ஓடி ஓடி உழைக்கணும்…!

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 2,323 
 
 

அந்த வாட்ச் ரிப்பேர்காரர் மணி ஏட்டனை ஒரு முப்பது வருஷமாத் தெரியும். ஒண்ணா சபரி மலைக்குப் போனபோதிலிருந்து பழக்கம். இன்றும் பழக்கம் தொடர்கிறது.

சும்மா ஓடிட்டிருந்த வாட்சை சுத்தம் பண்ண எடுத்தான் சுகுமார். துடைத்து, பால் மாதிரி ஆயிட்டேச்சேன்ன பரவசத்தில் சுவரில் மாட்ட அதற்குப் பிறகு அது ஓடவில்லை!. அழுக்காயிருப்பதில் அதற்கென்ன அப்படியொரு அலாதி பிரியமோ தெரியவில்லை!. சுத்தம் செய்தது சுத்தமாய்ப் பிடிக்கவில்லை போலிருக்கிறது?!. சும்மா இருந்திருக்கலாம்!.

ஃபோன் செய்து, ‘மணிஏட்டா…!’ என்று அழைத்ததும், ‘ ஸாரே சுகந்தன்னே?!’ என்றார் மணிஏட்டன் கொஞ்சும் மலையாளத்தில்.

‘நான் சுகந்தான் மணி ஏட்டா…! ஆனா, வால்கிளாக்குத்தான் வாலுத்தனம் பண்ணுது!’ என்றான் சுகுமார்.

விவரம் கேட்டுக் கொண்டு, ‘மவுண்ட்டை மாத்தினாப் போதும்!’ என்றார். வாட்சை வாங்கிப் பார்க்காமலேயே! என்ன ரிப்பேர்னு சொல்லவே இல்லை..! ஆனால், மணி ஏட்டனின் அனுபவம் பேசியது. ‘கண்ணு அளக்காததையா கை அளந்துடப்போகு??துன்னா மாதிரி கண்ணாலேயே அளந்துட்டார் கடிகாரத்தின் சிக்கலை!.

‘மதியானம் வீட்டுக்குச் சாப்பிட வருவீங்களா?’ அவர், கடைக்கும் வீட்டுக்கும் ஒரு ரெண்டு கிலோமீட்டர் தூரம்தான். ‘வரும்போது வாங்கீட்டுப் போய் மவுண்ட் மாத்தீடுங்க!, பழகினவங்க…!! ஒரிஜினல் மவுண்டா போடுங்க…! மறுபடியும் ரிப்பேர் ஆயிடப்போறது! சீப்பானது போட வேண்டாம்!!.’என்றதும் அவர் சொன்னார்.

‘பழகினவங்கங்கறதுக்காக அல்ல.. யாரா இருந்தாலும் ஒரிஜினல்தான் போடுவேன். அதுனாலதான் ஐம்பது வருஷமா கடை ஓடுது! உழைச்சதுக்குக் கூலி கெடைச்சா போதும். நீங்க வர வேண்டாம். வெயில் கடுமையா இருக்கு! நானே வந்து வாங்கிக்கறேன். வந்து வாங்கறதுக்கெல்லாம் தனியா காசு வேண்டாம்! வாயும் வயிறும் நெறைஞ்சா போதும்! அதிகம் வேண்டாம்! தேடி போன் பண்ணிக் கூப்பிடறீங்க!’ என்றார் நெகிழ்ச்சியோடு!.

மற்றவர்கள் மாதிரி, வாட்சை மாற்றச் சொல்லவில்லை. புது வியாபாரத்துக்கு அடி போடவில்லை. நியாயமாய்ப் பேசினார்.

அவர் வியாபார நேர்மை மனதை நிறைத்தது. ‘சரி வாங்க!’ என்று போனை வைத்தார் சுகுமார்.

இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *