ஒரே ஒரு அழைப்பு.!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 2, 2017
பார்வையிட்டோர்: 8,400 
 

இரு வாரங்களாக ஊரில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் விடியற்காலையில் குளிர் நடுக்கியது.

குளிரில் நடுங்கியபடியே தினசரி தான் மேற்கொள்ளும் பத்திரிக்கை விநியோகப் பணிக்காக முரளி தன் இருசக்கர வாகனத்தில் தன் ஊருக்கு அருகில் உள்ள டவுனுக்கு புறப்பட்டான்.

முரளி, வெளியுலம் பற்றி தெரிந்த ஒரு விவரமான கூலித்தொழிலாளி. தன் வேலையின் ஒரு பகுதியாக தினசரி காலையில் இருபதுபேருக்கு தமிழ் நாளிதழ்களை விநியோகம் செய்வது அவனது வழக்கமான பணியாகும்.

டவுனுக்கு சென்று பத்திரிக்கை ஏஜென்டிடம் கேட்டபோது தான் முரளிக்கு தெரிந்தது, முன்தினம் தான் போடும் தினசரி பத்திரிக்கை அலுவலகத்திற்கு ஆயுதபூசை விடுமுறை என்பதால் பத்திரிக்கை வரவில்லை என்று..

பத்திரிக்கை அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு “சார், இன்று பேப்பர் வரலையா?” என்று அவன் கேட்க “நேற்றைய பத்திரிக்கையை நீங்க படிக்கலையா?” என்ற எதிர்முனை பதிலால் தவறு தன்னுடையது தான் என்று அவன் தனது கவனக்குறைவை உணர்ந்து கொண்டான்.

சரி என்று வழக்கம் போல் “அண்ணா அந்த பேப்பர் கொடுங்கள்!” என்று தான் போடும் பத்திரிக்கையுடன் அவன் கூடுதலாக வாங்கி வாசிக்கும் அந்த வழக்கமான தமிழ் தினசரியை வாங்கிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

பத்திரிக்கை வரும் என்று தன் வரவை எதிர் நோக்கி காத்திருக்கும் இருபதுபேருக்கு அவனது கைப்பேசி மூலம் இன்று பத்திரிக்கை வரவில்லை என்ற குறுஞ்செய்தி தகவலை அனுப்பி விட்டு..

குளிருக்காக போர்வையை போர்த்திக்கொண்டு காலை ஏழு மணிக்கே கட்டிலில் அமர்ந்தபடி அன்றைய செய்திகளை கேட்க தொலைக்காட்சியின் சுவிட்சைப் போட்டான்.

திடீரென மின்தடை ஏற்பட்டதால் தொலைக்காட்சி நிகழ்ச்சி நின்று செய்திகள் தடைபட்டது.

எனவே, அவன் முந்தையநாள் தன் ஊருக்கு அருகில் உள்ள ஒரு மலைப்பிரதேசத்திற்கு வேலைக்குச் சென்றபோது தன் கைப்பேசியில் எடுத்த அந்த பசுமையான படங்களை பார்க்கத் துவங்கினான்.

கைப்பேசி வாங்கி நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டதாலும் பலமுறை கீழே விழுந்ததன் அடையாளமாகவும் அதன் முகப்பு கண்ணாடி உடைந்து இருப்பதால் படங்களை உற்று நோக்க வேண்டிய தண்டனையை வேறு வழியின்றி தினமும் அவன் அனுபவித்து வருகிறான். இன்றும் அதிலிருந்து விடுபடமுடியவில்லை.

மலைப்பிரதேச வேலைக்கு சென்ற போது முந்தைய நாள் முழுவதும் அவன் கைப் பேசிக்கு தொடர்பலை கிடைக்கவில்லை. “இங்கு BSNL டவர் எடுக்காதுங்க.!” என்று மலைவாசி மக்கள் கூறியது மீண்டும் மீண்டும் அவன் நினைவுக்கு வந்து சென்றது.

மலைப்பிரதேச வேலைக்கு முரளி சென்ற சமயத்தில் கைப்பேசி தொடர்பு கிடைக்காமல் அவனது நண்பரான ஒரு கட்டுமானத் தொழிலாளி தன் மகன் கட்டிடத்தில் மின்சாரம் தாக்கி இறந்த தகவலை அவனிடம் சொல்ல முடியாமல் தவித்ததை முரளியின் நண்பர் பழனி அவனிடம் தெரிவித்தார்.

தான் வேலைக்கு சென்ற அதே மலைப்பிரதேத்தில் BSNL செல்போன் கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று ஒரு தொழிலாளர் கட்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தான் போடும் தினசரியில் வந்த “செய்தி” எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அப்போது தான் முரளி உணர்ந்தான்.

முரளி கைப்பேசியில் படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது சிறு தடங்கல் ஏற்பட்டு அவன் கைப்பேசி மணி ஒலித்தது. எடுத்து “ஹலோ” என்றான்..

எதிர் முனையில் பேசிய விவேக் “அண்ணா இன்று சாயங்காலம் நாலரை மணிக்கு பூசை வெச்சிருக்கேன், அவசியம் வந்திருங்க.!” என்றார். “அவசியம் வருகிறேன் விவேக்!” என்று மீண்டும் படங்கள் பார்க்கும் பணிக்கு திரும்பினான் முரளி.

அப்போது தான் அவனுக்கு தெரிந்தது அன்று ஆயுதபூசை என்று.! ஒவ்வொரு ஆயுதபூசை அன்றும் குறைந்தது பத்து அழைப்புகளாவது வரும். ஆனால் இந்தாண்டு இந்த
“ஒரே ஒரு அழைப்பு” தான் அவனுக்கு வந்தது.

விவேக் ஒரு சாதாரண விவசாய தொழிலாளியின் மகன். முரளியின் பக்கத்து ஊர் தான்.

விவேக் கிராமத்து இளைஞன் என்றாலும் கணிப்பொறி இயக்கத்தில் அதில் கலைப்படைப்புகளை உருவாக்குவதில் அந்த சிறு நகரில் அவரை வெற்றி கொள்ள யாருமில்லை என்றே கூறலாம். அவ்வளவு திறமையான ஒரு 27 வயது மதிக்கத் தகுந்த சுறுசுறுப்பான இளைஞன்.

விவேக் ஏற்கனவே பணிபுரிந்த ஒரு டிஜிட்டல் பிளக்ஸ் பிரிண்டிங் கடையில் முரளிக்கு பழக்கம் ஆனார்.

டவுனுக்கு சென்றால் சிறிது நேரம் அங்கு அமர்ந்து விவேக்குடன் முரளி அரட்டை அடிப்பான்.

விவேக் சில போராட்ட அறிவிப்பு பேனர்களை உணர்வுப்பூர்வமாக நேர்த்தியாக வடிவமைப்பார்.

“அண்ணா! இந்த பேனர் விளம்பரத்திற்கானது அல்ல, மக்கள் நலனுக்கானது!” என்று முரளியிடம் அப்போது விவேக் கூறுவார்.

விவேக்கின் மக்கள் நலன்சார்ந்த சமுதாய சிந்தனையுடன் கூடிய இந்த குணம் முரளிக்கு மிகவும் பிடிக்கும்.

கடந்த ஒரு ஆண்டிற்கு முன்பு விவேக் தன் மாமா ஒருவரின் உதவியுடன் வங்கி கடன் பெற்று தனியாக பிளக்ஸ் பிரிண்டிங் வைத்து நடத்தி வருகிறார். உடன் அவர் இளம் வயது துணைவியாரும் கூடமாட பக்கபலமாக உள்ளதால் நாணயமாக ஒரு தொழிலை செய்து வருகிறார்.

மாலை நாலரை மணிக்கு முரளி வீட்டில் இருந்து புறப்பட்டு டவுனை நோக்கி சென்ற போது எதிரில் அவனது சக நண்பர் பழனி வந்தார். “எங்க முரளி கிளம்பியாச்சு.!” என்றவரிடம் “விவேக் ஆயுதபூசைக்கு அழைத்தார் அதான் கிளம்பிட்டேன்!” என்றான்.

“அட ஆமா என்னையும் தான் கூப்பிட்டார், சரி நீங்க ஒரு ஓரமா நில்லுங்க நான் வந்துடறேன், ரெண்டுபேரும் போலாம்” என்று தன் இரு சக்கர வாகனத்திற்கு எரிபொருள் போட சென்றார் பழனி.

பெட்ரோல் பங்கிலிருந்து வந்த பழனி அழைக்க, பழனியின் இருசக்கர வாகனத்தை பாதுகாப்பாக ஒரு இடத்தில் நிறுத்தி விட்டு இருவரும் முரளியின் இருசக்கர வாகனத்தில் விவேக் கடைக்கு சென்றனர்.

எளிமையாக ஆனால் உணர்வுப் பூர்வமாக வாழைக் குறுத்து, மாவிழை, பூக்களால் விவேக்கின் கடை அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

“அண்ணா வாங்க உட்காருங்க” என விவேக்கின் மனைவியும் உறவினர்களும் அன்புடன் அழைக்க இருவரும் சிறிது நேரம் அமர்ந்து விட்டு, பூசைக்கு சற்று நேரமாகும் என்றுணர்ந்து எழுந்து அருகில் உள்ள கடையில் தேனீர் சாப்பிட புறப்பட்டனர்.

“ஆச்சுங்க இருங்கண்ணா” என்று மீண்டும் அவர்கள் கூற “இல்லம்மா போகல டீ சாப்பிட்டு வர்ரோம்” என்றார் பழனி. அவர்கள் சம்மதிக்க தேனீர் சாப்பிட இருவரும் கடைக்கு போனார்கள்.

சிறிது நேரத்தில் இருவரும் மீண்டும் பூசைக்கு திரும்பி வந்தனர். பூசையை மதுரை வீரன் கோவில் பூசாரியும், விவேக்கின் மாமனாருமான கருத்த திடகாத்திர உழைப்பின் அடையாளச் சின்னங்களை உடலில் தாங்கிய நடுத்தர வயதுக்காரர் செய்தார்.

“தன் மகளும் மருமகனும் இணைந்து செய்யும் தொழில் சிறப்பாக நடைபெற அருள் புரிவாய் இறைவா!” என்று வேண்டுவது போல் பூசையை அவர் நேர்த்தியாக செய்து முடித்தார்.

பிரிண்டிங் மெசின், கம்யூட்டர், கணக்கு நோட்டு, கால்கு லேட்டர், காலண்டர் படத்திலுள்ள சாமி என சகலத்திற்கும் அவர் குறைபாடின்றி தீவார்த்தனைகள் காட்டினார்.

“ஏதாவது தவறு இருந்தால் மன்னிச்சுக்கோ சாமி” என்று சொல்வது போல் விவேக்கின் துணைவியார் மூன்று தோப்புக்கரணம் போட்டு பூசைக்கு வந்தவர்களின் கவனத்தை ஈர்த்தார்.

பூசை முடிந்து செய்யும் தொழிலே தெய்வம் என வணங்கிய அந்த விவசாய தொழிலாளர் குடும்பம் அன்புடன் கொடுத்த சர்க்கரை பொங்கல், சுண்டலுடன்கூடிய பொறியையும் வாங்கிக் கொண்டு இருவரும் புறப்பட்டு அந்த நகரை இருசக்கர வாகனத்தில் ஒரு வலம் வந்தனர்.

ஆயுதபூசை என்றால் வாழை, தோரணம், பூக்கள், பழம், தேங்காய், நீர்ப்பூசணி குவியல், பொறி மூட்டை, சினிமாப்பாட்டின் செவிப்பறையை கிழிக்கும் ஒலி, ஜொளிக்கும் சீரியல் விளக்குகள் என பரபரப்பாக களைகட்டும் நகரக்கடைவீதி கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை போல் இந்தாண்டு இல்லை.

“பொன்னை வைக்கிற இடத்தில் ஒரு பூவையாவது வைப்போம்” என்பதை போல் தான் பாரம்பரியத்தை கைவிடாமல் எளிமையான ஆயுதபூசைகள் ஆங்காங்கே நடந்ததை இருவராலும் பார்க்க முடிந்தது.

இப்போது தான் தெரிந்தது முரளிக்கு, இந்தாண்டு ஏன்? “ஒரே ஒரு ஆயுதபூசை அழைப்பு” என்று..

“தொழிலும் சரியில்லை, அதனால கடைவீதியில் காசு புழக்கமும் இல்லை, அதான் இந்தாண்டு ஆயுதபூசை ஒன்னும் சரில்லை.!” என்று ஒரு கடைக்காரர் பூசைக்கு வந்தவரிடம் பேசிக் கொண்டிருந்தது பழனியின் காதில் விழ..

முரளியிடம் “ஏம்பா.! நோட்டு செல்லாதுனு சொன்னதும், புதுசு புதுசா வரிகிரினு போட்டதும், சிறுதோழில் காரங்க, வியாபாரிக முகத்துல மகிழ்ச்சியில்லாம செஞ்சுருச்சு போலிருக்கே.!” என்றார் பழனி.

“ஆமா, எலக்சன் நேரத்துல விளம்பரத்தையும் நடிப்பையும் பார்த்து தாங்கள் ஏமாறுவதை மக்கள் எப்ப உணர்ராங்களோ, அப்பத்தான் ஆனந்தமான ஆயுதபூசை.!” என்று முரளி பதில் சொல்ல..

இருவரும் பேசிக்கொண்டே சென்று பழனியை அவர் வீட்டில் இறக்கி விட்டு வண்டிக்கவரில் இருந்த பொறிப்பையில் ஒன்றை பழனியின் கையில் கொடுத்துவிட்டு, மற்றொரு பொறிப் பையோடு வீடு நோக்கி புறப்பட்டான் முரளி.!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *