ஒரு கிராமம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: November 1, 2016
பார்வையிட்டோர்: 6,459 
 
 

அது ஒரு கிராமம்–

நாப்பது அண்டுகளுக்கு முன்….

அது ஒரு ரொம்ப சின்ன கிராமம். இரண்டே தெரு. மேல் தெருவில் பத்து கல்லு வீடுகள், ஒரு கோவில். பின் தெருவில் முப்பது வீடுகள். டவுனுடன் தொடர்பு கொள்ள ஒரு தனியார் பேருந்து – ஓடினால் ஒரு நாளைக்கு ஒரு முறை,

சுற்றிலும் பச்சைப் பசுமை, தோப்புக்கள், வயல் வெளிகள். மிக நெருங்கிய தூரத்தில் இரண்டு பெரிய ஏரிகள். மழைக்காலத் தண்ணீர் சேர்ந்தால் நல்ல விளைச்சல் மூன்று போகமும் அமோகமாக இருக்கும். சிலசமயம் அதிக மழை என்றால் சில நிலங்கள் தண்ணீருக்கு அடியில் மூழ்கி இருக்கும்.

முக்கியமா ஒரு ஏரி பத்தி சொல்லியே ஆகணும். பல மைல் பரப்பு, கடல் போல் பரந்து விசாலமாக. சுற்றி வட்டமாக நாலு பக்கம் உயர்ந்தும் தாழ்ந்தும் மலைகள்… நீலப் பட்டு விரித்து பச்சை பாத்தி கட்டினார் போல். ஆளரவமே அற்ற ஏகாந்தம். வேடந்தாங்கல் பறவைகளின் வான்வெளி ஆராய்ச்சி மையம். ரம்யம் என்ற வார்த்தைக்கு விளக்கமான ஒரு காட்சி.

கண்ணுக்கு எட்டிய தூரத்தில் ஒரு உயர்ந்த மலை. அதன் உச்சியில் ஒரு கோவில். புதிதாக வருபவர்க்கு அந்த மலை ஏறி கோயிலைப் பார்க்க வேண்டும் போல் தோன்றும். ஆனால் யாரும் செல்வதில்லை. வருடத்திற்கு ஒரு முறை விசேஷமாக பூஜை நடக்குமாம். மலைக் கோயிலை விடுங்க, ஊரில் உள்ள கோவிலையே யாரும் கண்டு கொள்வதில்லை. சிதிலமான நிலை தான்.

கிராமத்தில் முக்கிய தெருவில் உள்ளவர்கள் நிலம் சொந்தமாக உள்ளவர்கள் பின் தெருவில் உள்ளவர்கள் அந்த நிலத்தில் வேலை செய்தும், இவர்களை சார்ந்தும் இருப்பவர்கள். நிலம் உடையவர்கள் இரண்டு பிரிவு – ஒரு பிரிவு பிராம்ணர், மற்றவர், நாயுடு, வீட்டில் தெலுங்குதான் பேசுவார்கள். (நிலமற்றவர்களுக்குள் பிரிவுகள் இருந்ததா என்று தெரியவில்லை… ) நிலச்சுவாந்தாரர்கள் தங்கள் பிள்ளைகளை டவுனுக்கோ, நகரத்திற்கோ அனுப்பி படிக்க வைத்தார்கள்.

முக்கியமா மறத்திட்டேனே ஊரின் முகப்பில், கோவிலுக்குப் பக்கத்தில் ஒரு பள்ளிக் கூடம். பஸ் வரும் நாட்களில் வாத்தியார் வருவார். ஒண்ணுலேந்து ஐந்து வரை ஒரே வகுப்பு. சுற்று வட்டாரத்து கிராமங்கள் சேர்த்து மொத்தம் இருபது பிள்ளைகள். இங்கும் படிக்க பல மைல் நடந்து வருவதுண்டு. மேல் படிப்புக்கு பக்கத்து டவுன். அஞ்சு மைல் போக வேண்டும்.

ஊரில் மின்சாரம் இருந்தது, பம்புசெட் இருந்தது, விவசாயம் தழைத்தது. ஆனா ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை மட்டும் வளர்க்கத் தவறினார்கள். இருக்கும் கொஞ்சம் பேர்களில் ஒருவருக்கு ஒருவர் விரோதிகளாகவே இருந்தார்கள். யாரும் அதிகம் பேசிக் கொள்ளாததால் கிராமம் எப்பொழுதும் அமைதியாகவே இருந்தது, எப்போதோ நடக்கும் சண்டையின் போது தவிர.

விவாசயத்தில் வந்தது நிலம் உள்ளவர்களும் உழைப்பவர்களும் பகிர்ந்தார்கள் என்று சுமுகமாக முடிக்கலாம்

அடுத்தது என்ன எதிர் பார்க்கறீங்க – நாயுடுவுக்கும் பிராமணர்களுக்கும் இடையே காதல், கலாட்டா; நிலம் உடைய வர்களுக்கும் இல்லாத வர்களுக்கும் இடையே காதல்-கலாட்ட, அவங்களுக் குள்ளேயே காதல், கலாட்டா அப்படித்தானே. இருந்தால் இருந்து விட்டுப் போகிறது. நமக்கென்ன அதைப்பற்றி, நாம என்ன சினிமாப் படமா எடுக்கப் போகிறோம். அப்படி எடுத்தால் ஏதாவது கற்பனையா திரிச்சுக்கலாம்.

நேரா நிகழ் காலத்துக்கு வாங்க……

கிராமத்தின் எல்லைக்கு வெளியே பிரம்மாண்ட TASMAC கடை. பக்கத்தில் உள்ள அல்லிக் குளத்தில் உள்ள அல்லிகள் தலை குனிய மக்கள் பேராதரவுடன் வியாபாரம் களை கட்டியது.. அதற்கு அருகில் புதிதாக ஒரு குடியிருப்பு (பொறம்போக்கு நிலம் ஆக்ரமிப்பு?) அருகில் ஒரு பெரிய மின்சார துணை நிலையம்.

குடியானவர்க்கு பதில் குடி ஆனவர்களை தாண்டி ஊர் சேர்ந்தால் வாசலில்

பள்ளிக்கூடம்…. ஓரடக்கு மாடியுடன். அட…. !

கோவில் பளிச் சென்று வெள்ளை அடிக்கப் பட்டு…
அட அட.. !

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட அர்ச்சகரால் ஒரு கால பூஜை….

கான்கிரீட் ரோடு… வாசலில் பாதுகாக்கப்பட்ட குடிநீர்…

எல்லோர் வீட்டிலும் கேஸ், மிக்சி, கிரைன்டர், டெலிஃபோன், தொலைக் காட்சி பெட்டி…. (எல்லாம் இலவசமாக கிடைத்ததுதான்) நடந்து வருபவர்கள் கையில் கைப்பேசி…. இரு சக்கர வாகனங்கள்… மாடி வீடுகள்..

எல்லாம் உழைப்பாளர்கள் வசிக்கும் பின் தெருவில் தான்,…

அப்ப மேல் தெரு..?

“அவங்களா,.,? ஒண்ணு ரெண்டு கிழம் கட்டைகள் இருக்கு… மிச்ச பேரெல்லாம் நெலத்த வாரத்துக்கு விட்டுட்டோ, வெலைக்கோ வித்துட்டோ போய்ட்டாங்க.. இப்ப அந்த வீடெல்லாம் உபயோகிக்காம உளுத்துப் போய் கிடக்கு… இன்னும் கொஞ்ச நாள்ள மிச்சம் இருப்பவங்களும் காணாம போயிடுவாங்க…. “

“அப்போ உழுபவருக்கே நிலம்னு சொல்லுங்க… “

“அட நீங்க வேற கடுப்பேத்தாதீங்க… நிலத்துல வேல செய்ய ஆள் ஏதுங்க… எல்லாம் மெஷின்தான்… இன்னும் பத்து வருஷம் கழிச்சு வந்தீங்கன்னா ஒளைக்கற மெஷினே எல்லாத்தையும் எடுத்துக்கும்… நமக்கு ஒண்ணும் மீதி இருக்காது.. “

“அப்ப நீங்க…? “

“எங்களுக்கு என்னங்க குறைச்சல்… ரேஷன், மின்சாரம் எல்லாம் இலவசம்… “

“அதுக்குள்ள இலவச TASMAC வந்துடாதுங்க..? “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *