ஒலிம்பிக் தங்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: June 10, 2024
பார்வையிட்டோர்: 961 
 
 

டில்லி விமான நிலையத்திலிருந்து விமானம் கிளம்பிய போது புத்தகம் படிக்கப் பிடிக்காமல் பக்கத்திலிருந்த பெண்ணைப் பார்த்து “எக்ஸ்க்யூஸ் மி மேடம் எங்கே போகிறீர்கள்?” என்று கேட்டான் அருண்.

“ஏதேன்ஸ்-க்கு” என்றாள் புத்தகத்திலிருந்து தலையை திருப்பாமல்.

“நீங்கள் தமிழா?”

“ஆமாம்”

“பெயர்?”

“அஸ்வினி”

“ஓ! நீங்கள் டெல்லியில் பிறந்து வளர்ந்தவர்களா?”

“ம்…கூம்.. எனக்கு திருநெல்வேலி. எங்க அப்பா ஒரு முன்னாள் மிலிட்டா கமான்டர்.”

“எந்த காலேஜிலே படித்தீர்கள்?”

“ராணி மேரீஸிலே, ஹாஸ்டலிலே தங்கி இருந்தேன். நீங்கள் யார் சார்?”

“இந்தத் தடவை ஓலிம்பிக்ஸ் கேம்ஸ் நடக்கிற ஏதென்ஸிலே எங்கள் பிளேடு கம்பெனியிலேயிருந்து விளம்பரம் செய்வதற்காக போய்க் கொண்டிருக்கிறேன்.. ஆமாம் நீங்கள் கிரீஸ் நாட்டிற்கு எங்கே போகிறீர்கள்?”

“நீங்கள் விளம்பரம் செய்யப் போகிற அதே ஏதென்ஸ் ஒலிம்பிக் கேம்ஸிலே விளையாடுவதற்காக போகிறேன். நீச்சல் போட்டியிலே போன முறை ஆசியாவிலே முதலாவது வந்து தங்கம் வாங்கினேன்”.

“ஓ! அந்த அஸ்வினியா? எனக்கு ஒரே ஆச்சரியமாக இருக்குதுங்க. தமிழ் சினிமா ஹீரோக்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சிவகுமார்… தெரியுமா?”

“ஸாரி சார், நீங்கள் யாரைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லை. நான் சின்ன வயசிலே இரண்டு மூன்று தமிழ் படங்கள் பார்த்திருக்கிறேன். சிவாஜி சாரும், எம்.ஜி.ஆர் அவர்களையும் தான் தெரியும். என்னை ஏன் சார் வேறே கிரகத்திலிருந்து வந்த ஏதோ ஐந்து மாதிரி பார்க்கிறீர்கள்.”

“ஒரு வேளை பொய் சொல்கிறீர்களோ என்று தோன்றுகிறது”.

“உங்கள் பெயர் என்ன சொன்னீர்கள்?”

“அருண்”

“அருண் சார் உங்கள் பெயரைக் கூட தெரியாத, நான் ஏன் சார் பொய் சொல்ல வேண்டும்”.

“இல்லை…. எப்படி…எப்படி… இது…சரி.. உங்களுக்கு என்ன ஹாபி”

“நீச்சல்”

“என்ன சொல்கிறீர்கள்?”

“மிஸ்டர் அருண், எங்கள் அக்கா தேவிகா நீச்சல் தெரியாமல் தாமிரபரணி ஆற்றில் குளிக்கும் போது இறந்து போனாள். இது நடந்து பத்து வருடம் இருக்கும்.

என் அப்பா கிருஷ்ணநாதனுக்கு நம் நாட்டிலிருந்து ஒவ்வொரு முறையும் ஒலிம்பிக் விளையாட்டில் தங்கம் வாங்க முடியவில்லையே என்ற ஆதங்கம் உண்டு. நான் ஏழாம் வகுப்பு படிக்க ஆரம்பித்த போது என்னை நீச்சல் படிக்க வைத்தார். நீச்சல்… நீச்சல்… எப்போதும் பேச்சு மூச்சு அதுதான். அவர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற நேரமது.

வீட்டிற்கு பின்னாலே எனக்கென்று தனியாக நீச்சல் குளம் உருவாக்கி எனக்கு நீச்சல் கற்றுக் கொடுத்தார்.

இரண்டு முறை என்னை ஒலிம்பிக்ஸ் அனுப்புவதற்கு முயற்சி செய்து அரசியல்வாதிகளின் பிரச்சினையால் முடியாமல் போனது. இந்த முறை ஆசியன் கேம்ஸில் தங்கம் வாங்கியதால் எனக்கு ஒலிம்பிக்ஸ் போக மிக எளிதாக சந்தர்ப்பம் கிடைத்தது”.

“வீட்டிலே யாருமே சினிமா நிகழ்ச்சிகள் டி.வியிலே பார்ப்பது கிடையாதா?”

“எங்கள் வீட்டின் விதிமுறைகளே கொஞ்சம் வித்தியாசம் சார். அம்மாவிற்கு சமையல் கட்டும் பூஜையறையும் தவிர எதுவும் தெரியாது. மார்க்கட்டுக்குக் கூட அப்பா தான் போய் வருவார். அக்கா இறந்து போன பிறகு அப்படியே அம்மா ஓடுங்கிப் போனார்.

அப்பாவிற்கு எப்போதுமே ஒலிம்பிக்ஸ் கேம்பிலே எப்படியாவது இந்தியா தங்கம் வாங்க வேண்டும் என்பது தான் குறிக்கோள்.

என் உணவு, உடை, படிப்பு, டி.வியில் என்ன பார்க்க வேண்டும் என்பது கூட அவருடைய நிர்ணயம் தான்.

நீச்சலைப் பற்றி, கேம்ஸ் பற்றி, ஸ்போர்ட்ஸ் சம்பந்தமான அத்தனை புத்தகமும் வாங்கி வருவார்.

தினமும் சாப்பாடு, நீச்சல் பயிற்சி, உடற்பயிற்சி, யோகா, டி.வியில் ஸ்போர்ட்ஸ் சேனல் என்று என்னை ஒரு தயார் நிலைக்கு உருவாக்கினார்.

அம்மா சாப்பாட்டை வைத்து விட்டுப் போனாலும் அப்பாவே பரிமாறுவார். எத்தனை இடங்களில் நீச்சல் போட்டிகள் நடந்தன. அதில் யாரெல்லாம் வென்றார்கள் என்பதையெல்லாம் பற்றி எனக்கு விவரிப்பார்.

நீச்சல் குளத்தில் எப்படி மூழ்கி எழுந்தால் வேகமாக போகலாம். கைகால்களை எப்படி அசைக்க வேண்டும் என்பது பற்றி தினமும் விவாதிப்பார்.

முதல் முறை நான் இந்திய அளவில் நீச்சல் போட்டியில் இரண்டு தங்கம் வாங்கி வந்த போது என் அப்பா இரண்டு நாள் சாப்பிடவில்லை”.

“ஏன் அஸ்வினி”

“என்னை உருவாக்கி விட்டேன் என்ற சந்தோஷம் சார். அந்த முறை நான் ஆசியன் கேம்ஸில் பரிசு பெறவில்லை என ஒரு மாதம் என்னோடு பேசவேயில்லை. எனக்குள் அப்போது தான் ஒரு சபதம் எடுத்துக் கொண்டேன். அதனால் தான் அடுத்த முறை ஆசியன் கேம்ஸ் நீச்சல் போட்டிகளில் இரண்டு தங்கம் வாங்க முடிந்தது”.

“நான் கேட்பதை தப்பாக நினைத்துக் கொள்ளாதீர்கள் அஸ்வினி. உங்களுக்கு சினிமா பார்க்க வேண்டுமென்ற ஆசை கிடையாதா?”

“நீங்கள் சாப்பிடுங்கள். என்ன கேட்டீர்கள் அருண். நானும் பெண்தான். என் அப்பாவின் ஆசைதான் எனக்கும். நான் பிறந்த பாரத நாட்டுக்கு நான் ஏன் ஒரு தங்க மெடல் வாங்கித்தரக்கூடாது என்ற ஆசை. அது முடிந்த பிறகு தான் நீங்கள் சொன்ன எல்லாம்” என்றாள்.

“ஆமாம் ஒலிம்பிக்ஸ் கேம்ஸ் தொடங்குவதற்கு இன்னும் நாளிருக்கிறதே. இப்போதே கிளம்பி வீட்டீர்கள்”

“எங்க அப்பா அம்மா அங்கே ஒரு கோச்சிடம் ஏற்கனவே பேசி ஒரு கான்டிராக்ட் போட்டிருக்கிறார். நான் அவரிடம் டிரெயினிங் எடுத்துக் கொள்ள போகிறேன்.”

அவன் அஸ்வினியை இன்னும் கூர்ந்து பார்க்க, “அருண் சார் விளையாட்டு போட்டிகள் பார்க்க வருவீர்களா?” என்று கேட்ட போது “கண்டிப்பாக வருவேன் அஸ்வினி” என்றான் கண்ணில் கண்ணீர் மல்க.

“ஏன் சார் கண்ணீர் வருகிறது. நான் ஏதாவது தவறுதலாக சொல்லி விட்டேனா?”

“இல்லை அஸ்வினி உன் தந்தை மாதிரியும் உன் மாதிரியும் ஆட்கள் இருப்பதால் தான் இன்னும் பாரத நாடு மகிழ்ச்சியாக இருக்கிறது”.

“இதிலே என்ன சார் இருக்கிறது. இதிலே நான் தங்கம் வாங்க வேண்டும் என்ற சுயநலமும் இருக்கிறதே”.

“ஆனால். இந்த அளவிற்கு… ஸாரி அஸ்வினி உன் காலில் விழுந்து ணங்க வேண்டும் போலிருக்கிறது” என்றான் அஸ்வினி கைகளைப் பிடித்துக் கொண்டு.

பணிப்பெண். விமானம் இறங்கப் போவதை அறிவிக்க “கண்டிப்பாக இந்த முறை உனக்குத் தங்கம் கிடைக்கும் அஸ்வினி பெஸ்ட் ஆப் லக்” என்றவன் பாரத தாய் தங்கம் வாங்கித்தர இன்னொரு பெண்மணி உருவாகியிருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டான் அருண்.

– 24 ஜூலை 2004, தமிழ் போஸ்ட்.

பெயர்: பிலிப் ஜார்ஜ் சந்திரன்.M.A., M.H.M., புனைப்பெயர்: இரஜகை நிலவன் ஊர்: இரஜகிறிஸ்ணாபுரம் (திருநெல்வேலி) எழுதும் பெயர்: இரஜகிறிஸ்ணாபுரம் ”இரஜகை”யாக சுருங்கி உதயம் சந்திரன் "நிலவனா'க மாறிட புனைப்பெயர் உதயமானது விருதுகள்: சிறுகதைச்செல்வர், சிறுகதைச்செம்மல், கவித்திலகம், கவிமாமணி, கவிக்கதிர், கவிச்சிகரம்,சேவை சிற்பி,தமிழ் முகில். பணி: தனியார் அலுவலில் இயக்குனராக. வாழுமிடம்: டோம்பிவிலி (மும்பை) துணைவி: மேரி ராஜேஸ்வரி அடுத்த தலைமுறைகள்: பிலிப் வினிங்ஸ்டன், பிலிப் விஜய்ங்ஸ்டன். பிடித்தவை: தேடல்கள்…, வாசிப்புகள்…,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *