ஓடிய நதிக்கரையின் பூக்கள்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 7,794 
 
 

நான் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியனாக வேலை செய்து, ஒரு வருடத்துக்கு முன் ஓய்வுபெற்றவன். தாமதக் கல்யாணம் செய்து, ஒரு பெண்ணைப் பெற்றெடுத்து, மூன்று மாதங்களுக்கு முன்புதான் அவளுக்கும் கல்யாணம் செய்துவைத்தேன்.

பெயர் தர்ஷணா. இப்போது புருஷனோடு சந்தோஷமாக இருக்கிறாள். எனக்கென்று இனி ஒரு கடமையும் கவலையும் வாழ்க்கையில் கிடையாது. ஓய்வு பெற்ற பிறகும் ஓய்வில்லாமல் உழைப்பதால், மகள் வீட்டுக்குப் போய் ஒரு பத்து நாள் ஓய்வு எடுக்கலாம் என நானும் என் மனைவியும்பயணப்பட்டோம்.

மகள் வீடு மங்களகரமாக இருப்பதாகத் தோன்றியது. முதல் முறை வருகிற மாமனாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார் மருமகன். முதல் நாள் மாலையில் குடும்பத்தோடு கோயிலுக்குப் போனோம். ‘‘நான் சாமியை நம்புகிறேன். ஆனால், கும்பிட மாட்டேன்’’ என்று சித்தாந்தம் பேசும் மருமகன், இன்றைக்கு கோயிலுக்கு வந்ததில் இருந்து, அவரின் மாமனார் பக்தியை நான் புரிந்துகொண்டேன்.

கோயில் படிக்கட்டில் உட்கார்ந்திருந்தபோது, மருமகன் என்னிடம் கேட்டார்… ‘‘மாமா, ரிட்டயர்டுதான் ஆயிட்டீங்களே! இனிமே இங்கேயே வந்து ஓய்வா இருக்கலாமே?’’

‘‘ரிட்டயர்டு ஆயிட்டா சொல்லித் தர்றது நின்னுடுமா? இப்பவும் நான் நாலு பசங்களுக்கு டியூஷன் சொல்லித் தர்றேன்!’’ என்று என் தொழில் பக்தியை விளம்பினேன்.

‘‘இன்னமும் நீங்க டியூஷன் சொல்லிக் கொடுத்து காசு சம்பாதிச்சே ஆகணுங்களா, மாமா?’’

‘‘காசுக்காக இல்லீங்க… என்கிட்டே படிச்ச எத்தனையோ பசங்க பெரிய உத்தியோகத்துக்குப் போய், நல்ல நெலமையில இருக்காங்க. இன்னும் சில பசங்களும் முன்னேறட்டும்னுதான் டியூஷன் சொல்லித் தர்றது. என்கிட்ட படிச்ச எவனும் வீணாப் போனதில்ல. என் கைராசி அப்படி!’’

அப்போது, சாயம்போன காவி உடையும், கொஞ்சம் சிக்கலான தலையும், நெற்றியில் பெரிய விபூதிப் பட்டையும் கொண்ட ஒரு சாமியார் என்னை உற்றுப் பார்த்துவிட்டு, ‘‘சாமி, நீங்க கணபதி வாத்தியார்தானே?’’ என்றார்.

ஆமென்று தலையாட்டிய நான், சாமியாரை உற்றுப் பார்த்தேன்.

‘‘சாமி, என்னைத் தெரியலீங்களா? நான்தான் ஆடலரசன். உங்ககிட்ட படிச்ச பையன்’’ என்றார்.

நான் மாப்பிள்ளையைச் சற்று சங்கடத்தோடு திரும்பிப் பார்த்தேன். என்னிடம் படித்தவன் எல்லாம் கலெக்டர் என்று டமாரம் அடித்த என்னைப் பார்த்து மருமகன் கேலியாகச் சிரிப்பார் என்று நினைத்தேன். ஆனால், மருமகன் முகத்தில் சலனமே இல்லை. தர்மசங்கடமாக உணர்ந்த நான், ஆடலரசன் சாமியாரை எப்படித் துரத்துவது என்று யோசித்தேன். என் மனைவி கொஞ்சமும் விவரமில்லாமல் அவரைப் பக்கத்தில் உட்கார வைத்து தேங்காய் மூடியும், வாழைப் பழமும் கொடுத்து உபசரித்தாள்.

‘‘நீ ஏன் சாமியாரா போயிட்டே?’’ என்று என் மனைவி அவரைப் பரிவோடு கேட்டதும், எனக்கு எரிச்சலாக வந்தது.

‘‘நான் ஐயாகிட்ட அஞ்சாவது வரையில் படிச்சேன். ஐயாதான் பள்ளிக்கூடத்துல அடிக்கடி சொல்வாரு… இருக்கிற காலத்துல மனுஷன் புண்ணியத்தைத் தேடிக்கணும்னு. அதான் இடுப்புல காவி கட்டிக்கிட்டு காசி, ராமேஸ்வரம், திருவண்ணா மலைன்னு போய் கோயில் கோயிலா கையேந்தி புண்ணியம் சம்பாதிச்சிட்டு இருக்கேன்.’’ காவிப் பல் தெரியச் சிரித்தபடி சொன்ன அந்த ஆடலரசன் சாமியார், தேங்காய் மூடியைச் கரண்டியபடியே அழுக்குப் பையைச் சுமந்து நடக்க ஆரம்பித்தார். ‘சாமியாராகப் போ!’ என்று யாருக்குமே போதிக்காத நான், இப்போது வந்து சேர்ந்த அவப் பெயரைச் சுமந்தபடி வீடு திரும்பினேன்.

மகள் வீட்டில் இரண்டு நாளுக்கு மேல் என்னால் இருக்க முடியவில்லை. ஊருக்குப் போனால் தேவலாம் என்று தோன்றியது. குளிக்காமல் காபி குடித்தபடி அதிகாலையில் பேப்பருடன் இருந்த மருமகனிடம் ஊருக்குப் போக வேண்டும் என்றேன்.

‘‘ரெண்டு நாள்தானுங்களே ஆச்சு! இன்னும் பத்து நாள் இருந்துட்டுப் போங்களேன், மாமா!’’

‘‘இல்லீங்க… ஊர்ல டியூஷன் படிக்க வர்ற பிள்ளைங்க ஏமாந்து போயிடுவாங்க. படிப்பு வீணாப் போயிடும்!’’

‘‘இன்னும் படிப்பு படிப்புன்னு இருக்கீங்களே, மாமா! நீங்க சொல்லிக்கொடுத்து இன்னும் நாலு பிள்ளைங்க சாமியாராயிடப் போகுதுங்க!’’ பெருந்தன்மையாக முகத்தை வைத்துக்கொண்டு, சிரிக்காமல் மருமகன் இடக்காகப் பேசியது துன்பமாக இருந்தது.

‘‘சாமியார் ஆகிறது, ஆன்மிக ஞானம்கிறதெல்லாம் லேசுப்பட்டதுன்னு நீங்க நினைச்சீங்களா? அது பெரிய விஷயம். தேங்காய் மூடியைச் கரண்டிக்கிட்டே அன்னிக்குப் போனவன், ஒரு நாள் லட்சம் பேருக்கு வழிகாட்ற குருவா ஆனாலும் ஆவான்! இப்பவும் சொல்றேன், என்கிட்ட படிச்ச யாருமே சோடை போனதில்லே! என் கைராசி அப்படி!’’ எனக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைக்கும் விதமாக வெடுக்கென்று பேசிவிட்டுக் குளிப்பதற்காகப் போனேன்.

சிலுசிலுவென்று தலையில் கொட்டிய நீர் கொஞ்சம் தெம்பாக இருந்தது. நன்றாக நுரை ததும்பச் சோப்பு போட்டு உடம்-பைத் தேய்த்தேன். கண்ணில் சோப்பு விழுந்து எரிய ஆரம்பித்த பிறகு, குழாய் திருகினேன். என் கை ராசி, குழாயில் தண்ணீர் வரவில்லை.

தண்ணீர் தண்ணீர் என்று நான் கத்தியதும் பதறிக்கொண்டு வந்த மகள், ஒவ்வொரு குழாயாகத் திறந்து பார்த்தாள். உப்பு அடைத்துக்கொண்டு, எந்தக் குழாயிலும் தண்ணீர் வரவில்லை. டேங்க் நிறைய தண்ணீர் இருக்கிறதாம். மாமனாருக்கு நேரம் கெட்டுப்போனால், குளிக்கிற குழாயில் தண்ணீர் வராது. நான் வறண்ட துண்டினால், உடம்பின் சோப்பு நுரைகளைத் துடைத்துக்கொண்டு நின்றேன். என் மருமகன் குழாய் ரிப்பேர் செய்கிறவனுக்கு போன் போட்டுத் தகவல் சொல்லிவிட்டு, வேலைக்கு நேரமாகிறது என்று ஓடிப்போனார்.

ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கிய மூன்று பேர், நிறைய ஆசிட் பாட்டில்களைத் தூக்கிக்கொண்டு, குடுகுடுவென்று வீட்டுக்குள் ஓடி வந்தார்கள். மளமளவென்று குழாய் அத்தனையும் கழற்றி எறிந்தார்கள். ஆசிட்டை குழாய்களில்விட்டுக் கரகரவென்று அடைத்திருந்த உப்பைக் கரைத்தார்கள். பரபரவென்று பறந்து வேலை செய்பவர்களை வியப்போடு பார்த்தேன்.

சின்னதாக கறுப்புத் தாடியும் முட்டைக் கண்ணும் உள்ள ஒருத்தன், பாதி வேலையில் என்னையே உற்று உற்றுப் பார்ப்பது தெரிந்தது. பிறகு அவன் என் பக்கத்தில் வந்து, ‘‘ஐயா, நீங்க கணபதி ஐயாதானே?’’ என்று கேட்டான். இடுப்பில் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு நின்ற எனக்கு என்னவோ விபரீதம் நடக்கப்போகிறது என்று தோன்றியதால், அமைதி காத்தேன்.

‘‘ஐயா, நான் காஜா மொகை-தீன்! உங்ககிட்ட படிச்ச பையன்’’ என்றான் அந்த முட்டைக் கண்ணன். என் மகள் களுக்கென்று சிரிப்பதும், அவள் எதற்காகச் சிரிக்கிறாள் என்பதும் தெரிந்தது. நல்லவேளை! மருமகன் பக்கத்தில் இல்லை. இருந்திருந்தால், மொத்த மானமும் தெருவோடு போயிருக்கும்.

‘‘ஐயா, நல்லா இருக்கீங்களாய்யா? உங்களை என்னால மறக்கவே முடியாதுங்கய்யா! இப்ப நான் இந்த நிலைமைக்கு வர நீங்கதான்யா காரணம்!’’ தலைமுடி மொத்தமும் கலைந்து, உடம்பெல்லாம் உப்புப் படிவங்கள் பூத்திருக்க, ஈர பனியனும் விகார உருவமுமாக நின்றிருந்த காஜா மொகைதீன் இப்படிச் சொன்னதும், தூக்கிவாரிப் போட்டது எனக்கு.

அமில பாட்டிலை கையில் ஏந்தி, குழாய் ரிப்பேர் செய்து வயிறு வளர்க்க வேண்டிய அவனது பரிதாப நிலைமைக்கும் நான்தான் காரணமா?

ஒருத்தன் கலெக்டர் ஆவதும் கழிப்பறை சுத்தம் செய்யப்போவதும் அவனவன் புத்தி நுட்பம் சார்ந்தது. சமூக ஏற்றத்தாழ்வைச் சார்ந்தது. ஐந்தாவது வரை சொல்லிக்கொடுத்த ஆரம்பப் பள்ளி ஆசிரியனிடம் பெண் கொடுத்த இடத்தில் வந்து ‘நான் நாசமாகப் போனதற்கு நீதான் காரணம்’ என்று சொல்லி அவமானப்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? நான் ஆயிரக்கணக்கான பிள்ளைகளுக்கு ஆனா, ஆவன்னா சொல்லிக் கொடுத்திருக்கிறேன். இவன் இப்படி ஆவான்னா சொல்லிக் கொடுத்தேன்!

வருமானமில்லாத கோயில் முன் நிற்கிற சாமியார் போல துண்டைக் கட்டிக்கொண்டு மவுனமாக நின்ற என்னை அவன் கொஞ்சம் விநோதமாகப் பார்த்துவிட்டு, மற்ற ஆட்களோடு சேர்ந்து பரபரவென்று மீதி வேலையைச் செய்ய ஆரம்பித்தான். கடகடவென்று குழாய்களை இணைத் துச் சரிசெய்து, சுத்தமான தண்ணீர் வருகிறதா என்று பரிசோதித்து, பிறகு மன நிறைவோடு உடம்பு உப்பைத் துடைத்துக்கொண்டு வந்து நின்றான். என் மகள் அவர்களுக்குக் கூலிப் பணம் கொடுத்தாள். அதற்குள் மாலை ஆகிவிட்டது.

மருமகன் வருவதற்குள் இவன் போய்விட்டால், எனக்குப் பாதி மானமாவது மிஞ்சுமே என்ற அவஸ் தையில் இருந்தேன். என் வேதனை யைப் புரிந்துகொள்ளாத மகள், அவர்களை உட்காரவைத்துக் காபி போட்டுக் கொடுத்தாள். அந்த காஜா மொகைதீன் அழுக்குக் கையில் காபி வாங்கிக் குடித்தபடியே, தேவையில்லாமல் தன் சுய புராணத்தை என் மனைவியிடம் சொல்ல ஆரம்பித்தான்.

‘‘ஐயா மட்டும் இல்லேன்னா, நானெல்லாம் ஆள் அட்ரஸ் இல்லாமப் போயிருக்க வேண்டிய ஆளுங்கம்மா. என் வாழ்க்கையே பாழாய்ப் போயிருக்கும்..!’’

என் மனைவி ‘‘அப்படியா?’’ என்பது போல ஆச்சர்யமாக முகத்தை வைத் துக்கொண்டு, என்னைப் பார்த்தாள். சுடு காபியை உறிஞ்சியபடியே அவன் தொடர்ந்தான்… ‘‘நான் படிப்பு ஏறாத சென்மங்க! ஐயா சொல்லித் தரும்போது கால் விரிச்சுப் போட்டுக் கிட்டுத் தூங்குவேன். ஒரு முறை ஐயா, பசங்களோட சிலேட்டை வாங்கி, எழுதினதைத் திருத்திட்டு, 50, 60-ன்னு மார்க் எழுதிக் குடுத்தாரு. என்னோட சிலேட்டை வாங்கி நூத்துக்கு நூறுன்னு எழுதிக் குடுத்தாரு. பசங்க எல்லாம் ஓன்னு சிரிச்சாங்க. சிலேட்டைப் பார்த்த நான் துக்கம் தாங்காம அழுதுட்டேன். ஒண்ணுமே எழுதாத என்னோட சிலேட்டுல 100 மார்க்கு போட ஐயாவுக்குக் கருணை மனசு இருந்துச்சு. ஆனா, எனக்குப் படிப்பு ஏற, தலையில முடி இருந்த அளவுக்கு மூளை இல்லீங்களே..! என்னால அழுகைய நிறுத்த முடியலே. பையை எடுத்துக்கிட்டு வகுப்பறையை விட்டு ஓடப் பார்த்த என்னைத் தடுத்து நிறுத்தினாரு ஐயா. ‘எனக்குப் படிப்பெல்லாம் வராது. என் அப்பா சொன்ன மாதிரி நான் பீர் பாட்டில் பொறுக்கவே போறேன். என்னை விட்டுடுங்கய்யா’ன்னு கேவிக் கேவி அழுதேன். ஐயா, என் கண்ணைத் துடைச்சாரு.

‘ஆண்டவன், கைப்பிடி அளவு விதைகளை மண்ணுல தூவிவிடுறான். அந்த விதை, கனி மரமாகவும் ஆகும்; பூ மரமாகவும் ஆகும்; முள் மரமாகவும் ஆகும். கனியும், பூவும், முள்ளும் மனுஷங்களுக்குதான் வித்தியாசம். ஆண்டவனுக்கு எல்லாம் ஒண்ணுதான். அதனால்தான் ஆண்டவன் எல்லா மரத்துக்கும் பொதுவா பூமியில மழை பெய்ய வெச்சான். படிக்கிற, படிக்காத பசங்க எல்லாமே எனக்கு ஒண்ணுதான். நீ நல்லாப் படிப்பே. உட்கார்ந்து படி’ன்னு ஐயாதான் சொன்னாரு…’’ காஜா மொகைதீன் சொல்லும்போது அவன் கண்களில் தெரிந்த நன்றியின் பளபளப்பைக் கண்ட எனக்கு நெஞ்சில் சுறுக்கென்று ஒரு வலி கண்டது.

நியாயக்காரனும் வணிகனும் தராசுத் தட்டோடு இருக்கலாம். ஆனால், உபாத்தியாயன் கையில் தராசுத் தட்டு இருக்கக் கூடாது. படிக்கிற பிள்ளைகளை எடை போடுவதும், தரம் பிரித்து ரகம் அடுக்குவதும், உபாத்தியாயன் வேலை கிடையாது. மாணவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நின்று அறிவுக் கனி புசிக்கத் தருவதே உபாத்தியாயன் வேலை என்கிற புத்தி எனக்கு அன்றைக்கு இருந்ததைத்தான் இந்த காஜா மொகைதீன் சொல்கிறான். இப்போது எனக்கு அந்த புத்தி எங்கே போனது?

என்னிடம் படித்தவன் ஒருத்தன் கோடீஸ்வரனாகவும் இருக்கலாம்; அல்லது, கோயில் படிக்கட்டில் உட்கார்ந்தும் பிச்சை எடுக்கலாம். ஆயிரம் பேருக்கு வேலை தரும் முதலாளியாகவும் இருக்கலாம் அல்லது, கோமாளி வேடம் போட்டு கூத்தாடி உண்பவனாகவும் இருக்கலாம். காசு, பதவி, அதிகாரத்தை வைத்து என்னிடம் படித்த மாணவர்களைத் தரம் பிரிக்கிற புத்தி எனக்கு எப்படி வந்தது?

காஜா மொகைதீன் தன் ஆசிட் பாட்டில்களால் குழாய் உப்பை மட்டும் கரைக்கவில்லை. என் மனசில் இருந்த கசடுகளையும் கரைத்திருக் கிறான். சூழ்நிலையால் ஏழ்மையான மொகை-தீனை நான் கருணையோடு பார்த்தேன். அவன் என்ன கஷ்டப் படுகிறான், எத்தனை பிள்ளைகள், எங்கே இருக்கிறான் என்பதைக் கேட்க வெட்கமாக இருந்தது. காபி குடித்து முடித்ததும் அவன் போய் வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு வாசல் நோக்கி நடந்தான்.

நான் எது நடக்கக் கூடாது என்று நினைத்தேனோ, அது நடந்துவிட்டது. காஜா மொகைதீன் வெளியே போவதற்குள் மருமகன் வந்துவிட, இருவரும் வாசலில் நின்று பேசிக்கொண்டு இருந் தார்கள். ‘‘உன் மாமனார் புண்ணியத்தில் நான் ஆசிட் பாட்டிலோடு திரிகிறேன்’’ என்று காஜா மொகைதீன் மருமகனிடம் சொன்னான். எனக்குச் சங்கடமாக இருந்தது.

என்னதான் ஏழு பிள்ளை பெற்றவள் எல்லாக் குழந்தைகளையும் ஒன்று போல பாவித்தாலும், சப்பாணிக் குழந்தையை அடுத்தவர்களிடம் காட்டும்போது கொஞ்சம் சங்கடப்படத்தானே செய்வாள்?

அவர்களை வழியனுப்பிவிட்டு உள்ளே வந்த மாப்பிள்ளை, ‘‘மாமா, போனவரு உங்ககிட்ட படிச்சவராமில்ல?’’ என்று கேட்டார். மாப்பிள்ளையாவது கொஞ்சம் பெரும்போக்காக விஷயத்தை விட்டிருக்கலாம். அவரும் விடாமல் என் புண்ணில் விரல் விடுவதிலேயே கண்ணாக இருந்தார். நானும் கொஞ்சம் சங்கடத்தோடு, ‘‘ஆமாங்க’’ என்றேன்.

‘‘உங்க கை ராசியான கைன்னு ஒப்புக்கிறேன் மாமா! உங்ககிட்ட படிச்சவன் இப்போ பெரிய பிஸினஸ்மேனா இல்லீங்களா இருக்கான்?’’ மாப்பிள்ளை ஏற்றும் கடுப்புக்கு அளவில்லை.

‘‘எந்தத் தொழிலையும் நாம கேவலமா பார்க்கக் கூடாதுங்க. அஞ்சாவது படிச்சவன் வேற என்னதான் பிஸினஸ் பண்ண முடியும்?’’ – நான் என்னுடைய மாணவக் கண்மணி காஜா மொகைதீனுக்காகப் பரிந்து பேசினேன்.

‘‘யாரு மாமா அஞ்சாவது படிச்சது? காஜா மொகைதீனா? அவன் எம்.எஸ்ஸி., கெமிஸ்ட்ரி படிச்சவன். என்னோடதான் படிச்சான். மொகை தீன் கெமிக்கல்ஸ்ஸோட ஓனர் அவன். டாய்லெட் ஆசிட், பினாயில், ஃப்ளோர் கிளீனர், வாஷிங் சோடா, டிடர்ஜென்ட்னு அவன் கம்பெனி ப்ராடக்ட் ஏகப்பட்டது. தமிழ்நாடு முழுசுக்கும் சப்ளை ஆகுது!’’

மருமகன் சொல்ல, கேலியா நக்கலா என்று புரியாமல், கொஞ்சம் அதிர்ச்சியோடு கேட்டேன்… ‘‘பெரிய கம்பெனி ஓனர்னு என்கிட்ட அவன் சொல்லவே இல்லையே?’’

‘‘தொழிலாளியா வந்தா அவன் முதலாளித்தனத்தைப் பேசவே மாட்டான். தன்னோட புது ஃபார்முலா ஆசிட் எப்படி வேலை செய்யுதுன்னு ஃபீல்டுல பாக்கத் தான் அவன் வந்தது. எனக்கே அது சர்ப்ரைஸ்தான். ‘இருந்து சாப்பிட்டுப் போடா!’ன்னு சொன்னேன். ‘நீ ஒரு முதலாளிக்கு மட்டும் விருந்து வைப்பே..! அதைப் பார்த்தா என் தொழிலாளி மனசளவுல வருத்தப்படுவான். இன்னொரு நாள் வரேன்’னுட்டுப் போறான்..!’’

மருமகன் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே வாசலில் ஒரு புத்தம் புது கார் வந்து நிற்பதையும், சீருடை அணிந்த ஒரு டிரைவர் பணிவாகக் கதவைத் திறப்பதையும், அதற்குள் காஜா மொகைதீன் ஏறிக்கொண்டதும் கார் சீறிப் பாய்ந்து செல்வதையும் வியப்போடு பார்த்தேன் நான்.

தலை மீது சிலுசிலுவென்று தண்ணீர் விழுந்தது. காஜா மொகைதீன் என்ற ஒரு நுட்பமான வேலைக்காரனால் கசடுகள் நீக்கப்பட்ட குழாயில் இருந்து சலசலவென்று தண்ணீர் வழிந்தது. என் கண்ணில் சோப்பும், மனசுக்குள் விழுந்த மாசும் சுத்தமாகக் கரைந்து போக நான் அழுந்தத் தேய்த்துக் குளித்துக் கொண்டு இ-ருந்தேன்!

– 18th ஜூலை 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *