கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 9,397 
 
 

எழுதியவர்: நரேந்திரநாத் மித்ரா

பிரபாத் பாபு ஜன்னல் வழியே எட்டிப் பார்த்து, “எழுதிக்கிட் டிருக்கீங்களா? சரி எழுதுங்க. நான் ஒங்களைத் தொந்தரவு பண்ணலே” என்று சொன்னார்.

நான் காகிதத்தையும் பேனாவையும் தள்ளி வைத்துவிட்டு என் மதிப்புக்குரிய, வயதில் பெரிய நண்பனை வரவேற்றவாறு, “வாங்க, வாங்க..! உள்ளே வாங்க!” என்று அழைத்தேன்.

பிரபாத் பாபு சற்றுத் தயக்கத்துடன், “நீங்க ஏதோ எழுதிக் கிட்டிருந்தீங்களே..!” என்றார்.

“எல்லா எழுத்தும் எழுத்தாயிருமா? சம்மா ரெண்டு மூணு கடிதங்களுக்குப் பதில் எழுதிக்கிட்டிருந்தேன், அவ்வளவுதான்!” என்று அவரைச் சமாதானம் செய்தேன்.

அழைப்புப்பெற்ற பிரபாத் பாபு உள்ளே வந்தார். சோபாவில் அமர்ந்துகொண்டு தன் குடையைத் தனக்கு முன்னால் தரையில் வைத்தார். போகும்போது அதை மறந்துவிட்டுப் போய்விடாம லிருக்க இந்த ஏற்பாடு. அவரது பிரியத்துக்குரிய பொருள் கண் முன்னாலேயே இருக்க வேண்டுமாம்.

நானும் நாற்காலியை விட்டிறங்கி அவருக்கெதிரிலிருந்த தாழ்வான சோபாவில் உட்கார்ந்தேன்.

அவர் சிரித்தக்கொண்டு சொன்னார், “நெறைய லெட்ட ரெல்லாம் எழுதறீங்க போலிருக்கு. எனக்கும் ஒரு காலத்திலே நெறைய லெட்டர் எழுதற பழக்கம் இருந்தது. ராத்திரி கண் முழிச்சு நண்பர்களுக்கத் கடிதமெழுதுவேன். அந்த விஷயத்திலே என்னை “மேன் ஆஃப் லெட்டர்ஸ்”னு அழைக்கலாம்!”

நான் புன்சிரிப்புடன் அவர் தமக்களித்துக் கொண்ட பட்டத்தை ரசித்துவிட்டு, “டீ குடிக்கறீங்களா?” என்று கேட்டேன்.

‘டீ’ என்ற வார்த்தையைக் கேட்டும் அவரது முகம் மலர்ந்தது. “குடிக்கலாந்தான்.. ஆனா இந்த நடுப்பகல்லே டீ வேணும்னு சொன்னால் ஒங்க இல்லறத்துக்குத் தொந்தரவு ஆயிடுமோ என்னவோ ..! நான்தான் சம்சாரி இல்லே.. அதனாலே மத்தவங்களோட குடும்பத்திலே அமைதி என்னால் கலைஞ்சிடு மோன்னு பயமாயிருக்கு..”

நான் உள்ளே போய் இரண்டு கப் டீ கொடக்கச் சொல்லிவிட்டு வந்தேன்.

அவருக்குப் பெயர்தான் பிரபாத் (காலைநேரம்). ஆனால் அவர் வெளியே சுற்றும் நேரம், கதை பேசும் நேரம் இதெல்லாம் நடுப்பகலுக்கும் நள்ளிரவுந்தான். வயது எழுபத்து நான்கு அவருக்கு. உடல் தளர்ந்தாலும் மனதைத் தளரவிடவில்லை அவர். பஸ்ஸிலும் டிராமிலும் சிரமமில்லாமல் பிரயாணம் செய்கிறார். கலகலப்பான மனிதர். தமக்குப் பிடித்த இலக்கியக் கூட்டங்களுக்குப் போவார். பழைய நண்பர்களைச் சந்தித்துப் பேசுவார். புதிய நண்பர்களைச் சம்பாதித்துக் கொள்வதிலும் தங்கு தடையில்லை. அவருக்கு அடுத்த தலைமுறையிலும் அதற்கடுத்த தலைமுறையிலுங்கூட நண்பர்கள் உண்டு. ஆனால் அவருக்குப் பிள்ளையுமில்லை, பேரனுமில்லை. அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை.

பேச்சுவாக்கில் அவரிடம் சொன்னேன், “என்ன பிரபாத் பாபு! முந்தாநாள் ராத்திரி ஒங்களை வரச் சொல்லியிருந்தேன், நீங்க வரவேயில்லே! என்னோட ரெண்டு சிநேகிதங்க ஒங்களைச் சந்திக்கணும்னு வந்திருந்தாங்க. நாங்க ரொம்பநேரம் காத்துக் கிட்டிருந்தோம் ஒங்களுக்காக.”

பிரபாத் பாபு வெட்கமடைந்து நாக்கைக் கடித்துக் கொண்டார். “அடேடே, மறந்தே போயிட்டேன், கல்யாண் பாபு..! முந்தாநாள் ராத்திரி நான் அலிப்பூர்லே என் சிநேகிதன் வீட்டிலே இருந்தென். அங்கே ஒரு ஆண்டுவிழா கொண் டாடினோம்..”

“ஒங்க சிநேகிதரோட பிறந்தநாள் விழாவா?”

“இல்லேயில்லே, அதெல்லாம் ஒண்ணுமில்லே. பிறந்த நாள் கிறந்த நாள் கொண்டாடற வழக்கம் என்னிக்குமே இல்லே என் நண்பனுக்கு. அவன் தனிப்பட்ட முறையிலே பூஜை கீஜை பண்ணியும் பார்த்ததில்லே. சமூகச் சடங்குகளிலே கலந்து கொண்டும் பார்த்ததில்லே நான். சந்தியா வந்தனம், ஜபம் தபம் ஒண்ணுமில்லே அவனுக்கு. நானே அவன்கிட்டே ஒரு தடவை சொல்லியிருக்கேன். சைலேன், பிசாசுக்குக்கூடச் சில சடங்குகள் உண்டு. நீ பிசாசைவிடப் பெரியவனா..?” இப்போ கொஞ்சநாளா அவன் ஒரு சடங்கை அக்கறையா செஞ்சுகிட்டு வரான். வருஷத்திலே ஒருநாள் அதுக்கு அவன் ஒருத்தனை மட்டும்தான் அழைப்பான் ..”

“அது நீங்கள்தானாக்கும்?”

பிரபாத் பாபு புன்சிரிப்புடன் ஒப்புக்கொண்டார்.

இதற்குள் டீ வந்துவிட்டது. அவர் அதில் ஓர் உறிஞ்சு உறிஞ்சிவிட்டுச் சட்டைப்பையிலிருந்து சிகரெட் பெட்டியை எடுத்து ஒரு சிகரெட் பற்றவைத்துக் கொண்டார். அவர் உபயோகிப்பது மலிவான சிகரெட்டுதான்.

நான் சிகரெட் பிடிப்பதில்லையென்று தெரிந்தும் அவர் என்னிடம் ஒரு சிகரெட் நீட்டினார். நான் தலையாட்டுவதைப் பார்த்துச் சிரித்தவாறு, “நீங்க தேவலை. நான் எப்ப சிகரெட் பிடிக்க ஆரம்பிச்சேன்னு எனக்கே ஞாபகமில்லே. பால்குடி மறந்ததுமே சிகரெட் பிடிக்கத் தொடங்கிட்டேன்னு நினைக்கறேன்.” என்றார்.

“ஏதோ ஒரு விழாவைப் பத்திச் சொல்லிக்கிட்டிருந்தீங்களே!”

“பொறுங்க, பொறுங்க! நான் கதை எழுதறதில்லேன்னாலும் எப்படி எழுதணும்னு எனக்குத் தெரியும்; கல்யாணம் பண்ணிக்க லேன்னாலும் மாப்பிள்ளை வீட்டாரோட ஆயிரம் கல்யாணத் துக்குப் போயிருக்கென். தொடக்கத்திலேயே கதையோட சஸ்பென்ஸைச் சொல்லிட நான் அவ்வளவு முட்டாள்னு நினைச்சுக்கிட்டிருக்கீங்களா? நான் முதல்லேயே சஸ்பென்ஸை வெளியிட்டா நீங்க அக்கறையாக் கதை கேப்பீங்களா..?

இது என் கதையில்லே, என் நண்பனோட கதை.. ஒங்ககிட்டே எதுவும் சொல்லப் பயமாயிருக்கு. ஒங்ககிட்டே ரகசியம் தங்காது. கேட்ட ரகசியத்தைப் பத்துப் பேருக்குச் சொல்லாட்டி ஒங்களுக்கு நிம்மதியிருக்காது.. ஆனால் இந்தக் கதையை நீங்க எழுதிப் பிரயோசனமில்லே. ஏன்னா இந்த மாதிரிக் கதை ஒருத்தருக்கும் பிடிக்காது. இது பழைய காலத்துக் கதை. பழைய காலம், பழைய சூழ்நிலை மட்டுமில்லே, பழைய மதிப்பீடுகள் சம்பந்தப்பட்ட கதை..

பழைய காலந்தான். ஆனால் எனக்கு அப்போ புதுசுதான். அப்போ நான் இளைஞன். எவ்வளவு காலம் முன்னாலே? சுமார் அரை நூற்றாண்டு! ஆனால் சில சமயம் நேத்து நடந்த மாதிரி இருக்கும். சில சமயம் ரொம்ப, ரொம்பப் பழைய காலம் மாதிரி தோணும்- வரலாற்றுப் பழமை, வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலம்.

அந்தக் காலத்திலே கல்கத்தாவிலேருந்து மேற்கு இந்தியாவிலே ஒரு பட்டணத்துக்கு மாற்றலாச்சு எனக்க. நான் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கறவனில்லே. கல்கத்தாவிலே எனக்கு நிறைய சிநேகிதங்க. ஆபீஸ் நேரம்போக மத்த நேர மெல்லாம் அவங்களோடே பேசிப் பொழுது போக்குவேன். பகல் இரவு பாராமே கும்மாளம் போடுவோம். எங்க பொழுது போக்கிலே இலக்கியம், சங்கீதம், நாடகம் எல்லாத்துக்கும் இடமுண்டு .. ஆனால் நான் போகப்போற இடத்திலே ஆபிசைத் தவிர என்ன இருக்கும்? அதுவும் எப்படிப்பட்ட ஆபீஸ் வேலை தெரியுமோ? ராணுவத்தோட உடை, சாப்பாட்டுச் செலவுக்கானி கணக்கு வழக்குகளைப் பார்த்துக்கறது. இந்த மாதிரி வேலை எனக்குப் பிடிக்கவேயில்லே. ஆனால் ஆபீஸ் வேலையைச் செய்யத் தானே வேணும்! கணவனைப் பிடிக்காட்டியும் ஒரு பதிவிரதை அவனோட குடித்தனம் செய்யத்தானே வேணும்!

அந்தப் பட்டணத்திலே நான் ஒரு நடுத்தர உணவு விடுதியிலே போய்த் தங்கினேன். அங்கே எனக்கு நண்பர்களே கிடைக்க மாட்டங்கன்னு நான் பயந்தமாதிரி இல்லே. அங்கே என் அறையிலேயே ஒரு சின்ன கோஷ்டி சேர்ந்துடுச்சி. கதை பாட்டு, வேடிக்கைப் பேச்சு, சீட்டு விளையாட்டு எல்லாம் நடந்தது. வேறுவித ஆசைகள் உள்ளவங்களும் அதுக்கான ஏற்பாடுகள் செஞ்சுக்கிட்டாங்க. என்னோட சக ஊழியன் சைலேனும் இந்த கோஷ்டியிலே வந்து கலந்துக்கத் தொடங் கினான். நானும் சைலேனும் ஒரே பிரிவிலே வேலை பார்க்கறவங்க, ஆனால் அவன் என் மாதிரி இல்லே. நல்ல பையன். அக்கறையா வேலை செய்வான். ஆனால் எல்லாத்தையும்விட அவனோட அழகுதான் மத்தவங்கள முதல்லே ஈர்க்கும். என் மாதிரி கறுப்பா, அவலட்சணமா இருக்கமாட்டான் அவன். நான் நல்ல ஒசரம், ஏறக்குறைய ஆறடி, என்னைவிட ஒரு அங்குலம் ஒண்ணரை அங்குலம் குட்டையாயிருப்பான்.

அவன்கிட்டே எந்தவிதமான குறையும் இல்லே. நல்ல சிவப்பு, நீளமான மூக்கு, தலை நறையக் கருப்பு முடி, அழகான உடல்வாகு.. அவன் ஒண்ணும் விளயாட்டு வீரன் இல்லே. இருந்தாலும் அவனோட தோற்றத்திலே ஆண்மை இருந்தது. என்னிலிருந்து வேறுபட்ட ஒருத்தனை நான் நண்பனாகப் பெற்றது அதுதான் முதல்தடவை. என்னிடமில்லாத ஏதோ ஒரு கவர்ச்சி அவன்கிட்டே இருந்தது. அதே மாதிரி அவனும் தன்கிட்டே இல்லாத ஏதோ ஒரு கவர்ச்சியை என்னிடம் உணர்ந்திருக்கலாம். எங்கள் வேறுபாடே எங்களைப் பரஸ்பரம் கவர்ந்தது.

சைலேன் எங்க கோஷ்டியிலே வந் பேசாமே ஒக்காந் திருப்பான். சில சமயம் என் ஷெல்பிலிருந்து ஏதாவது புஸ்தகத்தை எடுத்துப் படிப்பான், சில சமயம் சும்மா எங்க கும்மாளத்தைப் பார்த்துக்கிட்டிருப்பான். மொதல்லே ரொம்பக் கூச்சப்படுவான். ஆனால் இப்போ அப்படியில்லே.. எல்லாரும் போனப்பறம் நேரமிருந்தா ஏதாவது சாதாரணமாப் பேசிக்கிட்டு இருப்போம் நாங்க ரெண்டு பேரும்.

ஒருநாள் நாங்க தனியா இருந்தபோது அவன் எங்கிட்டே சொன்னான், “ஒங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்..”

“என்ன விஷயம் சொல்லு?”

அவனிடமிருந்து பதிலில்லை.

“ஏதோ விஷயம்னியே.. சொல்லேன்!”

“வேண்டாம் விடு!”

“ஏன் வேண்டாம்..? சரி, நீ என்ன சொல்ல வந்து சொல்ல முடியாம தவிக்கிறியோ, அதை நானே சொல்லிடறேன்” நான் அவனோட குரலைக் காப்பியடித்துச் சொன்னே, “பிரபாத், எனக்குக் காதல் ஏற்பட்டிருக்கு. காதல் பள்ளத்திலே அதல பாதாளத்திலே விழுந்துட்டேன். இப்போ நீதான் என்னைக் கரையேத்தணும்!”

“இதைத்தான் நான் சொல்ல வந்தேன்னு ஒனக்கு எப்படித் தெரிஞ்சுது?” சைலேன் கேட்டான்.

“புரிஞ்சுக்கிறதிலே என்ன கஷ்டம்? அன்னிக்கு ஒங்க வீட்டுக்கு வந்திருந்தபோதே நான் புரிஞ்சுக்கிட்டேன்.”

சைலேன் பேசாமலிருந்தான்.

சைலேனின் அப்பா ஒரு அரசாங்க விடுதியில் குடியிருந்தார். பெரிய குடும்பம். சைலேனோட அப்பா, அம்மா, தம்பிகள், தங்கைகள்..

“ஆபீஸ் முடிஞ்சப்பறம் சிலநாள் என்னை அவன் வீட்டுக்குக் கூட்டிக்கிட்டுப் போவான். அவனோட அம்மா என்னைப் பிள்ளை மாதிரி நடத்தினாங்க. தானே சமைச்சுச் சாப்பா போடுவாங்க. அவனோட தம்பி தங்கைகளுக்கும் என்கிட்டே ரொம்பப் பிரியம். அந்த ஊரிலே இன்னும் சில வங்காளிக் குடும்பங்கள் இருந்தன. அவங்க வீடுகளுக்கும் நான் போறதுண்டு. ஆனால் சைலேனோட வீட்டுக்குப் போகத்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

“அவங்க வீட்டிலேதான் நான் மாதுரியைப் பார்த்தேன். அவளோட அழகைப் பார்த்து நான் மொதல்லே அவளும் சைலேனோட தங்கைன்னுதான் நினைச்சேன். அவன் மாதிரியே அவளும் நல்ல சிவப்பு. பெண்ணாயிருக்கறதாலே சிவப்பு நிறம் எடுப்பாத் தெரிஞ்சுது. எனக்கு எப்போதும் நீள முகந்தான் பிடிக்கும். ஆனால் மாதுரிக்கு உருண்டை முகம். உருண்டை முகம் ஒரு மலர்ந்த தாமரைப்பூ போல ரொம்ப அழக்யிருக்குங் கறது எனக்கு அவளைப் பார்த்த பிறகுதான் புரிஞ்சுது. அடர்த்தியான, நீளமான கருங்கூந்தல் அவளுக்கு, பட்டுபோல இவ்வளவு அழகான கூந்தலை நான் பார்த்ததேயில்லை. அவள் சைலேனோட தங்கையுமில்லே, சித்தியின் பொண்ணுமில்லேங் கறதைப் பின்னால தெரிஞ்சுக்கிட்டேன். ஆனால் அவ சைலேனோட அம்மாவைப் பெரியம்மான்னு கூப்பிட்டா. மாதுரி பிராமண சாதி- முகர்ஜி. சைலேனோட வீடும் மாதுரி வீடும் ஒரே தெருவிலே சில கஜ தூரத்திலே இருந்தது. ரெண்டு குடும்பங்களுக்குமிடையே ரொம்ப நெருக்கம், நட்பு, பரஸ்பரப் போக்குவரத்து, பேச்சு வார்த்தை, சாப்பாடு எல்லாம் உண்டு. சைலேனோட அம்மா மாதுரி வீட்டுக் குழந்தைகளுக்குப் பெரியம்மா. மாதுரியோட அம்மா சைலேன் வீட்டுக் குழந்தைகளக்கு சித்தி..

“நீ எப்படிப் புரிஞ்சுக்கிட்டே?” சைலேன் கேட்டான்.

“நீங்க ஒருத்தரையொரத்தர் திருட்டுத்தனமாகப் பார்த்துக் கறதிலேருந்து .. ஒன் மேஜை மேலே மாதுரியோட புஸ்தகங்களைப் பார்த்து.. அவளோட பாட்டு நோட்டில ஒன் கையெழுத்தைப் பார்த்து..”

பிடிபட்ட சைலேன் சிரித்துவிட்டான். “இதுக்குள்ள இவ்வளவு கவனிச்சிட்டியா..? நீ துப்பறியும் இலாகாவிலே வேலைக்குப் போயிருக்கணும், பிரபு!”

சைலேன் சில சமயம் என்னைச் செல்லமாப் ‘பிரபு’ன்னு கூப்பிடுவான். சில சமயம் ‘குருதேவா’ன்னு அழைப்பான். நான் தான் அவனோட நண்பன், ஆசான் , வழிகாட்டி.

அவன் என்கிட்டே எல்லா விஷயத்தையும் சொன்னான். சொல்லத்தானே வந்திருந்தான் அவன்..! சிறு வயசிலிருந்தே அவங்களோட பரஸ்பர அன்பு, பின்பு அது காதலாக மலர்ந்த கதை, அவங்க ஒருவருக்கும் தெரியாமல் சந்திக்கறது எல்லாம் ஒளிவு மறைவு இல்லாமல் சொன்னான். அவங்க முதல்லே வீட்டுக்காரங்ககிட்டேயிருந்து மட்டுமில்லாமே, தங்கைகளிடமே தங்கள் காதலை மறைச்சுக்கிட்டாங்களாம். அப்பறம் நிலைமை மாறினது. ரெண்டு வீட்டுக்காரங்களும் அவங்களோட காதலைப் புரிஞ்சுக்கிட்டு அவங்களைச் சேர்த் வைக்கணும்னு ஆசைப் பட்டாங்க. மாதுரியைப் பெண் மாதிரி நடத்தின சைலேனோட அப்பா அம்மா அவளை மருமகளா ஏத்துக்கணும் சைலேனை மகன் மாதிரி நேசிச்ச மாதுரியோட அப்பா அம்மா அவனை மருமகனா ஏத்துக்கணும் – இதுதான் அவங்க ஆசை.

“இதிலே என்ன தடை?”ன்ன நான் சைலேனைக் கேட்டேன்.

“சாதி வித்தியாசந்தான்!”

“சாதி கிடக்கட்டும், விட்டுத் தள்ளு!” நான் சைலேன்கிட்டே சொன்னேன். “மாதுரியோடு அப்பா சம்மதிக்கல்லேன்னா, நீ ‘சுபத்ரா ஹரணம்’ பண்ணிப்பிடேன்! ஒங்க தேரை நான் ஓட்டத் தயார்! பாக்கி எல்லாத்தையும் விட்டுட்டு என்னைச் சரணடை!”

“அது நடக்காது!”

“ஏன்? மாதுரி பயப்படறாளா?”

“அவளுக்குப் பயம், தயக்கம் எல்லாந்தான். தவிர, அவளுக்குத் தன் அப்பா மேலே ரொம்பப் பாசம். அவரோட விருப்பத்துக்கு விரோதமா எதுவும் செய்யறதைப் பத்தி நினைக்கக் கூட மாட்டா.”

“நீ கவலைப்படாதே! நான் போய் அந்த எஞ்சினியரை …

மாதுரி அப்பாவைப் – பார்த்துப் பேசறேன். அவரை சம்மதிக்க வைக்கறேன்.”

“அடேயப்பா! நீ அவர்கிட்டே போனேன்னா அதுக்கப்பறம் அவங்க வீட்டுக்குள்ளே நாங்க நுழைய முடியாது. எங்க அப்பா மட்டும் இந்த அவமானத்தைப் பொறுத்துப்பாரா? மாதுரி வீட்டுக்காரங்களும் எங்க வீட்டுக்குள்ளே நுழைய முடியாது.. எங்க காதல் விஷயம் எல்லாருக்கும் தெரியும். ஆனால் யாரும் இதைப் பத்தி வாயைத் திறந்து பேசறதில்லே. வெகுகாலத்து நட்பு முறிஞ்சு போயிடுமேன்னு..”

“ஒன் அம்மா அப்பா என்ன நினைக்கறாங்க?”

“அவங்களுக்கும் இதிலே இஷ்டமில்லே. காதல் கலியாணம்னா அவங்களுக்கு ரொம்பப் பயம். நான் மாதுரியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாத் தனிக் குடித்தனம் வச்சுடுவேன், அப்பறம் அப்பா அம்மா தம்பி தங்கைகளைக் கவனிக்க மாட்டேன்னு அவங்க பயப்படறாங்க.”

சைலேன் கோழை. நான் அவனுக்காகத் துணிச்சலான ஏதாவது செய்யவும் என்னை விடவில்லை அவன். அவனுக்கு இப்போது மாதுரியுடன் பேசிப் பழகக் கிடைக்கும் வாய்ப்பும் என் இடையீட்டால் கெட்டுப் போய்விடும் என்ற பயம் அவனுக்கு. இப்போது அவர்கள் தினமும் மாலை வேளையில் பார்த்துக் கொள்கிறார்கள், பேசிக் கொள்கிறார்கள், ரகசியமாக ஒருவரை யொருவர் கொஞ்சிக் கொள்கிறார்களே, அதுவும் நின்று போய் விடக் கூடாதே!

“சைலேன், அப்படீன்னா நீ இப்படியே இருந்துக்க! இதுக்கு மேலே எதுக்கும் ஆசைப்படாதே!” இதன்பின் இரண்டு வீடு களுக்கும் கல்யாணத் தரகர்கள் ஒளிவு மறைவாக வரத் தொடங் கினார்கள். மாதுரிக்கு வரன் பார்க்கப் பட்டது. சைலேனின் விருப்பத்துக்கு மாறாக அவனுக்கும் பெண் பார்த்தார்கள். நிறைய நகைகள், வரதட்சணையுடன் வைலேனுக்குப் பெண் கொடுக்கப் பலர் தயாராயிருந்தார்கள். ஆனால் சைலேன் இணங்கவில்லை. மாதுரியின் நிலையும் அதுவே. ஆகவே கல்யாணத் தரகர்கள் அலைந்ததுதான் மிச்சம். இரண்டு குடும்பங் களிலும் கல்யாணம் நடக்கவில்லை.

எனக்கு அப்போது சிம்லாவுக்க மாற்றலாகி விட்டது. நான் அங்கிருந்து புறப்பட்டபோது மாதுரி எனக்கு ஒரு சிவப்பு ரோஜாக் கொத்தைக் கொண்டு வந்து கொடுத்தாள். கூடவே இரண்டு கண்ணீர் முத்துக்கள்.

நான் அவளுடைய கரிய, பெரிய, ஈர விழிகளைப் பார்த்த வாறு, “மாது, ஏன் அழறே?” என்று கேட்டேன்.

“பிரபாத் அண்ணா, எங்களுக்கு ஒங்களைத் தவிர வேறே நண்பர் இல்லே, எங்களை மறந்துடாதீங்க!”

நான் என் நண்பனோட நலம் விரும்பி, அவ்வளவுதான். நான் எப்போதுமே ஒரு துணைவினைச் சொல்தான். என்னிக்குமே முக்கிய வினைச் சொல்லா ஆகலே, எனக்காக ஒண்ணும் செஞ்சுக்கலே. இருந்தாலும் வாழ்க்கையிலே எனக்குக் கிடைச்சது ஒண்ணும் குறைவு இல்லே. சைலேனைச் சொல்லி என்ன பிரயோசனம்! நானே கப்பியும் குருணையுமா சேத்துத்தானே என் பிச்சைப் பையை ரொப்பிக்கிட்டிருக்கேன்..!

அடே, ரொம்ப நேரமாச்சே! இதோ சுருக்கமாச் சொல்லி முடிச்சுடறேன். இல்லேன்னா, ஒங்க வீட்டுக்காரம்மா ஒங்களைத் திட்டுவாங்க, எனக்க அப்பப்ப ஒரு கப் டீ கிடைக்கறதும் நின்னு போயிடும்.. நான் சிம்லாபோய்க் கொஞ்ச நாளுக்கெல்லாம் சைலேன் பாட்னாவுக்க மாற்றலாகிப் போனான். எங்கள் விதியை இயக்குவது சர்க்கார். ஒவ்வொரு சமயம் நாங்க வெவ்வேறு ஊருக்கு மாற்றலாகி வெகுதூரத்திலே இருப்போம். சில சமயம் ஒரே ஊரிலே கொஞ்ச காலம் வேலை பார்ப்போம், தினம் சந்திப்போம், பேசுவோம். நாளாக ஆக எங்க தோற்றத்திலே மாற்றம் வந்தது, வயது ஏறிக்கிட்டே வந்தது. ஆனால் எங்க நட்பு மட்டும் மாறல்லே. நாங்க தொலைவிலே இருந்தபோதும் எங்க தொடர்பு விட்டுப் போகலே. நாங்க அடிக்கடி கடிதம் எழுதிக்குவோம், எப்போதாவது சந்திச்சுக்குவோம்..

மாதுரியின் அம்மா இறந்து போயிட்டாங்க. ரெண்டு தம்பிகளும் பெரியவங்களாயிட்டாங்க. அப்பா கிழவராயிட்டார். ஒரு காலத்திலே பெரிய கோபக்காரராயிருந்த அவர் இப்போ பொண்ணே கதின்ன ஆயிட்டார். அவருக்குத் தாய், மனைவி, பெண் எல்லாமே மாதுரிதான். சைலேனோட அப்பா அம்மாவும் இறந்து போயிட்டாங்க. அவனோட தம்பிகளுக்கு அவன்தான் அப்பா, அவன்தான் அம்மா. அவன் அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சான். அவங்க வெவ்வேறு ஊர்களிலே குடியும் குடித்தனமுமா இருக்காங்க. இருந்தாலும் பிரம்மச்சாரி அண்ணா சைலேன்தான் அவங்களுக்கு ஆசான், வழிகாட்டி எல்லாம்..

சைலேனோடேயும் மாதுரியோடேயும் என் கடிதப் போக்குவரத்து தொடர்ந்தது..

அப்பறம் நானும் சைலேனும் ஏறக்குறைய ஒரே சமயத்திலே ரிடையர் ஆனோம். சைலேனுக்கு ரெண்டு மூணு பதவி உயர்வு கிடைச்சுது, பதவி நீட்டிப்பும் கிடைச்சுது, எனக்கு ஒண்ணும் கிடைக்கலே. அதுக்குப் பதிலா நான் பலதடவை நாடு பூராச் சுத்தினேன். பொழுதுபோக்கு நாடகங்களிலே நடிச்சேன், கிழ வயசிலேயும் அரிதாரம் பூசிக்கிட்டு, டோப்பா வச்சுக்கிட்டுக் கதாநாயகன் வேஷம் போட்டேன். பாதி இலக்கிய, பாதி அரசியல் மேடைகளிலே பேசினேன். இப்போ பஜனைக் கூட்டங் களுக்குப் போறேன். நீங்க என் நடத்தையைப் பார்த்து மனசுக் குள்ளே சிரிச்சுக்கிறீங்க..

இப்போ டல்ஹௌசியிலே பென்ஷன் வாங்கப்போற இடத்திலே நானும் சைலேனும் சந்திச்சுக்கறோம். நாங்க ரெண்டு பேருமே இப்போ கல்கத்தாவாசிகள். அவன் தெற்குக் கல்கத்தாவிலே இருக்கான், நான் வடக்கே. நாங்க அடிக்கடி சந்திச்சுக்க முடியலே, கடிதமும் எழுதிக்கறதில்லே.. ஒரு தடவை சைலேன், “ஒன் கையெழுத்து வரவர ரொம்ப மோசமாயிருச்சு. படிக்கவே முடியல்லே”ன்னு எனக்கு எழுதினான். அதிலே கோவிச்சுக்கிட்டு நான் அவனுக்குக் கடிதம் எழுதறதை விட்டுட்டேன். இப்போ போனிலே பேசிக்கறோம். சைலேன் அலிப்பூர்லே ஒரு அழகான ரெண்டடுக்கு வீடு கட்டியிருக்கான். அவனோட தம்பியோட பிள்ளை, பெண்கள், பேரன், பேத்திகள் கூட இருக்காங்க.. எனக்கு வீடு கட்டிக்க அவசியமேற்படல்லே. முன்னோர்கள் விட்டுப்போன வீடு இருக்கு. எனக்கும் என் அண்ணாவுக்கும் பொது. ஆனால் அது பேருக்குத்தான். நான் மனத்தளவிலே நாடோடி, நான் வீட்டிலே தங்கற நேரம் குறைச்சல்தான்..

பன்னெண்டு வருஷத்துக்கு முன்னாலே ஒருநாள், நான் பென்ஷன் பணத்தை எண்ணிக்கிட்டிருந்தபோது யாரோ பின்னாலேருந்து என் கையைப் பிடிச்சுக்கிட்டு, “எல்லாம் துறந்தவனே! பணத்து மேலே மட்டும் ஆசை போகலியாக்கும்!” என்று சொன்னாங்க.

திரும்பிப் பார்த்தேன் – சைலேன்!

“கிழ வயசிலே பெண்ணாசையை விட்டுடலாம், பொன்னாசையை விட முடியாது.. பழம் வாங்கித் திங்கறதுக்கும் காசு வேணும்” என்று சிரிச்சுக்கிட்டே சொன்னேன்.

சைலேன் என்னை ஒரு டீக்கடைக்குக் கூட்டிக்கிட்டுப் போய், “ஒங்கிட்டே ஒரு விஷயம் பேசணும்” என்றான்.

ஒரு காலிமேஜைக்கு முன்னாலேபோய் உக்காந்தோம்.

நாங்க ரெண்டு பேருமே காலத்தோட தாக்குதலக்கு ஆளா யிருந்தோம். சைலேனோட தலைபூரா வழுக்கையாயிட்டுது, நான் முழுப் பல்செட் வச்சுக்கிட்டிருந்தேன்.

சைலேன் அதிகம் பேசவில்லை, தன் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதத்தை எடுத்துக் கொடுத்து, என்னைப் படிக்கச் சொன்னான்.

முத்து முத்தாகக் கையெழுத்து, எனக்குப் பழக்கமானதுதான்.

“இது ஒனக்கு வந்த கடிதம் இல்லே..?”

“சரிதான் படி! எனக்கு வந்த லெட்டரை நீ ஒரு நாளும் படிச்சதில்லையோ?” என்று அதட்டினான் சைலேன்.

உறையிலேயிருந்து கடிதத்தை எடுத்தேன். நீளக் காகிதம். ஆனால் அதிலே எழுதியிருந்தது ரெண்டே வரிதான் – ‘உன்னோடு ஒரு விஷயம் பேசணும். அவசியம் வா! இப்படிக்கு, உன் மாதுரி.’

நான் சிரிச்சுக்கிட்டே சொன்னேன், “நான் முன்னால சொன்னதை மாத்திக்கறேன். கிழ வயசிலேயும் பொண்ணாசை விடாது. இப்போ மாதுரி எங்கே இருக்கா?”

அப்பா இறந்த பிறகு மாதுரி லக்னோவிலேருந்து கல்கத்தா வந்துட்டாங்கறது தெரியும் எனக்கு. ஆனால் அவளோட விலாசம் தெரியாது.

“அவளோட தம்பிகள் இங்கே வேலை செய்யறாங்க. அவளும் டீச்சர் வேலை பார்த்தா. ஆனால் உடல்நிலை கெட்டுப் போனதாலே வெலையை விட்டுட்டா. அவளோட அப்பா நிறையப் பணம் வச்சுட்டுப் போகலே. பொண்ணு பேரிலே முப்பதாயிரம் ரூவா டிபாசிட் பண்ணியிருந்தார். பிள்ளைகளுக்கும் ஏதோ கொஞ்சம் கொடுத்தார்…”

இதெல்லாம் எனக்குத் தெரியாது. மாதுரியோட எனக்கு வெகுகாலமாகக் கடிதப் போக்குவரத்து இல்லே.

“மாதுரி ரொம்பயாளா நோய் வந்து கஷ்டப்படுறா. வா, ஒர தடவை பார்த்துட்டு வருவோம். என்ன விஷயம்னு கேக்கலாம்.”

“நீ மட்டும் போயிட்டு வா. நான் வந்தா அவ ஒன்னோட மனம்விட்டுப் பேசமாட்டா.”

“அதெல்லாமில்லே, நீயும் வரணம். வா, இப்பவே போகலாம்.”

“இன்னொரு நாள் போயிக்கலாமே” என்று நான் தட்டிக் கழிக்கப் பார்த்தேன். ஆனால் அவன் விடலே.

நாங்க எங்க வீடுகளுக்குப் போன் பண்ணித் தகவல் சொல்லிவிட்டுப் பாரக்பூருக்குப் போனோம். டாக்சியில் போகலாம் என்றான் சைலேன். நான்தான் “பென்ஷன் பணத்தை இப்படி அனாவசியமாகச் செலவு செய்யக் கூடாது. பஸ்ஸிலேயே போகலாம்”ன்னு சொன்னேன்.

வழியில் காலேஜ் தெரு மார்க்கட்டிலே ஒரு பெரிய ரஜனிகாந்தாப் பூக்கொத்து வாங்கிக்கிட்டேன்.

“ஒனக்கு இன்னும் இந்த ஷோக்கெல்லாம் இருக்கே!” என்று என்னைக் கேலி பண்ணினான் சைலேன்.

பாரக்பூர் ஸ்டேஷன்கிட்டேதான் அவங்க வீடு. அவங்க மாடியிலே இருந்தாங்க. ஒரு பெண் எங்களை மேலே கூட்டிக் கிட்டுப் போனா.

ஒரு சின்னக் கட்டிலிலே படுத்துக்கிட்டிருந்தா மாதுரி. சுத்தமான படுக்கை விரிப்பு. அறையும் சுத்தமாயிருநதது.

ஆனால் மாதுரி என்ன இப்படி ஆயிட்டா! படுக்கையோடே படுக்கையா கிடந்தா அவ,. எழுந்து உக்காரக்கூட சக்தியில்லே.

அப்படியும் எங்களைப் பார்த்ததும் அவளுக்குப் பலம் வந்தது. எழுந்து உக்காந்தா.

என்னைப் பார்த்துச் சிரிச்சுக்கிட்டு, “நீயும் வருவேன்னு எனக்குத் தெரியும்” என்று சொன்னா.

அதுக்கப்புறம் அவ செஞ்ச காரியத்தைக் கேளுங்க! அவளோட ஒரு தம்பியின் மனைவியைக் கூப்பிட்டு, “லட்சுமி பீடத்துக்கிட்டே ஒரு குங்குமச்சிமிழ் இருக்கு, எடுத்துக்கிட்டு வா!” என்று சொன்னா.

குங்குமச் சிமிழ் வந்தது. மாதுரி அதை வாங்கி சைலேன் கிட்டே கொடுத்துச் சொன்னா, “இந்தக் குங்குமத்தை என் வகிட்டிலே இடு.. நான் குமரியாச் சாக விரும்பல்லே..”

முன்பு மாதுரிக்கு இருந்த-கருமேகம் மாதிரி அடர்த்தியான முடி இப்போ இல்லே. வயசானதாலே இல்லே, வியாதி யாலே முடியிலே பெரும்பகுதி உதிர்ந்து போயிருந்தது. மிச்சமிருந்த முடியில் நரையும் கண்டிருந்தது.

சைலேன் அவளுடைய வகிட்டிலே குங்குமம் இட்டான். அவளோட ரெண்டு தம்பிகளோட மனைவிகளும் அந்த சமயத்திலே சங்கு ஊத விரும்பினாங்க. மாதுரி ஜாடையாலே அவங்களைத் தடுத்துட்டா.

“மாது, நீ முடி நரைச்சப்பறந்தான் வகிட்டிலே குங்குமம் இட்டுக்கணும்னு இவ்வளவு நாள் காத்திருந்தியா?” நான் கேட்டேன்.

இதைக்கேட்டு மாதுரி முகத்திலே வளர்பிறைப் பிரதமைச் சந்திரன் மாதிரி ஒரு மெல்லிய புன்னகை. ‘சரி, இப்போ நீ மந்திரம் சொல்லு!” என்றாள்.

நான் என்ன புரோகிதனா, மந்திரம் சொல்ல? தவிர, நானே அப்போ மந்திரத்தால் மயங்கினவன் மாதிரி இருந்தேன். இருந் தாலும் ஒரு மந்திரத்தைச் சொல்லி வச்சேன்-‘யதிதம் ஹ்ருதயம் தவ, ததிதம் ஹ்ருதயம் மம’ (உன்னிதயமே என்னிதயம்).

அவங்க மந்திரத்தைத் திருப்பிச் சொல்லலே, கவனமாக் கேட்டுக்கிட்டாங்க.

நான் எவ்வளவோ கல்யாணத்துக்கு மாப்பிள்ளை கோஷ்டியோட போயிருக்கேன் கல்யாண் பாபு. சுலபமாப்போக முடியாத, தொலைவான இடங்களுக்கெல்லாம் போயிருக்கேன் ஆனால் இந்த மாதிரி கல்யாணத்திலே மாப்பிள்ளைத் தோழனா இருந்ததில்லே, இந்த மாதிரி புரோகிதத் தொழிலும் செஞ்சதில்லே.

அன்னிக்கு நான் ரஜனிகாந்தாப் பூக்கொத்து எடுத்துக்கிட்டுப் போனது பொருத்தமா அமைஞ்சுடுத்து, அந்தக் கொத்தை மாதுரியோட படுக்கையோரத்திலே வச்சேன். கொஞ்ச நேரத்துக்கு அது முதலிரவுப் படுக்கை மாதிரி அலங்காரமாயிருந்தது..

அதுக்கப்புறம் மாதுரி ரொம்ப நாள் பிழைச்சிருக்கலே. அவளோட தம்பிகள் நல்லா செலவு செஞ்சு மருத்துவம் பார்த் தாங்க. சைலேனோட முயற்சியிலேயும் குறைவில்லை. அவளைக் கல்கத்தாவுக்குக் கூட்டிவந்து மருத்துவமனையிலே வச்சிருந் தான். அவளோட வயத்திலே கட்டி ஏற்பட்டிருந்தது. அவளுக்கு அறுவை சிகிச்சை நடந்துகொண்டிருந்தபோதே அவ இறந்து போயிட்டா.

நான் இன்னொரு கொத்து ரஜனிகாந்தா எடுத்துப் போய் அவளோட சடலத்து மேலே வச்சேன்.

சைலேன்தான் அவளுக்கு ஈமக் கடன்கள் செஞ்சான். ஐயாயிர ரூவா செலவு பண்ணி சடங்குகள் செஞ்சான், சாப்பாடு போட்டான், பஜனைக்கு ஏற்பாடு பண்ணினான். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். ஏன்னா இதுக்கு முன்னாலே அவனுக்கு இந்த மாதிரி சடங்குகளிலே நம்பிக்கை கிடையாது. மாதுரியோட விருப்பப்படி இதெல்லாம் செஞ்சான்னு புரிஞ்சுக்கிட்டேன்.

முன்பெல்லாம் அவன் மாதுரியோட கடிதங்களைச் சட்டைப்பையிலே வச்சுக்கிட்டு அலைவான். சாகறதுக்கு முன்னாலே மாதுரி அவன்கிட்டே இன்னொரு உறையைக் கொடுத்து அவ இறந்தபிறகு அதைத் திறந்து பார்க்கச் சொல்லி யிருந்தா. அவ சாகறவரையிலே அவன் அந்த உறையைப் பையிலே வச்சுக்கிட்டிருந்தான்.

மாதுரி இறந்தபிறகு அதைத் திறந்து பார்த்தா, உள்ளே சைலேன் பேரிலே முப்பதாயிர ரூவாய்க்கு செக்.

“இந்தப் பணம் எனக்கு எதுக்கு?” என்றான் செலேன்.

“எடுத்துக்க, எடுத்துக்க! கலியாணம் பண்ணிக்க வரதட்சணை வாங்கலியே நீ! இதுதான் ஒனக்கு வரதட்சணை!” நான் சொன்னேன்.

சைலேன் அந்தப் பணத்திலே ஒரு பகுதியை மாதுரியோட தம்பிகளுக்குக் கொடுத்தான். ஆஸ்பத்திரியிலே ஏழைப்பெண் களுக்கு மருத்துவம் செய்ய இலவசப் படுக்கை ஒண்ணு ஏற்படுத்தச் சொல்லி மிச்சப் பணத்தைக் கொடுத்தான்.

அதிலேருந்து ஒவ்வொரு வருஷமும் மாதுரியோட நினைவு நாளைக் கொண்டாடுகிறான் சைலேன். அதற்கு அழைப்பு என் ஒருத்தனுக்குத்தான். அவனோட அறையிலே மாதுரியோட போட்டோ ஒண்ணு இருக்கு.. அவளோட இளமைக்கால போட்டோ.

இளம் மாதுரியோட அந்த போட்டோவுக்க முன்னாலே நாங்க ரெண்டு கிழவங்களும் உக்காந்துகிட்டு டீ குடிப்போம், பேசிக் கிட்டிருப்போம்; சில சமயம் மௌனமா உக்காந்திருப்போம்.

சைலேன் ஒரு காதலைச் சாவிலேருந்து காப்பாத்திட்டான். நான் ஒரு நட்பைக் கிழத்தனத்திலேருந்து காப்பாத்திட்டேன்..”

பிரபாத் பாபு எழுந்து நின்று கொண்டார். அவருடைய குடை அவரது கண்முன்னே இருந்தும் அதை மறந்து விட்டார். இன்று நான் அதை எடுத்து அவரிடம் கொடுத்தேன். அவர் புன்சிரிப்புடன், “நன்றி!” என்று சொன்னார்.

நரேந்திரநாத் மித் ரா (1916 – 1975)
குறைவாகப் பேசுபவர், இனிமையாகப் பேசுபவர். இவருடைய கதைகள், நாவல்களும் ஒரு வகையில் உரையாடல்களே. நடுத்தர வாழ்க்கையின் தேர்ந்த ஓவியர். அறியவொண்ணாத மனித மனதின் இரகசியங்களையும் இதயத்தின் உணர்ச்சிகளையும் வெளிப்படுத்துவதில் இவரது கூர்மையான நோக்கு தெரிகிறது. நம்மிடையே மிகச்சிறந்த சிறுகதைகளை அதிக எண்ணிக்கையில் நரேந்திரநாத் எழுதியிருக்கிறார் என்று பல எழுத்தாளர்கள் சொல்லுவார்கள். கதையைவிட வடிவமைப்பிலும் பாத்திரப் படைப்பிலும் இவரது அனாயாசத் திறமி கண்கூடு. கல்கத்தாவில் செய்திப் பத்திரிகையொன்றில் பணியாற்றினார். ஃப்ரீத்பூரில் பிறந்தவர்.

– ‘தேஷ்’ பூஜா மலர், அக்டோபர், 1972.

– அனைத்திந்திய நூல் வரிசை, வங்கச் சிறுகதைகள், முதற் பதிப்பு: 1997, தொகுப்பு: அருண்குமார் மகோபாத்யாய், வங்கத்திலிருந்து தமிழாக்கம்: சு.கிருஷ்ணமூர்த்தி, நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா.

நன்றி: http://www.projectmadurai.org/

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *