே டிக்கெட் இல்லே. ரயிலில்தான் போகவேண்டும். வரும்போது பிளைட்டிலே வரலாம் .ராஜதானியில் போங்கள்’

பேசி முடிச்சிட்டார் .

கண்ணனுக்குப் புரியவே கொஞ்சம் நேரம் ஆயிற்று . அப்புறம் சுகுணா பற்றி !

முப்பத்திரண்டு வயது இருக்கும் .சற்று அழகானவள் .திருமணம் ஆச்சு சொல்றாங்க! ஆகலைன்னும் சொல்றாங்க ! ஒரு புரியாத புதிர் போல!

கண்ணனுக்குத் திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது .ஆனாலும் அவன் ஒரு மாதிரி ! கொஞ்சம் சபலம்!வாழ்க்கை நல்லபடியாப் போகுதா இல்லையா! அவன் மனைவிக்குத் தான் தெரியும் !

அன்று புதன் கிழமை .வெள்ளியன்று கிளம்ப வேண்டும்.

நேரா சுகுணா கேபினுக்குள் போனான் . ஒரே ஆபிஸ் ஆக இருந்தாலும் நிறையப் பேசியது இல்லை.

மேடம்! குட் மார்னிங்! எப்படி இருக்கீங்க! எம்டி பேசினாரா ?

‘ம் ‘ பேசினார் .போகலாம் என்றாள்.

‘நான் மந்தவெளியிலே இருக்கேன் .கார் என்னை பிக்கப் செய்து நேரா அண்ணாநகர் வந்துடறேன். மேடம்! அதிகாலை ரயில் ‘ என்றான்.

எதுக்கு இவன் நம் வீடு வரை என்று நினைத்தாளோ என்னவோ ‘அப்படீன்னா ! நீங்க நேரா சென்ட்ரலுக்கு வந்திடுங்க .நானும் ஸ்டேஷனுக்கு வந்திடரேன். அங்கே பார்க்கலாம்’ என்றாள்.

சென்ட்ரல் வாசலிலேயே கண்ணன் நின்று கொண்டிருந்தான்,

சுகுணாவும் வந்து விட்டாள்.

பெட்டியை ‘ரோல்’ செய்வதற்குள் பெட்டி சரிய இவன் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

மெதுவாக வண்டிக்கு நடந்தார்கள் .அப்பொழுதுதான் அவளை மெள்ளப் பார்த்தான்.

பருமனில்லை! சற்று உயரமாக இருந்ததால் நல்ல அழகாகவே இருந்தாள். சுடிதார் இல்லை! புடவை கட்டியிருந்தாள்.

சிகப்பு கழுத்தில் ஒரு கருகமணி மாலையும் ஒரு செயினும் போட்டிருந்தாள். இன்றைய நாகரீக ஆபிஸ் போகும் நல்ல வேலையில் இருக்கும் பெண்மணியின் தோற்றம்.

நிமிர்ந்த நடையில் ஒரு அழகு இருந்தது. உயரத்தின் அருமையினாலே இடுப்பில் மடிப்புகள் கூட இல்லை!

மொத்தத்தில் முழு அழகு இருந்தது.

கண்ணனும் கொஞ்சம் ஸ்டைல் பேர்வழி!, தம் ,தண்ணி எல்லாம் உண்டு, அடிக்கடி இல்லை, பேச்சில் திறமை உள்ளவன், பொதுவாகப் பெண்களிடம் பேசுவதில் திறமை ஜாஸ்தி.

‘என்ன இவள்! கருகமணி மாலையெல்லாம் போட்டுக் கல்யாணம் ஆனவளா! ஆபிஸ் நியூஸ் இல்லையே!

ஒவ்வொருவருக்கும் எவ்வளவோ கவலை இருக்கு இந்த உலகத்திலே. ஆனா இவனுக்கு அவள் கவலை!.

இரண்டாம் வகுப்பு ஏசி கோச் எதிர் எதிரிலேயே லோயர் பெர்த்.

ரயிலிலே ஏறி கொஞ்சம் சிரம பரிகாரம் செய்யலாம். ராஜதானி ஆனதால் சாப்பாடு, தண்ணீர் எல்லாம் வந்துவிடும்

மேடம்! உங்க டிக்கெட் எங்கிட்டதான் இருக்கு. நீங்க ‘வெஜ்’ தானே

நான் டிக்கெட் பார்க்கலை.

அவள் முறைத்தாள்.!.என்னைப் பார்த்தா உனக்கு எப்படி இருக்கு! என்பது போல இருந்தது.

இவனுக்கு வீட்டுக் கவலை கூட இல்லை இவளைப் பற்றித்தான் கவலை! ஒரு நாள் டயம் இருக்கு. பார்த்துக்கலாம்.

வண்டி கிளம்பியது.

அடுத்த சீட்டில் எதிரும் புதிருமாக இரண்டு பேர். ஆபிஸ் வேலையாகத்தான் போகிறார்கள்.

‘மேடம்! எல்லா அப்டேட்டும் பண்ணியாச்சு முக்கியமான விஷயம் இருந்தால் பாஸ் கான்பிரன்ஸ் காலில் பேசுவார். எல்லாம் சரியாகப் போகும் ஆகையினாலே நீங்க கொஞ்சம் நிம்மதியாக வாங்க’

அவள் கவனித்தாளா இல்லையா தெரியவில்லை. காலையில் சீக்கிரம் எழுந்ததால் ஏசியில் தூக்கம் வந்தது. ஜன்னலில் சாய்ந்து கொண்டாள்.

இவனுக்கு அப்பொழுது வீடு நினைவு வந்தது. மாமியார் இருப்பதால் கவலை இல்லை. பையனுக்கு காலை உணவு கொடுத்துப் பள்ளிக்கு அனுப்ப உதவியாக இருப்பார்கள். தேவையானால் போன் வரும்,

அவனும் அசரலானான். ஜன்னலோரம் சாய்ந்தான். உறங்கினான்.

‘என்ன! எப்படி இருக்கே!

திடீரென்று யார் பேசினது என்று புரியவில்லை!

நான் ஜன்னல் பேசுகிறேன்!

ஜன்னல் பேசுமா!

ஆமாம்! இங்குள்ள அதனை ஜன்னல்களும் தினம் வரும் ஒவ்வொருவரிடமும் உறங்கும் போது அவர்கள் கதைகளைத் தெரிந்து கொள்ளுவோம். எப்படியும் எங்கள் மீது சாய்ந்து உறங்குவீர்கள். உங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ளுவோம்.

என்ன! தெரிகிறதா ?

என்ன சொல்ல வரே’ இவன் கேட்டான்.

உன் வேலை தலைக்கு மேல இருக்கு.அதை விட்டுட்டு புதுசா ஒரு கதை ஆரம்பிக்காதே!’

‘சும்மா டயம் பாஸ் தான் ‘

‘உனக்கு டயம் பாஸ்க்கு அந்தப் பெண்தான் கிடைத்தாளா?’

இப்படித்தான் போன வாரம் உன் இடத்தில் ஒரு பையன் இருந்தான்.

எதிரில் உள்ள பெண்ணிடம் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சுக் கொடுத்து முக்கியமான வேலைத் தேர்வுக்காகப் போறவளை குழப்பி அவனோடு அவள் போகிற மாதிரிப் பண்ணிட்டான். பாவம் என்ன ஆச்சோ!’

கண்ணன் கேட்டான் ‘அப்படீன்னா இங்குள்ள அத்தனை ஜன்னலும் பேசுமா!’

‘எல்லா ஜன்னலும் பேசாது .ஆனால் அத்தனை பேர்களின் மனங்களையும் உண்மைக் குணங்களையும் தெரிந்து கொள்வோம் .சில சமயங்களில்தான் சொல்லுவோம். உதாரணத்திற்கு உனக்கு முன் வந்தவர்கள் கதைகளை உன்னோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்’

கண்ணனுக்கு ஆச்சர்யமாக இருந்தது !

இது என்ன புது ‘ சர்வே’ நடக்கிறது!

‘பொதுவாக எப்படி இருக்கிறார்கள் வருபவர்கள்?’ என்று கேட்டான் .

ஜன்னல் சொல்லியது.

‘மிக நல்லவர்கள் நிறைய வருகிறார்கள். ஆனாலும் நல்ல எண்ணங்கள் இல்லாதவர்கள் இன்னும் அதிகமாக வருகிறார்கள். நாங்கள் இரும்புதான். ஆனாலும் எங்களுக்குள்ள மென்மை கூட இல்லாதவர்களைப் பார்க்கும்போது வெட்கமாக இருக்கிறது! நல்ல இதயங்கள் கூட உங்களுக்கு இல்லை !’

கண்ணன் முழித்துக்கொண்டான் .

காலை சிற்றுண்டி வந்தது. சுகுணா தான் எழுப்பினாள்.

மெதுவாக உணவு சாப்பிடும்போது சுகுணாவைப் பார்த்தான். பேச்சு ஆரம்பிக்கலாம் என்றால் இந்த மாதிரி அந்த ஜன்னலும் அவளுக்குக் கதை சொல்லியிருந்தால்!

அதற்குள்ளே அவளே பேச ஆரம்பித்தாள்.

‘கண்ணன் எனக்கு காபி வேண்டாம். டீ சொல்லுங்கள்.

சரி! உங்களைப் பற்றி சொலுங்கள்!

கண்ணனுக்கு கொஞ்சம் தெம்பு வந்தது அவளிடம் அந்த ஜன்னல் பேசி இருக்காது என்று நினைத்தான்.

‘என்ன கண்ணன்’ என்றாள் மறுபடியும்.

‘ஓ! சாரி ! வீட்லே என் மனைவி ஸ்வர்ணா, மாமியார், பையன் ஸ்கூலுக்குப் போறான். ஸ்வர்ணா இப்போ வேலைக்குப் போகல்லை. பையனுக்காக வீட்டில் இருக்கிறாள்’

மேடம்! நீங்க’ என்று ஆரம்பித்தான்.

‘கண்ணன்! நானும் ஆரம்பத்திலேருந்து பார்துக்கொண்டிருக்கேன்! ஏன் மேடம்னு கூப்பிடரீங்க! சுகுணான்னு சொன்னாப் போதும்.’

கண்ணன் தலையை ஆட்டினான் .

ஏதோ மேடம்னு கூப்பிட்டா கொஞ்சம் இடைவெளி இருக்கு, சுகுணான்னு கூப்பிட்டா கொஞ்சம் பக்கத்திலே போயடுவோமோ என்று நினைத்துக்கொண்டான் ஆனா அதை சொல்ல முடியாது!

வண்டி போய்க்கொண்டிருந்தது.

அழகிய உடையில் பணியாளர்கள் உண்ணும் உணவுகளைக் கொண்டு வந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

‘விஜயவாடா எப்போ வரும்’ சுகுணா பக்கத்துக்கு சீட் காரரிடம் கேட்டாள்.

‘பன்னிரண்டு மணிக்கு வரும் மேடம்’ என்று அவர் சொன்னார்.

‘என்னமோ கேட்டிங்களே கண்ணன்!’

மேடம்! இல்லை சுகுணா! உங்களைப்பற்றி’ என்று இழுத்தான்.

அவள் கொஞ்சம் ஸ்க்ரீனைத் தள்ளி விட்டு வெளியே பார்த்தாள்.

பிறகு கண்ணனைக் கூர்ந்து பார்த்தாள் .

இப்பொழுதுதான் முதன் முறையாக அவள் அவனைப் பார்ப்பது போல அவனுக்குத் தோன்றியது .

அழகான நெற்றி. கூர்மையான ஆனால் மென்மையான பார்வை!

லேசாகக் குழியும் சிவந்த கன்னங்கள் .!

அழகான அவளை தனக்கு மனைவி இருந்தாலும் மறுபடியும் பார்க்கத் தோன்றும் அவன் எண்ணங்கள்!

‘ நான் நம்ம ஆபிஸ் வருமுன் பெங்களூரில் கணவனுடன் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். அவரை யுஎஸ் அனுப்பினார்கள். அவருக்காக நான் வேலையை விட்டு விட்டு போனேன்.

அங்கே சும்மாதான் இருந்தேன் சும்மா இருக்கப் பிடிக்காம இங்கு வந்து விட்டேன் .

பழைய கம்பனியில் வெய்ட் பண்ணசொன்னார்கள். அதற்குள் நம்ம கம்பெனியில் கிடைத்தவுடன் சென்னை வந்து விட்டேன். அண்ணாநகரில் அப்பா அம்மாவுடன் இருக்கிறேன்.’

‘சுகுணா! தப்பா நினைக்கலேன்னா ஒண்ணு கேட்கறேன் ‘

பரவாயில்லை. கேளுங்கள் என்றாள் .

‘எவ்வளவு நாளைக்குத்தான் நீங்க இங்கே அவர் அங்கே இருப்பிங்க ? உங்களுக்குள் வேறு ஏதாவது!’

அவள் அவனைக் கொஞ்சம் கூர்ந்து கவனித்தாள்.

பிறகு மெதுவாக ‘வேறு ஒன்றும் இல்லை. பழைய கம்பெனி மறுபடியும் ஆபர் பண்ணி அவர்களே அனுப்புவார்கள் என நினைக்கிறேன். அப்போ பார்க்கலாம் .’

இந்த பதில் உண்மையானதா அல்லது இவனுக்கான பதிலா என்று இவன் மனதிலே தோன்றியது. இவன் போன்றவர் மனதில் இப்படித்தான் தோன்றும்.

அதற்குள் விஜயவாடா வந்தது .சாப்பாடும் வந்தது

இரண்டு பேரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். சுகுணா ட்ராவல் பாக்கிலிருந்து ஊறுகாய் எடுத்து அவனுக்குப் பரிமாறினாள்.

‘சுகுணா! ரொம்ப ருசியாக இருக்கு. எங்கே வாங்கினீங்க ?’

‘நான் போட்டது! என்றாள்.

இவன் அடுத்த கேள்விக்குத் தயார் ஆனான்.

‘உங்க வீட்டுக்கரருக்குக் கொடுத்து வைக்கலே ! நல்ல சமைப்பீங்கன்னு நினைக்கிறேன்’

சுகுணா சிரித்தாள்.

கேரம் போர்டு காய்கள் போடுகிற மாதிரி ஒவ்வொரு கேள்விக்கும் அவளிடம் நெருங்கிக்கொண்டிருந்தான்.

ஜன்னலிடம் பேசியது இவனுக்கு எடுபட வில்லை .

சாப்பாடு முடிந்தது.

சுகுணா! நான் நல்ல பாட்டுக்கள் எல்லா வகையிலும் வாக்மென்னில் வைச்சுருக்கேன் .கேட்கறீங்களா?

அவளும் வாங்கிக்கொண்டாள். கேட்கும் கருவியும் அவனிடமிருந்தே வாங்கிக்கொண்டாள். தன்னுடையதைத் தேடவில்லை.

அதற்குள் பக்கத்திலுள்ளவர் மேல் பர்த்க்கு போய் விட்டார்.

கண்ணன் சுகுணாவுக்கு பெட்ஷீட் தலையணை போட்டு அவள் பாட்டுக் கேட்டுக்கொண்டே மேல்போர்வையுடன் படுத்துக் கொண்டாள்.

வண்டி வாரங்கலைத் தாண்டியது. மதியம் மணி இரண்டரை.

இவனுக்கு மனது அலைபாய ஆரம்பித்தது. ஜன்னலில் சாய பயம்!

அது எதாகிலும் புதுக்கதை சொல்ல ஆரம்பித்தால்!

படுத்துக்கொண்டே யோசிக்கலானான். இன்று சனிக்கிழமை ரயிலில் போய் விடும். நாளை முழுவதும் லீவு. ஹோட்டலில்தான் இருப்போம். பார்த்துக்கலாம்.

இவன் மாதிரி இருப்பவர்களுக்கு இது போன்ற எண்ணங்கள்தான் வரும். அது இயல்பு.

ரயில் போய்க்கொண்டிருந்தது. கண்ணன் தூங்கவே இல்லை.

சுகுணா எழுந்து உட்கார்ந்தாள். காபி வந்தது. மேல் பெர்த்தில் உள்ளவர்களும் இறங்கி வந்தார்கள்.

படுக்கையை மடித்து வைத்தவள் ரயில் ஆட்டத்தில் சுகுணா விழத் தெரிந்தாள். கண்ணன் மேல் விழவில்லை. தாங்கிக் கொண்டாள் .

காபி டீ அருந்தும் போது இந்தாங்க உங்க வாக்மன்! ரொம்ப நல்ல பாட்டுக்கள். உங்க டேஸ்ட் ரொம்பப் பிடிச்சிருக்கு!’ என்று கொடுத்தாள்.

கண்ணனுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணங்கள் வேறு மாதிரி ஆரம்பித்தன!.

பேச்சின் திறமையால் அவளுக்குத் தகுந்த மாதிரி பேசி அவன் பேச்சினை ரசிக்கச் செய்தான்.

ரொம்பவும் அன்னியோன்யமாகப் பேசினார்கள்.

அதற்குள் டின்னெர் வந்தது. நாக்பூர் வந்தது. இரவு தூங்கும் நேரமும் வந்தது.

இவனுக்கு நாளை முழுவதும் ஆவலுடன் அவளுடன் கழிக்கும் நேரங்களையே நினைதுக்கொண்டிருந்தான், அவன் குடும்ப நினைவே இல்லை.

குவாலியர் காலை காபி டீ வந்தது. பிறகு சிற்றுண்டி வந்தது.

காலை பத்தரை மணிக்கு நிஜாமுதீன் டெல்லி ஸ்டேஷனும் வந்தது.

பெட்டியெல்லாம் எடுத்து பிளாட்பாரத்தில் வைத்து,

‘சுகுணா! ஆபிஸ் கார் வரும். நேரா ஹொடெலுக்குப் போகணும்’ என்று சொல்லி திரும்பினான்.

ஆச்சர்யம் காத்துக் கொண்டிருந்தது!

சுகுணா அவளைப் போல் ஒரு பெண்ணோடு நின்று கொண்டிருந்தாள்.

‘கண்ணன்! இது என் சிஸ்டர் இன் லா பார்வதி! நான் இவர்களுடன் போய் விட்டு நாளை நேர ஆபிஸ் வந்து விடுவேன். வியாழக்கிழமை ராத்ரியே நம் பாஸ்க்கு எல்லா விவரமும் சொல்லிவிட்டேன். அவர் உங்க கிட்டே சொல்லி இருப்பார் என்று நினைத்தேன். தவிர இது பர்சனல் ஆனதாலே உங்களிடம் டிஸ்கஸ் பண்ணலே! ஹோட்டல் உங்களுக்குத்தான் புக் செய்யப்பட்டிருக்கும்.நாளை பார்க்கலாம். வருகிறேன்’ என்று சொல்லிவிட்டு பெட்டியை ரோல் செய்துகொண்டு போய் விட்டாள்.

கண்ணன் அந்த ஜன்னலையே பார்த்துக்கொண்டிருந்தான்.

அது இவனைப் பார்த்துச் சிரிப்பது போல இருந்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *